Tamil Madhura சிறுகதைகள் சேது விஸ்வநாதனின் “கருவின் கனம்” – சிறுகதை

சேது விஸ்வநாதனின் “கருவின் கனம்” – சிறுகதை

சேது விஸ்வநாதனின் “கருவின் கனம்” – சிறுகதை

ரமேஷுக்கும் லலிதாவுக்கும் திருமணம் ஆகி இரண்டு மாதம் நிறைவடைந்தது. இருவருக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இளம் தம்பதிகளிடையே உள்ள மகிழ்ச்சியும் அன்யோன்யமும் இருவரிடமும் இருந்தது.

அதே மகிழ்ச்சி நிறைந்த ஓர் இரவு!!. ரமேஷின் மார்பில் சாய்ந்து கொண்டு லலிதாவின் பேச்சு ஆரம்பித்தது.
“என்னங்க உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்” என்று இழுத்தாள் லலிதா.
“சொல்லுடி செல்லம், என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்” என்று அவளின் தலையை கோதி விட்டான் ரமேஷ்.

“ஏங்க நாம‌ கொஞ்ச நாளுக்கு குழந்தை பெத்துகறத தள்ளி போட்ட என்னங்க” என்று கேட்டாள் லலிதா.
சற்று எதிர்பாராத ரமேஷ் “ஏன் செல்லம் இப்படி சொல்லுற” என்று வெளிறிய முகத்துடன் கேட்க,

“கொஞ்ச நாளுக்கு நாம சந்தோஷமாக இருக்கலாம்” என்று வெக்கத்துடன் கூறினாள் லலிதா…

(குழந்தை பிறந்துவிட்டால் கணவன் மனைவி உறவில் விரிசல் வரும் என்பது லலிதாவின் எண்ணம்).

ஏதோ தயக்கம் இருந்தாலும், இல்லறத்தை அனுபவிக்க தானே மனைவி கூறுகிறாள் என்று நினைத்து “சரி செல்லம். உன் இஷ்டப்படியே குழந்தை பெத்துக்கலாம்” என்று கூறினான் ரமேஷ்.(அவனும் புது மாப்பிள்ளை தானே)

லலிதா ரமேஷின் காதலும் காமமும் நீடித்தது சில மாதங்கள்.

லலிதா ரமேஷிடம் வந்து தயங்கிபடி  “என்னங்க. நாள் தள்ளி போச்சு” என்று கூற ஆனந்தத்தில் ரமேஷ் லலிதாவை கையில் தூக்கினான். ஆம், தனக்குு வாரிசு கிடைக்க போகுது என்ற மகிழ்ச்சி பெரிதும் இருந்தது.

ஆனால் லலிதாவின் மனதில் மகிழ்ச்சி இல்லை. குறைந்தது இரண்டு வருடங்கள் ஆவது குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது.

அன்று இரவு மகிழ்ச்சியில் இருந்த ரமேஷிடம் “என்னங்க நமக்கு இந்த குழந்தை வேண்டாம்” என்றால் லலிதா.

வெளிறிய முகத்துடன் “என்னடி சொல்ற. பைத்தியமா உனக்கு” என்று கோவமாக கேட்டான் ரமேஷ்.

“இல்லைங்க. எனக்கு இப்போ குழந்தை பெத்துக்க விருப்பம் இல்ல. நாம இத கலச்சுடலாம்” என்று கூறியவுடன் லலிதாவின் கண்ணத்தில் பளார் என்று ஒரு அடி விழுந்தது.

அழுதுகொண்டே லலிதா கணவனை பார்த்தாள். இவ்வளவு நாள் அன்பாக பார்த்துக்கொண்ட கணவன் அடித்துவிட்டார் ஆச்சர்யமும் வலியும் அவளுள்ளே எழுந்தது.

அன்று இரவு இருவரும் பேசாமலே தூங்கினார்கள். ரமேஷ் காலையில் எழுந்து சீக்கிரமே வெளியே சென்றான். என்றுமே தன்னிடம் அன்பாக நடந்து வந்த கணவர், இன்று பேசாமல் சென்றது இன்னும் வேதனையை ஏற்படுத்தியது லலிதாவுக்கு!…

அன்று இரவு ரமேஷ் லலிதாவிடம் “ஹே லலிதா. சாரி டி. நேத்து கோபத்துல அடிச்சுட்டேன். இனி அப்படி பண்ண மாட்டேன்” என்று அவளின் கைகளை பற்றிக்கொண்டு சொன்னான்.

லலிதாவின் கண்கள் கலங்க ரமேஷ் இறுக்கி அணைத்தாள்.

சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ரமேஷின் கண்களிலும் நீர்த்துளிகள் தோன்றியது.

அழுதபடியே லலிதா கணவனிடம், “நமக்கு இப்போ குழந்தை வேண்டாங்க. ஒன்றரை வருடமாவது தள்ளி போடலாம். ப்ளீஸ்”  என்று கூற,

“லூசாடி நீ. நான் அப்பா ஆக போறனு எவ்வளவு சந்தோஷமா இருக்கேன். நீயென்னமோ கலச்சுடலாம். அப்படி இப்படின்னு பேசிட்டு திரியற” என்று கடிந்து கொண்டான் ரமேஷ்.

கோபத்துடன் லலிதா, “இந்த கரு வளர்ந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன்” என மிரட்ட, ஏதும் புரியாதவனாய் அவளின் உக்கிர முகத்தை பார்த்தான் ரமேஷ்.

ஏதேதோ பேசி இருவருக்கும் அந்த இரவு கழிந்தது.

ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் ரமேஷ் லலிதாவிடம் பேசினான். என்ன காரணம் என்று தெரிஞ்சுக்க முயற்சி செய்தான்.

முடியவில்லை!…..

ஒருவேளை லலிதா இல்லற சுகம் பாதிக்குமோ என்று நினைத்து இப்படி சொல்றாளோ என்று நினைக்க,

அதேநேரம் கருவை கலைக்க மருத்துவமனைகளை தேடி கொண்டு இருந்தாள் லலிதா.

சில நாட்கள் கழித்து,மீண்டும் மனைவியை கோவமாக “ஏய்!. இப்போ என்னடி பிரச்சினை உனக்கு?. ஏன்டி கருவுலயே ஒரு உசுர கொல்ல பாக்குற?, நீயெல்லாம் ஒரு பொண்ணா?” என்று ரமேஷ் கேட்க,

“எனக்கு இந்த குழந்தை பிடிக்கல.நான் ஒரு செக்ஸ் பைத்தியம்.எனக்கு செக்ஸ் வேணும். அதுவும் இல்லாம எனக்கு இப்போ குழந்தை பொறந்தா என் அழகு கொறைஞ்சுடும். அதனால இதை கலைச்சே ஆகனும்”னு கத்தும் போது மீண்டும் அடி விழுந்தது லலிதாவுக்கு!…

இப்போ தான் ரமேஷுக்கு உண்மை புரிந்தது.

ஆனால் அதற்குள் கரு 50 நாள் வளர்ச்சியை அடைந்தது.

அடுத்த நாளிலிருந்து லலிதா ரமேஷிடம் பேசவில்லை. எந்த வேலையும் செய்யவில்லை.  சரியாக சாப்பிடவும் இல்லை.

கிட்டதட்ட ஒரு மனநோயாளி போல இருந்தாள்.

எவ்வளவு பேசியும் ரமேஷின் வாதம் தோற்றது.

மனைவியின் ஆசைக்காக தன் மனதை கல்லாக்கி கொண்டு விருப்பம் இல்லாமல் தன் முதல் குழந்தையை பலிகொடுக்க சம்மதித்தான் ரமேஷ்.

இருவரும் மருத்துவமனை சென்று டாக்டரிடம், ” டாக்டர் நான் இப்போ கர்ப்பமா இருக்கேன். 60நாள் ஆச்சு. எங்களுக்கு இப்போ குழந்தை வேண்டாம்” என்று லலிதா சொல்ல,

“ஏம்மா நீ புரியாம தான் பேசுறியா.  குழந்தை கிடைக்கமா பலபேர் கோவிலுக்கும்,
ஹாஸ்பிடலுக்கும் போயிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா குழந்தை வேண்டாமுனு சொல்லுற” என்று கடிந்து கொண்டார் டாக்டர்
(பலபேரின் கதறலை கேட்டவர் அல்லவா!!).

“இல்லைங்க டாக்டர். இப்போ எங்களுக்கு விருப்பம் இல்ல. என் கணவருக்கும் இப்போ வேலை போயிட்டுச்சு. லவ் மேரேஜ். பெத்தவங்க சப்போர்டும் இல்ல” என்று பொய்களை கூறி கொண்டே ரமேஷின் தொடையில் கிள்ளினாள் லலிதா.
பாவம் ரமேஷ் அவனால் தற்போது வாயை மூடி கொண்டு தான் இருக்க முடியும்.

டாக்டரும் முடிந்த அளவு பேசி பார்க்க, இறுதியில் லலிதாவின் (பிடி)வாதமே வென்றது.

இரண்டு நாட்கள் கழித்து கருவை கலைக்க டாக்டர் சொல்ல, மகிழ்ச்சியில் லலிதா இருக்க, ஈரமான கண்களுடனே வீட்டை அடைந்தனர் இருவரும்.

இரண்டு நாட்களும் அழுகையே(மனதுகுள்ளேயே) ரமேஷுக்கு வேலை ஆனது.  பெற்றவர்களுக்கும், நண்பர்களுக்கும் தன் வலியை கூற முடியாமல் , தனது கையாலாகாத தனத்தை நினைத்து வெதும்பி போனான் ரமேஷ்.

கரு கலைக்கும் அன்று நேரமே எழுந்து ரமேஷை எழுப்பி கிளம்ப வைத்து விரைவாக மருத்துவமனை சென்றனர்.

லலிதா கரு கலைக்கும் அறைக்கு உள்ளே சென்ற போது, வெளியே ரமேஷின் கண்கள் ஈரமாய் இருந்தது.

உலகை ரசிக்க உதித்த உயிர் கருவிலேயே கலைந்தது.

அவளின் உதிரத்தில் வெளியே வந்தது ரமேஷின் வலிகளும், கனவுகளும் தான். அதைவிட உலகை காண துடித்த ஓர் உயிர்.லலிதாவின் அடிவயிற்றை விட ரமேஷின் மனமே அதிகமாக வலித்தது.

மருத்துவமனை விட்டு வெளியே வந்த போது லலிதாவின் மனதில் ஏதோ இனம்புரியா கலக்கம். கார் தெருவை அடைந்த போது சற்று கூட்டமாக இருந்தது.

தனது வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரரிடம் “அண்ணே, என்ன ஆச்சு? என்ன கூட்டம் அங்க?” னு கேட்டான் ரமேஷ்.

“அட அத ஏன் தம்பி கேக்கற?. நம்ம பார்வதியம்மா மருமவ கிருஷ்ணவேனி தூக்கு போட்டுகிச்சுப்பா” என்று சொல்லும் போது, தனது வாடிய முகத்துடன் வலியை தாங்கிக் கொண்டு காரில் இருந்து இறங்கினாள் லலிதா.

“ஏண்ணே. எதுக்கு சூசைட் பண்ணிகிச்சாம். ஏதாவது தெரியுமா?” என்று ரமேஷ் கேட்க,

சலித்து கொண்டே “அந்த பொண்ணுக்கு 6 வருசமா குழந்தை இல்ல. 2 தடவ அபார்சன் ஆயிருச்சு. இப்போ கர்ப்பப்பை வீக்காம். குழந்தை பிறக்காதுனு டாக்டர் சொல்ல, இந்த பொண்ணு இப்படி ஒரு முடிவு எடுத்துருச்சுப்பா.
என்ன பண்றது?. குழந்தைங்கறது கடவுளா பார்த்து கொடுக்கறது. எல்லோருக்குமே கிடைக்காதில்ல ரமேஷு” என்று சொல்லி விட்டு அவர் வீட்டை நோக்கி நகர,

தள்ளாடி கொண்டே வீட்டினுள் நுழைந்து மறுகணமே கதறி அழ ஆரம்பித்தாள் லலிதா.

லலிதாவின் மனதில் தோன்றிய கலக்கத்தின் காரணம் அவளின் கதறலில் வெளிவந்தது.

அவளின் அழுகையை கண்ட ரமேஷ் ஏதும் பேசாமல் அறைக்குள் செல்ல, தன் அடிவயிற்றை பிடித்து கொண்டு அழுதாள் லலிதா.

அன்றைய இரவு உடல் வலியிலும், மன வலியிலும் கடந்தது.

காலை எழுந்தவுடன் கண்ணாடி முன்பு நின்று, உடம்பு பசிக்காக உயிரை கொன்று விட்டோமே குற்ற உணர்ச்சியுடன் தன் முகத்தை பார்த்தாள்.  தன் வயிற்றை தொட்டு பார்த்தபோது கண்களில் நீர் வடிந்தது.

மீண்டும் ஓர் உயிரை தன் வயிற்றில் வர ஏக்கத்துடன் நகர்ந்தாள் லலிதா.

கருவின் முக்கியத்துவம் அறிய லலிதாவுக்கு இரண்டு இறப்பு தேவைப்பட்டது…..!

1 thought on “சேது விஸ்வநாதனின் “கருவின் கனம்” – சிறுகதை”

  1. கதை படிப்பினையாக இருந்தது சேது .விஸ்வநாதனுக்கு பாராட்டுக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சேதுபதி விசுவநாதனின் ‘ஏக்கம்’ – சிறுகதைசேதுபதி விசுவநாதனின் ‘ஏக்கம்’ – சிறுகதை

பச்சை பசேல் என்று வயல்வெளி நிறைந்த ஊர். அதிகாலை நேரத்தில் பறவைகள் தங்களின் உணவுக்காக கூட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த நேரம். கைகளில் தூக்குபோசியில் சோறும் வெங்காயமும் தலையில் வேலை உபகரணங்களையும் தூக்கி கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர் ஊர்மக்கள்.

சாயி பிரியதர்ஷினியின் ‘மழையின் காதலி’ – சிறுகதைசாயி பிரியதர்ஷினியின் ‘மழையின் காதலி’ – சிறுகதை

மழை… எவ்ளோ அழகான ஒரு விஷயம் மழை ஆண்பாலா பெண்பாலா.. தெரியவில்லை எப்படி வேண்டுமாணாலும் வைத்துக் கொள்ளலாம்.. என்னுடைய முதல் காதலன்.. இவன் தான்.. இந்த மழை தான்.   *** அணைத்துக்கொள்ளும் ஆறுதல் சொல்லும் சாரலாய் வீசும் சங்கீதம் பேசும்

அப்புவின் கதை : ரண்டி சோமராஜுஅப்புவின் கதை : ரண்டி சோமராஜு

அப்புவின் கதை : ரண்டி சோமராஜு (தெலுங்கு கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் முத்துத் தீவு என்று ஒரு சிறு கிராமம் இருந்தது. ஆனால் அந்த ஊரில் முத்துக்கள் சேகரிக்கப்படவுமில்லை; அது ஒரு தீவுமில்லை. அந்த ஊர் வெகு தூரத்தில் தன்னந்தனியாக