Tamil Madhura கதைகள்,கல்யாணக் கனவுகள்,தொடர்கள்,யாழ் சத்யா யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 18

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 18

கனவு – 18

 

அதுல்யாவின் திருமணம் தமிழ், சிங்கள இரு முறைகளின்படியும் வெகுவிமரிசையாக கண்டியில் நடந்தேறியது. வைஷாலி, சஞ்சயன் நாலைந்து நாட்கள் அங்கேயே சென்று தங்கி நின்று சந்தோசமாகக் கொண்டாடி விட்டு வந்தனர்.

 

திருமணம் முடித்த கையோடு அதுல்யாவும் கண்டியிலேயே வசிக்க ஆரம்பித்தாள். அவள் நீண்ட காலமாகக் கேட்டுக் கொண்டிருந்த இடமாற்றமும் வந்து விட அவள் தனது குடும்பத்தினருடன் தங்கிக் கொண்டாள். இங்கே வைஷாலி பாடுதான் பெரும் திண்டாட்டமாகப் போய் விட்டது.

 

அதுல்யா சென்றமையால் இவள் தனியாகத் தங்க வேண்டிய நிலை ஏற்பட வைஷாலியை விட சஞ்சயன் தான் என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தான்.

 

“இப்ப எதுக்கு சஞ்சு இவ்வளவு யோசிக்கிறாய்? அதுல்யா நைட் டியூட்டி போனால் நான் தனியாகத்தானே இருக்கிறனான். இப்பவும் அது போல இருந்திட்டு போறன். இதுக்குப் போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிறியோ தெரியாது…?”

 

“சும்மா சின்னப் பிள்ளை போல கதைக்காதை… அதுல்யா என்ன ஒவ்வொரு நாளும் இரவு வேலைக்குப் போறவளே… இல்லைத்தானே… அக்கம் பக்கம் இருக்கிறவங்களுக்கு அவள் இரவு வேலைக்குப் போறது தெரியாது தானே. ஸோ ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிறியள் என்று தானே நினைப்பினம். இப்ப நீ தனியாக இருக்கிறது என்று தெரிய வந்தால் எவன் வந்து வால் ஆட்டுவானோ? அந்த மனேஜர் வேற எப்ப பார்த்தாலும் ஏதாவது குடைஞ்சு கொண்டிருக்கிறான்…”

 

“இங்க பாரு சஞ்சு… இந்த ஏரியா சேப்டி என்று தானே இங்க வீடெடுத்து இருக்கிறம். அப்பிடி எவன் கதவை உடைச்சுக் கொண்டு இங்க வரப் போறான்? நீ தேவையில்லாமல் யோசிச்சுக் குழம்பாதை…”

 

“என்ன குழம்பாதை? கள்ளன் வந்திடுவானோ என்ற பயத்தை விடு. வருத்தம், துன்பம் வந்தால் தனியாக இருந்து என்ன செய்யப் போறீயாம்?”

 

“சஞ்சு…! இங்க பாரு… நான் டிவோஸ் பற்றி  முடிவெடுத்த போது இப்பிடியான சந்தர்ப்பங்களையும் எதிர்பார்த்தன் தான். எல்லாத்தையும் சமாளிக்கத் தான் வேணும். அதனால நீ இந்தக் கதையை இதோட விடு.”

 

அவள் சொன்னாலும் அவன் விட்டால் தானே.

 

“அங்கிள், அன்ரியை வரச் சொல்லலாம் என்று பார்த்தால் விசாலி பிரெக்னன்ட். புருஷனுக்கு இப்ப பார்த்து கொழும்புக்கு இட மாற்றம் குடுத்திருக்கிறாங்கள்…”

 

கூறிக் கொண்டே போனவனின் முதுகில் எட்டி ஒன்று போட்டாள் வைஷாலி.

 

“அடியே… அடிக்காதையடி… நோகுது…”

 

“நீ இப்ப புலம்பிறதை விடவே மாட்டியாடா லூசு…?”

 

“சரி… நான் ஒண்டும் கதைக்கேல்ல… அதுக்கு இப்பிடியாடி அடிப்பாய்…”

 

அவன் அருகில் ஸோபாவில் அமர்ந்தவள், அவன் முதுகைத் தடவி விட்டுக் கொண்டே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

 

“இப்ப இந்தக் கதையை விடுடா… எங்கேயாவது வெளியே போவம் வா… படத்துக்குப் போவமா…? விஜய் சேதுபதிட சூப்பர் டீலக்ஸ் டிரெயிலரே நல்லா இருந்துச்சு… எந்தத் தியேட்டரில ஓடுது பார்…”

 

“சரிடி முயல்குட்டி…”

 

இருவருமாய் திரைப் படத்திற்குச் சென்றனர். அன்றைய சண்டை அத்தோடு முடிந்தது.

 

உண்மையில் வைஷாலி தன்னந்தனியாக வாழ்க்கையை நன்றாகவே வாழப் பழகிக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சஞ்சயன் தான் எப்போதும் அவளை எண்ணியே பயந்து கொண்டிருந்தான்.

 

வார விடுமுறை நாள் ஒன்றில் இருவரும் மதிய உணவை முடித்து விட்டு வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். நீண்ட நாளாய் தனது மனதை உறுத்திய விடயத்தைப் பேச ஆரம்பித்தாள் வைஷாலி.

 

“சஞ்சு…”

 

“ம்…”

 

“உன்னோட முக்கியமான ஒரு விஷயம் கதைக்க வேணும்…”

 

“ம்… சொல்லுடி…?”

 

“உன்ர பியூச்சர் பிளான் என்னடா?”

 

“என்டால்….? விளங்குற மாதிரி கதையடி சொங்கி…”

 

“நீ இப்பிடியே தனியாக இருக்கப் போறியா…? அவந்தில உனக்கிருந்தது ஒரு கிரஸ்… அதை நினைச்சு இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்பிடியே இருக்கப் போறாய்?”

 

“கிரஸ்ஸோ என்னவோ எனக்குத் தெரியாது வைஷூ. ஆனா எந்தப் பிள்ளையையும் நான் என்ர வைஃப் என்று நினைச்சுப் பார்த்தால் உடன அவந்திட முகம் தான் கண்ணுக்கு முன்னால வந்து நிக்குது. இந்த லட்சணத்தில நான் எப்பிடி கலியாணம் கட்டிக் குடும்பம் நடத்துறது?”

 

“நீ இப்பிடியே யோசிச்சிட்டு இருந்தால் சரி வராதுடா… அதெல்லாம் மஞ்சள் கயிறு மஜிக் வேலை செய்யும்… அதெல்லாம் கலியாணம் முடிய பொண்டாட்டி மேல அக்கறை வரும். நீ கவனமாகப் பார்த்துக் கொள்ளுவாய்…”

 

“உனக்கு நான் சொல்ல வாறதே புரியேல்லையா வைஷூ…? பொண்டாட்டியை  நான் அக்கறையாகப் பார்க்கிறேனா இல்லையா இல்லை இங்க பிரச்சினை. அவளுக்கு நான் உண்மையாக இருக்கிறேனா என்றதுதான்டி பிரச்சினை. எனக்கு அப்பிடியொரு போலி வாழ்க்கை வாழ இஷ்டமில்லை… அதை விடு…

 

அதென்ன மஞ்சள் கயிறு மஜிக்…? நீ முரளியை அவ்வளவு உருகி உருகிக் காதலிச்சும் கூட உங்களுக்குள்ள அந்த மஞ்சள் கயிறு, மஜிக் பண்ணேலையா…? சும்மா உந்தக் கதைப் புத்தகங்களையும் வாசிச்சுப் படங்களையும் பார்த்து இப்பிடிக் கதைக்கிறதை நிப்பாட்டு வைஷூ…

 

வாழ்க்கையில இவ்வளவு பட்டதுக்குப் பிறகும் இப்பிடி லூசுத்தனமாகக் கதைக்காதை சொல்லிப்போட்டன். எனக்கு இந்த வாழ்க்கை சந்தோசமாகத் தான் இருக்கு. இப்பிடியே இருந்திட்டால் நிம்மதி…”

 

“உண்மையைச் சொல்லு சஞ்சு… என்னைச் சந்திக்கிறதுக்கு முதல் வேணும் என்றால் நீ அவந்தியை நினைச்சுக் கலியாணம் வேணாம் என்றிருக்கலாம். இப்ப நீ, நான் தனியாக இருக்கிறன் என்று ஒன்றும் கலியாணம் செய்யாமல் இல்லைத்தானே… எனக்காக ஒன்றும் உன்ர வாழ்க்கையைத் தியாகம் செய்யேல்லைத்தானே…”

 

“சத்தியமாக இல்லையடி… உன்னைச் சந்திச்ச உடனே மட்டும் அவந்திட நினைப்பு இல்லாமல் போயிடுமா என்ன? ஆனால் இவ்வளவு நாளும் ஏன் வாழுறன் என்று தெரியாமல் ஒரு பிடிப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தன். ஆனால் இனிமேல் எனக்கு நீ இருக்கிறாய்… உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுத்தர வேணும். உன்ர பிள்ளை என்னை சஞ்சு என்று கூப்பிட வேணும். அப்ப தான் எனக்கு முழு சந்தோசம் கிடைக்கும் வைஷூம்மா. நாளைக்கு என்ர குளோஸ் ப்ரெண்ட் ஒருத்தன் இங்க வாறான்டி… உன்னைப் பார்க்கத்தான்…”

 

“என்னைப் பார்க்கவோ? எதுக்கு?”

 

“அவனும் கலியாணம் கட்டி மனுசி ஒரே சந்தேகமாம். கடைசில பார்த்தால் அவள் வேற யாரையோ விரும்பி இருக்கிறாள். அவனோடயே போய்ட்டாள். இப்ப இவன் டிவோஸ் குடுத்திட்டுத் தனியாகத் தான் இருக்கிறான். நல்ல குணமான பொடியன். உனக்கும் அவனை வடிவாத் தெரியும் வைஷூ… நானும் அவனும் கம்பஸ்ல ஒன்றாகப் படிக்கேக்க நல்ல குளோஸ் ப்ரெண்ட் ஆகிட்டம். எந்த வம்பு தும்பும் இல்லாதவன். அதுதான் நீங்க ரெண்டு பேரும் கதைச்சுப் பார்த்துப் பிடிச்சுதெண்டால் கலியாணம் கட்டிட்டால் நீயும் தனியாக இருக்கத் தேவையில்லை. உனக்கும் வாழுற வயசு தானே வைஷூ… பழசை மறந்திட்டு புது வாழ்க்கையை ஆரம்பி…”

 

அவன் சொல்வதையே கண்களில் கண்ணீர் குளம் கட்டக் கேட்டுக் கொண்டிருந்தவள் ஆவேசமாக எழுந்தாள்.

 

“நான் உன்னை என்ர உயிர் நட்பு என்று நினைச்சுக் கொண்டிருக்கிறன். ஆனால் அப்படியில்லை என்று வடிவாக விளங்கிட்டுது. இவ்வளவு நாளும் நான் உனக்குப் பாரமாகத்தான் இருந்திருக்கிறன் என்ன? அப்பிடியில்லை என்று நீ வாயால சொன்னாலும் அது பொய் என்று இப்ப தெரிஞ்சிட்டுது. எப்ப இருந்து நீ புரோக்கர் வேலை பார்க்கத் தொடங்கினனீ?

 

நான் கேட்டனா உன்னை? எனக்குத் தனியாக இருக்கக் கஷ்டமாக இருக்கு. துணைக்கு ஆள் வேணும் என்று. யாரைக் கேட்டு நீ எனக்கு இப்ப மாப்பிள்ளை பார்க்கிறாய்? உன்ர பிரெண்டுக்கு பொம்பிளை வேணும் என்றால் அதுக்கு நான் தான் கிடைச்சனா? எனக்குப் பிள்ளை வேணும் என்று கேட்டனா நான்?

 

இவ்வளவு நாளாகக் கதைக்கிறமே முரளிக்கும் எனக்கும் இடையில என்ன நடந்தது என்று ஒருமுறையாவது நீ கேட்டியாடா? நீ கேட்பாய்… உன்னட்ட சொல்லி அழுதாலாவது என்ர மனசில இருக்கிற பாரம் குறையுமோ என்று நினைச்சு அந்த நாளுக்காக நான் வெய்ட் பண்ணிட்டிருந்தன். ஆனால் நீ அதைப் பற்றி எதுவும் அக்கறைப்படாமல் இப்ப புதுசா ஒரு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருக்கிறாய்…

 

உண்மையாக் கேட்கிறன். நீ என்ர ப்ரெண்ட்தானா? முந்தி என்னடா என்றால் முரளி சொன்னான் என்றதுக்காக என்னை விட்டிட்டு கண்காணாமல் ஓடினாய்… அப்பிடிப் போகேக்க கொஞ்சமாவது என்னைப் பற்றி யோசிச்சுப் பார்த்திருப்பியா?

 

சஞ்சு சஞ்சு என்று மூச்சுக்கு முந்நூறு தரம் எல்லாத்தையும் உன்னட்டயே சொல்லிப் பழகிட்டு, திடீரென்று நீ காணாமல் போனதும் எப்பிடித் தவிச்சிருப்பன் என்று கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா? என்ர கலியாணத்துக்குக் கூட உனக்குச் சொல்ல முடியாமல் எவ்வளவு கவலைப்பட்டன்.

 

முரளி உன்னையும் என்னையும் சந்தேகப்படுறான் என்று அப்பவே சொல்லியிருந்தால் நான் முரளியையே வேணாம் என்றிருப்பனேடா… எதுக்கு இப்பிடி எதையுமே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனாய்?

 

நீ நல்லவனாக இருக்கிறதுக்காக, என்ர மனசோட என்ர உணர்ச்சிகளோட விளையாடதை சஞ்சு… சரி அப்போ தான் சின்ன வயசு. உனக்கும் பக்குவம் இல்லாமல் என்னை விட்டிட்டுப் போனாய். இப்ப கூட நடந்தது எதுவுமே தெரியாமல் எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறியே…? இதைச் சொல்ல உனக்கு எப்பிடி மனசு வந்தது? ஐ ரியலி ஹேட் யூ சஞ்சு…”

 

அழுதழுது ஆவேசமாகக் கத்தியவள், தனது அறைக்குச் சென்று ஒரு பெரிய ட்ரவலிங் ஃபாக்கை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து அவன் முன்னே போட்டாள்.

 

“இந்தா… இதை எடுத்துக் கொண்டு போய் வாசி… அப்பவாச்சும் உனக்கு நான் உன்னில வைச்சிருந்த அன்பு புரியுதா பாப்பம்… ஆனால் வாசிச்சிட்டு என்னைப் பார்க்க வராதை… இனிமேல் எனக்கும் உனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இனிமேலும் உன்ர வாழ்க்கையில நான் உனக்குப் பாரமாக  இருக்க மாட்டன். நான் யாரையும் நம்பி இல்லை… என்ர வாழ்க்கை நான் வாழ்ந்திட்டுப் போறன்… எனக்கு யாரிட உதவியும் தேவையில்லை… இனி ஃபாங்குக்கோ வீட்டுக்கோ என்னைத் தேடி வராதை. என்ர முகத்திலேயே முழிக்காதை… இந்த உலகத்திலேயே நான் அதிகம் வெறுக்கிற ஆள் நீதான்….”

 

கூறியவள் தனது அறைக்குச் சென்று அறைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள். சஞ்சயனோ வைஷாலியின் நடவடிக்கைகளால் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். அவனுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தன.

 

‘அவளுக்கு நல்லது செய்யத்தானே நினைத்தேன்… எதுக்காக இப்பிடிக் கோபப் படுகிறாள்…’ என்று எண்ணியவாறு எதுவும் புரியாமல் குழம்பிப் போய் நின்றான். சிறிது நேரம் அப்படியே நின்று சிந்தித்தவன், மெதுவாக அவள் அறைக் கதவைத் தட்டினான்.

 

“ஏய் முயல்குட்டி…! உந்தப் படங்களையும் கதைப்புத்தகங்களையும் பார்த்துப் பார்த்து நீ நல்லாக் கெட்டுப் போய்ட்டாய்… பாரன் ஆளையும் கதையையும்… படத்தில கூட ஹீரோயின் இவ்வளவு எமோசனலா வசனம் சொல்லுவாளோ தெரியாது. அதிலயும் கடைசியாக ஒரு வசனம் சொன்னாய் பாரு அது வேற லெவல்டி… எனக்கு அப்பிடியே புல்லரிச்சுப் போச்சு…. அதென்னது…? நீ உலகத்திலேயே அதிகம் வெறுக்கிற ஆள் நான் தானா? ஸ்ஸ்ஸப்பா…. முடியலடி… நேற்று எந்தக் கதையில உந்த டயலொக் வாசிச்சனீ…?

 

“உனக்கு இதே வேலையாப் போச்சு… கோபம் வந்தால் கண், மண் தெரியாமல் கத்துறது… யோசிக்காமல் வார்த்தையை விடுறது… பிறகு ‘அச்சச்சோ…! இப்பிடிக் கதைச்சுப் போட்டனே’ என்று அதை நினைச்சு நினைச்சு நாள் முழுக்க அழுகிறது…”

 

இவன் கதவில் சாய்ந்தபடி பேசிக் கொண்டிருந்த போது புயலெனக் கதவைத் திறந்தாள் வைஷாலி. இதை எதிர்பார்க்காத சஞ்சயன், தடுமாறி விழப் பார்த்து அவளது தோள்களைப் பற்றிக் கொண்டு விழாமல் சமாளித்தான். அவன் கைகளை உதறியவள்,

 

“நீ என்ன சொன்னாலும் இந்த முறை எனக்கு உன்னில உள்ள கோபம் தீரப் போறதில்லை. எனக்கு மாப்பிள்ளை பாப்பியா நீ? எவனையாவது கட்டி வைச்சிட்டால் நானாச்சு அவனாச்சு என்றிட்டு நீ நிம்மதியாக இருக்கலாம் என்று தானே இப்ப மாப்பிள்ளை பார்த்திட்டுத் திரியிறாய்… அந்தளவுக்கு நான் உனக்குப் பாரமாகப் போட்டன் தானே…”

 

கூறியவள் மறுபடியும் கதவை அறைந்து சாத்திப் பூட்டிக் கொண்டாள். சஞ்சயன் எவ்வளவு பேசிப் பார்த்தும் வைஷாலி கதவைத் திறக்கவில்லை. அவள் உண்மையாகவே அதிக கோபத்தில் மனதொடிந்திருப்பதை உணர்ந்தவன், அவளை மேலும் தொந்தரவு செய்யாமல் வரவேற்பறையில் சென்று அமர்ந்தான்.

சிறிது நேரம் யோசித்தவன், இப்படியொரு மனனிலையில் மேலும் அவள் கோபத்தை அதிகரிக்க விரும்பாதவனாய் அவசரத்துக்கு என்று தன்னிடம் வைத்திருந்த சாவியால் வீட்டைப் பூட்டிக் கொண்டு வைஷாலி கொடுத்த பையோடு தனது வீட்டை அடைந்தான்.

 

அவனுக்குமே அப்படியொரு சூழ்நிலையைக் கிரகிக்கக் காலம் தேவைப்பட்டது. அவன் இதயம் மட்டும் என்ன இரும்பிலா செய்யப்பட்டது. மென்மையான சுபாவம் கொண்டவனால் ஆருயிர்த் தோழியின் செந்தணல் அள்ளி வீசிய வார்த்தைகளைத் தாங்க முடியவில்லை. அவள் மீது கோபம் வரவில்லை என்றாலும் கூட, ‘என்னை இப்படித் தப்பாகப் புரிந்து கொண்டாளே’, என்ற ஆதங்கமும் வேதனையும் மனதை வாட்டியது.

 

அவள் தந்திருந்த பையைக் கூடத் திறந்து பார்க்க மனமற்றவனாய் படுக்கையில் வீழ்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டான். எதையும் எண்ணப் பிடிக்காதவனாய் அலைபாய்ந்த மனதைக் கட்டுப்படுத்தி, மறுபடி மறுபடி ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணியவன் ஒரு கட்டத்தில் நித்திராதேவியின் வசமானான்.

 

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த விரிசல் மேலும் விரியுமா? இல்லை மீளவும் ஒட்டுமா?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 52ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 52

உனக்கென நான் 52 பேருந்தின் சக்கரங்கள் பார்வதியை எதிர்பார்த்து சுழன்றன. காவேரியின் மனதில் தன் தந்தையின் நினைவுகள் அரித்துகொண்டிருந்தன. “ஏங்க அப்பாவ அப்புடியே ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்ங்க” “காவேரி நீ புரிஞசுதான் பேசுறீயாமா” என்ற சன்முகத்தின் ஒற்றை வார்த்தையில் அமைதியானாள்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 18’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 18’

“ச்சே… இதுவும் நல்லால்ல” அணிந்திருந்த சட்டையைக் கழற்றி விட்டெறிந்தான். தரையில் அனாமத்தாய் கிடந்த ஒரு டசன் சட்டைகளுக்கு நடுவில் அந்த சட்டையும் ஒளிந்துக் கொண்டது. எதற்கு இத்தனை பாடு… இன்று காதம்பரியை சந்திக்கப் போகிறான்.   ‘டேய் அடங்குடா…. பெங்களூர்லேருந்து வந்து

ஜெனிபர் அனுவின், “காதல் குறியீடு” சிறுகதை.ஜெனிபர் அனுவின், “காதல் குறியீடு” சிறுகதை.

வணக்கம் வாசக நெஞ்சங்களே! ஜெனிபர் அனு அவர்கள், “காதல் குறியீடு” எனும் சிறுகதை ஒன்றுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளார். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை ஜெனிபர் அனுவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. காதல் குறியீடு “சார்! நான் ஒண்ணு சொன்னா தப்பா