Tamil Madhura கட்டுரை பேய்க் கல்யாணம்

பேய்க் கல்யாணம்

சில வருடங்களுக்கு முன்பு ராணி வார இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது. இன்றும் நடைமுறையில் சில இடங்களில் இருக்கிறது என்பது ஆச்சிரியத்திற்குரிய விஷயம்.
**பேய்க் கல்யாணம்**

image

சீனாவின் ஒரு வினோதமான திருமணச் சடங்கு பற்றிய சிறு கட்டுரை.

சீனாவில் 17ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த பழக்கம் இது. அங்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் தலைமகனுக்கே முதலில் திருமணம் என்பது எழுதப்படாத விதி. அதன்பின்னரே மற்றவர்கள் திருமணத்தை நினைத்துப் பார்க்க முடியும். ஆனால் அந்தத் தலைமகன் எதிர்பாராத விதமாகத் திருமணம் ஆகும் முன்பே இறந்துவிட்டால் அவன் ஆத்மா துணையின்றி சாந்தி அடையாமல் அலையும். திருமணம் செய்து வைக்காததால் கோபம் கொண்டு தங்களது குடும்பத்தினரைத் துன்புறுத்தும். அதன் காரணமாக வியாதிகளும், கஷ்டங்களும் ஏற்படும் என்ற ஒரு ஆதாரமில்லாத நம்பிக்கை அவர்கள் மனதில் வேரோடி இருந்தது.

இறந்தவர்களை முன்னோர்களாய் வழிபடும் பழக்கமும் அங்கும் உண்டு. ஆனால் ஒரு பெண் இறந்தாலோ, அவள் பிறந்து வளர்ந்த தாய் வீட்டில் முன்னோர்களில் ஒருவராய் வணங்க இடமில்லை. மாறாக அவளது கணவன் வீட்டில்தான் வழிபட வேண்டும். இந்த இரண்டுக்கும் தீர்வாக திருமணமாகாமல் இறந்த ஆண்மகனுக்கு அவ்வாறே இறந்த பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது என்ற பழக்கம் உருவாயிற்று.இரண்டு பிரேதங்களுக்கும் திருமணம் செய்து ஒரே குழியில் புதைப்பது அவர்கள் வழக்கம். இதன் மூலம் ஆணுக்கும் துணை கிடைக்கும், பெண்ணும் கணவன் வீட்டில் தெய்வமாய் வணங்கப்படுவாள்.

இந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் பரவி, அதன் பின் உருமாறி, இறந்தவர்களுக்கு உயிருள்ளவர்களைத் திருமணம் செய்து வைக்கும் கொடூரமும் அரங்கேறியது. இதற்கு ஈடாக அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு கணிசமான பணம் தரப்படும். ஈமச்சடங்குடன் சேர்த்து திருமணமும் நடக்கும். அதன்பின் அந்தப் பெண் தன் பேய்க்கணவனின் குடும்பத்துடன் வசிப்பாள். ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து அவள் கையில் தருவார்கள். இறந்த அந்த ஆண்மகனைத் தனது கணவனாகவும், அவன் குடும்பத்தைத் தனது குடும்பமாகவும், தத்தெடுக்கப்பட்ட குழந்தையைத் தன் பேய்க்கணவனின் வாரிசாகவும் எண்ணி அந்தப் பெண் தன் வாழ்நாளைக் கழிக்க வேண்டும்.
இந்த பயங்கரமான செயலைத் தடுக்க நினைத்த சீன அரசாங்கம் இத்தகைய திருமணங்களுக்குத் தடை விதித்து சட்டம் போட்டது. இதனால் வேறு வழியின்றி இறந்தவர்களுடன் ஆணாக இருந்தால் பெண் பொம்மையையோ, திருமணமாகாத பெண்ணாக இருந்தால் ஒரு ஆண் பொம்மையையோ சேர்த்து அடக்கம் செய்வதுடன் தங்கள் சாங்கியத்தை நிறுத்திக் கொண்டனர்.

இத்துடன் நின்றிருந்தால் பிரச்சனையே இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் நவீன தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி இந்தப் பழக்கம் மறுபடியும் உயிர் பெற்றிருக்கிறது என்பதை எண்ணும்போது மிக வருத்தமாக இருக்கிறது.
சீனாவின் ஒரு குழந்தை சட்டத்தால் ஆண்குழந்தைகளின் எண்ணிக்கை பெருகி விட்டது. அதனால் திருமணமாகாமல் இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை சமீபகாலத்தில் அதிகமாகி விட்டது. எனவே அவர்களுக்குத் திருமணமாகாது இறந்த மணகளைத் தேடும் ஆட்களும் பெருகி விட்டனர். திருமணமாகாமல் இறந்த ஏழைப் பெண்ணைப் கேள்விப்பட்டால் லட்சக்கணக்கில் பணம் தந்து உடலைப் பெற்றுச் செல்கிறார்களாம். அவ்வாறு பணம் தர முடியாதவர்கள் பெண்களைப் புதைத்தவுடன் திருட்டுத்தனமாகக் கல்லறையை உடைத்து பிணத்தைக் கடத்தி செல்கின்றனராம். அரசாங்கமும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை தந்தாலும், பாதுகாப்பு தந்தாலும் இந்தப் பழக்கம் இன்னும் சில பகுதிகளில் பேய்க்கல்யாணங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. இந்த மூடப் பழக்கத்தினால் பொது மக்கள் பீதியடைந்திருக்கின்றனர். வசதியானவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளை காவல் காக்க ஆட்களை நியமித்துள்ளனர். சிசிடிவி மூலம் கல்லறையை இருவத்திநாலு மணி நேரமும் கண்காணிக்கும் ஆட்களும் உண்டு. இவற்றுக்கெல்லாம் பணமில்லாத வசதி குறைந்தவர்களோ காவல் காக்க வசதியாகத் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே கல்லறைகளைக் கட்டிக் கொள்கின்றனர்.

மூடப் பழக்கவழக்கத்தினால் பெண்களுக்கு இறந்த பின் கூட நிம்மதி தராத இத்தகைய சமுதாயம் மனம் தெளியும் வரை, மனிதர்கள் முன்னேறிவிட்டோம் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை.

— தமிழ் மதுரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

புத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GPபுத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GP

புத்தகப் பரிந்துரை – சத்யா GP   நர்ஸிம் அவர்களின் “மதுரைக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பைத் தொடர்ந்து அடுத்து வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “பைத்தியக் காலம்”. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆ.வி, கல்கி, குமுதம், தமிழ் மின்னிதழ், உயிர்மை போன்ற

அவனும் கால்பந்தும் – சத்யா GPஅவனும் கால்பந்தும் – சத்யா GP

அவனுக்கும் கால்பந்தாட்டத்திற்குமான பந்தம் 1986 ஆம் ஆண்டில் துவங்கியது. அப்போது அவன் பாலகன். வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. ஒரு தனியார் நிறுவனத்தின் குடியிருப்பு வீடுகளில் வசித்து வந்தான். கீழ் தளத்தில் வரிசையாக பதினான்கு வீடுகள். அதற்கு மேல் தளத்தில் அதே

பயணங்கள் முடிவதில்லை போட்டிபயணங்கள் முடிவதில்லை போட்டி

💓”இது நினைவுகளின் திருவிழா!”💓 பொதுவா ஒரு டூரிஸ்ட் கைடோட வேலை என்னன்னு உங்களுக்கே தெரியும். அந்த இடத்தைப் பற்றிய கம்ப்ளீட் டேட்டா பேஸ்-அ நம்ம கிட்ட கொடுக்குறதும் இல்லாம.. கூகுளையே மிஞ்சுற ஒரு நடமாடும் மேப்-ஆ மாறி நம்மளோட ‘ஹாப்பி பேக்கேஜ்’-ஆ