Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 19

உறக்கம் கலைந்து எழுந்த ரோகிணி சந்திரனின் முகத்தையே பார்த்திருந்தாள். அவளை தவிக்க செய்த அவனது முக இறுக்கமும், சோர்வும் தளர்ந்து நிர்மலமாய் இருந்தது அவனது முகம். அவனின் முகத்தில் அமைதியை காணவும், அவளின் மனமும் நிம்மதி அடைவதை அவளால் தெளிவாக உணர முடிந்தது. அந்த நிம்மதி நீடிக்கும் முன்னே, தீ சுட்டாற் போல் பதறி விலகியவளுக்கு தான் என்ன செய்திருக்கிறோம் என்று இப்பொழுது தான் புரிந்தது. அவனை கண்டது முதல் அவள் மூளை மழுங்கி விட்டது எனலாம். அவளது சிந்தனையில் அவனைத் தவிர வேறு எதுவமே இல்லை. ஆனால், ஆழ்மனதில் பதிந்திருந்த கோபம் தான் அவளை அவனிடமிருந்து விலக்கி வைத்ததோ என்னவோ? அந்த கோபத்தையும் மறக்கடித்து விட்டது நேற்றைய அவனுடைய தோற்றம். சந்திரனும் அவனுக்குள் இருந்த அச்சத்தினால், அவளாக தொடங்கட்டும் என்று வந்ததிலிருந்தது காத்திருக்க, இருவரும் மௌனமாகவே இரு தினங்களை கழித்திருந்தனர்.

அவனது தோற்றத்தில் வந்த இளக்கம், அதை தொடர்ந்து இருவரின் மௌனம்… இதெல்லாம் கூட பொறுத்துக் கொள்ள முடிந்தவளால், நேற்றைய தன் செயலை நினைத்தால், மிகவும் அவமானமாய் உணர்ந்தாள். இப்படி உணவு மறந்து, தன்னிலை முழுவதும் மறந்து அவனோடு குழைவது ஒன்றும் இது முதல்முறை இல்லை என்றாலும், தனக்கு துரோகம் செய்தவன் என்பதையும் மறந்து… அவனோடு இணக்கமாக இருந்ததை நினைக்கவே அவளுக்கு அவமானமாக இருந்தது. அப்படி என்ன அவன்மேல் காதலும், மயக்கமும் என தன்மீதே கடும்கோபம் எழ, அந்த கோபம் அவன் மீதும் படர்ந்தது.

இயந்திரகதியில் அனைத்தையும் செய்தவள், சோர்ந்து போய் அமர்ந்து விட்டாள். நடந்ததை இன்னமும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பட்ட அறிவு என்பது கொஞ்சமாவது வேண்டாமா? அத்தனை பட்டும்… சூடு, சொரணையின்றி இப்படி ஒரு செயலை செய்வதா? இந்தவிதமான எண்ணங்கள் வலுக்க வலுக்க கோபம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

சந்திரனின் விடியல் சற்று தெளிவாகத்தான் இருந்தது. நேற்றைய இரவில் மனைவியின் அருகாமையும், ஆதரவும் அவனுக்கு தேவையாய் இருந்தது. அதை மனைவி தந்துவிட்டாள் என்பதற்காக அவள் இணைக்கமாகி விட்டாள் என்றோ, கோபத்தையெல்லாம் களைந்து விட்டால் என்றோ எண்ணிக்கொள்வதற்கு அவன் ஒன்றும் முட்டாள் அல்லவே! தன்னை சீர்படுத்திக் கொண்டு, அறையிலிருந்து வெளியேறிய பொழுது, அவன் எண்ணத்தை உறுதி படுத்தும் விதமாக தான் ரோகிணியின் தோற்றமும் இருந்தது. இரவில் வெக்கத்தில் சிவந்தவள், இப்பொழுது சின மிகுதியால் சிவந்திருந்தாள்.

கோபம் கனன்று கொண்டிருக்கும் அவள் முகத்தை முதல்முறை பார்க்கிறான். என்னவோ பயம் கொள்ள தோன்றாமல் ரசிக்க தோன்றியது அந்த அறிவுப் பெட்டகத்திற்கு. கோபத்தில் என்ன செய்வாள்? கத்துவாளா? அடிப்பாளா? அவள் மென்குரலால் கோபமான சொற்களை உதிர்த்தால்… அந்த எண்ணம் தோன்றும்பொழுதே சந்திரனுக்கு உண்மையில் புன்னகை தான் வந்தது. மனதோடு புன்னகைக்கவும் செய்தான். அவள் திட்டினால் சரி.., அவன் செய்த செய்கைகளை அவளின் கண்ணோட்டத்தில் விவரித்தால்? அவள் அடைந்த வேதனைகளை பட்டியலிட்டால்? அப்பொழுதும் அவனால் இதே உணர்வுடன் இருந்துவிட முடியுமா? முடியவே முடியாது என்பதை சிறிது நேரத்தில் அவனும் உணரத்தானே போகிறான்.

அவளையே பார்த்தவண்ணம் சந்திரன் அவள் அருகே அமர, அவள் அவனை நன்கு முறைத்தபடி தனது வலது கரத்தை அவன்புறம் நீட்டினாள். எதற்கென்று புரியாமல் விழித்தவன், பிறகு அவள் கையோடு தன் கையை அவன் கோர்த்து கொள்ளப் பார்க்க, வேகமாக அவனது கரத்தை தட்டி விட்டவள், “டேப்லெட் கொடுங்க” என்றாள் அதிகாரமாக.

சத்தியமாக என்ன கேட்கிறாள் என்று புரியவில்லை. யோசனையின் அறிகுறியாய் புருவம் சுருக்கியவன், “என்ன ரோ உடம்பு எதுவும் முடியலையா?” என அவளது உடல் சூட்டை ஆராய்வதற்காக கையை உயர்த்த, மீண்டும் வெடுக்கென கையை தட்டி விட்டாள். இம்முறை முகம் சுருங்கிவிட்டது அவனுக்கு. அதை மேலும் சுருங்கி கருக்க வைக்க அவள் மேலும் பேசலானாள்.

“ஓ இப்போ எனக்கு… அந்த… அந்த…” என்று எதுவோ தெரியாமல் திணறியவள், “ஏதோ சயின்ஸ் டெர்ம் என்னமோ சொன்னீங்களே…” என்று எதையோ சிந்திக்க தொடங்கி, “ஆங்… அந்த ஒவல்யூஸன் டைம் இல்லையா? டேப்லெட் போட வேண்டியது இல்லையா…?” என ஏளனமாக கேட்க, இப்பொழுது அவள் என்ன மாத்திரையை கேட்கிறாள் என்று அவனுக்கு தெளிவாக புரிய, அவன் முகத்தில் கடுமை ஏறியது.

ஆனால் ரோகிணி நிதர்சனத்தை தானே கூறினாள். ஆகவே, அவளின் கோபத்தில் இருக்கும் நியாயம் புரிய, முயன்று வருவித்த இலகு குரலில் தன்னிலையை விளக்க எத்தனித்தான். “அது… அப்போ ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் ரோ. தெரியாம நடந்துடுச்சு. சாரி” என்று சுவற்றை வெறித்த பார்வையோடு அவளிடம் கூறும்பொழுதே, அந்த உண்மை தெரிந்த தினம் அவள் கலங்கிய நினைவுகள் அவனுள் எழுந்து அவன் மனதை வதைத்தது. என்ன முயன்றும் குரலின் கடினத்தை குறைக்க முடியவில்லை. பிழை செய்தது புரிந்தாலும், அதை குத்திக்காட்டுவதை மனம் அவ்வளவு எளிதில் ஏற்காதல்லவா!

“ஓ… மிஸ்…அண்டர்…ஸ்..டாண்டிங்..” என இழுத்து, நிறுத்தி ஏளனமாக உதட்டை சுளித்தவளுக்கு அத்தனை ஆத்திரம். ஏதோ இந்த பேச்சுக்களை கோபத்தில் தொடங்கிவிட்டாள் தான், ஆனால், அதன் தொடர்ச்சியாக மற்ற விஷங்களைப்பற்றி பேசுவதற்கு அவளுக்கே கூசியது. அந்த நினைவு எழுந்த பொழுதே கண்கள் தாமாக கலங்கி விட, சோபாவில் கால்களை மேலே தூக்கி வைத்து மடங்கி அமர்ந்து அதில் தலை சாய்த்து அழ தொடங்கிவிட்டாள். அவள் குத்திக்காட்டியதை விடவும், அவள் அழுவது அவனுக்கு இன்னமும் வலித்தது.

“ரோ… ப்ளீஸ்… தப்பு பண்ணுனது நான். நீ ஏன் அழனும்? உனக்கு என்ன தண்டனை தரணும் தோணுதோ கொடு. எப்படி திட்டனும் தோணுதோ திட்டிக்க. ஆனா, இப்படி இருக்காத ப்ளீஸ்… என்னால தாங்க முடியலை மா… ப்ளீஸ் அழாத” என தேற்ற நினைத்தவனின் குரலும் பிசிறு தட்டியது.

அதற்கெல்லாம் அடங்காத அவளுடைய அழுகை பொங்க, “எத்தனை நாள் உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா, இல்லையான்னு கூட தெரியாம தவிச்சிருக்கேன் தெரியுமா? நீங்க என்கிட்ட ஒட்டுதல் இல்லாம இருக்கும்போது, இந்த வாழ்க்கை நீடிக்குமான்னு பயத்துல எவ்வளவு நாள் தவிச்சேன் தெரியுமா? என்னால தனியா இருக்கவே முடியாது. என் அம்மா நிழல்லயே வளந்துட்டேன். என்னை வாழ்க்கை முழுக்க தனியா தவிக்க வெச்சுட்டீங்களே! பொதுவா ஒரு நாள் கூட நான் தனியா தூங்க மாட்டேன். அவ்வளவு பயந்துப்பேன். இப்போ… இப்போ…” என மீண்டும் தேம்ப,

“ரோ…” என்று அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன், “எனக்கு உன்னை பத்தி எதுவும் தெரிலை மா. தெரிஞ்சுக்காமையும் விட்டுட்டேன். பெரிய தப்பு தான். கணவன், மனைவிங்கற உறவோட அர்த்தம் எனக்கு தெரியலை. அந்த ஆழமும் எனக்கு புரியலை. இப்போ வரையும் எனக்கு அதெல்லாம் தெரியலை. உன்னை நான் எப்படி பாத்து இருந்திருக்கணும்ன்னு தெரியலை தான். இப்போ என்ன பண்ணணும்ன்னும் கூட தெரியலை. உன்னை வருத்தப் படுத்திட்டேன்னு மட்டும் புரியுது. சத்தியமா அதை எப்படி சரி பண்ணனும் கூட தெரியாம தினம் தினம் நொந்து சாகறேன். ஆனா எதுக்காகவும் உன்னை என்னால விட முடியாது. நீ இல்லாத வாழ்க்கை எனக்கு நரகத்தை விட கொடுமை” என்றவன்,

அவள் முகத்தை நிமிர்த்தி, “நீ இவ்வளவு பயந்து… இல்லைடா… இல்லை… உன்னை இனி தனியா விட மாட்டேன். சாரிமா… சாரி” என்று கலங்கிய குரலில் தவிப்பாக உரைத்தான். அவனது தவிப்பில், கண்களில் இருந்த அலைப்புறுதலில் இம்மி அளவும் பொய்மை இல்லை. அதை ரோகிணியாலும் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்காக அவன் செய்தவைகள் எல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா என்ன?

மனம் மீண்டும் வேதனைகளுக்குள் மூழ்க, அவனிடமிருந்து விலகி அமர்மதவள், தனது விழிகளை அழுந்த துடைத்துக் கொண்டாள். கலங்கி போய் அமர்ந்தவனை திரும்பியும் பாராது, “உங்களை நம்பி சிகாகோ வந்தேன் இல்ல… உங்களை மட்டும் தான் நம்பி வந்தேன். அப்போ எனக்கு தோணுச்சு, எங்க அம்மாக்கு அடுத்து நீங்கதான்னு. எனக்கு எல்லமுமா இருப்பீங்கன்னு ஒரு நம்பிக்கை” என்றவள் விரக்தியாய் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு, “ஆனா ஒரு விஷயத்துல உங்களை பாராட்டி ஆகணும். நான் நினைச்ச மாதிரி எல்லாம் நீங்க இருந்தீங்களா தெரியாது. ஆனா, ஒரு விஷயத்துல எங்க அம்மா மாதிரி தான். என் அம்மா எனக்கு பல விஷயங்களை சொல்லி தந்து இருக்காங்க. நீங்களும் தான்…” என்றவள் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“தனியா இருக்க பயம்ன்னு சொன்னேன் இல்ல. அது முன்ன. இப்போ எனக்கு பழக்கம் தான். தெரியாத புது ஊர்லயே தனியா இருந்த எனக்கு, என் சொந்த ஊர்ல தனியா இருக்கறது பெரிய விஷயம் இல்லை. என்ன என் அம்மா, கூட இருந்து எனக்கு ஒன்னொன்னையும் சொல்லி தந்தாங்க. நீங்க கூட இல்லாததால நிறைய விஷயத்தை கத்து தந்தீங்க. அவ்வளவு தான் வித்தியாசம்” என்றாள். பேசி முடியும் வரையிலும் அவனை திரும்பி பார்க்கவில்லை.

ரோகிணி இவ்வளவு பேசுபவளே கிடையாது. ஆனால், அவள் மனதில் இத்தனை ஆதங்கம் இருக்கும் என்றும் சந்திரனும் நினைத்தது கிடையாது. ஏதோ ஓரிரு விஷயங்களில் கோபம் என்று நினைக்க, தான் செய்த எதுவுமே அவளுக்கு பிடிக்கவில்லையோ என்ற அச்சம் துளிர்த்தது. முன்பு ரவியின் மகள் பிறந்தநாள் விழாவில் அந்த முதியவர்கள் பேசியதற்கெல்லாம் இப்பொழுது அர்த்தம் விளங்குவது போல இருக்க, தலை பாரமானது.

அவளது மொத்த வாழ்விலும் தன்னால் ஏற்பட்ட வடுக்கள் அதிகம் என புரிய, தனக்கு அத்தனை நேசத்தை வாரி வழங்கியவளுக்கு என்ன செய்திருக்கிறோம் என்ற எண்ணம் அவனை கூறு போட்டது. அவள் பேசிவிட்டால் பரவாயில்லை என்று தோன்றிய எண்ணம் எல்லாம் பறந்து, இன்னும் அவள் மனதில் என்னென்ன இருக்கிறதோ? அதை மொத்தமாக கொட்டி விட்டால், அவளுக்கு என்ன நியாயம் சொல்ல முடியும் என்று எண்ணம் வர, அவனால் தற்பொழுது செயல்படக்கூட முடியவில்லை. மனமும், உடலும் சோர அணிவகுத்து நிற்கின்ற வேலைகள் கூட மறந்து போனது.

3 Comments »

  1. மனசுல இருக்க எல்லாத்தையும் அவன் கிட்ட கொட்டிடு ரோகிணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: