Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 25

நல்லபடியாக பத்திரப்பதிவு முடித்து, கையோடு அருகினில் இருந்த ஆலயம் சென்று வழிபட்டுவிட்டு அனைவருக்கும் உணவகத்தில் உணவு வாங்கி தந்து என நேரம் வேகமாக கரைய, அனைத்தையும் முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர் சந்திரனும், ரோகிணியும். வேலைகள் அதன்பாட்டிற்கு நடந்தாலும், செய்ய வேண்டியவைகளை செய்து கொண்டே இருந்தாலும் ரோகிணிக்கு உள்ளுக்குள் கோபம் சுழன்று கொண்டேயிருந்தது.

‘தன் உணர்வுகளுக்கும், எண்ணத்திற்கும் மதிப்பு தராமல் அவன் போக்கில் வளைக்கிறானே!’ என்ற ஆத்திரம் அவளை அடுப்பினில் எரிந்து கொண்டிருந்த மரக்கட்டை போல தகிக்க செய்ய, தன் கோபம் மொத்தத்தையும் கணவன் மீது கொட்டுவதற்காக வீடு செல்ல வேண்டும் என்று காத்திருந்தாள்.

வீட்டினுள் நுழைந்ததும், “என்ன சாதிக்கிறதுக்கு இப்படி எல்லாம் பண்ணறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றாள் ஆத்திரமாக.

‘எத்தனை நாள் தான் திட்டு வாங்கணுமோ!’ என சந்திரனுக்கு சோர்வாய் போனது. இருந்தும் அவள் முகத்தில் இருந்த எரிச்சலும், பிடித்தமின்மையும் இன்று வழக்கத்தை விட நிறைய வரவிருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்த அனைத்தையும் கேட்பதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டான். அவனால் கேட்கவே முடியாதவைகள் இன்று வரப்போகிறது என்று அவனுக்கு தெரிய வாய்ப்பில்லையே!

ரோகிணி எதைக் கூறுகிறாள் என்று தெரிந்திருந்தது. இருந்தும் புரியாதது போல, “இப்போ என்ன ஆச்சு ரோ?” என்றான் அவள் முகம் பார்த்து. இவன் இப்படி ஒன்றும் தெரியாதது போல கேட்கவும் அவளுக்கு கோபம்அதிகமானது.

“ஒன்னும் தெரியாத மாதிரி பேசாதீங்க. நாம பிரியணும்ன்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க என் பேர்ல இடம் பதியறீங்க. எல்லார் முன்னாடியும் எதுவும் பேசமாட்டேன்னு தைரியமா? நான் சொல்லறதுக்கு என்ன மதிப்பு? அப்போ நான் சொன்னதை நீங்க நம்பலை அப்படித்தானே! வேணும்னா நாளைக்கே போய் விவாகரத்துக்கு பதிவு பண்ணிட்டு வரலாம். சரியா?” என அவனை கேட்க, அவனுடைய பொறுமை பறந்தது. பிரிவு! பிரிவு! என்கிறாளே, இவள் ஒருத்தி முடிவெடுத்தால் போதுமா என்று எரிச்சலானான்.

“நிறுத்து ரோ. என்ன உன் இஷ்டத்துக்கு பிரியணும் சொல்லற? வாழறதும், பிரியறதும் ரெண்டு பேரோட முடிவு. நீ தனியா முடிவெடுக்க கூடாது. அதோட, நான் செய்யறது பிடிக்கலைன்னு எப்போவாவது நீ என்கிட்ட சொல்லி இருக்கியா?” என்றான் கோபமாக.

அவன் கோபத்தை அவள் மதித்தால் தானே! “ஏன் சொல்லணும்?” என்றாள் அலட்சிய குரலில்.

“அப்போ எனக்கு ஒரு வாய்ப்பு குடுக்காம நீயா எப்படி முடிவெடுப்ப?” என மீண்டும் கத்தினான். அவளுக்கு பிடிக்காத விஷயங்கள் பலவற்றை செய்திருக்கிறான் தான். பல்லைக்கடித்து பொறுத்துக் கொண்டவள், அவனிடம் என்றேனும் சொல்லி இருக்க வேண்டும் அல்லவா? மனதோடு பாரங்களை சுமந்து, இனி முடியவே முடியாது என அவனோடு கலந்தாலோசிக்காமல் முடிவும் எடுத்து விட்டாள். அவளுடைய இந்த தவறுதான் அவனுக்கு தற்பொழுது இருக்கும் ஒரே சாதகமான விஷயம். அதைக்கொண்டே அவளை மடக்க நினைத்தான்.

ஆனால், கணவனின் குணம் அறிந்தவள் ஆயிற்றே! “சொல்லியிருந்தா கேட்டு இருப்பீங்களா?” என சரியாக கணித்து கேட்டாள். உண்மையில் கேட்டு இருக்க மாட்டான் தான், அதை இருவருமே அறிவர்.

ஆனாலும் ஒப்புக் கொள்ள மனமற்றவனாய் பேச்சை மாற்றினான். “அது வேற, பட் நீ சொல்லவேயில்லையே!” என மீண்டும் அவளது தவறிலேயே வந்து நின்றான். அவனுக்கும் வேறு வழி இருக்கவில்லையே!

ரோகிணியும் கோபத்தோடே இருந்ததால், “லுக் எனக்கு யாரையும் திருத்தி நல்வழிப் படுத்தணும்னு அவசியம் இல்லை?” என்று வார்த்தைகளை யோசிக்காமல் விட்டு விட்டாள். கேட்ட சந்திரனுக்கு என்னவோ போல் ஆனது.

அதோடு அவளுக்கு பிடிக்கவில்லை என்று அவனே வருந்துகிறான். இவள் ஏதோ கொலை குற்றம் போல பேசுகிறாளே என்றிருந்தது. அவன் பார்த்த சூழலில் துரோகங்கள் எல்லாம் இயல்பானது. எனக்கு பிடித்திருக்கிறது, அதில் உனக்கென்ன வந்தது? என்னும் கூட்டம். என்ன அவர்கள் திருமணம் என்று செய்யாமல், வாழ்வை தன்போக்கில் தான்தோன்றி தனமாக வாழ்பர்கள். இவனோ இவன் கண்டதை மட்டும் தான் கற்றிருந்தான். அவன் நல்லவர்களை பாராதது விதி அன்றி வேறெது? பாதை தவறும்பொழுது முளையிலேயே கிள்ளி எரிந்துவிட வேண்டிய பெற்றவர்களின் கண்காணிப்பும் அவனுக்கு அமையவில்லையே! அதுதானே இத்தனை பிரச்சனைகளுக்கும் மூல காரணம்.

ரோகிணியின் பேச்சில் எழுந்த எரிச்சலில், “திருத்தறதா? வேணாம் ரோ தேவை இல்லாம பேசாத, என்ன பண்ணிட்டேன் நீ வந்து திருத்தற அளவு, நான் பாத்த கலாச்சாரம் அது, அத பாஃலோ பண்ணேன். தட்ஸ் இட். அதுக்காக, அந்த கல்சர் தப்புன்னு நீ எப்படி சொல்லலாம்? அப்ப அதைய அத்தனை பேரு பாஃலோ பண்ணுவாங்களா?” என மனதில் இருப்பதை அடுக்கினான்.

இத்தனை கோபத்திலும், ‘அவன் சொல்வதும் உண்மை தானே! பலர் வாழும் வாழ்வியல் முறை அது. அதை இழிவாக பேச நமக்கென்ன உரிமை? ஆனால், அந்த முறை அந்நாட்டவர்களுக்கு ஒத்துப்போகலாம்…’ என ரோகிணியின் எண்ணம் பயணிக்க, அவளுக்கு ‘அச்சோ!’ என்றானது. ‘என்ன யோசிக்கிறேன் நான்?’ என தன்மீதே கோபம் கிளற அதை சந்திரனின் புறம் அழகாய் திரும்பினாள்.

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அது உங்க பர்ஃசனல். எனக்கு தேவையே இல்லாத விஷயமும் கூட. அதான் என் வாழ்க்கையில உங்களையே வேண்டாம்ன்னு முடிவு எடுத்துட்டனே. இனி உங்க லைஃப் ஸ்டைல் பத்தி எனக்கென்ன வந்தது?” என விட்டேரியாக ரோகிணி பதிலுறைக்க சந்திரனின் மனம் இவளது வார்த்தைகளில் வெகுவாக புண்பட்டது.

“என்ன தான்டி உன் பிரச்சனை? அப்போ பேசாம கொண்ண. இப்போ பேசிப்பேசி சாவடிக்கிற. தப்பு தான், உன் பாஷைல கேடுகெட்டவன் தான். அதுக்கு என்ன பண்ணலாம். இன்னும் சாகலை. சாகற வர அடிக்கணுமா? ஏதோ சொல்லுவங்களே, அணுஅணுவா சித்ரவதை பண்ணனுமா? அப்ப உனக்கு சந்தோசமா இருக்குமா? சொல்லு உனக்கு அப்படி பண்ணா தான் சந்தோசம் அப்படின்னா… உனக்கு எப்படி தோணுதோ அப்படி பனிஷ் பண்ணிக்க. ஆனா, நீ என்னைவிட்டு விலகி போகாத, அது சாவை விட கொடுமையா இருக்கு. இந்த சில மாசங்கள்லயே எனக்கு வாழ்க்கையே சுமை மாதிரி தோணுது” என்றான் குரல் உடைந்து.

சந்திரன் பேசுவதை கேட்க கேட்க ரோகிணிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் அப்படியொரு வாழ்க்கை முறையை அவளால் நிச்சயம் வாழ முடியாதே! அதையே அவள் வார்த்தையிலும் வெளிப்படுத்தினாள். “என்னால உங்களோட கண்டிப்பா இருக்க முடியாது” என உறுதியோடு தன் கலக்கத்தையும், இளக்கத்தையும் மறைத்து அவள் உரைக்க,

அதே உறுதி மாறாமல், “என்னாலையும் உன்னை விட்டுட்டு இருக்க முடியாது” என்றான் சந்திரன் மிகமிக அழுத்தமாக, வெகு தீர்மானமாக.

இவனது தீர்மானத்தில் ரோகிணி மேலும் எரிச்சலாகி, “ஏன் வேற யாரும் உங்ககூட இருக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா?” என்றாள் உதடு பிதுக்கி ஏளனமாக.

‘தவறுக்கு மனம் வருந்தி வந்தவனிடம் கேட்கும் கேள்வியா இது?’ என சந்திரனுக்கு தோன்ற, “ரோ உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உயிரா நேசிக்கிறேன். அதை ரொம்ப தாமதமா புரிஞ்சுகிட்டேன். நீயும் அதே தப்ப பண்ணிடாத. நீ என்னை எந்த அளவு காதலிக்கறேன்னு எனக்கு தெரியும். எனக்கு தண்டனை தரதா நினைச்சு உன்னை நீயே ஏமாத்திகாத!” என்றான் மனம் வருந்தி.

அவன் கூறிய காதல் என்னும் வார்த்தை அவளை வெகுவாக சீண்டியது. அவனை பார்த்த அன்று இருந்த இளக்கம் கூட அவளுடைய நேசம் கொண்ட மனதினால் வந்த வினை என்றா அவளுக்கு தெரியாது. இருந்தும் அதனை ஒப்புக்கொள்ள முடியாத கோபத்தில், “என்ன காதல், கத்திரிக்கான்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க. எங்க அம்மா உங்களை கட்டிக்க சொன்னதால கட்டிகிட்டேன். உங்களை தவிர வேற யாரை கட்டிக்க சொல்லி இருந்தாலும் அதே தான் பண்ணி இருக்கப் போறேன், அவங்களை நேசிச்சும் இருந்திருப்பேன். ஒரு வேளை நல்லா கூட வாழ்ந்துட்டு இருந்திருப்பேனோ என்னவோ” என்றாள். கடைசி வரியை கூறி முடிக்கும்போது குரல் உடைந்திருந்தது.

அவள் பேசியதன் அர்த்தம் உணர்ந்து, “ரோ…” என்று சந்திரன் அதிர்ச்சி ஆக,

“உண்மையை தானே சொன்னேன்” என்றாள் அலட்டிக்கொள்ளாமல். அவனை காயப்படுத்தும் வேகத்தை விட, தன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி தீர்ந்துவிடும் வேகம் அவளுக்கு.

“ரோ… என் அம்மா, அப்பா நான் எப்படி நடந்துக்கணும்ன்னு எனக்கு சொல்லி தந்தது இல்லை. குடும்பம்ங்கற அமைப்புல வளர்ந்தாலும், அப்படி எப்பயுமே உணர்ந்ததில்லை. அவங்களுக்கு தான் எனக்கு எதுவும் சொல்லி தர தோணினதில்லை. ஆனா, உனக்கு? நீ சொல்லி இருக்கலாம் தானே, நான் தப்பு பண்ணும் போதெல்லாம் இது தப்புன்னு ஆச்சும் சொல்லி இருக்கலாமல்ல. உன் பாஷையில திருந்தறனோ, இல்லையோ அது உனக்கு தப்பா படுதுன்னாவது உணர்ந்து இருப்பேன் இல்ல, எதுவுமே எங்கிட்ட சொல்லாம, எதையும் வெளில காட்டிக்காம இப்படி திடீர்ன்னு என்னை தூக்கி எரிஞ்சா?” என்று கூறும்போதே சந்திரனின் கண்கள் கலங்க தயாராய் இருந்தது.

மேற்கொண்டும் அவனே தொடர்ந்து, “ஓ என்னை திருத்தணும்னு உனக்கு எந்த ஆசையோ, அவசியமோ, தலைவிதியோ இல்லைன்னு முன்னமே சொன்ன தானே! அதோட இப்போ நீ சொன்னதும் நிஜம் தான, என் மேல இருக்க காதல் கூட, உன் கணவன்ங்கற காரணத்தால தான் வந்தது. அந்த காதலை கூட எனக்கு காப்பாத்திக்க தெரியலை இல்ல.

விடு பெத்தவங்களுக்கே நான் ஏ.டி.எம் மெஷின் மாதிரி தான் இருக்கேன், பொண்டாட்டிக்கு கெட்டவனா இருக்கறதால என்ன? எல்லாரும் இருந்தும் அனாதை வாழ்க்கை. கடவுள் நல்லா எழுதி இருக்கான்.

ஆனா, உன்னை மாதிரி எல்லாம் நான் சொல்ல போறது இல்லை. எனக்கு யாரை கட்டி வெச்சிருந்தாலும், இவ்வளவு பிடிச்சிருக்குமா தெரியாது. அவ இல்லாம என்னால இருக்கவே முடியாதுன்னு உணர்ந்திருப்பனான்னு தெரியாது. அவ என்னை வேண்டாம்ன்னு சொன்னாலும், கெஞ்சிகிட்டு நின்னுட்டு இருந்திருப்பனா தெரியாது. உன்னை ரொம்ப நேசிக்கிறேன் ரோ. என்ன அதை புரிஞ்சுக்காம போயிட்டேன். உன்னோட ஏக்கமும், கனவும் எனக்கு தெரியாம போன மாதிரி, என்னோட காதலும், விருப்பமும் கூட எனக்கு தெரியாம போயிடுச்சு. ஏன் எனக்கே என்னோட நேசம் தாமதமா தான் புரிஞ்சது” என்று சிவந்த விழிகளோடு கூறியவன் இன்னும் வாதாட தெம்பில்லை என உணர்ந்து கொண்டான்.

இனியும் ரோகிணிக்கு தன்னிலையை புரிய வைக்க முடியும் என்றும் சந்திரனுக்கு நம்பிக்கையில்லை. “இதுவரை உன் விருப்பம் தெரிஞ்சு நடந்துக்கலை. இனியாவது முயற்சி பண்ணறேன். எப்போ எங்க கையெழுத்து போடணும்ன்னு சொல்லு. உனக்காக போடறேன். தேங்க்ஸ். தேங்க்ஸ் பாஃர் எவரிதிங். தேங்க்ஸ் பாஃர் கம்மிங் இன் மை லைஃப். எனக்கு வாழ்க்கையை புரிய வெச்சதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்று உணர்ந்து கூறியவன், வேகமாக அறையினுள் நுழைந்தான்.

அறைக்குள் சென்ற வேகத்தோடு தன் உடைமைகளை சேகரிக்க தொடங்கியவன், சிறிது நேரத்தில் மனம் தாளாமல் கட்டிலிலேயே அமர்ந்து கொண்டான். தலையை குனிந்த வாக்கில், கைகளால் தலையினை தாங்கி அமர்ந்திருந்தான். என்ன செய்து வாழ்வை நேராக்க என்று அவனுக்கு புரியவில்லை. தன் வாழ்வில் மனைவி வேண்டும் என்று ஆசைப்படுபவனுக்கு அதை எப்படி செயல்படுத்த என்றும் தெரியவில்லை. அவளை சமாதானப்படுத்தும் முறையையும் அவன் அறியவில்லை.

இனி மறுபடியும் தனிமையா, அதனை ஏற்கும் அளவு உடலிலும், மனதிலும் வலு இருக்கிறதா? கண்டிப்பாக இல்லை என்றே மனம் உரைத்தது. அனைத்து உடமைகளையும் எடுத்து வைக்க தொடங்கிவிட்டான் தான், ஆனால் எங்கு செல்ல என அவனுக்கு புரியவில்லை. மனம் பாரமாக, கண்கள் கலங்கியது. சிவந்து தடித்த கண்கள் குளம் கட்டி, நீரினை வெளியிட… அழுகிறோம் என்ற நினைவு கூட இல்லாமல் சப்தமின்றி கண்ணீர் வடித்தான்.

7 Comments »

  1. Ro un porumai enge.avan kettathu maathiri PESA vendiya idathil pesamal ippothaikku avanai kaaisuriye. ro avanilaamal nee irunthuduviyaa….ivarargalai inaikum melliya kodu kannukke teriyalai

  2. Ippo chandranapartha paavama iruku sis anbu katta avanuku aale illa vazhi thavari poitaan . Nice epi sis

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: