Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷின் “நீ இன்று நானாக!” – 03

அத்தியாயம் – 03

 

“கடவுளாய் இருக்கும் வரை பிரச்சனை இல்லை, நாளையே இந்த சக்திகளையெல்லாம் இழந்த பின் மீண்டும் இதே நிலையை தானே  சந்திக்க வேண்டும்,  என் நிலையை மாற்ற.. எனக்கு தேவையானது பணம் அளவில்லா பணம் வேண்டும்” என்று மனதிற்குள்   எண்ணிக்கொண்டவன்,   “எனக்கு நிறைய  பணம்   வேண்டும்” என்று ஒரு விரல்  சுண்டிட, எதுவும் நிகழாமலிருந்தது,     “கடவுளாய் இருந்தால் கூட பணத்தை கண்ணில் பார்க்க முடியாது போல!” என்று   அலுத்துக்கொண்டான்,  கிருபா  கடவுள்.

 

வீட்டின் கதவை திறந்த  பார்க்க, அவன் தங்கியிருந்த அறை  முழுவதும் பணம் நிறைந்து இறைந்து கிடந்தது,  வாய் பிளந்து நின்றவன்  “நாளைக்கு முதல் வேலையா? இந்த வீட்டு வாடகை  பணத்தை கொடுக்க வேண்டும்,   அதற்கு பிறகு!” என்று அடுத்தடுத்த    திட்டம் போட துவங்கினான்.

 

“சரி நீ உன் வேலையை கவனி, நான்  எனக்கு  ஏதாவது வேலை கிடைக்கின்றதா என்று பார்க்கின்றேன், நாளைய  என் பிழைப்பு  ஓட வேண்டுமே!” என்று கிளம்பியவரை  தடுத்து நிறுத்தினான் கிருபா.

 

“இந்த சக்தியை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்று தெரியாது!”,  பேசாமல் இந்த முன்னாள் இறைவனை கூடவே வைத்துக்கொண்டால் என்ன என்று முடிவு செய்தவனாக,  “எப்படியும் நீ   வெளியில்  வேலைதேடி அலையவேண்டும், அது எவ்வளவு கொடுமை என்று அனுபவித்த எனக்குத்தான் தெரியும், இங்கு பலவருசமா வேலைதேடி அழைகின்றவனுக்கே  எந்த வேலையும்  கிடைக்காமல் திரிகின்றான், இதில் நீ தேடி சென்றதும் வேலையைப் தூக்கி உன் கையில் கொடுத்துவிட போகின்றார்களா என்ன?,    என்னை தேடி வந்து வாய்ப்பு தந்தால், நானும் உனக்கு ஒரு வாய்ப்பு தருகின்றேன், இன்று ஒருநாள் நீ என் அசிஸ்டெண்டாக வேலை பார்த்துக்கொள்!,   சம்பளமாக இதோ இதை வைத்துக்கொள்” என்று அறையில் நிறைந்து   கிடந்த   பணத்தை ஓரு கைகளால்  அள்ளி கொடுத்தான்  கிருபா.

 

“அள்ள அள்ள குறையாத  பணம் உன்னிடமிருந்தும், ஒரு கையில் மட்டும் அள்ளி கொடுக்கும் உன் கருணை உள்ளதை கண்டு வியந்து போகின்றேன், இதையே நான் கடவுளாயிருந்து செய்த போது, என்னை கஞ்சன் என்றும், பராபட்சம் பார்த்து  செல்வங்களை அள்ளிக்கொடுப்பதாக சொல்வார்கள்!,  நன்றி கிருபா” என்று  அவன் கொடுத்ததை  வாங்கி கொண்டார், நேற்றைய இறைவன்.   “என்னவோ பொடி வைத்து பேசுவது போலயிருக்கிறது,  ஒரு நாள் வேலைக்கு மொத்த பணத்தையுமா?” என்று கிருபா   ஒற்றை புருவம் உயர்த்தி வினவிட, “நான் மொத்தமாய் கேட்கவில்லை, என் முந்தைய நிலையை புலம்பினேன்!” என்றார் அவர்.

 

கிருபா புரியாமல் சந்தேகம் விலகாமல் பார்க்க, “அது ஒன்றுமில்லை  கிருபா” என்று விளக்கம் தர முனைந்தார்.

 

“என்ன என் பெயரை சொல்லி அழைக்கின்றாய், நான் தான்  கடவுள்  மறந்துவிட்டதா!”, என்று வினவினான், கிருபா. “இன்று ஒருநாள் மட்டும் தான் என்று உனக்கு மறந்துவிட்டாதா!” என்றார் அவர்.

 

“ஈ…” என்று அசடு வழிந்த படி சிரித்து விட்டு,  “சரி நீங்கள்   எதையோ சொல்ல வந்தீர்கள் நான் வேறு இடையிடையே பேசிக்கொண்டு இருகின்றேன்”  என்று நினைவு படுத்தினான்  கிருபா.      “ நான் செய்யவிருக்கும் வேலையை கணக்கிட்டு  உங்களிடமிருந்த   பணத்தில் சிறு தொகை கொடுத்தீர்கள்! அதையே  தான் நானும்    மனிதர்களின் முன் ஜென்ம  பாவ,  புண்ணியங்கள் கணக்கிட்டே  அவர்களுக்கு தகுந்த ஏற்ற, தாழ்வுகளை  தருகின்றேன்!,  நீங்கள் செய்யும் போது   நியாயமான ஊதியம்,  நான் செய்த போது அநியாயமான செயல்!” என்று சுட்டி காட்டி விட்டு,   “என் வேலைகள் என்னவென்று  நீ இன்னும் சொல்லவே இல்லையே!”  என்றார்.

 

அவர் சொன்னதை ஒரு நொடி யோசித்து கொண்டு  இருந்த கிருபா,  “பெரிதாக ஒன்றுமில்லை,   என்னுடனே இருக்க வேண்டும் அவ்வளவு தான்!”, என்று பணியின் தன்மையை கூறிவிட்டு,    அறையை பூட்டி வெளியே  திரும்பியவன், ஏதோ நினைவுவந்தவனாக “நாளைக்கு பல வேலையிருக்கும் அந்த நேரம் போய் அந்த சிடுமூஞ்சி  வீட்டுக்காரர் முகத்தில் விழிக்கவேண்டுமா?  இரண்டு மாதவாடகைக்கு என்ன பேச்சு பேசினார், இப்போதே அந்த பணத்தை அவர் முகத்தில் விசிறியடித்துவிட்டு வருகின்றேன்” என்று    கைகளில் மீண்டும் கொஞ்சம் பணத்தை அள்ளிக்கொண்டவன்,  வேகமாய்  அறையை பூட்டிவிட்டு கிளம்பி சென்றான்.

 

“வணக்கம் சார்.. இன்று வாடகை விசயமாக பேசியிருந்தீர்களே!,  இதோ இரண்டு மாதவாடகை பணம் இதில் இன்னும்  ஒருவருடத்திற்கான வாடகை பணம் உள்ளது!” என்று  பணத்தை அவர் முன் நீட்டினான், கிருபா.

 

“என்ன கிருபா,  இன்னைக்கு என்றுமில்லாமல்  உன் முகத்தில் புதிதாய் ஒரு  ஓளி வீசுகின்றது, வேலை ஏதும் கிடைத்துவிட்டதா?, இல்லை  என் வீட்டு கூரை ஏதும்   உடைத்துக்கொண்டு, பணம் மழை பொழிந்ததா என்ன?, இவ்வளவு பணத்தையும் மொத்தமாய் தருகின்றாய்!”,  என்று  ஆச்சர்யமாய் வினவியபடி,    கிருபாகரண் பின் இருந்தவரை  கவனித்து, “யார் இந்த பையன் புதிதாக இருக்கின்றான், வாடகையை  கொடுக்க முடியவில்லை என்று அறையில் உன்னுடன்  தங்கவைத்து கொண்டாயா?”,  என்று  ஏளனமாய் சிரித்தப்படி வினவினார் வீட்டிக்காரர்.

 

“அது உங்களுக்கு தேவையில்லாத  விஷயம் சார்,  உங்களுக்கு வேண்டியது பணம் கிடைத்துவிட்டது தானே!, பிறகு என்ன வேண்டாத கேள்வி?” என்று பேச்சுவார்த்தையை முடித்திட நினைத்தான் கிருபா.  “நீ இருப்பது என் வீடு, யார் வருகின்றார்கள், போகின்றார்கள் என்று நான் கேட்ககூடாதா என்ன?, அது சரி சம்பாதித்து அம்மாவை   உட்கார வைத்து சாப்பாடு போடவேண்டிய  வயதில், இன்னும் அவர்களிடம் பணம் வாங்கி நாட்களை கடத்தும் உன்னிடம் போய் கேட்டேன் பார்,  என்னை சொல்ல வேண்டும்!”.. என்று கோபமாய் முணுமுணுத்தார்..

 

“சார், நான்,  அட்சயன் கிருபாவின் நண்பன் தான், நாளை ஒரு நாள் மட்டும் தான் இங்கு இருப்பேன் என் வேலை முடிந்ததும் கிளம்பிவிடுவேன்” என்று அவரை  சமாதான படுத்த முயன்றான் அட்சயன்.

 

“நீ எவ்வளவு தன்மையாய் பேசுகின்றாய்!, இவனும்  இருக்கின்றானே  புதுசா பணத்தை பார்த்ததும் இல்லாத ஆட்டம் ஆடுகின்றான்!”,  என்றார் வீட்டுக்காரர்.  “ஆமாம் நான் ஆடுகின்றேன்! இவர் பாடுகின்றார்!   நீ வாப்பா கிழடு கட்டைகளிடம் நமக்கு என்ன பேச்சை! நமக்கே தலைக்குமேல் ஆயிரத்தெட்டு வேலை கிடைக்கின்றது” என்று வெளியேறிச்சென்றான்  கிருபா.

 

“அது என்ன  அட்சயன் நான் கேட்டபோது எனக்கு இனம் மதம் குலம் எதுவும் இல்லை என்றாய்! பேர் மட்டும் எங்கிருந்து முளைத்தது?” என்றான் கிருபா. “ஏனப்பா அதில் உனக்கு என்ன குறை! ஆளாளுக்கு அவரவர் விருப்பப்பட்ட  பெயரை எனக்கு  வைக்கின்றனர்,  எனக்கென்று ஒரு பெயர் நானே தேர்ந்தெடுத்தது அவ்வளவு பெரிய குற்றமா?” என்றான் அட்சயன்.

 

“குற்றமில்லை சாமி குற்றமேயில்லை!, அதென்ன  அத்தனை பெயர் இருக்கும்போது அட்சயன் என் பெயரில் என்ன இருக்கிறது?” என்று ஆர்வமாய் வினவினான் கிருபா.

 

“ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரண காரியம் உண்டு!, அட்சயன் பெயரின் அர்த்தம்  எல்லோருக்கும் அருள்பவன் என்று பொருள், நானும் யாருக்கும் பாரபட்சம் பார்த்து கருணை காட்டுவது இல்லையே! அதனால் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினேன்! என்றான் அட்சயன்.

 

“யார் நீ பாரபட்சம் பார்ப்பதில்லை! இந்த கதையை நான் நம்ப வேண்டும்,   நீ படைத்த மனிதர்கள் ஏற்றத்தாழ்வு இல்லாமல் தான் எல்லோரையும் ஒரே நிலையில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாயோ! இருப்பவன் இன்னும் சேர்த்துக்கொண்டே போகிறான் இல்லாதவன் வறுமையில் செத்துக்கொண்டே போகிறான்!” என்று விரக்தியாய் சிரித்தான் கிருபா.

 

“நான் எங்கப்பா பாரபட்சம் பார்த்தேன்! எல்லா மனிதர்களுக்கும் ஒரே வானம் ஒரே பூமி சுவாசிக்க காற்று, குடிக்க நீர் என்று எல்லோருக்கும்  ஒன்றாய் தானே தருகின்றேன்,  இதில் நீ சொன்ன பாரபட்சம் எங்கிருந்து வந்தது,  நான் படைத்த மனிதர்களும் மிருகங்களும் வாழ ஏதுவான சூழ்நிலை ஒரேபோல தான் அமைத்துக்கொடுத்து உள்ளேன்!, ஆனால் நான் படைத்த மனிதர்கள் நீங்கள் உருவாக்கிய பணம் தான் உங்களுக்குள் பாரபட்சத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றார் அட்சயன்.

 

“நீ சொல்வதும் உண்மைதான் பணம் இருக்கிறவன் தான் இங்கு ராஜா மற்றவன் எல்லாம் கூஜா தான்!”  என்று கிருபா முன் நடக்க அவனைப் பின்தொடர்ந்து வந்த அட்சயன் எங்கு செல்கின்றோம் என்று வினவினார்.

 

“என் அம்மாவை பார்க்க” என்று வழியில் சென்று கொண்டிருந்த வாகனத்தை நிறுத்த முயன்றான் கிருபா.  “நீ இன்று கடவுள் உனக்கு  வாகனம் அவசியம் இல்லை நீ எங்கு செல்ல வேண்டும் என்று நினைத்து கண்மூடித் திறந்தால் நீ அங்கு இருப்பாய்!”  என்றான்  அட்சயன்.

 

“ஆமாம்ல இன்று நான் தானே கடவுள் மறந்துவிட்டேன் பார், சரியான நேரத்தில் நியாபகப்படுத்தினாய்  இதற்கு தான் உன்னை கூடவே வைத்திருகின்றேன், நான் மறக்கும் போது எனக்கு நியாபகப்படுத்து” என்று கட்டளை பிறப்பித்தான் கிருபா.  அவரின் சொல்படி கண்மூடி நின்றவன் மறுநொடி தன் வீட்டின் முன் நின்றான்.  “என்ன கிருபா ஏதும் பிரச்சனையா திடீரென்று வந்து  இருக்கின்றாய்?” பணம் ஏதும் அவசரமாய் தேவைப்படுகின்றதா?” என்று மகனை பார்த்த மகிழ்ச்சியும் எதற்காக இந்த நேரம் வந்தான் என்ற கவலையும்  ஒன்றாய் கலந்த குரலில் வினவினார் கிருபாவின் தாய் கஸ்தூரி.

 

 

“ஒன்னும் பிரச்சனை இல்லை  அம்மா,  உன்னை பார்க்க வேண்டுமென்று தோன்றியது உடனே கிளம்பி வந்து விட்டேன்” என்றான் கிருபா.  “இது யாரு புதுசா இருக்கு!” என்று அருகில் இருந்த அட்சயனை  பார்த்து கஸ்தூரி வினவ.  “இது என் ஃப்ரண்டு,  உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் இவனுக்கு உன்னை நன்றாக தெரியும்!” என்றபடி வீட்டினுள் சென்றான் கிருபா.

 

 

 

 

3 Comments »

  1. கடவுள் எப்போதும் அவர் கடமையை செய்கிறார் ஆனால் நாம் நமக்கு அந்த சூழலில் என்ன வேண்டுமோ அது உடனே நடைபெறவேண்டும் என நினைக்கிறோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: