Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 08

அலுவலக நேரம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மதுரன் ஒருபஸ் ஸ்டாப் அருகில் வண்டியை நிறுத்தி சிறிது நேரம்..  பஸ் ஸ்டாப்பில் போடப்பட்டிருந்த இருக்கையில்  அமர்ந்தான். இதுபோல ஒரு பஸ்ஸ்டாப்யில் தான் முதன் முதலில்  உன்னை சந்தித்தேன் மதி.. என்று அன்றைய நினைவில்  மனதின் வலியுடன் கண்மூடிக் கொண்டான் மதுரன்.  மூடிய இமைகளுக்கு நடுவில்  மலர்ந்த புன்னகையை இதழில்  சூடிக்கொண்டு கண்களில் அளவில்லா  காதலை தேக்கிவைத்து சிரித்தாள் பூமதி.

 

கண் திறந்து பார்த்தவன் தனக்கு எதிரில் யாரும் இல்லாமல் இருக்க தன்னை மீறிவழிந்த கண்ணீரை துடைத்தபடி மீண்டும் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றான். வேகமாய் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த பயணம் மீண்டும் ஒரு இடத்தில் தயங்கி நிற்க “ தம்பி இந்தாயா…  வழக்கம்போல ஐந்துமுழம் பூ.. நீ வருவாய் என்று ஏற்கனவே  தயாராய் எடுத்து வைத்துவிட்டேன்“ என்று இலையில் சுற்றிய மல்லிகைப்பூவைக் கொண்டுவந்து மதுரன் கையில் கொடுத்தார் ஒரு வயதான பெண்மணி.

 

தனது சட்டைப்பாக்கெட்டில் இருந்து சில பணத்தாள்களை எடுத்து அப்பெண்மணிக்கு கொடுத்தவனிடம், “ஏராசா..  நாள்கிழமை தவறாமல் பூ.. வாங்கிட்டுப்போறியே! உன் சம்சாரத்து மேல அவ்வளவு பாசமாயா” என்ற பூக்காரம்மா சிறு வெட்கம் கலந்த ஆவலுடன் வினவ… ஆமாம் என்பது போல் தலையை அசைத்து “ஒரேஒருநாள் அவளுக்குப் பிடித்த மல்லிகைப்பூ வாங்கி வராமல் வீட்டிற்கு போனால்.. அவ்வளவுதான் முகம் திருப்பிக்கொண்டு என் முன் வரவேமாட்டாள்” என்றுபெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, வலிசுமந்த புன்னகை செய்து  கையில் கிடைத்த பூவை பத்திரப்படுத்திவிட்டு கிளம்பி சென்றான்.

 

மீண்டும் சில தொலைவு சென்றதும் வண்டியை நிறுத்தி ஒரு ஸ்வீட் ஸ்டாலில் ரசமலாய் வாங்கிக்கொண்டவன்.. மதுரம் கையிலிருந்த மல்லிகைபூவை பார்த்து ரகசிய புன்னகை சிந்தியபடி…”மனைவிக்கு மல்லிகை பூவுடன்அல்வாவை… கொடுப்பது தானே நம் பாரம்பரிய பழக்கம்  நீங்கள் ரசமலாய் வாங்குகின்றீர்கள்”என்று கேலியாய் வினவினார் கடைக்காரர்.

 

ஒரு நொடி தயங்கி நின்ற மதுரன் மனதில் பழைய நினைவுகள் படர….  அன்றைய நினைவில் இதழ்கள் தானாய் விரிந்து பின்வாடிட பதில் ஏதும் கூறாமல் பார்சலை வாங்கிக்கொண்டு கிளம்பினான் மதுரன்.

 

வீட்டு வாசலில் நுழைந்தவனை பாதிவழியில் மறித்து… தன் முன் இருகால்களை மதுரன் மார்பில் பதித்து வாலாட்டிக் கொண்டே  தன் அன்பை வெளிப்படுத்தியது சீசர்.

 

“என்ன சீசர்,  என்னை ரொம்ப மிஸ் செய்தாய் போல!” என்று செல்லமாய் அதன் தலையில் கைவைத்து தடவிக் கொடுத்திட இன்னும்  குலைந்து கொண்டே  அன்பை பொழிந்தது..

 

கையில் இருந்த சாவிகொண்டு வீட்டை திறந்து உள்ளே  நுழைத்தவன், வரவேற்பில் அழகாய் புன்னகை செய்து வரவேற்ற   பூமதி புகைப்படத்திற்கு கையிலிருந்த பூவை மாலையாய் போட்டவன், ரசமலாயையும் முன்  வைத்தவன், “இன்று என்ன நடந்தது என்று தெரியுமா? மதி, ஒரு கணவன் மனைவி என்னிடம் கவுன்சிலிங் வந்திருந்தனர்,  அவர்களும் காதலித்து திருமணம்  செய்தவர்கள் தான், ஆனால்   அவர்கள் பிரிவிற்கு காரணம்  விதி அல்ல,   அவர்களின் ஈகோவும், பெற்றோர்களின்   ஆதீத பாசமும்தான்,”  என்று வேதனையுடன் கூறியவன்.  “ அழகான ஜோடி ராகவ் ரம்யா… அவர்கள் முதல் சந்திப்பு” என்று துவங்கியவன்,  அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தான்.

 

“உனக்கு நம் முதல் சந்திப்பு  நியாபகம் உள்ளதா… மதி? ” என்று வினவியவன், “சரி சரி படத்திலிருந்தே முறைக்காதே.. இப்போது நீ மட்டும்  என்  பக்கத்தில் இருந்திருந்தால் இந்த கேள்விக்கு பதிலாய், என் தலையை பதம் பார்த்திருப்பாய்,”என்று சிரித்தவன். “உனக்கு எல்லாம்  நியாபகம் இருக்கும்,  எனக்கும் தான் இருந்தும்  தினமும் ஒருமுறையாவது    அந்த நாட்களை நினைத்துப் பார்க்கவிட்டால், அந்த நாள்   வெறுமையாய் தான் இருக்கும்” என்று தங்கள் முதல்   சந்திப்பை தனக்குள் அசைபோடத் துவங்கினான் மதுரன்.

 

முதன் முறை மதுரன்.. வேலை விஷயமாக  கோயம்புத்தூர்  வந்திருத்த புதிது,  தன்னுடன் கல்லூரியில் ஒன்றாய் படித்த நண்பனை நம்பி பெட்டிப்படுக்கையுடன் வந்திருந்தவன்.. உன்னை அழைத்துச்செல்ல நானே வருகின்றேன் என்று வாக்கு கொடுத்த நல்லவன் வார்த்தையில் ஏமாந்து சிங்காநல்லூர் பஸ்ஸ்டாண்டில்   ஒத்தையாய் அமர்ந்திருந்தவன்..   “இன்னும் எவ்வளவு நேரம்   உனக்காக இந்த  பஸ்ஸ்டாபில்  தவம் கிடப்பேன்  பிரபு”  என்று தனக்குள் அலுத்துக்கொண்டு, உச்சி வெயிலை எல்லாம் தன்   உச்சந்தலையில் வாங்கிக்கொண்டு தன் நண்பனின் வருகைக்காக வெகுநேரம்  காத்திருந்தான் மதுரன்.

 

வெகுநேரம் கடந்தும் நண்பன் வராமல் இருக்க, அவன் மொபைல் எண்ணிற்கு  அழைக்க அது “சுவிட்ச் ஆப்” என்று பதில் தர, தன் தோழன் மீது கொண்ட  கோபத்தில் மொபைலை தூக்கி  எறிவது போல்  ஓங்கிட, “ யார் மீதோ இருக்கும் கோபத்தை இப்படி மொபைல் மீது காட்டினால் எப்படி, பாஸ்.. “ என்று குரல் கேட்டு குரல் வந்த திசையில் நோக்கினான்.. அவன் காத்திருந்த பஸ் ஸ்டாப்பில்.. கொஞ்ச நேரத்திற்கு முன்… கண் மட்டும் தெரிய மீதி முகம் முழுவதும் துப்படாவல் மூடியபடி.. மொபைலில் என்னவோ பார்த்துகொண்டு இருந்த பெண்ணை யோசனையாய் பார்த்தவன், “ நீங்கள்  என்னைத்தான் சொன்னீர்களா?” என்று மதுரன் தயக்கத்துடன் வினவ,  மொபைலை விடுத்து பார்வையை உயர்த்தி.. “இல்லை அந்த போஸ்ட் கம்பியை  சொன்னேன்”  என்று கேலியாய் கூறி சிரித்தவள் கண்கள் மட்டும் அழகாய் மலர்ந்திட “என்ன ஊருக்கு புதுசா  பாஸ்!  இன்று ஊரே  பந்த்..  என்று தெரியாதா? இப்படி ஆள் நடமாட்டமே இல்லாத பஸ்ஸ்டாப்பில் வந்து மாட்டிக்கொண்டு பச்சைபுள்ளை  போல விழிபிதுங்கி நிற்கின்றீர்களே!  போலியாய் அனுதாபம் காட்டிட.. “ஹல்லோ என்ன நக்கலா?, என்  பிரன்ட்காக தான் வெய்டிங்.. என் நண்பன் வந்ததும் சிட்டா..  பறந்திடுவேன்” என்று மதுரன் பதில் கொடுக்க,  “எது நீங்க இவ்வளவு நேரம் ட்ரை செய்தும் பதிலே தராமல் இருக்கும், அந்த பிஸி.. பிசினஸ்மேன் பற்றியா சொல்கின்றீர்கள்?” என்று விடாமல்  கேள்வியில் கேலிசெய்யும் புதியவளை புதிராய் பார்த்த மதுரன், “வந்ததில் இருந்து என்னைத்தான்  கவனித்துக்கொண்டே இருகின்றீர்களா! உங்களுக்கு வேறு வேலையில்லை? என்று வெளிப்படையாக சிடுசிடுத்த மதுரன், “ஒரு வயசு பையன்.. பார்க்க கொஞ்சம் அழகாய் இருந்துவிடக்கூடாது.. உடனே வழியவந்து பேசி  வழிவது” என்று அருகிலிருந்த  அவளுக்கு கேட்கும்படி  தெளிவாய் முனுமுனுத்தான்.

 

முதலில் கோபமாய்  முறைக்கத்துவங்கிய அழகிய மீன்விழிகண்கள்.. பின் மெதுவாய்  குறும்பில் சுருங்கிட..” ஒருவயது பையன் பார்க்க அழகாய் இருந்தால் தூக்கிமடியில் வைத்து கொஞ்சிடத்தான் தோன்றும் பாஸ், ஆனால் உங்களை அப்படி என்னால்  தூக்கிடவும்முடியாது  செல்லம் கொஞ்சிடவும்முடியாது” என்று சிரிக்க.. “தூக்க முடிந்தால் மடியில் வைத்துக்கொள்ளவாயா?”  என்று கேட்கத்துடித்த தன் மனதின் எண்ண ஓட்டதை கண்டு அதிர்ந்தபடி, “ யாரென்றே தெரியாமல் அவளும் என்னுடன் சரிக்கு சரியாய் வாயாடுகின்றாள், நானும் பதில் தருகின்றோன் ” என்று யோசித்தவன், அதன் பிறகு அவள் திசையே திரும்பாமல்  மீண்டும் தன் நண்பனை தொடர்புகொள்ள முயற்சி செய்தான்,   மீண்டும் அதே பதில் வர.. “வேற வழியேயில்லை இங்கு நமக்கு உதவி செய்ய இவளைவிட்டால் வேறு ஆளே இல்லை என்று   புதியவள் புறம் திரும்பி..  “ இங்கு பஸ் தானே பந்த்.. கால்டாக்ஸி கூடவா கிடைக்காது?”  எங்கோ பார்த்து விசாரித்தான் மதுரன்.

 

“என்னையா  கேட்டீர்கள்?” என்று சிரிப்புடன் அவள் வினவ, இதழ் சிரிக்கும்  போது கண்கள் மலரும் அழகை ரசித்திடும் ஆவலில் அவள் விழி  நோக்கி, “ இல்லை  போஸ்ட் கம்பியை கேட்டேன்” என்றிட, மதுரன் நினைத்தது போலவே கண்கள் மலர சிரித்தவள்.. முகம் காண ஆவல் எழுந்தது, “இது என்ன முகமூடித் திருடன் போல, முழுதாய் மூடிக்கொண்டு,  இது உங்களுக்கான முன்னெச்சரிக்கையா? இல்லை  உங்கள் முகம் பார்க்க நினைபவர்களுக்கு விடுக்கும்   எச்சரிக்கையா?” என்று மதுரன் நிறுத்திட.. “என்ன?” என்பது போல ஒற்றை புருவம் உயர்த்தி குழப்பாமாய் பார்த்தாள் புதியவள்.

 

“உங்கள் முகத்தை பார்த்து பயந்து, ஒருவேளை அவர்கள் உயிருக்கு ஏதும் ஆபத்து  நேர்ந்து அந்த பலி உங்கள் மீது விழுந்திடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையா!” என்று தன் கேள்விக்கான விளக்கம் தந்தான் மதுரன். “என்ன சார், நக்கலா? முன்பின் தெரியாத  பெண்ணிடம் பேசிடும் முறையா? “ என்று புதியவள் சிடுசிடுக்க, “நீங்கள் மட்டும் என்னவாம், பச்சைபிள்ளை, தூக்கி கொஞ்சுவது என்று பேசவில்லை, உங்களுக்கு ஒரு நியாயம், எங்கு  ஒரு நியாயமா?  இது பெரிய அநியாயம்!” என்று  பதிலடி கொடுத்தான் மதுரன்.

 

“ ஓ..  ஒரு பெண்ணை பார்த்ததும் ஆண்கள் வழியச்சென்று வம்பிலுக்கலாம் அதையே பெண்கள் செய்தால் தப்பு.. இதுமட்டும் நியாயமா பாஸ்?” என்று புதியவள் விதண்டாவாதம் செய்திட, மதுரனுக்கு கோபமோ!எரிச்சலோ வந்து தொலைக்காமல்..  புதியவளை மேலும் புரிந்துகொள்ளும் ஆவல் வந்ததுதான் வியப்பு. “பெண் சுதந்திரம் பற்றி நிறைய பேசுவீர்கள் போல.. நானும் பெண்களை மதிப்பவன் தான் மேடம்”என்றான் மதுரன் அடக்கமாய்.

 

“  நல்லவனாக இருந்தால் நல்லது தான்..” என்று புதியவள் புதிராய்  ராகம் பாடிடா.. ” யாருக்கு?” என்று கேள்வியாய் மதுரன் நிறுத்த..  “ அட.. வேற யாருக்கு உங்களுக்கு தான் பாஸ்..  கொஞ்சம் கெட்டவன் என்றாலும் என்னிடம் நன்றாக வங்கிக் கட்டிக்கொள்ளவேண்டுமே .. அதனால் சொன்னேன், நல்லவனாக இருந்து என்னிடமிருந்து தப்பித்துவிட்டீர்கள்” என்று புதியவள் மிடுக்காய் பதில் தர.. சற்று மிரண்டுதான் போனான் மதுரன். ஒருவேளை லேடிபோலீஸாக இருக்குமோ! மப்டியில் வந்திருப்பார்களா? என்று சந்தேகம்வர,  அவள் இருந்ததிசைக்கே பெரியகும்பிடுபோட்டு இரண்டு அடி நகர்ந்துநின்றான்.

 

“ என்ன பாஸ்.. என்னவோ கேட்டீர்கள், பதில் சொல்வதற்குள் பேச்சு எங்கெங்கேயோ சென்று வந்துவிட்டது. ” என்று வழியவந்து அவள் பேசிட. “ ஒன்னும் இல்லை மேடம் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் … ஒரு கால்டாக்ஸி பிடித்து என் வழியை நான் பார்த்துப்போகின்றேன்” என்று வெடுக்கென்று பதில் தந்தான் மதுரன்.

 

“கால் டாக்ஸியா?…இன்று முழுக்க  பந்த்.. ஊருக்குள் ஒருபையன் நடமாடமாட்டான்…  உங்கள் அருமை ஆருயிர் நண்பர் இதை சொல்லவில்லையா உங்களுக்கு..” என்று மதுரனுக்கு சளைக்காமல் பதில் தந்தாள் புதியவள்.

 

“இங்கே பாருங்கள்மேடம்… நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் ஆனால் என் ஆருயிர் நண்பன்பிரபுவை பற்றி பேசும் உரிமை உங்களுக்கு இல்லை” என்றுமதுரன்கூறிட.. அவனையேவிசித்திரமாய் பார்த்தபடி“உங்கள் ஆருயிர் நண்பனை சொல்ல எனக்குத் தான் அதிகஉரிமை உள்ளதுபாஸ்..” என்றவள், மதுரன் குழப்பமாய் பார்த்திட“ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் இல்லையா? அந்த உரிமையை சொன்னேன்” என்று முடித்தாள் புதியவள்.

 

“ஏற்கனவே வெயில்வேறு என் மூளையைக் குடைந்து கொண்டிருக்கின்றது இதில் நீங்கள் வேறு!” என்று தன் பெட்டியை தூக்கிக்கொண்டு நடக்கத் துவங்கினான் மதுரன். பஸ் ஸ்டாப் விட்டு சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்தவனை.. தன் வண்டிகொண்டு  வழிமறித்து நின்றாள் அவள்.

 

“ஹலோ  மேடம் உங்களுக்கு என்னதான் வேண்டும்? அமைதியாய் விலகிசெல்பவனையும் விடாமல் வழிமறித்து வம்புசெய்கின்றீர்கள்… என் பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு.. என்னை ஈவ்டீசிங் செய்வதாய் போலீசில் ஒரு கம்ப்ளைன்ட்கொடுத்தால் போதும்.. ஆண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உங்களை கைது செய்து முட்டிக்கு முட்டி தட்டி விடுவார்கள் “ என்று விறைபாய் நெஞ்சை நிமிர்த்தி எச்சரிக்கை செய்தான் மதுரன்.

 

அவன் நின்ற தோரனையை  கண்டு தனக்குள் ரசித்து.. “என்ன போலீஸா! எனக்கே போலீஸா! என்ன பாஸ்  நீங்கள்  பூதத்திற்கே..  பூச்சாண்டிகாட்டுகின்றீர்களா! என்று தன் முகத்தில் மூடியிருந்த துப்பட்டாவை விலக்கி ஏளனமாய் புதியவள் சிரிக்க..

 

இதுவரை புன்னகையில் மலர்ந்த கண்ணை மட்டும் ரசித்து கொண்டிருந்தவன் ஏளனமாய் விரிந்து சுருங்கிய இதழில்பதித்த விழிகளை விளக்க மனமில்லாமல்.. அப்போதுதான் புரிகின்றது ஏன் இவ்வளவு நேரம் முகத்தை மூடி வைத்தீர்கள் என்று இவ்வளவு அழகை கொஞ்சம் மறைத்து வைப்பது என்னைப் போல அப்பாவிகளுக்கு நல்லது தான்..  நீங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை..” என்றவன்.

கலங்கமில்லா நிலவு

முகம் கண்டு

சலனப்பட்டு போனது

என் கல் மனம்

என்று எதிரில் இருந்தவள் அழகில் மயங்கி தன்னை மறந்து உளறினான் மதுரன்.

மதுரன் பிதற்றலை ஒருநொடி தன்னை  ரசித்தவள்.. மறுநொடி சுதாரித்து “ஹலோ மிஸ்டர் என்ன வாய்க்கு வந்ததையெல்லாம் உளரிக்கொண்டிருக்கிறீர்கள்.. நீங்கள் மதுரன் தானே சொந்த ஊர் கம்பம் சரிதானே! உங்கள் வேலை விசயமாக  இங்கு ஒரு கல்லூரிக்கு செமினாருக்கு வந்தவர்.. கல்லூரியில் உங்களுடன் படித்த பிரபு என்பவருக்கு தான் இவ்வளவு நேரம் காத்திருந்தீர்கள்”என்று மதுரன் விபரம் முழுவதையும் வரிசையாய் அடுக்கினாள் புதியவள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: