ஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 07

அத்தியாயம்-7

பாடிகார்ட் ஆ..?? அதற்கென்ன அவசியம்..”

என்றவளை தமிழ் ஓர் பார்வை பார்க்க,

“இல்லங்க..நான் பார்த்த வரை எந்த வம்பு தும்பும் இல்லாமல் அமைதியா ரொம்ப அழகா அவங்க வாழ்க்கைமுறை இருக்கு..அவங்களுக்கு என்ன ஆபத்துனு..”

என்று அவசரமாய் அவள் சமாளித்தாள்.
“ஐயா எப்பவும் எளிமையா தான் இருப்பாரு…அதுக்குனு சாதாரண ஆளுனு நினைச்சிடாதீங்க..இந்த ஊருல நடக்குற எந்த நல்ல விசயமும் அவர் பங்கு இல்லாம இருக்காது தெரியுமா…இன்னவங்க..இன்ன பிரிவு எதுவும் பார்க்க மாட்டாரு..அவருக்கு சரினு பட்டுடா எல்லாம் செய்ய தயங்குற விசயத்தை கூட அசால்ட்டாக செஞ்சிட்டு போயிட்டே இருப்பாரு..
எப்படி உதவுறதுக்கு முன்ன நிப்பாரோ..அதே மாதிரி தப்புன்னு பட்டுட்டால் யோசிக்கவே மாட்டாரு..சட்டைய புடிச்சி லெப்ட் ரைட் தான்..அப்புடி அவருட்ட வாங்குன சில கோழைங்க தான் வன்மத்தை மனசுல வச்சிட்டு முகத்துக்கு நேரா எதிர்க்க தைரியம் இல்லாம முதுகுல குத்த சான்ஸ் கிடைக்க காத்துட்டு இருக்கானுவோ..ஆனால் அவனுங்களுக்கு ஒன்னு புரியலை..பணத்தால வாங்க முடியாத ஒரு பலம் எங்க ஐயாட்ட இருக்கு…”
“அதான் நம்பிக்கை”

என்றவன் குரலில் பெருமை நிறைந்திருக்க மேலும் பேசலானான்.

“எங்க ஐயா சுத்தி உள்ள எல்லாருமே ரொம்ப விசுவாசமானவங்க..எவ்வளவு கோடி கொடுத்தாலும் சரி ஒருத்தனை கூட விலைக்கு வாங்க முடியாது…நாங்க இருக்குறவரை எங்க ஐயா நிழல கூட தொடமுடியாது..”

என்று அவன் சொல்ல அவள் முகத்தில் கலக்கம் பிறந்தது.

‘அதுக்குதான்..என்னை இங்க அனுப்பிருக்கானுங்களா..கேட்கும் போதே உள்ள தடதடங்குதே..நான் வந்த நோக்கம் மட்டும் தெரிஞ்சுது இவனே என்னை சாவடிச்சிடுவான்…அய்யோ ஆண்டவா…”

என்று கடவுளை அழைத்தவளுக்கு தான் வந்து சிக்கிய தினம் நினைவிற்கு வந்தது.

அன்று அனுஷியாவின் அலைபேசியை பெற்றுக் கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துவிட்டு ஆர்வமாய் காத்திருக்க மறுமுனையில் அழைப்பும் ஏற்கப்பட்டதும்,

“ஹலோ..அப்பா..நான் யவ்வனா ப்பா..”

“அம்மா..ராஜாத்தி..”

என்றவர் குரல் நடுங்க,

“ப்பா.. நான் பத்திரமா இருக்கேன் பயப்படாதீங்க..”

என்று தந்தையின் படபடப்பை போக்க அவள் மொழிய அவரோ,

“எங்கம்மா..இருக்க..என்னாச்சு…நேத்திலேந்து உன்னை காணாம தவிச்சி போயிட்டோம்..என் கண்ணு..”

என்றார் உடைந்த குரலில்..

“ப்ளீஸ்ப்பா..நீங்க நிதானமாகுங்க…ஒரு பிரச்சனை தான்..ஆனால் இப்போ நான் பத்திரமா இருக்கேன்..”

என்றவள் நடந்ததை சுருக்க கூறி,

“அதனால இப்போ என்னால வீட்டுக்கு வரமுடியாது ப்பா..அனு என்னை அவங்க கூட கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காங்க…அவங்க ரொம்ப நல்ல மாதிரி ப்பா…என்ன நினைச்சு பயப்படாதீங்க…அம்மா..”

என்று அவள் ஏதோ மேலும் சொல்ல முனையும் போது மறுமுனையில் அலைபேசி பறிக்கப்பட அதை தொடர்ந்து,

“உன்னை அனு எங்க கூட்டிட்டு போறேன்னு சொல்லுச்சு…”

என்று அவசரமாய் ஒரு குரல் கேட்க தூக்கிவாரி போட்டது..

“ப்பா…ப்பா….”

“ஏய்..உங்கப்பன் இருக்கட்டும்…உன்னை எங்க கூட்டிட்டு போறேன்னு அனு சொன்னா அதை சொல்லு…”

என்று அதிகாரமாய் கேட்ட குரலில் அவள் மேனி சிலிர்க்க,

“அவங்க..அவங்க..ஹஸ்பென்ட் ஊருக்கு..”

என்றாள் திக்கி திணறி..

மறுமுனையில் ஒரு நீண்ட அமைதி நிலவ அவர்கள் தன்னை தேடி தான் தன் வீட்டிற்கு சென்று இருக்கார்கள் என்பதை அறிந்து யவ்வனா,

“சர்..சத்தியமா அந்த பணம் எங்கேனு எனக்கு தெரியாது சர்..எங்கள விட்ருங்க சர்.. என்னுட்ட பணமெல்லாம் இல்ல சர்…நம்புங்கள் சர்..”
என்று அழுகையோடு கெஞ்சினாள்.

“பணம் கிடக்குது விடு…அதைவிட நிறைய பணம் நான் உனக்கு தரேன்..பதிலுக்கு நீ ஒன்னு செய்யனுமே..”

என்று அவன் நிறுத்த அவள் அழுகை ஓய்ந்து குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

“என்ன புரியலயா..அந்த பொண்ணு அனுஷியா..அதோட சேர்ந்து நீ ஊருக்கு போற..அங்கே முடிக்க வேண்டிய முக்கிய கணக்கு ஒன்னு இருக்கு..அதுக்கு ஹெல்ப் பண்ணினால் போதும்..”

“நீங்க சொல்றது எதுவும் சரியா படலங்க..என்னால அதெல்லாம் பண்ண முடியாது…அனு நல்லவங்க..அவங்களுக்கு என்னால எந்த ஆபத்தும் வரவிட மாட்டேன்…என் சம்பந்தப்பட்ட விசயம்..என்னோட போகட்டும்..நான் இப்வே அவங்களுட்ட சொல்லிட்டு கிளம்புறேன்.”

“இங்க பாரு..உன்னுட்ட செய்யுறீயானு கேட்கல..செய்யனுனு சொல்றேன்..இது எவ்வளவு பெரிய வாய்ப்பு தெரியுமா..அதை நழுவ விட நான் என்ன முட்டாளா…நான் சொல்றதை நீ செஞ்சிதான் ஆகனும்…உன் மொத்த குடும்பமும் இப்ப என் கஸ்டடில..நியாபகம் வச்சுக்கோ..”

என்று அவன் கூறுவதை கேட்டு ஆத்திரம் பொங்க,

“என்ன மிரட்டுறீங்களா..என்னால என் குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது எதுவா இருந்தாலும் என்னோட போகட்டுமுனு தான் நான் விலகி வந்தேன்…தேவையில்லாம என்னை சீண்டாதீங்க…எனக்கு நீங்க யார் யார்னு அடையாளம் தெரியும்….நேரா போலிஸ்ட்ட போனேனா… எல்லாரும் கம்பி எண்ண வேண்டியது தான்..”

என்று உறுமினாள்.எதற்கும் துணிந்தவள் தான் ஆனால் அவளது பலம் பலவீனம் இரண்டுமே அவள் குடும்பம் தான்.

அவள் பேசி முடித்த நொடி பளாரென்று அறைந்த சத்ததை தொடர்ந்து தன் தந்தை அலறலும் கேட்க,

“அப்பா..!!!!”

என்று துடித்துப்போனாள்.

“ஷ்ஷ்…!!!சத்தம் போட்ட இன்னும் நாலு போடுவேன்…”

என்றதும் பட்டென்று வாயை மூடிவிட்டவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“என்ன சொன்ன போலீஸ்ட்ட போவியா..போ.. ஆனால் அதுக்குள்ள இங்க ஒரு உயிர் கூட மிஞ்சியிருக்காது.. அதிலும் உன் தங்கச்சி வேற சின்ன பொண்ணா இருந்தாலும் நல்லா தளதளன்னு இருக்கா…என்ன வேணாலும் நடக்கலாம்..அப்படியே அதுக்கும் சேர்த்து கம்ப்ளைன்ட் கொடு..”

என்று அவன் இரக்கமின்றி பேச அவளுக்கோ ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட,

“நோ!!!!!!!!!!அவங்களை எதுவும் செஞ்சிடாதீங்க..நான்..நான்..நீங்க சொல்றதை செய்றேன்..எங்க வீட்டை விட்டு முதல்ல போங்க..”
என்றாள்.

“போக தான் போறோம்..நீ ஒத்துக்கிட்டதுக்கப்புறம்..எங்களுக்கு இங்க என்ன வேலை..ஆனால் என் கண்பார்வையில் தான் இருப்பாங்க..மறந்திடாத.. எங்க கண்ணுல மண்ணை தூவிட்டு எதாவது செய்ய நினைச்ச இங்க மட்டும் இல்ல உன் அக்காளுங்க வீட்டுலையும் இதே நிலைமை தான்…”

“இல்ல..இல்ல.. அதெல்லாம் எதுவும் பண்ண மாட்டேன்..நான் என்ன செய்யனும்..”

அனுஷியாவின் வெள்ளந்தியான முகம் கண்முன் தோன்றினாலும் மனதை இரும்பாக்கி கொண்டு கேட்டாள்.

“இது நல்ல பிள்ளைக்கு அழகு..”

என்றவன்
” நடராஜன்..அனுவோட மாமனார் அவர் தான் நம்ம டார்கேட்..நீ என்ன செய்வீயோ தெரியாது..அந்த பேமிலியோட நல்லா மிங்கிள் ஆகி நடராஜனை முழு நேரம் கண்காணிக்கிற..அந்தாளு எங்க போறாரு…என்னென்ன செய்றாருனு எல்லா டீடெயில்ஸும் எனக்கு வந்தாகனும்.. அப்புறம் நான் என்ன செய்றதுனு சொல்றேன்..இப்போ ஃபோன் வச்சதும் வாசல்ல போய் பாரு..ஒரு செல்போன் கிடக்கும்..அதிலேந்து தான் இனி நான் கால் பண்ணுவேன்..”

என்று அவன் கூற எரிச்சலாய் வந்தாலும் அதனை குரலில் காட்டாது சரி என்று ஒப்புக்கொண்டாள்.

“சரி..இப்போவாவது என் அப்பாட்டா போனை கொடுங்க..”

என்று சொல்ல அலைபேசி கை மாறியது.

“யம்மா..என்னடா இதெல்லாம்.. எங்கள நினைச்சி நீ எதிலும் மாட்டிக்காத ராஜாத்தி..வீட்டுக்கு வந்திடுடா..என்னானாலும் பார்த்துக்கலாம்… உன்னை பிரச்சனையில் விட்டு நாங்க எப்படிடா நிம்மதியா இருப்போம்..”

“ப்பா.. பயப்படாதீங்க..என்னை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது..நான் செய்ய போறது தப்பு தான்..ஆனால் உங்களைவிட எனக்கு நியாயம்,தர்மம் எதுவும் தெரியலை ப்பா.. சீக்கிரமே வந்திடுவேன்…எல்லாருக்கும் ஆறுதலா நீங்க தான் இருக்கனும்…”

என்று பேசிவிட்டு கண்ணீரோடு நிமிர்ந்தவள் பார்வையில் சுவரில் மாட்டிருந்த புகைப்படம் விழ உறைந்து நின்றாள்.

அதில் அனுஷியாவின் தோளில் கைப்போட்டு நின்றவன் தான் அன்று பணப்பையில் இருந்த புகைப்படத்தில் இருந்தவன்.

தற்போது ஓரளவுக்கு அவளுக்கு விசயம் புரிய,

‘தப்பிக்கிறேன்.. பேர்வழி என்று நாமே வந்து மாட்டிக்கொண்டோமே..’

என்று அதிர்ச்சியில் இருந்தவளை அனுஷியா வந்து அழைக்கவும் தான் நினைவுலகிற்கு வந்தாள்.
*
*
*
அதையெல்லாம் யோசித்தபடி தமிழோடு அமைதியாய் நடந்து வந்தவளுக்கு,

‘பர்ஸ்ட் அனு ஹஸ்பென்டை தூக்கனும்னு பேசிக்கிட்டாங்கே.. அப்புறம் நடராஜன் ஐயாவை டார்க்கெட் அப்படினு சொல்லாய்ங்கே..அப்படி என்ன தான் அவனுங்க நோக்கம்..விநாயகம்,பரமன் இதோ இப்ப ஃபோனில் பேசும் அந்த நரசிமன் எல்லாரும் வெறும் அம்புதானு நல்லா புரியுது..இவங்களை எல்லாம் எய்துற அந்த ஆளு யாராக இருக்கும்..இவங்க பேமிலியோட என்ன விரோதமா இருக்கும்..அந்த தடிமாடுங்களாம்..தலைவரு…தலைவருனு சொன்னாய்களே தவிர…அவர் பேரை சொல்லவே இல்ல…இல்லேனா கூட இங்க யாருட்டையாவது போட்டு வாங்களாம்..யாரா இருக்கும்..”

என்று பல கேள்விகள் மண்டையை கொடைய அதனை குறுக்கிட்டான் தமிழ்.

“நான் வந்து உங்களை வீட்டில் விடவா..”

பைக் அருகில் வந்ததும் தமிழ் கேட்க,

“இல்லங்க.. வேண்டாம்..நான் போயிடுவேன்.. தேங்க்யூ…”

என்றவள் விலகி நடக்க,

“ஹலோ..ஒரு நிமிஷம்..”

என்று அவளை நிறுத்தியவன்,

“உங்க பேர சொல்லவே இல்லை..”

என்று கேட்க லேசாய் புன்னகைத்தவள்,

“யவ்வனா..”

என்று கூற உதட்டை மடக்கி அழகாய் தலையசைத்தவன்,

“சரி.. பாப்போம்…”

என்று கூறிவிட்டு அவன் பைக்கில் ஏறி சென்றுவிட,

‘பாப்போம்னா..??எப்போ..’

என்று கேட்க விழைந்த நாவை கட்டுபடுத்தி போகும் அவனையே பார்த்தபடி நின்றவள் பின் பெருமூச்சோடு,

‘இந்த இரணகளத்திலும் உனக்கு
கிளுகிளுப்பு கேட்குது..நடக்காத விசயத்தெல்லாம் கற்பனை கூட செஞ்சி பார்த்திடாத…’

என்று தன்னையே திட்டிக் கொண்டு திரும்பி நடந்தாள்.

வீட்டை அடைந்ததும் முதலில் எதிர்ப்பட்டது அனுஷியா தான்.

“ஏன் இவ்வளவு நேரம் யவ்வா…என்ன..ஏதுனு கேட்க உன்னுட்ட போன் கூட இல்ல..நான் பயந்துட்டேன் தெரியுமா..”

என்றவள்,

“சரி..நீ இன்னும் சாப்பிடலைல..வா..”

என்று அழைத்து செல்ல காரணமே இன்றி இப்பெண் செலுத்தும் அன்புக்கு தான் செய்ய போகும் துரோகத்தை நினைத்து குற்றவுணர்வு பெருக,

“இல்ல.. மேடம்..பசிக்கல…நான் அப்புறம் போன்ற
சாப்பிடுறேனே…”

என்றாள்.

“மேடம் சொல்லாதே..அனுனே கூப்பிடுனா கேட்குறீயா…ஏன் பசிக்கல..கெஞ்சமாவது சாப்பிடலாம் வா..”

என்று அவள் அழைக்க அதற்குள் இவளை கண்டுவிட்டு வேகமாய் அருகில் வந்த வித்யா,

“எங்க போன யவ்வா..உன்னை தான் தேடிட்டு இருந்தேன்…நீ ஒரு ரெஸிபி சொன்னேல அதை ட்ரை பண்ணிருக்கேன்..வா..வந்து எப்படி இருக்கு..சொல்லு..”

என்று அவள் கைப்பிடித்து இழுத்து சென்றாள்.நடராஜனின் மூத்தமகன் பிரகாஷின் மனைவி தான் வித்யா..சிறுபெண் போல் துள்ளி திரியும் அவளுக்கு இரண்டு குழந்தைகள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

போகும் அவர்களை கண்டு சிரிப்புதான் வந்தது அனுவிற்கு..

முதல் முறை இங்கே யவ்வனாவோடு வந்த போது இவளை என்ன சொல்வார்களோ என்ற பயம் அவளுள் இருக்க யவ்வனாவோ தன் பேச்சு ஜாலத்திலே அனைவருக்கும் பிடித்தமான பெண்ணாய் மாறிவிட அவளை பற்றி பெரியதாய் யாரும் சந்தேகம் கொள்ளவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: