Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 18

தன் கணவன் தன்னைத்தேடி வந்து இருக்கிறான் என்னும் அதிர்ச்சியைக் காட்டிலும், அங்கே அமர்ந்திருப்பவன் தன் கணவன் தான் என்னும் அதிர்விலிருந்து மீண்டு, அதனை நம்பவே ரோகிணிக்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டது. அவர்கள் வீட்டின் முன்புறம் திண்ணை, அதனை தாண்டி பெரியதாய் வாசல் என அமைந்திருப்பதால், வீடு தெருவிலிருந்து சற்று உள்ளே தள்ளி இருக்கும். ஆகவே ரோகிணி ஆட்டோவில் வந்து இறங்கியதை யாரும் கவனிக்கவில்லை.

சந்திரனின் நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்தது. ரோகிணியிடம் மன்னிப்பு கேட்கும் தகுதி கூட தனக்கில்லை என்று அனுதினமும் வருந்தியவன், அவளை பார்த்தே ஆக வேண்டும் என்ற மனதின் ஓலத்தை புறக்கணிக்க முடியாமல் கிளம்பி வந்தவன், இப்படி ரோகிணி வேலைக்கு செல்லும் அளவு துணிந்திருப்பாள் என்று துளியும் அனுமானிக்கவில்லை. அர்ஜுன் கூறியதன்படி, நூற்றில் ஒரு பங்காக தன் தவறுகளை மன்னித்து, தன் மனைவி தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாளா என்னும் ஏக்கத்தோடு இங்கே வர அவளின் முடிவை எண்ணி மொத்தமும் கலங்கி போனான். வேலைக்கு செல்லும் முடிவு என்றால், வாழ்வை தனியாக எதிர்கொள்ள துணிந்து விட்டாள் என்று தானே பொருள். கையில் கிடைத்த மாணிக்கத்தை தவற விட்டுவிட்டோமே என்னும் நினைவே அவனை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது. ஓடி, ஆடி, திரிந்து, களைத்து தாயின் மடி தேடி ஓடி வரும் குழந்தைக்கு அது கிடைக்காவிடில் எத்தனை சோர்வடையும், அதுபோன்றதொரு நிலையில் தான் இப்பொழுது சந்திரனும் இருந்தான். நிகழ்காலம் மறந்தது. சூழல் மறந்தது. எங்கிருக்கிறோம் என்று கூட மறந்து தனக்குள் மூழ்கி மேலும் மேலும் சோர்ந்தான்.

அவனுடையது பெரும் பிழை தான். ரோகிணிக்கு வெறுப்பை தரும், அவளுக்கு துளியும் பிரியமில்லாத, அவளை வருந்த செய்கின்றபடி பல செயல்களை செய்தவன் தான். ஆனால், அந்த செய்கைகளுக்கு இந்த தண்டனை சற்று அதிகம் அல்லவா? அவளைப் பொறுத்த வரையிலும் அவனது செய்கைகளை அவள் பிழை என்று எண்ணினால் அதை அவனிடம் கூறியிருக்க வேண்டும் அல்லவா? எதையுமே கூறாமல், மனதோடு மருகி, இப்படி ஒரு முடிவை தன்னிச்சையாக அவள் எப்படி எடுக்கலாம்? உறவு என்பது இருவரின் சம்மதம் எனில், பிரிவும் அவ்வாறு தானே இருக்க வேண்டும். அவள் வருவாள் என்று இவன் அங்கு காத்திருக்க, அவள் வரவே போவதில்லை, உன்னால் அவள் அடைந்த வேதனைகள் ஏராளம் என்று தானாக புரிந்து, தெரிந்து கொள்ளும் வரையிலும் அவனுக்கு அறிந்திருக்கவில்லையே! இது என்ன மாதிரியான தண்டனை? கோபம் கூட வந்தது. ஆனால், அதனையும் தாண்டி அவளை வருத்தி விட்டோமே என்னும் குற்றவுணர்வே அதிகமாக இருக்கிறது.

ரோகிணி வந்ததைகூட உணராது, சந்திரன் தன் சிந்தையில் மூழ்கி இருக்க, ரோகிணியின் பெரியம்மா வாசுகி அவளை கவனித்து விட்டார். “வா பாப்பா. எதுக்கு அழற? நல்லா இருக்கு போ. நீயும் இளைச்சு, அவரும் இளைச்சு அப்படி எதுக்கு இத்தனை துக்கத்தொட பிரிஞ்சு இருக்கீங்க. மாப்பிள்ளை முகத்தை பாக்க முடியல. வந்ததுல இருந்து எதும் சாப்பிட கூட இல்லை. அவ்வளா தூரத்துல இருந்து வந்திருக்காரு. சோர்வா இருக்கும். அவரை கவனிக்கிறத விட்டுட்டு அழுதுட்டு நிக்கற” அக்கறையும், அதட்டலுமான குரலில் அவர் கூற, விழிகளை அழுந்த துடத்தவள் கணவனிடம் ஓடினாள்.

“பெரிம்மா இவ்வளா பேசுங்க. வீட்டு சாவி உங்ககிட்டயும் ஒன்னு இருக்கு தானே, திறந்து விட மாட்டீங்களா?” என பேசியபடியே கணவனிடம் சென்றிருக்க, இவளது குரலில் சந்திரனின் கவனம் களைந்து, மெல்ல நிமிர்ந்து பார்த்தான். மனைவியை பார்த்தே சில மாதங்கள் ஆகியிருந்தது. ‘ரோ மிஸ் யூ அ லாட்’ என்று இறுகி அணைத்து கதற வேண்டும் போல ஒரு எண்ணம். கண்கள் வேறு இருக்கும் இடம் மறந்து கலங்கவே தொடங்கி விட்டது.

முன்பு சிககோவிற்கு ரோகிணி முதன்முறையாக சென்றபொழுது எதிர்பார்த்த அதே வார்த்தைகள். அப்பொழுது அவனுக்கு சொல்ல தோன்றவில்லை. இப்பொழுது சொல்லும் தைரியம் இல்லை. அவளுக்கு இல்லாத கொடுமைகளை செய்துவிட்டு இப்படி கூறினால், நாடாகமாகத் தான் தோன்றும் என்பது அவன் எண்ணம். அதோடு அவளிடம் அன்பை உணர்த்த கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இவனே அவள்மீது கொண்ட அன்பை உணராது இருந்தான். இப்பொழுது அவள் பிரிய விரும்பும் நேரத்தில் உன்மீது எல்லையற்ற அன்பு வைத்துள்ளேன் என்று காட்டுவது முட்டாள் தனமாக தோன்றியது. மனதோடு பிரிவு ஏக்கத்தை சுமந்து அதை விழிகளில் பிரதிபலித்து தன் மனையாளை பார்க்க, ரோகிணிக்கு அந்த நிமிடம் அவனைத்தவிர வேறு எதுவுமே நினைவில் இல்லை என்பதுதான் உண்மை.

தன் கோபம், பிரிந்து விடலாம் என எடுத்த முடிவு என அனைத்தையும் மறக்க செய்யும் அளவு அவனுடைய தோற்றமும், ஏக்கம் சுமந்த கலங்கிய விழிகளும் இருக்க அவளது உயிருக்குள் எங்கேயோ ஆழமாய் வலித்தது. அவன் பார்வையின் மொழி புரிந்ததோ இல்லையோ ஆனால் அவளுக்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு தான் வந்தது. கரகரப்பான குரலோடே, “என்னங்க ஏன் இங்க உக்காந்துட்டு… முதல்ல எழுந்து உள்ள வாங்க” என்று கூறியபடியே திண்ணையை தாண்டி வாசல் கதவை வேகவேகமாக திறந்தாள். கதவை திறந்து விட்டவள், சந்திரனுடைய பைகளை உள்ளே கொண்டு செல்ல முயல அவளது பெரியப்பா ஆறுமுகமோ, “மாப்பிள்ளைக்கு வேணுங்கறத பாரும்மா. நான் கொண்டு வரேன்” என்று விட்டார். சரியென தலையசைத்து உள்ளே சென்றவள், பம்பரமாய் சுழல தயாரானாள்.

வாசுகியே வெந்நீர் வைத்திருக்க, அதை அவன் குளிக்கும் பதத்திற்கு கலந்து வைத்தவள் மறக்காமல் குளியல் பொடியையும் எடுத்து வைத்தாள். அவனுக்கான உடை, துண்டு என அனைத்தையும் அவன் பையிலிருந்து எடுத்து குளியறையினுள்ளே வைத்துவிட்டு, அவனை குளியலறைக்கு அனுப்ப, ‘கோபத்தை மறைக்கும் அளவு நேசம்’ என்று சந்திரனுக்கும் புரியாமல் இல்லை. இது நிரந்தரமல்ல என்றும் தெளிவாக புரிந்திருந்ததால் அவனால் நடப்பதை சந்தோசமாக ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

கசந்த முறுவலுடன் குளித்து முடித்து வந்தவன், வெகுநேரம் வயிற்றை கவனியாததால் அதற்கு தனது பையில் இருந்த ரொட்டியை கொடுத்து அமைதிப் படுத்தி, பேசாமல் படுத்துக் கொண்டான்.

மனதோடு சுமந்து கொண்டிருக்கும் கவலையும், அரைகுறையாய் கவனித்த வயிறும் சந்திரனின் உறக்கத்திற்கு எதிராக செயல்பட, ஆழ்ந்து உறங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்தான். உறங்கினோமா, இல்லையா என சந்தேகம் கொள்ள வைக்கும் அரைகுறையான உறக்கத்தை அவனின் மனையாள் கலைத்தாள்.

“என்னங்க…” என்று எழுப்ப தொடங்கி, “சந்துரு…” என மாற்றியது அரைகுறை உறக்கத்தில் இருந்ததால் தெளிவாகவே புரிந்தது. எதுவும் பேசாமல் எழுந்து அமர்ந்தவனுக்கு கண்கள் எரிந்தது. முன்பானால், கண் எரிச்சல் என்றாலே, ரோகிணி காட்டன் துணியை கனமாக மடித்து, அந்த துணியால் வாயை மூடி காற்றை ஊதி, கண்களில் ஒத்தனம் கொடுப்பாள். அத்தனை இதமாகவும், குளுமையாகவும் இருக்கும். எதையுமே இழந்த பிறகு தான் அருமை தெரியுமாம். இந்த பாடத்தை ரோகிணியின் பிரிவினால் சந்திரன் பலமுறை படித்துவிட்டான்.

அவனையும் அறியாமல் பெருமூச்சு வெளியேற ரோகிணியை பார்த்தான். “அது… டின்னர்…” என ரோகிணி சொல்லவும் தான், இரவானதே அவனுக்கு புரிந்தது. “வரேன் ரோ…” என்றவன், திரும்பி செல்ல எத்தனித்தவளிடம், “உனக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படியே கூப்பிடு ரோ. எனக்காக மாத்திக்க வேண்டாம். சாரி” என்றும் சேர்த்து சொல்ல, ரோகிணி குழப்பமாக அவனை பார்த்தாள். ‘இனி எதற்கு இவரை கூப்பிடப் போகிறோம்? இவரோடு வாழவே தயாராய் இல்லை’ என்று இத்தனை நாளாய் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்களை எல்லாம் மறந்து, அவனிடம் சம்மதமாய் தலையசைத்து முன்னறை நடந்தாள்.

அதன்பிறகு வந்த இரு நாட்களுமே பெரும்பாலும் உறங்கியே கழித்தான். சிகாகோவில், இந்தியா வரவேண்டும் என்பதற்காக ஓய்வின்றி அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வந்ததால் இங்கு ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தான். இடையிடையே கைப்பேசி அழைப்புகள் மட்டும். இவன் இருப்பதால் ரோகிணி கடை வேலைக்கு செல்வதில்லை.

உண்மையில் அவனது மெலிந்த, வாடிய தோற்றத்தை பார்த்த பிறகு தான் கோபமாக இருக்கிறோம் என்பதும், அவன் வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறோம் என்பதும் ரோகிணிக்கு மறந்தே போயிருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்கும் என்னும்படியான தற்காலிக மறைவு தான். அவளது மறதியை மீண்டும் தெளிவு படுத்தும் சம்பவமும் அன்றே நடந்தேறியது.

சந்திரன் வந்த இரண்டு தினங்கள் முடிந்திருந்த பொழுதிலும், பெரிதாக இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தைகளும் இல்லை. அன்றைய இரவு ரோகிணி தொலைக்காட்சியில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, சந்திரனும் தனது மடிக்கணினியை ஆராய்ந்தபடி அங்கே தான் அமர்ந்திருந்தான்.

அவனது கைப்பேசி அழைக்க அதில் ஒளிர்ந்த பெற்றவளின் பெயரே போதுமாய் இருந்தது அவனது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க. அழைப்பை ஏற்றவன் உடனடியாக கைப்பேசியின் சத்த அளவை குறைத்தான். அவர்களுடைய பேச்சு எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் என்பது அவன் அறிந்தது தானே, அது ரோகிணிக்கு கேட்க வேண்டாம் என்று நினைத்து அவ்வாறு செய்தான்.

மறுமுனையில் இருந்த சுசீலாவோ எந்த முன்னுரையும் இல்லாமல், “என்னடா இந்தியா வந்திருக்க போல. ஏதோ மூணாவது மனுசங்க மாதிரி, யாரோ சொல்லி தெரிய வேண்டி இருக்கு?” என ஏளனமாக கேட்க, இவன் மௌனமாகவே இருந்தான். அதில் மேலும் எரிச்சலாகி, “எங்கடா இருக்க?” என சுசீலா மீண்டும் கத்த,

“ஏன் அந்த யாரோ… உங்ககிட்ட நான் எங்க இருக்கேன்னும் சேத்து சொல்லலையா?” என்றான் ஏக ஏளனமாக. “நல்லா தான்டா மயக்கி வெச்சிருக்கா உன் பொண்டாட்டி. அதுதான் அவ முந்தானையை புடுச்சுட்டே சுத்தற…” என தனது கீழ்த்தரமான பேச்சுகளால் நிறுத்தாமல் பேசி, சந்திரன் அடக்கி வைத்திருக்கும் கோபத்தை அவர் எழுப்பிக் கொண்டிருந்தார். எங்கே ரோகிணியின் முன்பு எதுவும் அவர்களை திட்டி விடுவோமோ என்று எண்ணியவன் கோபம் எல்லையை கடக்கும்முன் அழைப்பை துண்டித்தான். ஏக வசனத்தில் திட்டுவதும், ஏளனமாக பெற்றவர்களிடம் பேசுவதும் அவனுக்கு புதிது இல்லை தான். ஆனால், ரோகிணியின் முன்பு அதை செய்ய அவனுக்கு பிடிக்கவில்லை. அவளுக்கு பிடிக்காது என்று அனுமானித்திருந்தான்.

விதைத்ததை தானே அறுவடை செய்ய முடியும். மாணிக்கவேலும், சுசீலாவும் இப்பொழுது அப்படித்தான் அனுபவிக்கிறார்கள். என்னவோ நல்ல நேரம் அத்தனை கோபப்படுத்தியும் மகன் திட்டாமல் வைத்து விட்டானே என்று விடாமல் சுசீலா மீண்டும் மீண்டும் சந்திரனை அழைக்க, அவன் கோப மிகுதியில் கைப்பேசியை தூக்கி எறிந்தான். கீழே விழுந்த கைப்பேசி சிதறியது.

ரோகிணி சந்திரனின் கண்மண் தெரியாத கோபத்தை பார்த்து திகைத்து விழித்தாள். அவளுக்கு அவனுடைய கோபம் மிகவும் புதிதாக இருந்தது. இந்த அளவு அவன் கோபம் கொள்ள மாட்டான், இதற்கு முன்பு இப்படி கோபம் கொண்டும் அவள் பார்த்ததில்லை. முகம் இறுகி, சிவந்த விழிகளோடு இருந்தவனை பார்க்கவே அவளுக்கு வித்தியாசமாய் இருந்தது.

விரைந்து சென்று கைப்பேசியின் பாகங்களை பொருத்தியவள், அது வேலை செய்கிறதா என்று சரிபார்க்க, நல்லவேளையாக அது வேலை செய்தது. மீண்டும் கணவனை பார்க்க, கோபமெல்லாம் எங்கே சென்றது என்று சந்தேகிக்கும் வண்ணம் விழிகளை மூடி சோர்வாக அமர்ந்திருந்தான். வாழ்வில் எந்த பிடிப்பும் இல்லாதவர்கள் போன்ற தோற்றத்தோடு அவன் அமர்ந்திருக்க, அவளுக்கு அவனுடைய வேதனையை காண முடியவில்லை. இரண்டு நாட்களாக விலகி இருக்கவில்லை என்றாலும், அவள் அவனை நெருங்கவும் இல்லை. இன்று ஏனோ அவனை காணவே பரிதாபமாக இருக்க, அவனருகே அமர்ந்து ஆறுதலாய் அவனுடைய வலக்கையை வருடினாள். மெல்ல நிமிர்ந்து பார்த்தவனின், முகத்தில் இயலாமை, தவிப்பு, விரக்தி என அத்தனையும் சேர்ந்து அதீத சோர்வை கொடுத்திருக்க பார்க்கவே என்னவோ போல் இருந்தது.

சந்திரனுக்கும் அத்தனை வேதனையாக இருந்தது. தனக்கு மட்டும் ஏன் இதுபோன்ற உறவுகள்? நல்லபடியாக அமைந்த மனைவி என்ற பந்தமும் தொடராதோ என்னும் அச்சம், பெற்றவர்களாய் வாய்த்தவர்களும் பாசம் என்றால் எத்தனை கோடி என்னும் ரகம். என்ன செய்ய? என்ன வாழ்க்கை? இனி என்ன ஆகும்? என்று விரக்தியாகவும், கலக்கமாகவும் இருந்தது. தன்னைக்கென்று யாரும் இல்லை என்பது போன்ற அச்சவுணர்வு.

அவனுடைய முகத்தில் பிரதிபலித்த சோர்வை காண சகியாமல், ரோகிணி அவனை ஆறுதலாய் அணைத்துக் கொண்டாள். சந்திரனுக்கும் மனைவியின் அருகாமை மிகமிக அவசியமாய் இருந்தது. என்ன வரம் வாங்கி வந்தார்களோ ஆறுதல் கூட அதிக நேரங்கள் நீடிப்பதில்லை அவர்களுக்கு.

10 Comments »

  1. Romba arumaiya eluthiringa Venba. But romba kuraiva iruku update. varthaikal korkum vitham miga arumai. I read your other novels in MM site. I like this story and way of writing is really good. Thappunu theriyama seiyara thappukum , therinju seiyra thappukum niraya vithiyasam iruku

  2. பாவம் பா… சீக்கிரம் சேர்த்து வச்சிருங்க

  3. ஒரு ஆணை இப்படி கற்பனை பண்ண கூட முடியவில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: