Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் வேண்டாம் போர் – புறநானூற்றுச் சிறுகதை

வேண்டாம் போர் – புறநானூற்றுச் சிறுகதை

 

சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் உடன் பிறந்த உறவுமுறை உடையவர்கள்தாம். ஆனாலும் பகைமை, பொறாமை என்று ஏற்பட்டுவிட்டால் பின்பு உறவையும் உடன் பிறப்பையும் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடியவர்கள் யார்? 

பல காரணங்களால் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த சுமுகமான நிலையும் உறவும் முறிந்துவிட்டன. ஒருவரை ஒருவர் தாக்குவதற்கும் தூற்றுவதற்கும் கறுவிக் கொண்டு திரிந்தனர். 

நலங்கிள்ளி கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். நெடுங்கிள்ளி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இருவரும் ஒரே சோழர் குடியில் பிறந்திருந்தும் அந்தக் குடியின் பரம்பரையான ஒற்றுமை குலைந்து போகும்படியாக நடந்து கொண்டுவிட்டார்கள்

தலைமுறை தலைமுறையாகப் பிளவு பட்டறியாத காவிரிக் காவல் பூண்ட சோழர்குடி இந்த இரு இளைஞர்களின் பொறாமையினால் பிளவுபட்டுப் போயிருந்தது. உடன் பிறந்த பெருமையை மறந்து ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பமிடுவதற்குக் காலம் பார்த்துக் கொண்டிருந்தனர்

காலம் முதலில் நலங்கிள்ளிக்கு வாய்த்தது. அவன் படையெடுத்து வந்து உறையூர்க் கோட்டையையும் நெடுங்கிள்ளி யையும் வளைத்துக் கொண்டான். நெடுங்கிள்ளியோ பொறியில் அகப்பட்ட எலியைப் போலக் கோட்டைக்குள்ளே மாட்டிக் கொண்டான் . 

 ‘நலங்கிள்ளி உறையூர்க் கோட்டையை வளைத்துக் கொண்டான்’ என்ற செய்தி இதற்குள் தமிழகமெங்கும் பரவிவிட்டது. பலர் செய்தியறிந்து வியந்தார்கள். 

‘ஒரு குடியில் பிறந்த சகோதரர்கள் தங்களுக்குள் இப்படிப் போரிடுவது கேவலமான நிகழ்ச்சி அல்லவா?’ என விவரமறிந் தவர்கள் இதைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள். வேறு சில அரசர்கள் சகோதரச் சண்டைக்கு நடுவே தாங்களும் புகுந்து சோழ நாட்டையே பறித்துக் கொள்ளும் முயற்சியில் இரகசியமாக ஈடுபட முஸ்தீபுகள் செய்து கொண்டிருந்தனர். அண்ணன் தம்பி சண்டையும் சமாதானமோ, அல்லது போரோ ஒரு முடிவுக்கும் வராமல் வெறும் முற்றுகை அளவிலேயே இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் சோழர் குடிக்கு மிகவும் வேண்டியவராகிய கோவூர் கிழாருக்கு எட்டியது செய்தி புறநானூற்றுக் காலத்தில் தமிழகத்தை ஆண்ட வல்லரசுகளுக்கு நடுவே துன்பம் நிகழாமல் தடுத்து வந்த ஒரே ஒரு சமாதானத் தூதுவர் எனலாம் இந்தக் கோவூர் கிழார் என்ற புலவரை. 

செய்தியறிந்ததுமே உறையூருக்கு ஓடோடிச் சென்றார். நலங்கிள்ளியையும் நெடுங்கிள்ளியையும் சந்தித்தார். 

 

நலங்கிள்ளி ! நெடுங்கிள்ளி! சோழர் குடியின் பெருமையைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் பிறந்தீர்களா! கெடுப்பதற்கு என்று பிறந்தீர்களா? உங்களில் ஒருவன் பனம்பூவை அணிந்த சேரனு மில்லை. கரிய கண்களை உடைய வேப்பமாலை அணிந்த பாண்டியனுமில்லை. இருவருமே அத்திமாலையை அணிந்த சோழர்கள் . நீ அணிகின்ற மாலையிலும் அத்திப் பூ! உன்னோடு போரிடுகின்றவன் அணிகின்ற மாலையிலும் அத்திப் பூ உங்கள் இரண்டு பேரிலும் யாராவது ஒருவர் தோற்றாலும் அந்தத் தோல்வி சோழர் குடிக்கே ஏற்பட்ட தோல்விதான். சோழர்குடி, உங்களைப் பெற்று வளர்த்த பெருங்குடி இல்லையா? அதற்குத் தோல்வி ஏற்படும்படியாக விடலாமா? போர் என்றால் அதைச் செய்கின்ற இருவருமே வெற்றி பெற முடியாது! எவராவது ஒருவர்தான் வெல்ல முடியும்! உங்கள் இருவருக்கும் இடையே உள்ள இந்தப் பகைமையைக் கேட்டு வேறு அரசர்கள் இகழ்ந்து நகையாடுவார்கள். உங்கள் இருவரையுமே எதிர்த்துச் சோழ நாட்டையே அபகரித்துக் கொள்வதற்குக்கூட முயல்வார்கள். சோழ சகோதரர்களே! என் சொல்லைக் கேளுங்கள். வேண்டாம் இந்தப் போர்! குடிகெடுக்கும் போரை நிறுத்துங்கள். உங்கள் காவிரி காக்கும் களங்கமற்ற குடிப்பெருமையின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்.” 

கோவூர் கிழார் கூறிமுடித்தார். நலங்கிள்ளி முற்றுகையை நிறுத்தினான். நெடுங்கிள்ளியைத் தழுவி மன்னிப்பு கேட்டுக் கொண்டான். கோவூர் கிழார் மனமகிழ்ந்து இருவரையும் வாழ்த்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வீரக் குடும்பம் – புறநானூற்றுச் சிறுகதைவீரக் குடும்பம் – புறநானூற்றுச் சிறுகதை

  ”அதோ அந்தப் பெண்ணைப் பார்த்தீர்களா?”ஒக்கூர் மாசாத்தியார் தம்மிடமிருந்த மற்றோர் புலவருக்குச் சுட்டிக் காட்டினார்.  “அந்தக் குடிசை வாயிலில் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாளே, அந்தப் பெண்ணைத் தானே சொல்லு கிறீர்கள்?”  “ஆமாம் அவளேதான்! “அவளுக்கு என்ன?”    “சொல்லுகிறேன்! அந்தப் பெண்ணின்

மனம்தான் காரணம் – புறநானூற்றுச் சிறுகதைமனம்தான் காரணம் – புறநானூற்றுச் சிறுகதை

  “பிசிராந்தையாரே! உமக்கு என்ன ஐயா வயது இப்போது?”  “ஏன்? எவ்வளவு இருக்கலாம் என்று நீங்கள் தான் ஒரு மதிப்புப் போட்டுச் சொல்லுங்களேன் பார்ப்போம்?” தம்மிடம் கேள்வி கேட்ட புலவர்களைப் பார்த்து எதிர்க் கேள்வி போட்டார் பிசிராந்தையார்,  ”உம்மைப் பார்த்தால் முப்பது

பாண்டியன் வஞ்சினம் – புறநானூற்றுச் சிறுகதைபாண்டியன் வஞ்சினம் – புறநானூற்றுச் சிறுகதை

  நெடுஞ்செழியன் மிக இளமையிலேயே பட்டத்துக்கு வந்துவிட்டான். அவ்வாறு பட்டத்துக்கு வந்த சில நாட்களிலேயே மிகப்பெரிய சோதனை ஒன்று அவனது அரசாட்சியை நோக்கி எழுந்தது. மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனும் அவனைச் சேர்ந்தவர்களாகிய திதியன், எழினி முதலிய சிற்றரசர்களும் ஒன்று