Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உள்ளம் குழையுதடி கிளியே – 12

அத்தியாயம் – 12

காலையில் எழுந்து தோட்டத்தில் சுற்றிவிட்டுத் தாயிடம் ஓடி வந்தான் துருவ். பழனியம்மா ஊருக்கு சென்றுவிட்டதால் சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள் ஹிமா.

“இந்த வீடு ரொம்ப பெருசுல்லம்மா…”

“ஆமாம் கண்ணா…”

“நான் வீட்டுக்குள்ள ஏரோப்ளேன் ஓட்டி விளையாடிட்டு வரட்டுமா”

“சரிம்மா… ஆனால் எல்லா இடத்துக்கும் போகக் கூடாது”

“ஹால்லயும், நம்ம ரூம்லயும் மட்டும்தான் ஓட்டுவேன்மா. வேற எங்கேயும் போகமாட்டேன்” என்றான் அழகு சிரிப்புடன்.

அவனது பதிலைக் கேட்டு விக்கித்துப் போனாள் ஹிமா. இதுதான் நமது எல்லை என்பதைத் தெரிந்து கொண்டானா? இது அவனது மனதை எவ்வளவு பாதிக்கும்.

தாயின் சோகம் கப்பிய முகத்தைக் கண்டு “கவலைப்படாதேம்மா நான் வேலைக்கு போயி இதை மாதிரியே பெரிய வீடு கட்டுவேன். அங்க எல்லா ரூமுக்கும் நம்ம போகலாம். வீடு புல்லா நம்மிதுதான்” என்று தாயிடம் கூறிவிட்டு ஏரோப்ளேன் ஓட்டப் போய்விட்டான்.

சத்யா மட்டும் உயிரோடு இருந்தால் இந்த நிலைமை என் மகனுக்கு வந்திருக்குமா? கண்களில் கண்ணீர் துளிர்த்தது ஹிமாவுக்கு.

அவளை மேலும் சிந்திக்க விடாது கடிகார மணியோசை பள்ளிக்குக் கிளம்ப நேரமானதை சொல்லிக் கூக்குரலிட்டது.

அவசர அவசரமாக இட்டிலிகளை ஊற்ற ஆரம்பித்தாள். குளித்துவிட்டு வந்த சரத்தின் தாய்க்கு சற்று பெரிய டம்ளரில் நுரை ததும்பும் காப்பியை சர்க்கரை குறைவாகப் போட்டுத் தயாரித்தாள்.

“உங்களுக்கு காப்பி அங்க வச்சிருக்கேன்”

அவளைக் கூர்ந்து பார்த்தார் தெய்வானை.

“அங்க வச்சிருக்கேன்னு இதென்ன மொட்டையா… வச்சிருக்கேங்க அத்தைன்னு சொல்றதுதான் மரியாதை. பெரியவங்ககிட்ட எப்படி மரியாதையா பேசணும்னு எங்க ஊரு பொண்ணுங்களைப் பாத்துப் பழகிக்கோ”

குத்தலை ஹிமா எதிர்பார்த்தே இருந்ததால் பதில் எதுவும் சொல்லாமல் தலையசைத்தாள். பின்னர் உணவுக்காகக் காத்திருந்த மகனை கவனிக்க ஆரம்பித்தாள்.

“அம்மா எனக்கு கேலாக்ஸ்தான் வேணும். இது வேணாம்” என்று படுத்திய மகனை சமாளிக்க முடியாமல் சீரியல்ஸ் டப்பாவைப் பிரித்தாள்.

“நில்லு… அவன் கேட்டா உடனே தந்துடுவியா…” என்றவர் துருவிடம் “கண்ணு இதெல்லாம் உடம்புக்குக் கெடுதி. இட்டிலி சாப்பிடு”

“மாட்டேன்…” அடம்பிடித்தான் சிறுவன்.

“இப்ப இட்டிலி சாப்பிடல அம்மா முதுகில் ரெண்டு அடி வைப்பாங்க பாரு” என்றார்.

ஊரு நாட்டில் வயசானவங்க குழந்தைகளிடம் அன்பாக இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறாள். தெய்வானைக்கு குழந்தையிடம் கூட அமைதியாகவோ, அன்பாகவோ பேச முடியவில்லை. கடினமாகப் பேசியே பழகிவிட்டார் போலும்.

“எங்கம்மா ஒண்ணும் அடிக்க மாட்டாங்க. நீங்கதான் எப்ப பாத்தாலும் எங்கம்மாவைத் திட்டிகிட்டே இருக்கீங்க. உங்க பேச்சு காய்” என்றான் துருவ் கோபமாக.

அதே வேகத்தோடு அம்மாவிடம் “அம்மா வாம்மா நம்ம குட்டி வீட்டுக்கே போலாம். இந்த வீட்டில் இந்த பாட்டியே இருந்துகட்டும்” என்றான்.

பதில் பேச இயலாது வாயடைத்துப் போனார் தெய்வானை.

“அப்படியே அவங்கப்பனை மாதிரியே மூக்குக்கு மேல கோவம் வருது. சரத்தும் இப்படித்தான் ரோஷக்காரன்” அவரது பாறை முகத்தில் கூட புன்னகை எட்டிப் பார்த்தது.

“இனிமே உன்னையும் உங்கம்மாவையும் ஒண்ணும் சொல்லல… போதுமா… இனிமே இந்த பாட்டி சொல்றதைக் கேட்பியா”

“சீரியல்ஸ்தான் சாப்பிடுவேன்”

‘அப்படியே உங்க ஐயனை மாதிரியே பிடிவாதம்” அதிசயத்திலும் அதிசயமாக புன்னகையுடன் ஹிமாவைப் பார்த்தார்.

ஆனால் பதிலுக்குப் புன்னகைக்க முடியாது தவித்தாள் ஹிமா. அவரது ஒப்பீடு அவரது சுடு சொற்களை விட அதிகமாகப் பாதித்தது.

“துருவ் பெரியவங்ககிட்ட மரியாதையா பேசணும். உனக்கு ஸ்வீட்தானே வேணும். இட்டிலிக்கு சர்க்கரையும் நெய்யும் தொட்டு சாப்பிடுவியாம்” அவனை சமாதனப் படுத்தி உண்ண வைத்தாள்.

தாய் மகனை கவனித்தவாறே காப்பியை எடுத்து ஒரு வாய் பருகிய தெய்வானை முகத்தில் ஒரு திருப்தி. ரெண்டு தடவை காப்பியைக் குறை சொன்னார் மூன்றாவது முறையிலிருந்து அவரது டேஸ்ட்டை அறிந்து காப்பி தயாரித்துக் கொடுக்கிறாள்.

அவரது சகோதரன் மகளைத்தான் சரத்துக்குத் திருமணம் செய்ய நிச்சியத்திருந்தது. அந்தப் பெண் காவியா இதைப் போன்ற தன்மையுடன் நடந்து கொண்டிருப்பாளா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அவளுக்கு வீட்டு வேலைகள் செய்வதோ சமைப்பதோ பிடிக்காது.

“இன்னைக்கு இட்டிலி சாம்பார் செய்திருக்கேன். மதியத்துக்கு சாதம், காரக்குழம்பு, பீன்ஸ் பொரியல், வெந்தியக் கீரை கூட்டு செஞ்சு ஹாட் பேகில் எடுத்து வச்சிருக்கேன்

எனக்குத் தெரிஞ்ச விதத்தில்தான் சமைச்சிருக்கேன். உங்க சமையல் முறையை சொன்னிங்கன்னா அடுத்த முறையிலிருந்து அதே மாதிரி சமைக்கி… றே… ங்க… அத்தை” கடைசி வார்த்தையை சொல்லி முடித்ததும் ஆயாசமாக இருந்தது ஹிமாவுக்கு.

மதியம் தன்னை சமைக்க விடாமல் இத்தனை பதார்த்தங்களை செய்துவிட்டு வேலைக்குக் கிளம்புகிறாள். கெட்டிக்காரிதான். ஆனால் இந்த கெட்டிக்காரி தனது தேர்வாக இல்லாமல் மகனது தேர்வாகப் போய் விட்டதுதான் வருத்தம்.

ஹிமா பதில் எதிர்பார்த்து நிற்பதைக் கண்டு தலையசைத்தார். உணவு உண்ட மகனுக்கு அணிவிக்க சீருடை எடுத்து வந்தவளிடம்

“நீ சாப்பிட்டியா…”

“உங்களுக்கு வச்சுட்டு சாப்பிட்டுக்கிறேன்”

“இப்பத்தான் காப்பி ஆச்சு. நான் சாப்பிட நேரமாகும். நீ சாப்பிட்டுட்டு கிளம்பு. நான் அவனை ஸ்கூலுக்கு தயார் படுத்துறேன்” என்று தன்னை அனுப்பியவரை வியப்புடன் பார்த்தவாறு உணவினை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டாள் ஹிமா.

அவள் உண்டு முடிப்பதற்குள் துருவ்வை சமாதனப் படுத்தி ராசியாகி விட்டிருந்தார் தெய்வானை. அவனிடம் பேச்சுக் கொடுத்தபடி பள்ளிக்கும் கிளப்பி விட்டிருந்தார்.

“உங்களுக்கு காப்பி போட்டு பிளாஸ்க்கில் வச்சிருக்கேங்க அத்தை. எடுத்துக்கோங்க. ஏதாவது அவசரம்னா எனக்கு போன் பண்ணுங்க பத்து நிமிஷத்தில் வீட்டில் இருப்பேன். பத்திரமா இருந்துக்கோங்க” என்று சொல்லியபடி தனது கைப்பையையும், துருவ்வின் புத்தகப் பையையும் எடுத்துக் கொண்டாள்.

“துருவ் கிளம்பலாமா…”

“சரிம்மா…”

தாயுடன் பள்ளிக்கு செல்லும் முன் “இதே மாதிரி சிரிச்சுட்டே இருந்தால்தான் யூ ஆர் குட் பாட்டி. ஈவ்னிங் எனக்கு முருகா கதை சொல்லுங்க” என்று சொல்லியவண்ணம் பச்சக் என்று தனது இதழ்களால் முத்தம் பதித்தான்.

எதிர்பாராது கிடைத்த அன்பு அசைக்க, அவன் முத்தமிட்ட இடத்தை கைகளால் தொட்டுப் பார்த்த வண்ணம் நெடுநேரம் அமர்ந்திருந்தார் சரத்தின் தாய்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: