Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உள்ளம் குழையுதடி கிளியே – 18

அத்தியாயம் – 18

லாயருடனான சந்திப்பில் சரத்துக்குப் பெரிதாக ஒன்றும் வேலை இருக்கவில்லை. வீட்டிற்கு வரும் வழியில் நடிகை நக்ஷத்திராவின் புதிய படத்தைப் பற்றிய செய்திகள் புத்தகக் கடைகளில் தொங்கின. ரயில் நிலையத்தில் கிறிஸ்டிக்குப் புத்தகங்கள் வாங்கியபோது கூட அந்தப் பத்திரிக்கையை அவன் கவனிக்கவில்லை.

இப்போது இந்தக் கவர்ச்சிப் படம் போட்ட பத்திரிக்கைக் கூட தரம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. மூன்றெழுத்து நபரும் நான்கெழுத்து நபரும் ஐந்தெழுத்து ஊரில் ஜல்சா என்பது போன்ற செய்திகள்தான் பெரும்பாலும் வரும். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்களின் ப்ரோமோஷன் தாராளமாக இடம்பெறும்.

பெண்களைக் கேவலமாகக் காட்டும் பத்திரிக்கைகளை அவன் விரும்பியதும் இல்லை. காதலி சினிமாவில் நடிக்கிறாள் என்பதால் அவளைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துக் கொள்ள சினிமா செய்திகளைப் படிக்க ஆரம்பித்தான்.

புதுப் படம் பற்றிய விளம்பரம் இதிலா… அதிலும் அவள் அணிந்திருந்த ஆடையைக் கண்டு திகைத்துப் போனான். அவள் சற்றுக் கவர்ச்சியாய் நடிப்பது வழக்கம்தான். ஆனால் இந்த உடையும் அவள் போஸும் கவர்ச்சியைத் தாண்டிய அருவருப்பூட்டும் ஆபாசம்…

காரை கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு பத்திரிக்கையை வாங்கினான். அந்தப் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் அவளை அந்த உடையில் பார்க்கவே கண்கள் கூசியது. தயக்கத்துடன் அட்டைப் படம் வெளியே தெரியாமல் சுருட்டிக் கொண்டான்.

“நாலு நாளா இந்தப் பத்திரிக்கை சக்கை போடு போடுது ஸார். சின்ன பசங்கள்ள இருந்து பல்லு போன கிழவனுங்க வரைக்கும் போட்டி போட்டுட்டு வாங்கிட்டுப் போறாங்க”

“இவளால நீ நல்லா காசு பாத்துட்டேன்னு சொல்லு…” இன்னொருவன் சீண்டினான்.

“காசு பார்த்தது என்னமோ உண்மைதான். ஆனாலும் மனசு கஷ்டமா இருக்கு. இவளோட பயங்கர ரசிகன்டா நான். ஒவ்வொரு படத்தையும் நூறு தடவையாவது பாப்பேன். கட்டிகிட்ட இவளை மாதிரிப் பொண்ணத்தான் கட்டிக்கணும்னு அடம்பிடிச்சேன்னா பாத்துக்கோயேன்”

“இவளை மாதிரியா” ஒரு மாதிரி பார்த்துவிட்டு சிரித்தான் மற்றவன்.

.

“நடிக்க வந்த புதுசுல இழுத்து போர்த்திட்டு குடும்பக் குத்துவிளக்கா நடிச்ச பொண்ணு இப்ப தெருவிளக்காட்டம் வெளிச்சம் போட்டுக் காட்டுது. “

“இவளை மாதிரி பொண்டாட்டி வேணும்னு தவம் இருந்தவங்க எத்தனையோ பேரு… ஏன் இப்படி மாறிடுச்சு இந்தம்மா”

“பணம், புகழ், வயசாயிடுச்சு இள வயசு பொண்ணுங்க கூட தாக்குப் பிடிக்கணும். தானும் இளமையானவதான்னு நிரூபிக்கணும். வேற வழி மார்க்கட்டைத் தக்க வைக்கணும் இல்லையா…”

அவர்கள் பேச்சு அதற்குப் பின் வேறு மாதிரி தொடர ஆரம்பிக்க காது கூசி மனம் துவண்டு வீட்டிற்குத் திரும்பினான் சரத். இவர்களை அவன் அடிக்கலாம் ஆனால் இவர்களைப் போலப் பேசும் அனைவரையும் அடக்க முடியுமா… ஊர் வாயை மூட உலைமூடிக்கு எங்கு போவான். தனிமையில் ஆள் அரவமற்ற பிரதேசத்தில் காரின் ஜன்னல்களைத் திறந்துவிட்டு இளையராஜாவின் மெலடி இசையைக் கேட்டபடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தான். சினிமா செய்தியினால் ஏற்பட்ட நெருப்பு அணைந்து உள்ளே கங்குகள் மட்டும் கணன்று கொண்டிருந்தன. வீடு என்று ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தவனாக காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.

வீட்டினுள் நுழைந்தபோது அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். சத்தம் போடாமல் மாடிக்கு செல்ல எண்ணினான். அவனைத் தடுத்தது தாயின் இருமல் சத்தம்.

“உன் பொண்டாட்டியும் புள்ளையும் கீழ தூங்குறாங்க நீயும் அங்கேயே போயி படு” என்று கட்டளை வந்தது. தெய்வானையின் கட்டளையே சாசனம் அல்லவா.

வேறு வழியில்லாமல் முதல் முறையாக ஹிமாவின் அறைக்கு சென்றான். ஒரு பெண் இருக்கும் அறைக்கு நுழைவது தவறு. ஆனால் வேறு வழியும் இல்லை. ஹிமாவிடம் காலையில் மன்னிப்புக் கேட்டு விடலாம்.

அது சரத்தின் அறையுடன் ஒப்பிடும்போது சிறிய அறைதான். அதனால் சோபா… டேபிள் போன்ற வசதி இல்லை.

 

இரண்டு நாட்களாக சரியான உறக்கம் இல்லாததால் ஹிமாவதி அடித்துப் போட்டார்போலத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் மேல் காலைப் போட்டவாறு சதுரத்தின் நடுவே இருக்கும் குறுக்குக் கோடு போல துருவ் தூங்கிக் கொண்டிருந்தான்.

ஏஸி குளிர்ந்த காற்றை வீசிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு பெரிய போர்வையை மட்டும் தாய் மகன் இருவரும் போர்த்திக் கொண்டிருந்தனர். மற்றவை எங்கு என்று தெரியவில்லை. ஓரமாக இருந்த தலையணையை தரையில் எடுத்துப் போட்டுக் கொண்டு வெறும் தரையில் படுத்திவிட்டான். அவன் கைகளில் அவ்வளவு நேரமுமிருந்த நக்ஷத்திராவின் படம் போட்ட பத்திரிக்கையைக் கோபமாக தள்ளி வீசினான்.

சரத்துக்கு நக்ஷத்திராவின் படத்தைப் பார்த்த அதிர்ச்சியும் வருத்தமும் மனம் முழுவதும் எரிந்துக் கொண்டிருந்ததால் அந்தக் குளிர்ந்த தரை ஒரு பொருட்டாகவே இல்லை. உறக்கம் சுத்தமாக வரவில்லை. தாய் இருமிக் கொண்டிருந்தது அவன் காதில் விழவும் காலையில் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

நக்ஷத்திராவின் இந்தப் படத்தைப் பார்த்தால் தன் தாயின் மனநிலை என்னவாக இருக்கும்… இவள்தான் அவரது மருமகளாகப் போகிறாள் என்று சொன்னால் என்ன செய்வார் என்று அவனால் கணிக்க முடியவில்லை. ஹிமாவை ஏற்றுக் கொண்டதைப் போல சுலபமாக அவளை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது மட்டும் உறுதி. ஏதேதோ சிந்தனையில் படுத்திருந்தவனுக்கு சிறிது நேரம் கழித்து நன்றாகக் குளிரத் தொடங்கியது. போர்த்திக் கொள்ள ஏதாவது கிடைக்காதா என்றிருந்தது.

தொடர்ந்து இருமல் சத்தம் கேட்டதும் ஹிமாவுக்குத் தூக்கம் கலைந்து விட்டது. ‘அத்தைக்கு மருந்து சாப்பிட்டும் இருமல் இன்னும் நிக்கலையா’ என்றெண்ணியவண்ணம் எழுந்தாள். அவளருகே இருந்த கதவின் வழியே வெளியே சென்றதால் மறுபுறம் படுத்திருந்த சரத்தை அவள் பார்க்கவில்லை.

“அத்தை மருந்து இன்னொரு தரம் சாப்பிடுங்க” என்று அவரை வறுபுர்த்தித் தந்தாள்.

“சரத்… சரத்… வந்துட்டான்…” என்று இருமலுடனே சொல்லி முடித்தார். அவர் மேலும் பேசவிடாமல் இருமல் வரவும்.

“நீங்க பேசினா இருமல் அதிகம் வரும். படுத்துத் தூங்குங்க எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அறைக்கு வந்தாள்.

கதவை சாத்தியபின் இரவு விளக்கின் வெளிச்சத்தில் தரையில் யாரோ படுத்திருப்பதைப் பார்த்ததும் அவளது இதயம் ஒரு நிமிடம் நின்றுவிட்டது. அதன் பின் யார் என்று உணர்ந்து கொண்டவள்

“சரத்…” என்றாள் மெதுவாக.

“நான்தான் ஹிமா…” என்றான் அவனும் அவளைப்போலவே சிறிய குரலில்.

“அம்மா இங்க வந்து படுக்க சொல்லிட்டாங்க… சாரி”

அவனைப் பார்த்தவள்.

“தரை குளிருமே சரத்… நீங்க பெட்ல படுத்துக்கோங்க. நான் தரையில் படுத்துக்குறேன்”

“உனக்கு மட்டும் குளிராதா… ஏதாவது ஒரு போர்வையை எடுத்துத்தா…”

“போர்வை தலைகாணி எல்லாம் உங்க அம்மா ரூம்ல இருக்கு… போயி எடுத்துட்டு வரட்டுமா…”

“வேணாம்… அப்பறம் ஆயிரம் கேள்வி கேட்பாங்க. வேணும்னா நாளைக்கு நைசா ரெண்டு தலைகாணியும் போர்வையும் எடுத்துட்டு வந்து இந்த பெட்டுக்குக் கீழ போட்டுடு. இந்த மாதிரி இன்னொரு நாள் நடக்கும்போது உதவியா இருக்கும்”

“அதை நாளைக்குப் பாக்கலாம்… இப்ப என்ன செய்றது”

“அம்மா இருமிட்டே இருக்காங்க… இன்னைக்கு அவங்க தூங்குறது கஷ்டம்தான்”

“ஆமாம்… நான் மருந்து கொடுத்தேன் அப்பயும் கேட்கல”

சில நிமிடங்கள் யோசித்தவன் மெதுவாக எழுந்தான்.

“எனக்கு தூக்கம் வருது ஹிமா… நான் ஒண்ணு செஞ்சா தப்பா எடுத்துக்க மாட்டியே”

“எதுவாயிருந்தாலும் சொல்லுங்க… நீங்க தூங்க ஒரு வழி கிடைச்சால் சரி”

“இந்தப் பெரிய பெட்டில் நான் படுத்துக்கக் கொஞ்சூண்டு இடம் தருவியா”

அவள் அதிர்ச்சியுடன் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்க…

துருவை சற்றுத் தள்ளிப் படுக்கவைத்துவிட்டு அவன் விழாமல் முட்டுக் கொடுத்திருந்த தலையணை இருந்த இடத்தில் படுத்துக் கொண்டான்.

“இந்தத் தலையணை வச்சிருக்கும் இடம் போதும். இதைத் தாண்டி நானும் வர மாட்டேன். நீங்களும் வரக்கூடாது…” அவன் சொல்லி வாய் மூடுவதற்குள் அவன் மேலே காலைத் தூக்கிப் போட்டான் துருவ்.

களுக்கென சிரித்துவிட்டாள் ஹிமா…

“சாரி சரத் அவனை எழுப்பி விட்டுடுறேன்”

“இட்ஸ் ஆல்ரைட்” என்றவாறு அந்த சிறிய கால்களை வருடினான்.

அந்த ஸ்பரிசம் தந்த அன்பில் அவன்புறம் திரும்பிய துருவ் தனது பிஞ்சுக் கைகளால் சரத்தைக் கட்டிக் கொண்டான். அதுவரை என்னன்னவோ நினைத்துப் பொங்கிக் கொண்டிருந்த சரத்தின் மனது பாலில் நீர் தெளித்ததைப் போல அடங்கியது.

“டேய் துருவ்…” மகனை விலக்க வந்த ஹிமாவிடம் “உஷ்…” என்று அடக்கியவன்

“இப்ப எனக்கு இந்த அன்பு தேவை… ப்ளீஸ் தடுக்காதே” என்றான்.

அவனது பேச்சில் தெரிந்த மாறுபாட்டை உணர்ந்து “என்னாச்சு சரத்?” என அக்கறையோடு கேட்டாள்.

“நக்ஷத்திராவோட படம் ஒண்ணு பத்திரிகையில் வந்திருக்கு ஹிமா…” என்றான் சொல்லி முடிப்பதற்குள் அவன் குரல் தளுதளுத்தது. அவன் விரல்கள் கீழிருந்த பத்திரிக்கையை சுட்டிக் காட்டின.

“ம்ம்…”

“கொஞ்சம்… கொஞ்சம் அதிகமாவே கவர்ச்சியா…”

அவன் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து அந்தப் பத்திரிக்கையை எடுத்து ஜன்னலருகே சென்று தெருவிளக்கின் வெளிச்சத்தில் பார்த்தாள். அந்தப் படம் என்பது கவர்ச்சியைத் தாண்டிக் கொஞ்சம் ஆபாசமாகவே இருப்பதாகப் பட்டது அவளுக்கு.

“ம்ம்…”

“அந்த புக் கடைல எல்லாரும் எப்படி காது கூசுறமாதிரி அவளைப் பேசுறாங்க தெரியுமா… எனக்குக் கோபம் கோபமா வருது… என் ராஜி ஏன் நக்ஷத்திராவா மாறினான்னு எரிச்சல் எரிச்சலா வருது”

“சரத்…”
“ம்ம்…”

“அந்த உடையை அவங்க விருப்பப் பட்டா போட்டிருப்பாங்க…”

“ஏன்… முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே…”

“சில சமயம் நம்மால மறுக்க முடியாது சரத்”

“அதெல்லாம் லேம் எஸ்கியூஸ். நம்ம மனசுக்குப் பிடிக்காததை செய்யவே முடியாது”

“நீங்க சொன்னது முரண்பாடா இல்லை. நம்ம ரெண்டு பேரும் என்ன மனசுக்குப் பிடிச்சா இந்தக் கல்யாணத்தை பண்ணிக்கிட்டோம். சூழ்நிலைக் கைதியா நாம இருக்குற மாதிரி அவங்களும் இருந்திருப்பாங்க”

ஹிமாவின் வார்த்தைகள் அவனை அவள் தூங்கிய பின்பும் கூட நெடுநேரம் யோசிக்க வைத்தது. திடீரென விடை கண்டுபிடித்தவனாய் சொன்னான் “ஹுர்ரே… ஹிமா எந்திரி எந்திரி… நீ சொன்னது தப்பு”

தூக்கக் கலக்கத்தில் “என்ன…” என்றாள்.

“நம்மளும் மனசுக்குப் பிடிக்காததை செய்யவே இல்லை. நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்காட்டி இந்த மாதிரி திட்டத்துக்கு சம்மதிச்சிருக்கவே மா… ட்டோ… ம்” சொல்லிக்கொண்டிருந்தவன் எதையோ உணர்ந்து கொண்டவனாய் திடுக்கிட்டு நிறுத்தினான்.

“அப்ப கிறிஸ்டியின் கேள்விக்கு என்னோட பதில் எஸ்ஸா…”
“என்ன கேள்வி என்ன பதில்… தூங்குறப்ப எழுப்பி இப்படிப் புதிர் போடுறிங்களே நியாயமா”

தீவிரமாய் தலையசைத்தான் “புதிருக்கு இப்பத்தான் விடை தெரிய ஆரம்பிக்குது ஆனால் எனக்கு மட்டுமில்ல உனக்கும் இந்த ஆன்சர் பிடிக்காது. அதனால நிம்மதியா படுத்துத் தூங்கு”

அடுத்த நிமிடம் விட்டால் போதும் என்று தூக்கத்தில் ஆழ்ந்தாள் ஹிமா.

இருப்புக் கொள்ளாமல் தவித்தான் சரத். அந்தக் கேள்விக்கு பதில் மட்டும் ஆமாம்னு இருந்தால் இந்த அறையில் உரிமையோடு தூங்கிருப்பேனோ…”

தன் முகத்திற்கு வெகு அருகே தெரிந்த அந்தக் கள்ளம் கபடற்ற துருவின் கன்னத்தில் முத்தம் பதித்தான். அவன் மனது அமைதியால் நிறைந்தது. பெண்களுக்குள் மட்டும்தான் தாய்மை இருக்கும் என்று யார் சொன்னது. சரத்துக்குள் ஒளிந்திருந்த தந்தைமை விழித்துக் கொண்டது. துருவை அன்புடன் அணைத்துக் கொண்டான். அதுவரை போக்குக் காட்டிக் கொண்டிருந்த உறக்கம் சரத்தை அமைதியாகத் தழுவிக் கொண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: