Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12

சந்திரன் பேசப் பேச, அதன் அர்த்தத்தை உள்வாங்கிய ரோகிணியது இதயம் சிறுசிறு துகள்களாய் சிதைந்ததைப் போன்று உணர்ந்தாள். ஏற்கனவே மூன்று நாட்கள் சரியாக உண்ணாதது, அழுதழுது சோர்ந்திருந்தது, தற்பொழுது கணவன் கூறிய செய்தியினால் அடைந்த அதிர்ச்சி என அவளை மொத்தமாக வலுவிழக்க செய்ய, கண்கள் இருள்வதைப் போன்று உணரும்போதே, கீழே சரிந்து விழுந்திருந்தாள்.

ஏற்கனவே, ‘இவள் ஏன் இப்படி தப்பர்த்தம் கொண்டுள்ளாள், அப்படியானால் நாம் குழந்தைக்கு எந்த திட்டமும் வைக்கவில்லை என்பது இவளுக்கே தெரியாதா? இவள் குழந்தைக்காக இவ்வளவு ஏங்கினாளா?’ என்ற குழப்பத்தோடே பேசிக்கொண்டு வந்தவன், திடீரென ரோகிணி கீழே விழவும் பதறிவிட்டான்.

சந்திரனுக்கு சில நொடிகள் மூளையும், உடலும் வேலை செய்ய மறுத்து விட்டது. பிறகே அவள் மூர்ச்சையானது நினைவில் வர, அவளை படுக்கையில் விட்டவன், அவளை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டான். அவளிடம் அசைவே இல்லை. அதோடு அவளது முகத்தில் அதீத சோர்வு தெரிய, சிறிது ஓய்வெடுக்கட்டும் என்று எண்ணியவனாய் அவளுக்கு ஒரு போர்வையை போர்த்தி விட்டு, அறையை விட்டு வெளியே வந்தான்.

சந்திரனுக்கு மிகுந்த மன உளைச்சலாய் இருந்தது. என்ன, ஏது என தற்போதைய நிலையை ஆராயும் முன்பு அவனுடைய கைப்பேசி அழைத்தது. ‘இந்த நேரத்தில் இந்தியாவில் இருந்து யாராக இருக்கும்?’ என யோசித்தவாறே கைப்பேசியை உயிர்பிக்க மறுமுனையில் பேசியவர் தன்னை ரோகிணியின் மாமா என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அவரது குரலில் இருந்த பதற்றம் அவனுள்ளும் பதற்றத்தை விதைக்க, ‘என்ன வரப்போகிறது?’ என்று காத்திருந்தவனிடம், “மாப்பிள்ளை நீலவேணி காலையில நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொல்லுச்சாம். ஆஸ்பத்திரி போலம்ன்னு துணைக்கு பக்கத்து வீட்ல இருக்கவங்க கிட்ட கூப்பிட்டு பேசிட்டிருக்க பேசிட்டிருக்க மயங்கிபுடுச்சாம். பக்கத்துல இருக்கவங்க எனக்கு தகவல் சொல்லிப்புட்டு ஆஸ்பத்திரில சேத்துட்டாங்க. எனக்கு பாப்பா கிட்ட சொல்ல முடியாது. அவ பதறிடுவா. நீங்க வேற ஏதாவது காரணம் சொல்லி அவளையும் கூட்டிட்டு கிளம்பி வறீங்களா?” என அவர் கேட்க,

“சரிங்க. நாங்க உடனே கிளம்பறோம்” என்றவன், மேலும் சில விவரங்களை கேட்டுவிட்டு அழைப்பை துண்டித்தான். உடனடியாக கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பன் மகேஷை அழைத்து நிலைமையை விளக்கி அவனால் ஆன உதவியை செய்ய சொல்ல, “அந்த ஹாஸ்ப்பிட்டல்ல நம்ம சீனியர் வேல்முருகன் வொர்க் பண்ணறாரு டா. உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு கம்மி. நானே அவர்கிட்ட பேசி கோ-ஆர்டினேட் பண்ணிக்கறேன். நீ டென்ஷன் இல்லாம வா. நான் போய் பாக்கறேன்” என்று ஆறுதலாக பேசி வைத்தான் அவன்.

சந்திரன் படிக்கும் காலத்தில் அமைதியான சுபாவம் கொண்டவனாக இருந்தாலும், அவனுடைய அறிவும், திறமையும் அவன்மீது அனைவருக்கும் அதீத மரியாதையை தரும். அதோடு யாருக்கு எது தெரியவில்லை என்று கேட்டாலும், பொறுமையாக சொல்லி தருபவன். அப்படி பயனடைந்தவர்களில் மகேஷும் ஒருவன். தனக்கு அத்தனை உதவி செய்த நண்பன், தனக்கொரு உதவி என்று முதல் முறையாக கேட்கவும், தன்னனுடைய வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து உடனடியாக ஒப்புக்கொண்டான்.

மகேஷிடம் பேசிய பிறகு சிறிதே ஆறுதலைடைந்த சந்திரன், விமானம் எப்பொழுது இருக்கிறது என்று பார்க்க கடைசி நேரம் என்பதால், மூன்று விமானங்களில் பயணம் செய்ய வேண்டியதாய் இருந்தது. கூடுதலாக சில மணி நேரங்கள் பயணிக்க வேண்டியது இருந்தாலும், வேறு வழி எதுவும் இல்லாததால் அதையே பதிவு செய்தான். உண்மையில் இதுபோன்ற சிரமங்களை எண்ணிதான் ரோகிணி அம்மாவை பார்க்க வேண்டும் என்று கேட்ட பொழுது கோபம் கொண்டிருந்தான். ஆனால், அவனும் அறியாமல் வார்த்தைகள் தடித்திருக்க, அதனால் அவள் கொண்ட சுணக்கங்களை கூட அவன் அறியவில்லை. ஆனால், ரோகிணியும் உடனடியாக காண வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. அழுதபடியே அவரை காண வேண்டும் என்றிருக்க, அவள் அழுததால் உண்டான கோபம் இவனுடைய வார்த்தைகளில் வெளிப்பட்டிருந்தது.

விமானம் இன்னும் சில மணிநேரங்களில் இருக்க, குளிப்பதற்கு ஹீட்டரை ஆன் செய்து விட்டவன், அவனுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்தான். ரோகிணியின் கலைந்த தோற்றம் அவனது உயிர் வரை வருத்த மனம் முழுதும் பாரமானது. அவளுக்கு சிறிது ஓய்வு வேண்டும் என்று புரிந்தாலும், தற்பொழுது உடனடியாக கிளம்ப வேண்டிய அவசரத்தை உணர்ந்து அவளை மெல்ல எழுப்பினான்.

“ரோ… ரோ… ஒரு எமர்ஜென்சி. உடனே இந்தியா போக வேணும். கொஞ்சம் வேகமா கிளம்ப முடியுமா? நைட் ரெண்டு மணிக்கு பிளைட். சீக்கிரம் கிளம்பணும்” என்க, முதலில் புரியாது விழித்தவள், பிறகு பதற்றம் அடைந்து, “யாருக்கு என்ன ஆச்சு?” என பயத்துடன் கேட்க,

“ஈஸி பேபி. ரிலாக்ஸ். யாருக்கும் எதுவும் இல்லை. என் பிரண்ட் ஒருத்தனுக்கு எமர்ஜென்சி. நான் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்ங்கறதால என்னை ஹெல்ப்க்கு கூப்பிடறான்” என சமாளிப்பாக ஏதேதோ கூறியவன், “நான் லாங் லீவ் தான் போடறேன் ரோ. ரெண்டு மூணு வாரத்துக்கு தேவையானதை எடுத்து வெச்சுக்கோ” என்றான்.

ஏதோ சமாளிக்கறானோ என்று ரோகிணிக்கு தோன்றினாலும், உடலும், மனமும் சொர்ந்திருப்பதால், எதையும் சிந்திக்க இயலாதவளாய் இயந்திர கதியில் கிளம்பி இருந்தாள்.

ரோகிணி குளிக்க சென்ற நேரம், சந்திரன் அவனுடைய தாய்மாமா ஈஸ்வரனை அழைத்தவன், ரோகிணியின் தாயார் மருத்துவமனையில் இருப்பதைக் கூறி, போய் உதவுமாறு கேட்டுக் கொண்டான். உண்மையில் அவனுடைய பெற்றோரிடம் கேட்க வேண்டும் என்றோ, அவர்களுக்கும் சொல்ல வேண்டும் என்றோ சந்திரனுக்கு தோன்றவேயில்லை. அப்படி அவர்கள் பழக்கப்படுத்தவும் இல்லை. அவனுக்கு ஒரு உதவி வேண்டும் என்றால், அவனுடைய மாமா மட்டும் தான் நினைவில் வருவார். அதுவும் வேறு வழியே இல்லை, யாரிடமாவது உதவி கேட்டே ஆக வேண்டும் என்ற சூழலில் மட்டும் தான் கேட்பானே. இன்று தான் நண்பனிடமே முதன்முதலாக உதவி என்று கேட்டிருக்கிறான். அவன் மாமாவிடமும் அரிதாக தான் கேட்பான் என்பதால், அவரும் உடனடியாக அவருடைய மகன் வருணை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பி விட்டார்.

அதன்பிறகு, விமானநிலையம் செல்வது, போர்டிங் பாஸ் எடுப்பது என நேரம் வேகமாக கரைய, இருவருக்கும் இடையில் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. விமானத்தில் ஏறியும் அவ்வாறே! ரோகிணி பேசாமல் கண்களை படுத்துக் கொண்டாள். சோர்வு தான் என்றாலும், அவனுடன் பேச துளியும் பிரியமில்லை. அதிலும் குழந்தை விஷயத்தில் அவன் செய்ததை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. எத்தனையோ முறை கணவன், ‘இதை கூட நீயாக செய்து கொள்ள மாட்டாயா?’ என்று கேட்ட பொழுதெல்லாம், ‘இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒவ்வொன்றிற்கும் யாருடைய துணையையாவது எதிர்பார்த்திருப்பது? இத்தனை பெரியவள் ஆகி, திருமணமும் முடித்து இன்னும் கணவனையே சார்ந்திருந்தால், அவருக்கு கோபம் வராமல் எப்படி இருக்கும்?’ என்று எண்ணி சுயசமாதானம் செய்து கொண்டிருந்தாள். அதோடு ‘நாம் தனித்து செயல்பட வேண்டும் என்று விரும்பும் கணவன்’ என்று புலங்காகிதம் கூட அடைந்திருக்கிறாள். ஆனால், அவன் இன்று கூறிய விஷயம்? தனித்து செயல்படுவது நல்லது தான், அதற்காக குழந்தை வேண்டாம் என்ற முடிவை கூட தனியாக எடுத்துக் கொண்டானா? எத்தனை நாட்கள் அழுது கரைந்திருப்பேன்? எத்தனை பிரார்த்தனைகள், வேண்டுதல்கள்? என்னிடம் ஏதேனும் குறை இருக்குமோ என்று பயந்தது எத்தனை நாட்கள்? நினைக்க நினைக்க அத்தனை வேதனையாய் இருந்தது. மௌனமாக கண்ணீர் வடித்தாள்.

அவன் மீது ஏற்கனவே இருந்த சுணக்கங்களும், கோபங்களும் அப்படியே இருக்க… அதோடு, ‘தான் கேட்ட பொழுது இந்தியாவிற்கு உடனடியாக கிளம்ப முடியாது என்றவன், ஏதோ ஒரு நண்பன் கேட்டான் என்றதும் உடனடியாக புறப்பட்டு விட்டானே’ என்ற நினைவும் வர மனம் சோர்ந்து போனது. ஒரு வருடமாக என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். நம்மை பிடிக்கவே இல்லையா? அவனுக்கு பொருத்தமாக நான் இல்லை என்று நினைத்திருந்தால், என்னை ஏன் திருமணம் செய்து கொண்டான்?’ என்ற சுணக்கங்கள் வேறு அவளை வருத்தியது. அதிலும் அந்த லுனா விஷயம் வேறு, எப்படி இவனால் எனக்கு துரோகம் செய்ய முடிந்தது? என்று அதற்கும் வருந்தினாள். என்னவோ கவலைப்பட அத்தனை காரணங்கள் இருப்பதாய் அவளுக்கு தோன்றியது. உண்மையில் இருக்கவும் செய்தது. எப்படி இவனுடன் வாழ முடியும்? என்னும் கேள்வி மீண்டும் மீண்டும் அவளை அச்சுறுத்தியது. இவனை பிரிந்து தாய்க்கு வேதனை தர முடியாது, இவனோடும் இருக்கவும் முடியாது. கடவுளே என்னை இப்படி ஒரு நிலையில் நிறுத்தும் அளவு என்ன பாவம் செய்தேன்? என கண்ணீரில் கரைந்தவள் அழுதபடியே உறங்கியும் போனாள்.

சந்திரனுக்கு ரோகிணியிடம் பேசினால், எங்கே தோண்டி துருவி கேட்டு விடுவாளோ என்று பயம். ஆகையால், அவனாக எந்த பேச்சையும் வளர்க்கவில்லை. விழித்துக் கொண்டிருந்தால்தானே பேச்சு எழும் என்று உறங்குவது போல படுத்துக் கொண்டவன் சிறிது நேரத்தில் உறங்கியும் இருக்க, ரோகிணியின் மௌன கண்ணீரை அவனால் அறிய முடியவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் தவிர்க்க விரும்பியவர்களாக மௌனமாகவே பயணிக்க, முன்பு சிகாகோ வந்த பொழுது இருபது மணி நேர பயணத்திற்கே போராடியவள், இப்பொழுது மூன்று விமானங்கள், ஆங்காங்கே விமானம் வரும் வரை காத்திருப்பு, முப்பது மணி நேர பயணம் என மிகமிக சோர்ந்து போய்விட்டாள். அவளுடைய தாய்க்குதான் உடல்நலம் சரியில்லை என்பது தெரியாமலேயே இந்தியாவிற்கு வந்து சேர்ந்திருந்தாள் ரோகிணி.

7 Comments »

  1. Arivu kolunthu opportunity than konjama yosikire.aanal avanga amma unakku mutru polling vaikum valiyai rokku kodukka porangale.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: