Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உள்ளம் குழையுதடி கிளியே – 11

அத்தியாயம் – 11

ஹிமாவுக்கு பூமி தனது சுழற்சியின் வேகத்தை மெதுவாக்கி விட்டதோ என்ற ஐயம் தோன்றியது. ஏனென்றால் நாளொன்று போவதும் பொழுதொன்று கழிவதும் மிக மெதுவாகவே சென்றது. சரத்தின் தாயை தினந்தோறும் எதிர்கொள்ளும் போராட்டம் அவளது மற்ற கவலைகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னே உட்கார்ந்து கொண்டது.

அவரது குத்தல் மொழிகளைப் புறம் தள்ளிவிட்டு அவளும் எவ்வளவோ பணிந்து போகிறாள். ஆனால் அந்த அம்மையாரோ அவளது பொறுமையின் அளவை சோதிக்கும் முயற்சியில் இருந்தார் போலும்.

பழனியம்மா காலை சாப்பாடு வைத்தால் “ஏன் அந்த மகாராணிக்கு சமைக்கத் தெரியாதோ…” என்பார்.

எதற்கு வம்பு என்று ஹிமாவதி மதிய உணவை சமைத்தால் ஒரு வாய் உண்டுவிட்டு முகத்தை சுளிப்பார்.

“அய்யே… வாயில் வைக்க விளங்கல… ஒரு சாம்பார் கூட வைக்கத் தெரியல, இவளை எல்லாம் கட்டிட்டு என் மகன் எப்படித்தான் சமாளிக்கிறானோ தெரியல. அதுதான் வீட்டிலேயே இல்லாம ஊர் ஊரா சுத்திட்டு இருக்கான்” என்பார் குத்தலாக.

“மெட்ராஸ்ல எந்த இடம்” என்றார் ஒருதரம். அவள் அவர்கள் வீடு இருந்த இடத்தை சொன்னதும் பதில் சொல்லாமல் சென்றுவிட்டார்.

மதிய உணவு வேளை முடிந்ததும் வழக்கம் போல போனில் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஹிமா அவர்முன் ஓரிடத்தில் நிற்காமல் ஏதாவது வேலை செய்வதைப் போலவே பார்த்துக் கொண்டாள். கடுமையான உடலுழைப்பை முடித்ததும் உடம்பு சக்தியெல்லாம் பிழிந்து எடுத்துவிட்டதைப் போல கலைத்துவிடும் அது அவளது கவலைகளை மறந்து உறங்க வைத்தது.

அப்படி ஒரு நாள் வேலைகளை அக்கடா என்று முடித்துவிட்டு, அமரும் நேரத்தில் அவள் கண்முன் மீண்டும் காட்சி தந்தார்.

தொலைக்காட்சிப் பெட்டிக்கு உயிர் கொடுத்தபடி

“உன் ஏரியா கீழ்தட்டு மக்கள் குடியிருக்குற இடம்னு சொன்னாங்க. அதுதான் வசதியா இருக்கிற சரத் கண்ணில் பட்டதும் வளைச்சு போட்டியா…”

‘ஹிமா… சரத் கூட வேலை செய்யும்போது வாங்குற சம்பளத்துக்கு உழைப்பைத் தரல, அதே மாதிரி தான் இந்த வேலையும். உனக்குத் தரப்பட்டிருக்கும் சம்பளம் இவங்க பேசுறது காதில் விழாம செவிடா இருக்கிறதுக்கும், எதிர்த்து பேசாம ஊமையா இருக்குறதுக்கும்தான்… ‘ இப்படி எண்ணிக் கொண்டதும் அவளால் அந்தப் பெண்மணியை எந்த வித வெறுப்புணர்வும் இல்லாது எதிர் கொள்ள முடிந்தது.

துருவ்விற்கு ஆங்கில, ஹிந்தி பாடம் சொல்லித்தரும் போது எப்படியாவது மாமியார் மருமகளை சமாதனப் படுத்தி வைக்க முயலுவார் பழனியம்மா…

“உங்க மருமக எவ்வளவு அறிவு பாருங்க அக்கா. தமிழ், இங்கிலீஷ், ஹிந்தின்னு எல்லா பாஷையிலும் அசத்துறாங்க பாருங்க” என்பார்.

அதற்கு சரத்தின் தாய் தெய்வானையோ “இதுல என்ன அதிசயம் இருக்கு, இவளுங்க எல்லாம் இப்படித்தான் பல பாஷை கத்துக்குவாளுங்க… அப்பத்தானே எந்த ஊர் ஆளுன்னாலும் வளைச்சுப் போட முடியும்” என்பார்.

“அப்படியெல்லாம் சொல்லாதிங்கக்கா… என்ன இருந்தாலும் அவங்க உங்க மருமக” என்று மென்மையாக சொன்னார்

“என்னடி மருமக… புழக்கடை வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சவ எப்படி மருமகளாக முடியும்… நான் இப்படித்தான். என்னைப் பிடிக்கலைன்னா இங்கிருந்து அவ வீட்டுக்கு நடையைக் கட்ட சொல்லு” என்றார் கோபம் தெறிக்கும் குரலில்.

தனிமையில் ஹிமாவை சந்தித்தார் பழனியம்மா…

“அக்கா ஏதாவது கோபத்தில் பேசுறதை மனசில் வச்சுக்காதிங்கம்மா. இயல்பாவே அவங்க ரொம்ப நல்லவங்க. மகன் மேல அவங்க வச்சிருந்த நம்பிக்கை பொய்யானதில் வந்த வருத்தம்தான் அவங்களை இப்படிப் பேச வைக்குது”

‘இவங்க மகனை நான் விரும்பவும் இல்லை வளைச்சுப் போடவும் இல்லை… உண்மை தெரியாம இப்படி பேசும் இந்தப் பெண்மணிதான் ஒரு காலத்தில் வருத்தப்படப் போகிறார்’ என்றெண்ணியவண்ணம்

“பழனியம்மா கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க, வேற யாராவது பெண்ணை சரத்துக்கு நிச்சயம் பண்ணிருந்தாங்களா”

“இதில் என்ன தப்பா நினைக்கிறது… தம்பியப் பத்தின எல்லா விவரமும் உங்களுக்குத் தானம்மா தெரிஞ்சிருக்கணும். ம்… நிச்சியம் பண்ணாங்க… பொண்ணு… எல்லாம் தம்பியோட மாமா பொண்ணுதான்”

அமைதியாக இருந்தாள் ஹிமா

“அந்தப் பெரிய மனுஷனுக்கு அக்கா சொத்தைக் கொஞ்சம் கொஞ்சமா சுரண்டுறது பத்தல. ஒரே முட்டா கொள்ளையடிக்கத்தான் மகளை தம்பிக்குக் கல்யாணம் செய்துதர ஏற்பாடு செஞ்சார். கடைசி நேரத்தில் சரத் தனக்கு கல்யாணம் ஆகிட்டதா சொல்லவும் ஏமாற்றம் தாங்க முடியாம அம்மா பிள்ளையை சேர விடாம பிரிச்சு வைச்சார். ஆனால் இப்ப எல்லாம் நல்லபடியா முடியுற மாதிரி தோணவும், அக்கா மூலமா நம்ம வீட்டில் கலாட்டா பண்ணிட்டு இருக்கார்”

“நீ சொல்றது புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு”

“அந்தக் கதையை ஒரு நாள் சாவகாசமா சொல்றேன்… நாளைக்கு நான் ஊருக்குப் போறேன். திரும்பி வர ரெண்டு மூணு வாரமாகும். அதுவரைக்கும் அக்காவை சமாளிசுக்கோங்கம்மா…”

“கவலைப்படாம போயிட்டு வாங்க. நான் சமாளிச்சுக்குறேன்” என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாள்

ஒன்று தெளிவாகப் புரிந்தது ஹிமாவுக்கு. அவர் இங்கு வந்திருப்பது தன்னை வீட்டை விட்டு வெளியே துரத்தத்தான். பழனியம்மா ஊருக்கு சென்றுவிட்டால் வேலை இவர்களுக்கு மிகவும் சுலபமாகிவிடும்.

இந்த முறை தப்பி விட்டாலும் மறுபடியும் முயலுவார்கள். இத்திட்டத்தில் சரத்தின் தாயை இயக்குவது வேறு ஆளாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, நான் சரத்திடம் வாயைத் திறக்கப் போவதில்லை. இவ்வாறு முடிவெடுத்தபின் சரத்திடமிருந்து அழைப்பு வந்த பொழுதும் தனது இக்கட்டைப் பற்றி வாயே திறக்கவில்லை. அவள் கூறவில்லை எனினும் சரத்தே கேட்டான்

“அம்மா உன்கிட்ட எப்படி நடந்துக்குறாங்க ஹிமா. பிரச்சனை எதுவும் இல்லையே”

“ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க கவலைப்படாம உங்க வொர்க்ல கான்சென்ட்ரேட் பண்ணுங்க”

“நான் வேணும்னா லீவ் போட்டுட்டு வரட்டுமா… நான் அங்கிருந்தா நிலைமை கொஞ்சம் கட்டுக்குள்ள கொண்டுவந்திருவேன்”

“நீங்க வேலைகளை அப்படியே விட்டுட்டு வர அளவுக்கு இங்க எந்த நிலைமையும் இல்லை. உங்கம்மாவைப் பார்க்க ஆசையா இருந்தால் நேரடியாவே சொல்லலாம். என்னை காரணம் காட்ட வேண்டாம்பா…”

“அம்மாவைப் பார்க்க ஆசைதான். ஆனால் இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை அவங்களை உடனே பார்த்தே ஆகணும்னு தவிச்சிருக்கேன். எத்தனையோ கடிதம் போட்டிருக்கேன். ஆனால் அப்பல்லாம் எங்கம்மா என்னைப் பார்க்க வந்ததே இல்லை”

அவன் குரலில் என்ன தெரிந்தது சோகமா… இறுக்கமா… ஒன்றும் புரியவில்லை ஹிமாவுக்கு. அவன் தாயார் பெற்ற மகனைக் கூடப் பார்க்க வராத அளவுக்கு கல் நெஞ்சம் படைத்தவரா?

“அவங்க நிலமை என்னவோ நமக்குத் தெரியாதில்லையா…”

“ஆமாம் ஹிமா. இப்ப அது உண்மையா இருக்கும்னு தோணுது. ஆனால் அந்த வயசில் அதெல்லாம் தெரியாதில்லையா… என் அம்மா பாசமே இல்லாத இருக்குற மாதிரியே தோணும்”

“அதுக்காக அவங்களைப் பார்க்க வராம இருந்துறாதிங்க. ஒரு சின்ன ப்ரேக் கிடைச்சா கூட ஒரு எட்டு வந்துட்டுப் போங்க”

சரத்திடமே இவ்வளவு கடினமாக இருப்பவர்கள் தன்னைக் குத்திக் குத்திப் பேசுவதில் வியப்பே இல்லை.

சரத்தின் அம்மாவிடமிருந்து விலகி இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவள் மறுநாள் சாரதாவின் முன் நின்றாள்.

“நான் டிகிரி வாங்கிருக்கேன். தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி, பிரெஞ்சு எழுதப் படிக்க தெரியும். அது தவிர பத்து வருஷம் நாட்டியம் கத்து முறைப்படி அரங்கேற்றம் செய்திருக்கேன். பரதநாட்டியத்தில் டிப்ளமோ வாங்கிருக்கேன். இந்தத் தகுதியில் ஒண்ணுக்கு உங்க பள்ளியில் ஏதாவது வேலை இருந்தால் தர முடியுமா”

சில வினாடிகள் அவளைக் கூர்ந்து பார்த்தார் சாரதா. பின்னர் மெதுவாகத் தன் கண்ணாடியைக் கழற்றி மேஜையின் மேல் வைத்தவர் விரல்களைக் கோர்த்துக் கொண்டார்.

“திடீருன்னு இப்படிக் கேட்குறேன்னா அதுக்கான அவசியம் ஏதோ இருக்குன்னு அர்த்தம். இது பணத்துக்காக என்றால் என்னால் மற்ற கல்வி நிறுவனங்கள் தர அளவுக்கு சம்பளம் தர முடியாது”

“நீங்க தரதை வாங்கிக்கிறேன்”

சிலவினாடிகள் பார்த்தவர்

“சரி ஆறாம் வகுப்பு ஆர்ட்ஸ் கிளாஸில் இன்னைக்கு பரதநாட்டியம் கிளாஸ் ஆரம்பிச்சுடு “

“இன்னைக்கேவா…”

“ஏன் நல்ல நாள் பார்த்துத்தான் வேலைல சேருவியோ”

“எனக்கு வேலை கிடைச்ச இன்னைக்குதான் நல்ல நாள். இப்பயே என் வேலையைத் தொடங்கிடுறேன். ஆனால் சிலபஸ்…”

“நடனம் என்பதே உடற்பயிற்சி மாதிரிதானே… முதலில் அரைமண்டி பொசிஷன், தட்டடவு, நாட்டடவு இதில் அவங்களை ஸ்ட்ராங் பண்ணு… அப்பறம் மத்ததைப் பார்க்கலாம்” என்று பதிலளித்ததில் நாட்டியத்தில் அவர் பரிட்சியம் உடையவர் என்பதை ஹிமா கண்டுகொண்டாள்.

விஷயம் தெரிந்தவரிடம் வேலை செய்வதே சுவாரஸ்யம்தானே… விருப்பத்துடன் வகுப்பறைக்கு சென்றாள் ஹிமா.

அவர் சென்றவுடன் சாரதாவின் உதவியாளர் கேட்டார் “என்ன மேம் சான்றிதழ்கள் கூடப் பார்க்காம வேலை தந்துட்டிங்க”

“அதுதான் டான்ஸ் டீச்சரா போட்டிருக்கேன்”

“இருந்தாலும்”

“அவ பணத்துக்காக வேலை கேட்கல… அவளை பிஸியா வச்சுக்க வேலை கேக்குறா… வீட்டில் என்ன புடுங்கலோ யாருக்குத் தெரியும். நம்ம மறுத்தா அதே விரும்பத்தகாத சூழ்நிலையில் அவள் தொடர நேரலாம். இதனால் இவளுக்கு என்ன நடக்குமோ யாருக்குத் தெரியும். அதனால் இவ கொஞ்சநாள் வேலை பார்க்கட்டும்”

“இந்த வேலையால பிரச்சனை தீர்ந்திடுமா…”

“அப்படி சொல்ல முடியாது. உதாரணமா வேலைல பிரச்சனை இருந்தால் புது வேலை பார்த்துட்டு போய்டலாம். ஆனால் குடும்பத்தில் பிரச்சனை இருந்தால்…

பிரச்சனை கூடவே வாழ வேண்டியிருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு வினாடியும் அவங்க மனசு வீக்காகும். “

“பாக்க வசதியான பெண்ணா தெரியுறா… சம்பளத்தை பத்திக் கூட பெருசா கேட்டுக்கல. அதனால பணப் பற்றாக்குறை இருக்க சந்தர்ப்பம் இல்லை. காயம் கீயம் இல்லை. வீட்டுக்காரன் குடிச்சுட்டு அடிக்கிறான் மாதிரியான கீழ்தட்டு மக்களுக்கு இருக்கும் பிரச்சனை எல்லாம் இல்லை. இவளுக்கு வேற என்ன ப்ராப்ளம் இருக்கப் போகுது”

“ஒருத்தரை பலவீனமாக்க பிசிக்கலா அபியூஸ் பண்ணனும்னு இல்லை. காயப்படுத்தும் ஒரு வார்த்தை, இளக்காரமா ஒரு சிரிப்பு, கூட்டத்து முன்னாடி செய்யப்படும் அவமரியாதை இதெல்லாம் போதும். இதை செய்வது நம்ம வீட்டினராவே இருக்கும்போது எப்படி அங்கிருந்து விடுபட முடியும்? ஒரு சமயத்தில் பேஸ் பண்ண தெம்பில்லாம விபரீத முடிவுக்கு போயிடுவாங்க.

சோ கொஞ்ச நேரமாவது அவங்களுக்காக ஒதுக்கிடணும். சின்ன நடைபயிற்சி, க்ளோஸ் பிரெண்ட் கூட மனசு விட்டுப் பேச்சு, கோவில், பிடிச்ச சினிமா, இளையராஜா மெலடி இப்படி சின்ன சின்ன விஷயங்கள் கூட அவங்களுக்கு அற்புதமான மாற்றங்களைத் தரும்”.

“இந்தப் பொண்ணுக்கு இதை மாதிரி ஏதாவது நடந்திருக்கும்னு சந்தேகப் படுறிங்களா”

“இவளை சில நாளா வாட்ச் பண்றேன். எல்லாரும் குழந்தையை ஸ்கூல் லாஸ்ட் பெல் அடிக்கிறப்ப கொண்டுவந்து விடுவாங்க. ஸ்கூல் விட்டதும் கூட்டிட்டு ஓடிடுவாங்க. இவளும் அப்படித்தான் இருந்தா… ஆனா, இப்ப சில நாளா ஸ்கூல் திறக்குறதுக்கு முன்னாடியே மகனோட வந்து நிக்கிறா. ஸ்கூல் முடிஞ்சும் கூட வாட்ச்மேன் கேட்டை மூடுற வரைக்கும் அவ மகன் கூட இங்க ப்ளேகிரவுண்ட்ல விளையாடுறா.

அது மட்டுமில்லாம பார்க்ல வேற அடிக்கடி இவளைப் பாக்குறேன். இந்தப் பெண்ணுக்கு அவ வீட்டில் இருக்க பிடிக்காத அளவுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. இது கவனிக்க வேண்டிய விஷயம். நம்ம கவனிக்கலாம்”

சாரதா யாருக்கு என்னவானால் தனக்கு என்ன என்று ஒதுங்கி போய்விடாமல் பிரச்சனையை ஆராய்ந்து பார்க்கும் ரகம். இவர் ஹிமா சந்திக்கவிருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண உதவி புரிவாரா… காத்திருப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: