Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் தோற்றவன் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதை

தோற்றவன் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதை

 

வெண்ணிப் பறந்தலை’ என்ற இடத்தில் நிகழ்ந்த அந்தப் பயங்கரமான போரில் கரிகாலன் வெற்றி அடைந்தான். அந்த வெற்றியைக் கொண்டாடும் விழா அன்று அவையில் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது! பாவாணர் பலர் அவன் வெற்றி மங்கலச் சிறப்பைப் பாடல்களாகக் கூறிப் பாராட்டிப் பரிசு பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். எல்லோருடைய பாடல் களும் அந்தப் போரில் வெற்றி பெற்றவனாகிய கரிகாலனையே சிறப்பித்துப் பாடியிருந்தன வென்றவனைப் பற்றி வெற்றிமங்கலம் பாடும்போது அப்படிப் பாடுவதுதானே இயற்கையும் ஆகும்? 

ஆனால், இறுதியாக வெண்ணிக்குயத்தியார் என்ற ஒரு புலவர், “கரிகால் வளவ நீ இந்தப் போரிலே வெற்றி பெறவில்லை ! தோற்றுவிட்டாய்” என்னும் கருத்தை அமைத்துத் துணிவாக ஒரு பாட்டைப் பாடிவிட்டார். கரிகால் வளவன் உட்பட அதைக் கேட்ட அத்தனை பேரும் திடுக்கிட்டனர். ‘வெண்ணிக் குயத்தியாருக்கு ஏதேனும் சித்தப்பிரமையோ?’ – என்று கூட நினைத்துவிட்டனர் அவர்கள். 

வெண்ணிக் குயத்தியாரோ, சோழர் குலதிலகமே! இந்தப் போரிலே உனக்குத் தோற்று, மார்பிலே பட்ட அம்பு முதுகிலே ஊடுருவியதற்காகச் சாகும்வரை வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தானே பெருஞ்சேரலாதன் , அவன் தான் வெற்றி பெற்றிருக்கிறான். நீ வென்றும் தோற்று நிற்கிறாய்!” என்றே மீண்டும் கூறினார். 

 

கரிகாலனுக்குச் சினம் வந்துவிட்டது! புலவரே! நீங்கள் சுய நினைவோடுதான் இதனைக் கூறுகிறீர்களா? யார் முன் கூறுகிறோம், என்ன கூறுகிறோம் என்பதைச் சிந்தித்துக் கூறுங்கள் கரிகாலன் சீறி விழுந்தான். வெண்ணிக்குயத்தியாரோ பதறாமல் நடுங்காமல் சிரித்த முகத்தோடு இருந்தார். அரசனின் சினத்தால் இவருக்கு என்ன தண்டனை விதிக்கப்படுமோ? எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்ற மாதிரி இந்த அப்பாவிப் புலவர் மேலும் சிரிக்கின்றாரே என்று அங்கே இருந்தவர்கள் எல்லோரும் அச்சத்தில் மூழ்கி வீற்றிருந்தனர். 

”நீங்கள் பாடிய பாட்டும் கூறிய கருத்தும் உமக்குச் சித்தப்பிரமை என்று எங்களை எண்ணச் செய்கின்றன.” 

”இல்லை வேந்தே! தெளிவான சித்தத்தோடு சிந்தித்துப் பார்த்துத்தான் கூறுகிறேன். உன்னுடைய வெற்றிவாளின் வெற்றி. வேறொருவகையிலே பார்த்தால் ஆன்மாவின் தோல்வி. பெருஞ்சேரலாதனின் தோல்வி வாளின் தோல்வி. வேறொரு வகையிலே பார்த்தால் ஆன்மாவின் வெற்றி! வாளின் வெற்றியைவிட ஆன்மாவின் வெற்றி உயர்ந்தது. வாளாலே வென்ற வெற்றி மாறும், அழியும். ஆன்மாவால் பெற்ற வெற்றி என்றும் மாறாது அழியாது. 

– “பெருஞ்சேரலாதன் தான் வெண்ணிப் பறந்தலைக் களத்திலேயே வடக்கு நோக்கி உண்ணாதிருந்து உயிர் நீத்துவிட்டானே அவன் ஆன்மா எப்படி வென்றதாகும்?” 

‘அவன் உயிர் செத்துவிட்டது என்னவோ மெய்தான் அரசே! ஆனால், அவன் புகழ் என்ற உயிர் உன்னாலும் வெல்ல முடியாத ஆற்றலோடு இப்போதுதான் பிறந்திருக்கிறது. அது சாகாத உயிர். சாஸ்வதமான உயிர்! 

“ஏதோ , தத்துவப் பித்து ஏறி உளறுகிறீர்கள் புலவரே!” 

கரிகாலா! நீ இன்னும் என்னைப் புரிந்து கொள்ளாமலே பேசுகிறாய். இந்த வெற்றிவிழா நாளிலே உன்னைப் பழித்துப் பாட வேண்டும் என்பதற்காக நான் வரவில்லை. மறைமுகமாகப் பார்த்தால் என் பாட்டும் உன்னைப் புகழத்தான் செய்கிறது. என் கருத்தை நீ ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெற்றி மமதையைத் துறந்து நடுநிலை உள்ளத்தோடு என் கருத்தை நினைத்துப் பார்!‘ 

”நீங்கள் முதலில் உங்கள் கருத்தை விளக்கமாகக் கூறுங்கள்” சற்றே பதற்றமும் சினமும் குறைந்து அமைதியாகப் புலவரைக் கேட்டான் கரிகாலன். 

”பெருஞ்சேரலாதனும் உன்னைப் போலப் பேரரசன்தான். போர் நடந்து கொண்டிருக்கும்போதே மார்பில் தைத்த அம்பு முதுகிலே ஊடுருவி நுழைந்துவிட்டதனால், “ஆகா! முதுகிலே புண்பட்ட நானும் ஒரு வீரனா? எதற்காக மானமிழந்த நான் உயிர் வாழ வேண்டும்? வெற்றி விளைந்தாலும் இனி எனக்கு அது தோல்விதான்” என்றெண்ணி வடக்கிருந்து உயிர் துறந்தான். வெற்றி தோல்வியைவிட, ஏன்? உயிரைவிட மானமே பெரிதாகத் தோன்றியது அவனுக்கு. தோற்று இறந்தானில்லை அவன். தன் மானத்தைக் காப்பதற்காகத் தன்னைத்தானே கொன்று கொண்டான். உன் வீரர்களோ, நீயோ அவனைக் கொன்று வெற்றி பெறவில்லை. போரின் வெற்றியை நீ அடைந்துவிட்டாலும் மானத்தின் வெற்றியை உனக்கு விட்டுக் கொடுக்க விரும்பவில்லை அவன் உள்ளத்தால், ஆன்மாவால், உயரிய புகழால், வெற்றிக்கும் மேலான வெற்றியை அவன் தன் உயிரைக் கொடுத்து அடைந்துவிட்டான். இப்போது சொல் தோற்ற அவனுக்கு வெற்றியா? அல்லது வென்றுவிட்டதாக இறுமாந்து கிடக்கம் உனக்கு வெற்றியா?” வெண்ணிக் குயத்தியார் ஆவேசத்தோடு பேசினார். 

“ஒப்புக்கொள்கிறேன் புலவரே! நல்லவனை வென்றவன் தான் தோற்றுப் போகிறான். நல்லவனோ தோற்றாலும் வென்று விடுகிறான். இதில் மெய் இருக்கிறது” கரிகாலனுடைய குரல் குழைந்து கரகரத்தது. சட்டென்று அவன் அவையிலிருந்து எழுந்து சென்றுவிட்டான். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அவன் ஒரு வல்லாளன் – புறநானூற்றுச் சிறுகதைஅவன் ஒரு வல்லாளன் – புறநானூற்றுச் சிறுகதை

  அவன் ஒரு பயிர்த்தொழிலாளி. வேளாண்மகன். அப்போது ஊரிலுள்ள வயல்களில் வரகுப் பயிர் முற்றி அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது. அங்கங்கே வயல்களிலிருந்து கருநிற வரகின் தாள்களை அரிந்து களத்துக்குக் கொண்டுவந்து கொண்டிருந்தார்கள். இந்த அறுவடை வேலையில் ஈடுபட்டுக் கூலி பெறுவதற்காகப்

பறவையும் பாவலனும் – புறநானூற்றுச் சிறுகதைபறவையும் பாவலனும் – புறநானூற்றுச் சிறுகதை

  இளந்தத்தன் நிரபராதி. ஆனால் நெடுங்கிள்ளிக்கு அதை எப்படிப் புரியவைப்பது? ஒரு பாவமு மறியாத புலவன் அவன். ஆனால் அவனை ஒற்றன் என்று கருதித் தண்டிக்க முடிவு செய்துவிட்டான் நெடுங்கிள்ளி. சந்தேகத்தைப் போலப் பயங்கர வியாதி இந்த உலகத்தில் வேறொன்றும் இல்லை!

முன்னோர் தவறு – புறநானூற்றுச் சிறுகதைமுன்னோர் தவறு – புறநானூற்றுச் சிறுகதை

  ஒருசமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர், கடையேழு வள்ளல்களின் மரபினராகிய சிற்றரசர்கள் இருவரைச் சந்திக்க நேர்ந்தது. அந்தச் சிற்றரசர்களில் ஒருவனின் பெயர் இளவிச்சிக்கோ. மற்றொருவன் பெயர் இளங்கண்டீரக்கோ. முன்னவன் சற்றே வயது முதிர்ந்தவன். பின்னவன் பருவத்தில் மிக இளைஞன். புலவருடைய