Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – இறுதி

கணவனிடம் அனைத்தையும் கொட்டி தீர்த்தபிறகும் ரோகிணிக்கு மனம் ஆசுவாசமடைய மறுத்தது. பிறர் மனதினை வருத்தினாலும் அதன் பாதிப்பு நமக்கும் சேர்த்து தானே! அதோடு சந்திரன் பேசியது? அதை அவனாக பேசித்தான் அவன்புறம் புரிந்து கொள்ள முடியுமா என்ன? ரோகிணியின் மனம் என்னவோ அதிகம் பேசிவிட்டோமோ என வருந்தியது.

சந்திரனால் அடைந்த வேதனைகள் ஏராளம் தான் என்ற பொழுதிலும், ‘உனையின்றி வேறு ஒருவனை மணந்திருந்தால் மகிழ்வோடு இருந்திருப்பேன்’ என்று கூறுவதை விட ஒரு கணவனுக்கு வேறென்ன அவமானம் இருக்க முடியும்? அதுவும் ஓராண்டு காலம் வாழ்ந்த பிறகு, இது என்ன விதமான பேச்சு? பிடிக்கவில்லை என்பதற்கும், வேண்டாம் என்று மறுப்பதற்கும் உரிமை இருக்கிறது தான். ஆனால், இது என்ன மாதிரியான குற்றச்சாட்டு? அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு, அதுவும் தன் துணையை? அவளுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. சற்றே அதிகமான வார்த்தைகள் தானோ! என மனம் இடித்துரைத்தது.

அதிலும் சந்திரனின் பெற்றவர்களின் குணம் அவள் தெளிவுற அறிந்ததே! அவனை நிச்சயம் நல்லபடியாக வளர்க்கவில்லை என்பதை ஈஸ்வரனும் இலைமறை காயாய் அவ்வப்பொழுது கோடிட்டு காட்டி இருக்கிறார். ஏன் இன்று பத்திரப்பதிவு நடந்த இடத்தில் சந்திரனின் நண்பர்கள் கூறவில்லையா? சந்திரனுக்கு படிப்பை தவிர வேறு எதுவும் தெரியாதவன் என்று.

அவர்கள் இருவர் மட்டுமா? திருமண பேச்சுவார்த்தை தொடங்கிய பொழுது உறவினர்கள் அனைவரும் சந்திரனுக்கு நற்சான்று வழங்கினார்களே! அத்தனை ஒழுக்கமானவனாய் வளர்ந்தவன், எங்கோ தவறி இருக்க வேண்டும்?

அவன்தான் அதையும் தெளிவாக கூறினானே, பெற்றவர்கள் நல்லது, கெட்டதை சொல்லி தந்ததில்லை என்று… அதனால் தான் சரியான நேரத்தில் சரியான வழிகாட்டுதல் இன்றி நெறி தவறி இருப்பானோ! என மனம் பயணிக்க பயணிக்க அவள் தலை பாரமானது.

அனைத்தையும் கொட்டி விட்டதால் கோபம் சற்று மட்டுப்பட்டு இருந்தது. இப்பொழுது நிதர்சனமும் தெளிவுறவும், கணவன் வேண்டாம் என்று எடுத்த முடிவும் சற்று ஆட்டம் காண தொடங்கியது. அவன் சரியான வழிகாட்டுதல் இன்றி செய்த விஷயங்களை பெரிதுபடுத்தி என்ன சாதிக்க போகிறோம்? என ஒரு மனம் சிந்திக்க,

மற்றொரு மனமோ, கண்டதையும் சிந்திக்க வேண்டாம். எடுத்த முடிவு எடுத்ததாகவே இருக்கட்டும். அவன் எதற்கு எனக்கு? என வீம்பாய் எண்ணியது. இருவிதமான எண்ணங்களும் அதீத குழப்பம் தர, தலையை உலுக்கி தன்னை சமன்படுத்தியவள், இறுக்கம் தளர எழுந்து நடக்க தொங்கினாள். அவள் எழுந்து திரும்பிய நேரம், அவளது விழிகளில் சந்திரன் இருக்கும் அறை பட்டது.

சந்திரன் கொண்டு வந்திருந்த பெட்டிகள் கட்டில் மேல் திறந்த நிலையில் இருக்க, அதில் அவன் கொண்டு வந்த ஆடைகளை எல்லாம் அவசரமாக திணித்து இருந்ததன் அடையாளமாய், அந்த பெட்டிகளை சுற்றி அவனுடைய உடைமைகள் அலங்கோலமாய் சிதறி இருந்தது. என்ன செய்கிறான்? என அறியும் ஆவலில் அவனை பார்வையால் தேட, அவன் நிலையை கண்டு அதிர்ந்து, நின்ற இடத்திலேயே வேரோடி விட்டாள்.

சந்திரனின் கண்ணீர்? நிச்சயம் ரோகிணி இதை எதிர்பார்க்கவில்லை. திருந்த நினைப்பவனை அதிகம் நிராகரிக்கிறோமோ என்ற எண்ணம் வர, அதற்கு மேலும் தன் தீர்மானத்தையும், கோபத்தையும், முடிவையும் அவளால் இழுத்து பிடிக்க முடியவில்லை.

அசைய மறுத்த உடலையும், கால்களையும் உந்தி தள்ளி அவனிடம் விரைந்தவள், அவன் அருகே அமர்ந்து, அவனது முதுகை வருட, சந்திரன் சட்டென தெளிந்தான். தலையை தாங்கியிருந்த கரங்களை விலக்கி அவளை பார்த்தவனுக்கு, தன்னிடமே ஏதோ வித்தியாசமாக பட, தன் கரங்களால் முகத்தை துடைக்கும் போது தான் அவனே உணர்ந்தான் அழுதிருக்கிறோம் என்று. அவனுக்கே இப்படி ஏன் அழுதோம் என விளங்கவில்லை. உடனடியாக கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்த வண்ணம் அங்கிருந்து எழுந்தவன், “சாரி. கிளம்பனும்ன்னு தான் வந்தேன். எங்க போகறதுன்னு யோசிச்சுட்டு அப்படியே உக்காந்துட்டேன் போல” என எதையோ சொல்லிய வண்ணம் சிதறிய ஆடைகளை மீண்டும் பெட்டிகளுனுள் சரியாக திணித்தான்.

அவன் இயல்பாக இருப்பது போல காட்டிக்கொள்ள நினைக்க, அவன் கூறியதை கேட்டு அவளுக்கு தான் கண்கள் கலங்கி விட்டது. ஏதோ ‘இன்னும் இங்கு என்ன செய்கிறாய்?’ என அவள் கேட்டுக்கொண்டது போல அல்லவா பதில் தருகிறான். இவனை எப்பொழுது நான் துரத்தினேன்? ஒருவேளை கோபத்தில் அப்படியும் சொல்லி விட்டேனோ என தவித்து போனாள்.

வேதனையோடும், தவிப்போடும் அவனை எப்படி தடுக்க என புரியாமல் ரோகிணி அவனை பார்வையால் பின்தொடர, சந்திரன் தனக்குள் இருந்த மனபாரத்தால் அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. இன்னமும் எங்கு போவது என்ற சிந்தனை தான்? ஹோட்டல் தவிர வேறு வழியே இல்லை என்று எண்ணும்பொழுதே, மனம் சோர்ந்தது.

ஒரு பெட்டியை எடுத்து வைத்தவன், அடுத்ததை நிரப்பிக்கொண்டிருக்க, ரோகிணிக்கு இனியும் இப்படியே நின்றால் சென்றே விடுவான் என புரிந்து, அவனது செய்கையை தடுக்க எண்ணி, “என்ன பண்ணறீங்க?” என்றாள்.

ரோகிணியின் கேள்வியில் சந்திரன் குழப்பமாக அவளை ஏறிட, “இன்னும் பேசியே முடிக்கலையே” என்றாள் தோரணையாக. எதுவோ புரிந்தவன் போல, “நீ என்னை திட்டி ரொம்ப கஷ்ட படவேண்டாம் ரோ. உன் விருப்பத்துக்கு நான் தான் சம்மதம் சொல்லிட்டேனே. அதோட, இனியும் எதையும் கேக்கிற சக்தி எனக்கு சுத்தமா இல்லை” என்றான் முகம் வாடி.

“என்னை பார்த்தா உங்களுக்கு சண்டைக்காரி மாதிரி தெரியுதா?” என மீண்டும் ரோகிணி கேட்க, இப்பொழுது அவள் நடவடிக்கையின் அர்த்தம் புரியாமல் திருதிருவென விழித்தான்.

“நான் அப்படி நினைக்கலை ரோ. ஒருவேளை நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணி இருந்தா ஒரு நிறைவான வாழ்க்கை கிடைச்சு இருக்கும். என்னை கட்டிக்கிட்டதால இப்போ சண்டை போட வேண்டி வந்திருக்கும். அதுக்காக நீ சண்டைக்காரின்னு அர்த்தம் இல்லை.

ரொம்ப ரொம்ப சாரி ரோ. எதையும் தெரிஞ்சு பண்ணலை. இனியாவது நீ ஆசைப்பட்ட மாதிரி ஒரு வாழ்க்கை அமையட்டும். தெரிஞ்சோ தெரியாமலோ குழந்தைக்காக நான் எந்த பிளானும் வெச்சுக்காதது கூட ஒருவிதத்துல நல்லது தான். இப்போ நீ இன்னொரு வாழ்க்கையை எந்த தடங்கலும் இல்லாம யோசிக்கலாம் இல்லை” என அவன் பேச பேச, அவளுக்கு மூச்சே அடைத்தது. அவள் பேசியவைகள் தான்… ஆனால், அவளாலேயே கேட்க முடியவில்லை. அவன் திருந்தவில்லை என்றால் வேறு? இப்பொழுது இன்னொரு வாழ்க்கையை பற்றி யோசிக்கவே முடியவில்லை.

மீண்டும் ஒரு மாதிரி எரிச்சலாய் வர, கட்டுப்படுத்த முடியாமல் அவன் அடுக்கிக் கொண்டிருந்த பெட்டியில் இருந்த அவன் பர்ஃபியூம் பாட்டிலை எடுத்து தூர எறிந்தாள். உண்மையில் அவனை அடிக்க வேண்டியது, ஏதோ அவன் முகவாட்டத்தைப் பார்த்து கோபத்திலும் சிறிது நிதானித்துக் கொண்டாள்.

அவளது செய்கையில் சந்திரன் திகைத்துப்போய் அவளை திரும்பி பார்க்க, “என்கிட்ட வாங்கி கட்டிக்காத. பேசாம உக்காரு” என்றாள் பற்களை கடித்தபடி.

என்னடா ஆச்சு இவளுக்கு என குழம்பியவனும் பேசாமல் உட்கார.., “விட்டா கல்யாணமே செஞ்சு வெப்ப போல” என்றாள் ஏளனமாக.

“என்ன ரோ? என்ன தப்பா பேசுனேன். புரிலையே!” என சந்திரன் மீண்டும் திருதிருவென விழித்து விட்டு கூடவே, “நீ இவ்வளவு வைராக்கியமா என்னை வேணாம்ன்னு சொல்லற, அப்போ நான் விலகறது தான சரி. அதோட உன் வைராக்கியம் பத்தி எனக்கு ரொம்ப நல்லா தெரியும். உனக்கு தேவையான அளவு பணம் கொடுத்து இருந்தப்பவே, உனக்கு பிடிச்ச ஒரு புடவையை கூட, நீ என் பணத்திலிருந்து வாங்குனது இல்லையே! அப்படிப்பட்டவ, என்னை வேணாம்ன்னு உறுதியா இருக்கிற. போதும் ரோ. நான் உன் வாழ்க்கையில வந்து உன்னை கஷ்ட படுத்தினது எல்லாம்… இனி உனக்கான ஒரு வாழ்க்கை அமையனும். உனக்கு பிடிச்ச மாதிரி…” என்றான் அவளிடம்.

மனதிற்குள் வலி தான். ஆனால் அவளாவது நன்றாக இருக்கட்டுமே! என்பது அவன் எண்ணம். அவள் இதுவரை பேசியதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் தன்னால் அவள் அடைந்த வேதனைகள் மிகமிக அதிகம் என்று புரிய இனியும் என்னுடன் வந்துவிடு என்றழைக்க அவனுக்கே விருப்பம் இல்லை.

சந்திரனின் பேச்சை கேட்ட ரோகிணிக்கு மனம் வலித்தது. ஒரு மன்னிப்பு மகிழ்வை மீட்டெடுக்கும் என்னும்பொழுது அதை வழங்காமல் இருப்பதா? தன் தாய் உடன் இருந்திருந்தால் இப்படி ஒரு முடிவெடுக்க மனம் வந்திருக்குமா என தோன்ற இப்பொழுது அவளுக்கு அழுகையே வந்தது.

இவள் அழுகவும் பதறியவன், “இப்போ என்ன ரோ?” என தவிப்பாக கேட்க, “அதான் விட்டுட்டு போறீங்களே! ஆனா, அம்மா அப்பா இல்லாத பொண்ணு தானே யாரு கேப்பான்னு நினைக்காதீங்க. எங்க சொந்தபந்தம் எல்லாம் கேப்பாங்க, ஏன் எங்க பொண்ணை விட்டுட்டேன்னு?” என்றாள் அழுகையினூடே.

இவளது முரண்பாடான செய்கைகளில் குழம்பியது என்னவோ சந்திரன் தான். இத்தனை நேரம் அவன் வேண்டாம் என்று கூறியவள், இப்பொழுது வேறாக பேசினால்…? அதுவும் அவன் என்னவோ இவளை அம்போவென விட்டுவிட்டு போவது போல பேசினால்…?

அதே குழப்பத்துடன், “ரோ…” என்க, “ஆனா அதுக்கு நிறைய கண்டிஷன்ஸ் இருக்கு சந்துரு. அதுவும் கண்டிப்பா… நீ… நீ… அந்த… மத்தவங்க…” என அவள் தடுமாற,

அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டவனோ முகம் சிவக்க, “பைத்தியமா நீ. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இப்போ இல்லை. சும்மா ஊர் சுத்துனேன். அவ்வளவுதான். அதெல்லாம் கல்யாணம் ஆன புதுசுலயே விட்டுட்டேன். லூசு மாதிரி பேசாத” என எரிச்சசலாக கூறினான். மற்ற விஷயங்களில் மகிழ்வுக்கு முக்கியத்துவம் தந்தது எப்படியோ, ஆனால் ஒழுக்கம் தவறி செய்த செய்கைகளை இப்பொழுது எண்ணிப்பார்க்க கூட அவனுக்கு பிடிக்கவில்லை.

அனைவர் வாழ்விலும் சில கருப்பான பக்கங்கள் இருக்கும். அது நினைவில் கூட வந்து விடக்கூடாது என்பதில் உறுதியோடு இருப்பார்கள். சந்திரனுக்கும் பிற பெண்களோடு உலாவியது அவனுடைய வாழ்வின் கருப்பு பக்கங்களானது.

ரோகிணி அவனது பதிலில் ஆச்சர்யம் மேலிட அவனைப் பார்க்க, அவனோ “என்னை நம்ப முடிலையா ரோ?” என்றான் முகத்திலும், குரலிலும் வலியோடு. அவன் முகத்தின் வேதனையை பொறுத்துக் கொள்ள முடியாமல், ‘அப்படி இல்லை…’ என ரோகிணி தொடங்க நினைக்க,

“அப்போ தெரிலை ரோ… ஏதோ அதெல்லாம் சந்தோஷம்ன்னு தப்பா நினைச்சுட்டேன். அங்க பல நல்ல விஷயங்கள் நல்லதா இருந்தது. அதை கத்துக்க தொடங்கி, இந்த மாதிரி கெட்ட விஷயங்களையும் சேத்து கத்துக்கிட்டேன். ஒருவேளை, யாராவது சரியா சொல்லி தந்து இருந்தா, வழி நடத்தி இருந்தா அப்படி பண்ணி இருக்க மாட்டேனா என்னவோ?” என ஆழ்ந்த குரலில் சந்திரன் கூற, “இனி அதை பத்தி பேச வேணாம். விடுங்க” என்றாள் ரோகிணி அவனை இடையிட்டு.

சந்திரனுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை. ஆச்சர்யமாக அவளை பார்த்தபடி, ‘சரி’ என தலையசைத்தான். பிறகு எதுவோ நினைவு வந்தவனாய், “ரோ.. எழுந்திரு” என அவளை எழுப்பி விட, “எதுக்குங்க…” என ரோ கேட்க கேட்க, சாஷ்டாங்கமாய் அவள் பாதம் பணிந்தான்.

“டேய்! லூசு…” என ரோ பதறி விலக, “ஏன் என்னாச்சு? அர்ஜுன் தான் சொன்னான் சமாதானம் பண்ண கால்ல கூட விழ வேண்டி இருக்கும்ன்னு… இவ்வளவு நாளா நீ ரொம்ப கோபமா இருந்ததால, எப்படி கிட்ட வரதுன்னு ஒரே யோசனை. இப்போ தான் நீ நல்லவிதமா பேசற… அதான் உடனே விழுந்துட்டேன். ஏன் நம்ம ஊர் பக்கம் இன்னும் வேற எதாவது பண்ணுவீங்களா சமாதானம் படுத்த?” என்றும் சேர்த்து கேட்க, ரோகிணி தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

“எதாவது சொதப்பிட்டனா ரோ?” என சந்திரன் பரிதாபமாக கேட்க, அவள் சிரித்தே விட்டாள்.

அவளது புன்னகையை ரசித்தபடி, “இவ்வளவு நேரம் நீ பேசுனப்ப கூட எனக்கு நம்பிக்கை இல்லை ரோ. இப்போ நீ சிரிக்கும் போது தான் மூச்சே வருது. நிஜமாவே என்னை மன்னிச்சுட்டயா?” என கேட்க,

ஹ்ம்ம் என புன்னகையினூடே ரோகிணி தலையசைத்தாள்.

“இப்போவும் எப்படி உன்னை பாத்துப்பேன்னு எனக்கு தெரியாது. உனக்கு எதுவும் பிடிக்காத மாதிரி நடந்துக்கிட்டேனா…”

“கண்டிப்பா உங்ககிட்ட சொல்லுவேன். அப்பறம் இந்த காதை திருகி வேணுங்கற மாதிரி வேலை வாங்கிப்பேன்” என செய்தும் காட்டினாள்.

“தேங்க்ஸ்” என ஆழ்ந்த குரலில் கூறியவன், அவள் நெற்றியில் இதழ் பதித்தான். பிறகு அவளை விட்டு நகர்ந்து, தான் கொண்டு வந்த ஒரு பார்சலை அவளிடம் தர, “ஆமா இதென்ன இவ்வளவு பெருசா இருக்கு. இன்னும் பிரிக்கலையா? ஊர்ல இருந்து வரப்பவே கொண்டு வந்தீங்க?” என கேட்க, அவன் சிரித்தபடியே நின்றிருந்தான். அது அவனிடம் அரிதாக வெளிப்படும் கள்ள சிரிப்பு.

அதில் ஏதோ புரிந்து கொண்டவளாய், “எனக்கா? ஆனா, இவ்வளவு பெரிய பார்சல்?” என கேட்டுக்கொண்டே பிரிக்க, உள்ளே அனைத்து வண்ணங்களிலும் புடவைகள் அவளைப்பார்த்து புன்னகைத்தது.

“எதுக்குங்க இவ்வளவு புடவை?” என விழி விரித்து ரோகிணி கேட்க, அர்ஜுனின் மனைவிக்கு புடவை வாங்க சென்றபொழுது நடந்த நிகழ்வுகளை கூறியவன், தொடர்ந்து, “அந்த சேல்ஸ் கேர்ள்க்கு, நீ பார்த்த புடவையை சொல்லவே தெரிலை ரோ… அப்பறம் நானே யோசிச்சேன். அப்பப்ப நீ கூட இல்லைன்னு ஏக்கத்துல உன் புடவையை எடுத்து உன் வாசனையை தேடுவேனா? அப்படி அடிக்கடி உன் புடவையை பார்த்ததால உன்னோட டேஸ்ட் கொஞ்சம் விளங்குன மாதிரி இருந்தது. அத வெச்சு கொஞ்சம் செலக்ட் பண்ணேன்” என அங்கிருந்த பதினான்கு புடவைகளையும் காட்ட, ரோகிணியின் உணர்வுகள் விவரிக்கவே முடியாத, வார்த்தைகளில் அடங்காத ஏகாந்த நிலையில் இருந்தது.

‘புடவையில் வாசம் பிடித்தேன்’ என்கிறான். ‘சேல்ஸ் கேர்ளுக்கு புடவை நினைவில்லை’ என வருந்துகிறான். ‘காலில் விழவும் தயங்கவில்லை’ என்ன மாதிரியான நேசம் இவனுடையது. அவனும் அதிகம் நேசிக்கிறான் தான். ஆனால், வெளிப்படுத்தும் முறை தெரியவில்லை மற்ற ஆண்களைப் போன்றே! என புரிய, அவள் மனம் அத்தனை நிறைவாக இருந்தது.

மனதினில் மகிழ்ச்சி நிறைய, குதூகலமான மனநிலையோடு, “இந்த புடவை எல்லாம் எதுக்குங்க? இதை கட்டுனா எங்க கிளம்பிட்டன்னு கேப்பீங்க…” என்றாள் கேலியாக.

அவளது கேலி புரிந்த கணவனோ, “இனிமே அப்படி பண்ணவே மாட்டேனே…” என்றான் ராகம் இழுத்தபடி கள்ள சிரிப்போடே…

அவனது கள்ளத்தனம் கண்டு முகம் சிவந்தவளும், சப்தம் எழாமல், “ஓ ஹோ…” என்று ராகம் இசைக்க, அந்த ராகம் காற்றோடு கரையாமல், அவளது முகசிவப்பில் வீழ்ந்த சந்திரனது இதழ்களுக்குள் சுகமாய் கரைந்தது.

சந்திரன், ரோகிணியின் வாழ்வு இனி மலர்ந்து மணம் வீசும். அவர்களுக்கும் குழந்தை செல்வங்கள் வரத்தான் போகிறார்கள். அந்த செல்வங்கள் மீது எதையும் திணிக்காமல், மகிழ்வான சூழலில் வளர்க்கத் தான் போகிறார்கள். சந்திரனுக்கு நல்ல தந்தையாய் இருக்கத் தெரியாத நேரங்களில் ரோகிணி அவனை வழிநடத்ததான் போகிறாள். சந்திரனின் பெற்றவர்களைப் போன்று அல்லாமல் இயன்றவரை சிறந்த பெற்றோர்களாக இருக்கவே முயற்சியும் செய்வார்கள்.

அவர்களைப் போன்றே நாமும் சிறந்த பெற்றோர்களாய் இருந்திட முயற்சியினை மேற்கொள்வோம். ஆரோக்கியத்தை விட அழகு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. நல்ல நெறிமுறைகளை விட ஏட்டுக்கல்வி முக்கியமில்லை. குழந்தைகளின் மகிழ்வை விட பணம் முக்கியமேமில்லை. குழந்தைகளை நேசிப்போம்! அடுத்த தலைமுறைக்கும் நேசத்தை கற்று தருவோம்!!

*** சுபம் ***

20 Comments »

 1. எந்த அளவிற்க்கு இந்தக் கதையில் நான் மூல்கிப் போனேனு எனக்கு வார்த்தையால சொல்ல முடியல…சகி

 2. hai yazh venba. azhagana thamizh peyar. ana naan thaminglishla than ezuthaporen. mannikavum yazh. due to my work pressure both at homeand office , i could not spend much time in social websites. but as an when i give a read to your epis. unga thamizh unga peyarai polave romba azhagu. rohinu vs chandran ….ivanga sandaiyai ( oodal nu sollalama) rombave rasithen, ennadan chandiranoda amma appa sari illanalum , inda alavuku aduthavanga manasai kooda purinjuka mudiyatha oru manidana chandran irundiruka vendam. pallathai nokki payum thaneerai pola , thadaikal attra vazhkai murai chandranai oru robot pola unarchikal illada oru manithanai US vazhkai mattri vittadu. kanavukalai tholaitha rohini pondra pengal paithiyam pidikamal irundade periya vizhayam. anbai oru parvai, adharavai oru varthai, asaiyai oru hug iduthan ro pondra pengal virumbum china vizhayangal. .chandran kobamaka pesinalum, avanidam thayakathai udari pesi irukalam ro. partyil chandra nai lunavudan parthavudan sattaiyai pidithirukalam. alladu veetirku vandhu oru moochu sandai potu irukalam. kanneeril karainthe vazhkaiya tholaika irudale muttal penn. pirapil kettavan illa chandran. pasam anbu kaatahi theriyada petrorga, thedirendru kidaitha sudanthiram, kattukadangtha money. thanimai iduve avan vazhi thavari poga karanam. anal avan manasaiyum padika thavari ponnan. ro illada podhuthan avalai thedi yirukiran. ro avanai pirinda poduthan muzuthai piriya mudivedukiral.manasu vittu pesamal, adu sandaiyaka irundalum sari…..piriya mudivedupadu …..hmmm. anal avan india vandha pin thairiyamaga unna illamal veru yaraiyavadhu kalyanam pannirundal santhoshama irundirupen endru sonna anda thunichal roommmmmmmba pidichirundathu.angathan ro ninnuta. adhe pol eppo avalai thedi india vandano appae chandru thirunthittan…aval kaali vizundhavudan manasilum ninnuttan. eppadi konjam konjamai vilakinarkalo appadiye konjam konjamai iruvarum nerunki vanthathum arumai. purithal than vazhkaiyin adinathan. adhu irundal ethanai sandai vendumanalum podalam, evalavu naal vendumanalum piriyalam. adhu oodal……kobam…..adhu marainthu maranthu vidum. verupu, throgam idu than thambadthyathin ethirigal. rombave nanraga idhai patri solli irukieenga. enakum chandran melum ro melum maari maari kobam vandalum, kathaiyin pokkil kobam maranthu avargal seranumnu ninaika arambichuten. well done yaazh. sharada

  • மிக மிக அருமையான விமர்சனம்… நிறைய ரசிச்சு, ஆழ்ந்து, அனுபவிச்சு எழுதி இருக்கீங்க… அருமை சகி.

   நன்றிகள் பல உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், கருத்திற்கும்…

 3. வீக் எண்டு ‘இனி எந்தன் உயிரும் உனதே’ பதிவுகளை மறுபடியும் ஆரம்பிக்கிறதா சொல்லிட்டு எங்க போனிங்கன்னு உங்களில் சிலர் நினைச்சிருப்பிங்க.மக்களே அதுக்குக் காரணமான கதையைப் பத்தித்தான் சொல்ல வந்திருக்கேன்.

  ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ யாழ்வெண்பாவின் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியே அவங்க எழுத்துக்கள் என்னைக் கதைக்குள் இழுத்துட்டுப் போயிருச்சு. ரோகிணி – சந்திரன் பெயர் காரணம் கூடப் பொருத்தம் ஆனால் அவர்கள் வாழ்க்கையும் மனப்போக்கும் தான் முரண். இந்த முரண் இருவருக்குள் எப்படி பிரிவினைக் கொண்டு வருகிறது என்பதை படிப் படியாக சொன்ன விதம் மிக அருமை.

  கதையில் ஒரு பதிவில் பெர்த்டே பார்ட்டியில் எதிர்பாராமல் எதிர்பார்க்காத கோலத்தில் சந்திரனை சந்தித்து ரோகிணி அதிர்வதும், பின்னர் விட்டால் போதும் என்று மனம் வெறுத்து ரோ கிளம்புவதும் ‘பஸ்ஸில் ஏன் போற டாக்சியில போ’ என்று சந்திரன் அக்கறையுடன்(???) சொன்ன இடம்…. உங்களில் எத்தனை பேரு சந்திரன் மண்டையை உடைக்கணும்னு நினைச்சிங்களோ தெரியல நான் கண்டிப்பா நினைச்சேன்.

  இப்படி எமோஷனலா நம்மை பீல் பண்ண வைத்ததில்தான் இந்தக் கதையின் வெற்றி அடங்கியிருக்கிறது.

  மொத்தத்தில் மிக அழகான, கண்ணியமான ஒரு காதல் கதை வேண்டும் என்று நினைப்பவர்களை ஏமாற்றாத படைப்பு. ஏங்கிய நாட்கள் நூறடி தோழி என்னும் தலைப்பினை விட வேறு ஏதாவது ஒன்று இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை. வாழ்த்துகள் யாழ்வெண்பா.

 4. மன்னிப்பது மிக சுலபம்! ஆனால் மன்னிப்பு கோருவது மிகக் கடினம்! ஒவ்வொரு தம்பதியும் தாண்ட வேண்டிய மிக முக்கிய Ego breaking time. மிக அழகு! உங்கள் எழுத்திலும் எண்ணத்திலும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: