Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 13

நடப்பதை எதையும் ரோகிணியால் நம்பவே இயலவில்லை. ‘இது சோதனை காலம்’ என்று புரிந்திருந்தது. அதற்காக இப்படியா? ஒன்றிலிருந்து மீளும் முன்பு அடுத்த சோதனை என அணிவகுத்து நிற்கிறது. அவளால் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவளுக்கு வேறு வழியில்லையே! நீ ஏற்றுக்கொள்வாயோ, இல்லையோ நீதான் அனுபவித்ததாக வேண்டும் என்று ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே அல்லவா இருக்கிறது.

இந்தியாவிற்கு அவசரகதியில் வருகை தந்ததன் பின்னால், தன் தாயின் இறுதிக்கட்டம் இருக்கும் என்று அவள் என்ன கனவா கண்டாள்? விமான நிலையத்திலிருந்து அவன் இல்லம் செல்லாமல் நேரடியாக அவளுடைய இல்லம் சென்றிருந்தனர். குழப்பமாக அவள் பார்த்திருந்தாளே தவிர சந்திரனிடம் எந்த விளக்கங்களையும் கேட்கவில்லை. கேட்க தோன்றவும் இல்லை. மனதளவில் ஒரு ஒதுக்கம் வந்திருந்தது. தாயைக் காணப் போகிறோம் என்று கன்றுக்குட்டியின் ஆவலோடு அவள் காத்திருக்க, அங்கே வரவேற்றதோ பூட்டியிருந்த வீடு. பிறகே அம்மா வேலைக்கு சென்றிருப்பார் என்னும் நினைவு வந்தது. பக்கத்து வீட்டில் இருக்கும் சாவியை வாங்கி வீட்டினுள் நுழைந்தாள். வழியிலேயே உணவு உண்டு விட்டதால் பசி எதுவும் இல்லை.

“ரோ… கொஞ்சம் சீக்கிரம் கிளம்ப முடியுமா? வெளில போகணும். அது… அத்தைக்கு உடம்பு சரியில்லையாம் ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காங்க” என்று ஒருவழியாக சொல்ல வேண்டிய அவசியம் உணர்ந்து சந்திரன் சொல்லியே விட்டான். ‘என்ன?’ என அதிர்ந்து விழித்தது சில நொடிகள் தான், பிறகு அவனிடம் கேள்வியாய் கேட்டு அழுது கரைந்தாள்.

சந்திரனுக்கு சில விஷயங்கள் அவன் நண்பன் மூலமாக தெரியும் தான். ஆனாலும், உடனடியாக ரோகிணியை கலவரப்படுத்த மனம் இல்லாமல், “நாம போனா தான் பாக்க முடியும் ரோ. என்னால எதாவது உதவி பண்ண முடியுமான்னும் பாக்கலாம். நேரம் பண்ணாம கிளம்புடா. அத்தைக்கு எதுவும் ஆகாது” என்றான் பரிவாக. உண்மையில் அவள் வருத்தம் அவனையும் தாக்கியது. இப்படி அழுது கரைகிறாளே என்று தவிப்பாக இருந்தது.

ஆனால், சந்திரனால் எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் தான், நீலவேணியின் உடல்நலம் இருந்தது. சிவியர் ஹார்ட் அட்டாக் வந்திருக்க, நீலவேணி தன்னுடைய இறுதி நாட்களில் இருந்தார். கடந்த இரண்டு நாட்களாய் நடக்கும் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை அவன் முன்பே அறிந்திருந்தது தான். இப்பொழுதும் நேரில் பார்த்து உறுதி செய்து கொண்டான். மருத்துவமனையை அடைந்ததும், ரோகிணியை அங்கிருந்தவர்களோடு விட்டவன், மருத்துவர்களோடு இணைந்து கொண்டான்.

ரோகிணியின் உறவினர்கள் சிலர், சந்திரனின் தாயார் சுசீலா, தாய் மாமா ஈஸ்வரன், அவருடைய மகன் வருண் என அங்கே ஒரு கூட்டமே இருந்தது. அனைவரும் உடைந்து போயிருந்த ரோகிணியை தேற்ற, தன்னிடம் தன் மகன் எதையும் கூறவில்லையே என்னும் ஆதங்கத்தை சுசீலா ரோகிணியின் மீது காட்டினார். “என்னத்த புள்ளைங்களோ, யாருகிட்ட சொல்லணும், யாருகிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்லாம… இப்படி இருந்தா எப்படி பொழப்ப நடத்துங்க” என சலிப்பாக கூற,

“அக்கா…” என ஈஸ்வரன் போட்ட அதட்டலில், “என்னடா…?” என்று அவரிடமும் எகிறினார். அவரை விட வயதில் இளையவன் தான் என்றாலும், அவனுக்குரிய மரியாதையை தரும் பழக்கம் சுசீலாவிற்கு இருந்ததே இல்லை. அவரைப் போன்றே ஈஸ்வரனும் நடந்து கொள்ள பிரியப்படாமல், “உன்கிட்ட தான் நான் சொல்லிட்டனே, இப்போ சொல்லி மட்டும் என்ன பிரயோஜனம்? சொல்லி ரெண்டு நாள் ஆகுது. உன் மகன் வருவான்னு தெரிஞ்சு இன்னைக்குதான் வந்து இருக்க, அதுவும் மாமா சுத்தம், அவரு வரவே இல்லை” என அவருக்கு மட்டும் கேட்கும் அளவு வார்த்தைகளை கடித்து துப்ப,

யாரும் கவனித்து விடப்போகிறார்கள் என அவசரமாய் சுற்றத்தை ஆராய்ந்தார் சுசீலா. அனைவரும் இவர்களை கவனியாமல் ரோகிணியை சமாதானம் செய்யும் வேலையில் முனைப்பாய் இருந்தனர். ரோகிணியும் சுசீலா சொன்னதை கேட்கும் நிலையில் எல்லாம் இல்லை. தாயின் நினைவில் அழுது அழுது கரைந்தாள். பார்க்கும் மனங்கள் எல்லாம் கனத்து போகும் அளவு அழுகை.

‘அம்மா அவரோட இருக்கவே முடியாதுன்னு அழுதேனே! உன்கிட்ட வந்து உன்னையும் கஷ்டபடுத்த முடியாதுன்னு தவிச்சனே! பொண்ணு எப்படி இத்தனை கஷ்டத்தோட அங்க இருப்பான்னு, நீயே இந்த உலகத்தை விட்டு போறியா? ஐயோ! இதுக்கு கஷ்டப்பட்டு அங்கேயே இருந்து இருப்பேனே! அம்மா நீ வேணும் மா. நீயும் இல்லாமா? என்னால தனியா என்ன பண்ண முடியும்? அப்போ இனிமே நான் அனாதையா அம்மா? அம்மா ஏன் என்னை விட்டு போறீங்க? ப்ளீஸ் வந்துடுங்க மா’ என மனதோடு அரற்றியவள் அழுதே கரைந்தாள்.

சந்திரன் நீலவேணியின் அறிக்கைகளை மேற்பார்வை பார்த்தான். அவனுடைய சீனியர் வேல்முருகன் அங்கு நல்ல பதவியில் இருந்தார். அதோடு, சந்திரனைப் பற்றியும், அவனது வேலை செய்யும் மருத்துவமனை, அவனுடைய பதவி குறித்தும் மற்றவர்களிடம் முன்பே கூறியிருந்தால் சந்திரனுக்கு அங்கு நல்ல மரியாதை. ஆகையால், எந்த முகாந்திரமும் இல்லாமல், அவனும் அதில் இணைந்து கொள்ள வெகு இலகுவாக இருந்தது. ரிப்போர்ட்ஸ்களை பார்த்து, நீலவேணியையும் பரிசோதித்தவன், தன்னால் இனி செய்வதற்கு எதுவும் இல்லை என உணர்ந்து கலங்கி போனான். இன்னும் மீறிப்போனால் மூன்று தினங்கள் தான் உயிர் வாழ்வார்கள், அதுவே அதிகம் எனலாம். ஆனால், மருத்துவனாய் இந்த விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடிந்தவனால், கணவனாய் தனது மனைவியை ஆறுதல் படுத்த இயலாது என்று புரிய தவித்து போனான்.

இந்த ஒருவருடத்தில் நீலவேணியின் தோற்றத்தில் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை. சிறிது இளைத்திருந்தார் அவ்வளவே! ரோகிணி தன் தாயைப் பற்றி ஆசை ஆசையாய் பேசும் பொழுதெல்லாம், தன் நினைவடுக்குகளில் இதுபோன்று ஏன் இல்லை என்று பலமுறை சிந்தித்திருக்கிறான். அவளது பேச்சினால், நீலவேணியின் மீது மரியாதை மட்டும் கூடிப்போனது. இவர் மீது அத்தனை பாசம் வைத்திருப்பாளே, திருமணம் மூலம் பிரிந்ததற்கே தாங்க மாட்டாமல் அழுது கரைந்தாளே, இனி அவளை எப்படி தேற்றுவது என்கிற கவலை அவனை வெகுவாக அரித்தது.

சந்திரன் பரிசோதித்துக் கொண்டிருக்கும்போதே நீலவேணி மெல்ல கண் திறந்தார். திடீரென நெஞ்சு வலி என்றதுமே அதிகம் பயந்து போனார். அந்த பயமே பிரதானமாய் இருக்க, தான் இந்த உலகில் நீடிக்க போவதில்லை என்று யாரும் கூறாமல், அவரே அப்படித்தான் என அனுமானம் செய்து கொண்டார். மகளை கட்டி கொடுத்தாயிற்று என்ற நிம்மதி மட்டும் மனதை சிறிது ஆசுவாசப்படுத்தியது. எப்படியும் போகப்போகிறோம் அதற்கு முன்பு மகளை பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார், இப்பொழுது மருமகன் கண்ணில் விழவும் அவரின் பின்புறம் மகளை தேய்ந்து அலைபாய்ந்தது நீலவேணியின் விழிகள்.

அதை உணர்ந்தவனாய், “வெளில இருக்கா அத்தை. உங்களுக்கு ஒன்னும் இல்லை. உங்களோட தைரியம் தான் முக்கியம்” என அவருக்கு தைரியம் தரும்படி பேசினான். அவரோ இவன் கூறியதில் நம்பிக்கை இல்லை என்பதை விழிகளில் வெளிப்படுத்தி கசந்த முறுவல் ஒன்றை உதட்டில் தவழ விட்டார். “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் மாப்பிள்ளை” என சுற்றி இருந்த மருத்துவர்களை பார்த்தபடி நீலவேணி கேட்க, மற்ற மருத்துவர்கள் உடனடியாக அதனை புரிந்து கொண்டு, “நீங்க பேசிட்டு வாங்க டாக்டர்” என்று அங்கிருந்து நகர்ந்தனர்.

“மாப்பிள்ளை பாப்பா சந்தோசமா இருக்காளா? அவ எதுவும் உங்களை சிரமப்படுத்தறது இல்லையே! அவளை நல்லா பாத்துப்பீங்க தானே? உங்ககிட்ட சேத்துட்ட நிம்மதியோட தான் நான் கண்ண மூடப் போறேன்” என விழிகளில் அச்சமும், கலக்கமுமாய் சந்திரனிடம் கேட்டார்.

“உங்களுக்கு ஒன்னும் இல்லை அத்தை. வீணா குழப்பிக்காதீங்க. பயப்படாதீங்க” என அவனுக்கு தெரிந்த வரையில் சமாதானமாய் பேச, மீண்டும் மெலிதாய் புன்னகைத்தார். அவன் சொன்னதை கேட்ட மாதிரியே இல்லாமல், “அவ சந்தோசமா இருக்கா தான மாப்பிள்ளை?” என மீண்டும் நீலவேணி கேட்க, கடந்த சில நாட்களாய் வாடிய மலரென காட்சி தரும் மனைவியின் முகம் அவன் மனக்கண்ணில் வர, அவன் உயிர் வரை வலித்தது.

ஆனால், அவனை பாராமல் தன் சிந்தனையில் இருந்த நீலவேணி, “அதெல்லாம் சந்தோஷத்துக்கு என்ன குறை சொல்லுங்க? அவ சந்தோசமா தான் இருக்கா, இல்லாட்டி இந்த அம்மா நியாபகம் இல்லாம இத்தனை நாள் அங்க இருந்திருப்பாளா?” என அவரே பதில் ஒன்றை கண்டுபிடித்து பூரிப்புடன் கூறினார். மகள் தன்னை தேடவில்லை என்பதில் துளி வருத்தம் கூட அந்த முகத்தினில் இல்லை. மாறாக, மகள் மகிழ்வாக இருப்பதால்தான் தன்னை தேடி இருக்க மாட்டாள் என்னும் நினைவு அத்தனை சந்தோஷத்தைக் கொடுத்தது அந்த தாயுள்ளத்திற்கு.

அவர் மகளின் நிலையை எண்ணி மட்டுமே தவிக்கிறார் என்பதை உணர்ந்தவனோ, “அத்தை, ரோ என்னோட பொறுப்பு. அவளை ரொம்ப சந்தோசமா பாத்துப்பேன். நீங்க அவளை பத்தி கவலையே படவேண்டாம்” என ஆதரவாய் கூற, “அதான் மாப்பிள்ளை நானும் சொல்லறேன். அவ சந்தோசமா இருக்கா, இருப்பா. அதுக்கு நான் கவலை படுவேனா? என்ன இந்த கையால அவ குழந்தையை கொஞ்சற பாக்கியம் எனக்கு இல்லை” என உள்ளே போய்விட்ட குரலில் கூறியவரின் விழிகள் கசிந்தது. சந்திரனுக்கு ஏனென்றே தெரியாமல் குற்றவுணர்வாய் இருந்தது.

பிறகு நீலவேணியே, “மாப்பிள்ளை அவ ரொம்ப நல்ல பொண்ணு. என் பொண்ணுங்கறதுக்காக சொல்லலை. அவ சொக்க தங்கம். சொல்லற பேச்ச கேட்டு நடந்துப்பா. நம்ம விருப்பப்படி அவ இருப்பா. அப்பா இல்லைங்கறதாலயோ என்னவோ, அத்தனை பொறுப்பு அவளுக்கு. அவளா விருப்பப்பட்டு எதையும் கேக்க கூட மாட்டா, என்கிட்டே பணம் இருக்குமோ இருக்காதோன்னு யோசிச்சு இருக்கறது போதும்ன்னு இருந்துப்பா. நானா தான், இது வேணுமா, அது வேணுமான்னு கேட்டு வாங்கி தருவேன். அப்பயும் என்கிட்ட பணம் இருக்குமோ இல்லையோன்னு தயங்கி தயங்கி வாங்கிப்பா. அப்போ இருந்த தயக்கம் இன்னும் குறையல, எதுக்கும் யார்கிட்டயும் இது வேணும், இப்படி இருக்கனும்ன்னு எனக்கு நினைவு தெரிஞ்சு கேட்டதில்லை” என மகளைப் பற்றி பேசியவரின் விழிகள் மீண்டும் கலங்கியது.

நீலவேணி கூறியதை சந்திரனும் அறிவானே! அவன் என்ன கூறினாலும், மறுப்பின்றி செய்வாளே! என்ற நினைவில் அவன் மனம் கனிந்தது. அதோடு… இப்பொழுது இவர் கூறியதைப் போல, ரோகிணி தன்னிடமும் எதையும் வேண்டும் என்று கேட்டதில்லையே, என நினைவடுக்குகளில் தேடியவன் மனம் பாரமானதைப் போன்று உணர்ந்தான். எங்கு வெளியே சென்றாலும் அதீத செலவை இழுத்து விடும் லுனா தேவையில்லாமல் நினைவில் வந்தாள். யாரோ ஒருத்தி என்னிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று உரிமையாக கேட்க, என் மனைவி இதுவரை எதையுமே கேட்டதில்லையே! என்ற எண்ணமே அவனுக்குள் விவரிக்க முடியாத வலியை தந்தது. மெல்லிய கோபம் கூட வந்தது.

இல்லையே! வந்த புதிதில் கேட்டாளே கடைக்கு வருகிறீர்களா என்று, அவளை எவ்வளவு மட்டமாய் நினைத்தேன். இதற்கு கூட துணை கேட்பாளா? என்று கீழாக பார்த்தேனே என எண்ணியவனின் மனம் மேலும் மேலும் பாரமாக, முகமும் இறுகியது. சந்திரனின் முகம் பார்த்த நீலவேணி, “என்ன மாப்பிள்ளை ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? நான் சந்தோசமா தான் போறேன். என் பொண்ணை நீங்க நல்லா பாத்துப்பீங்கன்னு எனக்கு தெரியும். இதைவிட எனக்கு வேற என்ன வேணும் சொல்லுங்க. ரோகிணியை பாக்கட்டுமா? அவளை பாக்கணும் போல இருக்கு” என கூறவும், “இதோ கூட்டிட்டு வரேன் அத்தை” என வெளியே சென்றான்.

ஏற்கனவே அழுதழுது சோர்ந்திருந்தவளை பார்க்கவே பாவமாய் இருந்தது. “ரோ, அம்மாவுக்கு எதுவும் இல்லை. நீ இப்படி பலவீனமா இருந்தா, அம்மாவும் பயந்துப்பாங்க. அவங்ககிட்ட ஆறுதலா பேசணும். முகம் கழுவிட்டு வா, அம்மாவை பாக்கலாம்” என சமாதானம் செய்து நீலவேணியிடம் அழைத்து சென்றான். முயன்று தாயிடம் தைரியமாய் பேசி வந்தவள், வெளியில் வந்து உடைந்து அழுதாள். அதன்பிறகு இரண்டு நாட்கள் கூட அவள் தாயின் உயிரை இருத்தி வைக்க முடியவில்லை. அவரது உயிர் பிரிந்திருந்தது. ரோகிணி அழுத அழுகைக்கு அளவே இல்லை. யாராலும் அவளை தேற்ற முடியவில்லை.

எல்லா காரியங்கள் முடியும் வரையிலும் சந்திரன் விடுப்பு எடுத்து அங்கேயே இருந்தான். ரோகிணியை சந்திரனால் அணுகவே முடியவில்லை. அவள் தோழிகள், உறவினர்களின் ஆறுதலை கூட ஏற்றுக் கொண்டவள், இவனை தள்ளி நிறுத்தினாள். ஏன் என்று புரியாத போதிலும், அதை ஆராய தெரியவில்லை அவனுக்கு. பிறகு, ஊருக்கு செல்வதை பற்றி பேச்சு கொடுக்க ஸ்திரமாக மறுத்து விட்டாள். “எனக்கு இங்க இருக்கணும்” என மீண்டும் அழுது புலம்ப, இந்த ரோகிணி அவனுக்கு மிகவும் புதிது. “இங்க நீ மட்டும் எப்படி தனியா இருப்ப?” என அவன் மறுக்க, அவள் முதன்முறையாக பிடிவாதம் பிடித்தாள். வேறு வழியே இல்லாமல் உறவினர்களின் பொறுப்பில் அவளை விட்டுவிட்டு சந்திரன் மட்டும் கிளம்பி சிகாகோ வந்து இரண்டு மாதங்கள் ஆகப் போகிறது.

7 Comments »

  1. Ro un amma Avan unnai sandosamaa paarthukuraanu nambi poitanga.innum un manaivi varatha Karanam puriyalaiyaa chandru

  2. இழப்பு என்பது பெரிய வலி அதை நல்ல விதமாக எழுதி இருக்கிறீர்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: