Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உள்ளம் குழையுதடி கிளியே – 25

க்ஷத்திரா நடந்து கொண்ட விதம் சரத்தைக் கொதிப்படைய செய்திருந்தது.

“ராஜி… என்ன தைரியம் உனக்கு… என் கண்ணு முன்னாடியே ஹிமாவை அவமானப் படுத்தற” சரத் கோவமாய் கர்ஜிக்க… தெனாவெட்டாய் நின்றாள் நக்ஷத்திரா…

“இந்த ஹிமா உங்க வாழ்க்கைல வந்ததே என்னாலதான் மறந்துடாதிங்க…”

“தப்பு… நீ ஹிமாவைக் கொண்டு வர நினைக்கல… யாரையாவது ஒருத்தியை ஏற்பாடு செஞ்சு ஒரு டெம்ப்ரவரி சொலியூஷன் தர நினைச்ச… ஆனால் ஹிமாவைத்தவிர வேற யாரா இருந்திருந்தாலும் உன் முட்டாள்தனமான திட்டத்திற்கு நான் சம்மதிச்சிருக்க மாட்டேன்”

“இருந்தாலும் அவ உங்க வாழ்க்கையில் என் அனுமதி இல்லாம நுழைஞ்சிருக்க முடியுமா…”

“உன்னோட அனுமதியைவிட என்னோட சம்மதம் மட்டுமே இதில் பிரதானம். ஹிமா உன் காலைப் பிடிச்சு பிச்சைக் கேட்டவும் இல்லை. நீ உனக்கு ஆதாயம் இல்லாம சம்மதிக்கவும் இல்லை. இது ஒரு கேம் வின் வின் சிச்சிவேஷன் இருக்கவுமேதான் எல்லாரும் சம்மதிச்சோம். சம்மதிச்ச ஒரே காரணத்துகாக அவளை இழிவா பேசும் ரைட்டை உனக்கு யார் கொடுத்தது. அவ நாயா உன் காலடியில் கிடக்கணுமா… என்ன தைரியம் உனக்கு…

நீ எத்தனை பெரிய ஸ்டாராவும் இருந்துட்டுப் போ… ஆனால் இன்னைக்கு ஹிமாவைப் பேசினது அநாகரீகமான செயல். இதுக்கு அவகிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும்”

அவள் செய்த செயலுக்கு நியாயம் சொல்லவில்லை. ஆனால் சளைக்காமல் வாதாடினாள்.

“ஏன் மன்னிப்பு கேட்கணும். நீ என் கூட இருக்கும்போது போனைத் தொடக் கூடாது. ஏன்னா இந்த உலகத்தில் என்னைத்தவிர மத்த எல்லாம் உனக்கு ரெண்டாம் பட்சமாத்தான் இருக்கணும்” என்றாள் உக்கிரத்தோடு.

“ஓ அப்படியா… ஆனால் உனக்கு அந்த விதி பொருந்தாது… உன் எதிர்காலம், உன் சம்பாத்தியம், உன் பெயர், உன் புகழ் இது எல்லாம் போக மிச்சம் மீதி இருந்தால் மட்டும்தான் நான்” என்றான் இடுங்கிய பார்வையுடன்.

“தன்னோட வருங்கால மனைவி பெயரோடும் புகழோடும் இருப்பதை ஜீரணிக்க கஷ்டமாயிருக்கா சரத்”

“ஜீரணிக்க கஷ்டமாத்தான் இருக்கு… என்னைக் காதலிச்ச ராஜியோட இப்ப கண்முன்னாடி நிக்குற நக்ஷத்திராவின் மாற்றங்களை பார்க்கும்போது”

“ராஜி ராஜின்னு பொலம்பாதே சரத். ராஜகுமாரி சாப்டர் முடிஞ்சது. உன்னைத் தவிர எல்லாருக்கும் நான் நக்ஷத்திராதான். எனக்குப் பெயர் வச்ச அம்மா அப்பா கூட அப்படித்தான் கூப்பிடுறாங்க. நீ மட்டும்தான் இன்னும் ராஜியைக் கட்டிக்கிட்டு அழற” என்றாள் வெறுப்புடன்.

“என்னைக் காதலிச்சது ராஜி தானே… அப்ப அவ தானே என் நினைவில் நிக்கணும். உங்க அம்மா அப்பா மாறினா நானும் மாறணும்னு எதிர்பாக்குறது தப்பு”

“நீ இப்படியெல்லாம் இல்லை சரத்… டம்மி கல்யாணத்துக்கு அப்பறம் மாறிட்ட… இல்ல இல்ல மாற்றப்பட்டுட்ட… அந்த பொம்பளை கூட என்னைக் கம்பேர் பண்ணாதே… அவ வெறும் வேலைக்காரி, காசுக்காக நடிக்க வந்தவ…” இளக்காரமாக முகத்தை சுளித்தாள்.

“நடிகையை இளக்காரமா சொல்லாதே… அவ நடிகைன்னா நீ…”

“வயத்துப் பொழப்புக்காக நடிக்க வந்த அவளும், கலைத் துறையில் சூப்பர் ஸ்டாரா மின்னுற நானும் ஒண்ணா…”

“இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் இப்ப வந்தது ராஜி… சொல்லிக் காட்டுறது ரொம்பத் தப்பு ஆனால் இந்த மாதிரி இருக்கவங்ககிட்ட அவங்க பழைய வாழ்க்கையை சொல்லி சரிப்படுத்துறதில் எந்தத் தப்பும் இல்லை. நீயும் கூட வயத்துப் பிழைப்புக்காகத் தான் நடிக்கப் போன”

அவர்கள் இருவரின் மனக்கண்ணின் முன்னாலும் மிகச் சாதாரண காட்டன் சேலையுடன் ராஜி சில வருடங்களுக்கு முன் “எங்க வீட்டில் மூணு வேளை சாப்பாடு கூடக் கிடையாது சரத். நம்ம கல்யாணத்துக்குப் பிறகு எங்கம்மா அப்பாவை உங்க கூட வச்சுக்க நீங்க ரெடியா இருக்கலாம் ஆனால் அவங்க அதை மானக்கேடா நினைக்கிறாங்க… கொஞ்ச நாள் சம்பாரிக்கிறேன். அப்பறம் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிடலாம்” என்று கெஞ்சினாள்.

வலுக்கட்டாயமாக அந்த நினைவுகளை மனதிலிருந்து விலக்கியபடி

“சரத் நான் முன்ன மாதிரி இல்லை… பணக்காரி… எதை வேணும்னாலும் சாதிக்க முடிஞ்சவ”

“ஒண்ணு தெரிஞ்சுக்கோ நக்ஷத்திரா… நான் திருமணம் செய்துக்க சம்மதிச்சது சாதாரண குடும்பத்தை சேர்ந்த ராஜியை… எதையும் சாதிக்க முடிஞ்ச நக்ஷத்திராவால் என் மனசை வெல்ல முடியாது… ராஜியா வந்தா மேற்கொண்டு பேசலாம். நக்ஷத்திராவைப் பார்க்கக் கூட எனக்கு விருப்பமில்லை” சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் சரத்.

நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள் நக்ஷத்திரா… நான் என்ன தப்பு செய்தேன். ஏன் இந்த சரத்துக்கு இவ்வளவு கோபம். அவள் அமர்ந்திருந்த இருக்கையில் சற்று தள்ளியிருந்த சோபாவில் அமர்ந்து பைப் பிடித்தபடி பேப்பரால் முகத்தை மறைத்தவண்ணம் அவ்வளவு நேரம் ஒளிந்து கொண்டிருந்த நபர் எழுந்தார். பைப்பை வாயிலிருந்து எடுத்துவிட்டு நிதானமாக சொன்னார்.

“கோபப் படாதே பேபி இந்த மாதிரி மிடில் கிளாஸ் ஆண்கள் உன்னை மாதிரி ஹை கிளாஸ் பெண்களோட ஒத்து போக மாட்டாங்க” குரல் வரும் திசையில் திரும்பினாள்.

அங்கு நின்றிருந்தார் மேத்தா…

பாலிவுட்டின் மிகப் பணக்காரர்களுள் ஒருவர். வயது ஐம்பதும் சில வருடங்களும். மூன்றாவது மனைவியை போன வருடம்தான் விவாகரத்து செய்திருந்தார்.

“இந்த பசங்க எல்லாம் எனக்கு மனைவி கிட்ட எதிர்பார்ப்பே இல்லைன்னு போலியா நாடகம் போடுவாங்க… ஆனா அவங்க மென்ஷன் பண்ணது பண எதிர்பார்ப்பு. ஒரு மனைவின்னா அவங்களுக்கு காலைல எழுப்பி விட்டுக் காப்பி தரணும், வீட்டு வேலைக்காரியா இருக்கணும், அவங்க அம்மா அப்பாவை தெய்வமா மதிக்கணும், இவனை சூப்பர் ஹீரோவா நினைக்கணும், அவன் சம்பாதிச்சுட்டு வர்ற சொற்ப பணத்தில் அவனுக்கு ஒரு குறைவும் இல்லாம பாத்துக்கணும்… இப்படி அடுக்கிட்டே போகலாம்.

இவங்களோட திறமை என்னன்னா எவ்வளவு புத்திசாலியான பெண்ணைத் திருமணம் செஞ்சுகிட்டாலும், ஒரே மாசத்தில் மெண்டலாவும் பிசிக்கலாவும் அபியூஸ் பண்ணி… அவளை ஒரு வேலைக்காரியா, புள்ள பெத்துக்குற மிஷினா, குடும்பத்தைத் தலைல சுமக்குற சுமைதாங்கியா, வீட்டில் நடக்குற தப்புக்கெல்லாம் பழி சுமக்கும் ஒரு இளிச்சவாயா மாத்த இவங்களால் முடியும்.

நீயும் இந்தக் கும்பல்கிட்ட மாட்டிக்கப் போறியா பேபி”

மெதுவாக நடக்க ஆரம்பித்திருந்த மேத்தாவுடன் பௌண்டனை நோக்கி நடந்தபடி அவர் கூற்றை மறுத்தாள் நக்ஷத்திரா. “சரத் அப்படிப்பட்டவர் இல்லை. எனக்காக பல வருஷங்கள் காத்திருக்கார்”

“முட்டாள் சும்மாவா காத்திருக்கான்… சாதாரண ஒரு பெண் பாலிவுட் நக்ஷத்திரமா மாற சிலவருடங்களாவது பிடிக்காதா…”

“இருந்தாலும் நான் சாதாரண பெண்ணா இருந்தப்பவே அவரை விரும்பினேன்”

பல வண்ண விளக்குகளால் அந்த இரவில் மின்னிய தோட்டத்தில் ஒரு அவ்வளவாக வெளிச்சம் வராத இடத்தைத் தேடி ஒரு இருக்கையில் அமர்ந்தனர் இருவரும்.

“நக்ஷத்திரா… நக்ஷத்திரா… உனக்குப் புரியுற மாதிரி சொல்றேன். இன்னைக்கு ஒரு கிலோ திராட்சையோட விலை இந்தியாவில் என்ன…”

அவளிடமிருந்து பதிலில்லை என்றதும் அவரே தொடர்ந்தார் “தோராயமா ஒரு ஐநூறு ரூபாய்… எப்படி தெரியும்னு பார்க்குறியா… நான் ஒரு சூப்பர் மார்க்கெட் கூட வச்சிருக்கேன்.

இப்ப விளக்கத்துக்கு வரேன்… கையில் நூறு ரூபா இருக்கவன் யாருன்னாலும் திராட்சை வாங்கி சாப்பிடலாம் இல்லை கிரேப்பை ஜூஸா வாங்கிக் குடிக்கலாம்.

ஆனால் அதே திராட்சையை புளிக்க வச்சு, ஓயினாக்கித் தரும்போது எத்தனை பேரால குடிக்க முடியும்னு நினைக்கிற… ரோஸ் வைன், ரெட் வைன், வெயிட் வைன் இதெல்லாம் அனுபவிக்க ஒரு ரசனை வேணும். அதை அனுபவிக்க அருகதையும் வேணும். அந்த ரசனை, அருகதை ரெண்டுமே என்கிட்டே நிறையா இருக்கு”

“மிஸ்டர் மேத்தா”

“இன்னொரு விஷயத்தை உனக்கு நினைவு படுத்த விரும்புறேன்… கோடிக் கணக்கில் கொட்டி எடுத்தியே ஒரு படம் அது அட்டர் ப்ளாப். உன் பிலிம் கேரியரே முடிஞ்சதுன்னுதான் இண்டஸ்ட்ரில பேச்சு. நீயும் படத்துக்காக வாங்கின கடனை அடைக்க துபாய் ஷேக் வீட்டுக் கல்யாண டான்ஸ்கெல்லாம் ஒத்துகிட்டு வந்திருக்கன்னு எனக்குத் தெரியும். இந்த ஒரு கல்யாணம் என்ன, இன்னும் ஆயிரம் கல்யாணத்தில் ஆடினால் கூட வட்டிதான் கட்ட முடியும்”

அவர் சொல்வது எல்லாம் உண்மைதான். சமீபத்தில் அதீத கவர்ச்சி காட்டியும் படம் எடுபடாமல் போய்விட்து. தலைக்கு மேல் கடன். அதைத் தீர்க்கத்தான் துபாய் ஷேக் வீட்டின் திருமணத்தில் டான்ஸ் ஆட சம்மதித்து வந்தாள். வேலையோடு வேலையாக சரத்தையும் சந்தித்து சமாதனப் புறாவைப் பறக்கவிடத் திட்டம். இல்லாவிட்டால் அவனை சமாதனப்படுத்த ஏன் இவ்வளவு செலவு செய்யவேண்டும்.

மேத்தா கையில் தனது ஜாதகமே இருக்கும் போலிருக்கே… தலை குனிந்து அவர் பேசுவதைக் கேட்டாள் நக்ஷத்திரா.

“உனக்கு ஒரு புது வாழ்க்கை தரேன். உன் கடனை எல்லாம் அடைக்கிறேன். அது மட்டுமில்ல அடுத்து Girl on the train படத்தைத் தழுவி தமிழ், தெலுகு படம் எடுக்குற ஐடியால இருக்கேன். அதில் உனக்கு ஒரு ரோல் தரேன்”

சற்று நேரம் யோசித்தாள் நக்ஷத்திரா…

கேர்ள் ஆன் த ட்ரைன்… கதை என்ன… இதில் என்ன ஸ்கோப் இருக்கிறது… எந்த கேரக்டர் ரசிகர்கள் முன் எனது இமேஜை தூக்கி நிறுத்தும். பரபரவென அவளது மூளை வேலை செய்தது. கதையை நினைவு படுத்திப் பார்த்தாள்.

ரேச்சல் தினமும் ரயிலில் பயணம் செய்யும் ஒரு பெண், குடிபோதைக்கு அடிமையானவள். கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகள் இழந்து பல சமயம் என்ன நடந்தது என்பதே புரியாமல் ப்ளாக் அவுட் ஆகிறவள், தினமும் செல்லும் ட்ரைனின் ஜன்னல் வழியே தெரியும் ஒரு வீட்டைப் பார்க்கிறாள்.

அந்த வீட்டில் வசிக்கும் ஒரு பெண் அவளது காதல் கணவன் இருவரையும் பார்த்து அவர்களையும் அவர்களின் அன்பான வாழ்க்கையைக் காதலிக்கிறாள். தினமும் பார்க்கும் அந்த ஜோடிக்கு தானே ஒரு கற்பனை பெயர் சூட்டி, அவர்களுக்கு கற்பனையான தொழிலைத் தந்து அவர்களைச் சுற்றிலும் கனவுலகை சிருஷ்டித்து சந்தோஷம் காண்கிறாள். அந்தக் கனவுலகைக் கெடுக்கும் வண்ணம் அவளது கற்பனை தேவதைக்கு மற்றொரு ஆணுடன் முறையற்ற உறவு இருப்பதைக் கண்டு துடிக்கிறாள். அவளைக் கொலை செய்து விடும் அளவுக்கு ஆத்திரம் கொள்கிறாள்.

அந்த சமயத்தில் திடீரென கற்பனைப் பெண்ணைக் காணவில்லை. போலீஸ் ரேச்சல் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்ததை அறிந்து அவள் தன்னையறியாமல் கொலை செய்திருப்பாளோ என சந்தேகிக்கிறது. ஆனால் ரேச்சலுக்கோ அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்த நினைவிருக்கிறது, அதன் பின் சுத்தமாக நினைவுகள் வழக்கம்போல ப்ளாக் அவுட்டாகி விடுகிறது. அவளுக்கு என்னானது என்பதைத் தானே கண்டறிய முயல்கிறாள். கற்பனைப் பெண்ணுக்கு என்னானது என்பதை விறுவிறுப்பாக சொல்லும் த்ரில்லர். சற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதை.

இங்கிலாந்தில் சக்கை போடு போட்ட நாவலை ஆங்கிலத்தில் திரைப்படமாக எடுத்திருக்கின்றனர். அது தமிழிலா… சக்ஸஸ் ஆனால் ஒரு ட்ரென்ட் செட்டராக இருக்கும்.

அவள் தீவிரமாக சிந்தனை செய்தாள்.

இதில் ரேச்சல் முக்கியமான பாத்திரம், அதைத்தவிர அந்தக் கற்பனைப் பெண், ரேச்சல் கணவனின் இரண்டாவது மனைவி. குடிகாரியாக, நினைவிழந்தவளாக வரும் அந்த லீட் கேரக்டரில் நயன்தாரா அல்லது அனுஷ்காதான் டைரக்டர் மனதிலிருப்பார்கள்.

கற்பனைப் பெண்ணின் கதாபாத்திரம் கவர்ச்சி காட்ட வேண்டும். கதைப்படி அவளுக்கு முறையற்ற உறவு வேறு இருக்கிறது. எனது இமேஜ் இன்னும் சரியும். அதை மறுத்தால் இரண்டாவது மனைவி பாத்திரம்தான் கிடைக்கும். வலிய வரும் இந்த வாய்ப்பை எப்படி எனக்கு சாதகமாக்கலாம்… நக்ஷத்திரா கூட்டிக் கழித்துக் கணக்குப் போட ஆரம்பித்தாள்.

ஒரு முடிவுக்கு வந்தவளாக “எனக்கு ஏதோ ஒரு ரோல் வேண்டாம். அதில் எமிலி நடிச்ச மெயின் கேரக்டர் ‘ரேச்சல்’ ரோல்தான் எனக்கு வேணும். அதுக்கு நான் என்ன செய்யணும்” என்றாள் தேர்ந்த வியாபாரியின் தொனியில்.

“நீ புத்திசாலி… ரேச்சல் வேஷம் கட்டுறதுக்கு முன்னாடி நானும் நீயும் வெட்டிங் ரிங் மாத்திக்கணும்”

“நாளைக்கே என்னை வச்சு பத்து படம் எடுக்குறதா அக்ரிமென்ட் போடுங்க… என் கடனை அடைங்க… அப்பறம் பட பூஜை அறிவிப்பு பெருசா தாங்க. இதெல்லாம் செஞ்சு முடிச்ச அடுத்த நாளே நம்ம கல்யாணம் நடக்கும்”

தோள்களைக் குலுக்கிய மேத்தா…”பத்து படமா… உன்னை முட்டாள்னு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன். இந்த அளவுக்குத் திட்டம் போடுறேன்னா அந்தப் பையனைக் கூட பேக்அப்பாத்தான் வச்சிருப்ப… இவ்வளவு புத்திசாலியா நீ இருக்குறதைப் பார்க்கும்போது உன் கூட ஒரு பத்து வருஷமாவது சுவாரஸ்யமா வாழ்க்கை போகும்னு நினைக்கிறேன்”

“வாட்… பத்து வருஷம் மட்டுமா”

“அஸ் ஐ மென்ஷன்ட் எயர்லியர், எனக்கு குடிக்குற ஒயின்ல கூட வெரைட்டி வேணும். உன் ஒருத்தி கூட மட்டும் வாழ்நாள் முழுக்க இருக்குறது முடியாத காரியம். இதுக்கெல்லாம் ஒத்துகிட்டா மேற்கொண்டு பேசலாம். இல்லைன்னா நீ உன் பாய்பிரெண்ட்டைகிட்டேயே போகலாம்”

அஸ்தமனமாகிவிட்டது என்று பயந்து கொண்டிருந்த கலையுலக வாழ்க்கை துளிர்க்கத் தொடங்கியிருக்கிறது. அவளது மனதில் தான் துரத்தி துரத்திக் காதலித்த சரத், அன்றாட தேவைகளுக்கே கஷ்டப்பட்டபோது தனது வீட்டு செலவுகள் முழுக்க பார்த்துக் கொண்டவன், தனது புகைப்பட ஆல்பத்துக்கும் வழிச்செலவுக்கும் கேட்கும்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் மறுக்காமல் பணம் அனுப்பியவன், எல்லாவற்றிற்கும் மேலாக வெறும் கானலான இவளது காதலுக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்து அவளது யோசனையின் படி டம்மி திருமணம் செய்து வாழ்க்கையின் இளமையைத் தொலைத்தவன். இத்தனை காரியங்களையும் அவளுக்காகவே செய்தவன் மறைந்தே போனான்.

இளக்காரமாக சொன்னாள்.

“நோ… ஒயின் அருந்தும் தகுதி அவனுக்கில்லை” மேத்தாவை நோக்கி மந்தகாசப் புன்னகை சிந்தினாள் நக்ஷத்திரா.

அவர்களிருவரும் கை கோர்த்தபடி திருமண உறுதியைக் கொண்டாடச் செல்வதை அவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகிலிருந்த தூணின் மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் சரத். அவன் மனதில் முதன் முதலில் காதல் உணர்வைத் தட்டி எழுப்பிய ராஜி மறைந்து போய் முழுவதுமாக நக்ஷத்திரமாகவே மாறிவிட்ட அந்தப் பெண்ணின் பச்சோந்தித்தனத்தில் மனம் வலித்தது.

சரத் மனதில் வெறுமை… அங்கிருந்து உடனடியாகக் கிளம்பி வீட்டுக்கு செல்லவேண்டும் போலிருந்தது. என்னதான் முயன்று வெகு சீக்கிரமாக கோவைக்கு அவன் செல்வதற்குள் அவன் வீட்டில் ஒரு பிரளயமே நடந்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: