Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 2

ந்த அறையில் பேயறைந்தார் போன்ற முகத்துடன் மூவரும் அமர்ந்திருந்தார்கள்.

“நிஜம்மாவா சொல்ற ராபர்ட்”

“நிஜம்தான்…. ஏற்கனவே பாதி கிளையண்ட்ஸ்  நம்மக் கைகழுவிட்டுப்  போயாச்சு. இப்ப ப்ளூட்டான் நிறுவனமும் நம்ம கையை விட்டுப் போய்டும் போலிருக்கு”

“அவங்களுக்கு நம்ம வேலையை ஒழுங்காத்தானே செஞ்சு தந்துட்டு இருந்தோம்”

“நல்லா யோசிச்சுப் பாரு ஏற்கனவே செஞ்ச வேலையை சப்போர்ட் பண்ணிட்டுத்தான் இருந்தோமே தவிர புதுசா இனோவேட்டிவ்வா எதையாவது நம்ம செஞ்சிருக்கோமா”

“அதெல்லாம் ஈஸ்வர் ஏரியா… நமக்கு என்ன தெரியும்”

“அப்ப அவனை மீட்குற வழியைப் பார்ப்போம்”

“மீட்குறதா…”

“கண்டிப்பா… இந்த லாசை தாங்குற நிலமைல நம்ம கம்பனியும் இல்லை நம்மளும் இல்லை”

“என்னடா சொல்ற”

“ப்ளூட்டான் பத்தி விஷயம் வெளிய கசிஞ்சா நம்ம எம்ப்ளாயீஸ் எல்லாம் ஒரே நாளில் காக்கா கூட்டத்தில் கல்லெறிஞ்சது மாதிரி காணாம போய்டுவாங்க. சும்மா தந்தா கூட அப்பறம் யாரும் இதை சீண்ட மாட்டான்.

ரஞ்சனியை விடு அவ வீட்டுக்காரர் துட்டு பார்ட்டி சமாளிச்சுக்குவா… ஈஸ்வர் ஒரு சாமியார மாதிரி சுத்துறான். அவனுக்கு பணமே அவசியமில்லை. நீயும் நானும் என்ன செய்வோம் சொல்லு”என்றான் ராபர்ட் ஜெய்யிடம்

“அப்ப விஷயம் கசியுறதுக்கு முன்னாடியே கம்பனியை வித்துட்டா…”

“அதுக்குக் கூட ஈஸ்வரோட கையெழுத்து வேணும். இவன் வேற பைத்தியம்னு பெயர் வாங்கிருக்கான். இவன் கையெழுத்து செல்லுமா இல்லையான்னே தெரியல”

“சரியான துரோகிங்கடா நீங்க… ” ஆத்திரத்தில் முகம் சிவக்கக் கத்தினாள் ரஞ்சனி.

ராபர்ட் முகம் இருள “ரஞ்சனி… நான் செஞ்ச தப்பு என்னை உயிரோட புதைச்சுடுச்சு. நீயும் என்னை வார்த்தையில் கொல்லாதே” என்றவண்ணம் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

“நான் என்ன சொல்லிட்டேன்னு இப்ப கோச்சுகிட்டு கிளம்புறிங்க” தணிவான குரலில் கேட்டாள்.

“ஈஸ்வரை மட்டும் பாக்குறியே. எங்களுக்கெல்லாம்  பிரச்சனையே  இல்லைன்னு நினைக்கிறியா…”

“பண பிரச்சனைதானடா உங்களுக்கு”

பெருமூச்சுடன் அவளை நோக்கியவன் “அமைதியா வந்துட்டுப் போறதால நாங்க ‘ப்ராப்ளம் ப்ரீ’யா இருக்கோம்னு நினைக்காதே… சிலர் கஷ்டங்களை பகிர்ந்துக்குவாங்க சிலரால் வெளிய சொல்ல முடியாது”

ரஞ்சனிக்குத் தன்னிடம்   குழந்தையின்மை சிகிச்சை இனி பலன் தருவதற்கு சாத்தியம்  குறைவு என்று மருத்துவர் காலையில் சொன்னது நினைவுக்கு வர “ஐ அக்ரீ ஜெய். எல்லார்கிட்டயும் நம்ம பிரச்சனைகளைப் பகிர்ந்துக்க முடியாதுதான். கடைசியா இப்ப என்ன செய்யலாம்னு சொல்லு”

“ராபர்ட்டை கூட்டிட்டு இன்னைக்கு சாயந்தரம் பார்க் ஹோட்டல் வந்துடுறேன். அங்க டிஸ்கஸ் பண்ணலாம்”

ராபர்ட்டுக்கும் ஜாய்ஸ்க்கும் மிக மிகக்  கோலாகலமாகவே திருமணம் நடந்தது. சொல்லபோனால் தோழர்களில் நால்வரில் அவனது திருமணம்தான் முதலில் நடந்தது. எனவே அவனது திருமணத்தை  நால்வரும் கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

அதே  சமயத்தில் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்ததால் அவளது புகுந்த வீட்டினரும் கூட கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே ராபர்ட்-ஜாய்ஸ் தம்பதியினருக்கு  நான்சி என்ற அழகான பெண் குழந்தை பிறந்தாள்.

ஒவ்வொரு தினமும் கொண்டாட்டமும் அன்புமாய் கழிந்த அவனது வாழ்க்கையில் கரும்புள்ளியாய்  அமைந்தது அவனது தாய்லாந்து பயணம்.

அங்கு சுற்றிப் பார்த்ததுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அங்கிருந்த நாட்களில் பெண்களை சுவைத்தும் பார்த்துவிட்டான். அந்த நேரத்தில்   வீட்டுக்குத் தெரியாமல் செய்த தப்புகள் பெரிய கிக்கைத்  தந்தது. எதையோ வென்றதைப் போன்ற பெருமிதம்.

ஆனால் அவன் செய்த முட்டாள்தனம் ஒன்று அந்தப் பெண்ணுடன் தண்ணியடித்துவிட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் வீண்சண்டை இழுத்தது. சுற்றுலாப் பயணி அவன் வீடியோவை க்ளோசப்பில் எடுத்து  முகநூலில் போட்ட பதிவு உலகெங்கும் சுற்றி, கடைசியாக சில நல்ல உள்ளங்களின் தயவால்  சரியாக அவனது மனைவி ஜாய்சை சென்றடைந்தது.

அடுத்த வருடமே ஜாய்சுக்கும் அவனுக்கும் விவாகரத்தாக, அவனது சொத்தை அப்படியே முன்னாள் மனைவிக்குத் தாரை வார்த்துத் தர வேண்டியிருந்தது.  குழந்தை நான்சியும் அன்னையிடம் வளர்ந்தாள். அவனுக்கு சட்டத்தின் கருணையால் வருடத்தில் சில நாட்கள் நான்சியை தனது வீட்டுக்கு அழைத்து வர அனுமதி கிடைத்தது. அத்தகைய தினங்களில் ஒன்றுதான் இன்று. எனவே  மகளை அழைக்கச்  சென்றான்.

தந்தையைப் பார்த்ததும் முகத்தில் எரிச்சலுடன்

“நீங்க எதுக்கு வந்திங்க. உங்களைப் பாக்கவே பிடிக்கல” என்று இதயத்தில் நெருப்பை வாரிக் கொட்டினாள்  நான்சி.

மனைவியும் மகளும் அவனுக்கு மிகவும் உயிர் என்றாலும்  செய்த பிழை அவனைப் பழி வாங்குகிறதே.

விவாகரத்து பெறும்போது ‘என்ன தப்பு செஞ்சுட்டேன்னு ஜாய்ஸ் இவ்வளவு சீன் போடுறா… அதுதான் இனிமே செய்யலன்னு சொல்லிட்டேனே… எதுக்கு டைவர்ஸ் வரைக்கும் போகணும்’ என்று அலட்சியமாகத்தான் நினைத்தான். குடும்ப வாழ்வோ  இப்போது இழந்த சொர்க்கமாய் மனதில்…  தாய்லாந்து நாட்களை நினைத்து வருந்தாத நொடியில்லை.

“நான்சி இப்படியெல்லாம் சொல்லக் கூடாதும்மா… நம்ம வீட்டுக்கு போகலாம் ”

“இதுதான் என் வீடு. எங்கம்மா கூடத்தான் இருப்பேன். நீங்க போகலாம்” என்றாள் அனல் கக்கும் பார்வையில்.

குழந்தை சிறு பெண்ணாக இருந்தவரை சரி அம்மா அப்பா பிரிந்து வாழ்வது பற்றி புரிந்திருக்காது. இப்போது விவரம் தெரிய ஆரம்பித்துவிட்டது. அவனைப் பற்றி யாராவது சொல்லியிருக்கலாம். இனி மனிதர்கள் உள்ளவரை அந்த வீடியோ எங்கேயோ ஓரிடத்தில் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்குமே. அதைப் பார்த்திருக்கக் கூட சந்தர்ப்பமிருக்கிறது.

இந்நிலையில் மகளிடம் என்ன சொல்லி அவனது செயலுக்கு மன்னிப்பு கேட்பான்.  ச்சே ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தனது தகப்பன் தான் ஹீரோ. என் பெண்ணின் கண்களில் நான் சீரோ. ராபர்ட்டின் மனதே அவனைக் கொன்றது.

மாலை மங்கும் நேரம். பார்க் ஹோட்டலில் அமர்ந்திருந்தார்கள் நண்பர்கள் மூவரும்.

“என்னாச்சு”

உதட்டைப் பிதுக்கினாள் ரஞ்சனி “வழக்கம் போல சாப்பாட்டை எடுத்துட்டு ஈஸ்வர் அப்பார்ட்மென்ட்டுக்கு போனேன். கதவைத் தட்டினேன் திறக்கல. சாப்பாட்டை கதவுக்கு வெளிய வச்சுட்டு வந்துட்டேன்.

நேத்து வாட்ச்மேன் கிட்ட பேசிட்டு வந்தேன். தினமும் நான் வெளிய வைக்கிற சாப்பாட்டை ராத்திரி அவன்தான்  எடுத்து சாப்பிடுறானாம். ‘நேத்து மீன்குழம்பில் காரம் தூக்கல்… அதிகக் காரம் உடம்புக்கு நல்லதில்லை. அடுத்தமுறை கம்மியா மிளகாத்தூள் போடு’ன்னு  என்கிட்டே சமையல் குறிப்பு சொல்லி அனுப்புறான் அந்த வாட்ச்மேன். ”

அமைதியாக யோசித்துவிட்டு சொன்னான் ஜெய் “பேசாம கம்பனியை வித்துடலாம்டா. இதை விட நல்ல ஆப்ஷன் இப்போதைக்கு இல்லை”

“ஆனால் ஈஸ்வரோட கையெழுத்து வேணுமே… அவனை எப்படித்தாண்டா வழிக்கு கொண்டு வரது” என்றாள் ரஞ்சனி.

“அதுக்கு நான் ஒரு ப்ளான் வச்சிருக்கேன்” என்றான் ராபர்ட்.

“என்ன ப்ளான்”

ராபர்ட் தொடர்ந்தான் “நம்ம பிரச்சனை என்னன்னா… ஈஸ்வர் பெரிய ஷாக்ல இருக்கான். அந்த ஷாக்ல இருந்து அவனை வெளிய கொண்டு வரணும். அவன் வெளிய வந்துட்டா எல்லா பிரச்சனையும் சால்வ் ஆயிடும்”

“ஹன்ட்ரெட் பெர்சென்ட்”

“ஆனால் அவனை எப்படி வெளிய கொண்டு வரது”

“அதுக்கு முன்னாடி ஒரு துப்பறியும் நிறுவனத்தை அணுகி அவன் தினமும் என்ன செய்றான்னு வாட்ச் பண்ண சொல்லிருக்கேன். ஒண்ணு ரெண்டு வாரம் அவனை வாட்ச் பண்ணிட்டு நமக்கு ரிப்போர்ட் தரேன்னு சொல்லிருக்காங்க. ரிப்போர்ட்டை பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வருவோம்”

மூன்று வாரம் கழித்து அவர்கள் கையில் ரிப்போர்ட் கிடைத்த பொழுது தலையில் இருக்கும் முடியெல்லாம்  பிய்த்துக் கொள்ளாத குறையாக யோசித்தார்கள்

 

 

3 Comments »

  1. இன்னைக்கே அடுத்த பகுதியை போட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க. தப்புன்னே தெரிஞ்சு செய்து இப்ப வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறான் ராபர்ட். ஈஸ்வர் வாழ்க்கைல என்ன நடந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: