Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 15

மலர்…15 

பழைய நினைவில் இரவு வெகுநேரம் கடந்து ஆழ்ந்த உறக்கத்தை தழுவியவன் வாசலில் காவலில் நின்ற சீசர் எதையோ கண்டு குரைக்கும் சத்தத்தில் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான்.. வழக்கத்தைவிட சீசரின்  நடவடிக்கை வித்தியாசமாக இருக்க…  வாசலில் சென்று பார்க்க , சீசர் இப்போது மதுரனுக்கு பின் பக்கம் பார்த்து குரைத்திட துவங்கியது திரும்பி பார்த்த மதுரன்அதிர்ச்சியில் உறைந்து போனான். ஹாலில் மாட்டியிருந்த பூமதி படத்தின் அருகில் நிழல்போல் ஒரு உருவம்  நகர்வதை உணர்ந்தவன், தூக்க கலக்கத்தில் சிவந்திருந்த கண்களை மீண்டும் தேய்த்துவிட்டு  பார்த்திட.. எதுவும் இல்லாமல் இருக்க..  பூமதி படத்தை வந்து காதலாய் வருடி, “எங்கு பார்த்தாலும் நீ  இருப்பதை போல உணர்கின்றேன் மதி!.. 

எதிலும் உன் உருவம் 
தெரிந்திட 
உறக்கம் மறந்து 
உன் நினைவில் 
கரைகிறேன்.. 
என் மீது இறக்கம் 
கொண்டு ஒருமுறை 
உன் முகம் காட்டிடு.. 

என்று வேதனை மிகுந்த குரலில் கூறியவன், பூமதி படத்தில் அருகில் இருந்த ரசமலாய்  காலியாக இருக்க, “இது உன் வேலை தானா சீசர்? நான்  அந்தப்பக்கம் போனதும் நீ சத்தமே இல்லாமல் இந்தபக்கம்  வந்து மதிக்கு  வைக்கும் ரசமலாயை காலி செய்கிறாயா?” என்று மதுரன் வினவிட.. சீசரின் பார்வை மதுரனுக்கு பின் நிலைத்து நின்றது, “அங்க என்ன பார்வை, போ..  போய் உன் இடத்தில் இருஎன்று கட்டளை போட… அங்கிருந்து செல்ல மனமில்லாமல் மீண்டும் மீண்டும்  உறுமிட..  மதுரனுக்கு பின்யிருந்த நிழல் மெதுவாய் தலையை போ  என்பது போல அசைத்தது..  மதுரனை   ஒருமுறை பார்த்த சீசர், அமைதியாய் அவன் காலடியில் துணையாய் வந்து அமர்ந்தது, “ செய்வது எல்லாம் செய்துவிட்டு ஒன்னும்  தெரியாத நல்லபிள்ளை மாதிரி முகத்தை   வைத்துகொள்என்றவன்  காலடியில் கிடந்த சீசரை இழுத்து சென்று அதன் இடத்தில்  கட்டிவைத்துவிட்டு மீண்டும் அறைக்கு   உறங்கச்சென்றான் மதுரன். 


என்ன இவ்வளவு ஜில்லென்று இருக்கிறதுஎன்று அறையின் ஏசியை சரிசெய்துவிட்டு மீண்டும்  கட்டிலில் சரிந்தவன் உறக்கம் வராமல் புரண்டு படுக்க.. மீண்டும் அறையின் குளிர் அதிகமானது.. 

 குளிரை  உணர்ந்தவன்  எழுந்திட முயன்றிட, ஒருகரம் ஆதரவாய் மதுரன்  தலைமுடிகோதி நெற்றியில்  வந்து நின்றது, அறையின் குளிருக்கு கதகதப்பாய் இருந்த  விரல்கள் கன்னம் வருடிட, புரியாமல் கண்விழித்த மதுரன்,   புது மலராய் புன்னைகை சூடி  நிலவைபோல மிளிர்ந்தபடி  இருந்த  பூமதி கண்டு அதிர்ந்தான். 
மதி! நீயா.. இது நீயே தானா?,” என்று தலையை உலுக்கி கனவென்று நினைத்த தன் காதலி பிம்பத்தை கலைத்திட முயன்றான் மதுரன். 
என்ன மது! கனவு என்று நினைகின்றாயா? நேரில் வரமாட்டேன் என்ற தைரியத்தில் தானே! நானே வந்து சொன்னால் கல்யாணம் செய்துகொள்கின்றேன் என்றாய்! இதோ வந்துவிட்டேன்இப்போது என்ன காரணம் சொல்லி  உன் கல்யாணத்தை  தள்ளிப்போடுவாய்,” என்றது பூமதியின் நிழல் உருவம்.

மதி!என்று வலி மிகுந்த குரலில் அழைத்தவன் நிழல் உருவத்தை தொட்டு அணைத்திட முயன்றிடும்பொழுது அது காற்றை வருடியதுபோல கலைந்து மீண்டும் உருவமாய் வந்து நிலைத்து நின்றது வெகுகாலம் கடந்து அணைக்க துடித்த தன்னவளை நெருங்கிட முடியாமல் தவித்த  மதுரன் உயிர் கொல்லும் வேதனையில் துவண்டு கட்டிலின் விளிம்பில் சரிந்து கண்ணீரில் கரைந்திட துவங்கினான்.

கலங்கி தவித்தவன் அருகில் நெருங்கி வந்த பூமதியின்  நிழலுருவம்.. மதுரன் தோளைத்  தொட்டிடதன்னை  தீண்டிய விரல்களை பற்றிக் கொள்ள முயன்ற மதுரன் மீண்டும் காற்றையே தீண்டியது போல் உணர்ந்து…. “ நீ என்னை தொடுவதை என்னால் உணரமுடிகின்றது! ஆனால் என்னால்  ஏன் உன்னை தொட முடியவில்லை மதிஎன்று மதுரன் புரியாமல் வினவிட..என்னை உன்னால் உணர முடியுமே தவிர.. தீண்டவோ உனக்கு சொந்தமாக்கிக்கொள்ளவும் முடியாது.. மது.. இதுதான் உண்மை இதை நீ ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்உன் வாழ்க்கையில்  முடிந்த கடந்த காலம் நான்.. என்னை நினைத்துக்கொண்டே  உன் நிகழ்காலத்தை  வீணாக்கிகொள்ளாதே.. உன் அம்மா  காட்டும் பெண்ணை மணந்து கொண்டு சந்தேகமாக இரு..  அதுதான் என் ஆசையும் கூட ” என்று வேண்டுதலாய்  கூறியது பூமதியின் உருவம். 
என்னை மன்னித்துவிடு மதி! அது மட்டும் என்னால் முடியாது , உன் இடத்தில் வேறு பெண்ணை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. என்றைக்கு உன்னைப் பார்த்து காதலிக்க துவங்கினேனோ அன்றிலிருந்து என் மனதில் மனைவியாய் நீ இருக்க.. உன்னுடன் அழகான  வாழ்வை நான் வாழ்ந்திட துவங்கிவிட்டேன்… “ என்று மீண்டும் மீண்டும் மறுத்துக்கொண்டே இருந்தான் மதுரன்.

அட!  பார்க்க அம்மாஞ்சி அம்பி மாதிரி இருந்துகொண்டு எவ்வளவு  பிடிவாதம் பிடிக்கிறாய்!.. உன் பிடிவாதத்தினால் எத்தனை பேர் மனக்கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்று தெரியுமா? அதில் நானும் ஒருத்தி..   இறந்த பின்பும்  நிம்மதி இல்லாமல் நீ  சந்தோசமாக இருக்கின்றாயா? என்று  பார்க்க.. காற்றாய் உன்னை சுற்றி அலைந்துகொண்டே இருக்கின்றேன்.  என்றாவது உன் மனம் மாறுமென்று  காத்திருந்தேன்.. ஆனால்  நீ கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை..  இன்றைக்கு நீயே..  நான் நேரில் வந்து சொன்னால் திருமணம் செய்துகொள்வதாய் சொன்னதும்.. இனி உன் வாழ்வில் நல்லதே நடக்கும் என்ற  சந்தோஷத்தில் உன் முன் வந்தால்.. இப்படி  மாற்றி பேசுகின்றாய்!என்று சற்று கோபமாக கேட்டது பூமதி உருவம். 

உண்மையை சொல்வதென்றால் இது நடக்காது என்ற தைரியத்தில் தான் நான் அப்படி சொன்னதே! என்னால் உன்னை மறக்க முடியாது மதி! ப்ளீஸ் இந்த பேச்சை இத்தோடு விட்டுவிடுஎன்று வேதனைக் குரலில் வேண்டினான் மதுரன்.

இன்னொரு பெண் உன் வாழ்கையில் வந்தால் என்னை மறந்துவிடுவாயாஅந்த  பயத்தில் தான் வேறு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள தயங்குகின்றாயாஇதுதான் நீ என்மீது நான் கொண்ட காதலா? அவ்வளவு தான் உன்   அன்பா?” என்று கோபத்துடன் பூமதி வினவிட.. என் வாழ்கையில் யார் வந்தாலும் எந்த நிலையுலும் நான் உன் மீது கொண்ட அன்பு மாறவே மாறாது! அதை நிருப்பித்து காட்ட என்னால் கல்யாணமெல்லாம் செய்துகொள்ள முடியாது மதி! உன்னை நினைத்துகொண்டு  வேறு பெண்ணுடன்.. அது அவளுக்கு செய்யும் துரோகம் மதி!என்று    மதுரன் தன் மனநிலையை விளக்கினான். 

உன்னால் எப்பவும் யாருக்கும் துரோகம் செய்யமுடியாது மது!  எத்தனையோ பேருக்கு நீ அறிவுரை  சொல்கிறாய், உனக்கு நான் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை, அன்பு  ஒருவரிடம் துவங்கி ஒருவரிடமே முடிவதில்லை! அருகில் இருக்கும் ஒருவர் மீது    தானாய் படரும் பண்புகொண்டது தான்  அன்பு.. அது ஒருநாள் உன்மனதையும் மாற்றும்..    நீ ரொம்ப நல்லவன் மது.. உன் வாழ்க்கை இப்படி வெறுமையாய் முடிவதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.. நீ கொண்ட காதல் உண்மையானது  உன் அன்பு தூய்மையானது.. நான் அடைந்திட முடியாத காதலை  இன்னோரு பெண் மனநிறைவாய் ஏற்பதை நான் பார்க்க வேண்டும் மதுஇதுதான் என் ஆசை.. இது நிறைவேறினால் மட்டுமே என் ஆன்மாவிற்கு நிம்மதி கிடைத்து முக்தியடையும் அதுவரை இப்படி காற்றிலே நான் அலைந்திட வேண்டியதுதான்.  இறந்த பிறகும்  நான் நிம்மதியிலந்து அலைவது தான் உனக்கு விருப்பமா சொல்? “ என்று  மறுக்க முடியாமல் வற்புறுத்தியது பூமதி உருவம். 

வேறுவழியின்றி பூமதியின் விருப்பத்திற்கு செவி சாய்த்த மதுரன்..நீ சொல்வது போல நான் வேறு பெண்ணை மணந்துக்கொள்ள வேண்டுமென்றால் நீ இந்த பூமியில் இருக்கும் வரை என்னுடனே இருக்க வேண்டும்.. நான் கேட்பது சுயநலமாக இருக்கலாம்..   ஆனால் நீ என் அருகில் இருக்கின்றாய் என்ற உணர்வு தான் நான் வாழ்ந்திட  வலிமையை கொடுக்கின்றது” 

என்னை  வருடி 
செல்லும் காற்றிலும்.. 
தழுவிச் செல்லும் 
மலைத்துளிகளிலும்… 
உன்னையே  உணர்ந்திட 
வேண்டுமடி.. 
என் காலம் உள்ளவரை 
உன்னை காதலுடன் 
நினைத்திட வேண்டுமடி.. “ 

என்று  கவிதை வரிகளில் தன் வேண்டுதலை கூறி பூமதி விருப்பப்படி தன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான் மதுரன். 
மதுரன் விடுத்த வேண்டுதலை ஏற்றவிதமாய்..    பூமதி விரல் வந்து தலை கோதிட.. காற்றில் அசைந்து கலைந்தது மதுரனின் முன் தலை முடி. 

ஒருமுறை உன்னைத் 
தழுவிட வேண்டுமடி… 
தென்றலாய் உன்னை 
தீண்டிட வேண்டுமடி. 
சுவாசமாய்  உன்னை  நுகர்ந்து 
உயிர்வரை நிறைந்திட வேண்டுமடி… 

 என்று ஆவலாய்  கைநீட்டி மதுரன் அழைக்க.. நெருங்கிவந்த பூமதி உருவம்மதுரனை அணைப்பது போல் தழுவிட.. தென்றல் காற்று  தேகம் எங்கும் உரசிடஉணர்வலையில் சிக்குண்டு மதுரன்.. கண்மூடி கண்ணீர் சிந்திட.. ஒருநொடி அணைத்த   தென்றல் மறுநொடி விலகி மறைந்து போனது. 

கண்மூடி காற்றை காதலியென்று கட்டியனைத்தபடி அமர்ந்திருந்தவன் கண்விழித்து பார்த்திட, அறையில் எந்த மாற்றமும் நிகழாமல் இருக்க.. இது கனவு தானோ!என்ற எண்ணம் கொண்டு.. அமர்ந்திருந்த நிலையிலிருந்து எழுந்து  அருகில் கிடந்த மேசையில் நீரை எடுத்து பருகியபடி கண்ணாடியை கவனிக்க…  காற்றாய் வருடிய பூமதியின் தீண்டலில்   கலைந்திருந்த  கேசமும்..  கட்டியணைக்கையில் கசங்கிய ஆடையும் அதில் ஒட்டியிருந்த மல்லிகைப் பூவின் வாசமும்  இது கனவல்ல என்று சுட்டிக்காட்டிட, வேகமாய் அறையை விட்டு வெளியே வந்த மதுரன் பூமதி படத்தின் முன்  நின்று, “ நான் கண்டது கனவு இல்லையே மதி! நீ என் முன் வந்தாய் தானே!என்று சந்தேகமாக வினவிட.. மெலிதான தென்றல் மீண்டும் மதுரனை தழுவி சென்றது..மதி!என்று  இதுவரை  கட்டுப்பாட்டில் இருந்த கண்ணீர்  தன் கட்டுப்பாட்டை மீறி வெளிப்பட.. வாய்விட்டு  கதறிடத் துவங்கினான் மதுரன்.

மறுநாள் விடியும் முன் வீட்டு வாசலில் நின்ற மகனைக்கண்டு.. உண்டான அதிர்ச்சியையும் தாண்டி  கலக்கம் கொண்டது தாய் மனது, “ என்ன மதுரா! இந்த நேரம், உடம்புக்கு  ஒன்றும் இல்லையே! என்று அக்கறையாய் வினவிய தாயின் கரத்தினை பற்றியவன். இத்தனை நாள் உங்கள் பேச்சை கேட்காமல் உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன் அம்மா! என்னை  மன்னித்துவிடுங்கள்.. மதி இறந்த வேதனையில்  உங்களைப்பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் விட்டுவிட்டேன், இனி அந்த தவறு செய்யமாட்டேன்,  உங்கள் இஷ்டப்படியே நீங்கள் எந்த பெண்ணை காட்டினாலும் கல்யாணம் செய்து கொள்கின்றேன்என்று  முழுமனதாய் சம்மதம் சொன்னான் மதுரன்.

இத்தனை நாட்களாக திருமணத்திற்கு மறுத்துக்கொண்டிருந்த தன் மகன் திடீரென்று வந்து இறங்கி.. திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவும் இத்தனைநாள் கொண்ட வேதனை மறந்து “வாசலிலேயே நின்று என்னய்யா பேச்சு, “ என்று மகிழ்ச்சியில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மதுரனை வீட்டுக்குள் அழைத்துச்சென்று அமரவைத்தார் மீனாட்சி. 

 

இத்தனை நாள் நீ சம்மதம் சொல்லமாட்டாயா? என்று  ஆவலாய் காத்திருந்தேன், இனி கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாட்டை தடபுடலாக துவங்கிவிடுவேன்.. நான் ஒரு மடச்சி.. வந்த பையனுக்கு  சாப்பிட எதுவும் வேணுமா என்று கேட்காமல்  பேசிக்கொண்டே இருக்கிறேன்சந்தோஷத்தில் என்ன செய்கின்றேன் என்றே தெரியவில்லை மதுரா!என்று சமையல் அறைக்குள் சென்று எதையோ  கொண்டு வந்து கையில் கொடுத்தவர்.. நீ   வருவது தெரிந்திருந்தால் முன்னமே  ஏதாவது செய்துவைத்திருப்பேன், வீட்டில் அவசரத்தில் பால் கூட இல்லை,குட்டி பையனுக்கு சரியா இருந்தது,  கடுங்காபிதான் போட்டேன்என்றிட.. இதை குடித்து எத்தனை வருடங்கள் ஆனது அம்மா.., அது யார் குட்டி பையன்என்று கேட்டுக்கொண்டே மதுரன் ருசித்து குடித்திடவாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்த மீனாட்சி, மகன் முகத்தில் இருந்த சோர்வு உறுத்த  “இரவு முழுவதும் பயணம்  செய்திருப்பாய், நீ கொஞ்சம்  ஓய்வு எடு, குட்டி பையன் பற்றி  பிறகு பேசிக்கொள்ளலாம்,என்று மதுரன் அறையில் வேண்டிய வசதிகளை செய்துகொடுத்துவிட்டு வெளியேறினார் மீனாட்சி. 

2 Comments »

  1. கஷ்டமா இருக்கு லதாமா….. மது நிலைமைய நினைக்குறப்ப….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: