Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உள்ளம் குழையுதடி கிளியே – 9

அத்தியாயம் – 9

ரத் சந்தருக்கு மீட்டிங் வெற்றிகரமாக முடிந்தது மிகவும் சந்தோஷம். லாபகரமான இந்த ஒப்பந்தம் கிடைக்க முக்கால் கிணறு தாண்டியாகிவிட்டது. இன்னும் சில சந்திப்புகளில் முழுமையாகக் கிடைத்துவிடும் என்று நம்பினான்.

சோர்வாக அறைக்கு வந்தவனுக்கு உணவு கூட உண்ணத் தோன்றவில்லை. படுத்து உறங்கினால் போதும் என்று கண்கள் கெஞ்சிற்று. அறைக்கு வந்து இரவு உடைக்கு மாறியதும் அலாரம் செட் செய்யும் பொருட்டு போனை எடுத்தான். பார்த்தால் இருவத்தி ஐந்து மிஸ்டு கால்கள் அனைத்தும் நக்ஷத்திராவிடமிருந்து. இத்தனை தடவை எதற்கு அழைத்திருக்கிறாள் என்று பதறியவண்ணம் அவளை அழைத்தான்.

“புது மாப்பிள்ளை ஹனிமூன் கொண்டாடிட்டு இருக்கியா அதுதான் போனை எடுக்கலையா” என்று கடித்துக் குதறினாள்.

“என்னாச்சு ராஜி… எதுக்குக் கால் பண்ணிருந்த?”

“நீ என்ன பண்ணிட்டிருந்தன்னு சொல்லு”

“நான் ஹோட்டலுக்கு இப்பத்தான் வந்தேன். தூங்கப் போறேன்”

“ஸாரி தேனிலவை தொந்திரவு பண்ணிட்டேனோ. ஆமா அவளோட மகனையும் கூட்டிட்டு வந்திருக்காளா…”

“அறைஞ்சுப் பல்லைக் கழட்டிடுவேன்… நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லி வருஷக்கணக்கா கெஞ்சிட்டு இருந்தவனை டம்மி கல்யாணம் செய்ய சொல்லி தூண்டிவிட்டது யாரு… உன்னைக் காதலிக்கிறேன் என்ற காரணம் என்னைப் பத்தியும் நமக்கு சம்மந்தமே இல்லாத ஒரு பெண்ணைப் பத்தியும் அவதூறா பேசுற தகுதியை உனக்குத் தரல.

நல்லா கேட்டுக்கோ. நான் டெல்லில இருக்கேன். அவ கோயம்பத்தூரில் இருக்கா. அவங்கம்மாவுக்கு ஆப்ரேஷன் செய்ய பணம் தந்ததால் என் வேற வழியில்லாம என் மனைவி என்ற பெயரில் அங்க இருக்கா. இதைப் பத்தியெல்லாம் தெரியாம வாய்க்கு வந்தபடி பேசுவியா”

“மன்னிச்சுக்கோங்க சரத்… உங்க மேல இருக்கும் பொசசிவ்நெஸ். நீங்க ரொம்ப நேரமா போனை எடுக்கலைன்னு தெரிஞ்சதும் வார்த்தைகள் தப்பா வந்துடுச்சு”

“இது வரைக்கும் நீ பேசினதைப் பொறுத்துட்டு இருந்திருக்கேன். ஆனால் ஒரு அப்பாவிப் பொண்ணு வேற வழியே இல்லாம என் கூட வாழ சம்மதிச்சிருக்கா. அவளோட கேரக்டரைப் பத்திப் பேசினா நான் பொறுத்துட்டு இருப்பேன்னு நினைக்காதே”

கடுமையாக பேசி போனைக் கட் செய்தான். மறுமுனையில் கையிலிருந்த செல்லை வெறித்தாள் நக்ஷத்திரா. அவள் மனம் அவளை சமாதனம் செய்தது

“ராஜி… அந்த ஹிமாவைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டுத்தானே சரத் கல்யாணத்தை ஏத்துகிட்ட. ஒரு சராசரி பெண்ணா இருந்தா சரத்தை இந்நேரம் விட்டு வச்சிருக்க மாட்டா. இவ ஒரு குழந்தையோட அம்மா. அதுவும் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தவள். அவளால் சட்டுன்னு மனம் மாற முடியாது.

உன் வார்த்தைகள் தடம் மாறினால் சரத் சந்தர் உன்னை உடனடியா கல்யாணம் செய்துக்க சொல்லுவான். உன் மார்கெட் சூடு பிடிக்கும் சமயத்தில் இதெல்லாம் நடக்குற காரியமா. கொஞ்ச நாள் அடங்கு” மொபைலை அணைத்த நக்ஷத்திராவின் கண்கள் உறக்கத்தை அணைக்க முயன்றன.

மறுமுனையில் ஒரு அப்பாவிப் பெண்ணை கீழ்த்தரமாக நக்ஷத்திரா விமர்சித்ததை ஜீரணிக்க முடியாமால் உள்ளம் குமுறியபடி தூக்கத்தை தொலைத்து அமர்ந்திருந்தான் சரத்சந்தர்.

இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதால் காலை சரத்தால் கண்களையே திறக்க முடியவில்லை. எட்டு மணி வாக்கில் இடைவிடாது ஒலித்த கைப்பேசியை எரிச்சலுடன் எடுத்தான். ஆனால் அதில் தென்பட்ட ஹிமாவின் பெயரைக் கண்டதும் எரிச்சல் மறைந்தது.

“சரத்… தூங்கிட்டிருந்திங்களா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…”

“பரவல்ல ஹிமா சொல்லு… ஏதாவது முக்கியமான விஷயமா…”

“எஸ்… ஆனா எனக்கில்ல உங்களுக்காத்தான் இருக்கும்”

“எனக்கா… எனக்கே தெரியாம இதென்ன புதிர்”

“நேத்தி மீட்டிங் முடிச்சுட்டு களைப்பா வந்திருப்பிங்க… சரியா சாப்பாடு தூக்கம் இருந்திருக்காது. அதுதான் ரெஸ்ட் எடுக்கட்டும்னு கால் பண்ணல.

ஆனால் நிறுவனம் காலையில் மீட்டிங் சம்பந்தமா சில விளக்கங்கள் கேட்க வாய்ப்பிருக்கு. அதை வச்சுத்தான் முடிவு சொல்லுவாங்க. நீங்க முன்னாடியே அவங்க சிஸ்டர் கண்செர்ன்க்கு ப்ராஜெக்ட் செய்திருக்கிங்க. அந்த விவரங்களை பார்த்து வச்சுட்டா உங்களுக்கு உதவியா இருக்கும். சோ… எழுந்து பிரெஷா ரெடியாகுங்க. அப்பத்தான் காத்திருக்கும் சவால்களை சமாளிக்க நேரமிருக்கும்”

அவளது குரலில் தெரிந்த உற்சாகம் சரத்துக்குத் தனி தெம்பைத் தந்தது.

“எஸ் டீச்சர்… பத்து நிமிஷத்தில் குளிச்சுட்டுக் கிளம்பிடுறேன் டீச்சர்”

“ஓகே ஸ்டுடென்ட்… ரெடி, ஸ்டெடி, கோ…” என்று சொல்லி போனை வைத்தாள்.

சிரித்துக் கொண்டே குளியறைக்கு நுழைந்தவன் சரியாக பதினைந்தாவது நிமிடம் அலுவலக உடை அணிந்து டையை சரி செய்துக் கொண்டிருந்தான். அறையின் கதவை யாரோ நாசுக்காக தட்ட, யாராக இருக்கும் என்ற கேள்வியுடன் கதவைத் திறந்தான்.

“யுவர் பிரேக்பாஸ்ட் ஸார்” என்றபடி காலை உணவை உள்ளே கொண்டுவந்தான் விடுதியில் பணிபுரிபவன்.

“நான் ஆர்டர் பண்ணலையே…”

“உங்க பிஏ அரைமணி நேரத்துக்கு முன்னாடியே போன்ல ஆர்டர் பண்ணிட்டாங்க”

“என் பிஏவா?” என்றான் புதிர் விலகாமல்.

“ஆமாம் ஸார். உங்க உதவியாளர் மிசர்ஸ். ஹிமாவதி காலைலேயே ஆர்டர் பண்ணிட்டாங்க. இப்ப கொஞ்சம் நேரம் முன்னாடி மறுபடியும் கால் பண்ணி பதினைஞ்சு நிமிஷத்தில் உணவை அறைக்கு எடுத்துட்டு வர சொன்னாங்க. அதிலும் குறிப்பா தென்னகத்து உணவுதான் வேண்டும்னு சொல்லிருந்தாங்க” வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்டு, சரத் மறுத்ததும் கிளம்பிவிட்டான்.

உணவுப் பதார்த்தங்களைத் திறந்து பார்த்தான். சூடான இட்டிலி, சிறிய ஊத்தப்பம், சட்டினி, சாம்பார் அவன் பசியைக் கிளறியது. காலை சரத் இட்டிலி, தோசைதான் உண்ணுவான். அதனால் சொல்லியிருக்கிறாள் போலும்.

உணவு உண்டபடியே ஹிமாவை அழைத்தான்.

“தாங்க்ஸ் ஹிமா… வொர்க் டென்ஷன்ல நைட் கூட சாப்பிடல… காலைல பசில வயிறு கப கபன்னு எரிஞ்சது”

“தீ அணைஞ்சதா…”

“சாம்பார் ஊத்தி அணைச்சுட்டு இருக்கேன்”

“பிரெஷ் ஆப்பிள் ஜூஸ் கூட சொல்லிருந்தேனே… அதை முதலில் ஊத்திருக்கலாமே… உடனே அணைஞ்சிருக்குமே”

“சாப்பாட்டை பாத்ததும் பாய்ஞ்சுட்டேன்… ஜூஸ் குடிக்க இடமிருக்குமான்னு தெரியல”

“இப்ப முடியலைன்னா தெர்மல் காபி மக்ல ஊத்தி எடுத்துக்கோங்க…”

“சரி, சரி… நீ சொன்னதைக் கேட்டுகிட்டேன் இல்லையா… அதே மாதிரி நான் சொல்ற ஒண்ணை நீயும் மறுக்காம ஒபே பண்ணனும்”

“ஸ்யூர்…”

“இனிமே நீ யார்கிட்ட உன்னைப் பத்தி மென்ஷன் பண்ணாலும் என் மனைவின்னுதான் சொல்லணும். என்னோட பிஏன்னு உன்னை அறிமுகப் படுத்திக்கிறது எனக்குப் பிடிக்கல. செய்வியா…”

தயங்கினாள் ஹிமா…

“அவ்வளவு கஷ்டமான விஷயத்தையா கேட்டுட்டேன் ஹிமா… ஒரு மூணாவது மனுஷன்கிட்ட போன்ல கூட திருமதி. சரத்சந்தர் ன்னு உன்னை அறிமுகப் படுத்திக்க தயங்கினால் எப்படி என் மனைவியா என் அம்மாகிட்ட நடிக்கப் போற…” என்ற அவனது குரலில் அசாத்திய உறுதி.

மறுமுனையில் கண்களை மூடி மனதில் உருப்போட்டாள் ஹிமா “மிஞ்சி மிஞ்சி போனா மூனே வருஷம் தான் இந்த டிராமா… சரத் செய்திருக்குற உதவிக்கு வாயில் ஒரு சின்ன பொய்… இதைக்கூட நீ செய்ய முடியாதா ஹிமா… ஒத்துக்கோ ஒத்துக்கோ…”

“என்ன பதிலையே காணோம்” பதில் வாங்காமல் விடமாட்டேன் என்ற உறுதி தெரிந்தது சரத்தின் குரலில்.

“சரி சரத்”

“குட்… இப்ப நான் ஒரு மூணாவது மனுஷன். உன்கிட்ட இந்தக் கேள்வியைக் கேக்குறேன்… நீ பதில் சொல்ற…

யாரும்மா நீ…” அவளது பதிலை கூர்மையாக வாங்கத் தயாராயின அவன் காதுகள்.

‘சத்யா மன்னிச்சுடு… சத்யா மன்னிச்சுடு… ’ மனதில் சத்யாவிடம் மன்னிப்பை வேண்டியபடி கண்கள் கலங்க சொன்னாள் ஹிமா

“நான் மிசர்ஸ். சரத்சந்தர்”

சிறு சிறு அன்பு அக்கறை கோர்த்த அரும்புகள் பூவாகும் இந்த அழகிய மாற்றம் நிலைக்குமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: