Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் புலியும் எலியும் – புறநானூற்றுச் சிறுகதை

புலியும் எலியும் – புறநானூற்றுச் சிறுகதை

 

ங்களுக்குப் புலியைப் போன்ற நண்பர்கள் வேண்டுமா? எலியைப் போன்ற நண்பர்கள் வேண்டுமா?” என்று நம்மை நோக்கி ஒரு கேள்வி கேட்கிறான் பழைய காலத்துச் சோழ அரசன் நல்லுருத்திரன். 

 

”புலியைப் போன்ற நண்பர்கள் என்றால் என்ன? எலியைப் போன்ற நண்பர்கள் என்றால் என்ன? அதைப் பற்றியே எங்களுக்கு முதலில் தெரியாதே! தெரிந்து கொண்ட பின்பல்லவா நாங்கள் உன் கேள்விக்கு விடை சொல்ல முடியும்!” 

”பரவாயில்லை! என்னோடு வாருங்கள். புலியின் வாழ்க்கையையும் எலியின் வாழ்க்கையையும் உங்களுக்கு நிதரிசனமாகக் காட்டுகிறேன்!” 

”ஐயையோ! புலியைப் பார்க்க வேண்டுமானால் காட்டுக்கல்லவா போக வேண்டும்!” 

”ஆம்! காட்டுக்குத்தான் போக வேண்டும்! காட்டில்தான் மனிதனின் ஆதி நாகரிகம் தோன்றியது. காட்டில்தான் வாழ்வின் ஆதி உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அங்கே போய்த்தான் இந்த மாதிரிப் புதிர்களை விடுவித்துக் கொள்ள முடியும்?” 

சோழன் நல்லுருத்திரனைப் பின்பற்றித் துணிவாகக் காட்டுக்குப் போகிறோம் நாம். புலியையும் எலியையும் பற்றித் தெரிந்து கொள்ளத்தான்! புலியும் எலியும் நமக்குப் புதியவை அல்ல. அவைகளைப் பற்றி இந்த அரசன் நமக்குச் சொல்லி விளக்கப் போகின்றானே உண்மைகள்; அவைகள் தாம் முற்றிலும் புதியவை. 

இதோ ஒரு பெரிய நெல் வயல். முதிர்ந்து தலை சாய்த்த நெற்கதிர்கள் இடையே வரப்பில் ஏதோ துள்ளி ஓடுகிறதே? அது என்ன? அருகில் நெருங்கிப் பார்க்கிறோம். அது ஓர் எலி. என்ன செய்கிறது? வயிலிலுள்ள நெற்கதிர்களை அறுத்து, தன் பற்களினால் கடித்துத் துண்டிக்கிறது. வரப்போரத்திலுள்ள பொந்தில் ஒவ்வொரு கதிராகக் கொண்டுபோய் வைத்துவிட்டு வருகிறது. திருட்டு வேலை ! திருட்டுச் சொத்து! திருடிக் கொண்டு போய்த் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படுத்தாமல் பொந்துக்குள் கொண்டு போய் நிரப்பி வைக்கிறது! எத்தனை அழகிய நெற்கதிர்கள் இப்படிப் பாழாகிவிட்டன? இன்னும் பாழாகப் போகின்றவை எத்தனையோ? பயனற்ற கொலை வாழ்க்கை இதுதான் எலியின் வாழ்வு திருட்டுத்தனத்தோடு கூடிய அர்த்தமில்லாத அற்ப வாழ்வு. மனிதர்களிலும் இப்படி எலிகள் இருக்கின்றனர். பிறரை ஏமாற்றித் தன்னையும் ஏமாற்றிக் கொள்கின்ற மனித எலிகள் அநேகம்! இப்படிப்பட்ட எலிகள் நமக்கு நண்பர்களாகலாமா? கூடாது? கூடாது! கூடவே கூடாது! வாழ்க்கை என்றால் அதற்கு மனம் வேண்டும். அந்த மனத்தில் மானம் வேண்டும்! மனமும், அதில் மானமும் இல்லாமல் என்ன வாழ்வு வேண்டிக்கிடக்கிறது? மானமில்லது சிறிய கேவலமான திருட்டு முயற்சியால் வாழ முயல்வதைக் காட்டிலும் சாவது எவ்வளவோ உயர்வாக இருக்குமே! போகட்டும். 

எலியின் கதையைப் பார்த்தாகிவிட்டது. இனிமேல் புலியின் கதையைப் பார்ப்போம். புலியை வயலில் பார்க்க முடியாதே! இன்னும் கொஞ்சம் அடர்ந்த காட்டிற்குள் போவோம். அதோ ஓர் அடர்ந்த புதர், அந்தப் புதருக்கு எதிரே உள்ள மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொள்வோம்! 

! அதென்ன? அந்தப் புதருக்கு அருகில் கருமையாக ஏதோ சிறு குன்றைப்போல் அசைகின்றதே? அது ஒரு யானை. அங்கே புதருக்கு அருகில் மேய்ந்து கொண்டிருக்கிறது. சிறிது நேரம் ஆயிற்று. புதருக்குள் செடி கொடிகள் அசைகின்றன. ஏதோ சலசலப்பு உண்டாகிறது. யானை மிரண்டு போய்த் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்கிறது. புதரில் சலசலப்பு அதிகமாகின்றது

அடுத்த விநாடி காடே அதிர்ந்து போகும்படி பெரிய கர்ஜனை புதருக்குள் இருந்து கிளம்புகின்றது. யானை மிரண்டு ஓட அடியெடுத்து வைப்பதற்குள் புதருக்குள்ளிருந்து பெரிய வேங்கைப்புலி ஒன்று அதன் மத்தகத்தில் வேகமாக மோதிப் பாய்கிறது. யானையின் குரூரமான பிளிறலும், பசிமிக்க வேங்கையின் போர் முழக்கமும் காட்டையே கிடுகிடுக்கச் செய்கின்றன. யானை புலியைத் தாக்கம், புலி யானையைத் தாக்க ஒரே இரத்தக் களறியாயிற்று. புலிக்கு வலிமை அதிகம். போதாத குறைக்கு அப்போது அதற்குப் பசி நேரம் வேறு. யானையின் ஆற்றல் அதற்குமுன் எடுபடவில்லை, மத்தகத்தைப் பிளந்து தன் 

 

வெறிக்கு யானையின் உயிரை இரையாக்கிக் கொள்ளத் துடித்தது புலி! யானை கொஞ்சம் கொஞ்சமாக உயிரொடுங்கி ஈனஸ்வரத்தில் அலறிக் கொண்டு புலியின் இடது பக்கம் பொத்தென்று வேரற்ற மரம் போல விழுந்துவிட்டது. 

என்ன ஆச்சரியம்? புலிக்கு நல்ல பசியாக இருந்தும் அது யானையை உண்ணவில்லை. யானை இடப்பக்கம் விழுந்திருக் கிறது என்பதைப் பார்த்துக் கொண்டே பேசாமல் போய் விட்டது. புலியினிடத்தில் மானம் நிறைந்த ஒரு பண்பு உண்டு! தான் கொன்ற பிராணி தனக்கு வலது பக்கத்தில் விழுந்தால்தான் உண்ணும். இடது பக்கம் விழுந்தால் தனக்குத் தோல்வி என்று கருதி உண்ணாது! இன்னும் சிறிது நேரம் அங்கே தாமதித்துப் பார்க்கிறோம். புலி யானையை உண்ணாமல் அங்கேயே வட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. சிறிது நேரத்தில் அந்தப் பக்கமாக ஒரு காட்டுப்பசு வருகிறது. புலி பதுங்கிப் பதுங்கி அந்த பசுவின் மேல் குபீரென்று பாய்கிறது. பசுவை அடித்துத் தள்ளுகிறது. இறந்துபோன காட்டுப் பசு புலியின் வலது பக்கம் விழுகிறது. புலி மகிழ்ச்சியோடு அந்தக் காட்டுப் பசுவைத் தனக்கு உணவாக உண்பதற்காகத் தன் குகைக்கு இழுத்துச் செல்கின்றது. ஆகா! இந்தப் புலிக்குத்தான் எவ்வளவு மானப் பண்பு! மனம் என்றால் அதில் இப்படியல்லவா ஒரு மானப் பண்பு அமைந்திருக்க வேண்டும்! இதுதான் புலியின் கதை! இப்போது சொல்லுங்கள் திருடி ஒளித்து வைக்கும் எலி போன்ற கேவலமான நண்பர்கள் வேண்டுமா? மானமே பெரிதென்று எண்ணி உணவை உண்ண மறுக்கும் புலி போன்ற நண்பர்கள் வேண்டுமா?‘ சோழ அரசன் நம்மை நோக்கிக் கேட்கிறான். நாம் என்ன சொல்லுவோம்? சந்தேகமென்ன? ‘புலிஎன்றுதான் சொல்லுவோம்

சிறுமையைச் செய்து சிறுமையை அடையும் எலி! சிறுமையை வெறுத்துப் பெருமையை அடையும் புலி! இரண்டில் புலிதானே சிறந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பரிசிலர்க்கு எளியன்!- புறநானூற்றுச் சிறுகதைபரிசிலர்க்கு எளியன்!- புறநானூற்றுச் சிறுகதை

  சிற்றரசனான பாரி வள்ளலின் பறம்பு மலையை மூவேந்தர் களும் முற்றுகையிட்டிருந்தனர். பாரியின் மேல் அவர்களுக்கு இருந்த பொறாமையின் அளவை அந்த முற்றுகையின் கடுமையே காண்பித்தது. பாரியை வெல்ல வேண்டும், அல்லது கொல்ல வேண்டும். இரண்டிலொன்று முடிந்தாலொழிய எவ்வளவு காலமானாலும் தங்கள்

இரண்டு பகைகள் – புறநானூற்றுச் சிறுகதைஇரண்டு பகைகள் – புறநானூற்றுச் சிறுகதை

  அதியமானுக்கு ஒரு புதல்வன் இருந்தான். வாலிபப் பருவத்தினனாகிய அப்புதல்வனுக்குப் பொகுட்டெழினி என்று பெயர். நல்ல வளர்ச்சியும் உடற்கட்டும் பார்த்தவர்களை உடனே கவரும் அழகான தோற்றமும் இவனுக்குப் பொருந்தியிருந்தன.  அந்தத் தோற்றத்தை வெறும் அழகான தோற்றம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.

எவனோ ஒரு வேடன்! – புறநானூற்றுச் சிறுகதைஎவனோ ஒரு வேடன்! – புறநானூற்றுச் சிறுகதை

  கொல்லி மலையின் அடிவாரம். அது வளம் நிறைந்த பகுதி. புலவர் வன்பரணரும் அவரோடு வந்திருந்த இன்னிசை வாணர்களாகிய பாணர்களும் வழிநடைக் களைப்புத் தீர அங்கே தங்கியிருந்தனர். அன்றைய , பகற்பொழுதை அங்கே கழித்தாக வேண்டும்.  கொல்லி மலையில் மிருகங்கள் அதிகம்.