பறவையும் பாவலனும் – புறநானூற்றுச் சிறுகதை

 

ளந்தத்தன் நிரபராதி. ஆனால் நெடுங்கிள்ளிக்கு அதை எப்படிப் புரியவைப்பது? ஒரு பாவமு மறியாத புலவன் அவன். ஆனால் அவனை ஒற்றன் என்று கருதித் தண்டிக்க முடிவு செய்துவிட்டான் நெடுங்கிள்ளி. சந்தேகத்தைப் போலப் பயங்கர வியாதி இந்த உலகத்தில் வேறொன்றும் இல்லை! அது நிரபராதியைக் குற்றவாளியாக்கி விடுகிறது. குற்றவாளியை நிரபராதியாக்கி விடுகிறது. இன்னும் என்னென்னவோ செய்து விடுகிறது . 

முதல் நாள் அவன் கருவூரில் நலங்கிள்ளியிடம் பரிசில் பெற்றுக்கொண்டு பின் உறையூருக்கு வந்திருந்தான். நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் பகை என்பதும், அதனால் உறையூரார் கருவூருக்கு வருவதில்லை என்பதும் கருவூரார் உறையூருக்குப் போவதில்லை என்பதும் அவனுக்குத் தெரியாது. இரண்டு அரசர்களுக்கும் உள்ள கடும்பகை காரணமாக ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குப் போகிறவர்கள் ஒற்றர்களாகக் கருதப்பட்டுத் தண்டனை பெற்றுக்கொண்டிருந்த காலம் அது! 

உறையூர்க்காரர்கள் எவராவது கருவூருக்கு வந்தால் அவர்களை நெடுங்கிள்ளியின் ஒற்றர்கள் என்று சந்தேகித்துத் தண்டணை கொடுத்துக் கொண்டிருந்தான் நலங்கிள்ளி கருவூர்க் காரர்கள் எவராவது உறையூருக்கு வந்தால் அவர்களை நலங்கிள்ளியின் ஒற்றர்கள் என்று சந்தேகித்துத் தண்டனை கொடுத்துக்கொண்டிருந்தான் நெடுங்கிள்ளி. 

இளந்தத்தனோ இந்த இரு ஊர்களுக்கும் புதியவன். ஒரு நாடோடிப் புலவன். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இருவருக்கும் கடும்பகை இருப்பதை அறிந்துகொள்ளாமல் நலங்கிள்ளியைச் சந்தித்துப் பாடி பரிசில் பெற்றுக்கொண்டு கருவூரிலிருந்து உறையூருக்கு வந்து நெடுங்கிள்ளியிடம் பரிசில் வாங்க அவன் முயன்றான். 

அவன் உறையூர்க் கோட்டை வாயிலை அடைந்தபோது கோட்டைக் காவற்காரர்கள் அவனை இன்னாரென்று கூறுமாறு விசாரித்தனர். ‘நான் நலங்கிள்ளியிடமிருந்து பரிசில் பெற்றுக் கருவூரிலிருந்து வருகிறேன்” என்றான், நலங்கிள்ளியிடம் பரிசில் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்றால் அது பெருமையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டுதான் ஒரு பாவமுமறியாத அந்த இளம் புலவன் இப்படிக் கூறிவைத்தான். 

நலங்கிள்ளி, கருவூர் என்ற இந்த இரண்டு சொற்களை அவனிடமிருந்து கேட்டார்களோ இல்லையோ, கோட்டைக் காவற்காரர்கள் தங்களுக்குள் ஏதோ குறிப்புத் தோன்ற ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தக் கொண்டனர். 

”கருவூரிலிருந்துதானே வருகிறாய்!” – 

”ஆமாம்! கருவூரிலிருந்துதான் நலங்கிள்ளியைச் சந்தித்துவிட்டு வருகிறேன்” 

“உனக்கு இங்கென்ன வேலை?” 

”நான் நெடுங்கிள்ளி மன்னரைச் சந்திக்க வேண்டும்!” 

காவற்காரர்கள் இருவரும் தங்களுக்குள் விஷமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டனர். ஒருவன் உள்ளே போய்விட்டுச் சில விநாடிகளில் திரும்பி வந்தான். 

“மன்னரையா பார்க்க வேண்டும்? அப்படியானால் என்னோடு வா பார்க்கலாம்.” 

ஒருவன் இளந்தத்தனைத் தன் பின்னால் அழைத்துக் கொண்டு சென்றான். ஆனால் மன்னரைக் காண்பிக்கவில்லை. அந்த அப்பாவிப் புலவனைத் தந்திரமாக அழைத்துக்கொண்டு போய்ச் சிறைக்குள் தள்ளி அடைத்துப் பூட்டிவிட்டான். 

“ஐயோ! நான் நாடோடிப் புலவன் ஐயா! எனக்கு ஒரு பாவமும் தெரியாது! என்னை ஏன் ஐயா சிறையில் அடைக்கிறீர்கள்?” 

“பேசாதே நீ இருக்க வேண்டிய இடம் இந்தச் சிறைதான் ” காவற்காரன் அதட்டிவிட்டுப் போய்விட்டான். பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிவிட்டதே’ என்று தவித்தான் இளந்தத்தன். ‘கருவூரிலிருந்து நலங்கிள்ளியைப் பார்த்துவிட்டு வந்ததாகச் சொன்னதற்கு இவ்வளவு பெரிய தண்டனை ஏன்?’ என்று அவனுக்குப் புரியவில்லை. உறையூரின் பெருமை, வந்தாரை வரவேற்று விருந்தோம்பும் சோழர் குடிப் பெருமை, எல்லாப் பெருமையின் மேலும் எரிச்சல் எரிச்சலாக வந்தது அவனுக்கு. இளந்தத்தன் கருவூரிலிருந்து புறப்பட்டு வந்த சிறிது நேரத்திலேயே கோவூர் கிழார் என்ற புலவரும் அவனைப் பின்பற்றி உறையூருக்கு வந்தார். இளந்தத்தன் முன்பே உறையூருக்கு வந்திருப்பதை அறிந்து வாயிற்காவலர்களிடம் அவன் அடையாளங்களைக் கூறி, “இப்படி ஒரு பாவலன் சற்று முன்பு இங்கே கோட்டைக்குள் வந்தானா?” என்று வினவினார். கோவூர் கிழார் உறையூர் அரண்மனையில் எல்லோருக்கும் வேண்டியவராகையினால் காவலர்களுக்கு அவரிடம் அதிக மரியாதை உண்டு. 

 

”ஆமாம் ஐயா! அப்படி ஓர் இளைஞன் கருவூரிலிருந்து சற்றைக்கு முன் இங்கே வந்தான். நாங்கள் மன்னரிடம் போய்க் கேட்டோம். அவன் கருவூரிலுள்ள நலங்கிள்ளியிடமிருந்து வந்திருந்தால் அவனை உடனே சிறையில் அடையுங்கள். ஒற்றனாக இருந்தாலும் இரப்பான் என்று அரசர் உத்தரவு இட்டார். உத்தரவுப்படியே சிறையில் அடைத்திருக்கிறோம்” என்று கோட்டைக் கால்வர்களிருவரும் கோவூர் கிழாரிடம் கூறினர். 

உடனே கோவூர் கிழார் நெடுங்கிள்ளியைக் கண்டு இளந்தத்தனைப் பற்றிய உண்மையைக் கூறினார்: ”அரசே! சுதந்திரமாகப் பறந்து திரியக்கூடிய பறவையைப் போன்றவன் பாவலன். அவனை வாழச் செய்வது, அரசர்கள் அன்புற்று அளிக்கும் பரிசில் . தீமையில்லாமல் பழுமரம் நாடிச் செல்லும் பறவையைப் போன்ற ஓர் அப்பாவிப் பாவலனைச் சந்தேகமுற்றுச் சிறையில் வைக்கலாமா?” 

”எந்தப் பாவலனை அப்படிச் செய்திருக்கிறேன் நான்?’ 

“நேற்றுக் கருவூரிலிருந்து வந்த இளந்தத்த னென்னும் புலவனை ?” 

”மன்னியுங்கள் ! ஒற்றனென்று தவறாகக் கருதிச் சிறையில் அடைத்துவிட்டேன். இதோ இப்போதே விடுதலை செய்து விடுகிறேன்.” 

”நல்லது. பாவலன் ஒரு சுதந்திரமான பறவை. அவனைச் சிறை செய்வது போன்ற கொடுமை வேறில்லை.” 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அன்பின் அறியாமை – புறநானூற்றுச் சிறுகதைஅன்பின் அறியாமை – புறநானூற்றுச் சிறுகதை

  அப்போது கார்காலம். மலை நங்கை தன் பசுமை கொழிக்கும் உடலில் நீலநிறப் பட்டாடை அணிந்தாற்போல முகில்கள் மலைச் சிகரங்களில் கவிந்திருந்தன. பொதினி மலையின் வளத்தைக் காண்பதற்குச் சென்றிருந்தான் பேகன். அவன் ஆவியர் குடிக்குத் தலைவன். பொதினி மலை அவன் ஆட்சிக்கு

ஒரு தயக்கம் – புறநானூற்றுச் சிறுகதை – Audioஒரு தயக்கம் – புறநானூற்றுச் சிறுகதை – Audio

      அது ஒரு வேடனின் குடிசை காட்டின் இடையே அமைந்திருந்தது. குடிசையின் முன்புறம் முசுண்டை என்ற ஒரு வகைக் கொடி படர்ந்திருந்தது. வீட்டிற்கு முன்புறம் பசுமைப் பந்தல் போட்டு வைத்தாற்போல் அடர்ந்து படர்ந்து நிழலையும் குளிர்ச்சியையும் அளித்துக் கொண்டிருந்தது

புலவர் தூது – புறநானூற்றுச் சிறுகதைபுலவர் தூது – புறநானூற்றுச் சிறுகதை

  அதியமானிடமிருந்து தூதராக வந்திருந்த ஒளவையாரைத் தனது படைக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்றான் தொண்டைமான் இளந்திரையன்.  கம்பீரமான தோற்றத்தோடு விளங்கிய அந்த ஆயுதசாலை முழுதும் ‘பளபள வென்று மின்னும் புத்தம் புதிய ஆயுதங்கள் நிறைக்கப்பட்டுக் கிடந்தன.  நீள நீளமான வேல்கள் ஒருபுறம்