யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08

அத்தியாயம் – 08

 

அன்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் வடமராட்சி வலய மட்டத் தமிழ்த்தினப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருவர் இரண்டு போட்டிகளில் பங்குபெற முடியும். வைஷாலி வழக்கம் போல நடனத்திற்கும் முதல் தடவையாகப் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளவும் அவளது பாடசாலையிலிருந்து தெரிவாகியிருந்தாள்.

 

நடனமும் பேச்சுப் போட்டியும் வேறு ஒரே நாளில் வந்து வைஷாலியைப் பதட்டப் படுத்திக் கொண்டிருந்தது. இவள் இரண்டிலும் பங்குபற்றுவதால் இவள் முதலில் ஆடுவதற்கு நடுவர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். நடனப் போட்டிகளைப் பற்றி அவளுக்குக் கவலை கிடையாது. அது அவள் இரத்தத்தில் ஊறியிருக்கப் பேச்சுப் போட்டி பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

 

பேச்சுப்போட்டி ஒரு அரங்கில் நடந்து கொண்டிருந்தது. பேசுபவர் தவிர்த்து பங்குபெறும் மீதி மாணவர்கள் அரங்குக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். முரளிதரனும்  கூடத் தனது முறைக்காகக் காத்துக் கொண்டிருந்தான். வைஷாலியும் நடனப் போட்டியை முடித்து உடை மாற்றிக் கொண்டு அந்த மாணவர்களோடு சென்று நின்று கொண்டாள்.

 

அப்போது இவளருகே வந்தான் முரளிதரன். வைஷாலிக்கு போட்டியை எண்ணிக் கூட இந்தளவு பயமோ, பதட்டமோ ஏற்படவில்லை. ஆனால் முரளிதரன் இவளிடம் வருவதைக் கண்டவளுக்குப் பயத்தில் தலை சுற்றுவது போலிருக்கச் சுவரைப் பிடித்துக் கொண்டு வைத்த விழி வாங்காது அவனையே நோக்கினாள்.

 

வைஷாலிக்கு அழகே அவள் கண்கள் தான் எனலாம். அடர்த்தியான கருநிறப் புருவம் நடுவே தொடுத்திருக்க, அதன் கீழே அவள் நீண்ட விழிகள் இரண்டும் பல பாவங்கள் பேசும். கருமணிகள் இரண்டும் உருண்டு உருண்டு அவள் வாய்ப் பேச்சுக்கு மேலும் நயம் சேர்க்கும்.

 

இவளோ விழி விரிய அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. இவள் அருகே வந்தவன் அவள் கண்களை நேராய் உறுத்து விழித்தான். வைஷாலிக்கோ இதயம் எம்பி வெளியே குதித்து விடும் போலிருந்தது.

 

“ஏய் வைஷாலி…! இனிமேல் டியூசன்ல வைச்சு என்னைப் பார்க்கிற வேலை வைச்சியோ… நடக்கிறதே வேற… என்ன செய்வன் என்று எனக்கே தெரியாது. நீ பாக்கிற படியால தான் பொடியள் கூப்பிடுறாங்கள். படிக்கிற வயசில பாடத்தைக் கவனிக்காமல் உனக்கு என்ன பார்வை வேண்டிக் கிடக்கு. இனியும் நான் சும்மா இருப்பேன் என்று நினைக்காதை. இனியொரு தரம் பாத்தியோ நேர போய் சித்திர சேரிட்டச் (டியூசன் சென்டர் டிரெக்டர்) சொல்லிட்டுத்தான் அடுத்த வேலை பாப்பன். விளங்கிச்சோ…”

 

தணிந்த குரலில் அவன் அடுத்தவருக்கும் கேட்காமல் உறுமி விட்டுச் செல்ல இவளோ முகம் வெளுத்து, உடல் தொய்ந்து வெலவெலத்துப் போய் நின்றாள்.

 

சஞ்சயன் படிப்பதும் அந்தப் பாடசாலை தானே. அப்போது உணவு இடைவேளை நேரம் என்பதால் வைஷாலி வந்திருக்கிறாளோ பார்ப்போம் என்று எண்ணியவனாய் போட்டிகள் நடைபெறும் அரங்குகளைச் சுற்றி வந்து கொண்டிருந்தான். அப்போது தான் முரளிதரன், வைஷாலியிடம் பேசுவதும் அவள் முகம் சுருங்குவதும் இவன் கண்களில் பட்டது. விரைந்து அவளிடம் ஓடிச் சென்றான்.

 

கண்கள் கலங்கிப் போய் உதடுகளைக் கடித்துக் கொண்டு நின்றவளைப் பார்க்கவே இவன் மனது தாங்கவில்லை. முரளிதரன் மீது சொல்லொணாக் கோபம் எழுந்தது. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வைஷாலியிடம் முரளிதரன் பேசியது சுத்தமாக அவனுக்குப் பிடிக்கவில்லை.

 

வைஷாலி அருகே செல்லவும், சஞ்சயனைப் பார்த்ததும் அவள் விழிகளில் துளிர்த்திருந்த நீர் முத்துக்கள் கன்னத்தில் உருண்டு வழிந்தன. தனது கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டியவன்,

 

“இங்க பாரு வைஷூ… முரளி என்ன சொல்லியிருந்தாலும் காதில விழுத்தாதை. அவன் இப்ப உன்னோட கதைச்சதுக்குக் காரணம் உன்னைப் போட்டில வடிவா பேச விடாமல் செய்யிறது தான்.  இல்லை என்றால் டியூசன்ல வைச்சே அவன் உன்னோட கதைச்சிருக்கலாம். உன்ர மனசைக் குழப்பிறதான் அவன்ட நோக்கம். அதால தயவு செய்து அழாமல் போட்டிக்கு ரெடியாகு. நீ பேச வேண்டிய விஷயங்களைத் திருப்பி ஞாபகப் படுத்து.”

 

கூறி விட்டுத் தான் வைத்திருந்த தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்டினான். எதுவும் பேசாமல் வாங்கி முகத்தைக் கழுவியவள் அண்ணாந்து மீதித் தண்ணீரைக் குடித்து முடித்தாள். இப்போது மனம் நன்றாகவே தெளிந்திருந்தது. ஆசுவாசமாகிப் பழையபடி போட்டியில் மனதைத் திருப்பியவள், சஞ்சயனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

 

“தாங்ஸ்டா நண்பா…”

 

தனது ஜீன்ஸ் பொக்கெட்டிலிருந்து ஒரு மை லேடி டொபியை எடுத்து அவளிடம் கொடுத்தவன், இடைவேளை முடிந்திருக்க  இவளிடம் விடைபெற்றுத் தனது வகுப்பறைக்குச் சென்றான் சஞ்சயன்.

 

பேச்சுப் போட்டி முடிவடைந்து முடிவுகளும் வெளியாகியது. வழக்கம் போல முரளிதரன் முதலாம் இடம் பெற்றிருந்தான். வைஷாலிக்கு மூன்றாம் இடம் தான் கிடைத்திருந்தது. முதல் இரு இடங்களைப் பிடித்தவர்கள் தான் அடுத்த கட்டமாக மாவட் மட்டப் போட்டிகளுக்குப் போக முடியும்.

 

போட்டி முடிவடைந்து வீடு திரும்பும் போது வழி முழுவதும் யோசனையோடே தான் சென்றாள் வைஷாலி. பழக்கப்பட்ட பாதையில் துவிச்சக்கர வண்டியை கால்கள் அதுபாட்டிற்கு மிதிக்க எண்ணங்கள் முழுவதும் முரளிதரனைச் சுற்றித்தான்.

 

வெள்ளைச் சீருடையில் அவன் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று எவ்வளவு கஷ்டப் பட்டு இந்தப் போட்டிக்குத் தயாராகினாள். இராப் பகலாக பேச வேண்டிய விடயங்களை மனனம் செய்து அவள் இந்த சில நாட்களாகத் தூங்கியதே சில மணி நேரங்கள் தான். காலையில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்திற்குச் செல்லும் போது இதயம் மகிழ்ச்சியில் எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தது. இப்போது எதிர் மறையாக அடங்கிப் போயிருந்தது.

 

முரளி இவளைப் பார்த்து ஒரு புன்முறுவலாவது பூப்பான் என்று எண்ணி வந்தவளுக்கு அவன் கொட்டிய அனல் மனதைத் தகிக்க வைத்தது.

 

‘கொஞ்சம் நல்லாப் படிச்ச உடனே அவருக்குப் பெரிய ஹீரோ என்று நினைப்பு. பொடியள் பட்டம் பழிக்கிறதுக்கு நான் என்ன செய்யிறதாம்? ஆனால் இனி அவன்ட பக்கமே திரும்பக் கூடாது. எங்களுக்கும் கொஞ்சம் சூடு, சுரணை இருக்கு என்று காட்ட வேணும்.’

 

தனக்குள்ளேயே உறுதியாக ஒரு தீர்மானத்திற்கு வந்தவள், அதை அன்றிலிருந்து செயல்படுத்தவும் தொடங்கினாள்.

 

அன்று மாலை ரலன்ட் டியூசன் சென்டருக்குச் சென்ற போது வழக்கம் போல ‘முரளி… முரளி…’ என்று கத்த ஆரம்பித்தார்கள். அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றால் வழக்கத்திற்கு மாறாக முரளிதரன் வகுப்பறைக்கு அருகே நின்றிருந்த தென்னை மரத்தில் வலது காலைப் பின்புறமாக ஊன்றிச் சாய்ந்து நின்றிருந்தவன், இவளையே உறுத்து நோக்கிக் கொண்டிருந்தான்.

 

இவளும் முதலில் சளைக்காது அவன் கண்களையே நேராக நோக்கியவள், அன்று தான் எடுத்திருந்த தீர்மானம் நினைவுக்கு வரக் கண்களைத் தாழ்த்திக் கொண்டு துவிச்சக்கர வண்டியை உரிய இடத்தில்  நிறுத்தி விட்டு வகுப்பறையில் போய் அமர்ந்தாள்.

 

மூன்றாம் வாங்கிலில் இருந்தால் தானே அவனைப் பார்க்க முடியும் என்று எண்ணியவள் முதல் வாங்கில் தொடக்கத்தில் அமர்ந்து கொண்டாள். வகுப்பு ஆரம்பிக்கவும் கிரிக்கெட் விளையாடி விட்டு அரக்கப் பரக்க ஓடி வந்து அமர்ந்த சஞ்சயன் வைஷாலியை வழக்கமான இடத்தில் காணாது கண்களால் துழாவித் தேடினான்.

 

அவள் முதலாவது வாங்கிலில் இருப்பதைப் பார்த்ததுமே புரிந்தது கொண்டான், அவள் முரளியைத் தவிர்க்க ஆரம்பித்து விட்டாள் என. ஏனோ அவனை அறியாமலேயே ஒரு பெருமூச்சொன்று வெளிப்பட்டது. என்ன எண்ணினான் என்பது அவனுக்குத் தான் வெளிச்சம்.

 

ஆரம்பப்பள்ளியை விட்டுப் பிரிந்த பிறகும் சஞ்சயன், வைஷாலி நட்புத் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. ரலன்ட் டியூசன் சென்டரில் இருவரும் பேசிக் கொள்ளா விட்டாலும் ஆங்கில வகுப்பு ஒன்று சஞ்சயன் வீட்டில் வைத்து அவளுக்கும், அவள் தங்கைக்கும், சஞ்சயனுக்கும், அவனது அக்காவுக்கும்  மட்டுமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சஞ்சயனின்அப்பாவும் வைஷாலியின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள் ஆதலால் இந்த ஒழுங்கை மேற்கொண்டிருந்தனர்.

 

சஞ்சயனும் வைஷாலியும் எந்தப் பிரச்சினையும் பேசித் தீர்ப்பது இங்கே வைத்துத் தான். வாரத்திற்கு மூன்று தடவைகள் நடைபெறும் ஆங்கில வகுப்புத் தான் இவர்கள் நட்பை பிரிய விடாது மேலும் நெருக்கமாக்கியது.

 

அன்று ஆங்கில வகுப்புக்காகவே காத்திருந்தான் சஞ்சயன். வைஷாலியைக் கண்டதுமே ஏன் இடம் மாறி அமர்ந்தாள் என்று அறிந்து விடப் பரபரத்த மனத்தை அடக்கிக் கொண்டு அவள் விழிகளில் விடை காண விளைந்தான். அவன் கேள்வியைப் புரிந்து கொண்டவளாய் அவளும் பதில் கூறினாள்.

 

“பேச்சுப் போட்டியில வைச்சு முரளி இனித் தன்ர பக்கம் திரும்பவே கூடாது… இனிப் பார்த்தால் சித்திர சேரிட்டச் சொல்லுவானாம். அவருக்கு நான் பார்க்கிற என்றதும் பெரிய லெவல் வந்திட்டுது. எங்களுக்கும் மானம், ரோசம் இருக்குத் தானே. இனி அவன்ர பக்கம் திரும்பினால் பார்ப்பம்…”

 

படபடவெனப் பொரிந்தவளைசா சிரிப்புடன் பார்த்திருந்தான்.

 

“அப்ப நீ முரளியைக் கல்யாணம் பண்ணேல்லையா?”

 

“அது… அது வந்து…”

 

“என்ன பலமாக யோசிக்கிறாய்? அப்ப கல்யாண ஐடியாவை உண்மையாவே கையை விட்டிட்டியா?”

 

“அதெல்லாம் இல்லை… அது வளர்ந்து கம்பஸ் எல்லாம் முடிச்சு முடிய யோசிப்பம். ஆனா இனி அவனைப் பார்க்கவே மாட்டேன். அவ்வளவு தான்…”

 

“ஹூம்… சரி… சரி… ஏதோ செய்…”

 

ஆசிரியர் வந்து விடவும் பேச்சு அத்தோடு நின்றது. ஆனால் வைஷாலி அன்றெடுத்த முடிவைச் சிறிதும் மாற்றினாளில்லை. முரளிதரன் பக்கம் எக்காரணம் கொண்டும் திரும்பிட மாட்டாள். முதலாம் வாங்கிலிலேயே தொடர்ந்து இருக்க ஆரம்பித்தாள்.

 

ரலன்ட் டியூசன் சென்டரில் வகுப்புகள் முடிய ஆங்கில வகுப்பு இருக்கும் நாளில் வைஷாலி, சஞ்சயனோடு சேர்ந்தே தான் அவன் வீட்டுக்குச் செல்வாள். இவள் தனது துவிச்சக்கர வண்டியிலும், சஞ்சயன் தனதிலும் சமாந்தரமாகப் பேசிச் சிரித்துக் கொண்டே செல்வார்கள்.

 

வைஷாலி தன்னைப் பார்ப்பதைத் தவிர்த்ததும், சஞ்சயனோடு மிக நட்பாகப் பழகுவதும் முரளிதரனுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை வைஷாலியோ சஞ்சயனோ அறிந்திருக்கவில்லை.

 

நாட்கள் அது பாட்டில் நகர்ந்தன. இவர்களும் அடுத்த அடுத்த வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வைஷாலி மட்டும் தான் எடுத்த முடிவே உறுதியாய் முரளிதரனை விட்டு விலகியே இருந்தாள்.

 

பத்தாம் தரம் படிக்கும் போது ஒரு நாள் ஆங்கில வகுப்பில், பாடத்தைக் கவனிக்காது வைஷாலி கொப்பியில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த சஞ்சயன் எட்டி அவள் கொப்பியைப் பறித்தான்.

 

‘என் விழிகளுக்கு

வேணுமானால் – நீ

அணை போடலாம்…

ஆனால் என்

இதயத்திற்கு…?’

 

‘காதல் என்பதன்

அர்த்தம் வேணுமானால்

எனக்குப் புரியாமல் இருக்கலாம்.

ஆனால் நீ தான் என் வாழ்க்கை

என்பதன் அர்த்தம்

நன்றாகவே புரிகிறது.’

 

அவள் கொப்பியை வாங்கிப் படித்த சஞ்சயன் வாய் விட்டு நகைத்தான்.

 

“அடியே…! உனக்கு நல்லா முத்திப் போச்சுடி… கெதில மந்திகைக்குப் போகப் போறாய்… ஆனா உனக்கு முத்திப் போயிருக்கிறதைப் பார்த்தால் அங்கோடைக்குத் (மனநல வைத்தியசாலை) தான் அனுப்ப வேணும் போல…”

 

“கொப்பியைத் தாடா லூசு… தரேல்லையோ என்னட்ட நல்ல உதை வாங்குவாய் சொல்லிப் போட்டன்…”

 

“அதுசரி… இப்ப எதுக்கு கவிதை என்ற பேரில தமிழைக் கொல்லுறாய்? ஏன் நாளைக்கு ரிப் போகேக்க முரளிட்டக் குடுக்கப் போறியோ…? ஆனா நாளைக்கு முரளி ரிப்க்கு வர மாட்டானாமே…”

 

“உண்மையாவோடா… ஏனாம்…? அவன் வாறான் என்று தானே நானே வெளிக்கிட்டன் போவம் என்று…”

 

“அது சரி… உங்களுக்கு நாங்கள் எல்லாம் வாறது கண்ணுக்குத் தெரியாது. முரளியை மட்டும் தான் தெரியுதோ? அதுதான் அவன் வந்தாலும் நீ அவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டியே… பிறகு அவன் வந்தாலென்ன? வராட்டியென்ன?”

 

“நான் பார்க்காட்டிலும் அவன் வாறான் என்றதே ஒரு சந்தோஷம் தானேடா…”

 

“உன்னை இந்த ஜென்மத்தில இல்லை ஏழு ஜென்மத்திற்கும் திருத்த முடியாதுடி… நான் சும்மா ரீல் விட்டனான். அவன் வருவான் நாளைக்கு. நீயும் வா…”

 

“அடேய் சஞ்சு… உன்னைக் கொல்லப் போறன்டா…”

 

ஆசிரியர் இவர்கள் பாடத்தைத் திருத்தி முடித்திருக்கவும், பேச்சு அத்தோடு நின்றது. ஆனால் இருவர் மனதும் அடுத்த நாள் ரலன்ட் டியூசன் சென்டரால் யாழ்ப்பாணம் சுற்றிப் பார்க்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சுற்றுலாவைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.

 

“சஞ்சு…!”

 

“என்ன வைஷூ…?”

 

“நாளைக்கு முரளிட பேர்த்டே…”

 

“உண்மையாவோ… உனக்கு எப்பிடித் தெரியும்…?”

 

“சின்ன வயசில அவன் பேர்த்டே என்றால் எல்லா டீச்சர்ஸ்க்கும் பள்ளிக்கூடத்தில டொபி குடுக்கிறவன் எல்லோ… அப்ப இருந்தே தெரியும்டா…”

 

“ஓ… ஓகேடி… அப்ப எல்லாருமாய்ச் சேர்ந்து கொண்டாடலாம்…”

 

“ஓமடா… நான் கிப்ட் கொண்டு வாறன். நீ உன்ர என்று அவனிட்டக் குடுக்கிறியே…?”

 

“மாட்டன் என்றால் விடவா போறாய்…? கொண்டு வா… குடுத்துத் துலைக்கிறன்…”

 

“தாங்ஸ்டா நண்பா…”

 

சிரித்துக் கொண்டே வகுப்பு முடித்துத் தனது வீட்டிற்குத் திரும்பினாள் வைஷாலி.

 

ஞாபக அடுக்குகள் கோர்வையாய்க் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்க ஒரு மோன நிலையில் பெதுவாய் அசை போட்டுக் கொண்டிருந்தவள், தொலைபேசி ஒலித்த சத்தம் கேட்க எடுத்துப் பார்த்தாள். அலாரம் அடிப்பதை உணர்ந்து அணைத்ததும் தான் மண்டையில் நேரம் உறைத்தது. இரவு முழுவதும் தூங்காமல் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தது புரிய தன்னையே நொந்து கொண்டு எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.

 

நீராடி வெளியே வந்தவள், அன்று தைப் பூசம் ஆதலால் ஒரு சின்னக்கரையிட்ட பட்டுச்சேலை அணிந்து கோயிலுக்குச் செல்லத் தயாரானாள். தலை வாருவதற்காக நிலைக் கண்ணாடி முன் வந்தவள், தனது முகத்தைப் பார்த்துத் தானே கோபம் கொண்டாள். இரவு முழுவதும் தூங்காததும் நிறைய அழுதிருந்ததும் கண்கள் சிவந்து, தடித்திருந்தது. தலையை வாரி மெல்லிய ஒப்பனையை முடித்தவள், பூசைகள் ஆரம்பிக்கும் நேரம் நெருங்குவதை உணர்ந்து கோயிலுக்கு விரைந்தாள்.

 

அவள் சோகங்கள் தீருமா? ஆண்டவன் அருள் புரிவானா?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10

10 – மனதை மாற்றிவிட்டாய் அடுத்த நாள் ஞாயிற்று கிழமையாதலால் காலை உணவு அனைவரும் ஒன்றாக உக்காந்து சாப்பிட்டனர். திவி “பிரண்ட்ஸ எல்லாரும் பாத்து ரொம்ப நாள் ஆச்சு, போயி இன்னைக்கு பாத்திட்டு வரலாம்னு இருக்கேன், எல்லாரும் சண்டை போட்றாங்க. மதியம்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 33ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 33

34 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் திரும்பி வந்ததும் அக்சரா ஆதர்ஷ் இருவரும் சில விஷயம் பேசி முடிவுக்கு வந்தனர். மறுநாள் ஜெயேந்திரன் வீட்டிற்கு இருவரும் சென்று அனைவரும் உணவருந்தி விட்ட பின் ஆதர்ஷ் தன் முடிவைப்பற்றி கூறினான். முதலில்