Tamil Madhura உன்னையே எண்ணியே வாழ்கிறேன்,தமிழ் மதுரா உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 5

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 5

போதையின் ஆரம்பக் கட்டம். ஆனாலும்  நிதானமாகவே கடற்கரை மணலில் நடந்தான் ராபர்ட். அவனை சந்திப்பதாக சொல்லியிருந்த மூன்று நடிகர்களும் வீட்டுக்கு வரவில்லை. ஒரு நேர்காணலுக்கே நேரத்தோடு வர முடியாதவர்களை நம்பி எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைப்பது. தமிழ் நாட்டின் சாபம் டாஸ்மாக் மட்டுமில்ல. நேரம் தவறுதல் மற்றும் ஈடுபாடின்மையும் கூட. செய்யும் தொழிலே தெய்வம்.

“காதல், காலம், மரணம் புல்ஷிட்… காலம் ஓடுறதையும், மரணம் நெருங்குறதையும் பாக்குறோம் ஆனால் காதல் வெறும் விளம்பரப் பொருள். அதை நம்பி எத்தனை கோடி உயிர்கள் ஏமாறுது” தனக்குள் பேசிக் கொண்டிருந்த பொழுதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தான்.

விறுவிறுவென்று மணலில் கால்கள் புதிய நடந்தவள் இலகுவான ஒரு டிஷர்ட்டும், ஜீனும் அணிந்திருந்தாள். நீளமான கைகளும் கால்களும், காற்றில் பரந்த தலைமுடியும், கலையான முக அமைப்பும்,  வெடுக் வெடுக்கென்ற நடையும் அவளை மறுமுறை திரும்பப் பார்க்க செய்தன. யாரும் ஆள் ஆரவாரமற்ற கடற்கரைப் பகுதியில் எங்கு செல்கிறாள் இவள்.

ஏதோ ஒரு ஆர்வத்தில் பின் தொடர்ந்தான். அவள் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு நடை பாதையின் பெஞ்சில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த இருவரின் அருகே சென்றாள். அவள் பின்னாலேயே அவனும் சென்றான்.

“நீ இன்னைக்கும் லேட். ஒருமுறை கூட சரியான நேரத்துக்கு வரமாட்டியா” என்றாள் அங்கிருந்த பெண்மணி ஒருத்தி. அவருக்கு ஒரு அறுபது வயதிருக்கலாம். கண்டிப்பானவராகத் தோற்றம் தந்தார்.

மூன்றாமவனோ ஒரு பதின் பருவத்து இளைஞன். அவனருகே ஒரு சைக்கிள் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதில்தான் வந்திருப்பான் போலும் “சரியான நேரத்துக்கும் இவளுக்கும் சம்மந்தமே இல்லையே” என்றான்.

“என்னைத்தான் மறை கழண்டவர்களின் பிரெண்ட்டுன்னு கிண்டல் பண்ணுவிங்களே… மறை கழண்டவங்கள அவ்வளவு சுலபமாக கழட்டிட்டு வர முடியுமா?” என்று சிரித்தாள் இளையவள்.

அவர்கள் மூவரையும் பார்க்கும் போது சற்று ஸ்டைலிஷாக இருந்தார்கள். இந்நேரத்தில் இவர்களுக்கு இங்கென்ன வேலை? நூறடி தொலைவில் தெரிந்த அவனது வீட்டை நோக்கினான். ஒருவேளை இவர்கள்தான் அந்த நடிகர்களோ.

“ஹலோ” என்றான் அவர்களைப் பார்த்து.

“நீங்க அந்த வீட்டில் இருக்கும் ஆளை சந்திக்க வந்திருக்கிங்களா” என்றான்.

மூவரும் திடீரென்று முன்னே குதித்த ராபர்ட்டைப்  பார்த்த அதிர்ச்சியோ என்னவோ பதில் சொல்லாமல் விழித்தார்கள்.

“தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் தானே நீங்க மூணு பேரும்”

தலையசைத்தனர்.

“அந்த வீட்டில் இருக்கும் ஆளை சந்திக்கத்தானே வந்திங்க”

“ஆமாம்” என்றாள் வயதானவள்.

“அது நான்தான். வாங்க” என்று வீட்டுக்கு அழைத்து சென்றான்.

“இல்லை… பரவால்ல” தயங்கினாள் இளைஞ்சி

“என் பெயர் ராபர்ட். நீங்கதான் நான் சந்திக்க வந்த நபரா?”

“ஆமாம்” என்றும் “இல்லை” என்றும் ஒரே சமயத்தில் பதில் வந்தன.

நண்பர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு “ஆமாம் உங்களை சந்திக்கத்தான் வந்தேன்” என்றாள் அவள்.

அந்த ஆணோ இல்லை “ரஞ்சனி ன்னு சொன்னாங்க” என்றான்.

“ரெண்டு பேரும் இல்லை ஜெயந்தர்ன்னு பெயர்” என்றாள் இன்னொருத்தி.

காண்ட்ராக்டர் மடையன் ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒரே ஆளை காண்டாக்ட் பண்ண சொல்லாம மூணு பேரையும் இழுத்து விட்டிருக்கான்.

“ஹப்பா… ஆர் ஆர் கம்பனின்னு சொல்லி அட்ரெஸ் சொன்னாங்களா?”

“ஆமாம்” என்றனர் மூவரும் ஒரே குரலில்.

“நாங்கதான் அது. ஒரு நாலு பேர் சேர்ந்து ஒரு கம்பனி ஆரம்பிச்சோம் அதில் பங்குதாரர்கள் மூணு பேரோட பேரும் உங்க கிட்ட தந்திருக்காங்க. வாங்க வீட்டில் உக்காந்து பேசலாம் என்று அழைத்து சென்றான்.

“உங்க பேரை சொன்னா நல்லாருக்கும். நிஜ பெயர் கூட வேண்டாம். உங்க சினிமா பெயரே போதும். ஆனால் காண்ட்ராக்ட் அந்த பெயரில்தான் எழுதுவோம்”

“ஹலோ ராபர்ட். நான் பிரேமா” என்றாள் இளம்பெண்.

“நான் ஹோரஸ்… கோரஸ் கோரஸ்னு கூப்பிட்டு பெயர்கொலை பண்றவங்களுக்கு  சுருக்கமா ‘ஹோ’ ” என்றான் மற்றவன்.

“நான் மாரா. இதுவே சுருக்கமான பெயர்தான். என் பெயரை கிண்டலா கூப்பிட்டா கொன்னுடுவேன்.” என்றாள் வயதானவள்.

“நீங்க வெஸ்டர்ன் தியேட்டர்ல ஆர்டிஸ்ட்ஸா”

“ஏன் உங்களுக்கு தமிழ் கலாச்சாரத்தோட லெமூரியா கண்டத்திலிருந்து ஆர்ட்டிஸ்ட் வேணுமா” என்றான் ஹோரஸ் கிண்டலாக.

“ஹோ நீ பயங்கர வேடிக்கையா பேசுறியே… எங்களுக்கு மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத முகங்கள்தான் வேணும். அதுனாலதான் அந்த மாதிரி ஆட்களை அனுப்ப சொல்லிருந்தேன். ஏன்னா இது ஒரு நிஜம்மான டிராமா” என்று சொல்லி நடிகர்கள் மூவரையும் குழப்பினான்.

“சொல்லுங்க எங்களால என்ன வேலையாகனும்” நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் மாரா.

“சொல்றேன். நிறைய விஷயங்களைப் பேச வேண்டியிருக்கு. அதனால்  முதலில் காப்பி, டீ… ”

“எனக்கு ப்ளாக் பிட்டர் காபி” என்றாள் மாரா.

“எனக்கு ஸ்வீட்டா எதுன்னாலும் ஓகே” என்றாள் பிரேமா.

“எனக்கு டு த பாயிண்ட் விஷயத்துக்கு வந்திங்கன்னா போதும். முடிச்சுட்டு என் வேலையைப் பாக்கணும்” என்றான் ஹோ.

என்னவோ இவர்கள் மூவரும் தங்களது ப்ளானுக்கு உதவியாக இருப்பார்கள் என்று பட்டது ராபர்ட்டுக்கு.

ஸ்கைப்பில் மற்ற நண்பர்கள் இருவரையும் வீடியோ காலுக்கு அழைத்தான். அவர்களிடம் நடிகர்கள் மூவரையும் அறிமுகப்படுத்தினான். மூவரிடமும் ஈஸ்வரைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் பகிரப்பட்டது.

“நான் சொன்ன விஷயங்கள் தேவைக்கு அதிகமா இருக்கலாம். ஆனால் நீங்க உங்க கேரக்டரை உள்வாங்கிட்டு ப்ரெசென்ட் பண்ண உதவியா இருக்கும்”

“என்ன வகையில் உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்”

தனது தாயினைப் பற்றி சுருக்கமாக சொன்னவன். அதையே தாங்கள் ஈஸ்வரின் பிரச்சனையில் பயன்படுத்தப்போவதாக சொன்னான்.  “அவங்கள நம்மோட உலகத்துக்கு வலுகட்டாயமா இழுக்குறதை விட  அவங்களோட உலகத்துக்குப்  போயி அங்கிருந்து மெதுவா நம்ம உலகத்துக்கு தூக்கிட்டு வந்துடனும். எப்படி என் ப்ளான்”

“ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு”

“உங்க மூணு பேரோட பெர்பார்மன்ஸ்னால ஃபினிஷிங்கும் சுபமா இருக்கணும்” என்றான் ராபர்ட் கட்டளையிடும் தொனியில்.

மூவரும் யோசனையோடு பார்த்தனர். பிரேமாவின் முகத்தில் அதிருப்தி. அவள் சம்மதிப்பாளா இல்லையென்றால் பணத்தால் அடிக்க வேண்டியதுதான்.

“ரெண்டு லட்சம்… ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு லட்சம் ரெனுமரேஷன் தர்றேன்”

பதிலில்லை

“அஞ்சு லட்சம். ஒரு ரெண்டு மணி நேர நடிப்புக்கு அஞ்சு லட்சத்துக்கு மேல எதிர்பார்க்குறது பேராசை” என்றான் ராபர்ட்.

தீர்க்கமாக மாராவும் ஹோரசும் பார்த்துக் கொண்டனர். “நாங்க சம்மத்திக்கிறோம்”

பிரேமா தூக்கி வாரிப் போடத் தடுத்தாள் “உங்களுக்குப் பைத்தியமா… அந்த ஈஸ்வர்  குழந்தையை இழந்தவர். அவர்கிட்ட போயி நடிக்கிறதா… அசிங்கம்”

“பிரேமா… அதனாலதான் அவன் காஸ்மோஸ் கிட்ட பதில் கேட்டிருக்கான். நம்ம வேலை அவன்கிட்ட காஸ்மோஸா நடிக்கிறது மட்டும்தான். இதனால அவனுக்கு பதில் தர முடிஞ்சா சந்தோஷம்தானே”

“நமக்கே அஞ்சு லட்சம் தரேன்னு இவங்க சொல்றாங்கன்னா எத்தனை கோடி சம்பாரிக்க ப்ளான் போட்டிருக்காங்களோ” என்றாள் பிரேமா அருவருப்புடன்.

“பிரேமா ஸ்டாப் இட்” என்றாள் ரஞ்சனி விடியோ காலில். ஜெய்யும் முகத்தில் அதிருப்தியைக் காண்பித்தான்.

“ஈஸ்வரைப் பத்தி உனக்கென்ன தெரியும். துறுதுறுப்பும் கலகலப்புமா இருப்பான். வாழ்க்கையை அவனை மாதிரி காதலிச்சவன் யாருமில்லை. இப்ப அவனை மாதிரி வெறுக்குறவனும் யாருமில்லை. அவன் பழையபடி திரும்பக் கிடைக்க எத்தனை கோடி வேணும்னாலும் தரத் தயாரா இருக்கோம்.” என்றாள்.

முதல் சந்திப்பிலேயே உரசல் ஏற்பட்டது ராபர்ட்டுக்கும் உவப்பாக இல்லை.

இடையிட்ட மாரா “சரி இப்ப ரூல்ஸ் பத்தி பேசலாம்”

மாரா இப்படிப் மடார் மடாரெனத் தேங்காய் உடைப்பதைப் போலப் பேசுவது ஜெய்க்குப் பிடித்திருந்தது.

ஜெய் பதிலளித்தான் “நான் தர்ற லீகல் டாக்குமெண்ட்ஸ்ல சைன் பண்ணனும். இந்த நாடகத்தைப் பத்தி நம்மைத் தவிர வெளியா யாருக்கும் தெரியாம ரகசியம் காக்கணும்”

“நான் லீகல் ரூல்ஸ் கேக்கல தியேட்டரிக்கல் ரூல்ஸ் பத்திக் கேக்குறேன்”

“அப்படின்னா…”

“நாங்க எப்படி ஈஸ்வர்கிட்ட பேசுறது. அவன் தனியா இருக்கும்போதா இல்லை கூட்டத்தோட இருக்கும் போதா…  ”

“சான்ஸ் கிடைக்கும்போது. அது தனியாவும் இருக்கலாம் இல்லை கூட்டத்தோடும் இருக்கலாம்”

“கூட்டத்தோட இருந்தால் மத்தவங்க கண்ணுல இந்த டிராமா பைத்தியக்காரத்தனமா படுமே… யாராவது பைத்தியம்னு நினைச்சு போலிசுக்கு கூப்பிட்டுட்டா. ”

“அதுக்கெல்லாம் சான்சே இல்லை. பட்டப்பகலில் ரயில்வே ஸ்டேஷன்ல வச்சு ஆளை வெட்டினாலும் நம்ம மக்கள் போலீஸ்ல புகார் கொடுக்காம அந்த இடத்தை விட்டு அப்ஸ்கான்ட் ஆயிடுறாங்க… ” என்றான் ஜெய் எரிச்சலுடன்

“ஜெய் பேசாம இரு. மாரா, இப்ப நிறைய கேண்டிட் கேமிரா பண்றாங்க. அதில் ஒண்ணுன்னு நம்ம மக்கள் நினைச்சுட்டு போய்டுவாங்க. ஈஸ்வரை நம்ப வைக்க வேற யாராவது ஆட்களை ஹையர் பண்ணனும்னாலும் நீங்களே ஏற்பாடு பண்ணிடுங்க. எங்க பேர் வெளிய தெரிய வேண்டாம்” என்றான்.

“சரி”

“நீங்க மூணு பேரும் எங்க மூணு பேருகிட்டயும் ரிப்போர்ட் பண்ணனும். டயலாக் ப்ராக்டிஸ் பண்ணிட்டு ஒரே நாளில் அடுத்தடுத்து நீங்க மூணு பேரும்  ஈஸ்வரை  மீட் பண்ணனும். அப்பத்தான் இன்னும் எபக்டிவ்வா இருக்கும்”

“சரி டையலாக்ஸ்  நான் எழுதிட்டு வரணுமா இல்லை நீங்களே  தருவிங்களா. இந்த ‘ப்ராஜெக்ட் ஈஸ்வரை’ ஆர்கனைஸ் பண்ண டைரக்டர் யாராவது ஏற்பாடு பண்ணிருக்கிங்களா” என்றாள் மாரா

ராபர்ட் விழிப்பதைக் கண்டு “இல்லைன்னா விட்டுடுங்க. நானே அந்த பொறுப்பை எடுத்துக்குறேன். டைரக்ஷன் என் ப்ரீ… இதுக்கு நீங்க பே பண்ண வேண்டாம்”

“மாரா டைரக்ஷனா நோ” என்றலறினர் பிரேமாவும் ஹோவும்.

“உங்க அனுபவத்தை இதில் கண்டிப்பா யூஸ் பண்ணிக்கிறோம் மாரா. ஆனால் குறுகிய காலத்தில் நடக்க வேண்டிய டிராமா  என்பதால் உங்க கிட்ட நிறைய பொறுப்புக்களைத் தரது உங்க பெர்பார்மன்சை பாதிக்க வாய்ப்பிருக்கு. அதனால நம்ம எல்லாரும் கலந்து பேசி இந்த டிராமாவை நடத்தலாம்.

என்னால ஒரு கேரக்டர் கிட்ட  மட்டும்தான் கவனம் செலுத்த முடியும். அதனால் மத்த ரெண்டு பேரும்  ரஞ்சனிகிட்ட இல்ல ஜெய்கிட்ட பேசுங்க”

தான் பிரேமாவை ட்ரைன் பண்ணுவதாக சொன்ன ராபர்ட்டை ஜெய் பார்த்த பார்வையில் ‘நெனச்சேன்டா கபோதி’ என்ற வார்த்தை பொதிந்திருந்தது. பிரேமா முன்பே சொன்ன மாதிரி சொன்னா சொன்ன நேரத்திற்கு வந்ததா சரித்திரமே இல்லை. வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பா வரமாட்டா. இவளை நம்பி இவ்வளவு பெரிய ப்ளானில் இறங்கியிருக்கும் ராபர்ட் என்னாகப் போறானோ…

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று கறாராகப் பேசும் மாரா அதே குணம் கொண்ட ஜெய்யைக் கவர்ந்ததில் வியப்பில்லையே. பிரேமாவும் ஹோவும் கிண்டலாய் பார்த்துக் கொண்டனர். மாரா பேச ஆரம்பித்துவிட்டால் மற்றவர்கள் கேட்டாவதைத்தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு அடக்குமுறையைக் கையாளும் பேய், பிசாசு அதுக்கு மேல மானே தேனே நீங்களே போட்டுக்கோங்க. போகப் போக ஜெய் புரிஞ்சுக்குவான்.

இன்னும் டீன்ஏஜின் முடிவில் சற்று பாலகனின் முகச்சாயல் இருக்கும் ஹோவை ரஞ்சனிக்குப் பிடித்துவிட்டது. டீனேஜ அவ்வளவு லேசா நினைச்சுடாதே ரஞ்சு. நம்ம சரின்னு சொல்ற விஷயம் எல்லாமே அவங்களுக்கு முட்டாள்தனமாகவும், நம்ம  தப்புன்னு சொல்றதெல்லாம் மிகச் சரியான, இப்பவே செஞ்சாகனும்னு தூண்டி விடுற  விஷயமாகவும் தோணும். தயவு செய்து இதை செய்யாதேன்னு மட்டும் அவன்கிட்ட சொல்லிடாதே…

“சரி இப்ப முக்கியமான விஷயம் காஸ்டிங். யாராரு என்னென்ன ரோல் பண்ணப் போறீங்க. பிரேமாவுக்கு லவ் கேரக்டர் சூட் ஆகும்” என்றான் ராபர்ட் முந்திக் கொண்டு.

“எனக்கேன் லவ் பாத்திரத்தைத் தரக்கூடாது. லவ்ன அன்புதானே… நான் நல்லா சூட் ஆவேன்” என்று பஞ்சாயத்தை ஆரம்பித்தாள் மாரா.

அந்தப் பேரிளம்பெண்ணைப் பார்த்த வண்ணம் பதிலளித்தான் ராபர்ட்   “பண்ணலாமே… வொய் நாட்… ஆனால் பிரேமா ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விட்டுடுற ஆள்னு இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மீட் பண்ண நானே கண்டு பிடிச்சுட்டேன். இவ ஈஸ்வர்கிட்ட பேசும்போது சொதப்பிட்டா என்ன பண்றது. லவ் கேரக்டர் தந்தால் சொதப்பல் கூட காதலில் அடக்கம்”

“கரக்ட்…  பிரேமாவுக்கு டையலாக் மனப்பாடம் பண்றதெல்லாம் வேலைக்கே ஆகாது. அவளுக்கு என்ன வாயில் வருதோ அதை யோசிக்காம  பேசிட்டு கொஞ்ச நேரத்திலயே  பிரச்சனையில் மாட்டிக்குறது  வழக்கம். அதை சால்வ் பண்ண நானோ இல்லை மாராவோ போகணும். அதனால காதல் கேரக்டரே தரலாம். அப்பத்தான் இவ என்ன உளறுனாலும் அது கூட கவிதையாத்தான் மத்தவங்களுக்கு  படும். காதலும் கிறுக்கு பிரேமாவும் கிறுக்கு” என்று அமோதித்து பிரேமாவிடம் குட்டு வாங்கினான் ஹோ.

“காதல்னா வித விதமா கலர் கலரா காஸ்டியூம் பண்ணிக்கலாம். மேக் அப் போட்டுக்கலாம். மத்த ரெண்டு கேரக்டருக்கும் அந்த சான்சே இல்லை” என்று முணுமுணுத்தார் மாரா.

“கேரக்டருக்கான காஸ்டியூம் பணம் தனி” என்றான் ஹோரஸ் காரியமாக.

“ஹோ டாண் டாண்னு டைமிங்கா கவுண்ட்டர் கொடுக்குறான் இவனையே டைமா போட்டுக்கலாம்” என்று நண்பர்களிடம் குரூப் மெசேஜ் அனுப்பினாள் ரஞ்சு.

சம்மதித்துவிட்டு சில நிமிடங்கள் தோழர்களிடம் பேசிவிட்டு அவர்கள் பாத்திரத்தை டிசைட் செய்தார்கள்.

இறுதியாகத் தீர்மானமானது ஹோரஸ் – டைம், மாரா – டெத், பிரேமா – லவ்.

“இந்த மூணு கேரக்டருக்கும் நான்தான் பொருத்தம். இவங்க ரெண்டு பேரில் யாரு காலை வாரிவிட்டாலும் நான் அங்க வந்துருவேன்” என்று ஒரு வழியாக உறுதி மொழி வாங்கிக் கொண்டு சம்மதித்தாள் மாரா.

 

 

1 thought on “உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 5”

  1. Enathithu inthe 3 charecters ume oru mathiriya ‘ve behave pannuthunga. Operation eshwar success agumo iliyo ithu moonungalala namma 3 friends ukum nichayama nakku thalidum.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 3 (youtube link)உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 3 (youtube link)

அந்த பார்க்கில் ஈஸ்வர் வேகமாய் ஓடி மூச்சிரைக்க இரைக்க பாலைப் போட, தனது சின்னஞ்சிறு கைகளால் கிரிக்கெட் பேட்டைப் பிடித்திருந்த அந்த சின்னஞ்சிறுவன் தனது பேட்டினால் ரப்பர் பந்தினை அடிக்க அது பறந்து சென்று வெகு தூரத்தில் விழுந்தது. “அப்பா சிக்ஸர்

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32

32 தாம்பூலத்தட்டை துரைப்பாண்டியின் சார்பாக மாதவனின் தந்தை நல்லசிவம் தர, நாகரத்தினம் பெற்றுக் கொண்டாள். தடுக்கும் வழி தெரியாத சுஜி அறையில் போய் அமர்ந்து விட்டாள். பரிசப் பணமா தந்த இருவதஞ்சாயிரத்துக்கு நமக்கு என்ன வாங்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்துவிட்டாள்