Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23

 

கனவு – 23

 

முல் பேபியாகச் சுருட்டைத் தலையோடு பொக்கைவாய் சிரிப்போடு இருந்த அந்த குழந்தையைப் பார்த்ததும் வைஷாலிக்கு வேறு எதுவும் எண்ணத் தோன்றவில்லை. தான் கருவில் அழித்த சிசு தான் கண் முன் தோன்றியது. தான் செய்த தப்புக்குப் பரிகாரம் தேடும் முகமாகவே கடவுள் அவளுக்கு இந்த ஒரு வாய்ப்பை தந்ததாக எண்ணினாள். இவள் இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்த பொழுது சஞ்சயனின் குரல் அவளை நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்தது.

 

“இங்க பாரு வைஷூ… நான் என்ன தான் சொன்னாலும் வாழப் போறது நீதான். அதனால நீயே வடிவா யோசிச்சு முடிவெடு… நான் உன்னைக் கட்டாயப் படுத்தேலடி… நீயும் கடம்பனும் ரெண்டு பேருமாகத் தனியாகக் கதைச்சு முடிவெடுங்கோ… நான் பக்கத்துக் கடை வரைக்கும் போய்ட்டு வாறன்…”

 

கூறிவிட்டு இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே சென்றான். சஞ்சயன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த வைஷாலியை ஆதூரமாய் நோக்கிக் கொண்டிருந்தான் கடம்பன். பரீட்சை எழுதிய மாணவனாய் அவன் இதயத் துடிப்பு எகிறிக் குதித்துக் கொண்டிருந்தது.

 

“வைஷூ…!”

 

அவன் மெல்லிய அழைப்பில் திரும்பி இவனைப் பார்த்தாள்.

 

“நீ உடன பதில் சொல்ல வேணும் என்று இல்லை… நான் ஒரு கிழமையில திரும்ப மாலைதீவு போறன். அதுக்கு முதல் சொல்லிட்டாய் என்றால் நான் கொஞ்சம் நிம்மதியாக இருப்பன்…”

 

அவன் சொன்னதைக் கேட்டவள், அடுத்த நொடியே எந்தவித தயக்கமுமின்றி கடம்பனின் கண்களை நேராகப் பார்த்து,

 

“எனக்கு இந்தத் திருமணத்தில் பூரண சம்மதம் கடம்பன் அண்ணா…”

 

என்று கூறினாள். அவள் சம்மதம் கூறியதைக் கேட்ட கடம்பனின் கண்கள் லேசாய் கலங்கியது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்,

 

“ரொம்ப தாங்ஸ் வைஷூ… நீ என்ன பதில் சொல்லுவியோ என்று ரொம்ப டென்சனாக இருந்தது. இப்போ தான் நிம்மதியாக இருக்கு…”

 

“என்னண்ணா நீங்க… இதுக்கெல்லாம் நீங்க தாங்ஸ் சொல்லிக்கொண்டு இருக்கிறியள்… உண்மையில நான் தான் உங்களுக்குத் தாங்ஸ் சொல்ல வேணும் தெரியுமா? சஞ்சு சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன். நான் அபோர்சன் செய்தது. இன்றைக்கு வரைக்கும் அதை நினைச்சு என்னால நிம்மதியாக தூங்க முடிஞ்சதில்லை… இப்போ உங்க மூலமாக நான் செய்த தப்புக்குப் பிராயசித்தம் செய்ய ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. நான் நிச்சயமாக அவனுக்கு நல்ல ஒரு அம்மாவாக இருப்பன்… அதுசரி… மகனுக்கு என்ன பேர் அண்ணா? மகன் இப்ப எங்கே? ஏன் கூட்டிட்டு வரேல்ல..?”

 

என்று தொடர் கேள்விகளை விடுத்தாள். கடம்பனுக்கு அவள் ஆரம்பத்தில் காட்டிய சிறு கோபமும் ஒதுக்கமும் மறைந்து இப்படி இலகுவாகப் பேசியது மனதுக்கு அத்தனை இதமாக இருந்தது.

 

“மகனுக்கு ஆயுஷ் தான் பேர்… ஆனால் கண்ணா என்று தான் கூப்பிடுறது… இப்ப அம்மாவோட ஹோட்டலில விட்டிட்டு வந்தனான். சஞ்சு சொன்னவன் முந்தி உனக்கு சின்னப் பிள்ளைகளைப் பார்க்கவே பயம், நெர்வஸ் ஆகிடுவாய் என்று… அதுதான் கூட்டிட்டு வரேல்ல…”

 

“அதெல்லாம் முந்தி அண்ணா… இப்போ இல்ல… எனக்கு இப்பவே கண்ணாவைப் பார்க்க வேணும் போல இருக்கு. கூட்டிட்டுப் போறீங்களா?”

 

என்று ஆவலுடன் கேட்டாள். கடம்பன் என்ன மறுக்கவா போகிறான். வெளியே போவதாக சஞ்சயனுக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டு இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு கடம்பன் தங்கியிருந்த ஹோட்டலை நோக்கி நடந்தனர். அந்த ஹோட்டலும் வைஷாலி வீட்டின் அருகில் தான் இருந்தது.

 

ஹோட்டலை நெருங்கினால் முன்னாலிருந்த பூங்காவில் ஆயுஷும் சஞ்சயனும் பந்தெறிந்து விளையாடிக் கொண்டிருக்க வைஷாலியின் பெற்றோரும் கடம்பனின் அன்னையும் அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். வைஷாலிக்கு உண்மையில் அடக்க முடியாத கோபம் தான் வந்தது. அவளுக்கு மட்டும் எதுவுமே தெரியாமல் இருக்க மற்ற அனைவரும் சேர்ந்து கொட்டமடிப்பது போல் பட்டது. தனது கோபத்தைக் காட்ட இது நேரமல்ல என்பதை உணர்ந்தவள் தனது கோபதாபங்களை ஒதுக்கி ஆயுஷிடம் விரைந்தாள்.

 

குழந்தையிடம் சென்றவள், சஞ்சயன் போட்ட பந்தைக் குழந்தையைத் தூக்கி அதன் காலால் தட்டி விட்டாள். தானே பந்தைத் தட்டி விட்டதாக எண்ணிய அந்தப் பாலகனும் மகிழ்ச்சியில் கிளுக்கிச் சிரித்து விட்டு பின்னர்தான் யார் அந்தப் புதுமுகம் என்று நோக்கினான். உடனே அவளிடமிருந்து திமிறி விலகியவன்,

 

“யாரு நீங்க…?”

 

என்று மழலையில் விசாரித்தான். இவளும் தயங்காது,

 

“உன்ர அம்மா…”

 

என்றாள். அவள் பதிலைக் கேட்டு அந்த மூன்று வயதுப் பாலகன் அவளை மேலும் கீழும் பார்த்துச் சிந்தனையில் ஆழப் பெரியவர்கள் எல்லோருக்குமோ வைஷாலி திருமணத்துக்குச் சம்மதித்து விட்டாள் என்பதை அறிந்து அத்தனை மகிழ்ச்சி.

 

“எங்க போனீங்க என்னை விட்டிட்டு… இனி என்னை விட்டிட்டுப் போகக் கூடாது… என்ர ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் அம்மா இருக்கு… எனக்கு மட்டும் இல்லத் தெரியுமா?”

 

என்று மழலை மொழியில் அவன் திக்கித் திக்கிக் கூறியதைக் கடம்பன் அவளுக்கு மொழி பெயர்க்கவும் வைஷாலியின் கண்கள் குளம் கட்டியது. ஆயுஷை இறுக அணைத்துக் கொண்டவள்,

 

“இனி அம்மா உன்னை விட்டிட்டு எங்கேயும் போக மாட்டேன் சரியா… உன் கூடவேதான் இருப்பன். ஓகேவா…?”

 

என்று கூறி அவன் முகமெங்கும் அழுந்த முத்தமிட்டாள். அவள் அணைப்பிலும் முத்தத்திலும் தாய்மையை உணர்ந்து கொண்ட குழந்தையும் அவளை இறுக அணைத்துக் கொண்டது. கவிதையான இந்த அழகிய காட்சியைக் கண்ட பெரியவர்கள் கண்கள் கலங்க, கடம்பன் மனமோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.

 

கடம்பன் சஞ்சயனை இறுக அணைத்துக் கொண்டவன்,

 

“தாங்ஸ்டா…”

 

எனவும் சஞ்சயன் கடம்பனின் வயிற்றில் செல்லமாகக் குத்தியவன்,

 

“வைஷூக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையிறதுக்கு நான்தான் உனக்கு நன்றி சொல்லணும்டா…”

 

என்றான்.

 

இங்கே ஆயுஷ், வைஷாலியை விட்டு நகர மாட்டேன் என்று “அம்மா… அம்மா…” என்று அவள் கூடவே சுற்றிக் கொண்டு திரிந்தான். இதனால் கடம்பன் குடும்பமும் வைஷாலி வீட்டிலேயே தங்குவதாக முடிவு செய்ய ஹோட்டலில் கணக்கு முடித்து அனைவரும் வைஷாலி வீட்டுக்குச் சென்றார்கள்.

 

அன்றிரவு வைஷாலி கதை கூற அவள் மடியில் ஆயுஷ் தூங்கினான். அவன் தூங்கியதும் தனது படுக்கையிலே அவனைப் படுக்க வைத்து விட்டு எழுந்து வந்தாள் வைஷாலி.

 

பெரியவர்கள் அனைவரும் இரவுச் சாப்பாட்டுக்குத் தயாராக இருந்தனர். வைஷாலி பரிமாறி விட்டுத் தானும் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள். அனைவரும் உண்டு கொண்டே அடுத்து நடக்க வேண்டிய விடயங்களைப் பற்றிக் கலந்தாலோசித்தார்கள்.

 

முதலே நிச்சயிக்கப்பட்டது போல் இன்னும் இரண்டு நாட்களில் திருமணத்தை நடத்துவதாக முடிவு எடுத்தார்கள். வைசாலியின் பெற்றோர்கள் திருமணத்துக்கு வேண்டிய ஆயத்தங்களை ஆரம்பித்திருந்தமையால் அடுத்த நாளே யாழ்ப்பாணம் புறப்பட்டுச் செல்வதாக தீர்மானித்தார்கள். வயதானவர்கள் சாப்பிட்டு முடித்ததும் தூங்கச் செல்ல கடம்பனும் வைஷாலியும் சஞ்சயனும் வரவேற்பறையில் பேச அமர்ந்தார்கள்.

 

“வைஷூ…! நீ வேலை விசயம் என்ன செய்யப் போகிறாய்?”

 

சஞ்சயன் வினாவவும்,

 

“அதைத்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்டா… நான் ஒரு மாத நோட்டீஸ் என்றாலும் கொடுக்க வேணும். ஆனால் ஆயுஸ் என்னை விட்டிட்டு இருப்பான் போலத் தெரியவில்லையே. அதுதான் எப்படிச் சமாளிப்பது என்று யோசிக்கிறேன்டா…”

 

“நீ அதைப் பற்றி கவலைப்படாதே… இப்போது இருக்கும் உன்ர மேனேஜர் நல்ல மனுஷன் தானே… நாளைக்கு காலமை பாங்குக்குப் போய் அவரிடம் விசயத்தை எடுத்துச் சொல்லுவோம்… அவர் நிச்சயமாக நீர் ரிசைன் பண்ணுவதற்கு ஒத்துக்கொள்ளுவார்… ஒரு மாத நோட்டீஸ் கொடுப்பதற்குப் பதிலாக பணத்தைக் கட்டி விடலாம். மச்சான்…! நீ என்ன சொல்கிறாய்?”

 

“ஓமடா சஞ்சு… நானும் நீ சொன்னது போல தான் யோசிச்சன். கல்யாணம் முடிஞ்சதும் நாலைஞ்சு நாளில நான் மாலைதீவுக்குப் போய்டுவேன். வைஷுவும் ஆயுஷும்  நாள் பிறகு ஆறுதலாக உரிய ஒழுங்குகளைச் செய்து கொண்டு வரட்டும்… நீ கூட்டிக்கொண்டு வந்து விடு… வைஷூவைக்கு கண்ணாவைத் தனியாகக் கூட்டி கொண்டு வருவது கஷ்டம்…”

 

“சரிடா… நான் கூட்டிட்டு வந்து விடுறன்… உன்ர செலவில மாலைதீவைச் சுத்திப் பார்க்க கிடைச்ச வாய்ப்பை நான் விடுவேனோ…?”

 

“நான் டிக்கெட் போடுறன் என்று எப்ப சொன்னான்? நீயே எல்லாச் செலவையும் பார்த்துக் கொண்டு வந்து விடு…”

 

“அடேய்… கஞ்சப் பிசுநாரிக் கடம்பா… நீ இன்னும் மாறேல்லயா…?”

 

“மனுசி, பிள்ளை என்று நான் இப்ப குடும்பஸ்தன்…இப்ப தானே நான் இன்னும் சிக்கனமாக இருக்க வேணும்.”

 

“அது சரி… நீயாவது திருந்திறதாவது… வைஷூ…! உனக்கு இனி வேலை இவன்ட சம்பளத்துக்கு வேட்டு வைக்கிறதுதான் சரியா…?”

 

சஞ்சயனும் கடம்பனும் அளவளாவ வைஷாலியோ அமைதியாகவே இருந்தாள். அதனைக் கண்ட கடம்பன்,

 

“வைஷூ…! கொஞ்ச நாள் மாலைதீவில வந்து இருந்து பார்… உனக்குப் பிடிச்சு இருந்தா அங்கேயே இருக்கலாம். இல்லையென்றால் நாங்கள் ஊருக்கே திரும்பி வருவம். அல்லது வேறு எங்கேயாவது போவம்… உன்ர விருப்பப்படியே தான். சரியா…?”

 

“சரி அண்ணா… நான் முதல் அங்க வந்து பார்த்துட்டுச் சொல்லுறன். ஆனால் இனி எங்க இருந்தாலும் எனக்கு ஒன்று தான். கண்ணாவோடயே பொழுது சரியா போய்டுமே. அதனாலே எந்த ஊரில இருக்கணும் என்றெல்லாம் ரொம்பக் குழம்பாதையுங்கோ… எங்க இருந்தால்தான் என்ன? இனி கண்ணா இருக்கிற இடம் தான் எனக்கு எல்லாமே…”

 

என்று கூறியவளை வியப்புடனும் சந்தோஷத்துடனும் பார்த்தனர் இருவரும்.

 

“அடியே முயல்குட்டி…! நீ ஆயுஷை இந்தளவு இலகுவாக ஏற்றுக்கொண்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி… ஆனா கடம்பனை ‘அண்ணா அண்ணா’ என்று கூப்பிட்டு இப்படி குடும்ப உறவையே குழப்பி அடிக்கிறியே… இது நியாயமா? என்னம்மா… இப்பிடிப் பண்ணுறீயேம்மா…”

 

“நான் என்ன செய்யுறது? சின்ன வயசுல இருந்தே அவரை அண்ணா என்று கூப்பிட்டு பழகிட்டுது… இப்ப திடீரெண்டு அண்ணா சொல்லாதை என்றால் நான் என்ன செய்யிற…? அது அப்படியே வாயில வருது…”

 

“சரி… சரி… பொரியாதை… ஆனால் இனிமேல் நீ அவனை அண்ணா என்று கூப்பிட கூடாது. நீ கடம்பனை அண்ணா என்று கூப்பிடுவதை ஆயுஷ் பார்த்தால், அது பிள்ளைகுக் குழப்பமாக இருக்கும். உங்கட தனிப்பட்ட உறவு எப்படி இருக்க வேண்டுமோ அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கோ. ஆனால் ஆயுஷுக்கு கடம்பன் அப்பா, நீ அம்மா என்பதை ஒரு நாளும் நீ மறக்கக் கூடாது. அதனால இனிமேல் கடம்பனைக் கூப்பிடேக்க கவனமா இரு… சரியா…?”

 

என்று சஞ்சயன் அறிவுரை மழை பொழியவன், கொஞ்சம் கடுப்பான வைஷாலி,

 

“இஞ்சருங்கோ… இஞ்சருங்கோ…”

 

என்று பாட ஆரம்பிக்கவும் ஆண்கள் இருவரும் பக்கென சிரித்து விட்டனர். இவர்கள் பயந்ததற்கு மாறாய் வைஷாலி இலகுவாய் பழைய கலகலப்புக்குத் திரும்புவதை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சயன்.

 

ஆக வேண்டிய பிற விடயங்கள் பற்றியும் பேசி முடித்து மூவரும் தூங்கச் சென்ற போது மூவர் மனமுமே ஒருவித நிம்மதியில் ஆழ்ந்திருந்தது.

 

இந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் நீடிக்குமா?
Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: