Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் நட்பின் கதை – புறநானூற்றுச் சிறுகதை

நட்பின் கதை – புறநானூற்றுச் சிறுகதை

 

சோழ நாட்டுக் கோநகராகிய உறையூர். அழகும் இயற்கை வளமும் மிக்க காவிரியாற்றின் கரை மேடும் பள்ளமுமாகத் தென்படுகிற வெண் மணற்பரப்பின் நடுவே பலர் கூடி நின்று கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு பேர் முகங்களிலும் சோகம் குடி கொண்டிருந்தது. அது எத்தகைய சோகம் தெரியுமா? பிரிய முடியாததைப் பிரியும்போது, இழக்க முடியாததை இழக்கும் போது ஏற்படுகின்ற சோகம். 

கூட்டத்தின் நடுவே அரசர்க்கரசனான கோப்பெருஞ் சோழன், எளிய உடையுடுத்து, வடக்கு நோக்கி வீற்றிருந்தான். அவனைச் சுற்றிச் சதுரமாக ஒரு சிறிது பள்ளம் உண்டாக்கப் பட்டிருந்தது. மணல் மேல் தருப்பைப் புற்கள் பரப்பப்பட்டிருந்தன. எதுவும் பேசத் தோன்றாமல் சுற்றி நின்றவர்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்

நேற்றுவரை அரச வாழ்வில் இன்புற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த ஓர் அரசன், இன்று வாழ்வை வெறுத்துச் சாகின்றவரை உண்ணா நோன்பு இருக்கத் துணிந்துவிட்டான்! வடக்கு நோக்கி இருந்தே வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் கருதிவிட்டான். அவனோடு உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள், புலவர்கள் எல்லோரும் பிரிய மனமில்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்

பொத்தியாரே! நீர் ஓர் ஏற்பாடு செய்யும்.’‘ 

கூட்டத்திலிருந்த பொத்தியார் என்ற புலவர் முன்னால் வந்து சோழனுக்கருகே கைகூப்பி வாய் புதைத்து வணக்கமாக நின்று கொண்டு, ”என்ன வேண்டும் அரசே! கட்டளை எதுவோ அதை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்!” 

”என் உயிர் நண்பர் பிசிராந்தையார் யான் வடக்கிருப்பதைக் கேள்விப்பட்டுத் தாமும் வடக்கிருந்து உயிர் நீப்பதற்காக இங்கே வருவார். அப்படி வந்தால்..” 

“வந்தால் என்ன செய்ய வேண்டும்!” 

”வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். இதோ இங்கே எனக்கு அருகில் அவரும் வடக்கிருப்பதற்கு ஓர் இடத்தை ஒழித்து வைக்க வேண்டும்.” 

சோகம் நிறைந்த அந்தச் சூழ்நிலையிலும் கூட்டத்தில் சிலருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவர்கள் சிரிப்பிற்குக் காரணம் சோழனுடைய அந்தப் பேச்சுத்தான். பொத்தியாருக்கே சிரிப்பு வந்தது. வலிய அடக்கிக் கொண்டுவிட்டார். 

“ஆனால் எப்படியோ சோழன் செவிகளில் இரண்டொரு சிரிப்பொலிகள் விழுந்துவிட்டன. 

 

நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? உங்களுக்கு நான் சொல்வது வேடிக்கையாகத் தோன்றுகிறதா?” 

”தாங்கள் கூறுவதை எங்களால் நம்ப முடியவில்லை அரசே! பிசிராந்தையார் உங்களுக்கு உயிர் நண்பர் என்று சொல்லுகிறீர்கள்! ஆனால் நீங்களும் பிசிராந்தையாரும் இன்றுவரை ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துக் கொண்டது கூட இல்லை. ஒருவரை ஒருவர் காணாமல் கேட்டுவிட்டு மட்டும் பழகியிருக்கும் இந்த நட்புக்காக அவர் உங்களோடு வடக்கிருக்க வருவாரா?” 

”ஆம் அரசே! நட்பு வேறு; உயிர் வேறு. மனத்தளவில் நிற்கின்ற நட்பிற்காக உயிரைக் கொடுக்க எவரும் முன்வர மாட்டார்கள். நெருங்கிப் பழகியவர்களின் நட்பே இத்தகைய தானால் கண்ணால் காணாமலே பழகிய நட்புக்காக யாராவது உயிரைக் கொடுக்க முன்வருவார்களா?” 

” நான் சொல்வதை அரசர் நிச்சயமாக நம்பலாம். பிசிராந்தையார் உறுதியாக வடக்கிருக்க இங்கு வரமாட்டார்!” 

”அதில் சந்தேகமென்ன? பாண்டி நாட்டில், எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு சிற்றூரில் வசிக்கம் பிசிராந்தையார் சோழ நாட்டுக்கு வந்து அரசர் பெருமானுக்காகத் தம் உயிரையும் கொடுக்க வேண்டும் என்பது என்ன அவசியம்?” 

சோழனைச் சுற்றியிருந்த சான்றோர்கள் எல்லோருமே பிசிராந்தையார் வரமாட்டார் என்றே உறுதியாகக் கூறினர். சோழன் அவர்கள் கூறியதை எல்லாம் மறுமொழி கூறாமலே அமைதியாக இருந்து கேட்டான். ஆனால் அவன் மனத்திலிருந்த நம்பிக்கையின் உறுதி மட்டும் குன்றவே இல்லை. பிசிராந்தையார் வந்தே தீருவார்’ என்று அவன் உள்மனத்திலிருந்து எழுந்து ஏதோ ஓருணர்வு அடிக்கடி வற்புறுத்திக் கொண்டேயிருந்தது. உடல்கள் இறுகக் கட்டித் தழுவுகின்ற நட்பைக் காட்டிலும் கண்ணால் காணாமலே மனங்கள் தழுவுகின்ற நட்புக்கு அதிக வன்மை உண்டென்று அவன் நம்பிக் கொண்டிருந்தான். 

 

பொத்தியாரே! பிசிராந்தையார் கண்டிப்பாக வருவார். அவர் மனம் எனக்குத் தெரியும் என் மனம் அவருக்குத் தெரியும். நீர் மட்டும் நான் சொல்கிறபடி அவருக்கு இடம் ஒழித்து வைத்தால் போதும். வேறொன்றும் செய்ய வேண்டாம்.” 

” இடம் ஒழித்து வைக்கிறோம்! மாட்டேனென்று சொல்லவில்லை. ஆனால் தங்கள் நம்பிக்கைதான் எங்களுக்கு வியப்பை அளிக்கிறது.” 

”வியப்போ? வியப்பில்லையோ? இன்னும் சிறிது நேரம் பொறுத்துப் பாருங்கள். எல்லாம் தெரியும்.” 

“கோப்பெருஞ் சோழனுக்குக் கடைசிக் காலத்தில் சித்தப் பிரமை உண்டாயிருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி ஓர் அசட்டு நம்பிக்கை ஏற்படுமா? யாரோ பிசிராந்தையாராம்? பாண்டி நாட்டில் இருக்கிறாராம். இவனுக்காக அவர் உயிர் விடுவதற்கு இங்கே வருவாராம்!” புலவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர். அவர்களுடைய அவநம்பிக்கை தான் அந்த முணுமுணுப்பிற்குக் காரணம். 

அரசன் கட்டளையை மறுக்க முடியாமல் பொத்தியார் இடம் ஒழித்து வைத்தார். பிசிராந்தையார் சோழனோடு சேர்ந்து நட்பிற்காக உயிர்விட வருவார் என்பதை அவரும் நம்பவில்லை. – ஒன்று, இரண்டு, மூன்று என்று நாழிகைகள் கழிந்து கொண்டிருந்தன. புலவர்கள் எல்லோரும் பொத்தியார் உள்பட அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர். சோழன்தான் வடக்கிருந்து சாகப்போகிறான். அவர்களும் அவனோடு அங்கே அந்த வெயிலில் நின்று வருந்த வேண்டுமா என்ன? எனவேதான் அவர்கள் சோழனிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள். 

கொதிக்கும் வெயிலில் கூடுகின்ற ஆற்று மணலையும் இலட்சியம் செய்யாமல் யாரோ ஒருவர் எதிரே வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார். வெகு தொலைவு நடந்து வந்தவரைப் போலத் தோன்றிய அவரைத் திரும்பிச் சென்றுகொண்டிருந்த புலவர்களும் பொத்தியாரும் கண்டனர். அவர் யார்? அந்த வெயிலில் எங்கே போகின்றார்?என்பதை அவர்களால் உய்த்துணரக்கூட முடியவில்லை

ஐயா! இங்கே காவேரிக்கரையில் கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கி உண்ணா நோன்பு இருக்கிறானாமே? அது எந்த இடத்தில்? உங்களுக்குத் தெரியுமானால் சொல்லுங்கள்... நான் இந்த ஊருக்குப் புதியவன், நீங்கள் சொன்னால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.” 

வெயிலில் நடந்து வந்து கொண்டிருந்தவர் பொத்தியாரை நோக்கிக் கேட்டார். பொத்தியார் அந்த மனிதரை மேலும் கீழுமாக ஏற இறங்கப் பார்த்தார். பின்பு மறுமொழி கூறினார். ”ஏன்? கோப்பெருஞ் சோழனிடம் உமக்கு என்ன காரியம்? நீர் எங்கிருந்து வருகிறீர்?” 

ஐயா! நான் பாண்டிய நாட்டிலிருந்து வருகிறேன். என் பெயர் பிசிராந்தையார். கோப்பெருஞ் சோழனுக்கு உயிருக் குயிரான நண்பன். அவனை உடனே பார்க்க வேண்டும்.” பொத்தியாருக்கும் உடனிருந்த புலவர்களுக்கும் பெருந் திகைப்பு ஏற்பட்டது. பொத்தியாருக்கு வந்தவரை மேலும் ஆழம் பார்க்கத் தோன்றியது. 

! நீங்கள்தாம் பிசிராந்தையாரோ? இப்போது சோழனைக் கண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?‘ 

”அவனோடு சேர்ந்து நானும் வடக்கிருந்து என் உயிரைவிடப் போகின்றேன்” 

பொத்தியாரும் மற்றவர்களும் அப்படியே பிசிராந்தை யாரின் கால்களில் வீழ்ந்து வணங்கினர். “பிசிராந்தையாரே! நட்பு என்ற வார்த்தைக்கே நீர் ஒரு புதிய மதிப்பளித்துவிட்டீர் ஐயா! உம்மால் அந்தப் பதமே ஒரு அமரகாவியமாகிவிட்டது” என்றார் பொத்தியார். உடனே அவரை அழைத்துச் சென்று சோழனிடம் சேர்த்தார். நட்பின் கதையை விளக்கும் நிகழ்ச்சியாகக் காவிரிக் கரையில் இரண்டு உயிர்கள் ஒன்றாயின. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பசுமை நினைவுகள் – புறநானூற்றுச் சிறுகதைபசுமை நினைவுகள் – புறநானூற்றுச் சிறுகதை

  பளிங்கு போலத் தெளிந்த நீரின் வெண்பட்டு மடிப்பு போன்ற சின்னஞ்சிறு அலைகள் அந்தப் பொய்கைக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தன. இடையிடையே அல்லி, குவளை, தாமரை, முதலிய மலர்களும், அவற்றின் நீலம் கலந்த பசுமை நிற இலைகளுமாக அந்த எழிலை

நினைவின் வழியே – புறநானூற்றுச் சிறுகதைநினைவின் வழியே – புறநானூற்றுச் சிறுகதை

  வீடு வெறிச்சோடிக் கிடந்தது. கீரத்தனாருடைய மனமும் அப்படித்தான். சூனியமாய்ப் பாழ்வெளியாய்ச் சிந்தனை இயக்கமிழந்து கிடந்தது. ஒல்லையூருடன் அவருக்கு இருந்த கடைசி உறவும் அறுந்து விட்டது. அவருக்கு மட்டும் என்ன? தமிழ்க் கலைஞர்களின் உறவே அந்த ஊரிலிருந்து இனி அறுந்து போன

பறவையும் பாவலனும் – புறநானூற்றுச் சிறுகதைபறவையும் பாவலனும் – புறநானூற்றுச் சிறுகதை

  இளந்தத்தன் நிரபராதி. ஆனால் நெடுங்கிள்ளிக்கு அதை எப்படிப் புரியவைப்பது? ஒரு பாவமு மறியாத புலவன் அவன். ஆனால் அவனை ஒற்றன் என்று கருதித் தண்டிக்க முடிவு செய்துவிட்டான் நெடுங்கிள்ளி. சந்தேகத்தைப் போலப் பயங்கர வியாதி இந்த உலகத்தில் வேறொன்றும் இல்லை!