Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 07

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 07

“என்ன என்னையே கேள்விகேட்கின்றாயா?  நான் செய்தது எல்லாம் உன் நன்மைக்கு மட்டும் தான்,  நீ சொல்லவில்லை என்றாலும்  எங்களுக்கு தெரியாதா என்ன?  உனக்கு சிறு  காயம்பட்டாலும் துடிதுடித்து போவோம், காட்டுமிராண்டி போல அடித்திருக்கின்றான், இதையே காரணமாய் வைத்து உள்ளே தள்ளி கம்பி எண்ண வைத்திருக்கமுடியும், ஆனால் காதல் கீதல் என்று கதையளந்து நீ அதை  செய்யவிடாமல் தடுத்துவிடுவாய் என்றுதான்   விவாகரத்திற்கு வேண்டிய ஏற்பாடு செய்தேன்,    சிறுவயதிலிருந்து உனக்கு வேண்டியதை பார்த்துபார்த்து செய்துகொடுத்த எங்களுக்கு   உனக்கான வாழ்க்கைதுணையை  தேர்ந்தெடுக்கத் தெரியாதா என்ன?  தானாய் தறிகெட்டு அலைந்து கண்ட  தருதலைகளையும் மாப்பிளை என்று கொண்டுவந்து நிறுத்துவாய் நாங்கள் ஏற்கவேண்டுமா? “ என்று ராகவ்வை பார்த்து கோபமாய் வினவினார்.

“என்னை என்னவேண்டுமென்றாலும்  சொல்லிக்கொள்ளுங்கள், அதற்கு  எல்லா  உரிமையும் உங்களுக்கு உள்ளது, ஆனால் என் கணவரை ஏதும் சொல்லக்கூடாது” என்று தன் கணவருக்காக  தந்தையை எதிர்க்கத் துணிந்தாள் ரம்யா.

“நேற்று வந்தவனுக்காக,  பெற்றுவளர்த்த  என்னையே எதிர்க்கின்றாயா? இப்போது தெரியாது இன்னும் கொஞ்சநாள்  கடந்து இந்த காதல் கசக்க துவங்கியதும்  பிள்ளை பாசத்திற்கு மனம் ஏங்கிடத்துவங்கிவிடும், அப்போது  உன்னால் அந்த ஆசையை நிறைவேற்றிட முடியாது என்று தெரியும் போது.. இரக்கமே பார்க்காமல்   உன்னை நடுத்தெருவில்  நிறுத்தவும் தயங்கமாட்டான்…  போக நதியற்று, என் வீட்டு வாசலில்   நிற்பாய்” என்று  மகளென்றும் பாராது சபித்தார், அந்த பாசமுள்ள தந்தை.

தந்தையின் வார்த்தைகளில் வேதனை கொண்டு ரம்யா, மௌனமாய் கண்ணீர் சிந்திட, ஆறுதலாய் தோளோடு அனைத்து   ஆறுதலாய் அரவணைப்பு தந்த ராகவ், தந்தை மகளுக்குமான விவாதத்தில் தலையிடாமல் ஒதுங்கியிருந்தவன், முதல் முறை வாய் திறந்து, “என் ரமியை எந்த நிலையலும் கைவிடமாட்டேன்…    என் மனைவியை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டுமென்று  எனக்கு தெரியும், நீங்கள் சொன்னது போன்ற  நிலை என்றுமே என் ரமிக்கு நேரஅனுமதிக்கமாட்டேன், இப்போது  நடந்ததில் எனக்கும் பெரியபங்கு உள்ளது, உங்கள் வீட்டில் வாழ்ந்து போல வசதியை ஏற்படுத்திக்கொடுக்க  நினைத்தேனே தவிர, அவள் விரும்புவது  வசதியான வாழ்க்கையை அல்ல, என் அருகாமையையும் அளவில்லா காதலையும் என்பதை மறந்துபோனேன், இப்போது அதை தெளிவாக புரிந்துகொண்டேன், இனி இந்த தவறு நேராது மாமா.. உங்கள்  மகளை நம்பி என்னுடன் அனுபிவையுங்கள்” என்று மரியாதையுடன் வேண்டுதல் வைத்தான் ராகவ்.

“என்னடா.. நடித்து நடித்து என் மகளை உன்  மயக்கத்திலேயே வைத்திருப்பது போல என்னையும், வார்த்தையால் வீழ்த்தப்பார்க்கின்றாயா? அது என்னிடம் நடக்காது, ஒழுங்குமரியாதையாய் எவ்வளவு பணம் வேண்டுமோ! அதை  வாங்கிகொண்டு என் மகளை விட்டு விலகிச்சென்றுவிடு”  என்று குரலை உயர்த்தி மிரட்டல் விடுக்க, அவர்களின் இடையில் வந்து நின்ற மதுரன்..   “அடடா நீங்கள் பேசுவதை பார்த்தால், கவுன்சிலிங்  தேவைப்படுவது  உங்களுக்கு தான் போல…   உங்கள் கோபத்தை பார்க்கும் போது இரத்தக்கொதிப்பு அதிகம் இருக்கும் என்று  தோன்றுகின்றது, நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது என்பது என் தனிப்பட்ட ஆலோசனை.. ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம்” என்று சூழ்நிலையை மாற்றும் விதமாய் பேச்சுக்கொடுத்தான் மதுரன்.

“என்ன கிண்டலா? எல்லாம் உன்னால் வந்தது, நீ தான் என்னனவோ பேசி என் மகள் மனதை கலைத்துவிட்டாய்,”என்று தன் கோபத்தை மதுரன்  புறம் திருப்பினார் ரம்யா தந்தை.

“என்ன சார் உங்கள் மகள் என்ன  பச்சைக்குழந்தையா? யார் என்ன சொன்னாலும் நம்பி ஏமாறுவதற்கு,  காதல் என்று வந்து நின்றால் முதலில் பெற்றவர்கள் கேட்கும் கேள்வி…   பெற்றுவளர்த்த எங்களுக்கு தெரியாதா? சரியான வாழ்க்கைத்துணை அமைத்துக்கொடுக்க, இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன், பிள்ளைகள்  உணர்வுகள் கொண்ட உயிரா? இல்லை உங்கள் விருப்பதை மட்டும் நிறைவேற்றிவைக்கும் ரோபோட்டா?…   பிள்ளைகள்   பெற்றவர்களுக்கு கடவுள் கொடுத்த வரம்,  அவர்களுக்கென்று தனிப்பட்ட உணர்வுகளும்  விருப்பங்களும் உண்டு என்பதை முதலில்  புரிந்துகொள்ளுங்கள், அதை விட்டு நீங்கள்  கண்ட கனவுகளையும், சாதிக்க முடியாத லட்சியங்களை அடைந்திடும் கருவியாக  பார்க்காதீர்கள்.” என்று நிலைமையை புரியவைக்க முயன்றான் மதுரன்.

கோபம் தணியவில்லை என்றாலும், தன் முன் நியாயமாக  பேசிடும் மதுரன் முன் குரலை உயர்த்த மனமில்லாமல், “என் தவறு தான் எல்லாம் என் தவறு தான் பாசமாய் வளர்த்து பார்த்து பார்த்து  எல்லாம் செய்தேன், எல்லாமே என் தவறு மட்டும் தான், போதுமா? என் மகள் மீது கொண்ட பாசத்தில், என் மகள் எனக்கு மகளாக  திரும்பி வர வேண்டும் என்ற ஆசையில், தகப்பனாய் செய்யக்கூடாத.. வேலை செய்தேன், இங்கு நான் மட்டுமே தப்பானவன் போதுமா?” என்று மதுரனிடம் கூறிவர்,  தன் மகளை நோக்கி  “இரண்டாவது  முறையாக என்னை அவமானப்படுத்திவிட்டாய், இனி எந்த சூழ்நிலையிலும் என் முகத்தில் முழிக்காதே”  என்றவர்,  தன் தோழன் மற்றும் உறவினன் மேலதிகாரி புறம் திரும்பி “கோர்ட்டில் கவுன்சிலிங் செல்ல வேண்டும் என்று சொன்னதும், நீ இருக்கின்றாய் என்ற  தைரியத்தில் தான் இங்கு வந்தேன், நீயும் நம்மவைத்து கழுத்தறுத்துவிட்டாய்,” என்றபடி ,  அறையைவிட்டு வெளியேறிட  முயன்றார்.

அவர் வழியை மறித்து “இவ்வளவு பாசம் வைத்த நீங்கள் உங்கள் மகள் காதல் என்று வந்து நின்றபோதே, உங்கள் அந்தஸ்து கௌரவம் எல்லாவற்றையும்  ஒதுக்கிவைத்து,  மகள் மீது கொண்ட அன்பை மட்டும் மனதில் நிறுத்தி,  அவர்கள் காதலிக்கும் பையன் நல்லவனா?, அவன் குணம் எப்படி?, அவனுடன் வாழ்ந்தால் உங்கள் பெண் வாழ்வு நன்றாக இருக்குமா? என்று மட்டுமே யோசித்திருக்கவேண்டும்,  ஒருவேலை அவர்கள் தவறான ஆளை தேர்வு செய்திருந்தால், அவர்கள் புரிதலில் உள்ள தவறை.. ஒரு தந்தையாய் சரியான முறையில் புரியவைத்து,  மனம் மாறும் வரை காத்திருந்திருக்கவேண்டும், அதைவிட்டு காதல் என்று வந்து நின்றதும், ஊர் என்ன சொல்லும், உறவு என்ன நினைக்கும் என்று வறட்டுகௌரவம் பார்த்து, அவசர அவசரமாய் வேறு  திருமணத்திற்கு ஏற்பாடு செய்தீர்கள், அதுதான் அதுமட்டும் தான் அவர்களின்   அவசரமான திருட்டு கல்யாணத்திற்கு காரணமாகிப்போனது, இல்லையென்றால் காதலுக்காக நான்கு வருடம் காத்திருக்க தெரிந்தவர்களுக்கு உங்கள் சம்மதத்திற்காக மேலும் இரண்டு அல்லது மூன்று வருடம் காத்திருப்பது பெரியகாரியம்  அல்ல” என்று பொறுமையாய் ரம்யா தந்தை  தவறை விளக்கியவன், தன் தவறு உணர்ந்த வகையில்  அமைதியாய் நின்றவர் நிலைகண்டு, நெருடலாய் உணர்ந்த மதுரன்.

“முழுத்தவறும் உங்கள் மீது மட்டும் என்று பழிபோடமாட்டேன் சார், உங்கள் மகள் மற்றும் மருமகனும்   நடந்த தவறில்  சரி பங்குவகித்திருகின்றனர்,  நீங்கள் கண்மூடித்தனமாய் காதலை எதிர்க்க துவங்கியதும் பொறுமையாய்…  அவர்கள்  காதலை உங்களுக்கு உணர்த்தியிருக்க வேண்டும், இந்த காலத்தில் யாரும் யாரையும் காட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க முடியாது,  அவர்கள் கொண்ட  காதலில் திடமாயிருந்து,  எத்தனை காலமானாலும் உங்களை சாமதானம் செய்து உங்களின் முழுசம்மதத்துடன்  காதலை அடைந்திருக்க வேண்டும்,  இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, இருபக்கத்தினரும் அவரவர் தவறு  உணர்ந்து இனியாவது ஒருவருக்கொருவர் மன்னித்து விட்டுக்கொடுத்து சந்தோசமாய் இருக்கலாம் ”  என்று பொறுமையாய் நடந்த தவறையும் திருத்தும் வழியையும் எடுத்துக் கூறினான், மதுரன்.

பதிலேதும் கூறாமல் அமைதியாய் ரம்யா தந்தை வெளியேறிட, கலக்கத்துடன் மதுரன் முகம் பார்த்த, ரம்யாவை பார்த்து “என்னமா, அவருக்கும் கொஞ்சம் அவகாசம் வேண்டுமல்லவா? மனதை போட்டுக்குழப்பி என் நண்பனை சோதிக்காதே! இனி  என்ன பிரச்சனை வந்தாலும் உங்களுக்குள்  பொறுமையாய் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று அண்ணனாய் அறிவுரை வழங்கினான் மதுரன்.

தம்பதியர் விடைபெரும் பொழுது, மதுரனை தோழமையுடன் கட்டியனைத்த ராகவ், அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “பலே கில்லாடி  நீங்கள் மதுரன்  குரு, அதிகம் பேசாமல் எங்களை பேசவைத்தே காரியம் சாதித்துக் கொண்டீர்கள்” என்று மெச்சுதலாய் கூறிட.. “நான் கில்லாடி என்றால் நீங்கள் கேடி போல, என் திட்டத்தை முன்பே கண்டுபிடித்துவிட்டீர்கள், என்று வினவினான் மதுரன்.  “இந்த விபரம் கூட இல்லை என்றால் இவ்வளவு சீக்கிரத்தில் இந்த வளர்ச்சி அடைந்திருக்க முடியாதே மதுரன் குரு… உங்கள் திட்டம் என்னவென்று ஓரளவு யூகித்ததால் தான் நானும் என் காதல்கதை  முழுவதையும் சொன்னேன், இல்லையென்றால்  முன்பின் தெரியாதவர்களுக்கு எல்லாம் என் வாழ்கை கதையை விளம்பரப்படுத்துவேனா என்ன?” என்றான் ராகவ்.

“ரொம்ப நன்றி  அங்கிள், நீங்கள் மட்டும்  சரியான ஆளிடம் எங்களுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்யவில்லை என்றால்  இந்தநேரம் நாங்கள் பிரிந்திருப்போம்,” என்று நன்றியுடன் தன் உறவினர் மேலதிகாரியிடம் கூறினாள் ரம்யா.

“நன்றியெல்லாம் எதற்குமா! நீ நான் பார்த்து வளர்ந்த பெண், உனக்கு ஒரு நல்லது நடந்தால் அது எனக்கும் தான் சந்தோசம், உன் அப்பா வந்து, கோர்ட் கோஸ் நடந்தது கவுன்சிலிங் செல்லச்சொன்னார்கள், உன் அலுவலகத்துக்கு தான் வருவேன் என்று சொன்னதும், முதலில் மாப்பிளை பற்றி தான் விசாரித்தேன், நான் விசாரித்த வரை நல்ல தங்கமான பையன்,  நீ அவருடன் நிச்சயம் சந்தோசமாய்  இருப்பாய் என்று புரிந்து கொண்டேன், உங்களுக்கு ஏற்பட்ட இடைவெளியை பக்குவமாய் பேசினால் மட்டுமே சரிசெய்யமுடியும் என்று தோன்றியது,  வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல  நாசுக்காய் பேசிதவறை புரியவைக்க   இந்த அலுவலகத்தில் மதுரனைவிட்டால்  வேறு ஆள் இல்லை, அதனால் தான் அவரின் பொறுப்பில் உங்களைவிட்டேன், உன் அப்பாவைப் பற்றி கவலைப்படாதே கூடிய சீக்கிரம் அவனே தவறை உணர்ந்து திரும்பி வருவான்”    என்று ஆறுதல் கூறனார் மேலதிகாரி.

இருவரும் கிளம்பச் சென்றதும், மதுரனிடம் தனிமையில் பேசினார்  மதுரனின் மேலதிகாரி, “உன்னால் மட்டும் தான் முடியும் என்று நம்பினேன், என் நம்பிக்கை வீண்போகவில்லை, மது, வெரிகுட் ஜாப்,” என்று பெருமிதத்துடன் பாராட்டினார்.

“நீங்கள் இந்த கேஸ்சை என்னிடம் கொடுத்த போதே புரிந்து கொண்டேன்..     இவர்கள் சேரவேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமென்று , அருமையான ஜோடி சார், இருவரும் ஒருத்தருக்கொருத்தர் அந்த அளவிற்கு காதலிக்கின்றார்கள்,” என்று மதுரன் சிரிக்க, “உண்மை தான் அன்பான ஜோடியும் கூட, நீ தான் எந்த காதல் ஜோடிகளையும் பிரிய அனுமதிக்கமாட்டாயே  எதையாவது பேசி சேர்த்து வைத்துவிடுவாய் என்று தெரிந்துதான்  உன்னிடம் அனுப்பிவைத்தேன்” என்றார் அதிகாரி.  “ நாம் உயிருக்கு உயிராய்  நேசிக்கும் ஒருவரை  பிரிந்து வாழ்வது, எவ்வளவு கொடுமை என்பதை  அனுபவித்துக்கொண்டு இருப்பவன் சார்..  அந்த வேதனையை மற்றவர்கள்  அனுபவிக்க கூடாது  என்று நினைகின்றேன்,

“எல்லாம் சரி, நீ எப்போது திருமண விருந்து வைக்கப்போகின்றாய்” என்று உரிமையாய் கேள்வி எழுப்பினார் அதிகாரி,  இதுவரை மலர்ந்திருந்த முகம் வாட “ என் கதை என்னவென்று தெரிந்தே நீங்கள் இப்படி கேட்கலாமா சார், இனி என் வாழ்வில் என்ன இருக்கிறது,  இதோ இப்போது வந்தார்களே…  அவர்களை போல காதல் ஜோடிகளை சேர்த்துவைத்துக் கொண்டே காலத்தை ஓட்டவேண்டியது தான்”என்று விரக்தியாய் சிரித்தான் மதுரன்.

“எப்போதோ முடிந்து..  உன் வாழ்வில் கடந்து சென்ற காதலுக்காக, நீ இப்படி தனிமரமாய் வாழ நினைப்பது எந்தவிதத்தில் நியாயம் மது, எல்லோருக்கும் அறிவுரை சொல்லுபவன் நீ உனக்கு நான் சொல்லவேண்டியதில்லை, இல்லாத காதலுக்கு ஏங்குவது எந்த விதத்தில் நியாயம் மது…    உனக்கென்று ஒரு துணை வேண்டாமா?” என்றிட … “முடிந்தது என்று நீங்களும்  மற்றவர்களும் தான் நினைத்துகொண்டு இருகின்றீர்கள் சார், ஆனால் என் மனதில் நீங்காத காதலுடன்  என் பூமதி  இன்னும்  வாழ்ந்து கொண்டுதான் இருகின்றாள்,  என் மனதோடு மலர்ந்த வாடாத மலர் அவள் ” என்று காதலுடன் கண் மூடிக்கூறினான் மதுரன்.

“உன்னை திருத்தவே முடியாது,   உன்னிடம் பலமுறை கூறிவிட்டேன்… இன்னும் உன்னை நீ மாற்றிக்கொள்ளவேமாட்டேன் என்கின்றாய், இனி அவளே நேரில் வந்து சொன்னால் தான் நீ  உன் முடிவை மாற்றிகொள்ளவாய் போல..   உன் வாழ்விலும் முடிவிலும்  மாற்றம் நிகழவேண்டும் என்பதற்காவது,  அவள் மீண்டும் ஒருமுறையேனும்  உன் முன் வரவேண்டும்” என்று ஆத்மாத்தமாய்  கூறினார் அதிகாரி.

“நடக்கவே நடக்காத ஒன்றுக்காக வேண்டுதல் வைக்கின்றீர்கள் சார், பாவம் அந்தக்கடவுள், ஒருவேலை நீங்கள் சொன்னது போல அவளே நேரில் வந்து சொன்னால், என் முடிவை மாற்றிக்கொள்ளவதை பற்றி யோசிக்கின்றேன்” என்று மலுப்பளாக பதில் தந்து வெளியேறிய மதுரனை அவன் நண்பன் ஜெய்  வந்து வழிமறித்தான்,  “ஏன்டா, உனக்கு நான் என்ன பாவம் செய்தேன், ஒரு போன் செய்து உஷாராய் இரு என்று சொன்னது ஒரு குத்தமா? அதுக்கு எதுக்குடா அந்த கத்துகத்தினாய், நீ கத்திய கத்தலில் என் காது கிழிந்துவிட்டது,” என்று பொருமினான் ஜெய்.  “சும்மா உலுலாய்க்கு நண்பா… “என்று தன் கவலை மறக்க சிரித்து “சரிவா இன்று நான்  தான் உனக்கு ஸ்பான்சர்.. என்ன வேண்டுமோ வாங்கிக்கொள்… “என்று நண்பன் தோள்களில் கைபோட்டு அழைத்துச்சென்றான் மதுரன்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: