Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் பாண்டியன் வஞ்சினம் – புறநானூற்றுச் சிறுகதை

பாண்டியன் வஞ்சினம் – புறநானூற்றுச் சிறுகதை

 

நெடுஞ்செழியன் மிக இளமையிலேயே பட்டத்துக்கு வந்துவிட்டான். அவ்வாறு பட்டத்துக்கு வந்த சில நாட்களிலேயே மிகப்பெரிய சோதனை ஒன்று அவனது அரசாட்சியை நோக்கி எழுந்தது. மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனும் அவனைச் சேர்ந்தவர்களாகிய திதியன், எழினி முதலிய சிற்றரசர்களும் ஒன்று சேர்ந்து படை திரட்டிக் கொண்டு பாண்டிய நாட்டைக் கைப்பற்றுவதற்குப் புறப்பட்டு வந்துவிட்டனர். 

அப்போதுதான் நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டு அரியணையில் ஏறி, முடி சூடிக் கொண்டிருந்தான். பருவத்தால் இளைஞனாகிய அவன் இவ்வளவு விரைவிலேயே பெரிய படையெடுப்பு ஒன்றை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் துணிவோடு எதிர்த்துப் போரிடுவது என்றே முடிவு செய்தான். அமைச்சர்களும் ஐம்பெருங்குழுவினரும் படைத் தலைவர்களும் போரை எப்படிச் சமாளிப்பது என்று விளங்காமல் மலைத்தனர். 

”மலைப்பதோ, திகைப்பதோ அறிவீனமாகும் தயங்காமல் எப்படியும் உடனே போருக்குப் புறப்பட்டேயாக வேண்டும்” என்று துணிவோடு முழங்கினான் செழியன். 

அமைச்சர்களும் பிறரும் இன்னும் தயங்கினார்கள். கரணத்தியலவர், கருமகாரிகள், கனகச் சுற்றத்தினர் முதலிய ஆலோசனை கூற வேண்டியவர்கள் யாவரும் அரசன் கட்டளைக்கு மறுமொழி கூறாமல் பேச்சு மூச்சற்று வீற்றிருந்தனர். 

உடனே நெடுஞ்செழியனுக்குக் கோபம் வந்துவிட்டது. 

 

”உங்கள் கருத்து என்ன? நீங்கள் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறீர்கள்? இந்த மௌனத்திற்கு என்ன பொருள்?” என்று இடி முழக்கக் குரலில் அவன் முழங்கினான் மீண்டும். 

அவையிலிருந்த வயது முதிர்ந்த அமைச்சர் ஒருவர் மெல்ல எழுந்து சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பதில் கூறலானார். 

”அரசே! இளங்கன்று பயமறியாது என்பதற்கு ஏற்றாற் போலப் பேசுகிறீர்கள். உங்கள் தைரியமும் வீரமும் எங்களை வீறு கொள்ளச் செய்கின்றன. பாராட்டி நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆனால் படையெடுத்து வந்திருப்பவர்கள் ஆள் பலமும் போர்க் கருவிகளின் பலமும் மிகுந்தவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. ஆகவே நாம் சற்று ஆர அமரச் சிந்தித்துப் பார்த்தபின் இந்தப் போரில் ஈடுபடலாம் என்பது என் இருக்க ” 

அமைச்சர் இவ்வாறு கூறி முடித்ததும் தொடர்ந்து வேறு சிலரும் அவரைப் போலவே சிந்தித்துச் செய்வதே மேல்’ என்ற கருத்தையே சுருக்கியும் விவரித்தும் தெரிவித்தார்கள். 

“சிந்திக்க வேண்டிய அவசியம் இதில் என்ன இருக்கிறது? கைப்புண்ணுக்குக் கண்ணாடியைப் பார்த்த பிறகா சிகிச்சை செய்ய வேண்டும். நான் இளைஞன். போர் நுணுக்கங்கள் அறியாதவனாக இருப்பேன். என்னைச் சுலபமாக வெற்றி கொண்டு பாண்டிய நாட்டைக் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணிக்கொண்டு பகைவர்கள் படையெடுத்து வந்திருக் கிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் எதிர்த்துப் போரிடுவதை விட்டுவிட்டு நாம் வீணே சிந்தித்துக் கொண்டிருப்பதில் பயனே இல்லை” என்றான் நெடுஞ்செழியன். 

”மன்னர்பிரான் கூறுவதுதான் சரி! உடனே போருக்குப் புறப்படுவதே நமக்கு நல்லது என்று அதை ஆதரித்துப் பேசினார் பாண்டியன் நெடுஞ்செழியனின் மதிப்பிற்குரிய நண்பரும் அவைக் களத்தின் தலைமைப் புலவருமாகிய மாங்குடி மருதனார். 

 

இதன்பின் அவையில் நெடுநேரம் அமைதி நிலவியது. யாரும் எதுவும் பதிலுக்குப் பேசவில்லை . 

முடிவாகத் தனக்குள் உறுதி செய்துகொண்ட பாண்டியன் தன்னுடைய முடிவை ஒரு பிரதிக்ஞையாக அந்த அவையில் வெளியிட்டான்

உறுதி நிறைந்த அந்தப் பிரதிக்ஞை அந்த அவையைச் சேர்ந்த அத்தனை பேர்களையும் திகைக்கச் செய்தது. இவருடைய பருவம் எவ்வளவு இளையதோ அவ்வளவிற்கு முதிர்ந்ததாகவும் அழுத்த மாகவும் இருக்கிறதே இந்தப் பிரதிக்ஞை !” என்று அவர்கள் எண்ணினர். “புலிக்குப் பிறந்தது பூனையாகிவிடுமா? எவ்வளவு தான் இளைஞராக இருந்தாலும் பாண்டிய மரபில் வந்தவர் அல்லவா?” என்று இப்படிச் சிலர் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர். அவையிலுள்ளோர் இப்படியெல்லாம் உரையாடுவதற்குக் காரணமாக இருந்த அந்தப் பிரதிக்ஞை தமிழ்நாட்டு இலக்கிய வரலாற்றில் மிகப் பிரசித்தமாக விளங்குகிறது. என்றென்றும் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய புகழைப் பரப்பிக் கொண்டிருப்பதற்கு இந்த ஒரு பிரதிக்ஞையே போதுமானது. 

பழந்தமிழில் இம்மாதிரிச் சபதங்கள், பிரதிக்ஞைகள் ஆகியவற்றை வஞ்சினம்’ என்ற பெயரினால் குறிப்பிடுவார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் கூறிய வஞ்சினம் அவன் வாய்மொழியாகவே பாடப்பட்ட ஒரு பாடலாகப் புறநானூற்றில் திகழ்கிறது. அவன் மாபெரும் வீரன்’ என்பதை நிரூபிக்கும் அந்த வஞ்சினப் பாடலைப் பொழிப்புரையாக்கிப் பார்ப்போம். 

“இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய நாட்டையும் சிறுவனாகிய இவன் அரசாள்வதையும் தங்கள் அறியாமையால் சிலர் இகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிரித்து இகழத்தக்கவர்கள். அவர்கள், என்னை அறியாப் பருவத்தினன் என்று கூறித் தங்கள் யானைப் படைகளையும் தேர்ப்படைகளையும் குதிரைப்படைகளையும் காலாட் படைகளையும் செருக்கோடு திரட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே தேவைக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருப்பவர்கள் என்னையும் என் அரசையும் துணிவாக இழித்துப் பேசியவர்கள் ஆவார்கள். 

அவர்களை வேரோடு அழிந்து சிதைந்து போகும்படியாகத் தாக்கி முரசத்தையும் குடையையும் கைப்பற்றிக் கொண்டு வெறுங்கையர்களாகத் துரத்தவில்லையானால் என் பெயர் பாண்டியன் நெடுஞ்செழியனில்லை. என் வெண்கொற்றக் குடையின் நிழற் கீழே வாழும் குடிமக்கள் என் ஆட்சியில் அறம் காணாமல் இந்த அரசன் கொடியவன்’ என்று பழி தூற்றப்படுவேனாக மிக்க சிறப்பையும் உயர்ந்த அறிவையும் உடைய மாங்குடி மருதானைத் தலைவராகக் கொண்ட பாண்டிய நாட்டுப் புலவர்கள் என்னை விரும்பிப் பாடாதொழியட்டும். ஆளப்படும் மக்களெல்லாம் அழுது புலம்பிட, இல்லை யென்று கேட்ட இரவலர்க்கு இட்டு மகிழாத பாவம் என்னை வந்து சேரட்டும். இது என் சபதம்.” 

இந்தச் சபதத்தைக் கூறி முடித்தவுடன் யார் கூறியும் கேட்காமல் உடனே படைகளோடு போருக்குப் புறப்பட்டு விட்டான் நெடுஞ்செழியன். போரின் முடிவு என்ன ஆகுமோ என்று அனுபவமும் முதுமையும் வாய்ந்த அமைச்சர்களெல்லாம் கவலை கொண்டிருந்தனர். 

மாந்தரஞ் சேரல் இரும்பொறை, திதியன், எழினி முதலிய பகையரசர் படைகளும் நெடுஞ்செழியன் தலைமையில் சென்ற பாண்டிய நாட்டுப் படைகளும் தலையாலங்கானம் என்ற இடத்தில் ஒன்னையொன்று எதிர்த்துக் கைகலந்தன. எங்கும் படர்ந்து வளர்ந்திருந்த பெரிய பெரிய ஆலமரங்கள் நிறைந்திருந்த அந்தக் காடு போருக்கு வசதியான இடமில்லையானாலும் போர் என்னவோ அங்கே நடந்தது. 

போரின் முடிவு என்ன ஆயிற்று தெரியுமா? அந்தப் போரில் இளைஞனான நெடுஞ்செழியனால் வெல்ல முடியும் என்று கனவில் கூட யாரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. ஆனால் வென்றது என்னவோ அவனேதான்! வென்றது மட்டுமா? 

 

யானைப்படைகளை மிகுதியாகக் கொண்டு வந்திருந்த சேரன், திதியன் முதலிய அரசர்களைச் சிறைப்படுத்திக் கைதிகளாக்கி விட்டான் பாண்டியன். 

பாண்டி நாடு முழுவதும் அவன் தன் வஞ்சினத்தை நிறைவேற்றிய செய்தி பரவி மிகப்பெரிய ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கியது. ஆரம்பத்தில் தடை செய்த அமைச்சர்கள் கூடத் தங்கள் அறியாமையை நினைத்துத் தாங்களே வெட்கப்பட்டுக் கொண்டனர். 

சொன்னதைச் சொன்னபடியே நிறைவேற்றுவது என்பது சாமானியமான காரியமா என்ன? இந்தப் பாண்டியன் அப்படி நிறைவேற்றிக் காட்டிய பெருமைக்கு நிலையான புகழ்ச் சின்னமாக இன்றும் ‘தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்றே அவன் பெயர் வழங்கி வருகிறது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

இரண்டு பகைகள் – புறநானூற்றுச் சிறுகதைஇரண்டு பகைகள் – புறநானூற்றுச் சிறுகதை

  அதியமானுக்கு ஒரு புதல்வன் இருந்தான். வாலிபப் பருவத்தினனாகிய அப்புதல்வனுக்குப் பொகுட்டெழினி என்று பெயர். நல்ல வளர்ச்சியும் உடற்கட்டும் பார்த்தவர்களை உடனே கவரும் அழகான தோற்றமும் இவனுக்குப் பொருந்தியிருந்தன.  அந்தத் தோற்றத்தை வெறும் அழகான தோற்றம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.

தலை கொடுத்த தர்மம் – புறநானூற்றுச் சிறுகதைதலை கொடுத்த தர்மம் – புறநானூற்றுச் சிறுகதை

  குமணன் காட்டுக்குத் துரத்தப்பட்டான். அவன் தம்பியாகிய இளங்குமணனிடம் அரசாட்சி சிக்கியிருந்தது. காமுகனிடம் அகப்பட்டுக் கொண்ட குலப் பெண்ணைப் போல, குமணன் அரசாண்ட காலத்தில் அடிக்கடி அவனால் உதவப் பெற்று வாழ்க்கையை நடத்தியவர் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர். இளங்குமணன் ஆட்சிக்கு

பறவையும் பாவலனும் – புறநானூற்றுச் சிறுகதைபறவையும் பாவலனும் – புறநானூற்றுச் சிறுகதை

  இளந்தத்தன் நிரபராதி. ஆனால் நெடுங்கிள்ளிக்கு அதை எப்படிப் புரியவைப்பது? ஒரு பாவமு மறியாத புலவன் அவன். ஆனால் அவனை ஒற்றன் என்று கருதித் தண்டிக்க முடிவு செய்துவிட்டான் நெடுங்கிள்ளி. சந்தேகத்தைப் போலப் பயங்கர வியாதி இந்த உலகத்தில் வேறொன்றும் இல்லை!