Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

இனி எந்தன் உயிரும் உனதே – 14

அத்தியாயம் – 14

 

“அங்க கடை ஒண்ணு இருக்குற மாதிரி இருக்கு. போய் பாக்கலாமா”

 

“சரி.. இதைக் கேட்கவா அந்தப் பார்வை பார்த்திங்க” என்றாள்.

 

“இல்ல இவ்வளவு அழகான ஒரு பொண்ணை கூட்டிட்டுப் போறதும் ஆபத்து. இங்கேயே விட்டுட்டுப் போறது அதைவிட ஆபத்து”

 

சற்று யோசித்தவன் தன் பையைத் திறந்து உள்ளிருந்து ஒரு டீஷர்ட் மற்றும் கைலியை எடுத்தான்.

 

“உன் ட்ரெஸ் மேலேயே இந்த சட்டையைப் போட்டுட்டு கைலியைக் கட்டிக்கோ”

 

அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டான். சட்டையை மேலே அணிந்து கொண்டவள் கைலியைக் கட்ட முடியாமல் தடுமாறி பின் ஒரு வழியாகக் கட்டி முடித்தாள்.

 

அவளது குரல் கேட்டு திரும்பியவன் அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து சிரித்து விட்டான்.

“என்னதிது… கைலியைக் கட்ட சொன்னா சேலை கட்டுற மாதிரி சுத்திருக்க”

“எனக்கு இவ்வளவுதான் தெரியும். இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா பழகிருப்பேன்”

 

“சரி உன் நீ தப்பா நினைக்கலைன்னா கண்ணை மூடிட்டே கட்டி விடட்டுமா”

 

கன்னங்களில் ரோஜாக்கள் பூக்க “ம்ஹம்… ஆசை தோசை முதலில் நீங்க உங்களுக்கே கைலி கட்டிக் காண்பிங்க அதைப் பாத்து நான் கட்டிப்பேன்“ என்றாள்.

 

“ரொம்பவும் சுதாரிப்புத்தான்” என்றவாறே கைலியை அணிந்து காண்பிக்க லல்லியும் அதே போல கட்டிக் கொண்டாள்.

 

“கொடுத்துவச்ச கைலி” என்று முணுமுணுத்தது கேட்காமல்

 

“என்ன பாரி” என்றாள்

 

“ஒண்ணுமில்லை… தலையை சுத்தி இந்தத் துண்டைக் கட்டிட்டு முடியை அதில் மறைச்சு வை. பொட்டு இருந்தால் இங்கேயே ஒட்டி வை” என்று அவன் சொன்னபடி தட்டாமல் செய்தாள். இன்னொரு துண்டை போர்வையைப் போலப் போர்த்திக் கொள்ள செய்தான்.

 

அதன்பின் கிட்டத்தட்ட டீன்ஏஜ் பையனைப் போலத் தோற்றமளித்தவளை அழைத்துக் கொண்டு இருவரும் வெளிச்சம் இருந்த இடத்திற்கு சென்றார்கள்.

அங்கு இரு சிறிய டீக் கடையைத் திறக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான் கடைக்காரன்.

“வணக்கம் அண்ணே டீ ரெண்டு” என்று குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தவன்

“கொஞ்சம் காத்திருங்க தம்பிசார்  இப்பத்தான் அடுப்பை ஏத்திருக்கேன்” என்றான்.

“ ‘மயில் டீ ஷாப்’ என்று வாசித்தவன் மயில் யாரு நீங்களா” என்று கேட்டான் பாரி

 

“ஆமாம் சார் என் பேரு மயில்வாகனம்” என்றான்

 

“மயிலு பால் இருக்கா…”

 

“அதுதானே இல்ல… சுத்திருக்குற வெள்ளத்தில பால் எப்ப வரும்னு வேற தெரியல” என்றவன்

 

“நீங்க எப்படி சார் இங்க…”

 

“நாங்க நேத்து மழைல மாட்டிகிட்டோம். நீங்க இந்த காட்டில் எப்படி கடை வச்சிருக்கிங்க”

 

“மெயின் ரோட்டில் நல்ல கடை இல்லை சார். அதனால லாரி காரங்க எல்லாரும் இங்கதான்  வருவாங்க. அதைத் தவிர பள்ளிக் கூடம் ஒண்ணும் பஸ் ஸ்டாப் ஒண்ணும் இருக்கு. அதான்  இங்கனயே கடை போட்டுட்டேன்” என்று அவன் சொன்னது நம்பும்படியாகவே இருந்தது.

 

“பால்காரன் வரலைன்னா என்ன பண்ணுவிங்க மயிலு”

 

“உள்ளூர் பால்காரர் தினமும் அஞ்சு லிட்டர் பால் தருவார். அது தீர்ந்ததும் பாலில்லாத டீ, காப்பி, அப்பறம் அதா ஒரு விளக்கு தெரியுது பாத்திங்களா அங்க ஆட்டுப் பால் கிடைக்கும்.

எதுவும் இல்லைன்னா இருக்கவே இருக்கு தேங்காபாலு. சின்னவயசில் காட்டுக்கு நடுவில் இருந்த எங்க வீட்டுக்கு நேரங்கெட்ட நேரத்தில் விருந்தாளிங்க வந்தா தேங்காபால் டீதான்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

 

“இப்ப என்ன டீ எங்களுக்குக் கிடைக்கும்” என்றான் பாரி

 

அசட்டுச் சிரிப்புடன்“நான் வரக்காப்பி போட்டுத் தரட்டுமா. எங்காத்தா காலைல அதைத்தான் தரும்” என்றான் மயிலு.

 

“இந்தக் குளிருக்கு சூடா சுடுதண்ணி கொடுத்தாக் கூட குடிக்க நாங்க ரெடி”

 

அங்கிருந்த மஞ்சள் நிற குழல் அப்பளப் பாக்கெட் ஒன்றை எடுத்துக் கொண்ட லலிதா அப்படியே பாட்டிலில் கைவிட்டு தான் ஒரு பன்னை எடுத்துக் கொண்டு பாரிக்கும் ஒன்றைத் தந்தாள்.

 

காய்ந்த பன்னை கடித்துக் கொண்டு பராக்கு பார்த்த லலிதாவிடம்

 

“தம்பி என்ன படிக்கிறிங்க” என்றான் மயிலு

 

லலிதா திறந்த வாயை மூட மறந்து பதில் சொல்ல முடியாது விழிக்க,

 

பாரி முந்திக் கொண்டு “தம்பி பன்னன்டாப்பு படிக்கிறான்” என்றதும் யாரும் அறியாமல்  அவனது கரத்தைக் கிள்ளினாள் லலிதா.

 

“ஐயோ”

 

“என்ன சார்”

 

“எறும்பு கடிச்சிருச்சு” என்றான் பாரி.

 

“சூதானமா இருங்க சார் இருட்டு வேற” என்றான்.

 

அதற்குள் சைக்கிள் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய ஒருவன் “என்ன நாயரே இன்னைக்கு சீக்கிரம் கடையைத் திறந்துட்ட” என்றபடி வந்தான்.

 

“இன்னைக்கு சீக்கிரம் விழிப்புத் தட்டி சாரே… “ என்றான்  மயிலு வந்தவனிடம் பாரியைப்  பார்த்துக் கண்ணடித்த வண்ணம்.

 

“டீ ஒண்ணு போடு நாயர்”

 

“பால் இன்னும் வந்துட்டில்ல கட்டன்  சாயா கொடுக்கவா”

 

“சரி…  அடுப்பில்  என்னமோ கொதிக்குது”

 

“இது கறுப்புக் காப்பி ஆ சாருக்கு”

 

“அதிலேயே எனக்கும் கொஞ்சம் தா” என்றபடி அந்த நபர் அமருவதற்காக பெஞ்சு அருகில் வர, எங்கே இருவருக்கும் மத்தியில் அமர்ந்துவிடுவாரோ என்ற பயத்தில் லலிதாவை சுவரோரமாகத் தள்ளி விட்டு நடுவில்  அமர்ந்து கொண்டான் பாரி. அவன் எதிர்பார்த்தவாறே பாரிக்கு அந்தப் பக்கம் அமர்ந்தார் அந்த நபர். ஓரமாக இருந்ததால் லலிதா இருட்டில் மறைந்தாள். அவளை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சரியாகக் கூடத் தெரியாது. ஆட்கள் வர ஆரம்பிப்பதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட முடிவு செய்துக் கொண்டான் பாரி.

 

மயிலு கண்ணடி கிளாசில் தந்த வரக்காப்பியை சீப்பிக் குடிக்கும்போது  குளிருக்கு இதமாக இருந்தது. இன்னொரு காப்பி கூட குடிக்கலாம் போலத் தோன்றியது.

 

“நாயரே டீ மட்டுமில்ல காப்பிக் கூட நல்லாத்தான்யா போடுற” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தவர் பாரியின் பக்கம் திரும்பி “நீங்க யாரு  தம்பி… வெள்ளத்தில் மாட்டிக்கிட்டிங்களா”

 

“ஆமாம் சார். வண்டியை அங்க நிறுத்திருக்கேன்” தூரத்தில் இருட்டில் குத்து மதிப்பாய் சுட்டிக் காட்டினான்

 

“இந்த தடவை மழைக் கொஞ்சம் மோசம்தான். நான் ஊருக்குள்ளத் தான் போறேன். நாயர் கிட்ட போன் பண்ணி நிலவரத்தை சொல்றேன். நல்லாருந்தா நீங்க கிளம்பி வாங்க” என்றபடி கிளம்பினார் அந்த நபர்.

 

அவர் கிளம்பியதும். “வரக்காப்பி எப்படி இருக்கு” என்றான் மயில்

 

“யோவ் மயிலு எங்ககிட்ட தமிழில் பொழந்துட்டு அந்தாளுகிட்ட மலையாளத்தில் பேசுற. அந்நியனை விட பயங்கரமா நடிக்கிறயேய்யா”

 

“அடப் போங்க சார் ஊர்ல கடன் தொல்லை தாங்கமுடியாம விடிவு கேட்டு சபரிமலைக்கு மாலை போட்டிருந்தேன். அப்படியே பொழப்பு தேடி இந்த ஊரு பக்கம் வந்தேன். மாலையும் சந்தனத்தையும் பாத்து நாயருன்னு நெனச்சுட்டாங்க. டீக்கடை வைக்க வேற உடனே இடம் கிடைச்சுருச்சு. நம்ம வீட்டு பிள்ளைகளை பட்டினி போட்டுட்டு வந்தாரை வாழ வைக்கிறதுல நம்ம மண்ணை அடிச்சுக்க முடியாது ஸார்” என்றான் பாய்லர் சுடுநீரைப் பிடித்தபடி.

 

“விடுய்யா… ஊரார் பிள்ளையை ஊட்டி வளத்ததால நம்ம பிள்ளைங்க உலகம் பூரா பொழைக்குது. இங்க எத்தனை நாளுக்கு நாயரா நடிக்க முடியும். அடுத்து என்ன செய்யப் போற மயிலு”

 

“பணம் சேர்த்து நிலம் ஒண்ணு வாங்கிருக்கேன் சார். என்ன… மண்ணு சரியில்லை. அதனால போட்ட பணமெல்லாம் விரயமா போகுது. அது மட்டும் சரியாயிருந்தா ‘கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி,விவசாயி’ன்னு தலைல துண்டு கட்டிட்டு மண்ணுல முத்தெடுக்க இறங்கிடுவேன்”

 

பாரியின் முகம் ஒத்த எண்ணம் கொண்ட ஒருவனைப் பார்த்த மகிழ்ச்சியில் விகாசித்தது. லலிதாவோ எங்க இனி பாரி இங்கேயே தங்கினாலும் ஆச்சிரியப்படுரதுக்கில்ல என்றெண்ணியவண்ணம் அவர்களது உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

“அப்பறம் ஏன் தாமதம்”

 

“அதான் சொன்னேனே மண்ணு சரியில்லைன்னு சொல்லிட்டாங்க சார். நானும் டெஸ்ட் எல்லாம் பண்ணிப் பார்த்தேன். பயிர் பண்ண ஏத்ததா இல்லை”

 

“இயற்கை விவசாயி நம்மாழ்வார் தரிசு நிலத்தையும் விளைநிலமாக்கும் வித்தையை சொல்லிருக்கார். என்ன கொஞ்சம் நேரம் பிடிக்கும் விஷயம். பொறுமையா முயற்சித்துப் பாத்தா கண்டிப்பா பலன் கிடைக்கும்”

 

“நான் பொறுமையா இருப்பேன் ஆனால் எனக்கு வயிறு இருக்கு. என்னை நம்பி இன்னும் அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி, பொண்டாட்டி, பிள்ளைன்னு இன்னும் எட்டு உயிருங்க ஊரில் இருக்கு. அதனால்தான் அதைக் கிடப்பில் போட்டுட்டேன் சார்”

 

“மயிலு… விளை நிலமாக்கும் பொறுமை இல்லைன்னா கூட குட்டை ஒண்ணு வச்சு மீன் வளர்ப்பு செய்ய முடியுமான்னு பாக்கலாம். வாத்து, கோழி, மீன் வளர்த்து விக்கிறது கூட லாபகரமான தொழில் தான். அட்ரஸ் தந்துட்டுப் போறேன். ஊரில் வந்து என்னைப் பாருங்க. உங்க நிலத்தில் என்ன பண்ண முடியும்னு பார்க்கலாம்”

 

“லோன் எதுவும் வாங்கி செய்யலாமா சார்”

 

“இப்போதைக்கு இந்தக் கடையை விட்டுடாதிங்க. உங்க தம்பி அப்பாவை வச்சு மாற்றுத் தொழில் பார்க்கலாம். சிறிய விவசாயிகள் எல்லாம் விவசாயத்தை மட்டுமே நம்பிகிட்டு இல்லாம மாற்றா இன்னொரு ஏற்பாடு செஞ்சுக்கிறது நல்லதுன்னு நான் சொல்வேன்”

“நீங்களும் விவசாயம் பண்றிங்களா”

 

“ஆமாம் எங்கக் குடும்பமே உழவுத் தொழில் தான். நான் இப்ப வேலைக்குப் போயிட்டு மற்ற நேரத்தில் விவசாயத்தைப் பாத்துக்குறேன்”

பாரி தனது விலாச அட்டையை மயிலிடம் தர மயில் அதனைப் பத்திரமாக டப்பாவில் போட்டு மூடி வைத்தான்.

 

“கட்டன் சாயா ஒண்ணு போட்டுத் தரேன் சார் குடிச்சுப்பாருங்க. நாயரை விட அருமையா போடுவேன்” என்றபடி இன்னொரு டீ ஆத்தித் தந்தான்.

 

“தம்பிக்குக் குழந்தை முகம் மாறவே இல்லை” என்றபடி “இந்தா “ என்று உள்ளிருந்த ப்ரூட் பன்னை எடுத்து லலிதாவிடம் தந்தான்.  அவளும் மறுபேச்சு பேசாமல் வாங்கிக் கொண்டாள். பேசினால் குரல் காட்டிக் கொடுத்து விடுமே.

 

மயிலுக்கு போன் வர பேசிவிட்டு பாரியிடம் “சார் வெள்ளம் கொஞ்சம் வடிஞ்சிருக்காம். நீங்க இன்னும் அரைமணி நேரம் பொருத்து விடிய ஆரம்பிச்சதும் கிளம்பலாமாம்” என்று சொன்னான்.

 

மயிலுக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டு இருவரும் நடக்க ஆரம்பித்தனர். நடுவில் தடுமாறியவளின் விரல்களை இறுக்கப் பற்றிக் கொண்டான் பாரி.

 

அமைதியாக வந்து வண்டியில் அமர்ந்து கொண்டனர். “கைலியைக் கழட்டிடலாம் லல்லி” மெதுவான குரலில் பாரி சொல்ல அவனது உடைகளை அவனிடம் திருப்பித் தந்தாள் லலிதா. இருவரும் பார்க்கும் போதே தூக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விழித்த சூரியன் மெதுவாக தனது செந்நிறக் கதிர் கைகளை வெளிக்காட்டி சோம்பல் முறித்தான்.

 

லலிதாவின் கைகளைப் பிடித்து அழுத்திய பாரி “கிளம்பலாமா லல்லி” என்றான். இருவருக்கும் தாங்கள் பயணம் செய்த மாய உலகிலிருந்து கீழே யாரோ உதைத்துத் தள்ளியதைப் போன்ற ஒரு உணர்வு.

 

“கிளம்பித்தானே ஆகணும் பாரி” வெளிச்சத்தை வெறித்த வண்ணம் பதிலளித்தாள் லலிதா.

அங்கிருந்து கிளம்பவே மனமில்லாமல் காரை ஸ்டார்ட் செய்தான் பாரி.

4 Comments »

  1. Inimel enna aagum? Rendu perum thiruppi meet panna kooda chance illaye? Phonela vena pesikkalam. Paarikku paartha ponnu kalyanam vendannu sollanum, Lalliku paartha maappillayum vendannu sonnal thaan ivargal srevadharku aethenum vaippu irukku. Ivargal rendu perum vai thirappaargal pol illaye?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: