Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உள்ளம் குழையுதடி கிளியே – 6

அத்தியாயம் – 6

சென்னை வீட்டில் பொருட்கள் அதிகமில்லை. அருகிலிருந்தவர்களுக்கு உபயோகப்படும் என்று நினைத்தவற்றை அவர்களிடம் தந்தாள். மர சாமான்களையும் பொக்கிஷமாய் பாதுகாக்கும் சில பொருட்களையும் க்ரிஸ்ட்டியின் வீட்டில் அனுமதி பெற்று பத்திரமாக வைத்தாள்.

 

“பத்திரமா பாத்துக்கோடி மூணு வருஷம் கழிச்சு எடுத்துக்குறேன்”

 

கிறிஸ்டியின் தம்பிக்கு சரத்தின் தயவால் வேலை கிடைத்தது. திருமணத்துக்கு முன்பே ஹிமாவின் வங்கி அக்கவுண்ட் நம்பரைப் பெற்று கணிசமான பணத்தை அதில் டெபாஸிட் செய்திருந்தான். அதில் ஒரு தொகையை தந்து க்றிஸ்டியை வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் பயிற்சியில் சேர சொன்னாள்.

 

“ஹிமா இந்தப் பணம்”

 

“நம்ம வேலை பார்க்கும் இடத்தில் சுமாரான வருமானம்தான். மேற்கொண்டு பயிற்சி எடுத்துட்டு நல்ல வேலைக்கு முயற்சி பண்ணு. உன்கிட்ட சொல்றதில் என்னோட சுயநலமும் இருக்கு. நீ படிக்கும் பயிற்சியையே நானும் எடுத்துக்கலாம்னு இருக்கேன். சில வருடங்கள் கழிச்சு, சரத் என்னை விடுவிச்ச பிறகு  மறுபடியும் ஆரம்பிச்ச இடத்திலேயே நிக்க விரும்பல”

 

“உனக்கு அந்த நிலைமை வரணும்னு நான் விரும்பல. மூணு வருஷம் மட்டும்தானான்னு நினைச்சால் சில சமயம் உன் வாழ்க்கையைப் பணயம் வச்சுட்டோமோன்னு உறுத்தலா இருக்குடி. உனக்கு நிரந்தர தீர்வா இருந்தா நல்லாருக்குமில்ல”

 

“அக்செப்ட்  தி ட்ரூத்…. சரத்துடனான  என் வாழ்க்கை தற்காலிக ஏற்பாடுதான்… அவரைப் பொறுத்தவரை நான் ஒரு சப்ஸ்டிட்டியூட் மட்டுமே. அதுவும் நக்ஷத்திரா ப்ரீ ஆகும் வரைக்கும். தவிர  நான் என்னைக்கும் சத்யாவின் மனைவிதான்” என்று உறுதியாக சொல்லிவிட்டு தனது பைகளில் பொருட்களை அடுக்கிய தோழி இந்த முடிவுக்கு வரும் முன் எந்த அளவுக்கு மனதளவில் துன்பப்பட்டிருப்பாள் என்பது மட்டும் கிறிஸ்டிக்கு சொல்லாமலேயே புரிந்தது.

 

“உன் முடிவு என்னவாக இருந்தாலும் உன்னை ஆதரிக்கவும் கூட நிற்கவும் உனக்காக ஒரு தோழமை காத்திருக்கிறது” என்று கூறி ஹிமாவதிக்கு விடை தந்தாள்.

 

ஹிமாவதியும், சரத்தும் துருவை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

 

அவர்கள் சென்றதும் மனம் அலைப்புறுவதைத் தவிர்க்க முடியாமல்  தவித்த கிறிஸ்டி

 

“அம்மா மாதா கோவில் வரைக்கும் போயிட்டு வரேன்” என்று கிளம்பினாள்.

 

கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கியவள் உளமார வேண்டினாள்

“ஹிமாவின் இந்த வாழ்க்கை நிலைக்கணும் . இடைவிடா சகாய மாதாவே உமது பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளும்”  என்று உளமார பிரார்த்தனை செய்தாள்.

 

கோவையில் விமானம் தரை இறங்கியதும் ஜில்லென்ற காற்று வீசி ஹிமாவதியை வரவேற்றது. களைத்த மனதை சற்று ஆறுதல் படுத்துவதைப் போல இருந்தது.

 

“ஹிமா உங்கம்மாவை இங்கிருக்கும் மருத்துவமனையில் சேர்ப்பது என்னோட பொறுப்பு. வீட்டுக்கே அழைச்சுட்டு வந்திருப்பேன். ஆனால் அவங்க இப்ப இருக்குற நிலையில் மருத்துவக் கண்காணிப்பு ரொம்பவும் அவசியம். இங்க வந்ததும் நீ அடிக்கடி ஹாஸ்பிடலுக்கு போய் பார்த்துட்டு வா… “

 

“நன்றி சரத். இதுக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்றதுன்னே தெரியல”

 

“ம்ம்ம்… என் அம்மாகிட்ட ஒரு மாடல் மருமகளா நடந்துக்கோ. அது போதும். அவங்களுக்கு ஏற்கனவே இதய நோய் இருக்கு. அதனால் நம்ம ஒப்பந்த விஷயம் அவங்களுக்குத் தெரியாம பார்த்துக்கோ”

 

சம்மதமாய் தலையசைத்தாள். அதற்குள் சரத் தனது தாய்க்கு என பணத்தைத் தண்ணீராய் இறைத்து வாங்கிய வில்லாவில் நுழைந்தது அவர்களது கார்.

 

பார்க்கவே கண்ணைப் பறிக்கும் நிறத்தில், மிகப்பெரிய வரவேற்பறை, சமையலறை, ஐந்து படுக்கை அறைகள் தவிர பணியாளர்கள் தங்க தனி இடம் என்று அனைத்து வகை நவீன வசதியுடன் இருந்த அந்த வில்லாவை விழி விரியப்  பார்த்தான் துருவ். சற்று தொலைவிலேயே குழந்தைகள் விளையாடும் பார்க் இருக்கவும் அவன் கால்கள் அந்த திசையை நோக்கி சென்றது.

 

“அம்மா… வா வெளையாடலாம்.. “ என்று ஹிமாவின் உடையைப் பிடித்து இழுத்தான்.

 

“வாங்க… வாங்க…” என்றபடி வீட்டினுலிருந்து ஆரத்தியுடன் வந்தார்  ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர். அவர் ஆலம் சுற்றியதும் சரத் சொன்னான்

 

“இவங்க பழனியம்மா… இந்த வீட்டைப் பாத்துக்குறவங்க… “

 

பழனியம்மா “அம்மாட்ட நீங்க வர்ற தகவல் சொல்லிருக்கேன் தம்பி. எப்ப வேணும்னாலும் வருவாங்க” என்றார்.

 

விளையாட வர சொல்லித் தாயைத் தொந்திரவு செய்த  துருவை தூக்கிக் கொண்டார். புதிதாய்த் தெரிந்தவரிடம் வரமாட்டேன் என முரண்டு பிடித்தான் துருவ்.

 

“அவன் ரொம்ப சேட்டை பண்ணுவான்மா” பதறியபடி மகனைப் பிடிக்க சென்றாள் ஹிமா.

 

“சின்ன பிள்ளைங்கன்னா சேட்டை பண்ணனும். சரத் தம்பி செய்யாத சேட்டையா… அவங்கம்மா சமாளிக்க முடியாம ஹாஸ்டல்ல விட்டுருந்தாங்கன்னா பாத்துக்கோங்களேன்.” அவரைப் பேசவிடாமல்

 

“என்னை விடுங்க பாட்டி…. அம்மாட்ட போணும்… அம்மா வா பார்க்ல வெளையாடலாம்” என்று முரண்டு பிடித்தான் சிறுவன்.

 

“முதலில் சாப்பாடு… அப்பறம் விளையாட்டு…. பாட்டி நிலா தோசை, சூரியன் தோசை எல்லாம் ஊத்தித் தரட்டுமா… “ என்று போக்குக் காட்டியவாறு இழுத்து சென்றார்.

 

துருவின் சந்தேகங்களுக்கு பதிலளித்தபடியே இட்டிலி, பொங்கல், வடை என்று டைனிங் டேபிளில் ஒவ்வொன்றாய் கொண்டு வந்து அடுக்கினார்.

 

“அம்மா குட்டி தோசை சிரிக்குது பாருங்க… நானே செஞ்சேன் ” தாயிடம் தனது சந்தோஷத்தைப் பகிர்ந்தபடி டொமேடோ கெச்சப்பால் முகம் வரைந்திருந்த தோசையைக் காட்டினான். இதுவரை இல்லாத அதிசயமாக சமர்த்தாக ஐந்தே நிமிடத்தில் உணவை உண்டுவிட்டான்.

 

“இப்ப விளையாடப் போகலாமா…”

 

“அதான் மிச்சம் வைக்காம சாப்பிட்டுட்டியே….  இனிமே மாட்டேன்னு சொல்வேனா” என்றவாறு அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

 

“நான் துருவை விளையாடக் கூட்டிட்டு போறேன். நீங்க… “ என்றார் பழனியம்மா

 

“நாங்க பரிமாறிக்கிறோம்மா… நீங்க சாப்பிட்டிங்களா…” அக்கறையோடு வினவினாள் ஹிமா. அது பழனியம்மாவின் மனதில் அவள் மேல் நன்மதிப்பைத் தோற்றுவித்தது.

 

“காலைலேயே ஆச்சு அம்மணி… நான் காத்திருக்கக் கூடாதுன்னு தம்பி உத்தரவு போட்டிருக்கு“

 

மகனை அழைத்துக் கொண்டு பார்க்குக்கு கிளம்பும் பழநியம்மாவைப் பார்க்கையில் அவளுக்குத் தனது தாயாரின் நினைவு வந்தது. ஒருவேளை அவருக்கு உடல் நன்றாக இருந்து பழனியைப் போல பேரனுக்கு அருகாமையில் இருந்திருந்தால் துருவுக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் வந்தே இருக்காதோ என்ற எண்ணம் தோன்றியது.

 

 

குழந்தைகள் தினமும் புதுமையை எதிர்பார்க்கிறார்கள். அவர்களை சந்தோஷப் படுத்த நிறைய நேரமும், கற்பனை வளமும் தேவைப் படுகிறது. என்னை மாதிரி அன்றாடங்காய்ச்சிகளுக்கோ தினமும் மூன்று வேளைகளும் வயிற்றை நிரப்புவதே பெரும்பாடாக இருக்கையில் மற்றவற்றுக்கு எங்கே போவது.

 

அவளது சிந்தனையைக் கலைக்கும் வண்ணமாக

 

“பழனியம்மா.. காலைல வந்துட்டு சாயந்தரம் வீட்டுக்குப் போய்டுவாங்க. வேணும்னா ஒரு எட்டு மணி வரைக்கும் கூடவே இருக்க சொல்லு. வருஷ நடுவில் என்பதால் துருவை சிபாரிசு இல்லாம ஸ்கூலில் சேர்க்க முடியாது”

 

“ரொம்பல்லாம் சிரமப் படாதிங்க. பக்கத்தில் ஏதாவது பள்ளியில் சேர்த்து விடுங்க போதும்”

 

“ஏன் ஹிமா”

 

“கொஞ்ச நாளுக்காக நீங்க சிபாரிசு பிடிக்க வேண்டாம். அப்பறம் நான் இங்கிருந்து  போனதும் இதே அளவுக்குத் தரமான கல்வியைத் தர முடியலைன்னா அவனால ஏத்துக்க முடியாது” என்று ஹிமாவதி சொல்லியதும் சரத்தின் முகம் முதல் முறையாக இறுகியது.

 

“துருவ் ஆசைப்பட்ட படிப்பை ஆசைப்பட்ட இடத்தில் படிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்புன்னு உன்கிட்ட வாக்களிக்கிறேன். எனக்கு வாக்கு தவறவும் பிடிக்காது வாக்கு தவறுரவங்களையும் பிடிக்காது” சொல்லும்போது முடிச்சிட்ட அவனது புருவத்தையும், சுருங்கிய நெற்றியையும் கண்டு தான் பேசியதின் தவறு உரைக்க

 

“நான் உங்களை சந்தேகப் படல சரத். துருவை ஏற்கனவே ஸ்பெஷல் எஜிகேஷன் ஸ்கூலில் சேர்க்க சொல்லிருக்காங்க. நீங்க எவ்வளவு பெரிய பள்ளியில் அட்மிஷன் வாங்கினாலும் இவனால் அந்தக் கல்வி முறைக்கு ஈடு கொடுக்க முடியலைன்னா உங்க முயற்சியும் சிபாரிசும் ப்ரோஜனமில்லாது போய்டுமே. தவிர உங்களுக்கும் கெட்ட பெயர்” என்றாள் வருத்தத்துடன்.

 

“சரி அதுக்கு ஒரு வழி செய்வோம்” என்றான் யோசனையோடு.

 

“சரத் அதிகம் குழப்பிக்காம ரெஸ்ட் எடுங்க. இன்னும் ரெண்டு நாளில் நீங்க டெல்லி மீட்டிங்குக்கு  வேற தயாராகிக் கிளம்பணுமே. முதலில் உங்கம்மாவை நானும் பக்கத்தில் இருக்கும்  பள்ளிகளை பத்தி விசாரிக்கிறேன். அடுத்த முறை நீங்க வரும்போது சேர்த்துடலாம்” என அவனுக்கும் தனக்கும் சேர்த்து தைரியம் சொல்லிக் கொண்டாள்  ஹிமா.

 

துருவின் பள்ளி பற்றிய கவலையை தள்ளிப் போட்டாயிற்று. இனி முக்கியமான பிரச்சனை சரத்தின் தாயை சந்திப்பதுதான். அவர் பழனியம்மாவைப் போல பழகுவதற்கு இலகுவான பெண்மணியாய் இருந்தால் தேவலை.

 

ஆனால் ஹிமாவதிக்கு இந்த முறை அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. சிறிது காலமென்றாலும் இந்தப் பெண்மணியுடன் எப்படியடா நாட்களைக் கடத்துவது என்றெண்ணி அவளை மலைக்க வைக்கும் அளவுக்குக் கடினமான பெண்மணியாகவே தோன்றினார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: