Tamil Madhura உள்ளம் குழையுதடி கிளியே உள்ளம் குழையுதடி கிளியே – 10

உள்ளம் குழையுதடி கிளியே – 10

அத்தியாயம் – 10

ஹிமாவதிக்கு கோவையின் வாழ்க்கை பழகிவிட்டது. காலை எழுந்து மகனுடன் விளையாடிக் கொண்டே பள்ளிக்குக் கிளப்புவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்தே உணவு உண்ணுவார்கள். பழனியம்மாவின் கைப்பக்குவத்தில் இட்டிலி தோசை கூட சுவை கூடித் தெரிந்தது.

அவரும் அவள் உண்ணும் போது சரியாக உண்ணவில்லை என்று தோன்றினால் “இன்னும் ஒரு இட்டிலி வச்சுக்கோங்க அம்மிணி” என்று கூடுதலாகத் திணிப்பார்.

பழனியம்மாவின் அன்பு அவளின் தாயை நினைவுபடுத்தியது. அவரும் இப்படித்தான் அவள் வேண்டாம் என்றாலும் விடாமல் மேலும் ஒரு தோசையாவது சாப்பிட வைப்பார்.

உயிர் வாழ உணவு வேண்டும் அதற்காக உண்கிறேன் என்ற நிலையில் இருந்தவள் சில நாட்களாக உணவின் சுவையறிந்து உண்கிறாள். முன்பு இப்படி இல்லை. அன்று சத்யாவுக்கு நடந்த அந்த விபத்து சுனாமியாய் அவளது வாழ்க்கையையும் சிறு சிறு சந்தோஷத்தையும் கூட சுருட்டிச் சென்றுவிட்டது.

“சாப்பாடு பிடிக்கலயாம்மா… மெட்ராஸ்ல வேற வகையெல்லாம் சமைப்பிங்களோ… என்ன பிடிக்கும்னு சொல்லுங்க செஞ்சுத்தறேன். “ பதில் எதிர்பார்த்து பழனியம்மா நிற்பதை உணர்ந்து நினைவுலகத்துக்கு வந்தவள்

“சாப்பாடு பிரமாதம். நான் ஏதோ யோசனையில் இருந்துட்டேன்”

“அம்மா நினைவா…” ஹிமாவின் தாய் மருத்துவமனையில் இருப்பது பழனிக்கும் தெரியும்.

“ஆமாம் இன்னைக்கு போய் பாத்துட்டு வரலாம்னு பாக்குறேன்… ஆனா…”

“மாமியார் வந்துட்டா என்ன செய்றதுன்னு தயங்குறிங்களாக்கும்”

ஆமாமென்று தலையாட்டினாள்.

“சரத் தம்பி ஊருக்குப் போயி ரெண்டு வாரமாச்சு. அக்கா வந்துருவாங்கன்னு நீங்களும் உங்க அம்மாவைக் கூடப் பாக்கப் போகாம உக்காந்திருக்கிங்க.

அவங்க வந்தா நான் பாத்துக்குறேன் இன்னைக்கு நீங்க உங்கம்மாவைப் பாத்துட்டு வந்துடுங்க. அடுத்தவாரம் நான் வேற சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போகணும்”

அவளது தாயின் அறுவை சிகிச்சைக்கும் மருத்துவ செலவுக்கும் பணம் கட்டிவிட்டான் சரத். ஆனால் அன்னையின் உடல்நிலமை அறுவை சிகிச்சையைத் தாங்கும் பலம் இல்லாதிருப்பதால் சில மாதங்கள் தள்ளிப் போட்டிருந்தார்கள் மருத்துவர்கள்.

வீட்டில் செய்த உணவை அங்கிருப்பவர்களின் அனுமதி கேட்டு சௌந்திரவல்லிக்குப் பரிமாறினாள் ஹிமாவதி.

“அம்மா பழனி என்னம்மா சமைக்கிறாங்க தெரியுமா… துருவ் ஸ்கூலில்… சாரதா டீச்சர் பிஸ்கட், சாக்லேட் எதுவும் தரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால தினமும் ஒரு பலகாரமா செஞ்சு கொடுத்து அசத்திட்டு இருக்காங்க நம்ம பழநிம்மா…”

“சரி…” உடல் தளர்ந்திருந்தாலும் மகளின் குரலில் தெரிந்த குதூகலத்தைக் கண்டு சந்தோஷித்துக் கொண்டிருந்தார் அவள் அன்னை.

“இன்னைக்குக் கூட கேழ்வரகு மாவில் சிம்ளின்னு ஒண்ணு செஞ்சிருந்தாங்க”

குறுக்கிட்டார் அன்னை “உன் வீட்டுக்காரருக்கு அதுதான் பிடிக்குமா?”

“வந்து… அவர் காலைல இட்லி தோசை சாப்பிடுவார். மத்தியானம் நம்ம ஊர் சாப்பாடுதான்…”திணறினாள் ஹிமா.

“சாப்பிடுறதும், பிடிச்சு சாப்பிடுறதும் வேற வேற… அதுக்கு வித்தியாசம் உனக்கே தெரியும். என்னோட கேள்விக்கு பதில் சொல்லு சரத்துக்கு என்னம்மா பிடிக்கும்” நிதானமாகக் கேட்டார் அன்னை.

அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது ஊமையானாள் ஹிமா.

“உன்னைத்தான் கேக்குறேன். உன் கணவர் சரத்துக்கு என்ன பிடிக்கும்?”

‘உன் கணவர்’ என்ற பதமே அவளது காதில் நாராசமாக ஒலித்தது.

“எனக்குத் தெரியலம்மா…” என்றாள் சற்று எரிச்சலுடன்.

“ஒரு மனைவியா அவருக்கு சமைச்சுப் போடலையா… என்ன உணவு பிடிக்கும்ன்னு உன் மாமியார் சொல்லலையா…”

“அம்மா… கல்யாணம் முடிஞ்சு அவர் இங்கிருந்ததே சில நாட்கள்தான். அவங்க வீட்டில் பழநியம்மாத்தான் சமையல் வேலையை கவனிச்சுக்குறாங்க… அப்பறம்…” அதற்கு மேல் அந்தத் தாயிடம் வாதாட மனமின்றி

“அவங்கம்மாவுக்கு எங்க கல்யாணத்தின் மேல் வருத்தம் போலிருக்கும்மா… இவ்வளவு குழப்பத்தில் அவருக்கு எங்க சமைச்சுப் போட” என்றாள் பரிதாபமாக.

சற்று நேரம் சௌந்திரவள்ளி எதுவும் பேசவில்லை. நியாயத்தை சிறிது நேரம் அலசிய பின்னர் மெல்லிய குரலில் சொன்னார்.

“சரத்தின் அம்மா மேல் தப்பே இல்லை… நான் அவங்க நிலைமையில் இருந்திருந்தாலும் இப்படித்தான் நடந்திருப்பேன்” இலக்கில்லாமல் வெறித்துப் பார்த்தார்.

“தப்பு செஞ்சுட்டேன்… அவங்கம்மாவை நானே சந்திச்சுப் பேசியிருக்கணும். இந்தக் கல்யாணத்துக்கு அவங்க சம்மதத்தை வாங்கிட்டுத்தான் அடுத்த கட்டத்தை யோசிச்சிருக்கணும்.

நான் போனதுக்கப்பறம் நீ தனியா நிப்பியேன்னு ஒரு பயம். நடுக்கடலில் தத்தளிச்சவனுக்கு ஒரு உதவி கிடைச்ச மாதிரி சரத் வரவும் நானும் தலையாட்டிட்டேன்… என் மேலதான் முழு தப்பும்”

“அம்மா… நீங்க வருத்தப்படாதிங்க… நம்ம இருந்த நிலைமையில் அடுத்தவங்களைப் பத்தி நினைக்கக் கூட தோணல… சொல்லப் போனா என் மூளையே செயல் படாம இருந்தது. ஒவ்வொரு நாளையும் தள்ளினா போதும் என்ற நிலையில் தான் இருந்தேன்.

அந்தக் குழப்பான மனநிலையில் என்னைப் பத்தியும், கல்யாணத்துக்கு அப்பறம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகளைப் பத்தியும் எனக்கு யோசிக்கவே தோணல”

“உன்னை சொல்லியும் தப்பில்ல… உங்க திருமணம் மின்னல் வேகத்தில் நடந்துடுச்சு… நடந்தது நடந்ததாவே இருக்கட்டும், இனி நடப்பது நல்லதா இருந்தால் போதும்…”

ஜன்னலின் வெளியே தெரிந்த தோட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தார்.

“ஹிமா… எனக்காக ஒரு உறுதி தர்றியா…”

“சொல்லுங்கம்மா”

“உங்க திருமணத்தால் சரத்தோட அம்மாவுக்கு சொந்தக்காரங்களால் நிறைய காயமும், அவமானமும் ஏற்பட்டிருக்கும். அதை எல்லாத்தையும் உன் மேலதான் காமிப்பாங்க… அதை நீ தாங்கிக்கணும், பொறுத்துக்கணும்… பதிலுக்கு ஏதாவது செய்தா உனக்கும் சரத்துக்கும் பிரச்சனை வரும். அதனால் அவங்க மனம் நோகாம நடந்துக்கோ”

இன்னும் எத்தனை பேரைத்தான் தாங்குறது. பெண்கள் நல்ல மகளா இருக்கணும், அக்கா தங்கைகளுக்கும் அண்ணன் தம்பிகளுக்கும் அனுசரணையா இருக்கணும், கணவன் மனசறிஞ்சு அவன் உறவினர்களை அனுசரிச்சு போற மனைவியா இருக்கணும், குழந்தைகளுக்காக தனது உணவு தூக்கம் எல்லாம் தியாகம் செய்து அவர்களோட முன்னேற்றத்துக்காக தன்னையே கரைத்துக் கொள்ளும் மெழுகுவர்த்தியா இருக்கணும்.

ஒரு பெண் எப்படி நல்ல மகளா, சகோதரியா, மனைவியா, மருமகளா, தாயா இருக்கணும் என்று சொல்லும் சமூகம், அவளும் ஒரு மனிதப்பிறவிதான் அவளுகென்றும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை எப்போது உணரப் போகிறது.

“பொறுமையில் பூமாதேவி மாதிரி இருன்னு சொல்லியே இதுவரைக்கும் என்னை முதுகெலும்பில்லாம செய்துட்டிங்க” தாயைக் குற்றம் சாட்டினாள்.

“பைத்தியக்காரி… பொறுமையா போறவங்க எல்லாம் முதுகெலும்பில்லாதவங்கன்னு யாரு சொன்னது?” பதில் கேள்வி கேட்டார் அவளது அன்னை.

“சரிம்மா… பூமாதேவி மாதிரியே இருக்கேன். ஆனால் அவ கூட பொறுமை எல்லை மீறும்போது பூகம்பத்தாலும், எரிமலையாகவும் தன்னோட சினத்தை காட்டியிருக்கா அதை மறந்துடாதிங்க…” உறுதியாக சொல்லிவிட்டு மற்ற பொழுதைக் கழித்துவிட்டுக் கிளம்பினாள்.

ஹிமா வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் மாலையாகிவிட்டது. துருவ்வை பழனியம்மா அழைத்து வந்து பார்த்துக் கொள்வதாய் சொல்லியிருந்தார். அதனால் அவனை பள்ளியிலிருந்து அழைத்து வர வேண்டுமே, கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற பதைபதைபின்றி திருப்தியாக தாயுடன் நேரம் செலவழித்தது மனதிற்கே நிறைவாக இருந்தது.

வழியில் சிறிது காய்கறி வாங்கிக் கொண்டாள். உற்சாகமாய் வீட்டிற்குள் நுழைந்தவளின் கால்களைக் கட்டிக் கொண்டான் துருவ்.

“அம்மா…”

“ஸ்கூல் விட்டு வந்தாச்சா… ஸ்நாக்ஸ் எதுவும் சாப்பிட்டியா…”

“ம்… பாட்டி ஸ்வீட் போண்டா தந்தாங்க”

“ஸ்வீட் போண்டாவா… அதென்ன பழனியம்மா…” கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

வழக்கத்துக்கு மாறாக இறுக்கமாய் இருந்தார் அவர்.

“நான் செய்யலைம்மா… அக்கா செஞ்சு எடுத்துட்டு வந்தாங்க” என்றபடி கண்ணில் ஜாடை காட்டியபடி கீழே குனிந்து காய் நறுக்கும் வேலையைத் தொடர்ந்தார் பழனி.

அவர் கண்கள் சென்ற திசையை நோக்கியவள் அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தபடி தன்னையே கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி தென்பட்டார். ஒரு சில வினாடிகளில் அவர்தான் சரத்தின் தாய் என்பதை புரிந்து கொண்டாள்.

“வாங்க…” சொல்லிவிட்டு அவரை வரவேற்கும் வண்ணமாக புன்னகைத்தாள். பதிலுக்கு அவர் முகத்தில் சிரிப்பில்லை. பார்வை முறைப்பாக மாறியது.

“பையன் ஸ்கூலில் இருந்து வரும் நேரத்துக்கு வீட்டில் இருக்கணும்னு ஒரு அம்மாவுக்குத் தெரியாதா… ஒரு குழந்தையை எப்படி வளர்க்கணும்னு உங்க வீட்டில் சொல்லித்தரலையா…”

அந்தக் குரலில் ஏகப்பட்ட குத்தல்.

“மன்னிச்சுக்கோங்க… வழக்கமா வீட்டில்தான் இருப்பேன்… ஆனால் இன்னைக்குன்னு பார்த்து அம்மா…” அவளை முடிக்கவிடாமல் குறுக்கிட்டது மூத்தவரின் குரல்

“உங்க வீட்டில் தனியா இருக்குற பையனை எப்படி மயக்கிக் கல்யாணம் பண்ணிக்கிறது. அவனைக் குடும்பத்திலிருந்து எப்படிப் பிரிக்கிறதுன்னு மட்டும்தான் டியூஷன் எடுத்தாங்களா… ச்சீ… நீயெல்லாம் ஒரு பொண்ணு… இந்த மாதிரி ஒரு ஆள்மயக்கி எனக்கு மருமகள்… தெய்வமெல்லாம் சில சமயம் கல்லாயிடுது…”

என்று அவர் சொன்னதும், அவமானத்தால் கூனிக் குறுகி, பதில் சொல்ல வழியின்றி நிற்க வைத்த கடவுளைத் தன் பங்குக்கு சபித்தபடி நின்றாள் ஹிமா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 7உள்ளம் குழையுதடி கிளியே – 7

அத்தியாயம் – 7 கோவையின் சற்று ஒதுக்குப்புரத்தில் தனிமை விரும்பிகளுக்காகக் கட்டப்பட்ட வில்லாவில்தான் சரத் தன் தாயாருக்காக அந்த வீட்டினை வாங்கியிருந்தான். அக்குடியிருப்பில் ஒவ்வொரு வீடுகளும் குறிப்பிட்ட இடைவெளியில் கட்டப்பட்டிருந்தன. சுற்றிலும் பல நிறங்களில் பூக்கள், புல்வெளிகள் என்று வடிவமைக்கபட்டுப் பராமரிக்கப்படும்

உள்ளம் குழையுதடி கிளியே – 17உள்ளம் குழையுதடி கிளியே – 17

அத்தியாயம் – 17 வீட்டிற்கு வந்ததும் கிறிஸ்டியின் பகுதி நேரப் படிப்பும் அவளது வேலையும் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாள் ஹிமா. “உனக்கெதுக்குடி இதெல்லாம்” “என் மேல இரக்கப்பட்டு ஷாரதா மேடம் வேலை தந்திருக்காங்க. இது எத்தனை நாள் நிலைக்கும்? சரத்-நக்ஷத்திரா சேர்ந்தவுடன்

உள்ளம் குழையுதடி கிளியே – 23உள்ளம் குழையுதடி கிளியே – 23

அத்தியாயம் – 23 அன்று கோவிலில் நடந்த பூஜையில் என்ன நடந்தது என்று கேட்டால் ஹிமாவுக்கு பதில் சொல்லத் தெரியாது. நடந்தது எதுவும் அவள் மனதில் பதியவில்லை. சரத்தின் கையால் தாலி கட்டிக் கொண்ட கணத்திலேயே அவளது மனம் உறைந்திருந்தது. ‘நானா!