Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 22

 

கனவு – 22

 

சஞ்சயனோடு வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தவள் கதவு தட்டும் சத்தம் கேட்டு சஞ்சயனை யார் என்று போய் பார்க்கச் சொன்னாள். ஆனால் அவனோ,

 

“நீயே போய் பார் வைஷூ…” என்றான்.

 

“ஏன் நான் போய் கதவைத் திறக்க எவனாவது வந்திருந்தால் நீ பிறகு காலம் முழுக்க என்னை அதற்கும் திட்டிக் கொண்டிருக்கவோ…? நீயே போய் கதவைத் திற… நான் பற்றிஸ் பொரிச்சுக் கொண்டிருக்கிறது உன்ர கண்ணுக்குத் தெரியேலையாடா எரும…?”

 

“அதெல்லாம் தெரியுது… நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது உன்ர கண்ணுக்குத் தெரியேல்லையா முயல்குட்டி… நான் நிற்கிறேன் தானே… அம்மா, அப்பா தான் கோயிலால வந்திருப்பினம்… அதனால நீயே போய் பார்… நான் பற்றிசையும் கவனிக்கிறேன்…”

 

என்று கூறவும் அவனுக்கு ஒரு முறைப்பைப் பரிசளித்து விட்டுக் கையைத் துடைத்தவாறே வெளி வாயிலை நோக்கி விரைந்தாள். கதவைத் திறந்தவள் ஒரு வாட்டசாட்டமான ஆண்மகன் புன்னகை முகத்தோடு நிற்பதைப் பார்த்து எதுவும் புரியாது குழம்பி நின்றாள். அவனை வீட்டினுள்ளே அழைக்காமல் கதவைத் திறந்தபடியே போட்டுவிட்டு சமையல் அறையை நோக்கி ஓடினாள்.

 

“சஞ்சு… சஞ்சு…! யாரோ ஒரு தடிமாடு வந்து நிக்குது. எனக்கு யாரென்று தெரியேல்ல… நீயே போய் பார்த்து விசாரிச்சு அனுப்பு…”

 

என்று கூறியவள் எண்ணைச் சட்டியில் கருகிக் கொண்டிருந்த பற்றிசைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டாள். அவள் திட்டப் போகிறாள் என்பதை உணர்ந்த சஞ்சயன் மெதுவாக வெளிவாயிலை நோக்கி யார் வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நழுவினான்.

 

யாராய் இருக்கும் என்று எண்ணியவாறு வைஷாலி சமையல் வேலையைத் தொடர்ந்தாள். வெளியிலே பேச்சுச் சத்தம் ஆரவாரமாகக் கேட்டது. வரவேற்பறையில் வந்து அமரும் அரவம் யாரோ வேண்டப்பட்டவர்கள் தான் வந்திருக்கிறார்கள் என்பதை அவளுக்கு அறிவித்தது. சற்றே சிந்தித்தபோது அந்தப் புதியவனை எங்கோ பார்த்த ஞாபகமாகவும் இருந்தது. அதற்குள் சஞ்சயன் அவளை அழைக்கும் சத்தம் கேட்க அடுப்படி வேலையை முடித்து அடுப்பை அணைத்தவள் கையைக் கழுவித் துடைத்தவாறே வரவேற்பறைக்கு சென்றாள்.

 

“இது யார் என்று தெரியுதா வைஷூ?”

 

சஞ்சயன் வினவவும் மறுபடியும் அந்த புதியவனை நேராகப்பார்த்தவள் புருவத்தைச் சுருக்கினாள்.

 

“தெரிஞ்ச முகமாகத் தான் இருக்கிறது. ஆனால் யாரென்று இன்னும் என்னால கண்டுபிடிக்க முடியேல்ல.. நீயே சொல்லுடா…”

 

“உண்மையா உனக்கு தெரியலையாடி…? என்னட்ட அடி வாங்கின ஒரு ஆள் தான். இப்ப சொல்லு பாப்பம் யார் என்று….”

 

“அடக்கடவுளே…! கடம்பன் அண்ணாதானே… ரியலி சொறி அண்ணா… நீங்க நல்ல உயரமா வளர்ந்து உடம்பும் வச்சு மண்டையில சொட்டை வேற விழுந்து ஆளே மாறி போய்ட்டீங்கள். எனக்கு உண்மையா அடையாளம் தெரியேல்ல அண்ணா… வெரி சொறி…”

 

“அடிப்பாவி…! அண்ணா என்று சொல்லி ஆரம்பத்திலேயே ஆப்படிக்கிறியே… உனக்கு நாங்கள் பார்த்திருக்கிற மாப்பிள்ளை இவர் தான்டி…”

 

இதனைக் கேட்டதும் வைஷாலியின் முகம் சூரியன் மறைந்ததும் இருக்கும் இரவுத் தாமரையாய் சுருங்கிக் கருத்தது. எதுவும் பேசாமல் மறுபடியும் சமையல் அறையில் புகுந்து கொண்டாள். கடம்பனும் சஞ்சயனும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்.

 

வைஷாலிக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதே சற்று நேரம் புரியவில்லை. தனது அனுமதியை மீறி நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அவள் மனதை பெரும் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. சஞ்சயன் மீது சொல்லொணாக் கோபம் வந்தாலும் எதையும் வெளிக் காட்ட முடியாது சமையலறையில் இருந்த கதிரையில் கைகளால் தலையைத் தாங்கியபடி சோர்ந்து போய் அமர்ந்தாள்.

 

இவளைக் காணாது தேடிக் கொண்டு சஞ்சயன் சமையலறைக்கு வந்தான்.

 

“என்ன வைஷூ இது? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல்… கடம்பனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இப்படி இங்க வந்து இருக்கிறாய்… எதுவானாலும் இன்றைக்கு பேசித் தீர்த்துக் கொள்ளு. முதலில் ஹோலுக்கு வந்து சேர்…”

 

எனக் கடிந்தவன், வரவேற்பறைக்குச் சென்று கடம்பனோடு பழைய கதைகளில் ஐக்கியமாகி விட்டான். சிறிது நேரம் சிந்தனை வயப்பட்ட வைஷாலி, இனிமேல் தனது பேச்சுக்கு யாரும் செவிசாய்க்க போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டாள். செய்திருந்த பற்றிசுகளில் ஐந்தாறை எடுத்து ஒரு தட்டில் வைத்து அடுக்கியவள், மூவருக்கும் பால் தேநீர் தயாரித்து எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்குச் சென்றாள். இருவரிடமும் சிற்றுண்டியை நீட்ட அவர்கள் ஆளுக்கொன்றை எடுத்துக்கொண்டு அவள் முகத்தையே ஆவலாய் நோக்கினர்.

 

இவளும் எதனையும் காட்டிக் கொள்ளாது,

 

“எப்படி இருக்கிறீங்கள்? வீட்டில் எல்லோரும் சுகமா?”

 

என்று நலம் விசாரித்தாள். கடம்பனும்,

 

“நாங்கள் சுகமாய் இருக்கிறோம்… நீ எப்படி இருக்கிறாய்?” என்றான்.

 

“நான் ரொம்ப நல்லா இருக்கிறேன். அதுதான் என்னைப் பற்றி உங்களிடம் எல்லாம் சொல்லுறதுக்கு ஒரு ஆள் இருக்கிறார் தானே பிறகென்ன… அவரிடமே என் சுகத்தை விசாரிச்சுக் கொள்ள வேண்டியதுதானே….”

 

கொஞ்சம் கோபமாகவே சஞ்சயனைப் பார்த்து முறைத்தவாறு கூறினாள்.

 

“நீ இன்னும் அதே சுடுதண்ணி தானா வைஷாலி? மாறேல்லயா?”

 

என்று சிரித்த முகத்தோடு கேட்டான் கடம்பன். இவள் அதற்குப் பதிலளிக்காமல்,

 

“அது சரி… நீங்கள் இருவரும் அப்படி அடிபட்டியள்…. எப்படி இந்தளவு தூரம் ஒற்றுமையாகி நெருக்கமானிங்கள்?”

 

இப்போது சஞ்சயன் வாயைத் திறந்தான்.

 

“அது பெரிய கதையடி… ஐயா எனக்கு இரண்டு வயசு சீனியர் தானே கம்பஸில… நான் கம்பஸுக்குப் போன நேரம் ராக்கிங் என்ற பெயரில நான் குடுத்த அடி எல்லாம் டபுள், ரிபிள் மடங்காகத் திருப்பித் தந்துவிட்டான். ஆனால் பாசக்கார பயபுள்ள… வேற ஒருத்தரும் என்னில கைவைக்க விடமாட்டான்… அடிச்சாலும் உதைச்சாலும் தானே தான் செய்வான்…

 

தன்ர நோட்ஸ், புரொஜெக்ட் எல்லாம் என்னைப் பக்கம் பக்கமாக எழுத வைப்பான்… இவன் பண்ணின கொடுமை எல்லாம் ஒன்றா… இரண்டா… அதுக்குத் தண்டனையாகத்தான் இப்போ இவனை உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சு உன்னட்ட மாட்டி விட்டுப் பழி வாங்கப் போகிறேன்டி…”

 

என்று கதையோடு கதையாக கல்யாணப் பேச்சுக்கு வந்து நின்றான். வைஷாலி அதைக் கவனிக்காதது போல் இருக்க கடம்பன் பேச ஆரம்பித்தான்.

 

“ராக்கிங் பீரியட் முடிய ஹொஸ்டல் சாப்பாடு ஒத்துவரவில்லை என்று நாங்கள் இரண்டு பேரும் ஒரே ரூமை வாடகைக்கு எடுத்து இருந்து ஒன்றாக சமைச்சு சாப்பிட்டோம்… அப்போதெல்லாம் எங்கள் இருவருக்கும் பேசக் கிடைத்த ஒரு ஒரே விஷயம் நீதான்… எனக்குக் கம்பஸ் முடிய அங்கேயே வேலையும் பார்த்த படியால் சஞ்சு படித்து முடியும் வரையும் நானும் அங்கேதான் அவனோடு இருந்தேன். உன்னைப் பற்றி நாங்கள் இருவரும் கதைக்காத நாளில்லை…

 

எனக்கும் நீ கல்யாணம் செய்து முடிய பெரிதாக ஊருக்கு வர விருப்பம் இருந்ததில்லை. உன்னை முரளியோடு சேர்த்துக் கண்டால் அதைப் பார்த்துப் பிறகு நாலு நாளைக்கு கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதனாலேயே நானும் பெரிதாக ஊருக்கு வரவில்லை.

 

நடப்பு விவரம் தெரியாமல் இருந்ததே தவிர நாங்கள் இரண்டு பேரும் அந்தக் காலத்துப் பழைய கதைகளைக் கதைச்சுச் சிரிப்பம். அதனாலேயே தான் சஞ்சுக்கும் உனக்கும் இடையே இருந்த இந்த அழகான நட்பை பற்றி என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது வைஷாலி…”

 

கடம்பன் கூறியவற்றைப் பொறுமையாகக் கேட்டவள், மெலிதாய் ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.

 

“அது சரி… இப்போது திடீரென்று என்னைக் கல்யாணம் செய்ய வேண்டிய தேவை ஏன் வந்தது உங்களுக்கு? உங்கட வைஃப்க்கு என்னாச்சு?”

 

“அரேஞ்ச் மேரேஜ் தான் எங்களுக்கு நடந்தது. எனக்கு வேலை மாலைதீவிவைச் சுற்றியிருக்கிற ஒரு சின்னத் தீவில். அங்கே கட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய ஹோட்டல் ரிசார்ட்டுக்கு தோட்டங்கள் அமைப்பதற்கு வடிவமைப்பதும் அதனைப் பார்வையிடுவதும் தான் என்னுடைய வேலை.

 

நான் இருந்த தீவு உண்மையில் மிகவும் சிறிய தீவுதான். மாலைதீவு ஹப்பிடலுக்குப் போவதென்றாலும் ஆறு மணித்தியாலங்கள் படகில் போக வேணும். நான் இருந்த தீவில் பெரிதாக எந்த பொழுதுபோக்கு வசதிகளும் இல்லை. விடுமுறை என்றால் எங்காவது அருகில் இருக்கும் சிறு தீவுகளுக்குப் போய் வரலாம்.

 

ஆரம்பத்தில என்ர முன்னாள் மனைவி சந்தோஷமாகத் தான் அங்கு வாழ வந்தாள். அதற்குப் பிறகு நான் வேலை என்று சென்றுவிட பகல் முழுதும் வீட்டிலேயே பொழுது போகாமல் இருக்கும். அவளுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. அதனால் ஒரு மாதத்திலேயே தான் இலங்கையில் வந்து இருக்கப் போவதாக சொன்னாள். நானும் சம்மதித்து அனுப்பி வைச்சன்.

 

லீவு கிடைக்கும் போது நான் ஊருக்கு வந்து அவளைப் பார்த்திட்டுப் போவன். அவள் ஊரிலிருந்த நேரம் அவளுக்கு வேறு யாரையோ பேஸ்புக் மூலம் பழக்கமாகி அவனைப் பிடிச்சுப் போய்ட்டுது. அதனால் அவள் பிரிய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாள் போல.

 

அவள் தன்ர பிழையை மறைக்க எதையாவது சொல்லி என்னோடு எப்ப பார்த்தாலும் சந்தேகப்பட்டுச் சண்டை பிடிச்சுக் கொண்டிருப்பாள். அதுக்கேற்ற போல என்ர வீட்டில நான் பள்ளிக்கூடம் படிக்கிற காலத்தில உனக்கு எழுதிட்டுத் தராமல் வைச்சிருந்த ஒரு கடிதம் அவளிட்டக் கிடைச்சிட்டுது. அதைக் காட்டியே அவள் தினம் தினம் என்னை வார்த்தைகளால் குத்திக் கிழிப்பாள்.

 

எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போய் நரகமாய் இருந்துச்சு. நானும் என்னால முடிந்த வரை அவளோட அமைதியாகக் கதைச்சுப் பார்த்தன். நாலு நாள் லீவு கிடைச்சாலும் காசைப் பார்க்காமல் ஊருக்கு வருவேன். அப்படி ஒருநாள் நான் அவளுக்கு சொல்லாமல் கொள்ளாமல் சர்ப்ரைசாக வந்த நேரம்தான் அவளுக்கு வேறு ஒராளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கையும் களவுமாக என்னிடம் பிடிபட்டு விட்டதால் அதற்கு மேல் அவளால் எதுவும் சொல்லி மறுக்க முடியாமல் போய்டுது. உடனேயே டைவர்ஸ்க்கு அப்ளை செய்து இப்போது கிடைச்சும் விட்டது.

 

இது தான் என் வாழ்க்கையில் நடந்த கசப்பான கடந்த காலம் வைஷூ… சஞ்சயன் என்னைப் பற்றி உன்னட்ட என்னவெல்லாம் சொன்னானோ எனக்குத் தெரியாது. ஆனால் உன்ர வாழ்க்கையில நடந்த எல்லா விஷயங்களையும் சஞ்சு அவனுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் எனக்கு சொன்னவன்.

 

உனக்கு முரளிதரனோட ஏற்பட்ட மனக்கசப்பால இன்னொரு கல்யாண வாழ்க்கையிலோ இன்னொரு ஆணிடமோ நம்பிக்கை வருவது கஸ்டம் தான் என்பது எனக்கு நன்றாகவே புரியுது. சந்தேகத்தின் கொடுமையை நானும் அனுபவிச்சனான் என்றபடியால் எந்தக் காரணம் கொண்டும் நான் உன்னை எந்த தருணத்திலும் சந்தேகப்பட மாட்டேன் வைஷூ…

 

அத்தோடு உனக்கே தெரியும் சின்ன வயசிலிருந்தே உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று. உண்மையில் இப்போதும் உன்னில் உள்ள விருப்பத்தாலேயே தான் உன்னைக் கல்யாணம் செய்ய கேட்கிறேனே தவிர, உன்னில் இரக்கப்பட்டோ பரிதாபப்பட்டோ உனக்கு ஒரு வாழ்க்கை தர வேண்டும் என்று நான் நினைக்கேல்ல வைஷாலி…

 

தனியாய் தவித்துக் கொண்டிருக்கும் எனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுத் தா என்று தான் உன்னட்ட நான் கேட்கிறேன்… எனக்கு மாலைதீவில் தான் இப்போதும் வேலை. எனது முன்னாள் மனைவிக்கு ஏற்பட்ட தனிமைக் கொடுமை உனக்கும் இப்போது ஏற்படலாம். நானும் வேறு வேலை தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அது கிடைக்கும் வரை மாலைதீவில் தான் வசிக்க வேண்டி வரும்.

 

உன்னோடு கலந்தாலோசித்து விட்டு நான் அடுத்த வேலையை எங்கே பார்ப்பதென்று முடிவு செய்ய வேண்டும்… மாலைதீவு ஒருவிதத்தில் உனக்கு பிடிக்கும் என்று நான் நினைக்கிறன். ஏனென்றால் பொதுவாக நீ ஒரு இயற்கை விரும்பி. அதை விட எங்கட சனத்திடமிருந்து நீ ஒதுங்கி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று சஞ்சு சொன்னவன். அதனால மாலைதீவு உனக்கு ஏற்றதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

 

என்ர ஐடியாஸ்ஸ சொல்லிட்டன். எதுவானாலும் நீயே முடிவெடுத்து எனக்கு சொல்லு வைஷூ… உன் விருப்பத்துக்கு ஏற்ப இலங்கையிலோ இல்லை வேறு நாட்டிலோ இல்லை மாலைதீவிலேயோ சரி உனக்கு எங்க வாழப் பிடிக்குதோ, நாங்க அங்க போயிடலாம். கொஞ்சகாலம் போக உனக்கும் ஏற்ற போல ஒரு வேலை தேடலாம்.

 

“உன்ர விருப்பம் தான் எனக்கு முக்கியம் வைஷூ… சஞ்சயன் உன்னை கட்டாயப்படுத்தித்தான் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கிறான் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நான் உன்னட்ட எனக்கு மனைவியாக வா என்று கேட்கேல்ல வைஷூ… தாய் இல்லாமல் தவிக்கும் என்ர மகனுக்கு ஒரு தாயாக வா என்று தான் கேட்கிறேன்.

 

என்ர எக்ஸ் வைஃப் பிரிந்து செல்லும் போது எனக்குப் பிறந்த குழந்தை தனக்கு வேண்டாம் என்று விட்டு விட்டுப் போய்ட்டாள். என்ர அம்மாவுக்கோ வயசாகிட்டுது. அவனை ஓடித்திரிந்து சமாளிக்க முடியல. அதேநேரம் திருமணம் என்ற பெயரில திரும்பவும் தெரியாத ஒருத்தரை கல்யாணம் செய்து என்ர மகனின் வாழ்க்கையையும் சேர்த்துக் கெடுக்க நான் தயாராக இல்லை. நீ என்பதால்தான் நான் இரண்டாவது திருமணத்தைப் பற்றியே யோசித்தது.

 

இனிமேல் முடிவு உன்னுடையதுதான் வைஷூ… கடைசி மட்டும் உன்னுடைய சம்மதம் இல்லாமல் நான் திருமணம் செய்ய மாட்டேன். உனக்கு இன்னும் இரண்டு நாட்கள் கால அவகாசம் இருக்கு.  நீ ஆறுதலாக யோசிச்சு சொல்லு வைஷூ… நான் உன்ர பதிலுக்காக காத்திருக்கிறேன். நீ பொசிட்டிவான பதில் சொன்னால் எனக்கு மிகுந்த சந்தோசமாக இருக்கும் வைஷூ…”

 

கூறியவன் தனது கைத்தொலைபேசியில் இருந்த ஒரு குழந்தையின் படத்தை வைஷாலியிடம் காட்டினான். எதுவும் பேசாது அந்தப் புகைப்படத்தையே பெரும் யோசனையோடு நீண்ட நேரம் பார்த்திருந்தாள் வைஷாலி.

 

பெண்ணவள் எடுக்கப் போகும் முடிவு தான் என்னவோ?
Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: