Tamil Madhura உள்ளம் குழையுதடி கிளியே உள்ளம் குழையுதடி கிளியே – 3

உள்ளம் குழையுதடி கிளியே – 3

அத்தியாயம் – 3

ண்ணாசாலையில் நம் அனைவரும் விரும்பும் அந்த ஷாப்பிங் மால். பட்டப்பகலில் கூட கடைகளில் பளீர் மின்விளக்குகள் மின்னின.

 

சூட்ஸ் விற்கும் அந்தக் கடையில் இளைஞர்கள் கூட்டம். பாரின் போகிறார்கள் போலிருக்கிறது. கும்பலாய் வந்திருந்தனர். அதைத்தவிர கல்யாண கோஷ்டி ஒன்றும் கூட.

 

“இருக்கிறதில் காஸ்டலியான கோட் எடுத்துக் காட்டும்மா” என்று மாப்பிள்ளை க்றிஸ்டியை அரற்றிக் கொண்டிருந்தான்.

 

ஐடி கும்பலும் கண்ணில் கண்டதை எல்லாம் ட்ரைல் ரூமில் ட்ரை பண்ணிக் கொண்டிருந்தது.

 

கடையில் அவர்களுடன் ஒருவனாக சரத்சந்தரும் நின்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு ப்ளேசர் ஒன்று வாங்க வேண்டியிருந்தது. அந்தக் கும்பலுக்கு இடையில் தேட விருப்பமில்லாது விற்பனை பெண்ணிடம் நேரடியாக கேட்டு வாங்குவது அவனுக்கு உசிதமாகப் பட்டது. அதனால் தூரத்தில் சீருடையுடன் கண்ணில் பட்ட பெண்ணை நோக்கி நடந்தான்.

 

“என்ன… உன் பிரென்ட் இன்னைக்கும் லேட்டா… “ மேனேஜர் அந்தப் பெண்ணிடம் சீறியது  சரத்தின் காதிலும் கேட்டது.  அதனால் சற்று தள்ளியே நின்று கொண்டான்.

 

“அவ அம்மாவை அட்மிட் பண்ணிருக்கும் ஹாஸ்ப்பிட்டல்ல வர சொன்னாங்க… அங்க லேட் ஆயிருக்கும். இப்ப வந்துருவா சார்”

 

“இன்னைக்கு சம்பளத்தைக் கட்  பண்றேன். அப்பத்தான் அவளுக்கு புத்தி வரும். அம்மாவுக்கு முடியல ஆட்டுக்கு குட்டிக்கு முடியலன்னு தினமும் ஒரு கதை”

 

“வந்துட்டா… சார்” என்று சொன்னதும் வேக வேகமாய் அந்தப் பெண் ஓடி வந்தாள்.

 

“அஞ்சு நிமிஷத்தில் யூனிபார்ம் போட்டுட்டு வந்துடுறேன்”

 

சொன்னதை போலவே உள்ளே அறைக்குள் சென்றவள் ஐந்து நிமிடங்களில் கடையின் சீருடையை அணிந்துக் கொண்டு, முகததை சீர் செய்துகொண்டு பிரெஷ்ஷாக வந்தாள்.

 

ஐடி குழு இருந்த இடத்துக்கு விரைந்தவள்

 

“ஹவ் கேன் ஐ ஹெல்ப்  யூ ஸார்” என்று குயிலாய்க்  கேட்டாள்.

 

“மேடம் ஆன்சைட் ப்ராஜெக்ட் பர்ஸ்ட் டைம் போறோம். போன முறை எங்க ஆபிஸ்ல வந்த டீமுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னு  சொன்னாங்க. இந்த சூட் மீட்டிங்குக்கு பொருத்தமா இருக்குமான்னு சொல்லுங்க” என்று வினவினாள் ஒரு பெண்.

 

“ஸூர்… முதலில் சூட் கலர். நீங்க பெரும்பாலும் மீட்டிங் போறதுக்கு சூட்ஸ் போடுங்க. பிளாக் கலரை எடுத்தவங்க அப்படியே வச்சுடுங்க. நேவி ப்ளூ, டார்க் க்ரே நிற வண்ணங்கள் எல்லா நிகழ்ச்சிக்கும் பொருத்தமா இருக்கும். பேட்டர்ன்ஸ் விட பிளைன் பெட்டர்”

 

“ஆமாண்டா டிசைன் போட்டதை வாங்கினா நீ ஒரு மாசமா ஒரே கோட் போடுறதை கண்டுபிடிச்சுடுவாங்க”

 

“நிஜம்தான். வழக்கமா கோட் மிக்ஸ் அண்ட் மாட்ச் பண்ணி போட்டுக்குவாங்க. டார்க் ட்ரவுசர்ஸ் லைட் கோட் இப்படி கான்ட்ராஸ்ட் கலர்ஸ் நல்லாவே இருக்கும். ஆபிஸ் போனதும் ஸ்டான்ட்ல கழட்டி வச்சுட்டு மீட்டிங் சமயத்தில் மட்டும் போட்டுக்கலாம். அதனால் அடிக்கடி துவைக்கும் தேவை வராது. இருந்தாலும் நீங்க வாஷபில் கோட் வாங்கிட்டா நல்லது.

 

ஒரு சூட்டுக்கு ரெண்டு பேண்ட் வாங்கிட்டா ஒண்ணு டேமேஜ் ஆனாலும் மற்றது கை  கொடுக்கும். பெண்கள் ஸ்கர்ட் சூட் போடலாம். இல்லைன்னா பிராக் மாதிரி போட்டு மேல கோட். இது ரெண்டும் பழக்கமில்லைன்னு நினைக்கிறவங்க பேண்ட் அண்ட் சூட் ட்ரை பண்ணலாம். ப்ளேசர்ஸ் கூட அங்கிருக்கு. அதை போட்டால் செமி கேசுவலா இருக்கும். ஜீன் கூட போட்டுட்டா ஸ்டைலிஷ் லுக் தரும்”

 

ஓரளவு என்ன செய்யலாம் என்று புரிபட்டது அனைவருக்கும்.

 

“அடுத்தது பிட்டிங். கரெக்ட் பிட்டா இல்லைன்னா பார்க்கவே காமெடியா இருக்கும். சோ ஷோல்டர், ஆர்ம், இடுப்பு, பட்டன் போட்டதும் லுக் எல்லாம் செக் பண்ணுங்க. பாண்ட் லூசா இருந்தால் இங்கேயே ஆல்டர் பண்ணித் தர்றோம். அடிஷனல் பட்டன் எக்ஸ்டரா பே பண்ணி வாங்கி வச்சுக்கோங்க. பட்டன் உடைஞ்சாலோ இல்லை தொலைஞ்சாலோ அதே மாதிரி பட்டன் தேடி அலைய வேண்டியதில்லை”

 

“என்னோட கோட் கூட பட்டன் மேட்ச்சா கிடைக்காததால் உபயோகப் படுத்த முடியாம இருக்கு”

 

“இங்க கொண்டு வந்து தாங்க சார். பழைய பட்டன் எல்லாத்தையும் எடுத்துட்டு பொருத்தமான பட்டன்ஸ் வச்சுத் தைச்சுத் தர்றோம். நீங்க ரெண்டு கோட் வாங்கினால் உங்க ஆல்டெரேஷன் சார்ஜ் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி”

 

அவள் பேசியத்தைக் காதில் வாங்கியபடி நடந்த மேனேஜருக்கு மகிழ்ச்சி. ‘இவன் இருநூறு ரூபாவை மிச்சம் பிடிக்க இங்க முப்பதாயிரத்துக்கு கோட் வாங்குவான்’

 

“ஷூஸ் எந்த நிறம் சூட் ஆகும் மேடம். எங்கப்பா முதல் முதலா விமானப் பயணம் செய்றதால கருப்பு புள்ளி கூட இருக்கக் கூடாதுன்னு சொல்றார். கருப்பு ஷூவைக் கூட  எடுத்துட்டு போக விட மாட்டிக்கிறார்”

 

“கஷ்டம்தான்… “

 

“ப்ளூ அண்ட் க்ரே சூட்டுக்கு ப்ரவுன் பார்மல் ஷூ போடலாம். பாண்ட் சரியான நீளத்தில்  போடுங்க.  குட்டையா வாங்கிட்டு சாக்ஸ் வெளிய தெரிஞ்சா மரியாதையில்லை.

 

மேட்சிங் ஷர்ட் அண்ட் டை எடுக்க ஹெல்ப் பண்றேன். கோட் துவைக்கலைன்னாலும் தினமும் ஒரு ஷர்ட் மாத்துங்க. பெர்பியூம் கண்டிப்பா போட்டுக்கோங்க. சில இடங்களில் அவை எல்லாம் பந்தா என்பதைவிட தேவை என்பதே சரி. ஆனால் மைல்டா உபயோகிங்க”

 

“எப்படி மாம் உங்களுக்கு இவ்வளவு விவரம் தெரிஞ்சிருக்கு” என்றாள் ஒருத்தி வியப்புடன்.

 

“அவங்க கொஞ்ச நாள் எம் என் சில  வொர்க் பண்ணிட்டு இருந்தாங்க” என்றாள் கிறிஸ்டி.

 

“ஓ… அப்படியா…” என்றனர்.

 

மேலே கேள்விகளை அவர்கள் கேட்கும் முன் “ஆன்சைட் போறதால நீங்கதான் சமைப்பீங்கன்னு நினைக்கிறேன். பார்மல் போட்டுட்டு சமைக்கிறதை அவாய்ட் பண்ணுங்க. நம்ம ஊர் மசாலா மணம் உடையில் படிஞ்சால் துவைச்சால்தான் போகும். உடையை உடுத்தியிருக்கும் உங்களுக்கு அந்த வாசம் தெரியலைன்னாலும் கூட அருகில் அமர்ந்திருக்கும் ஆட்களுக்கு நல்லாவே தெரியும்.

 

இதெல்லாம் உங்களை மாதிரி ஆட்களின் அனுபவ அறிவுதான். உங்களுக்கு உதவியா இருக்கும்னு சொன்னேன்”

 

“நூறு சதவிகிதம் மேடம்” என்றனர் ஒரே குரலில்.

 

கடகடவென அவர்களுக்கு தேவையானதை சொல்லி. அவரவர் நிறம் மற்றும் பருமனுக்கேற்ற படி உடைகளைத் தேர்ந்தெடுக்க உதவி செய்தாள். அனைவரும் திருப்தியுடன் கிளம்பினர். ஐம்பதாயிரம் பில் கட்டிய வருத்தம் கூட ஒருவர் முகத்திலும் இல்லை.

 

லட்சக்கணக்கில் பண வரவு வந்ததாலோ என்னவோ மேனேஜர் முகத்தில் கடுகடுப்பு மறைந்திருந்தது.

 

“ஹிமா லேட்டா வர்றது இன்னைக்கே கடைசி தடவையா இருக்கட்டும். அடுத்த முறை லேட் ஆனதுன்னா சம்பளத்தை கட் பண்ணிடுவேன்” என்றார் கண்டிப்புடன்.

 

தலையசைத்தபடியே சோர்வுடன் வந்தவளை பிடித்துக் கொண்டாள் கிறிஸ்டி

 

“என்ன சொன்னாங்க?”

 

“ஆபரேஷனை உடனடியா பண்ணணுமாம். பத்து லக்ஷம் செலவாகுமாம். அத்தனை காசுக்கு எங்கடி போறது?”

 

“அம்மா என்ன சொல்றாங்க”

 

“எனக்கு வைத்தியம் பாக்காத வீண் செலவுன்னு திருப்பித் திருப்பி சொல்றாங்க”

 

“உன் மாமா என்ன சொல்றார்”

 

சிறிது நேரம் கழித்து சொன்னாள் “ஆப்ரேஷன் செஞ்சாலும் சில மாசங்கள் மிஞ்சிப் போனால் ஒண்ணு ரெண்டு வருடங்கள்தான் தாங்குவாங்களாம். அதுக்கு ஏன் வீணா செலவு பண்றன்னு மாமா சொல்றார். அதுக்காக அம்மாவை அப்படியே விட முடியுமா” கண்களின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீரை யாரும் அறியாமல் நாசுக்காகத் துடைத்துக் கொண்டாள்.

 

“கவலைப்படாதேடி முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்யலாம்”

 

“இன்னைக்கு சீக்கிரம் கிளம்பணும்”

 

“லேட்டா வந்துட்டு சீக்கிரம் கிளம்பணும்னு  சொன்னா எப்படி?”

 

ஹிமாவின் பரிதாபமான முகத்தைப் பார்த்து “சரிடி கிளம்ணும்னா கிளம்பித்தான் ஆகணும்”

 

“இன்னைக்கு க்ரோம்பேட் போற வேலை இருக்குல்ல. பெல்ட், ஷூ புது ஆர்டர்க்கு சாம்பிள் பாக்காப்  போறேல்ல… என்னையும் உன் கூட கூட்டிட்டு போறியா… வேலையை முடிச்சுட்டு அப்படியே கிளம்பிடுறேன். ஆட்டோல போயிட்டு வந்துடலாம் நான் வேணும்னா காசு தந்துடுறேன்”

 

“நாலு மணிக்குத் தானேடி கிளம்புவேன். உனக்கு லேட் ஆகாது. ஆட்டோக்கு செலவு பண்ற பணத்தை அம்மா வைத்தியத்துக்கு செலவு பண்ணலாம்ல”

 

“நூறு நூறா சேத்து எப்ப பத்து லட்சத்தை எட்டுறது…. “

 

 

“நீ, நான் எல்லாம் குடும்ப சுமைதாங்கிகள். எல்லா பக்கத்திலிருந்தும் மேல விழும் சுமைகளை சத்தம் போடாம வாங்கிக்கணும். என்னைக்கு பாரம் தாங்காம உடையப்  போறோம்னு தெரியல”

 

“உடையும்போது பாத்துக்கலாம்டி. அதுவரைக்கும் சமாளிப்போம். கிளம்பறப்ப மறக்காம கூப்பிடு”

 

தோழியைப் பார்த்தவண்ணம் அவளுக்கு பதில் சொல்லியவாறே நடந்த ஹிமா, அவள் வருவதைக் கண்டும் அழுத்தமாய் வழிவிடாமல் நின்றுக் கொண்டிருந்த ஆண்மகனின் மேல் மோதிக் கொண்டாள்.

 

முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் “சாரி சார்… “ என்றாள்.

 

“மோதியது நீ என்பதால் மன்னிக்கிறேன் ஹிமாவதி” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தவள் அங்கு நின்றிருந்தவனைக் கண்டு

 

“சரத் சந்தர் … ”  என்றாள் விழிகள் விரிய…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 10உள்ளம் குழையுதடி கிளியே – 10

அத்தியாயம் – 10 ஹிமாவதிக்கு கோவையின் வாழ்க்கை பழகிவிட்டது. காலை எழுந்து மகனுடன் விளையாடிக் கொண்டே பள்ளிக்குக் கிளப்புவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்தே உணவு உண்ணுவார்கள். பழனியம்மாவின் கைப்பக்குவத்தில் இட்டிலி தோசை கூட சுவை கூடித் தெரிந்தது. அவரும்

உள்ளம் குழையுதடி கிளியே – 1உள்ளம் குழையுதடி கிளியே – 1

அத்தியாயம் – 1 “அண்ணே  பஸ்ச ஸ்லோ பண்ணுங்க… ஹிமா தெருமுனையில் வர்றா” காலை ஏழு மணிக்கே கூட்டம் அப்பும் வடசென்னை பஸ்ஸில் டிரைவருக்கு மட்டும் கேட்கும்படி மெதுவான குரலில் கெஞ்சினாள் க்றிஸ்டி.   “பீக் அவர்ல  ஸ்டாப் இல்லாத இடத்தில்

உள்ளம் குழையுதடி கிளியே – 23உள்ளம் குழையுதடி கிளியே – 23

அத்தியாயம் – 23 அன்று கோவிலில் நடந்த பூஜையில் என்ன நடந்தது என்று கேட்டால் ஹிமாவுக்கு பதில் சொல்லத் தெரியாது. நடந்தது எதுவும் அவள் மனதில் பதியவில்லை. சரத்தின் கையால் தாலி கட்டிக் கொண்ட கணத்திலேயே அவளது மனம் உறைந்திருந்தது. ‘நானா!