Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 16

செய்கையை அர்ஜுன் சற்றும் எதிர்பார்க்காததால், க்ஷணத்தில் எதுவுமே புரியவில்லை. அவன் குரலில் இருந்த கலக்கமும், இதயத்தில் இருந்த படபடப்பும் அவனது அச்சத்தையும், தவிப்பையும் தெளிவாக உணர்த்த, நண்பனின் இந்த பரிமாணத்தில் அவன் செய்த பிழைகள் எல்லாம் அர்ஜுனுக்கு மறந்து, அவன்மீது பரிதாபம் தான் எழுந்தது.

“ரிலாக்ஸ் மச்சி, ரோ ரொம்ப நல்ல பொண்ணு டா. கவலை படாத, அவங்க எப்படி உன்னை பிரிவாங்க”, என நண்பனாய் அவன் முதுகை வருடி ஆறுதல் கூற, சந்திரனால் இன்னும் தெளியமுடியவில்லை. அவனுடைய சந்தோசம் என்பதை மட்டும் தான் இதுவரை யோசித்திருந்தானே அன்றி, அதில் தன் மனைவி துயர் கொள்வாள் என அவன் துளியும் எண்ணியதில்லை. அவரவர் வாழ்வு , அவரவர் விருப்பம் என்னும் மேல்நாட்டு கொள்கையை பயின்றவன் வேறு எப்படி சிந்திப்பான்?

“இந்த லைஃப் ஸ்டைல் தப்பாடா? ஆனா, ரொம்ப சந்தோஷமா இருந்ததே! நான் இப்படி எல்லாம் பிறந்ததுல இருந்தே சந்தோஷமா இருந்ததில்லை. அதுனால தானே அப்படி இருந்தேன்” என்று புலம்பியவனின் குரலில் என்ன இருந்தது? ஏக்கமா, தவிப்பா, வருத்தமா இல்லை எல்லாமும் சேர்ந்தா என பிரித்தறிய முடியவில்லை. மொத்தத்தில் வாழ்வில் சரியான நேரத்தில் வழிகாட்டுதல் இல்லாமல் வழி தவறியவன், அந்த தவறின் பாதிப்பை உணர்ந்தாலும், அது ஏன் தவறு என்று கூட புரியாது குழப்பம் அடைந்திருந்தான்.

சந்திரனது அறியாமை அர்ஜுனுக்கும் புரிந்திருந்தது. அவனை நல்லவனாக பார்த்தவன் ஆயிற்றே! அநாவசியமாய் அதிர்ந்து கூட பேச மாட்டான். படிப்பை தவிர வேறு எதையுமே அறியாதவன். நண்பர்கள் என்று யாரோடும் உரிமையாய் பழக கூட பெற்றோர்களின் கண்டிப்பை எண்ணி அத்தனை தயக்கம் காட்டியவன். ‘அப்படி இருந்தவனுக்கு, இதுதான் சந்தோசம் என்று யாருமே எடுத்து கூறாததால், உண்மையான சந்தோசம் எது என்று கூட தெரியாமல் இப்படி வழி தவறி நிற்கிறானே!’ என மனம் கலங்கிய வேளையில், ஒரு சந்தேகமும் உதித்தது. ‘இவன் கலங்குவதைப் பார்த்தால் வாழ்வையும் தொலைத்து நிற்கிறானோ!’ என்னும் சந்தேகம் அதீத கவலையையும், அச்சத்தையும் தர, தன் நண்பனின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினான்.

“சந்திரா, சந்தோசம் நல்ல விஷயத்துல கிடைக்கறத விட, கெட்ட விஷயத்துல தான் அதிகமா கிடைக்கும். அதுக்காக நாம வழி தவறலாமா? நம்ம நாட்டுல ஒழுக்கத்தை உயர்வா நினைப்பாங்க. அதை ஒரு சிலர் தவறுறதால எத்தனை பேரோட வாழ்க்கை வீணாகுது தெரியுமா? ஒருத்தர் செய்யற தவறு, அதனால பாதிக்கப்பட்டவங்க குடும்பத்தையே பாதிக்கும் டா. உன் சந்தோசம் ரோகிணியை உயிரோட எரிக்கிற அளவு வேதனை தர விஷயம். உன்னால அத கூடவா புரிஞ்சுக்க முடியலை. இன்னும் சொல்லப்போனா நீ அனுபவிக்கறதெல்லாம் சந்தோஷமே இல்லை, வாழ்க்கையை நாசம் பண்ணற புதைகுழிடா” என்று தன் மனதில் இருப்பதை ஒளிவு மறைவின்றி அர்ஜுன் கூற, ‘ரோ என்னை வெறுத்திருப்பாளா?’ என்று அச்சம் சந்திரனுக்கும் பிறக்க, அதற்கு மேலும் அங்கு இருக்க முடியும் என்றே தோன்றவில்லை.

“உனக்கு நேரம் ஆச்சே டா. ரேகா வெயிட் பண்ணுவாங்க நீ கிளம்பு. நாம இன்னொரு நாள் பேசலாம். தேங்க்ஸ் அர்ஜுன். எனக்கு என் தப்பை புரிய வெச்சத்துக்கு” என முயன்று வரவழைத்த இலகு குரலில் கூறி, நண்பனை மீண்டும் ஒருமுறை அணைத்து அவனிடமிருந்து விடைபெற்றான். சந்திரனின் மனநிலை தெளிவாக தனிமை அவசியம் என்றுணர்ந்த அர்ஜுனும் அவனை தடுக்காமல் அனுப்பி வைத்தான்.

‘எண்ணிலடங்கா பிழைகள் செய்திருக்கிறோமோ?’ என சந்திரனின் மனம் கனத்தது. ரோகிணி தன்னிடம் வருவாளா? என்னும் கவலை மனதை ஆக்கிரமிக்க, அவளின்றி அவனால் இந்த இரண்டு மாதங்களையே கடக்க முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் என்ன செய்வது என்னும் பயம் எழுந்தது. நிச்சயம் தன்னால் அது போன்றதொரு வாழ்வை வாழ முடியாது என்று புரிய, தனது பிழைகளையும், இன்றைய நிலையையும் எண்ணி சோர்ந்து போனான்.

தன் கவலையில் உழன்றிருந்தவன் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த அவன் காரிலேயே அமர்ந்திருந்தான். திடீரென இன்று கடையில் நடந்த சம்பவமும் நினைவில் வர, அவசரமாய் ரோகிணிக்காக உருவாக்கிய வங்கி கணக்கில் இருக்கும் பண இருப்பை சோதித்தான். அதில் அவன் அனுப்பிய பணம் எடுக்கப்படவே இல்லையோ என்னும் சந்தேகம் வரும் அளவு மிகவும் சொற்ப அளவு செலவிடப்பட்டிருக்க மேலும் சோர்ந்து போனான். எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருப்பானோ தெரியாது, அவனது கைப்பேசியே அவனை நினைவுலகத்திற்கு கொண்டு வந்தது. அவனைப் பெற்ற சுயநலமான புண்ணியவான்கள் தான் அழைப்பது. சந்திரனுக்குள் திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்ததும், அப்படி ஒரு எரிச்சல் படர்ந்து அவனை முழுதாக ஆக்கிரமித்தது. எப்பொழுதாவது அழைப்பவர்கள் தான், ஆனால் உரையாடலின் முக்கிய நோக்கம் பணமாக மட்டுமே இருக்கும். இதற்கும் சந்திரன் அவனுடைய சம்பளம் பற்றி அவர்களிடம் கூறியதில்லை. ஆரம்பத்தில் கிடைத்த சம்பளம் எவ்வளவு என்று கூறியதோடு சரி, அதன்பிறகு இவனுக்கு இவ்வளவு வரும் என்று அவர்களாகவே கணித்து, அதற்கேற்ப கறந்து வருகிறார்கள். அவர்களின் கணிப்பை விடவும் சம்பளம் பலமடங்கு அதிகம் என்பது அவர்கள் அறியாதது. ஆகையால் தான், அவர்கள் கேட்கும் பொழுது, இவனிடம் மிகமிக அதிகமாக இருப்பதால், மறுபேச்சின்றி கொடுத்து விடுவான். இவனுக்கும் இங்கே இன்வெஸ்ட் செய்தது போகவும் மீதி அவ்வளவு இருந்தது. பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நிலை, ஆகையால் தந்து விடுவான். சமீபத்தில் இந்தியா சென்ற பொழுது தான் அவனுடைய நண்பன் மகேஷும், சீனியர் வேல்முருகனும் இந்தியாவில் ஒரு மருத்துவமனை தொடங்கும் படி ஆலோசனை தந்திருந்தார்கள். இவன் இப்படி பணத்தை என்ன செய்ய என்று தெரியாத அளவு சம்பாரிக்க இவனின் மனைவியோ பேருந்தில் பயணிப்பதும், பிடித்ததை கூட வாங்காமல் வந்ததும், தந்த பணத்தை செலவே செய்யாது வைத்திருந்ததும் அவனுக்கு அத்தனை கவலையை தந்தது.

பேருந்தில் பயணம் செய்கிறாள் என்று தெரிந்த பொழுதே அவளிடம் கேட்க விளைந்த மனம், அன்றைய அவளது சோர்ந்து போன தோற்றத்தில் தானே பின்வாங்கியது. ஏன் அப்படி இருந்தாள்? லுனாவைப் பற்றி அவளுக்கு தெரியும் என்று அர்ஜுன் கூறினானே, அன்றையதினம் அவளது முகமும் சரியில்லையே! அப்படியானால் அன்று தான் லுனாவைப் பற்றி தெரிந்து கொண்டாளா? நிச்சயம் தெரிந்திருப்பாள். அந்த லுனா தான் என்மீது படர்ந்தபடி வந்தாளே! அவளுக்கு அத்தனை இடம் தந்த என்னை சொல்ல வேண்டும். ரோ எத்தனை வேதனை அடைந்திருந்தால், அப்படி வாழ்வே வெறுத்து போனது போல இருந்திருப்பாள்?

‘ஐயோ! உன்னை மட்டும் தனியாக தவிக்க விட்டுவிட்டு என்ன பிறவி எனக்கு? எப்படி உன்னிடம் மன்னிப்பு கேட்பேன்?’ என அவனின் மனம் ஊமையாய் அழுதது.

ஆனால், அன்றைய நிகழ்வுக்கு பிறகும் அவள் அதிகம் அடி வாங்கியது குழந்தைக்கான எதிர்பார்ப்பில் தானே! அவளது விருப்பு, வெறுப்பு தெரியாமல்? என்னுடைய தான்தோன்றி தனமான வாழ்வில் அவளையும் இணைத்து, நரகத்தை அல்லவா இந்த திருமணத்தின் மூலம் அவளுக்கு பரிசாக தந்திருக்கிறேன். எனக்கெல்லாம் எதற்கு திருமணம்? ரோ என்னை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாயா? இத்தனை பிழைகளை செய்து விட்டு மன்னிப்பு கேட்கும் தகுதி கூட இல்லாமல் இருக்கிறேனே! என்ன செய்வேன்? என்ன முயன்றும் அவனால் தன் எண்ணங்களையும், நினைவுகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. கையில் இருந்த கைப்பேசி பலமுறை அடித்து ஓய்ந்தும் அதற்கு செவி சாய்க்க தோன்றாமல் தன் மனையாளைப் பற்றியே எண்ணி கலங்கிக் கொண்டிருந்தான் சந்திரன்.

மீண்டும் மீண்டும் கைப்பேசி அடிக்க அதை ஏற்றவன், “சொல்லுங்க” என்றான் இறுகிய குரலில். “போன் எடுக்க இவ்வளவு நேரமா?” என்று அவனது அன்னை சுசீலாவும் சீற, “எடுக்கலைன்னா எதுவும் வேலையா இருப்பேன்னு கூடவா புரிஞ்சுக்க முடியாது” என்று இவனும் பதிலுக்கு சீறினான்.

அமெரிக்கா சென்று வேலை, சம்பளம் என ஆன பிறகு சந்திரன் அப்படி தான் பெற்றவர்களிடம் மாறிவிட்டான். எரிந்து விழுவதும், அலட்சியமாக, மறுப்பாக பேசுவதும், முகத்தில் அடித்தாற் போன்று பிடிக்காததை மறுப்பதும் என தலைகீழாக மாறிவிட்டான். ஆனால் இதற்காக எல்லாம் அவனின் பெற்றோர்களின் காளி அவதாரமும், நரசிம்ம அவதாரமும் என்றுமே மாறியதில்லை.

நீ கத்துகிறாயா கத்திக்கொள். அதற்காக எங்கள் கத்தலை நிறுத்த மாட்டோம் என தங்கள் பிடியிலேயே நின்று சாதித்தனர். மற்ற பெற்றவர்கள் எனில் பெற்ற மகனின் மாறுதலிலேயே, ஏதோ தவறாக நடக்கிறது என புரிந்து அவனை நல்வழிப்படுத்த முயன்றிருப்பார்கள். இவர்களுக்கு எங்கே அதெல்லாம் முக்கியமாக பட்டது? அவனிடம் பணம் வாங்கி சொத்தினை சேர்ப்பதும், உறவினர்களிடம் மகனின் பெருமையை பேசுவதும், தாங்கள் தான் சிறந்த பெற்றோர்கள் என்று தம்பட்டம் அடிப்பதுமே அதிமுக்கியமாக இருக்க, பாழானது என்னவோ சந்திரன், ரோகிணியின் வாழ்வு தான்.

இன்றும் மகனின் கோபத்திற்கு வளைந்து கொடுக்காமல் அந்த அருமையான பெற்றோர்கள் வார்த்தையாட, இந்த முறை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை தரவே முடியாது என இவனும் மல்லுக்கு நின்றான். ஏற்கனவே கோபத்தில் இருந்தவரிடம், “பொண்டாட்டி வந்து தான் இப்படி ஆடற” என சுசீலா பேச, “அவ இங்க இருக்கும்போதே உன்னை இப்படி மயக்கி இருக்கா” என மாணிக்கவேலும் பேசிவிட, அவ்வளவுதான் கோபம் சுறுசுறுவென ஏறிவிட்டது.

யாரை யார் பேசுவது? அவளைப் பற்றி ஒரு சொல் சொல்லவும் இவர்களுக்கு தகுதி இருக்கிறதா? என்ற எண்ணம் தோன்ற, பாரபட்சமே பார்க்காமல் ஆங்கிலத்தில் அத்தனை கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தான். அவன் திட்ட தொடங்கியதுமே விழி விரித்தவர்கள், அவன் பேசுவதை காது கொடுத்தும் கேட்க முடியாமல் இணைப்பை துண்டித்திருந்தனர். அவர்கள் இணைப்பை துண்டித்ததை கூட உணராமல் அவன் அத்தனை திட்டு திட்டிக் கொண்டிருந்தான். நல்லவேளை அவர்கள் கேட்டிருக்கவில்லை, அத்தனை ஆவேசம், அத்தனை மோசம் அவன் வசைபாடிய சொற்களில், உதிர்த்த முறையில்.

பெற்றவர்களை பேசும் பேச்சா அது? அவர்களுக்கு காதே கூசியது. ஆனால், அவர்கள் தான் பெற்றவர்களைப் போல நடந்து கொண்டதே இல்லையே! நல்லவேளை தாயகம் இருந்த வரை உத்தம புத்திரனாக இருந்திருந்தான். இல்லாவிடில் இங்கு புழக்கத்தில் இருக்கும் தமிழ் கெட்ட வார்த்தைகளும் அவன் நாக்கில் தாண்டவம் ஆடியிருந்திருக்கும்.

முதன்முறையாக தங்கள் வளர்ப்பு சரியில்லையோ என்று சுசீலாவுக்கு தோன்றத் தொடங்க, “இங்க இருந்தப்ப எப்படி வளத்துனோம். வேலை, கல்யாணம்ன்னு நம்மள பிரிஞ்சு ஒழுக்கமே இல்லாம மாறிட்டான்” என்று மாணிக்கவேல் பொரிந்ததில், சுசீலாவின் எண்ணங்கள் மழுங்கி போனது.

அங்கானால் சந்திரனுக்கு அப்படி ஒரு கோபம். “எல்லாம் இவர்களால்… என்னுடைய மொத்த வாழ்வும் சீரழித்து விட்டார்களே! எப்படி மீட்டெடுப்பேன்? எங்கு தொடங்குவேன்?” என வாய்விட்டே புலம்பியபடி, கார் ஸ்டெயரிங்கில் தலைசாய்த்து படுத்து விட்டான்.

மனம் முழுவதும் ரோகிணியை தேடி ஓலமிட, அவளை உடனே காண வேண்டும் என்று உயிர் துடித்தது. ஏற்கனவே ரோகிணியின் அன்னை இறந்த சமயம் எதிர்பாராமல் சில நாட்கள் விடுமுறை எடுத்ததால், அவன் செய்ய வேண்டிய பல அறுவை சிகிச்சைகளை மற்ற மருத்துவர்கள் செய்யும்படி ஆகியிருந்தது. ஆகையால் தற்பொழுது திட்டமிட்டு வைத்திருந்த அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து விட்டு உடனடியாக கிளம்பவும் முடியாத சூழல்.

அவசரமாக தனது மின்னஞ்சலில் இருக்கும் அறுவை சிகிச்சை அட்டவணைகளை ஆராய்ந்தவன், அது எல்லாம் முடிய இன்னும் ஆறு வாரங்கள் இருக்கிறது என்று சோர்வாக அறிந்து கொண்டான். மேற்கொண்டு எந்த அட்டவணையும் போட வேண்டாம் என மின்னஞ்சலை அனுப்பி விட்டவன், தன் வேலைகள் எல்லாம் முடியும் நாள் கழித்து இந்தியா செல்ல பயணச்சீட்டை முன்பதிவு செய்தான்.

அதன்பிறகு வந்த ஆறு வாரங்களிலும், வழக்கம்போல சந்திரனால் தன் மனைவியிடம் பேச முடியவில்லை. அவளை நேரில் காணும் ஏக்கம் அதிகரித்து விடும் என்று பயந்து அவளுக்கு அழைப்பதையே நிறுத்தி விட்டான். ஆனால், அந்த நாட்களில் அவளும் இவனை அழைக்கவில்லை. ரோகிணியின் செயல் சந்திரனுக்கு அத்தனை வேதனையை தந்தது. அந்த நரகமான நாட்களை கடப்பதற்குள்… சந்திரன் தன் மனைவியை எண்ணி, தனது தவறுகளை நினைத்து தேய்ந்து தான் போனான். பிறை நிலவாய் உருமாறிய சந்திரன் தன் மனையாளை காண இந்தியா நோக்கி பயணத்தை தொடங்கிவிட்டான். அவனுடைய வசந்தத்தை, சொர்க்கத்தை மீட்டெடுப்பானா?

16 Comments »

  1. Chanceless, such a wonderful story I have never read, today only I started reading this story with lots of feelings, I felt as this story is happening to dear ones,superb

  2. Tavarin sumai kudi konde poguthu arjun.unakkamavai manthiriche sari avanga rovidam saamiyadinaal?????

  3. சந்திரன் ரோகிணிய எப்படி சமாதானப்படுத்தப் போறான்னு பார்ப்போம். அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கள் சகி

  4. superb…. Chandran oru valiya thannoda thappa purinchukitane athuve pothum…. aana rohini ivanna yethupalla wait eagerly for next episode

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: