Tamil Madhura சிறுகதைகள் சேது விஸ்வநாதனின் ‘பத்தோட இதுவும் ஒன்னு’

சேது விஸ்வநாதனின் ‘பத்தோட இதுவும் ஒன்னு’

இதுவும் கடந்து போகும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சராசரி பெண் நான்.

அப்படி தான் என் வாழ்க்கையும் இருந்தது. படிப்பு, வேலை எல்லாமே போராட்டம் தான் எனக்கு.

சிறுவயதிலே அப்பா இல்லாமல் அம்மாவின் கடின உழைப்பால் ஏதோ கொஞ்சம் படித்தவள். வறுமை காரணமாக வேலை.

அப்படி வேலைக்கு சென்று சில வருடங்களுக்கு பிறகு அன்றொரு நாள் எப்போதும் போலவே வீட்டிற்கு திரும்பி  வந்த கொண்டிருந்தேன்.
போக்குவரத்து வரத்து நெரிசல் காரணமாக அன்று இரவு நேரம் பத்து மணியை கடந்தது. அம்மாவிடம் சீக்கிரம் வந்துருவேனு சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தேன்.

ஒரு கார். வாடகைக்கு கார் ஓட்டுபவர். என் ஊரை தாண்டி சில கிலோமீட்டர்கள் தொலைவில் தான் அவர் வீடு உள்ளது. ஆனால் பேசியது இல்லை. பார்த்துள்ளேன். அவருக்கும் என்னை தெரியும்.

“என்னம்மா இந்த நேரத்தில இங்க நிக்குற?” என்று அவர் கேட்க,

“இல்லனா. பஸ் லேட் ஆயிடுச்சு. அதான் இங்க நிக்குறேன். கடைசி பஸ்ஸுக்கு வையிட் பண்ணிட்டு இருக்கேன் அண்ணா” என்று கூறினேன்.

“சரி. வாம்மா. நான் உங்க ஊரை தாண்டி தான் போகனும். நான் இறக்கி விட்டுடுறேன்” என்று அவர் கூறினார்.

“வேணாம் அண்ணா. உங்களுக்கு எதுக்கு சிரமம். பஸ் வந்துரும் அண்ணா. நீங்க போங்க. நான் பாத்துக்கிறேன்” என நான் சொல்ல,

“ஏம்மா. நேரம் என்ன ஆச்சு. இந்த நேரத்தில இங்க தனியா நிக்கலாமா? நான் தெரியாத ஆளா? ஏன் பயப்படுற” என்று கேட்டார். “வாம்மா. நம்ம கார்ல பின்னாடி ஏறுமா. பத்திரமா வீட்டு முன்னாடியே இறக்கி விட்டுடுறேன்” என்று கூறினார்.

“தெரியாத நபரா இவர். நமக்கு தெரிந்த முகம். நல்ல மனிதர். அவர் கூறுவதும் சரியே. நேரம் நடு இரவை தொட சென்று கொண்டிருந்தது” என்ற எண்ணம் என்னுள் இருக்க காரில் ஏறினேன்.

மெதுவாக பேச்சுகொடுக்க தொடங்கினார். “ஏம்மா எங்க வேலை பாக்குற?” என்று கேட்க,
“துணிக்கடையில சேல்ஸ் கேர்ள் அண்ணா” என்று கூறினேன்.

அப்படியே பேச்சுக்கள் தொடர்ந்தது. காரும் ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தது. 20 கிலோமீட்டர்கள் பயணம். காடுகள் அதிகமாக நிறைந்த பகுதிகளில் தான் பயணம். ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் தூரத்தில் தான் ஒவ்வொரு ஊரும் இருக்கும்.

சரியாக என் ஊருக்கு இரண்டு ஊருக்கு முன்னாடி திடீரென கார் நின்று ஆஃப் ஆனது. மனதில் திடீர் பயம் ஏற்பட்டது. அவர் ஸ்டார்ட் பண்ணி பார்க்க வண்டி ஸ்டார்ட் ஆகவே இல்லை.

“அண்ணா என்ன ஆச்சு? ஏன் கார் நின்னுருச்சு” என்று நான் பதட்டத்துடன் கேட்டேன்.

” என்ன ஆச்சுனு தெரியலயேமா. நீ காருக்குள்ளயே இரு. நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லி இறங்கி போனார்.

அடர்ந்த முற்புதர்கள் நிறைந்த பகுதி. நடு இரவு. பயம் ஏறிக்கொண்டே சென்றது. அவரும் யாருக்கோ போன் செய்து பேசிக்கொண்டு இருந்தார். காருக்குள் இருப்பதால் ஒரு நிம்மதி இருந்தது.

அப்போது எதிரில் வெளிச்சம் தோன்ற, ஒரு பயம் மேலும் ஆட்கொண்டது.
அது ஒரு கார். மெதுவாக நான் இருந்த காரின் அருகில் வந்து நின்றது.

அப்போது என்னை அழைத்து வந்தவருடன் நன்றாக பேச தெரிந்தவர் தான் போல என்று நினைத்து கொஞ்சம் பயம் நீங்கியது.

இறங்கியவர் காரில் ஏதோ முன்புறம் பார்த்து கொண்டிருக்க மேலும் இருவர் இறங்கினர். அதில் ஒருவர் என் ஊர்காரர் தான்.

என் ஊர்காரர் நான் இருந்த காரின் கதவை நீக்கி என்னிடம், ” பாப்பா. இவன் கார் ரிப்பேர் ஆயிடுச்சு. வாம்மா நம்ம காருல கொண்டு போயி வீட்டுல விட்டுடறேன். இந்த நேரத்தில ரோட்டுல நிக்கற காருல பொண்ணு இருக்கறது சரியில்ல” என்று கூறி அழைத்தார்.

நம்ம ஊருகாரர். நன்கு தெரிந்தவர் ஆயிற்றே. நான் இறங்கி என்னை ஏற்றி வந்த கார் காரரிடம் “அண்ணா ரொம்ப நன்றி. சாரி அண்ணா. என்னால உங்களுக்கும் சிரமம். நான் அவர் காரில் ஊருக்கு போயிக்கிறேன் அண்ணா. கோச்சுகாதீங்க அண்ணா” என்று சொன்னேன்.

“பரவாயில்லமா. நான்தான் நீ இருக்கற. பத்திரமா உன்ன கூட்டிட்டு போக வரச்சொன்னேன்” என்று அவர் சொல்ல, என் முகத்தில் ஒரு மகிழ்ச்சி.

” ரொம்ப தேங்க்ஸ் அண்ணா”என்று சொல்லி விட்டு அந்த காரை நோக்கி நகர்ந்து சென்றேன். அப்போது என் பின்னால் ஒருவர் வேகமாக என்னை பிடித்து என் வாயை கையில் மூடி தள்ளி செல்ல, உடன் இருந்தவரும் வேகமாக தூக்கினார்.

ஒரு முற்புதரின் நடுவில் தூக்கி வீசப்பட்டேன்.
நால்வரும் என் அருகில் வர, அப்போது தான் புரிந்தது, இவர்கள் நால்வரும் சேர்ந்து தான் ப்ளான் பண்ணி இருக்கிறார்கள் என்று.

“அண்ணா ப்ளீஸ் அண்ணா. என்னை விட்டுடுங்க அண்ணா. நான் போகனும் அண்ணா. ப்ளீஸ்” என்று அழுதுகொண்டே அவர்களின் காலில் விழுந்தேன்.

“அண்ணா உங்கள நம்பி தானே கார்ல ஏறினேன். என் வீட்டு கஷ்டத்தை கூட இவ்வளவு நேரம் சொன்னேனே அண்ணா. ப்ளீஸ் அண்ணா. விட்டற சொல்லுங்க அண்ணா” என்று என்னை அழைத்து வந்தவரிடம் கெஞ்சினேன்.

“அடபோடிங்க… உன்ன காருல ஏத்துனதே இன்னைக்கு நாங்க என்ஜாய் பண்ண தாண்டி”என்று சொல்லி என் முடியை பிடித்து இழுத்து தள்ளினார்.

“உங்க எல்லோரு காலுலயும் விழறேன். ப்ளீஸ். உங்க தங்கச்சியா என்னை பாருங்க. எனக்கு அப்பா இல்லை. எனக்கு எதாவது ஆச்சுன்னா என் அம்மாவும் நானும் செத்து தான் போகணும் அண்ணா. ப்ளீஸ் ப்ளீஸ்” என்று அழுகை அதிகமானது.

“உன்ன மாதிரி தூக்கிட்டு வந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி தான் அழுதாங்க. பாவ புண்ணியம் பார்த்தா எங்களுக்கு  சுகம் கிடைக்காது” என்று என்னை காரில் அழைத்து வந்தவர் கூறினார்.

“உங்க அம்மாவும் ஒரு பொண்ணு தான. என் நிலைமைய நினைச்சு பாருங்க. கெஞ்சி கேக்கறேன்” என்று கதறினேன்.

“ஹேய் நிறுத்துடி. சும்மா கத்திட்டு இருக்காத. ஒன்னும் மாற போறது இல்ல. நீயா சம்மதிச்சா! யாருக்கும் தெரியாம எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுல கொண்டு போயி விட்டுடுவோம்.இல்லைனா நாளைக்கு அசிங்கம் ஆயிடும்.நீ இப்போ எவ்வளவு கத்தினாலும்  யாரும் வர மாட்டாங்க. நாங்க இங்க நிக்கறது கூட யாருக்கும் தெரியாது. ஒழுங்கா சொல்லறத கேளு” என்று மிரட்டினார் என் ஊர்காரர்.

“அண்ணா ப்ளீஸ். நான் உங்க ஊரு பொண்ணு. எங்க வீட்டு கஷ்டம் உங்களுக்கு நல்லாவே தெரியும் அண்ணா.நீங்களே இப்படி பண்ணலாமா?.  விட்டுருங்க அண்ணா. உங்க காலுல கூட விழறேன்‍” என்று சொல்லி என் ஊர்க்காரர் காலை பிடித்தேன்.

உடனே ஒருவர் என்னை தள்ளிவிட்டு ” என்னடா இவகிட்ட போயி பேசிக்கிட்டு இருக்க. இதுக்கு தான் வந்தோமா? சீக்கிரம் முடிச்சுட்டு வீட்டுக்கு போகலாம்டா” என்று சொல்லிவிட்டு என் அருகில் வந்தார்.

அவரை தள்ளிவிட்டு நான் ஓட முயற்சித்த போது மற்றவர்களால் சிறைபிடிக்கபட்டேன்.
நான்கு ஆண்கள் நடுவில் நான் ஒரு பெண்.
என் உடைகள் கிழித்தெறியப்பட்டது.

நான் விட்டுடுங்க. ப்ளீஸ் என்று கதறிய எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. அந்த கடவுளின் காதிலும் என் கதறல்கள் விழவில்லை. எந்த கடவுளும் துணியும் தரவில்லை.

அவர்களின் இச்சைக்கு என் உடம்பு பலியானது.வெறிபிடித்த நால்வரின் காம பசிக்கு என் உடல் உணவாகி கொண்டிருந்தது.

என் கதறல்கள் எவரின் செவிக்கும் எட்டவில்லை. அவர்களின் குறிக்கோள் அவர்கள் இச்சை மட்டுமே.

என் உறுப்பில் உதிரம் கொட்டிய நாள் முதல் என் அன்னையிடம் கூட காட்ட மறுத்த என் உடலை, என் அனுமதியின்றி சில காமபேய்கள் திருடுகின்றனர். பெண்ணாய் பிறந்துவிட்டேனே.  உடலில் வலிமையற்று படைத்துவிட்டான் ஆண்டவன்.

போராட கூட வலிமையற்று கிடந்தேன். கடவுள் ஆணை பலமாக படைத்ததன் காரணம் என்னவோ?. ஆனால் இன்று என் கற்பு கொள்ளை போய்விட்டது.

கடைசியில் குப்பை போல அங்கேயே தூக்கி வீசப்பட்டேன். அவர்கள் வந்த வேலை முடிந்தது. என்னை அங்கேயே விட்டு சென்றவர்கள் என்னை கொன்று விட்டு சென்றிருக்கலாம்.

அரை உயிருடன் அங்கேயே கிடந்தேன். விழித்து பார்த்தேன். என்னை சுற்றி சற்று இரைச்சல். புது இடம். அப்போது தான் சுய நினைவுக்கு வந்தேன்‌. நான் இருப்பது மருத்துவமனை.  என் அம்மா என்னருகில் அழுது கொண்டு இருந்தார்.

நான் உயிரோடு காப்பாற்றபட்டேன் என்று புரிந்தது. ஆனால் ஏன் இந்த உயிர் என்னிடம் உள்ளது என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது.

சிறிது நேரத்தில் மூன்று போலீஸ் மற்றும் டாக்டர் ஒருவர் வந்தனர். என் அம்மா  அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

என்னிடம் ” நேற்று இரவு என்ன நடந்ததுனு சொல்லுமா. யாரா இருந்தாலும் கட்டாயம் தண்டனை வாங்கிக் கொடுத்திடலாம்” என்று ஒரு போலீஸ் சொல்ல மற்றொருவர் நான் கூறுவதை எழுத தயாரானார். இன்னொருவர் என்னை படம் பிடித்தார்.

புழுவை போல மனம் துடிக்கிறது. என் கண்களில் நீர் வழிந்து கொண்டே  இருந்தது.பேச முடியவில்லை.

ஆனால் போலீஸ் அதிகாரி விடவில்லை. “தைரியமா சொல்லுமா. யாருக்கும் பயப்படாத. அங்க என்ன நடந்துச்சுனு சொல்லு?” என்று மீண்டும் கேட்டார்.

வெளியில் சொல்ல கூடிய விசயமா அது.
“சார் என்னை எதுவும் கேட்காதீங்க. ப்ளீஸ்‌. நீங்களாவது புரிஞ்சுக்கோங்க சார்” என்று அழுதேன். ஆனால் அவர் என் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை. சட்டம் என்று உள்ளதாக சொன்னார்.

“கற்பழிப்பு நடக்கும் முன்பு தடுக்காத சட்டம் எதுக்கு? எத்தனை பேர் இந்த தவறை செய்தபின் தண்டிக்கபட்டு இருக்கின்றனர்?” என்று கத்தினேன்.

டாக்டர் குறுக்கிட்டு  “ஏம்மா கத்துற? சத்தம் போடாத” என்று என்னை பார்த்து சொல்லிவிட்டு, ” சார் இப்போ தான் பொண்ணு எந்திரிச்சு இருக்கு. ரெஸ்ட் எடுக்கனும் சார். நாளைக்கு என்குவரி வச்சுக்கலாமே” என்று கூறினார்.

“மேடம் எங்களுக்கு நிறைய கேஸ் இருக்கு டாக்டர். டெய்லியும் இந்த மாதிரி பத்து நடக்குது. பத்தோட இதுவும் ஒன்னு. சீக்கிரம் என்குவரி முடிக்கனும் டாக்டர்” என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

அவர்களுக்கு அவர்கள் பிரச்சினை. என் உடல் வலிமையும் மனதின் வலியையும் அவருக்கு எப்படி தெரியும். அவரும் ஒரு ஆண்மகன் தானே.

நமக்கு தெரிந்தவர், நம்ம ஊருக்காரர் என்று நினைத்து காரில் ஏறியது தவறா? என்று தோன்றியது.

பெண்ணாய் பிறந்தது தவறா?

பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டனர். பல துறைகளில் சாதித்துவிட்டனர். பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று மேடையில் ஏறி பல கைதட்டல் வாங்கியவர்கள் கண்ணுக்கு ஏனோ என்னை போன்று  கற்பை கொள்ளை கொடுத்த பெண்களை பற்றி பேச விரும்புவது இல்லை.

ஆணை உடலால் பலமாக படைத்தது கடவுள் குற்றமா?

ஆணிடம் பெண்மையை மதிக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்காத இந்த சமூகம் தவறா?

பெண் என்றாலே ஆபாசமாக காட்டும் ஊடகங்கள் மீது குற்றமா?

அந்த காலம் முதல் பெண் என்றாலே காமத்தை தனிக்க தான் கூறிவிட்டு சென்ற முன்னோர்களின் குற்றமா?

நீயும் ஒரு பெண் வயிற்றில் தான் பிறந்துள்ளாய் என்று புரிய வைக்காத ஒரு பெண்ணின் குற்றமா?

இது போன்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும்  வலியும் அவமானமும் எனக்கும் என் அம்மாவுக்கும் தான்.

நானும் அம்மாவும் மாறி மாறி அழுதுகொண்டு இருந்த வேலையில் நர்ஸ் வந்து என்னிடம், “போலீஸ் நாளைக்கு என்குவரிக்கு வருவாங்க. நீ சொல்லி தான் ஆகனும்” என்று வருத்தமாக சொல்ல,

“எப்படி அக்கா சொல்வது. என் உடலை கொள்ளையடித்தவர் செய்ததை வெளியில் சொல்ல முடியுமா? ப்ளீஸ் அக்கா. என்னை வெச ஊசி போட்டு கொன்னுறுங்க. எனக்கு வாழ பிடிக்கல. ப்ளீஸ்” என்று கதறினேன்.

“அதெல்லாம் முடியாதுமா. நாளைக்கு நீ சொல்லனும். ஆனா உண்மைய சொல்லாத. பஸ் ஸ்டாப்ல இருந்தேன். தீடீர்னு யாரோ என் மூக்குல துணிய வச்சு அமுக்குனாங்க. முழிச்சு பார்த்தா இங்க இருக்கேனு சொல்லிடு” என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்தார்.

இதன் பின் இருவர் என் அருகில் வந்து பேசினர். பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் இருந்து வருகிறோம் என்று கூறினார்கள். முகத்தை காட்ட மாட்டோம். நடந்ததை கூறுங்கள் என்று கூறினார்கள்.

என் கற்பு கொள்ளை போனதை இவர்கள் செய்தியாக வெளியிட கேட்டு வருகின்றனர். பகிர வேண்டிய விசயமா இது?.  விடாமல் அவர்கள் கேட்க, நான் கோவத்தில் திட்டினேன்.

என்னை தீண்டிய வர்களுக்கு உடல் பசி என்றால், இவர்களுக்கோ ஊடக பசி. பெண்ணின் வலிகளை இந்த சமூகம் புரிந்து கொள்ளவது எப்போது?

பொழுதும் புலர்ந்தது. போலீஸும் வந்தனர்.
நர்ஸ் கூறியது போல கூறினேன். என் பேச்சில் பொய் இருப்பதை உணர்த்தும் அந்த அதிகாரி மேலே தொடராமல் விட்டுச் சென்றார்.

நான்கு நாட்களுக்கு பிறகு இரவில் ஊருக்குள் சென்றோம் நானும் அம்மாவும்.
இரவோடு இரவாக துணிகளை எடுத்துக் கொண்டு வெளியூரில் பிழைக்க சொந்த ஊர் விட்டு அழைத்து வந்துவிட்டார் அம்மா.

யாரோ செய்த தவறுக்கு உலகம் என்னை தவறாக பேசும். அதனால் யாருக்கும் சொல்லாமல் ஊரை காலி செய்தோம்.

இருமுறை தற்கொலை முயற்சி. மரணம் கூட என்னை பழிவாங்கியது. “நீ இல்லாம நான் மட்டும் இருந்து என்ன செய்ய போறேன்” என்ற அம்மாவின் வரி(லி)கள் தற்கொலை எண்ணத்தை தகர்த்தது.

ஆனாலும் என்னுள் எரிந்து கொண்டிருக்கும் வலி மட்டும் குறையவே இல்லை.

ஒரு வருடம் கழிந்தது. இன்றைக்கும் மனதில் வலித்து கொண்டிருக்கும் அந்த நாள்.

தினமும் அழுகையுடன் செல்கிறது என் தூக்கத்தின் இரவு வாழ்க்கை.

ஒரு நாள், வேலைக்கு சென்று கொண்டிருந்த போது பேருந்து பயணம். அருகில் இருந்த ஒரு பெண் படித்து கொண்டிருந்தார் ஒரு வார இதழை.

ஊடகத்தின் பசி.  ஒரு பெண்ணின் கற்புகொள்ளை பற்றி எழுதி இருந்தார்கள். படித்தவர் அதை பற்றி என்னிடம் கூறிக்கொண்டு வந்தார்.

அப்போது அருகில் இருந்த இன்னொரு பெண் கூறினார். “அடபோங்க மேடம். இது மாதிரி வாரத்துல ஊருக்கு பத்து நடக்குது. பத்தோட இதுவும் ஒன்னு.  மாதவிடாய் காலத்தில நம்மளோட வலியும், நாம படுற அவஸ்தையும் அவங்களுக்கு எங்க தெரியபோகுது.பொண்ணா பொறந்தது ஒரு சாபக்கேடு” என்று சொல்லிவிட்டு ஜன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தார்.

அன்று போலீஸ் அதிகாரி சொன்ன அதே வார்த்தைகள்.

பெண்களின் வளர்ச்சி பற்றி மேடையில் பேசியதர்க்கு பதிலாக, இந்த மாதிரி கொடுமைகள் பற்றி பேசி இருந்திருக்கலாம்.

சட்டங்கள் கடுமையாக இருந்திருந்தால் என்னை போன்றவர்கள் கற்பு பறிபோகி இருக்காது.

பெண்ணுக்கு கற்பு முக்கியம் என்று சொன்னவர்கள், அதை பாதுகாக்க வேண்டும் என்று ஆண்களிடம் சொல்லவில்லை. ஆணிற்கும் கற்பு உண்டு என்று சொல்ல மறந்தும் போனார்கள்.

பெண் என்றாலே வெறும் சதையாக தான் இந்த சமூகம் நினைக்குதே. பெண்ணுக்கு வலிகளை ஏற்கனவே ஆண்டவன் கொடுத்துள்ளார் என்பதை மறந்துவிட்டனர் பெண்களும்.

வலிகளோடு வழிகளை தேடி நான் தினமும் பயணிக்கிறேன். வசந்த காலம் மறைந்து போன என் வாழ்க்கையில்.

ஆண்களை பெற்ற பெண்களே!!!!.

தயவுசெய்து உங்கள் பிள்ளைகளுக்கு பெண்ணின் வலிகளை கூறிவிடுங்கள்.

எதிர்காலத்தில் என்னை போன்றில்லாமல், ஒரு பெண்ணின் கற்பாவது காப்பாற்றபடட்டும்…

1 thought on “சேது விஸ்வநாதனின் ‘பத்தோட இதுவும் ஒன்னு’”

  1. unarchi poorvama yezhuthirukinga……… your way of writing superb……. oru ponna porantha yevlo kastam nu kandipa socity ki solli puriyavaikanum…. good job

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

How to guideHow to guide

How to guide நல்ல ஆவியை  பழி வாங்கும் பிசாசாக்குவது எப்படி நானும்  ரூபாவும் அந்த வீட்டை சுற்றியிருந்த தாழ்வாரத்தில் அமைதியாக சீட்டுக்கட்டுக்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த வீடு சற்று பழங்கால வீடுதான். பராமரிப்பு சுத்தமாக இல்லை. அவ்வளவு பெரிய வீட்டையும்

அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

கதை மூன்று – அன்பு வளர்க்கும் அண்ணல்   அந்தக் காடு நல்ல அடர்த்தியான காடு, கங்கை நதிக் கரையிலே உள்ள காடு வேறு எப்படியிருக்கும்! வானுறவோங்கி வளர்ந்ததோடு நெருங்கி அடர்த்திருந்த மரங்கள், அந்தக் காட்டில் பகலவன் ஒளி பாயாமல் செய்தன;

பெரிய இடத்து மாப்பிள்ளைபெரிய இடத்து மாப்பிள்ளை

“என்னங்க கஞ்சத்தனப்படாம நல்ல காஸ்ட்லியா வாங்கிட்டு வாங்க. அதுவும் ஸ்ட்ராபெரி மாப்பிள்ளைக்கு  பிடிக்கும் போல இருக்கு. அதனால அதையும் வாங்கிட்டு வாங்க” வெளியே கிளம்பி கொண்டிருந்த கணவர் கிருஷ்ணசாமியை வழிமறித்து சொன்னாள் ரத்னா. “மாப்பிள்ளை என்னடி மாப்ள… இப்பதான் பொண்ணு பார்க்கவே