Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 24

பெற்றவர்களை மறந்து சந்திரன் உறங்கியிருக்க, ஈஸ்வரன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய்தான் போயிருந்தது. ஈஸ்வரன் சந்திரனை அனுப்பி வைத்ததும் தனது அக்காவையும், மாமாவையும் தான் பார்க்க சென்றார்.

வாழ்க்கையில் கட்டுப்பாடு விதித்து வாழ வேண்டும் தான். அதற்காக வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியாத அளவு கட்டுப்பாடுகளை விதித்து, அதற்குள் கல்வியைத் தவிர வேறு எதையும் அனுமதிக்காமல் வளர்த்தால்? சந்திரனின் நிலைதான் ஏற்படும். ஈஸ்வரன் தனது அக்காவிடமும், மாமாவிடமும் முடிந்தவரை சமாதானம் பேசினார். நிலைமையை விளக்கினார்.

என்னவோ பேசிப்பேசியே திருத்துவது எல்லாம் திரைப்படங்களில் தான் சாத்தியம் போல! ஈஸ்வரனால் வழக்கம்போல அவர்களுக்கு புரியவைக்க முடியவில்லை. முன்பு புரிந்து கொள்ள மறுத்தார்கள் என்றால், அப்பொழுது சந்திரன் சொல்படி கேட்டு நடப்பவன், சாதனை மாணவன் எனலாம். ஆனால், இப்பொழுது அவனிடம் பல குறைகள் இருப்பதாகவே ஈஸ்வரனுக்கு தோன்றியது.

பின்னே, சந்திரன் தான் அவரிடம் வீட்டில் நடந்த விஷயங்களை தெளிவாக கூறியிருந்தானே! அவன் பெற்றவர்களை திட்டி அவர்களாகவே வெளியேறும்படி செய்தது உட்பட. நல்லவேளையாக என்ன மாதிரியான வார்த்தை பிரயோகங்கள் என்பதை சொல்லவில்லை. இல்லையெனில் மனிதன் நொந்தே போயிருப்பார். இந்த அளவு தெரிந்ததற்கே அவர் மிகவும் வேதனை பட்டார். அதைக்கொண்டே அக்கா, மாமாவிடம் பேச வந்தார்.

ஆனால் இந்த நிலையிலும் குதர்க்கமாய், தங்கள் ஆதாயத்தை கருத்தில் கொண்டு பேசும் இவர்களை என்ன செய்ய என்றே ஈஸ்வரனுக்கு புரியவில்லை. ஒருவழியாக சமாதானமாக, அவர்கள் போக்கிலேயே, “நீங்க வாங்கி போடாத இடமா, வீடா, தோட்டமா மாமா. அதுல எல்லாம் என்ன பெருசா பேரும், வருமானமும் வந்துட போகுது. இப்போ சந்திரனுக்கு ஹாஸ்பிட்டல் கட்ட நல்ல இடமா கிடைச்சு இருக்கு. இப்போதைக்கு சின்ன அளவுல கட்டி, போக போக விரிவு படுத்தலாம்ன்னு இருக்கான். நல்ல விஷயம் தொடங்கறப்ப கூட இருந்து ஆசீர்வாதம் பண்ணுவீங்களா, அதைய விட்டுட்டு கண்டதையும் நினைச்சுட்டு…” என அவர்களை மொத்தமாக கவிழ்க்கும் வண்ணம் பேசி ஓரளவு சரி கட்டியிருந்தார்.

மாணிக்கவேலும், சுசீலாவும் லாபக்கணக்கும், பெருமை பேசுவதற்கான விஷயங்கள் நிறைந்திருப்பது பற்றியும் சுய அலசலில் ஈடுபட்டு பெருந்தன்மையாக அவன் அழைத்தால் பார்ப்போம் என்று ஈஸ்வரனிடமும் கூறியிருந்தனர். அதுவே அவருக்கு பரம திருப்தி.

ஈஸ்வரன் இத்தனை பாடுபட்டதும் வீணாகும் வண்ணம் சந்திரன் பெற்றவர்களை அழைக்க மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ‘இவனைப்போன்ற தறுதலை’ என்று அவன் மனைவி ரோகிணி சொன்னதை கூட மறந்து, அவளோடு கூடிக்களித்ததை நினைத்து உறங்குபவன் பெற்றவர்களையா நினைவில் வைத்திருப்பான்? ஆனால், அவனைப் பெற்றவர்கள் அதிசயமாய் இவனை நினைவில் வைத்து இவன் அழைப்பிற்காக காத்திருந்தனர்.

மறுநாள் பத்திரப்பதிவு செய்யும் இடத்திற்கு மாமா சொன்ன நேரத்திற்கு ரோகிணியுடன் சந்திரன் வந்து சேர்ந்தான். ஈஸ்வரன் இவர்கள் இருவரைப் பார்த்ததும் வரவேற்றுவிட்டு சந்திரனிடம், “அம்மா கிட்ட பேசுனியா? வர சொல்லிட்டியா?” என எதிர்பார்ப்போடு கேட்டார்.

“ஓ! சாரி மாமா மறந்துட்டேன்” என சுலபமாக சந்திரன் பதில் அளிக்கவும், ஈஸ்வரனின் முகமே வாடி விட்டது. அவர் நேற்று தொண்டைக்குழி வற்றும் அளவு பேசி வந்தது அனைத்தும் வீணாகவும், ‘எப்படி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவது?’ என சோர்ந்து போனார்.

ரோகிணிக்கு ஈஸ்வரனின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது. எத்தனை பேர் பிரிந்த, ஒட்டுதலற்ற உறவுகளின் இடையே பாலமாக இருப்பார்கள்? ‘நமக்கென்ன ஆதாயம்?’ என பார்க்கும் உலகம் அல்லவா இது. ஏன் சந்திரனின் பெற்றவர்கள் சொந்த மகனிடமே ஆதாயம் தேடவில்லையா? அப்படிப்பட்டவர்களுடன் பெற்ற மகனை இணக்கமாக வைக்க இத்தனை பாடுபடுகிறாரே என்றிருந்தது.

ரோகிணிக்கு ஈஸ்வரனின் மீது ஏற்கனவே நன்மதிப்பு தான். இப்பொழுதும் அவரின் செய்கையில் மேலும் மதிப்பு கூட, அவர் முகம் வாடுவது பொறுக்காமல் அவருக்கு சமாதானமாக, “இப்போ பண்ணிடுவார் சித்தப்பா” என்றாள். அதில் சந்திரனுக்கும் அறிவிப்பும், கட்டளையும் சேர்ந்தே இருந்தது.

சந்திரனால் இதற்கு மேலும் தாமதிக்க முடியுமா? உடனடியாக பெற்றவர்களை அழைத்து “இன்று இடம் பதியப்போகிறோம். வந்துவிடுங்கள்” என்று இரத்தின சுருக்கமாய் கூறிய கையோடு பதிலை எதிர்பார்க்காமல் துண்டித்து விட்டான். பின்னே அவர்கள் பேசுவதை எல்லாம் மனிதன் கேட்க முடியுமா?

மாணிக்கவேலும், சுசீலாவும் இரவெல்லாம் அழைப்பு வராததால் ஏக கடுப்பில் இருந்தனர். இப்பொழுது சந்திரன் இவ்வாறு அவசரகதியில் கூறவும் மேலும் கடுப்பாகி விட்டனர். அவர்களுக்கு கிடைத்த அவமதிப்பின் பயனாக பத்திரம் பதிய செல்ல வேண்டாம் என்ற முடிவை ஸ்திரமாக எடுத்து விட்டு வீட்டிலேயே இருந்தனர்.

சந்திரனின் செய்கையை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரனுக்கு விழி பிதுங்கி விட்டது. அருகில் நின்றிருந்த ரோகிணியிடம், “இவனை எப்படிமா சாமாளிக்கிற?” என கேட்டே விட, அவர் தோரணைக்கும், தோற்றத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் அவர் கேட்ட பாவானையில் அவளுக்கு புன்னகையே வந்துவிட்டது.

சப்தம் எழுப்பாமல் மலர்ந்து புன்னகைத்தாள். மேக கூட்டங்கள் விலகும் நேரம் மெல்ல எட்டிப்பார்க்கும் நிலவினைப் போன்று வசீகரித்தது ரோகிணியின் முகம். இமைகளை சிமிட்ட மறந்து சந்திரன் லயித்திருந்தான். பலகாலமாக அழுது வடிந்தே பார்த்ததாய் ஞாபகம். இவள் புன்னகை தொலைய நாம் தானே காரணம் என்று ஒருவழியாக புரிந்து கொண்டான். அதை எப்படி மீட்டெடுப்பது என்னும் கவலையும், ஏக்கமுமாய் அவளையே அசையாது பார்த்திருந்தான்.

“புரியுது… புரியுது… நீ தங்கச்சி மேல ஓவர் லவ்ஸ்ன்னு புரியுது. ஆனா நீ இந்தியா வந்து நாலு நாள் ஆச்சு டா. இன்னும் இப்படி வெறிக்க வெறிக்க பாத்தா எப்படி?” என மகேஷின் கேலியில் சுற்றம் உணர்ந்த சந்திரன் அவனை முறைத்தான். மனைவியின் மலர்ந்த முகத்தை பல நாள் கழித்து ரசிக்கிறான் அதை நண்பன் கெடுத்ததால் கோபத்தில் தன் பற்கள் வாயிற்குள் அரைபட அவன் நிற்க,

சந்திரனின் தோரணையில், “டேய் கரடியா வந்துட்டேனா? ஆனா நீ இப்படி லவ்வர் பாஃயா மாறுவேன்னு நான் நினைக்கவே இல்லை டா” என மீண்டும் வார, இம்முறை சந்திரனின் சீனியர் வேல்முருகனும், மாமா மகன் வருணும் கூட கேலியில் இணைந்து கொண்டனர்.

“என்ன மா எங்க பையனை இப்படி மாத்தி வெச்சு இருக்க? அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் படிப்பு, படிப்பு, படிப்பு தான். நான் அவனோட சீனியர், என்னையே மகேஷ் சொல்லி தான் தெரியும். இப்போ என்னடான்னா உன்னை தவிர வேறு எதுவுமே தெரியாது போல” என வேல்முருகன் கூற, ரோகிணிக்கு என்ன முயன்றும் தடுக்க முடியாமல் முகம் சிவந்து விட்டது. ஒன்றும் பேசாமல் தலையை குனிந்து கொண்டாள்.

வருணோ அவன் பங்கிற்கு, “அக்கா அவங்க எல்லாம் அப்படித்தான் பேசுவாங்க, நீங்க கண்டுக்காதீங்க. எனக்கு மட்டும் ஒரு உதவி, நீங்க சந்திரன் மாமாக்கு யூஸ் பண்ணுன வசிய மருந்து மட்டும் தந்தீங்கன்னா நான் கொஞ்சம் யூஸ் பண்ணிப்பேன்” என சீரியஸாக கூற, இம்முறை புன்னகையை ஒளித்து வைக்க ரோகிணியால் முடியவில்லை. அவள் மலர்ந்து சிரிக்கவும் அங்கிருந்தவர்களை நன்றியோடு வலம் வந்த சந்திரனின் பார்வை இறுதியில் மனைவியின் முகத்தில் தஞ்சம் கொண்டது.

‘வசிய மருந்தா? அப்படி எதும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். என் பிரச்சனையெல்லாம் சொடக்கு போடறக்குள்ள முடிஞ்சுடுமே!’ என சந்திரன் ஏக்க பெருமூச்சு விட்டான்.

இடம் பதியப்போகும் நேரம் வரவும் ரோகிணியின் பெயரில் பதிவதற்கான ஏற்பாடு நடப்பதை கண்டு அவள் சந்திரனை முறைத்தாள். அவனோ அவள் அருகில் வந்து அவள் மட்டும் கேட்கும் குரலில், “நேத்து நீ டேமேஜ் பண்ணுன கையை அசைக்கவே முடியலை. என்னால எப்படி கையெழுத்து போட முடியும்? இப்போதைக்கு உன் பேர்ல பதிவு பண்ணிடலாம். ப்ளீஸ். வேற ஆப்ஷன் இல்லை” என பாவமாக கூற, அவன் எதிர்பார்த்தபடியே மற்றவர்களின் முன்பு சண்டையை வளர்க்க முடியாமல் கோபத்தோடே அவள் பெயரில் இடம்பதிய சம்மதித்து விட்டாள்.

அவள் மனதில் இன்னும் பல ரணங்கள் ஆறாமல் இருக்க, அந்த கோப எரிமலை எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் என்னும் நிலையில் இருக்கிறது. இந்த சூழலில் சந்திரன் அவளை மேலும் மேலும் கோபப்படுத்தி வைப்பது, அவனே சிங்கத்தின் குகையில் தலையை விடுவது போன்று என்று சந்திரனுக்கு எப்பொழுது விளங்குமோ?

ஆனால், சந்திரன் ரோகிணியின் கோபத்தையெல்லாம் தாங்கும் மனவலிமை கொண்டவன், இல்லையேல் அவள் அத்தனை திட்டியும் இத்தனை எளிதாக துடைத்தெரிந்து இயல்பாக இருக்க முடியுமா?

3 Comments »

  1. Ippadi Magan appadi parants irunthaal . Ro . Un paadu thintaattame .yaaraavathu chantiranukku tution edunga…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: