Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 12

“தேவகி, சொன்னால் நீ ரொம்ப புத்திசாலி சரியென்றுபட்டத்தை  மறைக்காமல்  பேசுகின்றாய் என்று.. அது எந்தளவிற்கு உண்மை என்று இப்போது எனக்கு புரிகின்றது,   உன் எண்ணம் சரியே,  என்றுமே, எந்தநிலையிலும் நான் ஒரு ராணுவவீரன் என்று சொல்லிக்கொள்வதில்  பெருமைதான் கொள்வேன், ஆனால் கொஞ்சநாட்களாக  ஒரு பெரும் கவலை.. என் கர்வத்தையும் பெருமையையும் அசைதுப்பார்கின்றாது..  என் மனதின்  ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று  என் மகள் அவள்  கனவுகளை கலைத்து கொண்டாளோ! என்று கலக்கம் என்னை வாட்டிவதைக்கின்றது,  நேரத்திற்கு உணவு இல்லை நிம்மதியான உறக்கம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றாள்… வீட்டில் இருக்கும் நேரமும்  குறைவு தான்..  ஒரு ராணுவவீரனாய் என் மகளை எண்ணி கர்வம் கொள்கின்றேன்,  ஆனால் ஒரு தந்தையாய்   இனி இவள் வாழ்க்கை எப்படி அமையும்  என்று கவலை கொள்கின்றேன்,  பூமதி  வாழ்க்கைத் துணையாய் வரப்போகிறவன்  அவள் விரும்பிச் செய்யும் வேலையை எவ்வாறு ஏற்பான்.. பொதுவாய் ஒரு ஆணுக்கு திருமண கனவு என்றால் என்னவாக இருக்கும்.. ஆபீஸ் சென்று வேலை பார்த்து கலைத்து வருபவன்… கதவைத் திறந்ததும் வீட்டில் மனைவி இருக்கவேண்டும் என்று எண்ணுவான்.. தன் தேவைகளை  தீர்த்துக்கொள்ள.. ஒரு  தாதியாகவும், தாசியாகவும் மட்டுமே  மனைவி இருக்கவேண்டுமென்று எதிர்பாப்பார்கள்..  என் மகள் நிச்சயம்  அது போல இருக்கமாட்டாளே… “ என்று மகேந்திரன் வருத்தத்துடன் கூறிட…

“எல்லா ஆண்களும் ஒரேமாதிரி குணம்  கொண்டவர்கள் இல்லை அங்கிள், மனைவி என்பவள் கணவனுக்கு அடிமை என்று எண்ணம் கொள்ளும் சில ஆண்களின் மத்தியில்… மனைவியை தன் சரிபாதியாய் மதிக்கும் கணவன்மார்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்… நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும்!” என்று ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினான் மதுரன்.

மதுரன் பேசி முடிக்கவும்..   மகேந்திரன்,  தேவகி  இருவரும் பார்வை பரிமாறிக்கொள்ள… அதை கண்டும் காணாமல்  தனக்கு வந்த மொபைல் அழைப்பை ஏற்று.. அவ்விடம் விட்டு விலகிச் சென்றான் மதுரன்.

“இங்கு என்ன நடக்கின்றது அப்பா…   சமந்தமேயில்லாமல் என்னென்னவோ  பேசிக் கொண்டிருக்கிறீர்கள்… கொஞ்சநாட்களாக பூமதி திருமணம் வேண்டாம் என்று பிரச்சனை செய்வது உங்கள் மனதை இந்தளவிற்கு  பாதித்திருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை அப்பா…  விரக்தியில் உங்களுக்கு பிடித்தமான ராணுவ வேலையைக்கூட குறை கூறத்தொடங்கிவிட்டீர்களே” என்று கவலையுடன் வினவி..  தந்தை அருகில் சென்று  அமர்ந்தான் பிரபு.

“என்னதான் ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்து எதிரிகளை தோற்கடித்து பல பதக்கங்களை வாங்கியிருந்தாலும்..  ஒரு தந்தையாய் என் மகளின் தேவையை நிறைவேற்றாமல் தோற்றுப் போவேனோ! என்ற பயம் தான் எல்லாவற்றிக்கும் காரணம்..  நான் சொல்லாமலேயே என் விருப்பத்தை நிறைவேற்றிய என் மகளின் வாழ்வு தனிமையிலேயே கழிந்து விடுமோ! என்ற கவலை என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கின்றது.. போலீஸ் வேலையில் சேர்ந்ததிலிருந்து பலதரப்பட்ட ஆண்களின் உண்மை முகங்களை கண்டு ஆண்கள் இனத்தையே சுத்தமாய் வெறுத்து விட்டாள்… அதுதான் அவள் திருமணம் வேண்டாம் என்பதற்கான காரணம் என்று அறிந்து கொண்டதிலிருந்து விபரீதமான ஆசைக்கு என் மகளின் வாழ்வை பலியாக்கிவிட்டேனே என்று நாளும் வேதனையில் துடித்துக்கொண்டிருக்கின்றேன்”  என்று இதுவரை மனைவி தவிர மற்றவர்களிடம் பகிர்ந்திடாத  தன்  கவலையின் காரணத்தை விளக்கினார், மகேந்திரன்.

“உங்கள் வருத்தத்திற்கு நானும் ஒரு காரணம் தானே அப்பா..  பூமதிக்கு பதில் நான் ராணுவத்தில் சேர்ந்திருந்தால் உங்களுக்கு இந்த கவலையே  இருந்திருக்காது இல்லையா?..”  என்றவன் ஒருநொடி  தயங்கி மேலும் தொடர்ந்தான்..   “உண்மையை சொல்வதென்றால் எனக்கு ராணுவத்தில் சேர்ந்திட  ஈடுபாடு இல்லாமல் போனதற்கு நீங்கள் தான் காரணம்… தந்தையின் தேவை பிள்ளைக்கு எப்போதெல்லாம் தேவைப்படுமோ!..  அப்போதெல்லாம் நீங்கள் என்னுடன் இருந்ததே இல்லை.. எத்தனை நாள் உங்கள் அருகாமை வேண்டும், அரவணைப்பு வேண்டுமென்று  என்று ஏங்கித்தவித்திருக்கின்றேன் தெரியுமா? நீங்கள் மதுவிடம் சொன்னது சரிதான்.. எந்த ஒரு தந்தையும் தான் அனுபவித்த வேதனையை தன் பிள்ளை அனுபவிக்கக்கூடாது என்று நினைப்பான்..  நீங்கள் இல்லாமல் நான் தவித்தது போல் என் பிள்ளை தவிக்ககூடாது என்றுதான் ராணுவத்திற்கு செல்லக்கூடாது என்று தீர்மானமாய் முடிவெடுத்தேன்… நான் சுயநலமாய் எடுத்த முடிவு,  என் தங்கை வாழ்க்கையை பாதித்திருக்கின்றது என்றால் அதை சரி செய்வதும் என் கடமை தான்..  ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து…  பூமதியிடம்  நானே   பேசி  திருமணத்திற்கு  சம்மதிக்க வைக்கிறேன்” என்று பொறுப்பினை ஏற்க முன் வந்தான்  பிரபு.

“உனக்கு எதற்கு பிரபு வீண்சிரமம்.. மாப்பிள்ளை நாங்களே பார்த்துவிட்டோம் நீ  மதியிடம் மட்டும்  பேசி திருமணதிற்கு  அவளை  சம்மதிக்க வைத்தால் போதும்” என்றார் மகேந்திரன்.

“என்ன மாப்பிள்ளை பார்த்துவிட்டீர்களா? என்னிடம் சொல்லவே இல்லை…  நம் மதுவிற்கு வாழ்க்கைபட்டு அவஸ்தை அனுபவிக்கபோகும் அதிர்ஷ்டசாலி யார் என்று நான் தெரிந்து கொள்ளவேண்டாமா?” என்று ஆர்வமாய் பிரபு வினவிட.

“ இப்போது தான்  கொஞ்ச நேரத்துக்கு முன்  முடிவெடுத்தேன்“ என்று மகேந்திரன் புதிர்போட.. புரியாமல் விழித்த மகனை பார்த்து..  “இப்போதுதான்  என்னிடம் பேசி செல்கின்றார்” என்று புதிருக்கான விடையையும் போட்டுடைத்தார்.

“நன்றாக முடிவு எடுத்தீர்கள்… நீங்கள் சொன்னால் போதுமா? மதுரன் தான் மாப்பிள்ளை என்று..  நீங்கள் எடுத்த முடிவிற்கு முதலில் உங்கள் மகள் சம்மதிக்க வேண்டும் அதை விட பெரிய வேலை உங்கள் மாப்பிள்ளையை சம்மதிக்க வைப்பது..” என்று  பிரபு அலுத்துக்கொள்ள..

“மதுரன் பூமதிக்கு பொருத்தமாய் இருப்பான் என்று எங்களுக்கு தோன்றியது,  குணமும் நல்லவிதமாய்  இருக்கின்றது..  உனக்கு இதில் விருப்பமில்லையா?“ என்று கவலையுடன் வினவினார் தேவகி.

“மதுரனை போய் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா! காலேஜ் படிக்கும்போது நான் அவனை ஒட்டிகேகொண்டேதான் அலைவேன்… யார்  கவலையில் இருந்தாலும் பேசியே சரிகட்டி விடுவான்.. அவன் என்னை  மச்சான் என்று கூப்பிடும் போதெல்லாம்..  பேசாமல் இவனை நம் மதி தலையில் கட்டிவைத்து நிரந்தரமாய்  நம்முடன் வைத்துக் கொள்ளலாம் என்று பலமுறை யோசித்து இருக்கின்றேன்.. ஆனால் இதையெல்லாம் நாம் மட்டும் பேசிமுடிவெடுத்தால் போதாதே அம்மா… நமக்கு பிடித்து இருக்கின்றது என்பதற்காக.. வந்த ஒரே நாளில் அவன் தான் மாப்பிள்ளை என்று நாம்  முடிவெடுத்தால் அது எப்படி அவனால்  ஏற்க முடியும்..   நாம் இப்படி பேசிக்கொண்டிருப்பது  மட்டும் அவன் காதில் விழுந்தால் என்னை   உண்டுஇல்லை என்று ஒருவழியாக்கி விடுவான்… செமினாருக்கு வந்தவனை கட்டாயப்படுத்தி வீட்டில் தங்க வைத்ததுமில்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக மாற்றிக்கொள்ள பார்க்கின்றீர்களா? என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கத்தொடங்கிவிடுவான்.. உங்களுக்கு மதுரனை  பற்றி இன்னும் முழுதாக தெரியவில்லை..  ஆள் பார்க்கத்தான் அமைதியாய் தெரிவான்..வாயல் பேசும் வரை நல்லவனாகதான் தெரிவான்..   அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இறங்கும் அனுபவபட்டவன் சொல்றேன் அவனை சம்மதிக்கவைப்பது ரொம்ப கஷ்டமான காரியம்” என்று நீண்ட சொற்பொழிவாற்றினான் பிரபு.

“மாப்பிள்ளையை சம்மதிக்கவைக்கும் கவலை உனக்கு வேண்டாம்..  மதுரன் அப்போதே அவர்  சம்மதத்தை தெரிவித்துவிட்டார்… நீ உன் தங்கையை சம்மதிக்க வைக்கும் வேலையை மட்டும் பார் “ என்றார் மகேந்திரன்.

“எனக்கு தெரியாமல் இது எப்போது நடந்தது மதுரன் எப்போது சம்மதம் தெரிவித்தான்!” என்று நம்பாமல் வினவினான் பிரபு.

“இப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன் உன் முன்புதானே சம்மதம் தெரிவித்தார்” என்று கூறியவர்..  புரியாமல் மனைவியும் மகனும் குழம்பி நிற்பதைக் கண்டு..” பூமதியின்.. திருமணம் பற்றி பேசும் போது நல்லதை நினையுங்கள் நல்லதே நடக்கும் என்று என்றார் மறந்துவிட்டதா? என்று நினைவுபடுத்த முனைந்தார்…

“அது உங்களுக்கு ஆறுதலுக்காக சொன்ன வார்த்தை.. அதைப்போய் சம்மதம் என்று நினைத்துக்கொண்டீர்களா?” என்று தலையில் அடித்துக் கொண்டான் பிரபு.

“உண்மையில் மதுரன் உன் நண்பன் தானா?, என் கண் பார்த்தே..  என் மனதில் உள்ளதை புரிந்துகொண்டு  நான் கேட்காமலேயே அவர் விருப்பத்தை மறைமுகமாக தெரிவித்தார்….  ஆனால்  இவ்வளவு சொல்லியும் நீ புரிந்து கொள்ளாமல் புலம்புகின்றாய்”  என்று அலுத்துக்கொண்டவர்.

 

“வந்ததிலிருந்து என்னை அப்பா என்று அழைத்துக் கொண்டிருந்தார்… திருமணம் பற்றி பேசும்போது அங்கிள் என்றார் கவனித்தீர்களா? இனி திருமணம் சம்மந்தமான  பெரிய வேலை பூமதியை சம்மதிக்கவைப்பது.. அதை பிரபு பார்த்துக்கொள்வான்” என்று பெரும் பிரச்சனையை மகன் தலையில் கட்டிவிட்டு நிம்மதியாய் தனது அறைக்கு சென்றார் மகேந்திரன்.

“அம்மா..  செமினார் விஷயமாக வந்திருக்கேன் இப்போதும் உங்கள் புலம்பலை தொடர்ந்தால் நான் என்ன செய்வது..” என்று தன் தாயை கண்டித்துகொண்டிருந்த மதுரன்.. அறையின் மூலையில் அண்ணன் தங்கை இருவரும் ஒன்றாய் இருக்கும் புகைப்படத்தை கவனித்து அதனருகில் சென்று.. குட்டியாய் கொழுகொழுவென்று இருந்த பூமதியின்.. கன்னம் தொட்டு மெதுவாய் வருடியபடி.. “இப்போது  உங்கள் கவலை என்ன நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் அவ்வளவுதானே! இங்கு ஒரு பெண்ணைப் பார்த்தேன்! அவள் குணம்… கோபம், எல்லாம் எனக்கு பிடித்து இருக்கின்றது..  உங்களுக்கு சம்மதம் என்றால் சொல்லுங்கள் இப்போதே அவளிடமும் அவள் தந்தையிடமும் பேசி திருமணத்திற்கு நாள் குறித்து வருகின்றேன்” என்றான் மதுரன்.

எப்போதும் திருமணப் பேச்சை எடுத்தால்  மழுப்பலாக பதில் சொல்லி தப்பிக்கும் மகன் இன்று தானே முன் வந்து ஒரு பெண்ணை பிடித்துள்ளது என்றதும் ஆவலாய் பெண்ணின் குடும்ப  விபரம் விசாரிக்க  துவங்கினார்.

“பெண் வேறு யாரும் அல்ல என் ஃப்ரெண்ட் பிரபு இருக்கின்றானே.. அவன் தங்கை தான், உங்களுக்கு சம்மதமா? என்று சொல்லுங்கள் இப்போதே அவளிடம் என் காதலை சொல்லி இன்றே திருமணம் செய்துகொண்டு ஜோடியாக நம்ம ஊருக்கு வருகின்றேன்” என்று பட்டென்று தன் மனதை போட்டு உடைத்தான் மதுரன்.

பெண்ணின் அப்பா என்ன செய்கின்றார் என்று  கேட்கப்பட்ட கேள்விக்கு “முன்னாள் ராணுவ அதிகாரி” என்று கூறிய மதுரன்.. எதிர்முனையில் அமைதி நீடிக்க “இதற்கே இப்படி  ஷாக் ஆனால் எப்படி.. உங்கள் மருமகள் பூமதி IPS”  என்று அதிரடியாக அறிவித்தான்.

“என்ன மதுரா.. போலீஸ் என்றால் அம்மா பயந்துவிடுவேனா என்ன?  இராணுவம்  போலீஸ் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டாமல் உனக்குப்பிடித்திருக்கிறதா  என் மருமகளிடம் கேள்.. சரியென்றால்  தாலி கட்டி உரிமையாக அழைத்துவா.. முரண்டு பிடித்தாள் தூக்கிடு.. நம்ம ஊரில் வைத்து  கல்யாணத்தை நான் நடத்திவைகின்றேன் “ என்றார்  மதுரனின் அம்மா மீனாட்சி.

“நீ கடத்த சொல்வது உன் மருமகளை மட்டும் அல்ல,  மிலிட்டரி  ஆபீசர் பெண்,  போலீஸ் IPS ..    உருப்படியாய் ஊர்  வரக்கூடாது என்று முடிவு செய்துவிட்டீர்கள் போல”  என்று மதுரன் சிரித்திட..” போடா.. போக்கிரி  நீ பேசியே  சமாளித்துவிடுவாய் பெற்றவளுக்கு  தெரியாதா? பிள்ளையின் வாய்ஜாலம்” என்று மீனாட்சி சிரித்திட…

உடன் சேர்ந்து சிரித்த மதுரன்… மேலும் சிறிது நேரம் தன் அன்னையுடன்  பேசவிட்டு   அழைப்பை துண்டித்துவிட்டு… மீண்டும் பூமதி புகைபடத்தில் தன்  கவனத்தை செலுத்தினான், “இப்போது தான் விரித்துக் கொண்டு இருகின்றாய் என்றால், அப்போதும் அப்படி தானா? என்று  செல்லமாய்  அவள் கன்னம் தொட்டு இதழ் ஒற்றி பிரித்தவன்,

முதல் பார்வையில்

என் மனதோடு

காதல் விதை தூவி…

மலரென மலர்ந்தவள்

பூமதி…            

 

என்று  கூரிக்கொண்டிருந்தவன், பின் வந்து நின்ற பிரபு.. “  நன்றாக பேசுவாய் என்று தான் தெரியும் நன்றாக கவிதை கூட  எழுதுவாய் போல  எங்கள் வீட்டு மாப்பிள்ளை” என்று கேலி செய்திட, அசடுவழிந்த படி சிரித்த மதுரன், “ போதும் மச்சான்.. “ என்றிட…  அன்புடன் ஆரத்தழுவிக்கொண்டவன்.. “படிக்கும்  பலமுறை நீ  எங்கு நண்பனாய் மட்டும் இல்லாமல்  ஒரு  உரிமையான உறவாய்  இருந்தால் நன்றாக இருக்கும்  நினைத்திருகின்றேன், அது இப்போது உண்மையில் நடக்கப்போவதை நினைக்கும் போதே, மனம் வானத்தில்  பறக்கின்றது மாப்பிளை.. ஆனால் சரியான கள்ளன்டா நீ! ஒரே வார்த்தையில் உன்  மனதை கூறிவிட்டாய்,  எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை,  அப்பா சரியாக கண்டுபிடித்துவிட்டார்”   என்று  மகேந்திரன்   திருமணதிற்கு ஒப்புதல் வழங்கியதை சந்தோசமாய் அறிவித்தான்.

 

“இன்னும் முழுதாய் எதுவும் முடிவாகவில்லை மச்சான், எல்லாம் உன்  செல்லத்தங்கை கையில் உள்ளது, இனி அவள் தான் என்னை  ஏற்றுக்கொள்ளவேண்டும்”  என்றான் மதுரன்.

 

“அதை நினைக்கும்  போது தான் மனம் பக்கென்று இருக்கிறது மாப்பிள்ளை…. நீ பேசாமல் ஒன்று செய்.. நீயே  நேரடியாக மதியிடம் உன் காதலை சொல்லி  கல்யாணத்திற்கும் கேட்டுவிடேன்,” என்று  பிரபு யோசனை கூறிட.. “யாரு அந்த ஹிட்லர் பாப்பாவிடமா? என்னால் முடியாது மச்சான்,  நான் ஏடாககூடாமாக  ஏதாவது பேச, அவள் பாட்டிற்கு கோபத்தில்  துப்பாக்கி எடுத்து முட்டிக்கு கீழ சுட்டுவிட்டால்.. “என்று பயந்தவன் போல கூறினான் மதுரன்.

 

“என்ன மாப்பிள்ளை இப்படி பயப்படுகின்றாய்.. அப்போ காலம் முழுவதும் உன் வீட்டில் மதுரை ராஜ்ஜியம் தான்…  உன்  ஒளிமயமான எதிர்காலம் என்  மனக்கண்ணில் தெளிவாக தெரிகிறது..  இந்த முறைப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை  எங்கு காட்டவேண்டுமோ? வீரத்தை அங்கு காட்டாதே! வாயில்லா பூச்சியிடம் வந்து வாய்ஜாலத்தை  காட்டு .. நானே  பேசுகின்றேன்..” என்றான் பிரபு.

 

 

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: