Advertisements

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 22


ரோகிணி தவிப்பும், கலக்கமுமாய் கேள்வி கேட்க, சந்திரனுக்கு அவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. தன்னை அடித்து, சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் அளவு முன்னேறிய பொழுதும் அழுகையை விடமாட்டேன் என்கிறாளே என்று அவளுக்காக தவித்தான்.

அவள் கோபம் சிறிது கலவரப்படுத்திய பொழுதும், மனதோரம் ரகசியமாய் இதம் தந்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை. பின்னே, மருத்துவமனை கட்டுவதற்காகத்தான் இந்தியா வந்தாயா? என்னும் கேள்வியின் உள்ளே, அப்பொழுது என்னை தேடி நீ வரவில்லையா? என்னும் கேள்வியல்லவா ஒளிந்திருக்கிறது. ரோகிணி தன்னை முழுதாக வெறுக்கவில்லை என்பதை அவன் ஏற்கனவே அறிவான் தான்.

இல்லையேல், இளைத்து, சோர்ந்து வந்த தன் தோற்றத்தைப் பார்த்ததும், கணவன் மீது கோபமாய் இருக்கிறோம் என்பதைக் கூட மறந்து இரண்டு நாட்களாய் சுற்றியிருப்பாளா? இன்று காலையில் பழைய கோபங்கள் எல்லாம் மீண்டும் வீறுகொண்டு எழுந்த போதிலும், அத்தனை கோபமாய் தனது தவறுகளை குத்திக்காட்டி பட்டியலிட்ட போதும், தன் பசியறிந்து அண்ணமிட்ட அவளின் செய்கையை விட வேறு என்ன சான்று வேண்டும் அவளது நேசத்தை விளக்க? தன் மனைவியின் தன்னலமற்ற அன்பு சந்திரனை பனிசாரலில் நனைத்து இதமாக்கியது. பாவம், புண்ணியம் போன்ற புராண கணக்குகளின் படி… நிச்சயம் முற்பிறவியில் ஏதோ பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் கூட எண்ணம் முளைத்தது.

தன்னிடம் கோபமாய் கத்துபவளின் முகத்தைப் பார்த்தவன், ஆறுதல் தரும்பொருட்டு தனது வலது கரத்தால் அவள் முகத்தினை அருகிழுத்து நெஞ்சில் சாய்த்துவிட்டு தலையை மெல்ல வருடிவிட்டான். அவனுக்கு இது எல்லாம் பழக்கமில்லாத செயல். ஏனோ செய்யத் தோன்றியது, செய்து விட்டான். அவளுக்கு ஆறுதல் தரநினைத்து செய்த செய்கை அவனுக்கும் ஆறுதல் தந்தது வினோதம் தான்.

சந்திரனின் இந்த திடீர் செய்கையில் ஒரு கணம் சிந்தை மழுங்கி மயங்கி நின்ற ரோகிணியோ, நிகழ்காலம் புரிய அவனிடமிருந்து திமிறி விடுபட எண்ணிய நேரம்… சந்திரனின் குரல் அவ்விடத்தின் அமைதியை கிழித்து ஒலித்தது. அந்த குரலில் இருந்த மென்மையோ, இல்லை வேறு ஏதோ பாவமோ அவளை கட்டுப்படுத்த… அசையாமல் அவன் நெஞ்சிலேயே வாகாக தஞ்சம் கொண்டாள்.

“ரோ… நீ அழுததை பாத்தப்ப, ‘இவ என்ன தப்பு செஞ்சா, அழற அளவுக்கு? தப்பு பண்ணுன என்னை கேள்வி கேட்கறதை விட்டுட்டு, இவ எதுக்கு அழணும்?’ அப்படின்னு தான் நினைச்சேன். இப்போ நான் நினைச்ச மாதிரி பண்ணிட்டு அதுக்கும் அழணுமா?

ப்ளீஸ் ரோ… அழாத… கஷ்டமா இருக்கு. அதோட எந்த வாக்குவாதமும் வேண்டாம். இன்னைக்கு ஏற்கனவே போதும், போதுங்கற அளவு சண்டை போட்டாச்சு. எனக்கு ரொம்பவும் ஒரு மாதிரி இருக்கு. சத்தியமா இதுக்கும் மேல என்னால முடியாது. ஒரு மாதிரி இருக்கு” என பரிதாபமாகக் கூற, அவளுக்குமே அவன் கூறியதைக் கேட்க பாவமாய் போய்விட்டது.

ரோகிணிக்கு சந்திரனின் மீதுள்ள திடமற்ற வெறுப்பும், வலுவற்ற கோபமும் அவன்மீது அவ்வப்பொழுது இளக்கம் கொள்ள செய்ய, அந்த சமயங்களில் எல்லாம் அவளது ஆழ்மனதிலுள்ள எல்லையற்ற நேசம் அவளையும் அறியாமல் வீறுகொண்டு எழுந்து விடுகிறது. இப்பொழுதும் நேசம் கொண்ட மனதோடு, கணவனின் தற்போதைய நிலையை ஆராய அவன் தரப்பும் புரியத்தான் செய்தது. மாணிக்கவேலும், சுசீலாவும் இவளை பேசினார்கள் தான், ஆனால் அதற்கும் முன்பு சந்திரனை பேசியது எல்லாம்..? மிகமிக அதிகம் அல்லவா! அத்தனை ஏச்சு பேச்சுக்கள், இவளாலேயே கேட்க முடியவில்லையே! ஆனால், அவர்கள் அவனை பேசும்பொழுதெல்லாம் எதுவும் பேசாத கணவன், தன்னை பேசவும் தானே, வீறுகொண்டு எழுந்து அவர்களை வீட்டை விட்டு அனுப்பினான்! பாசம் இல்லாமல் இந்த செய்கையை எல்லாம் செய்யவே முடியாது. ஆனால், இந்த பாசம் தனக்கு மட்டும் இல்லையே! இந்த எண்ணம் வரும்போதே அவனிடமிருந்து வேகமாக விலகிக்கொள்ள, அவன் அவளது செய்கையின் காரணம் புரியாமல் விழித்தான்.

பிறகு அவள் முக இறுக்கத்தை கவனித்தவனோ, “நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரவா? ரொம்ப ரெஸ்ட்லெஸா இருக்கு. கொஞ்சம் வேலை எல்லாம் இருக்கு. அப்படியே முடிச்சுட்டு வந்துடறேன்” என அவளுக்கு விளக்கங்களை கூறி அனுமதிக்காக காத்திருக்க,

எங்கேயோ போ, என்கிட்ட ஏன் சொல்லற? என்னும் பாவனையில் ரோகிணி பேசாமல் அங்கிருந்து சென்று விட்டாள். இருக்கும் மனநிலையில் அவனால் நிச்சயம் சமாதானம் செய்ய இயலாது. ஆகவே, அவனும் அவளை மேலும் மேலும் தொல்லை செய்யாமல், வெளியில் கிளம்பினான். கிளம்பியவனுக்கும் அவளிடம் முதல்முறை அனுமதி கேட்கிறோம் என்று தெரியவில்லை, வீம்பாய் சென்றவளுக்கும் அந்த நினைவு இல்லை.

சந்திரன் மருத்துவமனை கட்டும் வேலைகளுக்கான பொறுப்பை, தனது தாய்மாமன் ஈஸ்வரனிடமும், அவருடைய மகன் வருணிடம், பிறகு தன் நண்பர்களான மகேஷ், வேல்முருகனிடம் ஒப்படைத்திருந்தான். அவர்களும் இரண்டு நாட்களாய் இடம் பார்க்க வா என்றழைக்க, இவன் அசைவேனா என்றுவிட்டான். இன்றுதான் நேரில் போய் அனைத்தையும் பார்த்தான்.

இவனை நேரில் பார்த்ததும் மகேஷ் விழிவிரித்து, “மச்சான் என்னடா இப்படி மாறிட்ட? பூதக்கண்ணாடி வெச்சு தான் தேடணும் போலயே! தங்கச்சியை பிரிஞ்சு இந்த நிலைமைக்கு ஆளாவேன்னு நான் நினைக்கவே இல்லை” என்று வியந்து விட்டு… கூடவே, “நானும் என் பொண்டாட்டியை அம்மா வீட்டுக்கு அனுப்பப் போறேன். என் உடம்பை குறைச்சுட்டு தான் மறுவேலை” என்றும் சேர்த்து சொன்னது வேறு, அவனுக்கு ஒரு மாதிரி கூச்சமாய் போய்விட்டது.

ஏதோ புதிதாய் காதல் வந்த இளம்பையன் போன்று.., தன் நேசம் இப்படி வெளிச்சமாகிறதே என அசடு வழிந்தது சந்திரனுக்கு. மற்றவர்களின் ஆராய்ச்சி பார்வையும் தற்பொழுது கேலியாக உருமாற அவனுக்குள் அத்தனை வெக்கம். இந்த உணர்வுகள் எல்லாம் அவனுக்கு மிகமிக புதிது. அவர்களை எல்லாம் சிரித்து மழுப்பி சமாளித்தான்.

மருத்துவமனை கட்டுவதற்கென்று பார்த்திருந்த இடம் நல்ல மெயின் இடத்தில் தான் அமைந்திருந்தது. பார்த்ததுமே சந்திரனுக்கு பயங்கர திருப்தி. நாளை இடம் பதிய எங்கு வர வேண்டும், எப்பொழுது வரவேண்டும் என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டான். அனைவரிடமும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தவனுக்கு அவனின் மாமா ஈஸ்வரனின் தயக்கம் சுமந்த முகம் இன்னும் புரியவில்லை. அவர் இவனிடம் தனியே சில விஷயங்களை பேச வேண்டும் என்று விரும்பினார். ஆனால், சந்திரனுக்கு தான் அந்த அளவு நுணுக்கங்கள் எல்லாம் புரியாதே! அவன் கண்டுகொள்ளவே இல்லை.

பொறுத்து பொறுத்து பார்த்தவர், அவன் பேசி முடித்து கிளம்பும் நேரம், அவரே அவனிடம் தனியாக பேச வந்து விட்டார். மிகவும் தயங்கி தயங்கி, “என்ன சந்திரா இன்னும் அக்காவையும், மாமாவையும் கூப்பிடலை போல?” என கேட்க, “எதுக்கு மாமா? எங்க கூப்பிடனும்? ஏதாவது விசேஷமா?” என புரியாமல் அவன் கேட்க, கண்டிப்பாக அவன் விளையாடவில்லை என்று அவன் பாவனையிலேயே புரிந்தது.

ஈஸ்வரனுக்கோ, ‘இவன் பொண்டாட்டி இவனை எப்படித்தான் சாமாளிக்கிறாளோ?’ என்ற எண்ணம் தான் வந்தது. அதன்பிறகு அவரே தெளிவாக இடம்பதிய இருப்பது, அதுவும் ஒரு தொழிலுக்காக பதிய நினைப்பது வாழ்வின் முக்கிய நிகழ்வு என்றும், அதற்கு பெற்றவர்கள் ஆசியும், அவர்களிடம் சொல்வதும் முக்கியம் என்று விளக்கமாக சொல்ல, யோசனையாக நின்றவன், இன்று வீட்டில் நடந்ததை அவரிடம் விளக்கினான். உண்மையில் அவனுக்கு இப்பொழுது என்ன செய்ய என்று புரியவில்லை. ஆகையால், மாமாவிடமே ஆலோசனை கேட்டான்.

அக்காவும், மாமாவும் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள் என்று ஈஸ்வரனும் எண்ணாததால், இப்பொழுது சந்திரனுக்கு என்ன பதில் சொல்ல என்றே தெரியவில்லை. சற்று யோசித்தவர், “சரி நீ கிளம்பு. நான் போன் பண்ணி சொல்லறேன், அதுக்குபிறகு அவங்களை வர சொல்லி நீ அவங்களுக்கு போன் பண்ணு சரியா” என்று அவனிடம் கூறி அவனை வழியனுப்பினார்.

காலையில் இருந்து நடந்த களேபரங்கள் எல்லாம் அவனை மிகவும் சோர்வாக்கியது. சோர்வுடன் வீடு திரும்பியவனை ரோகிணி கண்டுகொள்ளவே இல்லை. அவளுக்கு இவனை மன்னிக்கவே கூடாது என்னும் ஆத்திரம் வேறு அவ்வப்பொழுது தலைதூக்கிக் கொண்டே இருந்தது. அவள் அடைந்த வேதனைகள் அந்தளவு. அது அவன் முகம் பார்த்தால் சாத்தியப்படுவதில்லை, ஆகவே முயன்று அவனைப் பார்ப்பதை ஒதுக்கினாள்.

சந்திரன் அவள் முகத்தையே பார்ப்பதும், பின்பு பேசாமல் இருப்பதுமாக நேரத்தை கழித்தான். அவள் அதை உணர்ந்தாலும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், அவளிடம் நாளை இடம் பதிய செல்வது பற்றி பேசியே ஆக வேண்டுமே, அதற்காக அவளையே பார்த்திருந்தான். விழிகளின் மௌன பாஷை, மனோதோடு உரையாடுமா என்ன? காதல் செய்யும் வினோதம்! அவனை காத்திருக்க வைத்தது.

Advertisements

5 thoughts on “யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 22”

 1. RajiprRa says:

  Super story ..

 2. Amu says:

  Nice going

 3. Saisudhasathya Narayanan says:

  Going interesting

 4. Kurinji says:

  Paadam nesam ellam thaana varuthu chanthuvidam Manama ivvalavukku piragum Avan petrorai alaikannumaa.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: