Advertisements
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 17

இத்தனை தினங்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கைப்பேசி அழைப்பு திடீரென நிற்கும் என்று ரோகிணி நினைத்ததே இல்லை. அவனோடு வார்த்தையாடிய மறுநாள், வழக்கம்போல அவன் அழைப்பான் என்றுதான் நினைத்தாள். நினைப்பு என்பதை விடவும் ஒரு வகையான காத்திருப்பு, எதிர்பார்ப்பு என்று சொல்லலாம். ஆனால், அவன் அழைக்கவேயில்லை. அது மெல்லிய ஏமாற்றத்தையும் தந்ததுதான்.

‘நான் சிகாகோ வரமாட்டேன் என்று சொன்ன கோபமோ?’ என்று தோன்றியபோதும், ‘ஆமா இவருக்கு கோபம் வந்தா நான் என்ன பண்ண முடியும்? நான் அவர்கிட்ட வரனும்ன்னு நினைக்கிற அவரே சமாதானம் பண்ண நினைக்காதப்ப, நான் மட்டும் எதுக்கு அவருக்கு திருப்பி கூப்பிட்டு சாமதானம் பேசணும்?’ என்ற வீம்பு வந்து அவளுள் அமர்ந்து கொண்டது.

அதோடு, ‘அவன் ஏன் அழைக்கவில்லை, அதற்குள் என் முக்கியத்துவம் குறைந்து விட்டதா? இல்லை மறந்துவிட்டாரா? இல்லை அவர் உடல்நிலைக்கு எதுவுமா?’ என மனம் வேறு தவிக்கத்தான் செய்தது. பயனற்ற தவிப்பு என்று புரியாமல் இல்லை. நிரந்தரமாய் பிரிய நினைப்பவளுக்கு இந்த எண்ணங்கள் இருக்கவே கூடாது என்று புரிய, மிகவும் கடினப்பட்டு மனதிற்கு கடிவாளமிட்டு இருக்கிறாள். என்னதான் இவள் அழைக்காமல் இருக்க மனதிற்கு தடையிட்டுக் கொண்டாலும், அவன் அழைக்க மாட்டானா என்ற ஏக்கத்திற்கு தடையிட அவளால் முடியவில்லை. நாள்தோறும் இரவில் அவளும் அறியாமல், அவளையும் மீறி அவளுடைய மனம் கைப்பேசியை வலம் வரத்தான் செய்தது. நேசம் ஒரு விசித்திர வியாதி தான். இவள் நேசம் ஏமாற்றத்தையும், துரோகத்தையும் பரிசாக தந்த பின்பும், அதிலிருந்து பின்வாங்குவது அத்தனை எளிதாக இருக்கவில்லை.

பகல் நேரத்தில் தனிமை பெரும் கொடுமையாய் இருக்க, கார்த்திகா தன் தந்தையின் பெயிண்டிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு உதவிக்கு செல்வதால், இவளும் அவளுடன் இணைந்து கொள்ளத் தொடங்கி விட்டாள். கார்த்திகா சில மணி நேரங்கள் மட்டுமே வந்து செல்கிறாள் ஆனால், இவள் நாள்முழுவதுமாக அங்கேயே இருந்துவிட்டு வருகிறாள்.

கோமதியும், கார்த்திகாவும் இவளது செய்கைகள் எதுவும் புரியாமல் தவிக்கத் தொடங்கி விட்டனர். என்னதான் தாயை இழந்த சோகம் என்றாலும் இப்படியா? கணவனிடம் செல்லாமல், பிறந்த வீடே கதியென. அதுவும் தனியாக இருப்பதற்கே பயந்து சாபவள், இப்பொழுது என்ன வற்புறுத்தினாலும் வரமறுத்து, யாரையும் உடனும் இருக்க வேண்டாம் என்று சொல்லி, தன்னந்தனியாக இருக்கிறாளே! அவளிடம் நேரடியாக எதையும் கேட்க முடியாதபடி அவள் தோற்றம் வேறு இருந்தது. அவளின் சோர்ந்த தோற்றத்தை பார்த்தவர்களுக்கு… தாயின் நினைவில் வாடுகிறாள் என்றுதான் பட்டதே அன்றி, கணவனோடு மனஸ்தாபம் என்றெல்லாம் கிஞ்சித்தும் யோசனை வந்ததில்லை. இப்போதைய கவலை கூட, இவள் இப்படி செய்தால் சந்திரன் தவறாக எடுத்துக் கொள்ளப்போகிறான் என்பதாகத்தான்.

“என்னடி கோமாதா இவ தினமும் கடைக்கு வரேன்னு சொல்லறா?” என கார்த்திகா கைப்பேசி வாயிலாக கோமதியிடம் புலம்ப,

“ஆமா இப்போ கேளு. அவ முதல் தடவை வரவான்னு கேட்டப்ப என்கிட்ட சொன்னயா?” என கோமதி சற்று கடுப்பாய் கேட்டாள்.

“ஏய் இந்த ராகி வேலைக்கு வருவான்னு நான் என்ன கனவா கண்டேன். கடைக்கு வரேன்னு சொன்னா… சரி என்னை பாக்க தான் வரா போல அப்படின்னு வர சொன்னா, நேரா அப்பாகிட்ட வந்து, ‘வீட்ல தனியா இருக்க கஷ்டமா இருக்குப்பா. எங்க வேலைக்கு போகன்னு தெரியலை. மறுபடியும் ஊருக்கு போற வரைக்கும் இங்க வரட்டுமா. அவரு எதுவும் சொல்ல மாட்டாரு…’ அப்படி இப்படின்னு ஏதேதோ பேசி கவுத்துட்டாடி” என பாவமாய் கார்த்திகா சொல்ல,

“குருத்து நீயெல்லாம்…” என திட்டுவதற்கு வார்த்தையை தேடிய கோமதி, எதுவும் வராமல் திணற, அவளது திணறலில் கார்த்திகா வாய்விட்டே சிரித்தாள்.

“கோமாதா உனக்கு தான் திட்ட வரலைல்ல. விட்டுடு” என்று கார்த்திகா மலர்ந்து சிரிக்க, கோமதிக்கு ரோஷம் வந்து, அவளுக்கு தெரிந்தமட்டிலும் திட்டி தீர்த்து விட்டாள்.

ரோகிணியை எப்படி இயல்புக்கு மீட்டு, அவளது வாழ்வை மீண்டும் மலர செய்வது என்னும் கவலை இருவருக்குள்ளும் இருக்க, அதுகுறித்து என்ன பேசியும் ஒரு தெளிவு வராமல் தவித்தனர்.

கார்த்திகா கோமதியிடம் கைப்பேசியில் பேசுவதற்காக மருந்து கடை வைத்திருக்கும் வளாக பகுதியின் ஒரு ஓரத்தில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தாள். கடையின் உள்ளே ரோகிணியும் இருப்பதால் இங்கு நின்று பேசிவிட்டு மீண்டும் கடைக்கு திரும்பாலானாள். அவள் திரும்பும்பொழுது ரோகிணியின் கைப்பேசி அடித்துக் கொண்டிருந்தது. அதில் கவனம் செலுத்தாமல், சுத்தம் செய்யும் வேலையில் ரோகிணி தன்னை மூழ்கடித்திருந்தாள். ரோகிணியின் கவனம் இங்கு இல்லை என்பது அவளது தோற்றத்திலேயே புரிந்தது.

‘இப்ப எந்த கப்பல் கவுந்துடுச்சுன்னு இப்படி இருக்கா? அம்மா இல்லைதான், அதுக்காக இவளை அம்போன்னு விட்டுட்டா போயிட்டாங்க. இவ இன்னும் எவ்வளவு நாள் இப்படி இருப்பாளோ? அண்ணா பாவம் இத்தனை மாசமா தனியா என்ன பண்ணறாங்களோ’ என முணுமுணுத்துவிட்டு யார் அழைக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கைப்பேசியை எடுத்தாள்.

அழைத்திருந்தது ரோகிணியின் பெரியம்மா தான். ரோகிணியின் வீட்டருகே தான் இவர்களுடைய வீடும். அவரது பெரியப்பாவிற்கு சமீபத்தில் ரிடையர்மெண்ட் கிடைத்திருக்க சொந்த ஊருக்கே திரும்பியிருந்தனர். கார்த்திகாவுக்கும் அவரை நன்கு தெரியுமாதலால் கைப்பேசி அழைப்பை அவளே எடுத்து விட்டாள். அறிமுகப்படலம் முடித்துவிட்டு நலம் விசாரிக்கும் படலத்தை தொடங்க இருந்தவளிடம், “மாப்பிள்ளை வந்திருக்காரு கார்த்தி. கொஞ்சம் அவளை வர சொல்லேன். பாக்கவே இளச்சு, வாடி சோந்து தெரியராரு. நான் கூட ‘வேலைக்கு போயிருக்கா, போன் போடறேன். இங்க வந்து இருங்கன்னு’ சொல்லி பாத்துட்டேன். வராம வாசல் திண்ணைலையே உக்காந்துட்டு இருக்காரு. அவளை கொஞ்சம் அனுப்பி விடேன். வேலைக்கு போக வேணாம்ன்னு சொன்னாலும் கேக்க மாட்டீங்கறா. புருஷன் கூட போன்னு சொன்னாலும் மாட்டேங்கறா. இவ அம்மா இருந்தா இப்படி பண்ணுவாளா?” என சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடித்ததும் புலம்ப தொடங்கிவிட்டார்.

அவருடைய கவலை புரிந்தாலும், தற்பொழுது பேசுவதற்கு நேரம் இல்லை என்பதை உணர்ந்த காரத்திகாவோ, “அம்மா அங்க பாருங்க. அவருக்கு குடிக்க எதுவும் கொடுங்க. அப்பாவை அவர்கிட்ட பேசிட்டு இருக்க சொல்லுங்க. நான் இவளை உடனே அனுப்பி விடறேன்” என்று கைப்பேசியை வைத்தாள். அவரிடம் தெளிவாக பேசிவிட்டாலும் அவளுக்கு அதீத குழப்பம். பின்னே சந்திரன் என்ன அடுத்த ஊரிலிருந்தா சொல்லாமல் வந்திருக்கிறான். அத்தனை தொலைவில் இருந்து வருபவர் ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என மனம் குழம்பினாலும் இவள் மீதும் கோபம் வந்தது.

சோகம் இருப்பது தான். அதற்காக நான்கு மாதங்கள் கணவனை தனியாக விட்டுவிட்டு இவளும் தனியாக வந்து, எதற்கு இந்த வீண் வேலை என்று கார்த்திகாவிற்கு எரிச்சலாய் இருந்தது. ரோகிணியிடம் எதுவும் பேசாமல் அவளுக்கு தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்து கடைக்கு வர சொன்னாள்.

அவர் வருகிறேன் என்றதும், “ராகி வீட்டுக்கு கிளம்பு” என சற்று அழுத்தத்தோடு கூற, கார்த்திகாவின் குரலில் இருந்த அழுத்தத்தில்தான் ரோகிணியின் மாயவலை அறுந்தது. எப்பொழுதும், எந்த வேலை செய்யும் போதும் எங்கேயோ நிலைகுத்திவிட்ட பார்வைதான். எதிர்காலம் குறித்த பயம் இருக்கும் பொழுது, அவளால் இயல்பாக நிகழ்காலத்தை கடக்க முடியவில்லை.

“என்னடி என்னை எதுக்கு போ சொல்லற, நீ கிளம்பு. நான் பாத்துக்க மாட்டேனா?” என பழைய பல்லவியை ரோகிணி பாடினாள். கார்த்திகாவிற்கு ஒன்பது மாத கைக்குழந்தை இருக்கிறது. அவளுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவேதான் கடைக்கு வந்து, சிறிது நேரம் உதவிக்கு இருந்துவிட்டு செல்கிறாள். சில மணி நேரங்கள் தான் என்றாலும் அவளுடைய தந்தைக்கு அது பெரிய உதவி. கார்த்திகாவின் வீடும் அருகேயே இருப்பதால், இதில் அவளுக்கு அதிக சிரமம் இல்லை. அதிலும் இந்த ஒரு மாதமாக ரோகிணியும் வரவும், கார்த்திகாவுக்கும், அவளுடைய தந்தைக்கும் பெரிய உதவியாக இருந்தது.

ரோகிணி வந்ததிலிருந்தே கார்த்திகாவிடம், “நீ கடைக்கு வர வேணாம் நான் வரேன்ல” என எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டாள். ஆனால், காரத்திகாவோ, “இங்கேயே டேரா போட போறயா? அண்ணாகிட்ட கிளம்புற வழியை பாரு” என விடாமல் அறிவுரை கூறி, திட்டி, கெஞ்சி,கொஞ்சி வருகிறாள். இதுவரை கார்த்திகாவின் கேள்விகளுக்கு பதிலை தராமல், அவள் சொல்வதற்கு ஒத்துக்கொள்ளாமல் வலம் வருகிறாள் இந்த அழுத்தக்காரி.

“ஏய் ஆட்டோக்கு சொல்லிட்டேன். உங்க வீட்டுக்கு போ. பெரியம்மா வர சொன்னாங்க. முதல்ல பேசுனப்பவே பதட்டமா பேசுனாங்க. அதுனால மறுபடியும் போன் போட்டுடாத. உனக்கு தான் தெரியுமே, அவங்க புலம்ப தொடங்குனா நிறுத்த மாட்டாங்க. அங்க என்ன பிரச்சனையோ. சீக்கிரம் கிளம்பு” என தன் சாமர்த்தியம் மொத்தத்தையும் திரட்டி ரோகிணியை கிளப்பி விட்டிருந்தாள் கார்த்திகா.

பின்னே, கார்த்திகாவின் மூளை, சந்திரன் அவளுக்கு சர்ப்ரைஸ் தருவதற்குத் தான் சொல்லாமல் கிளம்பி வந்திருக்கிறான் என்றல்லவா கணித்திருந்தது. ஆகவே, ரோகிணியிடம் எதுவும் சொல்லாமல் கிளப்பி விட்டிருந்தாள். பாவம் அவள் எப்படி அறிவாள், இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தைகளே சில வாரங்களாக இல்லை என்று.

ஆட்டோவில் பயணித்த ரோகிணிக்கு மூளை மரத்து போனது. ‘என்ன விஷயமா இருக்கும்? இந்த பெரிம்மாகிட்ட கேட்டா, காது வலிக்கிற அளவு பேசும். சரி அங்க போயே பாத்துப்போம்’ என குழம்பியவளின் மனம், ‘சாமி யாருக்கும் எதுவும் ஆகியிருக்க கூடாது’ என்ற கோரிக்கையை கடவுளிடம் அவசரமாக வைத்தது.

இல்லம் சென்று சேர்ந்தவள் நிச்சயம் அங்கே கணவனை எதிர்பார்க்கவில்லை. அவன் அருகில் இருந்த இரண்டு பெரிய பெட்டிகளும், அவன் சிகாகோவிலிருந்து நேராக இங்கேதான் வந்திருக்கிறான் என்பதை உணர்த்தியது என்றால், அவனுடைய தோற்றம் அவள் மனதிடத்தை எல்லாம் குழைப்பதாக இருந்தது.

சந்திரனை இப்படி ஒரு தோற்றத்தில் யாராலும் கற்பனை கூட செய்ய இயலாது. அப்படியானதொரு தோற்றத்தில் அவன் இருக்க, அதைப்பார்த்தவளின் மனம் கனத்து போனது. பாதியாய் இளைத்திருந்தான். எலும்பும், தோலுமாய் என்பார்களே, அப்படி இருந்தான். தோற்றத்தில் கூட அதிக அக்கறை செலுத்தியதாய் தெரியவில்லை. காக்கி வண்ணத்தில் த்ரீ போர்த் பேண்ட்டும், சிவப்பு நிற டீ ஷர்ட்டும் அணிந்திருக்க, சற்றே வளர்ந்த தாடியை தண்ணியிருந்த முகம் வாடி, கருவளையம் விழுந்து, கேசம் லேசாக களைந்து காற்றோடு கதை பேச, சோக சித்திரமாய் அமர்ந்திருந்தவனை பார்த்தாள், பார்த்தாள், பார்த்துக் கொண்டே இருந்தாள். வறுமையில் வாடியவன் போல, அனைத்தையும் இழந்து நிற்கதி ஆனவன் போல அவன் இருக்க, அவள் விழிகள் நீரினை சுரக்கத் தொடங்கியது.

Advertisements

10 Comments »

  1. If any one worries about their old sin forgive him, you can also cannot tolerate his sadness, forgive him rohini and enjoy your life

  2. Jo ,Arjun life oniyaavathu piraagasamaagattaum.ro Arjun valarntha kulandai,nallathu,kettathu initial nee than solli Tarannum.

  3. இனியாவது அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷம் வரவேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: