Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – நிறைவுப் பகுதி

மலர்..17

சில மாதங்கள் கடந்து…

     முழுமனதுடன் நடக்காத திருமணம்தான், இருந்தும் நாட்கள் கடக்க, இருவரின் இயல்பு குணத்திற்கும் சிறுவயதில் எப்போதும் செய்திடும் சீண்டலும் கேலி கிண்டலும்   இருவருக்கும் நடுவில் ஆழமான நட்பு உருவாக்கியது, எதையும் சகஜமாய் பேசும் பக்குவத்திற்கு வந்திருந்தனர், இருவரின் மனமும் இது நட்பை கடந்த உறவு என்று உணரத்துவங்கியது, ஒருமுறை வேலை விசயமாக வெளியூர் சென்ற மதுரன் பவாணியையும் குழந்தை தீபனையும் அவன் அன்னைவீட்டில் விட்டுச் சென்றிட.. அங்கிருந்த நாட்கள் எல்லாம் நத்தையாய் நகர்வதுபோல உணர்ந்தாள், எதிலும் திருப்தியின்றி செய்த வேலையையே திரும்பத்திரும்ப செய்தபடி இருந்தாள், குழந்தை வேறு சித்தா சித்தா என்று  மதுரனை தேடிட.. பவாணி மனமும் உள்ளுக்குள் மதுரன் முகம் காண ஏங்கியது, குறுமாய் சுருங்கும் அவன் கண்ணின் ஓரமும், சிரிப்பை அடக்கிக்கொண்டு அவன் பேசும் விதமும் மனதிரையில் தோன்றி இம்சிக்க துவங்கியது, அழைப்பு மணி அடிக்கும் ஓசைக்கு அவன் தானோ என்று ஆசையாய் ஆவலாய் வாசலை நோக்கியது விழிகள். 

        பவாணியிடம் உண்டான  மாற்றத்தை கவனித்த மீனாட்சி  இருவருக்கும் இடையில் உண்டான பந்தத்தை எண்ணி மகிழ்ந்து போனார்,  வாசலில் யாரோ வந்ததது போல இருக்க, வேகமாய் சென்று அது மதுரன் இல்லை என்று புரிந்து ஏமாற்றத்துடன் வந்தவளை இரக்கமாய் பார்த்தபடி, “என்னமா, அதற்குள் அத்தை வீடு அலுத்துவிட்டதா? உன் புருஷன் வரவை இப்படி எதிர்பார்க்கிறாய் என்று குரலில் எதையும் வெளிகாட்டாமல் இயல்பு போல வினவிட..  முகத்தில் உண்டான நாணத்தின் சிவப்பை அடக்குவது பெரும்பாடாய் போனது பவாணிக்கு, “தீபன் தான் சித்தா சித்தா என்று தேடிக்கொண்டே இருக்கின்றான் என்று முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டு பவாணி விலகிச் சென்றிட.. அவள் முகம் மறைத்த உண்மையை குரலிலிருத்த ஏக்கம் உணர்த்தியது.

     சென்ற வேலை முடிந்து ஊர் திரும்பிய மதுரனைக் கண்டதும் ஓடிவந்து காட்டியணைதுக்கொண்ட பார்த்திபனை தூக்கி கன்னத்தில் முத்தமிடவன், தன் மனதில் உண்டான மாற்றம் பவாணிக்கும் உண்டானதா அதை அவள் முகம் பிரதிபலிகின்றாதா? என்று ஆவலுடன் அவள் முகம் நோக்கினான்.  கோபமாய் முகம் திருப்பி நின்றவள், “ஒருவழியா உன் நினைப்பு உன் சித்தாக்கு வந்துவிட்டது, அதான் ஒன்று சேர்ந்துவிட்டீர்களே இனி என்னை கண்டுகொள்ளவேமாட்டீர்கள் என்றிட… “என்னடா குட்டிப் பையா உன் அம்மா இப்படி பொரிந்து தள்ளுகிறாள், ஒருவேளை  உன்னை கவனித்து போல தனி கவனிப்பு வேண்டும் என்கின்றாளா? என்று சீண்டிட… பதில் ஏதும் கூறமால் உள்ளே சென்றாள் பவாணி.      மதுரன் கையிலிருந்த குழந்தை தனக்கு கிடைத்த பெரிய பொம்மையை பெருமையாய் தன்  நண்பர்களுக்கு காட்டும் ஆவலில் அவன் பிடியிலிருந்து நழுவி ஓடிட.. அவனை பின்தொடந்து மீனாட்சி சென்றிட.. பவாணியை தேடி அறைக்குள் வந்தான் மதுரன்.

     “ என்ன பவி, இது எப்போதும் நடக்கும் பேச்சு தானே  இன்று மட்டும் என்ன புதிதாய் முகம் திருப்பிகொள்கிறாய் என்றான் மதுரன், “ இதில் என்ன கிண்டல் வேண்டியிருக்கு என்று பவாணியிடமிருந்து வெடுகென்று பதில் வந்தது. எதிலோ தோற்றது போலவும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்தது போலவும் வெறுமையை உணர்ந்தவன், அங்கிருந்து விலகிச்சென்றான்.

    மனம் குழப்பமாய் இருந்தால் வழக்கமாய் வந்து அமரும் ஆற்றக்கரைக்கு வந்தவன் அமைதியின்றி ஓடிய நீரின் ஓசையில் பழைய நினைவுகளை அலசிடத் துவங்கினான்,  இதுவழக்கமாய் இருவருக்கும் இடையில் வரும் கிண்டல் பேச்சுதான்… மதுரன் இப்படி ஏதாவது சீண்டலாய் கூறினால் அவளும் சளைக்காமல் கேலியாய் பதில் தருவாள் “முதல்முறை  இதுபோல் பேச்சு நடந்த நிகழ்வை தனக்குள் நினைத்துப்பார்க்க துவங்கினான்.. எப்போதும் போல மாலை வீடு திரும்பியவன் கையில் பூமதி புகைபடத்திற்கு மாலை அணிவித்திட பூவும் அவளுக்கு பிடித்த ரசமாலாயுடன் உள்ளே நுழைந்தவன் கையில் குழந்தை பார்த்திபனுக்கு பிடித்தமான சாக்லேட் பாக்கெட்களும்  இருந்தன, வாசல் கதவு திறந்ததும் தனக்காக ஓடிவந்த பார்த்திபன் கையில் கொடுத்துவிட்டு அவனை தூக்கி தன் தோள்களில் வைத்துக்கொண்டவன், அவனுடனே சென்று..  பூமதி படத்தின் முன் நின்று தன் வழக்கமான செயலை செய்திட.. “சித்தா எனக்கு சாக்கி, மதி அம்மாவுக்கு பூ, பவி அம்மாவுக்கு என்று குழந்தை மழலை மொழியில் வினவிட.. “உன் பவி அம்மாவுக்கு நான் வாங்கிதந்தா பிடிக்காதே!என்று  சீண்டலாய்   கூறி பவாணி முகம் பார்த்தான் மதுரன். “பிடிக்காது என்று யார் சொன்னது, உன் சித்தாவுக்கு தான் ஒரு முழம்  பூவுடன் அரைமுழம் அதிகமானால் சொத்து அழிந்துவிடும் என்று பயம், அதனால்தான் உன் மதி அம்மாவுக்கு மட்டும் மறக்காமல் வாங்கிவருகின்றார் என்று கேலியாய் பதில் தந்தாள் பவாணி, அடுத்து வந்த நாட்கள் எல்லாம் பவாணிக்கும் சேர்த்து பூ வாங்கிவந்தவன் அதையும் பூமதி படத்தின் அருகில் வைத்துவிட்டு, “என் சொத்து அழிந்தாலும் பரவாயில்லை எனக்கு உங்கள் சந்தோசம் தான் முக்கியம் என்று கூறி நகர்ந்திட.. அவன் அந்தப்பக்கம் சென்றதும் ஆசையாய் பூவை எடுத்து தலையில் சூடிக்கொண்ட பவாணி முகம் மனதில் தோன்றி இம்சித்தது.

     பவாணி மனநிலை புரியாது குழப்பத்தில் ஒருபுறமும்..  தன் மனதில் உண்டான மாற்றம் பூமதிக்கு செய்திடும் துரோகம் என்று  மனசாட்சி ஒருபுறமும் குடைந்தது, காற்று பலமாய் வீசிட.. “மதி என்று ஏக்கமாய் அழைத்தான் மதுரன். ஓங்கி அடித்த காற்று ஒரு இடத்தில் சுழன்றிட.. புகைமண்டலாமாய் பூமதி உருவம் தோன்றியது.  

      “என்ன சார் பயங்கர குழப்பத்தில் இருகின்றீர்கள் போல என்றது அவள் உருவம். “மதி என்னை மன்னித்துவிடு என்று மதுரன் குற்றயுணர்வில் துவங்கிட.. “எதுக்கு  மன்னிப்பு? உன் மாற்றத்தை பார்த்து இப்போது தான் எனக்கு நிம்மதி உண்டாகியது… தேவையில்லாத குழப்பத்தை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு உன் மாற்றத்தை பவிக்கு புரியவைத்திடு என்றது அவ்வுருவம்.  

“இல்லை மதி.. அவளுக்கு என்னை பிடிக்கவில்லை கல்யாணம் செய்யும் போதே இது குழந்தைக்காகத்தான் என்று சொல்லித்தான் செய்தாள், என் விருப்பத்தை அவள் மீது திணித்திட விருப்பமில்லை, அவள் எப்போதும் அவளாகவே அவள் குழந்தைக்கு அம்மாவாக மட்டும் இருந்துவிட்டு போகட்டும், என் சுயநலத்திற்காக அவள் உணர்வுகளை உடைத்துவிட்டேனோ என்று வருத்தமாக இருக்கிறது என்றான்  கவலையுடன் கூறினான் மதுரன்.

“உன் மூளைக்கு என்ன ஆயிற்று மது.. அடுத்தவர் முகத்தை வைத்தே மனதை படிக்கதெரிந்தவன், இப்போது எதற்கு இப்படி குழம்புகின்றாய், அவள் செய்கையிலியே அவளுக்கு உன்னை பிடித்திருப்பது தெரியவில்லை“ என்றிட.. மெலிதாய் புன்னகை செய்து..  “அது புரிகின்றது, அவள் கண்கள் சிலநேரம் என்னை காதலுடன் பார்ப்பதை உணர்ந்திருக்கின்றேன், ஆனால் இந்த உறவை அடுத்தநிலைக்கு எப்படி நகர்த்துவது என்றுதான் தெரியவில்லை, இதுவே ஒரு அழகான புரிதலாய் இருக்கும் போது அடுத்து என்ன என்று யோசித்து இருக்கும் மனநிலையை கெடுத்துக்கொள்ளகூடாது  என்பது தான் என் கவலை என்று தன் மனதின் குழப்பத்தை தெளிவாய் விளக்கினான் மதுரன்.

“முதலில் உன் எண்ணத்தை சொல், அதன் பிறகு நடப்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று மதி அறிவுரை வழங்கிட.. “மதி.. இப்போதெல்லாம் நீ என்னைவிட்டு விலகியிருப்பது போல உணர்கின்றேன், “என்றான் மதுரன். “அது உன் கற்பனை மது.. என்றாள் காற்றாய் அவள். “பொய் முன்பெல்லாம் அடிக்கடி தென்றலாய் என்னை வருடிச்செல்வாய், அப்போதெல்லாம் உன் விரல்கள் என்னை தீண்டியது போல உணர்வேன்.. “ என்று மதுரன் நிறுத்திட.. “இனி நீ முழுக்க முழுக்க பவாணிக்கு சொந்தமானவன் மது.. அடுத்தவன் கணவனை காற்றாய் இருந்தாலும் தீண்டக்கூடாது என்று கேலிபோல் காரணம் கூறி சிரித்தது.

“என் வாழ்கையில் யார் வந்தாலும் போனாலும்  உனக்கான இடம் என்றும் மாறது மதி.. என் மனதில் என்றும் மாறாத அன்புடன் மலர்ந்தவள் நீதான் என்று தன் அன்பின் ஆழத்தை தெளிவுபடுத்தினான் மதுரன்.

அழகாய் மலர்ந்த இதழ்கள்.. காற்றில் கலைந்து முழுதாய்  அவள் உருவம் மறைந்து போனது.. இது நீ தந்த வாழ்கை மதி.. என் உயிர் உள்ளவரை உன்னை மறக்கமாட்டேன்.. ஏதாவது கற்பனை செய்துகொண்டு என்னை விலகி நிற்க முயற்சிக்காதே! என்று எச்சரிக்கும் குரலில் மதுரன் கூறிட.. ஒருநொடி கடந்து செல்லும் தென்றலாய்  மதுரன் தோள் சாய்ந்து சென்றாள் பூமதி.

பூமதியுடன் பேசியபிறகு மனம் கொஞ்சம் தெளிவுற  இன்று எப்படியும் பவியிடம் இதைப்பற்றி பேசிட வேண்டும் என்ற உறுதியுடன் வீடு நோக்கி சென்றான் மதுரன்.  

“வா வா மதுரா.. வந்ததும் வராததும் எங்கு போனாய்.. உங்களைப் பார்க்க யார் வந்திருகின்றார்கள் பார்… உங்கள் கல்யாணத்திற்கு  கூட பத்திரிக்கைவைத்தும் வரவில்லை இப்போது வீடு தேடி வந்திருகின்றார்கள்” என்று வாசலிலேயே வழிமறித்து பரபரப்பாய் கூறி வீட்டினுள் அழைத்துச்சென்றார் மீனாட்சி.

பவாணி அப்பா அம்மா ஒருவித தயக்கத்துடன் அமர்ந்திருக்க அவர்கள் மடியில் உரிமையாய் அமர்ந்திருந்தான் பார்த்திபன்.

“வாங்க மாமா,  வாங்க அத்தை” என்று வரவேற்ற மதுரனை கண்டதும் வேகமாய் எழுந்துநின்ற  வேலு.. “கல்யாணம் முடிந்த கையோடு ஊருக்கு போய்விட்டீர்கள், அதனால் விருந்துக்கு அழைக்க முடியவில்லை, என்ன கோபம் இருந்தாலும் எங்களை மன்னித்து நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வாங்க மாப்பிளை” என்று விருந்துக்கு அழைப்பு விடுத்தார் வேலு பவாணி தந்தை.

“உங்களை மன்னிப்பது என் கையில் இல்லை மாமா, அது பவாணி முடிவு” என்றவன் இறுக்கமான முகத்துடன் ஒரோமாய் ஒதுங்கி நின்றவள் அருகில் சென்று.. “நடந்து முடிந்த விசயங்களுக்காக இப்போது நம்மை அன்புடன் நெருங்கி வருபவர்களை ஒதுக்ககூடாது பவி” என்று பதட்டத்தில் நடுங்கிய விரல்களை தன் கரத்தினுள் கோர்த்துக்கொள்ள, “எதையும் மறக்கமுடியவில்லை மாமா. மகள் அனுபவிக்கும்  வேதனையை விட அவர்களின் அந்தஸ்துதான் முக்கியம் என்று ஒதுக்கி தள்ளியவர்கள்.. இப்போது நல்ல நிலையில் இருக்கும்போது ஒன்றுமே நடக்காதது மாதிரி நடந்துகொள்வதை எப்படி மன்னிக்கமுடியும் மாமா” என்றாள் பவாணி.

“நீ கடந்துவந்த காலம் ரொம்பவே கசப்பானது தான்.. ஒரு கசப்பை ருசித்த பிறகு இனிப்பை தேடி உண்பது இல்லையா?  கசப்பை நினைத்தே இனிப்பு சுவையை ஒதுக்கலாமா?” என்றவன், “நீ எதையும் மறக்கவேண்டாம், யாரையும் மன்னிக்கவேண்டாம், அதை கடந்துவந்திடு,” என்றிட.. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு… “ உங்கள் மாமாவிடம் விருந்திற்கு வருகின்றேம் என்று சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு  வேகமாய் உள்ளே சென்று மறைந்தாள் பவாணி.

தடபுடலாய் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்ட மதுரன் பவாணிக்கு புதுத்துணி கொடுத்து மாப்பிளைக்கு செய்ய வேண்டிய  செய்முறைகளை செய்து சிறப்பித்தனர், குட்டிப்பையன் பார்த்திபனுக்கு ஒரு அரை முழுவதும் விளையாட்டு பொருட்களை அடுக்கிவைத்து தங்கள் பேரன் என்று சொல்லாமல் சொல்லி உரிமை கொண்டாடினர்.

விருந்து முடிந்து.. அன்று இரவு தங்கள் வீட்டிலேயே தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்தனர், தனிமையில் மதுரனை சந்தித்த வேலு.. 
“முதலில்  கோபம் இருந்தாலும், என் மகள் அனுபவிக்கும் கஷ்டங்களை கண்டு மனம் பதறத்தான் செய்தது,  அவள் மன்னிப்பு கேட்டு வந்த போதும் ஊர் உறவு என்ன நினைக்கும் என்றுதான் என் மனதை மறைத்து விரட்டியடித்தேன்.. யாருக்கும் தெரியாமல்  பவாணியை தேடினேன்.. அவள் ஒரு ஆசிரமத்தில் பத்திரமாய் இருப்பது தெரிந்துதான் மனம் நிம்மதி அடைந்தது, இருந்தும் குற்றவுணர்வு என்னை நிதமும் உறங்கவிடாமல் தொந்தரவு செய்துகொண்டுதான் இருந்தது, மறுபடியும் என் மகளை உங்கள் அம்மாவுடன் பார்த்ததும் தான் நிம்மதியை உணர்ந்தேன்..  உங்களுடன் கல்யாணம் என்று செய்தி கேட்டு அது உண்மையாய் இருக்கவேண்டுமென்று வேண்டாத தெய்வம் இல்லை.. இருந்தும் உங்கள் கல்யாணத்தில் கலந்துகொள்ளும் கொடுப்பனை எனக்கு இல்லை..என்று வேதனையுடன் கூறினார் வேலு.

“ஊர் உலகத்திற்க்காக வாழத்துவங்கினால் நம் வாழ்கையை நிம்மதியாய் வாழ முடியாது மாமா. உண்மையில் எனக்கு  உங்கள் மேல் தான் கோபம்.. காதல் அது இந்த காலத்தில் சகஜமாய் போனது.. உங்கள் தேவையில்லாத வறட்டு கௌரவத்தால்  எத்தனை வேதனைகளை அவள் கடந்து வந்திருக்க்கின்றாள், எப்படி வாழவேண்டிய பிள்ளை என்றவன்  வேலு முகம் வேதனையில் வாடிட.. ஏற்கனவே வருத்ததில் இருபவரை  இன்னும் வார்த்தையால் நோகடிக்க மனமின்றி.. “இதுவரை அவர்கள் கடந்துவந்த கஷ்டத்தை மறக்கடிக்கும் அளவிற்கு இனி அவர்களுக்கு சந்தோசத்தை மட்டும்தான் நான் கொடுப்பேன் என்று உறுதியளித்தான் மதுரன்.

இரவு உறங்க  அறைக்கு சென்றிடும் வேலை குழந்தை பார்த்திபனை தங்களுடன் வைத்துகொண்டனர்  பவாணி பெற்றோர். முதல்முறை ஒரே அறையில் உடன் குழந்தை இல்லாத தனிமை இருவருக்கும் நடுவில் ஒரு வித நெருக்கத்தை உண்டாக்கும் மனநிலையில் பவாணி அருகில் நெருங்கி சென்ற மதுரன்..   ஊரில் இருந்து வந்ததிலிருந்து நீ என்னுடன் சரியாக பேசவேயில்லை பவி.. என் மீது என்ன கோபம் என்று மெதுவாய் வினவினான் மதுரன்.

இதுவரை தவிர்க்கப்பட்டு வந்த பெற்றோரின் அன்பை அடைந்துவிட்ட மகிழ்ச்சியும் இன்று முழுவதும் மற்றவர்கள் பார்வைக்கு ஒற்றுமையான தம்பதியாய் தெரியவேண்டுமென்று நெருக்கமாய் அமர்ந்திருந்த தருணங்கள் பவாணி மனதில் துளிர்விட்டிருந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திட… மதுரன் நெருக்கத்திலும் அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று உந்திட.. “பிறகென்ன எப்போது வருவீர்கள் என்று வாசலிலேயே தவம் கிடந்தது நான் வந்ததும் வராதும் உங்கள் மகனை மட்டும் தூக்கி கொஞ்சிவிட்டு… என்றவள் என்ன சொல்ல வந்தோம் என்று புரிந்து அடுத்த வார்த்தை கூறாமல் நிறுத்த.. அவள் சொல்லாமல் நிறுத்திய வார்த்தையின் மொத்த விளக்கத்தையும் அவள் முகத்தின் நாணச் சிவப்பு உணர்த்திட.. அவள் உணரும் முன் சட்டென்று கன்னத்தில் இதழ் ஒற்றி பிரித்தவன், “இப்போது கோபம் போனாதா?
என்று வினவிட.. மதுரனின் முதல் நெருக்கத்தில் உண்டான கிறக்கத்தை அவன் மார்பில் முகம் புதைத்தே  மறைத்துக்கொண்டாள் பவாணி. அழகான காதல் சங்கமம் அங்கு அரங்கேறியது.        

சில வருடம் கடந்து..

வருடங்கள் கடந்தாலும் வீடு திரும்பிடும் பொழுது நாள் தவறாமல் பூமதி புகைபடத்திற்கு பூ வாங்கிவருபவன் அதை தன் கையாலேயே மாலையாய் போட்டும்விடுவான், மதுரன் இந்த நடவடிக்கையை கண்டு பவாணி மனம் நெகிழ்ந்து போகும்.. அந்த தருணத்தில் தன்னுடன் இல்லாமல் போன காதல் கணவனை எண்ணி சில நொடி மௌனம்கொள்வாள்.

மதுரன் பவாணி இருவருக்கும்  அழகான பெண்குழந்தை பிறந்தது.. அதற்கு பெயர் வைக்கும் விழாவிற்கு  உறவுகளுக்கு அழைப்புவிடுத்தவன், பூமதி குடும்பத்திற்கு நேரில் சென்று அழைப்புவிடுத்தான், விழாவிற்கு அலங்கரிக்கப்பட்ட வீட்டின்  வரவேற்பு அறையில் பூமதி புகைப்படத்தை கண்டு கண் கலங்கி நின்றவர்களை, கண்டு மனம் வருந்தி.. “ நம் மதி நம்மைவிட்டு எங்கும் போகவில்லை மாமா.. அவள் எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டுதான் இருப்பாள்.. “ என்று  உண்மை உரைத்து ஆறுதல் கூறிட.. இது வழக்கமாக சொல்லப்படும் ஆறுதல் வார்த்தை என்று எண்ணிக்கொண்டு அவர்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

குழந்தை காதில் பெயர் சொல்லிட.. தாய்மாமானாய் பிரபுவை  அழைத்தான் மதுரன். தேன்மொழி என்னும் பெயரை மூன்று முறை குழந்தை காதில் ஓதிட..  விழா இனிதாய் நிறைவடைந்தது.

ஊரிலிருந்து வந்த உறவுகள் எல்லாம் கலைந்து சென்றுவிட.. மொட்டை மாடியில் தனியாய் நின்றவன், தென்றல் தன்னை மட்டும் தனித்துவமாய் தீண்டுவதை உணர்ந்து.. “மதி! என்று மகிழ்வுடன் அழைத்தான் மதுரன்.

சுழண்டு நின்ற காற்று பூமதி உருவம் பெற்றிட… “ஓ.. உனக்கு என் பெயர் நியாபம் இருக்கின்றதா? நான் கூட மறந்துவிட்டாய் என்று நினைத்தேன் என்று சற்று கோபமாய் வினவியது.. “என்ன இன்று தென்றல் அனலாய் சுடுகின்றது என்று மதுரன் காரணம் அறிந்திட முயன்றிட.. “அவன்னவன்  பிரிந்துபோன காதலி பெயரைக்கூட பெற்ற பிள்ளைக்கு வைத்து அழகு பார்க்கின்றான், வார்த்தைக்கு வார்த்தை இந்த வாழ்கை உன்னால்தான் என்று புலம்புபவன் பிள்ளைக்கு என் பெயரை வைக்கவில்லை என்றால் கோபம் வராதா? என்றது பூமதி உருவம்.

“இதுதான்   தென்றல் சுடுவதற்கு காரணமா? என்று சிரித்தவன், “பூமதி என்று உன் பெயரை உச்சரித்ததும்  என் மனம் தானாய் உன் முகத்தை நினைத்துகொள்ளும் மதி.. இதே குழந்தைக்கு உன் பெயரை வைத்தேன் என்று வை.. நாளாகநாளாக  உன் முகம் தோன்றும் முன் அடிக்கடி பார்த்து பழகிய குழந்தை முகம் தோன்றத் துவங்கிவிடும்.. எனக்கு எப்போதும் பூமதி என்றால் அது நீ மட்டும்தான் உன் இடத்தை யாருக்கும் கொடுக்கமாட்டேன், உன் பெயரை சொன்னதும் தானாய் என் கண்முன் உன் முகம் விரியும் அந்த சுகத்தை என்றுமே இழக்கமாட்டேன்.. என்று தன் செயலின் காரணம் சொன்னான் மதுரன்.

மதுரன் தேகம் எங்கும் தென்றலாய் உரசி தன் அன்பை வெளிபடுத்தினாள் பூமதி. “என் ஆன்மா நிறைவை உணர்ந்தது மது.. நீ உன் குடும்பத்துடன் சந்தோசமாய் இருக்கிறாய், என் ஆன்மா சாந்தியடையும் நேரம் இது..  இனி நீ என்னை புகைப்படமாய் மட்டுமே காணமுடியும்.. காற்றில் என்னைத் தேடாதே.. நான் உன்னை கடந்து செல்கின்றேன் என்று மதுரன் பதிலுக்கும் காத்திராமல் கலைந்து சென்றது பூமதி ஆன்மா.

சொல்லமுடியா வேதனையில் துவண்டு கண்ணீர் வடித்தான் மதுரன்.. “என்ன மாமா.. இங்கு என்ன செய்கின்றீர்கள் என்று பவாணி குரல் கேட்டு கண்ணீரை துடைத்துக்கொண்டவன், “சும்மா காற்றுடன் கதை பேசிக்கொண்டு இருந்தேன் என்றிட.. கலங்கியிருந்த கண்களை கண்டவள் “எனக்கு புரிகின்றது மாமா.. உங்களுக்கு மதி அக்கா நியாபகம் வந்திருக்கும்.. எனக்கு சாரதி நினைவு வந்தது போல என்று தன் வேதனையை சொல்லாமல் சொன்னவளை தன் தோளோடு சேர்த்து அனைதுக்கொண்டவன்.. “அவர்கள் எங்கிருந்தாலும் நம்மை பார்த்து சந்தோசப்படுவார்கள், நம் முகத்தில் தோன்றும் சிரிப்பு தான் அவர்களின் நிம்மதி என்றவன் ஆதரவாய் நெற்றியில் முத்தமிட அதை ஆமோதிப்பது போல புன்னகை செய்தாள் பவாணி.

இனி எல்லாம் சுகமே.. சுபமே…

1 Comment »

  1. அருமையான முடிவு….உணர்வகளை நல்லா கையாண்டிருக்காங்க….சூப்பர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: