Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 10

அவர்களின் கவலையை போக்குவது ஒருபுறமும், தன்னை கவர்ந்திழுத்த  குணநலன்களை   இனியும் குறைகூறாமல்  தடுக்கவும்  முடிவெடுத்த மதுரன்..

“இந்த காலத்தில் பெண்கள் இப்படி நிமிர்வுடன் இருப்பது தான் நல்லது அம்மா… அடக்கம் ஒடுக்கம் நளினம் என்று பேசிப்பேசியே அவர்களுக்குள் இருக்கும் தைரியத்தை புதைத்து விடுகின்றோம்… பெண்களின் நளினமும்  நாணப்பார்வையும் ஒருவித அழகு என்றால்… நேர்கொண்ட பார்வையும் அச்சம் விடுத்த நடையும் ஒரு அழகுதான்… வெட்கம் ஒரு அழகு என்றால்… தவறைத் தட்டிக்கேட்க வீசிடும் வெட்டும் பார்வையும் ஒரு அழகுதான்… அணைத்ததும் அடங்குவது பெண்ணின் அழகு என்றால்…. அத்துமீறிய தீண்டலில் அனலென எரிந்து..  தன்னை நெருங்க நினைத்தவனுக்கு நெருப்பென இருப்பதும் அழகுதான்… உண்மையில் நீங்கள் உங்கள் பெண்ணை நினைத்து கர்வம் தான் கொள்ள வேண்டும்”  என்று மதுரன் தேவகிக்கு ஆறுதல் மொழிகள் கூறிட.

தன் வண்டி சாவியை மறந்து அதை எடுக்க வந்த பூமதியும்.. “ கள்ளனாக இருந்தாலும் கொஞ்சம் நல்லவன்தான் போலும் பெண்களை மதிப்பவன் போல்தான் தெரிகின்றான்” என்று மதுரன் குறித்து தான் கணித்த கருத்திலிருந்து மாறுபட்டாள்.

“நீ சொல்வது எல்லாம் சரிதான் தம்பி ஆனால் இந்த காலத்தில் யாருக்கு தைரியமாக இருக்கின்ற பெண்ணை பிடிக்கின்றது,  ஒருபெண் தைரியமாக தவறை சுட்டிக்காட்டி நியாயம்  பேசினால் ஆணவக்காரி என்று பட்டம் கொடுத்து ஓரமாக உட்காரவைத்து விடுகின்றார்கள்..  நாளைக்கு கல்யாணமாகி ஒரு வீட்டில் வாழப்போற பெண் மற்றவர்களுக்கு பிடித்தது போலவும் கொஞ்சம் நடந்துகொள்ள தெரியவேண்டுமே!” என்று அன்னைக்கே உரித்தான வழக்கமான கவலையை கூறினார் தேவகி.

“அடுத்தவர்களுக்கு இதுபிடிக்கும் அதுபிடிக்கும்… என்று பார்த்து பார்த்து வாழத்துவங்கினால்.. நம் வாழ்க்கையை  என்றுமே  நாம் வாழ முடியாது அம்மா.  மற்றவர்களுக்காக போலியாக நடித்து நல்லவனாக வாழ்வதைவிட தன் மனதிற்கு சரியென்று பட்டதை, யாருக்கும் தீங்குசெய்யாமல்.. நேர்மையாக வாழ்ந்து  கெட்டவனாக இருப்பதில்  தப்பே இல்லை… உண்மையில் பெண் சுதந்திரமும்,  சமஉரிமையும் எது என்று தெளிவாக தெரிந்தவர்களுக்கு உங்கள் பெண்ணை நிச்சயம் பிடிக்கும்.. அப்படி ஒருவன்  உண்மைக் காதலுடன் மதிக்காக பிறந்திருப்பான்..  அதனால்  பின்னாடி வரப்போகும் திருமணவாழ்க்கையை பற்றி கவலை கொண்டு…   இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிம்மதியான வாழ்க்கையை கெடுத்துவிடாதீர்கள்” என்று சற்று கறாராகவே அறிவுரை வழங்கினான் மதுரன்.

தன் மகளுக்காக வாதிட்டு தன்னுடனே மல்லுக்கு நிற்கும்  மதுரனை விசித்திரமாக பார்த்த தேவகி, “ரொம்ப தூரம் பயணம் செய்தது களைப்பாக இருக்கும்.. களைப்பு போக குளித்து வேறு உடை மாற்றிவா மது.. உணவு எடுத்து வைக்கின்றேன்..“ என்று வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேவகி பேசிட, புது இடத்தில் நாமும் கொஞ்சம் ஓவராத்தான் பேசுகின்றோமோ! என்று சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த மதுரனின் மனசங்கடத்திற்கு வழி கிடைத்ததுபோல் தன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான்.

மதுரன் விலகிச்செல்லும் வரை காத்திருந்த பூமதி மெதுவாய் அறைக்குள் நுழைந்து தன் வண்டி சாவியை தேடிட… “ என்ன மதி நீ இன்னும் கிளம்பவில்லையா?“ என்ற தேவகி குரலில் ஏதோ குற்றம் புரிந்தவள் போல் பதட்டமாய் திரும்பி,  “வண்டிச்சாவியை மறந்து விட்டேன் அம்மா.. அதை எடுக்கத்தான் திரும்பி வந்தேன், இப்போது தான் வந்தேன்..”  என்று அவசரமாய் பதில்தந்து வாசலை நெருங்கியவள் மீண்டும் திரும்பி.. “நைட் சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்து விடுவேன்..  எனக்கும் சேர்த்து சமைத்துவிடுங்கள்” என்று தடுமாற்றத்துடன் கூறிச்சென்றாள்.

மகளிடம் உண்டான புதுவித பதட்டத்தையும் தடுமாற்றத்தையும்… தாயின் கண்கள் தவறாமல் படம் பிடிக்க.. புதிதாய் முளைத்திருக்கும் இந்த உணர்வுகளுக்கு காரணம் ஒருவேளை புதிதாய் வந்திருக்கும் மதுரனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில்  அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையின் கதவின் மீது ஒரு பார்வை செலுத்திவிட்டு,  மர்மமான புன்னகை செய்தபடி.. சமையலறைக்குள் சென்று மறைந்தார் தேவகி.

“ என்னடா மச்சான் என் மீது கோபமாக இருக்கின்றாயா? கொஞ்சம் அதிகமாகவே வாயாடிவிட்டேனோ!” என்று மௌனமாய் நின்றிருந்த நண்பனைப் பார்த்து ஐயமாய் வினவினான் மதுரன்.

“நீ வழக்கமாக பேசுவதை விட கொஞ்சம் குறைவாக தான்  பேசினாய்!..  ஆனால் ஒன்றே ஒன்று தான் உதைத்து..” என்று ஒருநொடி அமைதியாய் நிறுத்தியவன், புரியாமல் பார்த்த  மதுரனை மேலும் கூர்ந்து  கவனித்தபடி..  “உன் வழக்கமான பேச்சுக்களில் எப்போதும் உண்மை இருப்பது போல மட்டுமே தோன்றும்… ஆனால் இந்த முறை அதையும் தாண்டி ஏதோ உரிமை இருப்பது போல் எனக்கு உறுத்தியது… இதில் ஏதும் உள்குத்து உள்ளதா?” என்று பிரபு சந்தேகமாய் பார்த்து வினவிட.

முதல் பார்வையிலேயே மதியை எப்படி சீண்டத்தோன்றியது, அவளை ஒருவார்த்தை..  அவள் அம்மாவே சொன்னாலும் அது எனக்கு ஏன் கோபத்தை தரவேண்டும்… இயல்பாய் பேசிப்  பழகுபவன் தான்… இருந்தும் எப்படி இவ்வளவு உரிமையாய் பேசினோம் என்று மதுரனே புரியாமல் குழம்பி நிற்க..  தனக்கே  தெளிவில்லாத  ஒன்றிற்கு எவ்வாறு விளக்கம் தருவது என்று புரியாமல் நின்ற மதுரன், பேச்சை மாற்றும் விதமாக… “ உள்குத்தும் இல்லை வெளிக்குத்தும் இல்லை.. இப்போது நான் கொடுக்கப்போகும் கும்மாங்குத்தில்  நீ நேராக   புத்தூருக்கே  போய் விழுந்து மாவுக்குகட்டுடன் தான் திரும்பி வருவாய்” என்றவன்,   தன்   கை முஷ்டியை  முறுக்கியபடி..  “ காலேஜ் செமினார் விஷயமாக கோயம்புத்தூர் வருகிறேன் என்று நம் காலேஜ் வாட்ஸ்ஆப் குரூப்பில் தெரியாமல் உளறிவிட்டேன்… அதை பார்த்த நீ என்ன செய்திருக்க வேண்டும்… மற்றவர்கள் போல வாழ்த்து கூறி ஒரு ஸ்டிக்கர்  மட்டும் போட்டுவிட்டு போயிருக்க வேண்டும்… அதை விட்டு பார்த்து பலநாள் ஆனது! பழானநாள்  ஆனது! பாசம்  பாயாசம் என்று பன்ச் டயலாக் எல்லாம் பேசி… உன் வீட்டில் வந்து தங்கும்படி.. நச்சரிக்கத்துவங்கினாய்..  நானும் ஒண்ணு மண்ணா பழகிய நம் மச்சான் பாசமாய் கூப்பிடுகின்றான் போகாமல் இருக்ககூடாது என்று யுனிவர்சிட்டியில் எனக்கென்று தங்குவதற்கு ஏற்பாடு செய்ததையும் வேண்டாம் என்று விட்டு உன்னை நம்பி பெட்டிபடுக்கையுடன் ஊரைப்பார்த்து கிளம்பிவந்தால்.. நீ என்னடா என்றால்…    பல்லுப்போன பழைய கிழம் மாதிரி படிதாண்டாமல் வரவேற்கின்றாய்! ஊருக்குள் பந்த் என்றால் ஒரு போன் செய்து.. விஷயத்தை சொல்லக்கூடாது..  ஊரு எல்லையிலேயே பஸ்காரன்,  இது ஊருக்கு கொஞ்சம் அவுட்டர் பகுதி, கொஞ்சதூரம் பொடிநடையாக நடந்துபோனால்  சிங்காநல்லூர் வந்துவிடும் என்று  சூலூரில் இறக்கிவிட்டு   ஓடிவிட்டான்…  அங்கிருந்து டவுன் பஸ் கூட கிடைக்காமல், ஆட்டோ பிடித்து  சென்னையில் இருந்து இங்கு வந்ததை விட இரண்டு மடங்கு பணம் கொடுத்து வந்திருக்கின்றேன்…  நீ ஹாயாக போனை ஸ்விட்ச்ஆப்.. செய்துவிட்டு   கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பருப்பு மாதிரி என்னை கேள்வி கேட்கின்றாய்” என்று தான் இதுவரை அடைக்கிவைத்திருந்த மொத்த ஆதங்கத்தையும் கொட்டித்தீர்த்தான் மதுரன்.

“டேய் மாப்பிள்ளை வேண்டாம்,  வாய் பேச்சு பேச்சாய் இருக்கும்  போது வன்முறையில் இறங்குவது சரியில்லை…  முதலில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று பொறுமையாக கேட்டிடு அதன் பிறகும் உனக்கு கோபம் குறையவில்லை என்றால்..  உன் அன்பை தாராளமாக என் மீது காட்டிடு“   என்றான் பிரபு.

மதுரன்  கோபம் விடுத்து “என்ன… கதை சொல்ல போகின்றாய் மொத்தமாய் கூறி முடித்துவிடு அப்போதுதான் எனக்கும் உன்னை கொத்துபுரோட்ட போடுவதற்கு  சரியாக இருக்கும்?” என்றவன் ஓரமாய் சென்று ஒரு சேரில் அமர்ந்து விட பிரபு பேசத்தொடங்கினான்.

“ நாளை காலை செமினார் என்பதால் நீ இன்று வருவதுதான் சரியாக இருக்கும் என்று யோசித்து தான்  பந்த் என்று தெரிந்தும்.. நீ வருவதை தடுக்கவில்லை.. ஆனால் எனக்கே இது இவ்வளவு சீரியஸாக நடக்கும் என்று தெரியாது உள்ளூர் வியாபாரிகள் சேர்ந்து நடத்தும் கடையடைப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டம்   அதனால்  பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது, நீ சிங்காநல்லூர் வந்துவிட்டால், அதன்பின் உன்னை அழைத்துக்கொள்வது சுலபம் என்று தான் நினைத்தேன், ஆனால்    இந்த ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி உள்ளூர் கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாய் போலீசுக்கு நம்பத்தகுந்த இடத்திலிருந்து செய்தி வந்திருக்கிறது.. அதனால் எச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் அதிக பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளனர்..  அந்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஒன்றுதான் பஸ்சை பாதியில் திரும்பிவிட்டதாக இருக்கும்… உன்னை அழைத்துவர நான்தான் கிளம்பினேன்,  ஆனால் மதி..  நான் அந்த பக்கம்தான் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்பார்வையிட போகிறேன் அதனால் நானே உன் நண்பனை அழைத்து வருகிறேன் என்றாள்.. அவள்  போலீஸ் என்பதால் ஓவர் கெடுபிடி இருக்காது…சரி நமக்கும் ஒரு அலைச்சல் மிச்சமென்று நானும் சரியென்றேன்..  உன்னை அடையாளம்  கண்டுபிடிப்பதற்காக உன் போட்டோவை  வாட்ஸ்அப் செய்யச்சொன்னாள்.. நானும் நம் காலேஜ் ஃபேர்வெல் பார்ட்டியில் எடுத்துக்கொண்ட படத்தை அவளுக்கு அனுப்பி வைத்தேன்… உன்னை அழைத்துச் செல்ல நான் வரவில்லை மதிதான் வருகின்றாள் என்று உனக்கு தெரிவிப்பதற்கு.. என் மொபைலை பார்த்தால் அது சுவிட்ச் ஆப்.. சரி சார்ஜ் போட்டு பேசலாம் என்று யோசித்தால்,   கரண்ட்கட்… கரண்ட் வர மாலை ஆகிவிடும்…  சரி வீட்டில் வேறு யார் நம்பரில் இருந்தாவது உனக்கு போன் பண்ணலாம் என்று பார்த்தால்,  உன் நம்பர் மொபைல் மெமரியில் இருந்ததே தவிர என் மூளை மெமரியில் இல்லை நான் என்ன செய்ய.. ”என்று பெரிய கதையாய் அளந்து நடந்ததை விளக்கினான் பிரபு.

நண்பனின் நீளமான கதையை கேட்டு எழுந்து வந்த மதுரன்.. இருதோள்களிலும் கையைப் போட்டுக்கொண்டு “நீ இன்னும் மாறவே இல்லை காலேஜ் படிக்கும் போது,  ஒரு காரணம் கேட்டால் வண்டிவண்டியாய் கதை அளப்பதை  இன்னும் நிறுத்திக் கொள்ளவே இல்லை!  பேசாமல் நீ ஒன்றுசெய் ஐடி கம்பெனி ஹெச். ஆர் வேலையை விட்டுவிட்டு படத்திற்கு கதை எழுத சென்றுவிடு…  நல்ல வருமானம் வரும்..  நல்ல வேலை தங்கை உன்னை மாதிரி தொடைநடுங்கி சோம்பேறி சோப்ளாங்கியாக இல்லாமல் கொஞ்சம் தைரியமான பெண்ணாக இருக்கிறாள்… அவளால்  தான் நீ இன்று என்னிடமிருந்து தப்பித்தாய்” என்று பாவமன்னிப்பு கொடுத்து நண்பனை விடுவித்தான் மதுரன்.

நான் தப்பிப்பது இருக்கட்டும் நீ வசமாக மாட்டிக் கொண்டாய்… மதி தான் யாரென்றே உன்னிடம் காட்டிக்கொள்ளவில்லையே… நீயும் அவளை தெரிந்தது போல பேசவில்லை..  மதியிடம் உன் போட்டோ இருந்தது அதை வைத்து நீ தான்  மதுரன் என்று  கண்டுபிடித்து இருப்பாள்..   ஆனால்  நீ தான் இதற்கு முன் பூமதியை பார்த்ததே இல்லையே! நீ எப்படி அவள்தான் என் தங்கை என்று கண்டுபிடித்தாய்..” என்று  சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள வினவினான் பிரபு.

“நான் எங்கு கண்டுபிடித்தேன்… பஸ்ஸ்டாப்பில் அரைமணி நேரமாக எனக்கு பின்னிருந்து என்னையே கவனித்துக்கொண்டு இருந்திருக்கின்றாள்..  உனக்குத்தான் என்னைப் பற்றி நன்றாக தெரியுமே! பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்த்து நடக்கும் நல்லவன்  நானென்று.. தானாக  வழியே வந்து பேச்சு கொடுக்கவும்… மனதிற்குள் உனக்கு அர்ச்சனை செய்தபடி விலகிச்சென்றேன்,  இருந்தும் விடாமல் பின்தொடர்ந்து வந்து போலீஸ் என்று மிரட்டினாள்…  நாமலே பெரிய அப்படக்கர் நம்மையே! இவ்வளவு தைரியமாக  யார்   மிரட்டுவது என்று உற்று கவனித்தேன்… அப்புறம் தான் தெரிந்தது அவள் உன் தங்கை என்று…  உன் அப்பா மிலிட்டரி ரிட்டயர்டு ஆபிஸர் என்று தெரியும்.. ஆனால் உன்  தங்கை போலீஸ் என்று தெரியாதே!,  அதனால் முதலில் அவள் வார்த்தையை நம்பவே இல்லை… அதன் பிறகுதான்  ஐடி கார்டை காட்டினாள்.. காவல்துறை நம்  நண்பன் அல்லவா!  நானும்   ஒரு நண்பன் கைவிட்டால் என்ன இன்றொரு நண்பி வந்துவிட்டாள் என்று தைரியமாய் அவளை நம்பி வந்தேன்” என்றான் மதுரன்.

“கதை அளக்கிறேன் என்று என்னை மட்டம் தட்டிவிட்டு சார் என்ன செய்துகொண்டிருகின்றாய்!   பக்கம் பக்கமாய் கதை விடுகின்றாய்..    நீ என் தங்கையுடன் எப்படி வந்தாய் என்று கேட்கவில்லை…  அவள் தான் என் தங்கை என்று எப்படி கண்டு பிடித்தாய்  என்றுதான் கேட்டேன்!” என்று விவரமாய் வினவினான் பிரபு.

“இது என்ன பெரிய சிதம்பரரகசியமா? அவளைப் பார்த்ததும்   உன் தங்கை என்று தெளிவாய் தெரியும் அளவிற்கு  அச்சு அசல்   உன்னையே  உரித்துவைத்திருகின்றாளே! அதே மூக்கு காது கண்  வாய் அதே ஜாடை என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே” சென்றான் மதுரன்.

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: