யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 07

அத்தியாயம் – 07

 

அதுல்யா இரவு நேர வேலைக்குப் புறப்பட்டுச் சென்றதும் கின்டில் டிவைஸைத் தூக்கிக் கொண்டு ஸோபாவில் சாய்ந்தாள் வைஷாலி. கின்டிலில் இலவசத் தரவிறக்கத்திற்கு ஏதாவது நாவல்கள் இருக்கிறதா என்று பார்த்து இலவசமாக இருந்த நாவல்களை பூச்சிய விலையில் வாங்கித் தரவிறக்கம் செய்து கொண்டாள்.

 

இணைய வசதி பெருகியதில் பலநூறு எழுத்தாளர்களின் கற்பனைகள் கதைகளாக உருவெடுத்து வலம் வந்து கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் எழுத ஆர்வமிருந்தாலும் பதிப்பகங்களைத் தேடி கதைகளைப் பிரசுரிப்பது என்பது குதிரைக் கொம்புதான். ஆனால் இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி எழுத்தாளர்களின் ஆர்வத்துக்கு சிறந்ததொரு வரப் பிரசாதமாகவும் வாசகர்களின் வாசிப்பு ஆர்வத்துக்குச் சிறந்ததொரு தீனியாகவும் விளங்குகின்றது என்றால் மிகையாகாது.

 

முன்புபோல காசு கொடுத்துப் புத்தகம் வாங்கினாலோ, அல்லது நூலகங்களைத் தேடி அலைந்து தான் புத்தகங்களைப் பெற முடியுமோ என்ற நிலை போய், கையிலிருக்கும் கைத் தொலைபேசியிலேயே விரும்பிய புத்தகங்களை வாசிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது.

 

வாசிக்காத பல புதிய புத்தகங்கள் வைஷாலியின் கின்டில் லைப்ரரியில் தரவிறக்கம் செய்யப்பட்டு இருந்தாலும் சஞ்சயன் வந்து சென்ற பின்னர் அவளிருந்த மனனிலைக்குப் புதுப் புத்தகங்கள் எதையும் வாசிக்கலாம் போலில்லை.

 

இந்த மாதிரி மனம் சோர்ந்து போகும் நேரங்களில் வாசிக்க என்றே இருக்கிறது சில கதைகள். தமிழ் மதுரா அவர்களின் சித்ராங்கதாவை எடுத்தவள், ஜிஷ்ணுவோடும் சரயுவோடும் ஒன்றிப் போனாள். இது வரைக்கும் எத்தனை தரம் வாசித்திருப்பாளோ தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு தடவையும் வாசிக்கும் போதும் ஏதோ மனது லேசாகி விட்டது போன்ற உணர்வு.

 

ஒரே மூச்சாக முழுக் கதையையும் வாசித்து விட்டுப் பார்க்க மணி நள்ளிரவு பன்னிரண்டு காட்டியது. இரவுணவு இன்னமும் உண்ணவில்லை என்றது நினைவில் உறைக்க எழுந்து சமையலறைக்குச் சென்றாள். ஆனால் சாப்பாடு வயிற்றின் உள்ளே செல்லும் போலத் தோன்றவில்லை. சமையலறையை ஒழுங்கு படுத்தி விட்டு, பாலைச் சூடாக்கிக் குடித்து விட்டுக் கட்டிலில் சென்று விழுந்தாள்.

 

கண்களை மூடினாலும் நித்திராதேவி வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தாள். பலவேறு எண்ணங்கள் சிந்தையை ஆக்கிரமித்துக் கடைசியில் ஜிஷ்ணு, சரயு காதலைப் பற்றிச் சிந்தித்துப் பின்னர் அணுகுண்டில் வந்து மையம் கொண்டது.

 

சித்ராங்கதாவில் எல்லோரும் ஜிஷ்ணுவைப் பற்றிப் புகழும் போது இவளுக்கு மட்டும் ஏனோ அணுகுண்டு தான் பேவரிட். சின்ன வயதிலேயே எந்தளவு தூரம் புரிந்துணர்வான ஒரு நட்பு. இப்படியொரு தோழன் கிடைப்பது வரமல்லவா? பொதுவாக ஆண், பெண் நட்புகள் கொச்சைப்படுத்தப் பட்டு விடுவது வழமை.

 

அவ்வாறிருக்க இவர்கள் தோழமை எப்போதும் இவளைக் கண்கள் கசிய வைக்கும். அணுகுண்டை நண்பன் என்று சொல்வதை விட சரயுவின் தாய் என்றே சொல்லலாம் என்று வைஷாலி அடிக்கடி சிந்திப்பாள்.

 

இன்று அணுகுண்டைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது சஞ்சயன் முகம் கண் முன் வந்து நிற்கவும் ஒரு நொடி திடுக்கிட்டாள். ஆனால் அடுத்த நொடியே அவளை மீறி ஒரு புன்னகை அவள் இதழ்களில் அழகாய்க் கசிந்தது.

 

சஞ்சயனை இவள் சந்தித்த முதல் நாளிலிருந்தே அவன் இவளைப் பார்த்துப் பார்த்துக் கவனிப்பான். இவளுக்காக அடி கூட வாங்கியிருக்கிறானே. அதெல்லாம் நினைவு வர இவள் நினைவுகள் பள்ளிநாட்களை நோக்கிச் சென்றது. இன்று முரளி பற்றிச் சஞ்சயனோடு பேசியதில் முரளியின் நினைவுகள் மேலோங்க இருதயம் துடித்துக் கொண்டே வலியைக் கொடுக்க ஆரம்பித்தது.

 

காதல், கல்யாணம் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத எட்டு வயது. மூன்றாம் வகுப்பில் முரளியோடு கூடச் சேர்ந்து நடித்த அந்த அபிநயப் பாடல் வைஷாலி மனதில் ஒரு விதை ஒன்றை ஊன்றி வைத்தது. நாட்கள் செல்லச் செல்ல அந்த எண்ணம் துளிர்த்துச் சிறு செடியாகிப் பின்னர் பெரும் விருட்சமாக வளர ஆரம்பித்தது.

 

‘முரளி எப்படி என்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லலாம்? நான் அவனுக்கு எந்த விதத்திலும் குறைந்து போகக் கூடாது. அவனைப் போலவே நல்லாப் படிக்க வேணும்… விளையாட வேணும்… நிறையப் பரிசுகள் வாங்க வேணும்… அப்படியிருந்தால் நான் வளர்ந்து முடிய அவன் என்னைக் கல்யாணம் செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது தானே…’

 

எட்டு வயதில் அவள் மனதில் விழுந்த இந்த எண்ணத்தை அவள் புறக்கணிக்கவில்லை. மாறாக முரளிக்குச் சமனாக இருப்பதற்காகக் கடுமையாக உழைத்தாள். ஆனால் பாவம் வைஷாலி. அவள் என்ன பாடுபட்டாலும் முரளிதரன் தான் முன்னிலை வகித்தான்.

 

நான்காம் வகுப்பில் அலங்காரத் தையல் போட்டி வைத்தார்கள். வலய மட்டத்திற்கு ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் ஆண்களில் ஒருவரும் பெண்களில் ஒருவரும் தான் கலந்து கொள்ள முடியும். ஆண்கள் பிரிவில் முரளிதரனும் பெண்கள் பிரிவில் வைஷாலியும் தெரிவானார்கள்.

 

வைஷாலியின் மகிழ்ச்சிக்கோ அளவில்லை. ‘நான் முரளியோடு சேர்ந்து பஸ்சில் போகப் போகிறேனே’ என்று குறைந்தது பத்துத் தடவையாவது சொல்லித் துள்ளிக் குதித்து சஞ்சயனின் காதில் ரத்தம் வர வைக்காத குறைதான். இன்று வரை வைஷாலிக்குத் தெரியாத ஒரு விசயம் என்னவென்றால் பாடசாலை மட்டத்தில் வைத்த போட்டியில் உண்மையில் தெரிவாகியது சஞ்சயன் தான். முரளிதரன் இரண்டாம் இடம்தான் வந்திருந்தான்.

 

வலய மட்டப் போட்டி நடப்பதற்கு முதல் நாள் சஞ்சயன் சுண்டு விரலில் பென்சில் சீவும் போது விரலை வெட்டிக் கொண்டான். அதனால் இவனது இடத்தில் முரளிதரன் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. சஞ்சயன் வேண்டும் என்றே விரலை வெட்டிக் கொண்டான் என்பது இன்று வரைக்கும் அவன் ஒருவன் மட்டுமே அறிந்த ரகசியம்.

 

சஞ்சயன் தான் இவர்கள் வகுப்பில் முதல் மாணவன். முரளிதரன் வகுப்பில் அவன் தான் எப்போதுமே முதலாவது. வைஷாலி எப்படியோ முயன்று முதல் பத்துக்குள் வந்து விடுவாள். அவளுக்கு பாடங்களை இலகுவாகப் படிக்க உதவி செய்வது சஞ்சயன் தான். அவள் புரியும்படி பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பான்.

 

என்ன முயற்சி செய்தும் வைஷாலியால் விளையாட்டில் சாதிக்க முடியவில்லை. அதனால் தனது கவனத்தை நடனத்தின் பக்கம் திருப்பியவளுக்கு இயற்கையாக கிடைக்கப் பெற்ற திறமையும் கை கொடுக்க, பாடசாலையில் இவள் நடனம் இல்லாத நிகழ்ச்சி இல்லை என்ற அளவில் இவளைப் பிரசித்தியாக்கியது. முரளிதரனோ பேச்சுப் போட்டிகளில் தனது திறமையைக் காட்டி வந்தான்.

 

இதனால் தமிழ் தினப் போட்டிகள், ஆங்கில தினப் போட்டிகள், புகைத்தல், மது ஒழிப்பு தினப் போட்டிகள் என்று பலவற்றுக்கும் வைஷாலி, முரளிதரன், சஞ்சயன் எல்லோரும் போவார்கள். இவ்வாறு வெளி இடங்களுக்குப் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் வைஷாலி, முரளிதரன் அருகில் அமர சஞ்சயன் உதவி செய்வான். இவளுக்குத் தான் முரளிதரன் என்றால் தெய்வமாச்சே. அப்படியொரு பூரிப்பு. இவளின் இந்த முகமலர்ச்சியைப் பார்த்துப் பார்த்து சஞ்சயன் மகிழ்வான்.

 

வைஷாலிக்கு இந்தக் கதை வாசிக்கும் பழக்கத்திற்குக் கூடக் காரணம் முரளிதரன் தான். பாடசாலை இடைவேளையின் போது ஒரு நாள் முரளி ஏதோ ஒரு புத்தகம் வைத்து வாசிப்பதைப் பார்த்தாள். நிறையப் படங்கள் போட்டிருக்க அது என்னவென்று பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் இவளிடம். முரளிதரனோடு நேரடியாகக் கதைக்க இவளுக்கு ஏனோ தயக்கம். முரளிதரனும் இவளைப் பெரிதாகக் கணக்கெடுப்பதில்லை. இவளுக்குத் தான் இவள் பிரச்சினையெல்லாம் தீர்க்கும் ஒருவன் இருக்கிறானே. வழக்கம் போல சஞ்சயனிடம் வந்து நின்றாள்.

 

“சஞ்சு…!”

 

“என்ன வைஷூ…? சொல்லு…”

 

“முரளி ஏதோ ஒரு புத்தகம் வாசிக்கிறான். எனக்கு அது வேணும்… அது என்ன புத்தகம்?”

 

“அது ராணி காமிக்ஸ்… மாயாவி என்ற ஒருத்தரிட கதை… அன்றைக்கு நான் வாசிச்சுக் கொண்டிருக்கேக்க உனக்கு வேணுமா என்று கேட்டனானெல்லோ… நீ தானே உதெல்லாம் வாசிக்கேலாது என்று சொன்னனீ…”

 

“அது அப்படா… இப்ப எனக்கு அது வேணும்.”

 

“சரி… சரி… மூஞ்சியைத் தூக்கி வைக்காதை… என்னட்ட நிறைய இருக்கு. நான் நாளைக்கு கொண்டு வந்து தாறன். முரளி வாசிக்கிறதும் என்ர புத்தகம் தான்.”

 

“ஓகே… ஓகே… சரிடா… தாங்ஸ்டா சஞ்சு…”

 

ராணி காமிக்ஸில் இருந்து அடுத்த கட்டத்திற்கு இவள் நகர்ந்ததும் முரளிதரனால்தான். அப்போது இவள் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். இவள் வாசிப்பதெல்லாம் ராணி காமிக்ஸ், அம்புலிமாமா, கோகுலம் தான். வைஷாலியின் கதை வாசிக்கும் ஆர்வம் பார்த்து அவளின் அம்மா அவளை அவர்கள் ஊர் நூலகத்தில் சேர்த்து விட்டிருந்தார்.

 

ஒருமுறை பள்ளிக்கூட விடுமுறை நேரத்தில் இவள் நூலகத்தில் இருந்த நேரம் முரளிதரனும் வந்திருந்தான். இவள் கண்கள் அவனை மட்டுமே பின் தொடர்ந்தது. அப்போது அவன் பெரிய தடித்த அட்டை மொத்தப் புத்தகம் ஒன்றை எடுத்துச் செல்வதைப் பார்த்தவள், உடனேயே தானும் அதே புத்தகத்தை எடுத்துச் சென்றாள். ஆம். பொன்னியின் செல்வன் தான். திருவாளர் கல்கியின் எழுத்துக்கு மயங்காதவர் யார்? கொஞ்சம் கொஞ்சமாக தனது வாசிப்பு வட்டத்தை விரிவாக்க ஆரம்பித்தாள்.

 

அன்று முரளிதரனைப் பார்த்து ராணி காமிக்ஸில் ஆரம்பித்த பழக்கம் அவளுக்கு ஒரு போதையாகி இன்று வரை தொடர்கிறது. இப்படி அவள் வளர்ச்சியின் ஒவ்வொரு பரிமாணத்திலும் முரளிதரன் எதையும் அறியாமலேயே தாக்கம் செலுத்திக் கொண்டிருந்தான். அதை அவன் அறியும் நாளும் விரைவில் வந்தது. வருடங்கள் செல்லச் செல்ல ஒரு ராமும் ஜானுவும் உருவாகிய நாளும் வந்தது.

 

வைஷாலி வீட்டிலே என்ன தான் சண்டை போட்டும் அவளால் முரளிதரன் படித்த பாடசாலையான நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்திற்குச் செல்ல முடியவில்லை. அவளுக்கு ஒரேயொரு ஆறுதல் ரலன்ட் டியூசன் சென்டரில் முரளிதரனைப் பார்க்க முடியும் என்பது தான்.

 

பெரியதொரு காணியிருந்த வீடொன்றில் ஆங்காங்கே கிடுகால் வேய்ந்த கொட்டில்களில்  நீள நீள மேசைகளும் அதற்கு ஏற்ற அளவில் நீண்ட வாங்கில்களும் போடப்பட்டிருக்கும். பாடசாலைகள் போலத் தனித்தனிக் கதிரை, மேசைகள் கிடையாது.

 

நடுவே ஒரு சிறு பாதை ஆசிரியர் சென்று வர விடப்பட்டு ஆண்கள் ஒரு புறமாகவும் பெண்கள் ஒரு புறமாகவும் அமர்ந்து கொள்வார்கள். ஆண்கள் பக்கம் முரளிதரன் எப்போதும் முதல் வாங்கிலில் தான் இருப்பது. வைஷாலியோ முரளிதரனைப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மூன்றாம் வாங்கிலில் இருந்து கொள்வாள். சஞ்சயனோ வைஷாலியைப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் கடைசி வாங்கிலில் அமர்ந்து கொள்வான்.

 

எட்டாம் வகுப்பு வரை முரளிதரனை இவள் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் வயது ஏற ஏற அதற்குரியளவு முதிர்ச்சியும் ஏற்படும் தானே.

 

ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது பிற மாணவர்கள் இவள் முரளிதரனைப் பார்ப்பதைக் கவனித்து விட்டார்கள். அந்த வயதில் இப்படியான விடயங்கள் கிடைத்து விட்டால் மாணவர்களுக்கு போதுமே. வெறுமையாய் மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தால் போல ஆச்சே.

 

இவள் டியூசனுக்குச் செல்லும் போது பாடம் ஆரம்பிக்க முதல் சில பொடியன்கள் (பையன்கள்) வெளி வாயிலில் நிற்பார்கள். சிலர் வகுப்பறைக்கு முன்னே துவிச்சக்கர வண்டிகள் விடும் இடத்தில் நிற்பார்கள். சிலர் வகுப்பறைக்கு முன்னே இருக்கும் முற்றத்தில் கிட்டிப்புள்ளோ, கிரிக்கெட்டோ விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

 

வைஷாலி ரலன்ட் டியூசன் சென்டர் வெளி வாயிலில் துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கும் போதே, இவளைக் கண்டதும், “முரளி… முரளி…” என்று கத்த ஆரம்பிப்பார்கள். அவர்கள் முடிய இவள் துவிச்சக்கர வண்டியைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல விளையாடிக் கொண்டிருப்பவர்கள் ஆரம்பிப்பார்கள். அவர்கள் முடிய வகுப்பறையின் முன்னிற்கும் மாணவர்கள் கத்துவார்கள்.

 

ஆரம்பத்தில் மற்றைய மாணவர்கள் மத்தியில் தான் முரளியைப் பார்ப்பது தெரிய வந்து விட்டதை எண்ணி பெரிதும் வெட்கப்பட்டு மனம் சோர்ந்து போனாள் வைஷாலி. ஆனால் நாட்கள் நகர அவளுக்கு இது பழக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் கூப்பிடுவதை ரசிக்கவே ஆரம்பித்து விட்டாள்.

 

இவள் பயமெல்லாம் முரளிதரன் என்ன சொல்லப் போகிறானோ என்பதில் மட்டும் தான் இருந்தது. இவள் பயந்தது போலவே முரளிதரன் மற்றைய மாணவர்களிடம் இவ்வாறு கூப்பிட வேண்டாம் என்று அதட்டினான். அவர்கள் அதைப் பொருட்படுத்தினால் தானே. அவர்களிடம் தோற்றவன், வகுப்பறையில் அடிக்கடி இவள் பக்கம் திரும்பி இவளை முறைக்க ஆரம்பித்தான்.

 

ஆனால் பின்னிருப்பவர்களுக்கோ முரளிதரனும் வைஷாலியைப் திரும்பிப் பார்ப்பதாகத் தோன்றி இந்தப் பட்டம் தெளித்துக் கூப்பிடுவது எனும் டியூசன் சென்டர் கலாசாரம் இவர்கள் வகுப்பில் முரளி வைஷாலிக்கே முதன்மையாக நடந்தது.

 

வைஷாலி எந்தளவு தூரம் இதை ரசித்து மகிழ்ந்தாளோ, அந்தளவுக்கு அந்தளவு முரளிதரன் இதை வெறுத்தான். அந்த வெறுப்பை வைஷாலியிடம் காட்டி இந்தப் பட்டம் தெளித்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சந்தர்ப்பமும் அவனுக்கு விரைவில் கிடைத்தது.

 

முரளிதரனின் கோபத்தில் சிக்கிய வைஷாலியின் கதி என்ன?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01

  கனவு – 01   தலவாக்கலை இலங்கை வங்கிக் கிளையின் அடகுப் பிரிவு. அச்சிறு அறையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கொடுத்த சங்கிலியை நகைகளின் தரம் பார்க்கும் உரைகல்லில் தேய்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி.