யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 14

கனவு – 14

 

அன்று திங்கள் கிழமை காலை. மக்கள் நிரம்பி வழிந்தனர் இலங்கை வங்கியில். வார விடுமுறை கழித்துப் பணம் போடவும், எடுக்கவும் வருபவர்களாலும் அடகு வைக்க, எடுக்க வருபவர்களாலும் எப்போதுமே திங்கள் கிழமைகளில் கூட்டம் அதிகம் தான். வேலை நெட்டி முறிக்கும் ஊழியர்களுக்கு.

 

வேலை ஒருபுறம் என்றால் வைஷாலியோ வேறு ஒரு எரிச்சலில் முகம் முழுவதும் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தனது கோபத்தை எல்லாம் கணணியின் விசைப் பலகையில் காட்டிக் கொண்டிருந்தாள். பாவம். அதற்கு மட்டும் வாய் இருந்திருந்தால் ‘என்னை இப்படிப் போட்டு அடிக்காதே’ என்று வாய் விட்டுக் கதறி இருக்கும்.

 

இவ்வளவு வருடங்களாக வைஷாலி தனியாக வாழ ஆரம்பித்த பின்னர் பொதுவாக எதிர்பார்த்த பிரச்சினை தான் இது. இருந்தாலும் இவள் குணம் அறிந்தவர்கள் கொஞ்சம் எட்டியே நிற்க, இவளும் கவலையற்று இருந்தாள். எல்லாம் இரு வாரங்களுக்கு முன்னர் வரை தான்.

 

இவளின் விசைப் பலகை அழுத ஓலம் கேட்டுப் போலும் அதைக் காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக அலுவலக உதவியாளன் இவள் அறைக் கதவைத் தட்டினான். வங்கி நேரம் முடிவடைய இன்னும் சில நிமிடங்களே இருந்தது. இந்த நரகத்திலிருந்து விடுதலை என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அலுவலக உதவியாளனைப் பார்த்ததுமே கொலை வெறி ஆகியது.

 

“மெடம்…! உங்களை மனேஜர் வரட்டாம்…”

 

பக்கத்து அறையில் இருந்து இன்டர்போனில் மனேஜர் அழைத்த போது இவள் இன்டர்போன் இணைப்பைத் துண்டித்து விட்டு நல்லபிள்ளை போலிருந்திருந்தாள். இனியும் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்தவள் சலிப்புடன் எழுந்தாள்.

 

முகாமையாளர் அறையையும் இவள் அறையையும் பிரிப்பது ஒரு கண்ணாடித் தடுப்பு மாத்திரமே. ஒருவர் எழும்பி நின்றால் தோள் வரை உயரமே தடுப்பிருக்கும். அதனால் இவளையே பார்த்துக் கொண்டிருந்த முகாமையாளருக்கு எந்தச் சாக்குப் போக்கும் சொல்ல முடியாதவளாய் அவர் அறைக் கதவைத் தட்டி விட்டு உள் நுழைந்தாள்.

 

“என்ன மெடம் இன்டர்போன் அடிச்சால் எடுக்கத் தெரியாதோ? உங்களை வெத்திலை பாக்கு வைச்சு அழைச்சால்தான் வருவியள் போல…?”

 

“ஸொரி சேர்… இன்டர்போன் அடிச்சது தெரியாதே எனக்கு. அடிக்கடி ஏதோ பழுதாகுது. நான் மெயின்டெனஸ்ட்ட பார்க்கச் சொல்லுறன்.”

 

“ஓமோம்… ஒவ்வொன்றுக்கும் ஒரு சாக்குப் போக்குச் சொல்லிடுறது. இந்த ரெண்டு பைலையும் செக் பண்ணி வை… நாளைக்கு காலைமை லோன் அப்புரூவல் பண்ண வேணும். பெரிய தொகை… வடிவா எல்லா டீடெய்ல்சும் சரி பார்…”

 

அவர் மரியாதை இல்லாமல் ஒருமையில் அழைத்தது வேறு கடுப்பைக் கிளப்ப வைஷாலி கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தாள். மணி மாலை ஐந்து ஐம்பது காட்டியது.

 

“நான் நாளைக்குக் காலையில வந்து பார்க்கிறேன் சேர். இப்பவே ஆறு மணி ஆகுது. முழுக்க செக் பண்ண குறைஞ்சது மூன்று மணித்தியாலம் வேணும். நான் எத்தினை மணிக்கு வேலை முடிச்சு வீட்ட போறது?”

 

கொஞ்சம் கோபமாகவே தான் உரைத்தாள். அவரோ அவளைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவர்,

 

“நான் எதுக்கு இருக்கிறேன் வைஷ்ணவி…? நீ ஆறுதலா வேலையை முடி… நல்ல ரெஸ்ட்டாரண்ட்டாக பார்த்து டின்னர் முடிச்சிட்டு நானே உன்னை வீட்டில கொண்டு போய் விடுறேன்.”

 

விட்டால் வைஷாலி அவரை அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விடுவாள் போலிருந்தாள். உள்ளங்கைகளை இறுகப் பொத்தித் தனது கோபத்தை அடக்கியவள்,

 

“அதெல்லாம் தேவையில்லை சேர். நான் நாளைக்கு காலையில ஏழு மணிக்கே வந்து செக் பண்ணிடுறேன். எப்படியும் கிளையன்ட்ஸ் பத்து மணிக்குப் பிறகு தானே வருவினம்… அப்புறம் என்ர பேர் வைஷாலி. நொட் வைஷ்ணவி…”

 

அவள் வீட்டுக்குக் கிளம்புவதிலேயே குறியாக இருப்பதை உணர்ந்தவர் கோபம் கொண்டார்.

 

“சம்பளம் மட்டும் ஒழுங்காக நேரத்துக்கு டாண்ணு வாங்கத் தெரியுது இல்ல… ஆனால் மேலிடம் சொல்லுற வேலையைச் செய்யத் தெரியாது. வீட்டில புருஷன், பிள்ளை என்று இருக்கிற போல எதுக்கு இப்போ ஓட நிக்கிறாய்? இங்க நான் வைச்சது தான் சட்டம். சொன்ன வேலையைப் போய்ச் செய்…”

 

அதற்கு மேலும் அங்கு நின்று வாதாடினால் வைஷாலிக்கே என்ன வார்த்தைகள் பேசி விடுவாள் என்று தெரியாது. அவர் பதவிக்கும் வயதுக்கும் மட்டும் மரியாதை கொடுத்தவளாய் மேற்கொண்டு எதுவும் பேசாது பைல்களை எடுத்துக் கொண்டு விருட்டென்று தனது அறையை அடைந்தாள்.

 

ஆழமாய் மூச்செடுத்து விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சஞ்சயனுக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டாள்.

 

தனது அலுவலகத்தில் அன்றைய வேலையை முடித்துவிட்டு, அவந்தியின் புகைப்படத்தோடு சங்கமமாய் இருந்தவனை கைப்பேசியின் ஒலி கலைத்தது. எடுத்துப் பார்த்தவன் முகம் மென்னகையில் விரிந்தது. வேறு யார் வைஷாலியிடமிருந்து தான் வந்திருந்தது.

 

“எனக்கு வேலை முடிய லேட் ஆகும். நீதான் வீட்ட கூட்டிட்டுப் போய் விட வேணும். இப்போ நீ ப்ரீ என்றால் இப்பவே ஃபாங்குக்கு வந்திடு…”

 

அவள் குறுஞ்செய்தியைப் பார்த்தவன் மனது யோசனையில் ஆழ்ந்தது. வைஷாலியை மலையகத்தில் சந்தித்த இத்தனை மாதங்களில் அவள் இதுபோல் அவன் உதவியை நாடியதில்லை. எப்போதாவது வேலை முடியத் தாமதமாகிறது என்றால் அவளுக்கு நன்கு தெரிந்த ஓட்டோ அங்கிளை அழைத்துப் போய்க் கொள்வாள். இப்போது இவனை வரச் சொல்கிறாள் என்றால் சம்திங் ரோங் என்று எண்ணமிட்டவன் அடுத்த இருபதாவது நிமிடங்களில் அவள் முன்னே இருந்தான்.

 

நேரம் என்னவோ மாலை ஆறரை தான். மற்றைய அலுவலர்களும் இன்னமும் வங்கியில் தான் இருந்தார்கள். சிலர் வீட்டுக்குச் செல்லப் புறப்பட்டுக் கொண்டிருக்க மற்றையோர் வெளியேறுவதற்கான ஆயத்தங்களில் இருந்தனர்.

 

வாடிக்கையாளர்களுக்கான நேரம் முடிவடைந்திருந்தாலும் சஞ்சயனை நன்கு அறிந்திருந்த காவலாளி கதவைத் திறந்து அவனை உள்ளே விட்டான். வங்கியினுள் நுழைந்தவன் சுற்றுச் சூழலை அவதானித்தவாறே வைஷாலியின் அறை நோக்கிச் சென்றான். அவள் பக்கத்து அறையிலிருந்த புதிய முகாமையாளரையும் பைல்களோடு போராடிக் கொண்டிருந்த வைஷாலியையும் சிந்தனையோடே நோட்டமிட்டவாறு அவள் அறைக் கதவைத் தட்டினான்.

 

“யெஸ்… கம் இன்…”

 

தலையை நிமிர்ந்து பாராமலேயே அனுமதியளித்தவள்,

 

“ஏய் முயல்குட்டி…!”

 

என்ற சஞ்சயன் அழைப்பில் அவ்வளவு நேரமிருந்த எரிச்சலும் கோபமும் சூரியனைக் கண்ட பனித் துளியாக விலக சந்தோசமாக அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

 

“என்ன இன்னும் வேலை முடியலையா? எத்தினை மணி ஆகும்?”

 

“ஸொரிடா கண்ணா… ஒரு ரெண்டு மணித்தியாலம் வெய்ட் பண்ணுறியா…? என்ர செல்லம் எல்லோ… கோபப்படாமல் இருப்பிங்களாம். நான் கெதில வேலைய முடிச்சிட்டு ஓடி வாறனாம்… சரியா டியர்…?”

 

செல்லக் குரலில் ஆனால் கொஞ்சம் சத்தமாகக் கூறவும் சஞ்சயன் அவளை அதிசயமாகப் பார்த்தான்.

 

‘இவளுக்கு ஏதும் நட்டுக் கிட்டு கழன்டு போச்சோ… வழக்கமாக எருமை, மாடு, கழுதை, நாய், பண்டி தானே இவள் வாயில இருந்து வரும். ஒரு வழியாக இத்தனை வருசங்கள் கழிச்சு எனக்கு அனிமல்ஸ்சில இருந்து மனுச ஜென்மமாக புரமோசன் தர முடிவு செய்திட்டாளோ…? இருந்தாலும் இந்த செல்லம், டியர், கண்ணா எல்லாம் ஓவரிலும் ஓவராத் தெரியேல்லையாமா இவளுக்கு?’

 

அவளையே விழி பிதுங்கிப் போய் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குக் கடைக் கண்ணால் முகாமையாளர் அறையைக் காட்டினாள் வைஷாலி. சஞ்சயனுக்கு இப்போது எல்லாம் விளங்க, ஒரு முறை கண்களை அழுத்த மூடித் திறந்து அவளுக்குப் புரிந்ததாய் சமிக்ஞை செய்தான்.

 

“வெறும் ரெண்டு மணித்தியாலம் தானா? உனக்காக காலம் முழுக்கக் காத்திருக்க ரெடி பேபி… நீ ஆறுதலாக வேலையை முடிச்சிட்டு வா ஹனி…”

 

கூறியவன் எழுந்து அவள் முன்னுச்சி முடியைக் கலைத்து விட்டு வெளியே சென்று அவள் அறை முன்பு வாடிக்கையாளர்கள் காத்திருப்பதற்காகப் போட்டிருந்த இருக்கைகளில் ஒன்றில் உட்கார்ந்தான். கைத் தொலைபேசியை எடுத்தவன் புதிதாக ஆரம்பித்திருந்த முகப் புத்தகத்தில் ஆழ்ந்து போனான். இருந்தாலும் இடையிடையே வைஷாலியையும் அந்தப் புது முகாமையாளரையும் நோட்டம் விடத் தவறவில்லை.

 

ஒரு மணி நேரம் காற்றாய் பறந்திருந்தது. சஞ்சயன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. முகத்திலே எந்த வித சினமோ, காத்திருப்பதற்கான எரிச்சலோவின்றி அமர்ந்திருந்தவனைப் பார்க்கப் பார்க்க முகாமையாளருக்கு எரிச்சல் மண்டியது. வைஷாலியும் சஞ்சயனும் பேசுவதையும் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருந்தவருக்குத் தன் எண்ணம் அன்றைக்கும் ஈடேறாது என்பது தெளிவறப் புரிய வைஷாலியை அடுத்த நாள் வந்து வேலையை முடிக்குமாறு பணித்து விட்டு முகத்தில் ஏமாற்றம் கவிய புறப்பட்டுச் சென்றார்.

 

அவர் புறப்பட்டுச் செல்வதையே கோபத்தோடும் இயலாமையோடும் பார்த்தவள், எழுந்து சஞ்சயனிடம் வந்தாள்.

 

“ஸொரிடா சஞ்சு… ஏதும் வேலையாக இருந்தனியோ? நீ வேணும் என்றா வீட்டுக்குப் போ… நான் ஓட்டோ அங்கிளை வரச் சொல்லுறன். எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும். தொடங்கின பைலை இடையில விட முடியாது…”

 

“போடி லூசு… நான் வீட்ட போய் என்ன செய்யப் போறன்? வீட்ட போனாலும் இந்த போனைத்தான் நோண்டிட்டு இருக்கப் போறன். அதை இங்க இருந்து செய்யிறன். நீ ஆறுதலா வேலையை முடி. நானே வீட்ட கொண்டு போய் விடுறன். லேட் ஆகும் என்று அதுல்யாக்குச் சொல்லிட்டியோ?”

 

“ம்… ஓகேடா… அப்ப வெய்ட் பண்ணு… ஓமோம்… அவளுக்கு மெசேஜ் போட்டிட்டன்.”

 

கூறியவள் பைலில் ஆழ, சஞ்சயன் போனில் கேம் விளையாடியபடி நேரத்தை ஓட்டினான். நேரம் இரவு எட்டரை தாண்டவும் வைஷாலி வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினாள். வழியில் இருந்த பெரிய உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியவன்,

 

“இறங்கு வைஷூ…! சாப்பிட்டிட்டே போவம். நீயும் ரொம்ப டயர்டாக இருக்கிறாய். இனிமேல் போய் சமைச்சுச் சாப்பிட அலுப்பில வெறும் வயித்தோட படுத்திடுவாய்…”

 

கூறவும் வேறு வழியின்றி இறங்கியவள் தலைக்கவசத்தை கழட்டியவாறு அவனைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றாள். விருப்பமான உணவை வேண்டி விடுத்த கோரிக்கை உறுதி செய்யப்பட, உணவிற்காகக் காத்திருந்த நேரத்தில் வைஷாலியையே ஆழ்ந்து நோக்கினான் சஞ்சயன்.

 

“என்னடா பார்க்கிறாய்?”

 

“ஏன்… நானாகக் கேட்டால் தான் சொல்லுவியளோ…? ஃபாங்கில என்ன பிரச்சினை? புது மனேஜர் ஏதும் தப்பா நடக்கிறானா?”

 

சஞ்சயன் குரலில் கொஞ்சமாய் கோபம் கொப்பளிக்கத்தான் செய்தது.

 

“இப்ப எதுக்குக் கோபப்படுறாய்? நீ இல்லாமல் தான் நான் இத்தனை வருசமும் எல்லாப் பிரச்சினையும் சமாளிக்கிறன் சரியா?”

 

“இப்ப நான் என்ன கேட்டிட்டன் என்று இப்பிடிக் கதைக்கிறாய் வைஷூ?”

 

“எட்டு வருசமாக நான் உயிரோட இருக்கிறனோ இல்லையோ என்று என்னைப் பத்திக் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்காத ஆள் தானே நீ… இப்ப ஏதோ பெருசா என்னில அக்கறையுள்ளவன் போல கதைக்க வந்திட்டாய்…”

 

அவள் கோபத்திலுள்ள நியாயம் புரிந்தவன் குற்றவுணர்வில் அமைதியானான். சஞ்சயன் எதுவும் பேசாது அமைதியாகத் தலையைக் குனிந்தவாறு இருக்க வைஷாலிக்கும் ஒரு மாதிரி போய் விட்டது. முகாமையாளரில் இருந்த கோபத்தை இவன் மீது காட்ட முனைவது புரிய தன்னையே நொந்து கொண்டாள்.

 

“ஸொரிடா சஞ்சு… அந்த மனேஜர்ல இருந்த கோபத்தில உன்னில காய்ஞ்சிட்டன். அந்த விசரனுக்கு ஐம்பது வயசு ஆகப் போகுது. வயசுக்குத் தக்கபோல நடக்கிறேல்ல. முந்தி கொழும்பில வேலை செய்தவனாம். லோன் கேட்டு வந்த ஒரு பொம்பிளையைத் தன்னோட ரூமுக்கு வரச் சொல்லிக் கேட்டு அது பெரிய பிரச்சினை ஆகித்தான் இப்ப இங்க ட்ரான்ஸ்பர் ஆகி வந்திருக்கிறான்.

 

அரசியல் செல்வாக்கு இருக்கிற திமிர். மனுசி, பிள்ளையள் கொழும்பிலதான் இருக்கினமாம். இது இங்க தனியாத்தான் இருக்குதாம். நான் டிவோஸ் ஆனவள், தனியாக இருக்கிறன் என்று தெரிஞ்சதும் என்னட்ட வாலாட்டப் பாக்குது.

 

ஆரம்பத்தில ஓவரா வழிஞ்சு பார்த்தான். நான் அதைப் பொருட்படுத்தேல்ல என்றவும் இப்ப எப்ப பார்த்தாலும் ஏதாவது குற்றம் குறை கண்டுபிடிச்சபடி. எதுக்கெடுத்தாலும் எல்லாருக்கும் முன்னால என்னைத் திட்டுறது. அடிக்கடி ஓவர் டைம் பார்க்க வைக்கிறான். நான் மாட்டன் என்று சொன்னால் தனியாகத்தானே இருக்கிறாய். வீட்ட போக என்ன அவசரம் என்றுற…

 

இன்றைக்கு தன்னோட டினருக்கு வரச் சொல்லிப் பிறகு தான் வீட்ட கொண்டு போய் விடுறன் என்று சொன்னான். அதுதான் உன்னை வரச் சொல்லிக் கூப்பிட்டனான். எனக்கு இங்க ஒரு ஆம்பிளைத் துணை இருக்கு என்று தெரிஞ்சால் இனி என்னட்ட வாலாட்ட யோசிப்பான் தானே… ஒரு பொம்பிளையைத் தனியாக வாழ விட மாட்டாங்களே…”

 

மளமளவென அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். சஞ்சயன் எதிரில் மட்டும் அந்த முகாமையாளர் அப்போது இருந்திருந்தால் அந்த நொடியே அவன் கரத்தால் அவர் உயிர் பிரிந்திருக்கும். அவ்வளவு ஆவேசத்தில் இருந்தான் அவன். அதற்குள் உணவு வந்து விட இருவரும் மௌனமாக உணவில் கவனம் செலுத்தினர்.

 

“வேலை முடிய நான் இனி ஒவ்வொரு நாளும் வந்து கூட்டிட்டுப் போறன். அந்த நாதாரிப்பயல் உன்னில கண் வைச்சது, திரும்பத் திரும்ப ஏதாவது உன்னைச் சீண்ட ட்ரை பண்ணிட்டே தான் இருக்கும். உனக்கு நான் இருக்கிறன் என்று அவனுக்குத் தெரிஞ்சால் கொஞ்சம் அடங்கி இருப்பான் தானே…”

 

“உனக்கு ஏன் வீண் கஷ்டம் சஞ்சு? அவன் என்னை மீறி அப்பிடி என்ன செய்திட முடியும்?”

 

“எட்டு வருசமாக நான் விட்ட பிழையை இனியும் விடத் தயாரில்லை. நான் இருக்கும் வரை இனி எந்தக் கழிசடையும் உன்னை எதுவும் பண்ண முடியாது… உன்னைக் கவனமாகப் பாக்கிறதை விட எனக்கு வேற வேலை என்ன இருக்கு வைஷூ?”

 

குரல் கம்மக் கூறியவனின் பார்வையைச் சந்திக்கத் திராணியற்று குனிந்து உணவை அளைந்தாள். உண்மை தெரிந்திருந்தும் வார்த்தைகளால் அவன் உண்மை நட்பைக் காயப்படுத்தி விட்டதை எண்ணித் தன்னிலேயே கோபம் கொண்டாள் வைஷாலி.

 

“ரியலி ஸொரிடா சஞ்சு… நான் உண்மையா அப்பிடிச் சொல்லி இருக்கக் கூடாது. நீ ஏன் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை என்று எனக்குத் தெரியும்டா. ஆனா நான் கஷ்டப்பட்ட நேரம் எல்லாம் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன்டா. அந்த ஆதங்கத்தில தான்டா வார்த்தையை விட்டிட்டன். ப்ளீஸ் சஞ்சு…! நான் சொன்னதைப் பெருசா நினைக்காதை…”

 

சஞ்சயன் அப்போதும் அமைதியாக இருக்கவும் இடக் கரத்தால் அவன் இடக் கரத்தைப் பிடித்தவள்,

 

“சஞ்சு…!”

 

என மென்மையாக அழைத்தாள். அவள் தொடுகையில் நிமிர்ந்தவன் கண்கள் சிவந்திருந்தன.

 

“என்னில நீ எவ்வளவு பாசம் வைச்சிருக்கிறாய் என்று என்னை விட வேற யாருக்குத் தெரியப் போகுது சஞ்சு? முரளி என்னை இனிமேல் பார்க்கக் கூடாது என்று உன்னட்டச் சத்தியம் வாங்கினதில தான் நீ என்னைப் பார்க்க வரேல்ல என்றது எனக்குத் தெரியும்டா…

 

அதேபோல இந்த எட்டு வருசமும் நீ என்னைப் பார்க்க வரேல்ல என்றாலும் கூட ஒரு நாள் கூட என்னை மறந்திருக்க மாட்டாய் என்றதும் தெரியும் எனக்கு. நான் ஏதோ டென்சனில, நீ என்னில அக்கறை இல்லாதவன் என்று சொல்லிட்டேன். உண்மையா ஸொரிடா… உன்னை ஹேர்ட் பண்ண என்று நினைச்சுச் சொல்லேல்ல சஞ்சு… ஏதோ வாய் தவறி வந்திட்டுது…”

 

அவள் கலங்குவதைக் காணச் சகிக்காதவன், அவள் வெண்டைப் பிஞ்சு விரல்களைத் தனது அகன்ற கைக்குள் அடக்கியவன்,

 

“நடந்து முடிஞ்சதை மறந்திடு வைஷூ… இனிமேல் உனக்கு நான் இருக்கிறன். நீ எதுக்கும் இனிக் கவலைப்படக் கூடாது சரியா? எனக்கு நீ என்ர பழைய முயல் குட்டியாகவே வேணும்… உன்ர முகத்தில இனி நான் சிரிப்பை மட்டும் தான் பார்க்க வேணும். சரியா?”

 

அவளும் கண்களில் நீர் முத்துக்கள் திரண்டிருக்க உதடுகளில் புன்னகையுமாய் சம்மதமாய் தலையசைத்தாள். அந்த ஒரு நொடியில் சஞ்சயனின் கை அழுத்தத்தில் அத்தனை வருடங்களாகப் பட்ட அனைத்து மன வேதனைகளும் அகன்று ஒரு புத்துணர்வு உருவாவதை ஒரு வியப்போடு உணர்ந்தாள்.

 

வைஷாலி என்னதான் துணிவுடன் தனியாக வாழ்வதாகக் காட்டிக் கொண்டாலும் அவ்வப்போது மனம் அன்புக்கு ஏங்கித் தவித்து விடும். இப்போது பூரண அன்புக்குச் சொந்தக்காரனே தனக்குச் சிறு பிரச்சினை என்றாலும் கூட உடனடியாகக் காக்கத் தன்னருகிலேயே தன்கூடவே இருப்பதை எண்ணுகையில் அவள் மனம் நிறைந்தது.

 

இந்த மகிழ்ச்சி நீடிக்குமா? வசந்தம் வீசுமா?

 

2 thoughts on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 14”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 06சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 06

இதயம் தழுவும் உறவே – 06   வரவேற்பறைக்கு திரும்பி வந்த வித்யாவின் முகம் இறுக்கமாக இருந்தது. மனோகரன் யோசனையோடு அவளை பார்த்திருக்க, பின்னாடியே யசோதா வந்தாள். எதையோ சாதித்த திருப்தியோடும், பூரிப்புமான முக பாவத்தோடும். யசோதா கோவில் செல்வதற்காக பிரத்யேகமாக

Chitrangatha – 33Chitrangatha – 33

அன்புள்ள தோழிகளே, எப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு நீங்கள் தந்த கமெண்ட்ஸ் பார்த்தேன். ‘மது, செல்வத்தை இத்தோட விட்டிங்களே’ன்னு வருத்தப்பட்டு நீங்க தர நினைச்ச தண்டனையையும் மெயிலில் படிச்சேன். யப்பா… இந்த மாதிரி தண்டனைகள் எல்லாம் தந்தா இன்னொரு டெல்லி சம்பவம்