Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 04

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 04

வந்ததிலிருத்து அதிகம் பேசிட விரும்பிடாத ரம்யா.. சட்டென்று தன்னை நோக்கி கேள்வி எழுப்பிட,  நாம் இடையில் பேசுவதை விட நேரடியாக அவர்களே பேசுவது தான் பிரச்சனைக்கு சரியான தீர்வு என்று யோசித்த,  மதுரன் புரியாது போல  தயங்கிட.. “அதுக்கென்று… பிடித்தால்  பிடித்திருகின்றது..  இல்லையென்றால் பிடிக்கவில்லை என்று மரியாதையாய் கூறி விலகிச் சென்றிருக்கலாம் இல்லையா! அதை விட்டு  என் காதல் உண்மையா  என்று தெரிந்துகொள்ள  டெஸ்ட் வைகின்றாளாம்… முதல்நாள் தான்    ஜேஜே படத்தை டிவியில் பார்த்திருப்பாள் போல அவள் வீட்டு லேன்ட்லைன் நம்பர் மட்டும் கொடுத்துவிட்டு.. பின்கோடு   கொடுக்காமல்..    சரியான  பின்கோடு…  கண்டுபிடித்து என் வீட்டுக்கு போன் செய்..   என் முடிவை சொல்கின்றேன் என்றால் பாருங்கள்..  எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? போடி நீயும் உன் பொல்லாதக் காதலும் என்று போய்விடலாம் என்று தான் தோன்றியது, ஆனால்  எனக்குள் இருக்கும் துரோகி காதல் மனம் இருகின்றதே,  அதை செய்யவிடாமல் தடுத்து வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கிக்கொண்டது..   வெறும் ஆறு இலக்கஎண்.. இதுதான் என் தலையெழுத்தை  நிர்னனைகிக்கப்போகின்றதா? என்று தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது“ என்று   தன் பங்கு  நியாயத்தை கேட்கத் துவங்கினான் ராகவ்.

“காதலுக்காக இதை கொடுகின்றேன் அதை கொடுகின்றேன் என்று கதை அளப்பது ஒரு சின்ன டெஸ்ட்..  போன் நம்பர் கண்டுபிடிக்க  சொன்னதற்கே மிரண்டு ஓடிவிடிவது..” என்று ரம்யா கேலி செய்து ஏளனமாய் சிரிக்க.  “யார் ஓடியது.. ரெண்டு மாதம் முயற்சிசெய்து  தேடிகண்டுபிடித்து போன் செய்தேனா இல்லையா?”என்று ரம்யாவின் கேலிக்கு பதில்  தந்து.. மதுரன் புறம் திரும்பிய ராகவ்.

“இரண்டு மாதம்விடாமல்  போன் டிரெக்டரி வைத்து எல்லா பின்கோடும் போட்டு… பெண்ணின் குரல் என்றதும் கல்யாண மண்டபத்தின் பெயர்.. தேதி கிழமை எல்லாம்  சரியாய் சொல்லி விசாரித்தேன் அதற்கும்  சரியான பதில் இல்லாமல் போக  போனில் பைத்தியம் போல உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே..   என்று  பாட்டு கூட பாடிக்காட்ட துவங்கிவிட்டேன்.. நல்லவேளை நான் அதுவரை  அழைத்ததில்  எந்த போலீஸ்காரன் வீட்டு நம்பர் இல்லை…  அப்படி மட்டும் ஏதாவது போலீஸ் மாமா  வீட்டு போன் நம்பர்  இருந்திருந்தால்,  என்னை தேடிக்கண்டுபிடித்து மாமியார் வீட்டுக்கு  இழுத்துச் சென்று கறிவிருந்து  வைத்திருப்பார்…  பேசிய ராங்  நம்பர்யெல்லாம் என்னை பைத்தியம்  என்று நினைத்திருப்பார்கள்..  இந்தப்பொல்லாதக் காதல் வந்து என்னை படுத்தும்பாட்டை  பாருங்கள் சோறு தண்ணி இல்லாமல் இரவு பகல் பாராமல்… அவ்வளவு கஷ்டத்திலும்  போன் பில்லுக்கு ஆயரம் ஆயரமாய் செலவழித்து…  இதுதான் கடைசி தடவை என்று பலமுறை எனக்குள் சொல்லிக்கொண்டு தான் அந்த பின்கோடு பயன்படுத்தி முயன்றேன், ரிங் சென்று முதலில் ஆண் குரல் கேட்டதும் போனை வைத்துவிட்டு, மீண்டும் சிறிது நேரம் கழித்து  முயன்று பார்த்தேன்,  இளம்பெண் குரல் கேட்டதும்,   வழக்கம்போலவே  சொன்ன விபரத்தை சொல்லி பார்த்தேன்… பெரும் அமைதி தான் பதிலாய் வந்தது,  கடைசி ஆயுதாமாய் பயன்படுத்தும் அன்று கேட்ட  பாடலைப் பாடினேன்… ரொம்ப நாள் கஷ்டப்பட்டு சரியான எண் கண்டுபிடித்து, அவளிடம் தொலைந்த என்னை மீட்கும் ஆவலில் நான் இருக்க… மேடம் என்னவென்றால் வெகு  சாதரணமாய் ராங் நம்பர் என்று வைத்துவிட்டார்கள், இனி எல்லாம்  முடிந்தது என்று சோர்வுடன் முயற்சியை கைவிட்டு நம் பிழைப்பை பார்போம் என்று யோசிக்கத் துவங்கிவிட்டேன்”  என்றான்  ராகவ்.

“ஓ… சார் பாட்டு பாடியதும் நாங்களும் எதிர்பாட்டு பாடி உங்களுக்கு பதில் தரவேண்டுமா? ஆண்களைப் போன்ற  சுதந்திரம்  பெண்களுக்கு இருக்கா என்ன?, மனதிற்கு பிடித்தும் வெளிப்படையாக கூறிப் பின்னால் வருவதற்கு… மனதில் உள்ளதை மறைத்தால் அழுத்தக்காரி… வெளிப்படியாக பேசி உங்களை  நம்பி  வந்தால் இவள் எதற்கும் துணிந்தவள் என்று எல்லை மீறுவது, இது தான் ஆண்களின் புத்தி ” என்று ரம்யா சிடுசிடுக்க..

“யார்  உன்னிடம் எல்லைமீறியது.. காதலித்த நாட்களில் என்றாவது  உன்னிடம் அத்துமீறியது உண்டா?, இல்லை அநாகரீகமாய் பேசியது உண்டா?” என்று ராகவ் கேள்வியாய் நிறுத்த.. “இல்லை” என்பது போல மறுத்து தலையசைதவள் கண்களில் கோபம் அகன்று  தன்னவன் கண்ணியம் எண்ணி  கர்வமே  நிறைந்திருந்தது.

ரம்யா கண்களில் உள்ள உணர்வுகளை உணர்ந்தவன் போல் தன்னை மறந்து தன்னவள்  கடைக்கண்ணில் கரைந்திடத் துவங்கினான் ராகவ்.

இருவரும்   ஒருவரை ஒருவர்  சூழ்நிலை மறந்து பார்த்துக்கொண்டிருக்க…   இருவருக்கும் இடையில் தலையிட விரும்பாமல்  அமைதியாய்  இருந்தான் மதுரன். தம்பதியர் மோனநிலை கலைப்பது போல  மதுரன்  டேபிளில் இருந்த போன் அடிக்க..  “சரியான நந்தி” என்று திட்டிகொண்டே எதிரில் இருந்தவர்களிடம் பார்வையால் மன்னிப்பு வேண்டிக்கொண்டு.. போனில் பேசிடத் துவங்கினான்.

எதிர்முனையில் “மிசஸ். ரம்யாவின்   அப்பா   வெகுநேரமாக  காத்திருகின்றார் மதுரன், எப்போதும் உன்  பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு நேரம் ஆகாதே, இந்தமுறை  எதற்கு தாமதமாகின்றது, உண்மையில் பிரச்சனனை ரொம்ப பெரிதோ!” என்றவர், குரலை தனித்து “பெண்ணின் அப்பா என் நீண்ட கால நண்பர் மற்றும் உறவினரும் கூட, அதனால் வேறு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்து  முடித்துக்கொடு… இங்கு இவர்  வேறு   இவ்வளவு நேரமாகின்றது என்று கேள்விமேல் கேள்விகேட்டு குடைந்து கொண்டேயிருகின்றார்,     நீங்கள் எவ்வளவு அட்வைஸ் செய்தாலும்   என் மகள் அவள் முடிவிலிருந்து மாறவேமாட்டாள் என்று சவால்விட்டுக் கொண்டிருகின்றார், பிரியவேண்டும் என்று முடிவுடன் தான் வந்திருக்கின்றனர்.. யார் என்ன சொன்னலும் அவர்கள் முடிவிலிருந்து பின்வாங்க மாட்டார்கள், அதனால் பார்த்து பக்குவமாய் பேசு, உன்னால் மட்டும் தான் இதை சரியாக செய்யமுடியும் என்று தான் இந்த வேலைக்கு உன்னை தேர்வு செய்தேன்,”என்று நம்பிக்கை தரும் வார்த்தைகள் கூறி நேரத்தின் முக்கியதுவத்தை அறிவுறுத்தினார், மேலதிகாரி.

“இன்னும் கொஞ்ச நேரம் தான்… என்று எதையோ சொல்லத் துவங்கியவன்,   சாதகமாகவே முடியும், “  என்றவன்,   தன் எண்ணம் நிறைவேற இன்னும்  கொஞ்ச நேரமே இருப்பதை உணர்ந்து,   வந்த  துவக்கத்தில் முகம்   பார்த்துக்கூட பேசிக்கொள்ளாதவர்கள்.. இப்போது  தங்களை மறந்து வாதம் செய்துகொண்டிருக்க..  இந்தநிலை நீடித்தால் நிச்சயம் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை கொண்ட மதுரன், மேலும் பேச்சை வளர்க்கத் துவங்கினான்.

”முதல் பார்வையில் வரும் காதலும் ஒரு அழகு  இல்லையா!..முன்பின் அறியாமலேயே இவர்கள் தான் நமக்கென்று பிறந்தவர் என்று மனம் சொல்லும் பாருங்கள் அது ஒரு அற்புதமான அனுபவம்..” என்று வியப்பில் சிலிர்த்த படி…கூறியவன்  “ஆனால்  எனக்கு சின்ன சந்தேகம் ராகவ்.. போன் பின்கோடு தெரியவேண்டும் என்றால்  உங்கள் சொந்தக்காரர் அதான்.. அந்த திருமண வீட்டில் யாரிடமாவது.. ரம்யான் தந்தை  எந்த ஊர் என்று விசாரித்தால் போதுமே… இதற்கு  இத்தனை ரிஸ்க் எடுத்திருக்க வேண்டிய அவசியமில்லையே” என்றான் மதுரன்.

இதுவரை  தனக்கே விடை தெரியாத கேள்விக்கு  விடை அறிந்திடும் ஆவலுடன் ராகவ்  விழி நோக்கினாள் ரம்யா.  கண்களில் சொல்லமுடியாத  வேதனையை தேக்கி  மனதை திடப்படுத்திக்கொண்டு “ரம்யா சவால்விட்ட அன்றே…   அந்த மண்டபத்திலேயே   மாப்பிள்ளை தம்பியிடம் ரம்யாவின் தந்தையை  பற்றி  விசாரித்தேன்.. என்னை   ஏளனமாய் ஏறயிறங்கப் பார்த்தவன், நானும்  கொஞ்சநேரமாக உன்னை கவனித்துக்கொண்டுதான் இருகின்றேன்… அந்த பெண்ணிற்கு நூல் விட்டுகொண்டு திரிகின்றாய்..  மேடை ஏறும்போது கூட அந்த பெண்ணின் அருகில் சென்று நிற்கின்றாய்.. அவள் அருகில் நிற்க உனக்கு தகுதி இருகின்றாதாயென்று முதலில்  யோசித்துப்பார்த்தாயா? அவள்  வீட்டில் வேலைகரனாக சேருவதற்கு   கூட உனக்கு தகுதியில்லை…   அது எங்களையும்  விடப் பெரியயிடம் வீணாய் கற்பனை வளர்த்து அலையாதே! ஒதுங்கிவிடு.. என்று எச்சரிக்கை செய்தான்… “ என்றவன் கண் மூடி அன்றைய நினைவில் மூழ்கினான்..  ராகவ் ரம்யா விபரம் கேட்டு நகர்ந்ததும்.. தன் அருகிலிருந்த  நண்பனிடம்  ராகவ்விற்கு கேட்கும்படியே சத்தமாய்  பேசினான் அவன்… “எங்கள் தூரத்து சொந்தம்டா  இவன்.. அடுத்தவேலை  சாப்பாடு உறுதியா என்று தெரியவில்லை.. இதில் பணக்காரவீட்டு பெண் கேட்கின்றது, இதற்கு தான் இதுபோன்ற பஞ்சப் பரதேசிகளை  கல்யாணத்திற்கு அழைக்காதீர்கள் என்றேன், என் அப்பா கேட்டால் தானே  சொந்தாம் விட்டுப்போகக்கூடாது என்று  நடுவீட்டில் உட்காரவைத்து உபசரிதுக்கொண்டிருகின்றார் ”, என்று கூறிட… அவன் நண்பனோ  “வசதியான இடத்தை வளைத்துப்போட்டால், வளமாய்  வாழலாம் என்ற  எண்ணம் தான்” என்று உடன் சேர்ந்து சிரித்த சத்தம், அதற்கு மேல் அங்கு நிற்கவிடாமல் ராகவ்வை துரத்தியது, அன்று நடந்தை   நினைத்துப் பார்த்தவனுக்கு  மனம்   வாடியது.

ஆண்டுகள் கடந்தும்  அன்று ஏற்பட்ட  அவமானத்தை இன்றும் உணர்தவன், அன்றே  இது உனக்கு சரிவராதென்று புத்தி சொன்ன அறிவுரை கேட்டு ஒதுங்கியிருந்தால் ரம்யா வாழ்வாவது நன்றாக இருந்திருக்கும்.. மனம் பிதற்றிய காதல் மொழி கேட்டு,  அவர்கள் அளவிற்கு உயரமுடியவில்லை என்றாலும், சமூகத்தில் மதிக்கும் படியான அந்தஸ்தை அடைந்து அதன்பின் காதலில் வென்றிட வேண்டும் என்ற உறுதி கொண்டு, உழைத்து வாழ்விலும் முன்னேறி காதலிலும் வென்றதாய்.. கற்பனைக் கோட்டை கட்டிவைக்க அதை எல்லாம் தகர்த்து எறிவது போல சம்பவங்கள் நடந்தேறி, அந்த எண்ணத்தையே தவிடுபொடியாக்கியாது… எல்லாவற்றிலும் தோல்வி கண்ட உணர்வுடன்,  விரல் மடக்கி தன் வேதனையை மறைக்க போரிட முயன்றான் ராகவ்…  அதற்கு உறுதுணையாய்  ரம்யா, ராகவ்  கரங்களை ஆதரவாய் பற்றிட,எல்லாம் இழந்தாலும் ஏதோ ஒன்று வாழத்துண்டும் நிம்மதியுடன்,  தான்   கொண்ட வேதனை மறந்து மென்முறுவல் செய்தான் ராகவ்.

இருவருக்குள் இருந்த புரிதலை என்னை வியந்தவனாய், தன் நேரமின்மையை மனதிற்கு கொண்டு  அடுத்த கேள்வியைகேட்டான் மதுரன், “சரி எப்படியோ ராகவ்  உங்களை கண்டுபிடித்துவிட்டார்… ஆனால் நீங்கள்  அவரை தெரிந்தது போலவே காட்டிக்கொள்ளவே  இல்லை, பின் எப்படி உங்களுக்குள்.. “ என்று அர்த்தமாய்   இணைந்திருந்த கரங்களை பார்த்தான்.

மதுரன்   பார்வையின் பொருள்  புரிந்தும் கோர்த்திருந்த விரல்களை விளக்கிகொள்ள மனமில்லாமல் பிரித்திட  ரம்யா  முயல… ஒருநொடி இறுகபற்றி தனக்கு விலகலில் பிடித்தமில்லை என்பதை உணர்த்திவிட்டு விரல்களுக்கு விடுதலை தந்தான் ராகவ்.

ராகவ் செயலின் அர்த்தம் உணர்ந்தவள்.. வியந்து கணவன் முகம் நோக்கிட…  அங்கு நிறைந்திருந்த வேதனை  கண்டு மனம் உறுத்தியது…   விவாகரத்து முதலில் கேட்டது  ராகவ் தான்… பிடிக்காத உறவில்  பிரிவு உறுதி என்று தெரிந்ததும் சந்தோசப்படாமல் வருத்தம் ஏன் கொள்ளவேண்டும் என்று குழப்பம் அடைந்தவள், தன் எண்ணத்தை தனக்குளே வைத்துக்கொண்டு..  மதுரன்    குழப்பத்திற்கு விடை கூறத்துவங்கினாள்,   “எங்கள் வீட்டில் லேன்ட்லைன்  ஹாலில்  இருக்கும்… வீட்டில் எல்லோரும் அங்கு தான்  என் அருகிலேயே இருந்தார்கள்.. என்னால் எப்படி உடனே பதில் கூறிடமுடியும்.. என் வீட்டில் என் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு பஞ்சமில்லை.. அதேசமயம் கட்டுப்பாட்டிற்கும் குறையில்லை.. அதனால் அப்போதைக்கு ராங் நம்பர் என்று கூறிவிட்டு..  காலர் ஐடியில் ராகவ் என்னை  குறித்துக்கொண்டு, காலேஜ் செல்லும்போது பப்ளிக் டெலிபோன் பூத்திலிருந்து மீண்டும்  பேசினேன்,” என்று தங்கள் காதல் மலர்ந்த விதத்தை கூறினாள் ரம்யா.

 

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: