Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உள்ளம் குழையுதடி கிளியே – 13

அத்தியாயம் – 13

மாலை ஹிமா விட்டுக்கு வந்த பொழுது சிற்றுண்டி வாசம் மூக்கைத் துளைத்தது. ஆச்சிரியத்துடன் உள்ளே நுழைந்தாள்.

முகத்தைத் துடைத்தபடி வரவேற்ற தெய்வானை துருவ்வின் புத்தகப் பையை முந்தி சென்று வாங்கிக் கொண்டார். சின்னவனின் முதுகை வருடியவர் “இந்தா…” என்று வெல்லக் கொழுக்கட்டையைத் தட்டில் வைத்து நீட்டினார்.

“கடைல விக்கிறது சாப்பிட்டா பூச்சிப் பல்லு வந்துடும். பாட்டியே இனிப்பு செஞ்சு தரேன். இனிமே வீட்டில் சாப்பிடுவியாம்” என்ற முயன்று தன்மையாக சொன்னார்.

திம்பண்டத்தைக் கண்டதும் ஆவலுடன் கை கூடக் கழுவாமல் தட்டை வாங்கப் போன மகனிடம்

“துருவ் கையை கழுவிட்டு சாப்பிடு” என்றாள் ஹிமா.

“இதென்ன சாப்பிடுற பிள்ளையைத் தடுத்துட்டு. நில்லு கண்ணு நான் ஊட்டி விடுறேன்” என்றவர் மடியில் உட்கார வைத்து ஊட்டிவிட்டார்.

“அவன் மண்ணில் விளையாடிட்டு வந்தான்… அத்தை… உங்க சேலையெல்லாம் அழுக்காயிடும்”

“அழுக்காகட்டும்… என் துணியெல்லாம் அழுக்கு பண்ணட்டும். அதுக்குத் தானே காத்திட்டு இருந்தேன்” முடிக்கும்போது அவரது குரல் சற்று கமறியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்.

“இங்கென்ன பாத்துட்டு நிக்கிற… நீயும் போய் தட்டில் எடுத்துட்டு வந்து சாப்பிடு” என்றார்.

தலையசைத்துவிட்டு உள்ளே சென்றாள் ஹிமா.

“ஏங்கண்ணு… பள்ளிகூடத்தில உங்கம்மாதான் உனக்கு டீச்சரா…”

“இல்ல… எங்கம்மா பெரிய புள்ளங்களுக்கு டான்ஸ் கத்து கொடுப்பாங்க… இப்படி…”

“தா… தா… தை… தை…” கைகளைப் பக்கவாட்டிலும் முன்னும் பின்னும் நீட்டிக் குதித்துக் காட்டினான்.

அவன் குரங்குக் குட்டி மாதிரி குதித்தது கண்டு தெய்வானைக்கு சிரிப்பே வந்துவிட்டது.

“டேய்… கிண்டலா பண்ணுற… நீ எங்கிருந்துடா பாத்த…” ஹிமா அதட்டவும் துணை வேண்டி பாட்டியின் அருகே சென்று டான்ஸைத் தொடர்ந்தான்.

“அன்னைக்கு ஜன்னல் வழியா பாத்தேன்

தா… தா… தை… பாட்டி ஸ்வீட் தா… தா…” என்று ஊட்டி விட சொல்லித் தனது செப்பு வாயைத் திறந்து காட்டினான்.

“கண்ணுல பாத்ததை அப்படியே செய்யுறான் பாரு” கைகளால் அவனுக்கு திருஷ்டி கழித்தார் தெய்வானை.

அன்றுதான் முதல் நாளாக மாமியாரும் மருமகளும் சர்ச்சையோ வருத்தமோ இல்லாமல் இனிமையாகப் பொழுதைக் கழித்தனர்.

“நீ டான்ஸ் டீச்சரா”

“இல்ல ஆசைக்காக டான்ஸ் கத்துகிட்டேன். அரங்கேற்றம் செஞ்சேன். “

“அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே…”

ஆமாம் என்று தலையசைத்தாள்.

“உங்கப்பா என்ன வேலை பார்த்தார்”

“தனியார் நிறுவனத்தில் மேனஜேரா இருந்தார். விபத்தில் எங்களை விட்டுப் போயிட்டார்”

முழு உண்மையையும் சொல்ல முடியாது தவித்தாள்.

“அந்த விபத்து மட்டும் நடக்காம இருந்திருந்தா நான் உங்க வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்கும் துரதிர்ஷ்டமான நிலை வந்திருக்காது”

தான் நினைத்தது போலல்லாமல் நல்ல குடும்பத்திலிருந்து வந்த பெண் என்பதே அவருக்கு முதல் திருப்தி. ஹிமாவின் வருத்தத்தை திசை திருப்ப வேண்டி

“சரத்தை எப்படித் தெரியும்”

“நான் அவர் ஆபிஸ்ல வேலை செஞ்சேன்”

“அப்படியா… என்ன படிச்சிருக்க…”

“டிகிரி வாங்கிருக்கேன்”

“அப்பறம் அந்தம்மா உனக்கு டீச்சர் வேலை போட்டுத் தரக்கூடாதா… எதுக்கு டான்ஸ் டீச்சரா போட்டிருக்கு” என்று சாரதாவைத் திட்டினார்.

“ஐயோ… நான்தான் டான்ஸ் டீச்சரா வேலை பார்க்கிறேன்னு சொன்னேன். எனக்கு டான்ஸ்னா ரொம்பப் பிடிக்கும்”

“என்னவோ போ… டான்ஸ் டீச்சர்னா ஆடிகிட்டே இருக்கணும். உடம்பில் தெம்பு வேணுமே. நல்லா சாப்பிட்டுக்கோ” என்றார் கண்டிப்பான குரலில்.

ஒன்றை நன்றாக விளங்கிக் கொண்டாள் ஹிமா. தெய்வானைக்கு பாசத்தையும் அக்கறையையும் கூடக் கண்டிப்பின் மூலமாகத்தான் காட்டத் தெரியும். சரத்தோ அன்புக்கு ஏங்கும் சவலைப் பிள்ளை. இவர்கள் இருவருக்குமான இடைவெளியில்தான் சரத்தின் உறவினர்களும், அவனது காதலியும் தங்களது ஆட்டத்தை ஆடுகின்றனர். இந்த இடைவெளியைக் குறைக்க தன்னாலான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதுதான் இந்தத் தாய்க்கு செய்யும் பரிகாரமாக இருக்கும்.

ரத்தின் தாய் தெய்வானைக்கு தான் செய்வது சரியா தவறா என்ற சந்தேகம் உண்டானது. சிறு வயதிலிருந்து சொன்ன சொல்லுக்குத் தலையாட்டியே காலம் ஓடிவிட்டது. சிறுவயதில் தந்தை, பின்னர் கணவர், அதற்குப் பின் சகோதரன். இப்படி அடுத்தவர்களையே அண்டி வாழ்பவர்களுக்கு வாய்திறக்க வழியிருக்கிறதா என்ன.

எனினும் அவராக யோசித்து முடிவு செய்தது சரத்தின் விஷயத்தில்தான். அது கூட அவருக்கே எதிராக வினையாற்றி விட்டது. மகனின் மேல் ஏற்பட்ட வருத்தம் அவரை சகோதரனையே முழுவதுமாக சார்ந்திருக்க வைத்து விட்டது.

சிறுவயதிலிருந்து வறுமையில் வளர்ந்த சின்னசாமிக்கு பணத்தாசை கொஞ்சம் உண்டுதான். அதற்கு மேல் அவருக்கு வாய்த்த மனைவிக்கு பணவெறி என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆயிரம் தேங்காய் விற்றால் எட்டுநூறு தேங்காய்களுக்குத்தான் தெய்வானையிடம் கணக்கு வரும். இருந்தாலும் அவர் பெரிதாகக் கண்டுக்கொள்வதில்லை. தாய் அவ்வாறு இருப்பது சரத்துக்குப் பிடிப்பதில்லை. தெய்வானைக்குத் தெரியாமல் திருட்டுத்தனம் செய்து கொண்டிருப்பதாக சின்னசாமி நினைப்பதால் லாபத்தில் நஷ்டம். அவருக்குத் தெரிந்து விட்டது தெரிந்தால் மொத்தமும் நஷ்டம்தான்.

தெய்வானையைப் பொறுத்தவரை தமையன் சற்று பணத்தாசை கொண்டவன்தான் மற்றபடி தங்கையின் மேல் அளவற்ற பாசம் கொண்டவன். சரத்தைப் பொறுத்தவரை தாய்மாமன் ஒரு பணப்பேய்.

வீட்டினுள் நுழைந்தார் சின்னசாமி.

“இந்தா மோர் சாப்பிடு” உபசரித்தார் தெய்வானை.

“கொடு…” தோளில் சுமந்து வந்திருந்த செவ்விளநீர் குலைகளைத் தந்தார்.

“தோட்டத்துப் பக்கம் போயிருந்தேன். இதைப் பாத்ததும் உன் நினைவு. அதான் பறிச்சுட்டு வந்தேன்”

“நேரமாச்சே சாப்பிடுறியா…”

“பழனி சமையல் ஜோரா இருக்குமே… வேண்டாம்னா சொல்லப்போறேன். அரைமணி நேரம் கழிச்சு எடுத்து வை”

“பழனி ஊருக்குப் போயிருக்கா. இது அந்தப் பொண்ணு சமைச்சது”

சின்னசாமியின் முகமே மாறிவிட்டது. அண்ணனின் முக மாறுதலைக் கவனியாது தொடர்ந்தார்.

“நல்லவளாத்தான் தெரியுறா. நல்லாத்தான் சமைக்கிறா. என்ன நம்ம ஊர் சமையல் மாதிரி இல்லை. ஆனால் வித்யாசமான சுவையோட இருக்கு”

தங்கையை எரிச்சலுடன் பார்த்தார்.

“நான் என்ன திட்டினாலும் எதிர்த்தே பேசுறதில்லை. பட்டினத்துப் பொண்ணு மாதிரி இல்லை. ரொம்பப் பணிவா இருக்கா. பிள்ளையை நல்லா வளர்த்திருக்கிறா.

பேரன் என்னோட பிரெண்ட் ஆயிட்டான். தினமும் என்னை விளையாடக் கூப்பிடுறான். கதை சொல்ல சொல்லுறான். மெட்ராஸ்ல சின்ன வீட்டில்தான் இருந்தாங்களாம் பேச்சு வாக்கில் சொன்னான். சரத் வழக்கம் போல ஊர் ஊரா அலைவான் போலிருக்கு. மொத்தத்தில் வசதியான வாழ்க்கை வாழ்ந்தாப்பில என் மனசில் படல”

ஒண்ட வந்த பிடாரியை விரட்டிவிட்டுத் தன் மகளைத் திருமணம் முடிக்க அனுப்பி வைத்தால் மக்குத் தங்கை தனது மருமகளுக்கு வக்காலத்து வாங்குகிறாள்.

“நான் நினைச்சது சரியாத்தான் போச்சு”

கேள்வியாக அண்ணனைப் பார்த்தார்.

“அந்த பொண்ணு உனக்கு வசியமருந்து வச்சுட்டா. அதுதான் உன் மகனை மாதிரியே நீயும் அவ சொல்றதுகெல்லாம் ஆட ஆரம்பிச்சுட்ட”

“அந்த மாதிரி பொண்ணா தெரியல. வசியம் பண்ணிருந்தா இத்தன வாரமா பொண்டாட்டி பிள்ளை நினைவு கூட இல்லாமலா வேலை வேலைன்னு இருப்பாங்க. என்னமோ போ சரத்துக்கு இன்னமும் பொறுப்பு வரல. “

சாப்பாட்டினை எடுத்து வைத்தார்.

“எனக்கு உங்க ஊட்டு சாப்பாடெல்லாம் வேண்டாம்பா… அவ சாப்பாட்டில என்ன கலந்து வச்சிருக்காளோ…”

“உனக்கு வேண்டாம்னா போ… நான் சாப்பிட்டுக்குறேன்”

பல்லைக் கடித்தபடி தங்கையை முறைத்தார்.

“அளவுக்கு மீறி யாரையும் நம்பாதே. உன் மகன் மேல நம்பிக்கை வச்ச. அவன் எவ்வளவு பெரிய துரோகத்தை செஞ்சிருக்கான்னு மறந்துடாதே. இந்தப் பொண்ணு உன்கிட்ட நல்ல பேரு வாங்கணும்னு வேஷம் போடுது. அவளைப் பத்தின உண்மையைக் கண்டுபிடிச்சு முகத்திரையைக் கிழிக்கல என் பேரு சின்னசாமி இல்லை” என்று சூளுரைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: