Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 05

அத்தியாயம்-5

 

தேன்சோலை என்று கருப்பு நிறத்தில் அந்த மஞ்சள் பலகையில் தீட்டபட்டு அந்த கிராமத்திற்கு வருபவர்களை வரவேற்க அதனை ஏற்றுக் கொண்டு நாமும் செல்வோம்.

தேன்சோலை பெயரைப் போலவே ஊரூம் சோலையாய் பச்சை பசேலென இருப்புறம் இருந்த வயல்களில் பயிர்கள் அதிகாலை தென்றலின் வருடலில் தலையசைத்து மகிழ்ந்தது.

 

அந்த அதிகாலை பொழுதிலும் ஊரே எழுந்து அவரவர் தொழிலை பார்க்க கிளம்பிவிடதமிழோ  அப்பொழுதும் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான்.அரைத்தூக்கத்தில் இருந்தவனின் காதில் அன்னையின் வசவு தன்போக்கில் வந்து விழுந்தது.

 

 

“எப்போ போறான்…எப்போ வரான்…ஒன்னும் சொல்றதில்ல..வீட்டில் ஒருத்தி தனியா கிடக்காளே…நமளை காணாம தவிச்சிட்டு இருப்பாளே…என்ன ஏதுனு சொல்லுவோம்..அந்த அறிவெல்லாம் இருக்கா.. எவ்வளவு பெரிய மனுஷனாகி என்ன பிரியோஜம்..பெத்தவ மேல கொஞ்சமாவது அக்கறை இருக்கனும்…ஏதோ சத்திரத்துல இருக்கா மாதிரி…நினைச்சப்ப வரது..நினைச்சப்ப போறது…நான் நித்தம் இவன நினைச்சி வெசன படனும்…இவனுட்ட பேசி இனி பயனில்ல..பெரியய்யாட்டேயே போய் இரண்டுல ஒன்னு கேட்டா தான் இவன் சரிப்பட்டு வருவான்..”

 

என்று வசுமதி அவனை தாளித்து எடுக்க எரிச்சலோடு எழுந்து வெளியே வந்தவன்,

 

“ம்மாஆஆஆஆ…இப்போ எதுக்கு சும்மா கத்திட்டு கிடக்க..வேல வெட்டிக்கு போறவன் நாலு எடம் போக வரதான் இருப்பான்..இத ஒரு விசயமுனு பேசிட்டு இருக்க..நீ தனியா இருக்கேனு உன்கூடவே நானும் உக்கார்ந்து கிட்டா சோத்துக்கு என்னா செய்றது…இதுல ஸ்கூல் பையன டீச்சருட்ட மாட்டி விடுறா மாதிரி ஐய்யாட்ட போய் சொல்றேங்குற…”

 

என்று அவனும் பதிலுக்கு சத்தம் போட அதற்காகவே காத்திருந்தார்ப்போல் முந்தானையை வரிந்துக் கட்டிக் கொண்டு வந்த வசுமதி,

 

“உன்ன ஒன்னும் ஏன் பக்கத்துல உக்கார்ந்துக்க சொல்லுல ராசா…வெளியே போறவன் இப்போ வருவேன்..இன்னதுனு சொல்லிட்டு போறதுக்கென்ன…திடீர் திடீர்னு காண போயிடுற..ஒத்த மனிஷியா நான் என்ன தான் செய்யட்டும்…இப்ப கூட  வெளியூர் போரேனு கிளம்பினவன் நாலு நாளா ஒரு போன் கூட இல்ல..இப்ப திடீர்னு அத்த இராத்திரியில திருடன் மாதிரி வந்து படுத்து கெடக்க..என்ன வேலை செய்யுறேனு கூட தெரியல..ஏதோ… ஐயாட்ட வேல பார்க்கிறங்குற நம்பிக்கை மட்டும் தான் இன்னும் ஆறுதல இருக்கு…”

 

என்று படபடவென பொரிய தலையில் கைவைத்து,

 

“காலைலே படுத்தாதம்மா..”

 

என்றான்.

 

“ஆமாடா..நான் உன்னை படுத்துறேன் தான்..பேசாம நானும் என் புருஷன் போன மாதிரியே போயிட்டா நிம்மதியா இருப்பல்ல..”

 

என்று கண்ணை கசக்க தமிழின் மனம் உருகி விட்டது.

 

“அம்மா..என்னம்மா…பெரிய வார்த்தையெல்லாம் சொல்ற..”

 

என்று கையை பிடித்துக் கொண்டவன்,

 

“சரி..இப்ப நான் என்ன செய்ய நீயே சொல்லு..”

 

என்று தணிந்து வந்தான்.

 

“எனக்கு உன்னோட மல்லு கட்ட முடியல..உனக்கொரு கல்யாணத்த பண்ணி அவ வந்தா தான் நீ வீட்டுல அடங்குவா…நானும் என் மருமக வந்திட்டால் நீ எப்படியோ இருனு நான் அக்கடானு இருப்பேன்..  ”

 

“என்னம்மா..என்னுட்ட சண்டை போட்டு அலுத்து போயிடுச்சுனு.. மாமியார்-மருமக சண்டைக்கு ரெடியாகிட்டியா…”

 

“பிச்சிடுவேன் படவா..என்னை பாத்தா சண்டகாரி போல இருக்கா..”

 

“சரி..சரி பொங்காத..உனக்கு என்ன விருப்பமோ செய்..நீ யாரை சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்..சரியா முகத்தை மட்டும் தூக்கி வச்சிக்காத..”

என்று செல்லம் கொஞ்ச இப்பொழுது தான் லேசாய் வசுமதி முகத்தில் புன்னகை தோன்றியது.

 

“நெசமா..”

 

“சத்தியமாம்மா..”

 

“அப்போ சரி..உன சம்மந்தப்பட்ட எந்த விசயத்தையும் ஐயாட்ட கேட்காம எப்ப செஞ்சிருக்கோம்….என்ன பெரிய வீட்டுக்கு கூட்டிட்டு போ..நான் ஐயாட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு பொண்ணு பார்க்கிறேன்..”

 

என்றார் வசுமதி.அவர் சொல்வதும் உண்மை தான்.

 

தமிழழகன் தேன்சோலை கிராமத்தின் கட்டுக்கடங்கா காளை.அவனது சிறு வயதிலே தந்தை தவறிவிட  ஏழு வயது பையனோடு தனித்து நின்ற வசுமதிக்கு அவரது முதலாளி நடராஜன் அவர்கள் குடும்பம் தான்  ஆதர்வ கரம் நீட்டியது.

 

அவர்கள் வயலிலே வசுமதி வேலை செய்ய தமிழின் படிப்பில் தொடங்கி அவன் பொறுப்புகளை தானே முன்வந்து எடுத்துக் கொண்டார் நடராஜன்.கல்லூரி வரை நன்றாக படித்து திறமைசாலியாய் உயர்ந்த தமிழ் வெளியே கிடைத்த வேலையெல்லாம் விடுத்து நடராஜரிடமே சேர்ந்துக் கொண்டான்.தொழில் மட்டுமல்லாது அதனையும் தாண்டிய சில முக்கிய வேலைகளுக்கு அவர் நம்பும் ஒரே நபரும் தமிழ் தான் என்னும் அளவிற்கு மிகவும் விஸ்வாசமானவன்.

 

 

 

“சரிம்மா….இப்ப வேண்டாம்..ஐயா கொஞ்சம் பிஸி..நானே ஒரு நாள் உன்ன கூட்டிட்டு போறேன்..”

 

 

என்று சொல்ல சரியென மகிழ்ச்சியாய் ஒப்புக்கொண்டவர்

 

“அப்புறம் தமிழு..நான் ஒன்னு கேள்விப்பட்டேனே..அது உண்மையா..”

என்று கேட்க விரலிடுக்கில் கொட்டாவியை மறைத்தபடி,

 

“என்ன கேள்விப்பட்ட…”

 

என்று கேட்டுக் கொண்டே தமிழ் கூடத்தில் போடப்பட்டிருந்த இரும்பு கட்டிலில் படுக்க அவன் தலைமாட்டில் அமர்ந்த வசுமதி,

 

“அதான்டா…ஐயா,மனோ தம்பி மேல் இருந்த கோவத்தெல்லாம் விட்டுடு அவரையும் அவர் பொண்டாட்டியையும் ஏத்துக்கிட்டாங்களாமே…நெசமாலுமா…”

 

என்று கேட்க ஒரு கண்ணை மட்டும் திறந்தவன்,

 

“உனக்கு எப்படி இந்த விசயம் தெரிஞ்சிது..”

 

என்றான்.

 

“பக்கத்துவீட்டு மங்கா தான் சொன்ன..அந்த புள்ளையகூட கூட்டிட்டு வந்துட்டாங்களாம்…ஆனால் மனோ தம்பி இல்லாம தனியா தான் வந்துதாம்..ஏன்டா அப்புடி….”

 

“உஃப்…இந்த 3ஜி,4ஜியோட உங்க நெட்வொர்க் ரொம்ப பாஸ்ட்ஆஆ இருக்கு…அவுங்க தனியா வராங்க..ஜோடியா வராங்க..அதை நீ தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போற..அதெல்லாம் பெரிய இடத்து விசயம்..சொல்ற விசயமுனா..சொல்லிர்பாக..அதேயேன்..நீங்க இட்டுகட்டி பேசுறீங்க..போம்மா அங்கிட்டு..”

 

என்று அவன் எரிந்து விழ கழுத்தை நொடித்துக் கொண்ட வசுமதி,

 

“ஏன்டா அதுக்கு வள்ளுனு விழுகுற..”

என்றவர்

“மனோ தம்பி தங்கமான புள்ளயாச்சே…அது குடும்பத்தோட ராசியாகிட்டா சந்தோஷமுனு தான் கேட்டேன்..இதுல இட்டிகட்டி வேற பேசுறாங்க..”

 

என்று புலம்பியபடி அவன் அறையை நோக்கி நகர நொடி பொழுதில் பாய்ந்து வந்து அவர்முன் நின்றவன்,

 

“என்ன வேணும்..எதுக்கு ரூமுக்கு போறம்மா..”

என்றான்.

 

“இதென்ன புதுசா கேட்குற..நீ நாலு நாளா குமிச்சி வைச்சிருப்பே..அலுக்கு துணி அதை துவைக்க வேண்ணாமா..?”

 

“ம்ம்.. அதெல்லாம் நான் எடுத்து வந்து போடுறேன்..நீ போம்மா..”

 

என்ற மகனை விநோதமாய் பார்த்த வசுமதி,

 

“ஏன்..நான் ஏன் போக கூடாது…டேய்..உன் முழியே சரியில்லையே…நகருடா..இதுக்காண்டியே நான் என்னானு போய் பாக்குறேன்…”

 

என்று அவனை தள்ளிக் கொண்டு உள்ளே போக முனைய,

 

“அய்யோ அம்மா…நீ பாட்டு எதாவது கற்பனை பண்ணாத…முக்கியமான பைல்லாம் ஐயா என்னுட்ட குடுத்து வச்சிருக்காவ..நீ பாட்டுக்கு சுத்தம் பண்றேனு பறக்க விட்டுடேனா..அதான் சொன்னேன்..”

 

என்றவனை அவர் நம்பாமல் பார்க்க,

“என்ன லுக்கு விட்டுட்டுடு இருக்க..நாலு நாளு கழுச்சி வூடு வந்த  புள்ளைக்கு எதாவது சாப்புட குடுத்தியா…போம்மா…காலைலேந்து வயிறு கடமுடானு கத்துது..போய் எதாவது செஞ்சிக்குடு..நான் சீக்கிரம் கிளம்புனும்..”

 

என்று அவரை அடுப்பறை நோக்கி திருப்பி விட்டவன் அவர் தலை மறைந்ததும் அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டான்.

 

பத்து நிமிடங்கள் கழித்து மூச்சை இழுத்துவிட்டபடி வெளியே வந்த தமிழ் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான்.

 

குளித்து வந்தப்போது அவனுக்கு உணவு தயாராய் இருக்க அன்னையுடன் வம்பழந்தபடி வேகவேகமாய் உண்டு முடித்துவிட்டு தன் இருச்சக்கர வாகனத்தில் பறந்தவன் நேராக சென்று நின்ற இடம் பெரிய வீடு தான்.

 

பழமை கிஞ்சிதமும் மாறாமல் அதில் தேவையான புதுமையை மட்டும் சேர்ந்து வனப்பாய் காட்சியளித்த அவ்வீட்டை பார்க்கவே நம் கண்களுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.இத்தகைய வீடுகளை இக்காலத்தில் காண்பதே அரிதல்லவா..

 

கோட்டை மதில் சுவர் அமைந்திருந்த நுழைவாயிலுக்கும் வீட்டிற்கும் இடையிலே பல அடி தொலைவு இருக்க உள்ளே நுழைந்த தமிழ் பைக்கை வழக்கமாய் நிறுத்துமிடத்தில் நிறுத்தினான்.

 

“வா..தமிழு…ரெண்டு நாளா ஆளே பார்க்க முடியல..”

 

அங்கே நிறுத்தப்பட்டிருந்த காரை துடைத்துக் கொண்டிருந்த ட்ரைவர் தமிழிடம் கேட்க அவரை பார்த்து புன்னகைத்தவன்,

 

“வெளியூர் போயிருந்தேண்ணே…அதான்..அப்புறம் பையன் இப்ப ஒழுங்க ஸ்கூலு போறானா..”

 

என்று கேட்க அதற்கு வேகமாய் தலையாட்டிய அவர்,

 

“ம்ம்..நீ பார்த்து  ரெண்டு காட்டு காட்டுனதுலேந்து பைய அடங்கிட்டான்.. எதாவது அரட்டு பண்ணின உன் பேர சொன்னாலே கப்சிப்புனு ஆயிடுறான்…இப்பெல்லாம் எந்த வம்புக்கும் போகாம சொல்பேச்சு கேட்டு இருக்கான்.. ரொம்ப நிம்மதியா இருக்குய்யா….”

 

என்றார் சந்தோஷமாய்..

 

“ம்ம்..சரிண்ணே..பைய மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்..உங்க பொண்ண எப்படி கண்ணும் கருத்துமா வளக்குறிய..அதுல கொஞ்ச கவனத்த பசங்கமேல வச்சாலே போதும் நாட்டுல பாதி பிரச்சனை குறையும்..”

 

என்றபடி வீட்டை நோக்கி சென்றான்.

அவன் உள்ளே செல்வதற்குள் எதிர்ப்பட்ட அனைவரும் அவனிடம் பேச்சுக் கொடுக்க அனைவரையும் கடந்து செல்லவே சில நிமிடங்கள் ஆனது.

 

சரி அவன் வருவதற்குள் நாம் அவ்வீட்டை ஒருமுறை சுற்றிப்பார்த்து விடுவோம்.

 

வீட்டின் முகப்பில் தூண்கள் ஊன்ற பட்ட திண்ணையை கடந்தால் பெரிய கூடம்.சிவப்பு ஆக்சைடு பூசப்பட்ட தரையுடைய கூடத்தில் மட்டுமே பத்து ஜன்னல்கள் இருக்கும்.மரத்தினால் ஆன ஊஞ்சல் ஒன்றும் தொங்கியது. அதனை கடந்தால்  அடுத்த கூடத்தில் நடுவில் செவ்வக வடிவிலே முற்றம் அமைத்து சுற்றிவர திண்ணை அமைத்து பின்னர் அதனை சுற்றி அறைகள் அமைக்க பட்டிருக்க வடக்கு மூலையில் மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது.

 

அதனை தாண்டி உள்ளே சென்றால் அடுத்து சமையலறை பின்னர் கொல்லைபுறம் என்று இருந்தது.

 

கூடத்தை அடைந்தவன் ஊஞ்சலில் அமர்ந்து பேத்திகளோடு விளையாடிக் கொண்டிருந்த நடராஜனை கண்டு தானாய் ஓர் புன்னகை அவன் உதட்டில் உதிர்த்தது.

 

குழந்தைகளோடு விளையாடுவதால் முகத்தில் கொஞ்சல் இருந்தாலும் அவற்றையும் தாண்டிய கம்பீரம் அவர்மீது முதல் பார்வையிலே மரியாதைக் கொள்ள வைத்தது.

 

எதர்ச்சியாய் திரும்பியவர் தமிழைக் கண்டதும்,

 

“வா தமிழு..”

 

என்று வரவேற்று பிள்ளைகளை உள்ளே சென்று விளையாட அனுப்பிவிட்டு நேராய் அமர்ந்தார்.

 

“ஐயா…”

என்றபடி வந்தவனை அருகிலிருந்த நாற்காலியில் அமரச் சொன்னவர் உள்நோக்கி குரல் கொடுக்க அடுத்த நிமிடம் அவன் கையில் மோர் இருந்தது.

 

அவன் அருந்தியபின்,

 

“போன வேலை என்னாச்சு தமிழு..”

 

என்று கேட்க,

 

“அது வந்துய்யா..”

 

என்று சுற்றம் பார்த்தவாறு அவன் தயங்க,

 

“சொல்லுடா..யாரும் வரமாட்டாங்க..”

 

என்றார் அவன் எண்ணம் புரிந்தாற்போல்..

 

அவனும் கடகடவென அனைத்தையும் தனது நரைத்த மீசையை நீவியபடி அவன் சொல்வதை கேட்கும் நடராஜரின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

 

தமிழிற்கோ வாய் பேசினாலும் தன்னை யாரோ உற்று நோக்குவது போல் உள்ளுணர்வு சொல்ல ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவன் சட்டென்று திரும்பி பார்க்க அதுவரை கதவருகே நின்ற பெண் சட்டென்று ஒலிய முனைந்து அவன் பார்த்துவிடவும் முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டு எதுவும் நடவாதது போல் அங்கே வந்தாள்.

 

புருவம் சுருங்க யோசனையாய் ஒரு நிமிடம் அவளை பார்த்தவன் பின் தன் வேல்விழியால் நோக்க அவன் பார்வை போன திசையில் தானும் பார்த்த நடராஜன்,

 

“இந்த பொண்ணு..சின்ன மருமகளோட வந்த பொண்ணுப்பா..மனோ அவன் பொஞ்சாதிய பார்த்துக்க ஏற்பாடு பண்ணின டாக்டராம்..அது என்னமோ பேர் சொன்னானே..என்னம்மா அது..”

 

என்று அவனிடம் தொடங்கி அவளை பார்த்துக் கேட்டார்.

 

“டயட்டிசீயன்..”

 

என்று சொன்ன யவ்வனாவை அவன் புருவம் உயர்த்தி ஆச்சரியமாய் பார்த்தான்.

 

ஆம்..யவ்வனாவே தான்.தமிழின் பார்வை அவளுள் பக்கென்று உணர்வை தோற்றுவிக்க,

‘இவன் என்ன போலீஸு மாதிரி பாக்குறான்…அதுக்குள்ள போலிஸுக்கு விசயம் தெரிந்து சந்தேகப்பட்டு என்னை தேடி வந்திருச்சோ…அந்தாளு எனக்கு எந்த பிரச்சனையும் வராதுனு தானே சொன்னான்…ஐய்யையோ..நான் ஒன்னுமே பண்ணலயே..”

 

என்று ஓயாமல் உள்மனம் புலம்பினாலும் வெளியே முகத்தை சீராய் வைத்திருக்க ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த தமிழ்,

 

“நம்ம ஆச்சு..அம்மாச்சி மதனிகெல்லாம் தெரியாத புள்ளதாச்சி பிள்ளைக்கு என்ன சாப்பிட கொடுக்கணுமுனு..அதுகேன் ஐயா டாக்டர்..”

 

என்று கேட்க அதற்கு சிரித்த நடராஜன்,

 

“அது வாஸ்தவம் தான்…ஆனால் மருமகளுக்கு குழந்தை தாங்குற அளவு சத்தியில்லேனு டாக்டர் சொன்னதுல பயந்துபோய் மனோ கூடவே இருந்து பார்த்துக்க இந்த பொண்ணை ஏற்பாடு செஞ்சானாம்…ஆறு மாசம் கான்ராக்ட்படி சம்பளம் கொடுத்திருக்கானாம் மனோ.அதனால அது முடியும்வர அனுவோட தான் இருப்பாங்க..”

 

என்று கூற அவன் ‘ஹோ…’ என்று தலையாட்டினான்.

 

“சரிம்மா…நீ எங்க போறே..”

அவனிடம் நடராஜன் பேசிக்கொண்டிருந்த கேப்பில் அவர்களை கடந்து செல்ல எத்தனித்த யவ்வனாவிடம் அவர் கேட்க விழித்தவள்,

 

“அது..அது…இல்ல சார்..வந்ததில் இருந்து வீட்டிலே இருக்கேனா…போர் அடிக்குது..அத்தோட வர வழியில பக்கத்துல நிறைய வயலெல்லாம் பார்த்தேன்…அதான் சும்மா வெளியே காத்தாட நடந்துட்டு வரலாமுனு..”

என்றாள்.

 

“தெரியாத ஊரு..எப்படி தனியா போவீங்க..இருங்க யாரையாவது கூட வர சொல்றேன்..”

 

“இல்ல..இல்ல சர்..வேணாம்..நான் பார்த்துப்பேன்..”

 

என்று சமாளித்து வீட்டை விட்டு வெளியேறுவதற்குள் போதும் போதும் என்றானது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: