Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07

    • அரசன் : (புரளியாகப் புன்னகை செய்து) ஐயா! நம்முடைய ஊருக்கு வடக்கில் இருக்கும் சுடுகாட்டுக்குப் போகும் வழியோடு நீங்கள் எப்போதாவது போனதுண்டா?

 

    • திவான் : நான் போனதில்லை.

 

    • அரசன் : அந்தப் பாதையில் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் ஒரு சுங்கன் சாவடி கட்டப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு சேவகர்கள் இருக்கிறார்கள். சுடுகாட்டுக்குப் போகும் ஒவ்வொரு பிணத்திற்கும் ஒரு பணம் வரி கொடுக்காவிட்டால், பிணத்தை விடக்கூடாது என்று திவானுடைய உத்தரவு ஆயிருக்கிறதாம். அவர்கள் அதுபோலவே ஏழெட்டு வருஷகாலமாக வரி வசூலித்து வருகிறார்களாம்.

 

    • திவான்: (அடக்க இயலாத வியப்படைந்து) ஒரு நாளும் அப்படி இராது. நான் இங்கே திவானாக வந்து பத்து வருஷ கால மாகிறது. அப்படிப்பட்ட ஏற்பாடு செய்திருந்தால் நான்தானே அதைச் செய்திருக்க வேண்டும். நான் நிச்சயமாகத் துணிந்து சொல்லுவேன். அது தப்பான சங்கதி – என்றார்.

 

    • மகாராஜன் “இதோ இந்த ரசீதைப் பார்த்துச் சொல்லுங்கள்’’என்று தாம் வாங்கி வந்த இரசீதைக் கொடுக்க, அதை ஆவலோடு வாங்கிப் பார்த்த திவான் பிரமித்து அப்படியே ஸ்தம்பித்துப் போய் “என்ன ஆச்சரியம் இது? யாரோ மறைவிலிருந்து இவ்வித மான மோசத்தை நடத்துகிறார்கள் போலிருக்கிறது. நான் உறுதி யாகச் சொல்லுகிறேன். இது என்னால் அநுமதிக்கப்பட்ட காரியமே அல்ல. அதுவுமன்றி, இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. இந்த ரசீதில் காணப்படும் திவான் லொடபட சிங் பகதூர் என்ற முத்திரை தாங்கள் எப்போதும் எல்லா தஸ்தாவேஜிகளுக்கும் வைத்தனுப்பும் தங்களுடைய பிரியமான முத்திரையல்லவா? இதை அந்த மோசக்காரன் அபகரித்து இந்த ரசீதுக்கு உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறானே’’என்றார்.

 

    • மகாராஜன் வியப்பும், கோபமும் அடைந்து ‘’என்ன திவானே! இந்த முத்திரையை நான் பிரியமாக வைத்துக்கொண்டு எல்லா தஸ்தாவேஜிகளுக்கு உபயோகிப்பதாக உங்களுக்கு யார் சொன்னது? என்னிடம் மகாராஜன் என்ற முத்திரை இல்லாமல் போய்விட்டதா? உங்களிடத்திலிருந்து வரும் தஸ்தாவேஜிகளில் இந்த முத்திரை இருந்ததைப் பார்த்து, நீங்கள் இந்தப் பழைய காலத்து முத்திரையைப் பிரியமாக வைத்து உபயோகிக்கிறீர்கள் என்றல்லவா நான் இதுவரையில் நினைத்திருந்தேன். நீங்கள் சொல்வது ஆச்சரியகரமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறதே!’’என்றான்.

 

    • திவான் “எனக்கும் அப்படியேதான் இருக்கிறது. இருக்கட்டும். யாரோ சேவகர்கள் சுடுகாட்டிற்குப் பக்கத்தில் இருந்து இந்த ரசீதைக் கொடுத்ததாகத் தங்களுக்குச் செய்தி வந்திருக்கிறதல்லவா. அந்தச் சேவகர்களை உடனே வரவழைத்து விசாரிப்போம். இவ்வித ரசீதுகள் அடங்கிய புஸ்தகங்களை அவர்களுக்கு யார் கொடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் வசூலிக்கும் பணத்தை யாரிடம் செலுத்துகிறார்கள் என்பதையும், அவர்களுடைய சம்பளத்தை அவர்களுக்கு யார் கொடுக்கிறார்கள் என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதிலிருந்து உண்மையைக் கண்டு பிடிக்கலாம்’’ என்று கூறி அருகிலிருந்த சேவகர்களுள் ஒருவனைஅழைத்து சுடுகாட்டுச் சுங்கன் சாவடியிலிருக்கும் சேவகர்களை உடனே அழைத்து வரும்படி உத்தரவு செய்தார். அந்தச் சேவகன் உடனே புறப்பட்டு நிரம்பவும் துரிதமாகச் சென்று கால்நாழிகை நேரத்தில் சுங்கன் சாவடிச் சேவகர்களை அழைத்துக் கொணர்ந்து மகாராஜனுக்கெதிரில் நிறுத்தினான். திவான் அவர்களுள் ஒருவனைப் பார்த்து “நீ என்ன வேலை செய்கிறவன்?’’என்றார்.

 

    • சேவகன் எஜமானே! நானும் என்னோடு கூட இதோ இருக்கும் இன்னொருவனும் சுடுகாட்டுச் சங்கன் சாவடியில் வரி வசூல் செய்கிற சேவகர்கள்.

 

    • திவான்: நீங்கள் எவ்விதமான வரி வசூல் செய்கிறீர்கள்?

 

    • சேவகன்; சுடுகாட்டுக்குள் போகும் ஒவ்வொரு பிணத்துக்கும் ஒவ்வொரு பணம் வசூல் செய்கிறோம்.

 

    • திவான்: உங்களை யார் நியமித்தது?

 

    • சேவகன்: ரெவினியூதாசில்தார்.

 

    • திவான்:அவருடைய கச்சேரி எங்கே இருக்கிறது?

 

    • சேவகன்:மேலக் கோட்டை வாசலுக்குப் பக்கத்தில் இருக்கிறது.

 

    • திவான்:அவருடைய பெயர் என்ன வென்பது உனக்குத் தெரியுமா?

 

    • சேவகன்: தெரியாது.

 

    • திவான்: உங்களுக்கு வேண்டிய புஸ்தகங்களை யார் கொடுக்கிறது?

 

    • சேவகன்: அந்தத் தாசில்தார்தான்.

 

    • திவான்: நீங்கள் வசூல் செய்யும் வரிப் பணங்களை அவரிடம்தான் செலுத்தி விடுகிறதா?

 

    • சேவகன்: ஆம்.

 

    • திவான்: உங்களுடைய சம்பளத்தை மாதா மாதம் நீங்கள் யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளுகிறது?

 

    • சேவகன்:அந்தத் தாசில்தாரிடம்தான் பெற்றுக் கொள்ளுகிறது.

 

    • திவான்:இந்த வரி எவ்வளவு காலமாய் வசூலிக்கப்படுகிறது?

 

    • சேவகன்:சுமார் எட்டு வருஷ காலமாய் வசூலிக்கப்படுகிறது.

 

    • திவான்:இந்த வரியை அந்தத் தாசில்தாரே ஏற்படுத்தினாரா?

 

    • சேவகன்:அந்த விஷயத்தை நான் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்த வரியை இந்த ஊர் திவான் சாகேப் ஏற்படுத்தியதாகச் சொல்லிக் கொண்டார்கள். அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும். மற்ற விவரம் எதுவும் தெரியாது.

 

    • திவான்:அந்தத் தாசில்தாரையும் அவருடைய கச்சேரியையும் எங்களுக்கு நீங்கள் காட்ட முடியுமா?

 

    • சேவகன்: ஒ காட்டுகிறோம் – என்றான்.

 

    • அந்த வரலாற்றைக் கேட்ட திவான் மட்டற்ற வியப்பும் கலக்கமும் அடைந்து நடுக்கத்தோடு மகாராஜனைப் பார்த்து, ‘’மகாராஜாவே இவன் சொல்வது நிரம்பவும் விபரீதமான தகவலாய் இருக்கிறது. எனக்குக் கீழே இருந்து வேலை பார்க்கும் ரெவினியூதாசில்தாருடைய கச்சேரி நம்முடைய அரண்மனையின் வட பாகத்திலுள்ள என் கச்சேரியிலேயே இருக்கிறது. இது மேலக்கோட்டை வாசலுக்குப் பக்கத்தில் இருக்கிறதென்று இவன் சொல்லுகிறான். நான் உடனே புறப்பட்டு நேரில் அங்கே போய்ப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொண்டு வந்து சேருகிறேன். தாங்கள் எனக்கு அநுமதி கொடுங்கள்’’என்றார்.

 

    • அரசனும் அளவற்ற பிரமிப்பும், கலக்கமும், ஆவலும் கொண்டு ‘’சரி; நானும் வருகிறேன். அந்த அதிசயத்தை நானும் நேரில் வந்து பார்க்கவேண்டும்’’என்று கூறியவண்ணம் தமது ஆசனத்தை விட்டுத் துடியாக எழுந்தார். உடனே திவான் முதலிய மற்றவரும் புறப்பட, ஏராளமான சேவக பரிவாரங்களோடு மகாராஜன் முதலியோர் மேலக்கோட்டை வாசலுக்கு அருகில் போய்ச் சேர்ந்தனர். சுடுகாட்டுச் சுங்கன் சாவடிச் சேகர்கள் அவ் விடத்திலிருந்த ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தைக் காட்ட, அதற்குள் திவான் முதலிய எல்லோரும் நுழைந்தனர். அந்தக் கட்டிடம் வெளிப்பார்வைக்குச் சிறியதாகக் காணப்பட்டதானாலும், உள்பக்கத்தில் அது ஒரு பெருத்த அரண்மனைபோல அரைக்கால்மயில் நீள அகலம் பரவிய கெட்டியான கட்டிடமாக இருந்தது. அதன் உள்பக்கம் முழுதும் சிறிய சிறிய மண்டபங்களாகப் பிரித்துக் கட்டப்பட்டிருந்தது. அத்தகைய மண்டபங்கள் நூற்றுக்கணக்கில் காணப்பட்டன. ஒவ்வொரு மண்டபத்தின் முன்புறத்திலும் “குடி தண்ணீர் இலாகா’’ “தொழில் வரி இலாகா” “உத்தியோக வரி இலாகா’’ ‘’பிண வரி இலாகா’’ ‘’திவான் லொடபட சிங் முத்திரை வரி இலாகா’’என்ற விலாசங்கள் எழுதப்பட்டிருந்தன. அங்கே காணப்பட்ட மண்டபங்களில் அவ்வாறு நூற்றுக்கணக்கான வெவ்வேறு இலாகாக்கள் இருந்தன; ஒவ்வொரு மண்டபத் திலும் சுமார் இருநூறு குமாஸ்தாக்களும், அவர்களுக்குத் தலைவர் ஒருவரும் காணப்பட்டனர். எல்லா மண்டபங்களுக்கும் இடையில் நடுநாயகம் போல விளங்கிய பிரம்மாண்டமான ஒரு பெரிய மகாலில் திண்டு திவாசுகள் நிறைந்த உன்னதமான ஆசனத்தின் மீது ரெவினியூ தாசில்தார் ஆடம்பரமாக அமர்ந்திருந்தார். அவருக்கருகில் கை கட்டி வாய் புதைத்து எண்ணிக்கையற்ற குமாஸ்தாக்களும், சேவகர்களும் வணக்கமாக நின்று கொண் டிருந்தனர். அவருடைய ஆசனத்திற்கு மேல் காணப்பட்ட, முத்துக் குஞ்சங்கள்நிறைந்த பங்காவைப் பல சேவகர்கள் இழுத்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் விசிறி, வெண்சாமரை முதலியவற்றை வைத்து வீசிக்கொண்டிருந்தனர்.

 

    • மகாராஜனும், திவானும், மற்றவர்களும் அந்த இடத்தை அடையவே அவர்கள் இன்னார் என்பதை அறிந்துகொண்ட தாசில்தார் முதலிய எல்லோரும் குபிரென்று எழுந்து நிரம்பவும் பணிவாகக் குனிந்து மகாராஜன் முதலியோருக்கு நமஸ்காரம் செய்து கைகட்டி மரியாதையாக நின்றனர். தாம் அந்த சமஸ் தானத்திற்கு வந்தபின் ஒரு நாளாகிலும் அந்த இடத்திற்கு வந்தே அறியாத திவான் பெரு வியப்பும் பிரமிப்பும் அடைந்து சொப்பனத்தில் நடப்பவர்போல் மாறிப்போனார். தாம் அதற்கு முன் இருந்த கவர்னர் ஜெனரலுடைய கச்சேரி கூட அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்ததாக அவருக்குத் தோன்றவில்லை. அந்தத் தாசில்தாரின் கச்சேரிக்கு முன், கவர்னர் ஜெனரலுடைய கச்சேரி, மவுண்டு ரோட்டிலுள்ள பெரிய வெள்ளைக்காரர்களின் கம்பெனிக்கு அருகில் காணப்படும் மொச்சைக்கொட்டைச்சுண்டல் விற்கும் அங்காடிக் கடைபோல இருந்தது என்றே கூற வேண்டும் என்று அவர் நினைத்தார். அந்த மகா ஆச்சரியகரமான இராஜாங்க நிர்வாக அமைப்பைக் கண்ட திவானும் மகாராஜனும் வாய்திறந்து பேசவும் இயலாதவர்களாய் ஸ்தம்பித்து சிறிது நேரம் அப்படியே நின்று விட்டனர். உடனே திவான் தமக்கெதிரில் நின்ற ரெவினியூதாசில்தாரை நோக்கி “ஐயா! நீர் யார்?” என்றார்.

 

    • தாசில்தார்: நான் ரெவினியு தாசில்தார்.

 

    • திவான்: உம்முடைய பெயரென்ன?

 

    • தாசில்தார்: என் பெயர் கரண்டிகர் தபரே.

 

    • திவான்: உம்முடைய சொந்த ஊர் எது?

 

    • தாசில்தார்: இதுதான்.

 

    • திவான்: உமக்கு என்ன சம்பளம்?

 

    • தாசில்தார்; மாசம் ஒன்றுக்கு ரூ.100.

 

    • திவான்: நீர் எவ்வளவு காலமாக இந்த வேலையைப் பார்த்து வருகிறீர்?

 

    • தாசில்தார்: சுமார் பத்து வருஷ காலமாக நான் இந்த வேலை பார்த்து வருகிறேன்.

 

    • திவான்: உம்மை இந்த வேலைக்கு நியமித்தது யார்? தாசில்தார்; இந்த சமஸ்தானத்து திவான் சாயப் நியமித்தார்கள்.

 

    • திவான்: நீர் இந்த ஊர் திவானை நேரில் பார்த்திருக்கிறீரா?

 

    • தாசில்தார்: நான் இதுவரையில் பார்த்ததில்லை. தாங்கள் தான் திவான் சாயப் என்று இப்போது சிலர் சொன்னதிலிருந்து தெரிந்துகொண்டேன்.

 

    • திவான்: இந்த வேலை உமக்குக் கிடைத்தபோது, உமக்கு யார் தாக்கீது கொடுத்தார்கள்?

 

    • தாசில்தார்: நான் படித்து பரீட்சையில் முதல் வகுப்பில் தேறி, திவான் சாயப் கச்சேரியில் உத்தியோகத்திற்காக முயற்சி செய்தேன். அங்கேயிருந்த யாரோ ஒரு சேவகர் புதிதாக ரெவினியூ தாசில்தார் உத்தியோகம் ஒன்றை உண்டாக்கப்போகிறார்கள்என்றும், நான் விண்ணப்பம் எழுதிக்கொடுத்தால், தான் அதைக் கொண்டுபோய் திவானிடம் கொடுப்பதாகவும் சொன்னார். நான் உடனே விண்ணப்பம் எழுதிக்கொடுத்தேன். அதற்கு சில தினங் களுக்குப் பிறகு தபால் மூலமாக எனக்கு நியமன உத்தரவு வந்தது. அது முதல் நான் இந்த இடத்தில் இருந்து வேலை பார்த்து வருகிறேன்.

 

    • திவான்: அந்த உத்தரவைக் காட்டமுடியுமா?

 

    • தாசில்தார்: (தமது மேஜைக்குள்ளிருந்த உத்தரவைத் தேடி எடுத்துக்கொடுத்து) இதோ இருக்கிறது பாருங்கள் – என்றார்.

 

    • அந்த நியமன உத்தரவை திவான் வாங்கிப் பார்க்க, அதில் தமது கையெழுத்தைப்போலவே ஒரு கையெழுத்து காணப்பட்டது. திவான் லொடபட சிங் பகதூர் என்ற முத்திரையும் வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்த திவான் திடுக்கிட்டு நடுநடுங்கிப் பிரமித்து அதை அரசனிடம் கொடுக்க, அவன் அதை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு வாய்பேசா ஊமைபோல் நின்றுவிட்டான்.

 

    • திவான்: (மறுபடியும் தாசில் தாரைப் பார்த்து) ஐயா! தாசில்தார் வேலைக்கு விண்ணப்பம் எழுதிக் கொடுக்கும்படி உம்மிடம் சொன்ன சேவகனுடைய அடையாளம் உமக்கு இப்போது தெரியுமா?

 

    • தாசில்தார்; அதன் பிறகு இப்போது பத்துவருஷ காலம் ஆய் விட்டது. எத்தனையோ ஜெவான்கள் வருகிறார்கள், போகிறார்கள். எல்லோரும் ஒரேவிதமான உடைகள் அணிந்திருக்கிறார்கள். ஆகையால் அவர் இன்னார் என்று நான் இப்போது கண்டு பிடிப்பது சாத்தியமில்லை.

 

    • திவான்: இத்தனை இலாகாக்களும் நீர் வந்த போதே இருந்தனவா?

 

    • தாசில்தார்:இல்லை; நான் வந்த போது நாலைந்து இலாகாக்கள்தான் இருந்தன. இந்தக் கட்டிடமும் சிறியதாக இருந்தது. நான் வந்து வேலை ஒப்புக்கொண்ட பிறகு அடிக்கடி திவான் சாயப்பினிடத்திலிருந்து தபாலில் எனக்கு உத்தரவு வரும். இன்னின்ன புதிய வரிகள் ஏற்படுத்தி இருப்பதாகவும், அதற்குவேண்டிய கட்டிடங்களைக் கட்டி சிப்பந்திகளை நியமித்து அதை நடத்தும்படி அந்த உத்தரவில் விவரமான விதிகளும் விவரிப்புகளும் இருக்கும். அதன்படி நான் நிறைவேற்றி வைப்பேன். அம் மாதிரி இந்தப் பத்து வருஷகாலத்தில் 175 இலாகாக்கள் என்னால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.

 

    • திவான்:எல்லா இலாகாக்களிலும் மொத்தத்தில் எத்தனை சிப்பந்திகள் இருக்கிறார்கள்.

 

    • தாசில்தார்: 3748 சிப்பந்திகள் இருக்கிறார்கள்.

 

    • திவான்: இந்த நிர்வாகத்தில், மொத்தத்தில் வருஷ வருமானம், செலவு, ஆதாயம் எவ்வளவு என்று சொல்லமுடியுமா? தாசில்தார்: ஓ! சொல்லமுடியும். வசூலாகும் ஒவ்வொரு பைசாவுக்கும், செலவாகும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கண்ணாடிபோல ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கிறது. வருஷத்திற்கு வருஷம் வருமானமும், செலவும், மிச்சமும் பெருகிக் கொண்டே போகின்றன. நான் வந்த முதல் வருஷத்தில் வருமானம் முக்கால் லக்ஷம் ரூபாய். செலவு எண்ணாயிரம் ரூபாய்; செலவு போக பாக்கி மிச்சம். போன வருஷத்தில் மொத்த வருமானம் முப்பத்தைந்து லக்ஷம். செலவு ஒரு லக்ஷம். செலவு போக பாக்கி மிச்சம்.

 

    • திவான்: வசூலாகும் பணத்தையெல்லாம். நீங்கள் எங்கே வைக்கிறது? ஆள் மாகாணங்களின் செலவை யார் செய்கிறது? மிச்சப்பணத்தை என்ன செய்கிறது?

 

    • தாசில்தார்: இதோ எனக்குப் பக்கத்தில் ஒருகஜானா இருக்கிறது. ஒவ்வொரு இலாகாவிலும் அன்றன்று வசூலாகும் வருமானம் மாலைக்குள் இந்த கஜானாவுக்கு வந்து சேர்ந்துவிடும். சிப்பந்திகளின் சம்பளம், என்னுடைய சம்பளம், மற்ற செலவுகள் எல்லாம் இவ்விடத்தில் என்னுடைய அநுமதியின்மேல் கொடுக்கப் படும். மிச்சப்படும் தொகை வருஷ மெல்லாம் இங்கேயே இருக்கும். ஒவ்வொரு வருஷ முடிவிலும், மிச்சப்படும் தொகையை திவான் சாயப்னுடைய சேவகர்கள் வந்து பாராவோடு எடுத்துக் கொண்டு போவார்கள். அந்தத் தொகையை திவான் சாயப்பெற்றுக்கொண்டதாக அவருடைய கையெழுத்து முகர் உள்பட ரசீது வந்து சேரும்.

 

    • திவான்: (முற்றிலும் கலங்கி பிரமித்துப்போய்) இந்த ஒன்பது வருஷ காலமாய் திவானுக்கு அனுப்பப்பட்டதொகைகளின் மொத்தம் எவ்வளவு? அவரால் அனுப்பட்ட ரசீதுகள் எங்கே?

 

    • தாசில்தார்: (கணக்கைப்பார்த்து) இந்த ஒன்பது வருஷ காலத்தில் திவான் சாயப் கச்சேரிக்கு அனுப்பப்பட்ட மொத்த ஆதாயம் மூன்றுகோடியே முப்பத்தைந்து லட்சத்துப் பதினாயிரத்து அறுநூற்று முப்பத்தொண்பது ரூபாய் ஏழணா நான்கு பைசா ஆகிறது. இதோ பாருங்கள் ஒன்பது ரசீதுகள் – என்று ரசீதுகளை எடுத்துக் கொடுத்தார். திவான் அவைகளை வாங்கிப் பார்க்க, எல்லாவற்றிலும், தமது கையெழுத்துகளைப் போலவே கையெழுத்துகள் செய்யப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை குத்தப்பட்டிருந்து. அந்த ரசீதுகளை உடனே அரசன் வாங்கி வைத்துக்கொண்டார்.

 

    • அதன் பிறகு திவான் அவ்விடத்திலிருந்த கணக்குகளை எல்லாம் எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்து, கஜானாவிலிருந்த பணங்களையும் சோதனை செய்தார். கணக்குகள் யாவும் பரிஷ்காரமாகவும் ஒழுங்காகவும் வைக்கப்பட்டிருந்தன. கணக்கில் காட்டப்பட்டபடி அந்த நிமிஷத்தில் எவ்வளவு தொகை கஜானாவில் இருக்க வேண்டுமோ, அந்தத்தொகை ஒரு காசு குறையாமல் கஜானாவில் அப்போது இருந்தது.

 

    • உடனே திவான் தாசில்தாரைப் பார்த்து, “ஐயா! ஒவ்வொரு வருஷக் கடைசியிலும் மிச்சப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு போன பாராக்காரர்கள் இன்னார் இன்னார் என்ற அடையாளம் உமக்குத் தெரியுமா?’’என்றார்.

 

    • தாசில்தார், ‘’பத்துத் தாசில்தார்கள் செய்யத் தகுந்த வேலையை நான் ஒருவனே பார்த்து வருகிறேன். சேவகர்கள் யார் யார் வருகிறார்கள் என்பதைக் கவனிக்க எனக்கு அவகாசம் கிடையாது. எல்லாப் பணமும் திவான் சாயப் கச்சேரிக்கு ஒழுங்காய்ப் போய்ச் சேர்ந்தது என்பதற்கு நான் ரசீதுகள் கொடுத்து விட்டேன். தங்களுடைய கச்சேரிப் பாராக்காரர்களுடைய அடை யாளம் தங்களுக்குத்தான் தெரியவேண்டும்’’ என்றார்.

 

    • அதைக்கேட்ட திவான் கலங்கி அயர்ந்து இடிந்து அப்படியே உட்கார்ந்து போய்விட்டார். அவருக்குப் பக்கத்திலேயே இருந்து எல்லா வியவகாரங்களையும் கவனித்துக் கொண்டிருந்த அரசன் திவானைப் பார்த்து, “என்ன திவானே! நீர் இப்போது இந்தத் தாசில்தாரிடம் கேட்ட கேள்விகளை எல்லாம் கவனித்தால், இந்தப் பத்து வருஷ காலமாய் இவ்விதமான கச்சேரி ஒன்று இங்கே இருக்கிறது என்பதையே நீர் தெரிந்து கொள்ளவில்லை என்பது பரிஷ்காரமாக விளங்குகிறது. அதுவுமன்றி, இவர்களால் இந்த ஒன்பது வருஷ காலமாக அனுப்பப்பட்ட மிச்சப்பண மெல்லாம் நம்முடைய கஜானாவிற்கு வந்து சேரவில்லை என்பதும் பரிஷ்காரமாகத் தெரிகிறது. அதுவுமின்றி உமக்குத் தெரியாமல் யாரோ உம்முடைய கையெழுத்தைப் பெற்று ஏராளமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாகவும் தெரிகிறது’’ என்றான்.

 

    • திவான் சிறிது நேரம் திகைத்துத் திருடனைப்போல் விழித்து, “நான் ஒவ்வொரு தாக்கீதையும் கவனித்துப் படித்தே கையெழுத்துச் செய்கிறேன். ஆகையால் இங்கே வந்திருக்கும் உத்தரவுகளில் காணப்படும் கையெழுத்துகளெல்லாம் என்னால் செய்யப் பட்டவையே அல்ல. யாரோ சிலர் மறைவாக இருந்துகொண்டு இந்த பிரம்மாண்டமான மோசத்தை நடத்திக்கொண்டு போகிறதாகத் தெரிகிறது. இவர்களால் விதிக்கப்படும் வரிகள் உலகத்தில் வேறே எவராலும் விதிக்கப்படாத அதிசயமான வரிகளாக இருப்பதொன்றே, நான் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை பரிஷ்காரமாக மெய்ப்பிக்கும். இவர்களால் அனுப்பப்பட்டிருக்கும் பணம் நம்முடைய கஜானாவிற்கு வந்து சேரவே இல்லை. எனக்குத் தாங்கள் எட்டு நாள்கள் வரையில் வாய்தா கொடுத்தால், நான் பிரயத்தனப் பட்டு, உண்மையைக் கண்டு பிடித்துவிடுகிறேன்’’என்றார்.

 

    • அரசன், “சரி; நீர் கேட்டுக் கொள்ளுகிறபடி உமக்கு வாய்தா கொடுத்திருக்கிறேன். அதற்குள் நான் இந்த வரலாற்றை எல்லாம் கவர்னர் ஜெனரலுக்கு எழுதி அவருடைய உத்தரவைப் பெறுகிறேன். இந்தப் புதிய கச்சேரியை மூடிப் பூட்டி அரக்கு முத்திரை வைத்து காவல் போடுங்கள். இங்கே இருக்கும் தாசில்தார், மற்ற சிப்பந்திகள் எல்லோரையும், விசாரணை முடிகிற வரையில்பந்தோபஸ்தான இடத்தில் வையுங்கள்’ என்று கட்டளை பிறப்பித்துவிட்டுத் தமது அரண்மனைக்குப் போய்விட்டான்.

 

    • அங்கிருந்த தாசில்தார் முதலிய எல்லா உத்தியோகஸ்தர்களும் இதர சிப்பந்திகளும் உடனே சிறைப்படுத்தப் பட்டார்கள். அந்தக் கச்சேரியும் மூடிக்காவல் போடப்பெற்றது. அரசன் அந்த அதிசயமான விவரங்களையெல்லாம் கண்டு கவர்னர் ஜெனரலுக்கு ஓர் அவசரமான கடிதம் எழுதியனுப்பிவிட்டு அவரது முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். திவானோ இரவு பகல் தூங்காமலும், தண்ணீர் அருந்தாமலும் அதே விசாரமாகவும் கவலையாகவும் இருந்து துரும்பாய் மெலிந்து போனதன்றி, தம்மாலான வரை பிரயத்தனம் செய்து அதன் உண்மையைக் கண்டுபிடிக்க முயன்றதெல்லாம் எள்ளளவும் பலிக்காமலே போயிற்று. கவர்னர் ஜெனரலுடைய மறுமொழி கிடைத்தது. திவான் தம்முடைய கச்சேரியிலிருந்து அனுப்பப் பட்டாரானாலும், அவர் எப்போது முதல் அந்த சமஸ்தானத்தில் குடியேறினாரோ அது முதல் அந்த சமஸ்தானத்து ஜனங்களுள் ஒருவர் ஆகி விட்டமையால், அவர் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவரை அந்த சமஸ்தானத்துச் சட்டங்களின்படி சுயேச்சையாய் தண்டிக்க மகாராஜனுக்கு அதிகாரம் உண்டென்றும், அவரை சட்டப்படி மகாராஜன் நடத்திக்கொள்ளலாம் என்றும் கவர்னர் ஜெனரல் எழுதிவிட்டார். திவான் கேட்டுக்கொண்டபடி எட்டாவதுநாள் முடிகிற வரையில் அரசன் பொறுத்திருந்து, ஒன்பதாவதுநாள் தமது சபையைக் கூட்டித் தாமும் வந்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். அந்த அற்புதமான வழக்கு எப்படி முடியும்என்பதை அறியும் பொருட்டு அந்த நகரத்துஜனங்கள் எல்லோரும் இலக்ஷக்கணக்கில் வந்து சபா மண்டபத்திற்கு எதிரில் நெருங்கி நின்றனர். திவானும், ரெவினியூதாசில்தார் முதலிய மற்ற கைதிகள் எல்லோரும் அழைத்து வந்து வரிசையாக நிறுத்தப்பட்டனர். உடனே அரசன் திவானை நோக்கி ‘’என்ன திவானே உண்மையைக் கண்டு பிடித்தீரா’’ என்றான்.

 

    • துரும்பிலும் கேவலமாக மெலிந்து நடைபிணம் போலக் காணப்பட்ட திவான், ‘’மகாராஜாவே! நான் என்னாலான பிரயத்தனங்களை எல்லாம் செய்து பார்த்துவிட்டேன். உண்மைஇன்னதென விளங்கவில்லை. இந்தத் தாசில்தார் முதலிய கைதிகளும், எனக்குக் கீழ் வேலை செய்யும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு இம்மாதிரி தந்திரம் செய்து என் கையெழுத்தைப் போலப் பொய்க் கையெழுத்திட்டு ரசீதுகளும், உத்தரவுகளும் தயாரித்து வைத்துக்கொண்டு எல்லாப் பணத்தையும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளுகிறார்கள் என்பதே என்னுடைய அபிப்பிராயம். தாங்கள் என்னுடைய வீட்டைச் சோதனை போட்டுப் பார்க்கச் செய்தால், அவ்விடத்தில் எவ்வளவு பொருள் இருக்கிறது என்பதும், நான் இந்தப் பணத்தை அபகரித்திருக்கிறேனா என்பதும் தெரிந்து போம்” என்றார்.

 

    • உடனே அரசன் தாசில்தாரைப் பார்த்து “நீர் என்ன சொல்லுகிறீர்கள்?’ என்றார்.

 

    • தாசில்தார் “நானாவது, எனக்குக் கீழுள்ள சிப்பந்திகளாவது எவ்விதமான குற்றமும் செய்ததாக யாரும் மெய்ப்பிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் கணக்குகளும், திவான் சாயப்பினுடைய தாக்கீதுகளும் இருக்கின்றன. நாங்கள் ஊருக்குள் சர்க்கார் கட்டிடத்தில் சர்க்கார் உத்தரவின்படி எங்கள் கடமைகளைச் செய்தோமேயன்றி எவ்வித குற்றமும் செய்யவில்லை. நாங்கள் ஒரு பாவத்தையும் அறியோம்’’என்றார்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 59ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 59

59 – மனதை மாற்றிவிட்டாய் அர்ஜுனுக்கு தப்பு செஞ்சவங்களை நம்புறாங்க. வீட்டில அவங்க பேசறத சொல்றத கேட்கிறாங்க. ஆனா இதுவரைக்கும் திவினால இவங்க யாருக்கும் பிரச்சினை வரலன்னு தெரிஞ்சும் அவள நம்பாம சொல்லவரதகூட கேட்காம இப்படி நடந்துக்கிறாங்களே. எல்லாருக்கும் அதிகபட்ச கோபமே

சாவியின் ஆப்பிள் பசி – 31சாவியின் ஆப்பிள் பசி – 31

சற்று தலை குனிந்திருந்த சாமண்ணா நிமிர்ந்தான். “என்ன சொல்றே சிங்காரம்?” என்றான். “அவங்க அந்த்கோஷ் கூடப் போயிட்டிருக்காங்க” என்றான் சிங்காரப் பொட்டு. “சிங்காரம்! இந்த ஊர் நாகரிகம் வேற! இங்கிலீஷ்ல நாலு பேர்கிட்டே தைரியமாப் பேசுவாங்க! அவ்வளவுதான்; அப்புறம் வந்துருவாங்க பாரு”

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1

2. இல்லாதது எது?   ‘அதை’ அவன் மறந்து வெகு நாட்களாயிற்று. இந்தப் பிரபஞ்சத்துக்கே மூல வித்தான ‘அதை’ மறந்து—ஏன் அதை மறுத்தும்—இந்தப் பிரபஞ்சத்தையே தனதாக்கிக் கொள்ளப் போட்டியிட்டு முன்னேறி முன்னேறி வெற்றி கொள்ளும் அவன், வெறியும் கொண்டு, அந்த வெறியில்