Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 06

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 06

    • அதைக்கேட்ட சேவகன் ஒருவன் ‘’அந்த நியாயமெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இந்த வழியாகச் சுடுகாட்டிற்கு யாராவதுபிணத்தை எடுத்துக்கொண்டு போனால், அதற்கு அவர்கள் ஒரு பணம் வரி செலுத்திவிட்டே போகவேண்டுமென்பது திவானுடைய கண்டிப்பான உத்தரவு. கொடாவிட்டால், பிணத்தைவிட எங்களுக்கு அதிகாரமில்லை. இது அநாதைப் பிணமென்று நீங்கள் மூங்கில் கயிறு முதலிய சாமான்களைச் சேகரித்தது போல, மகா ராஜனுக்குக் சேரவேண்டிய வரிக்கு ஒரு பணத்தையும் சேகரித்துக் கொண்டல்லவா பிணத்தை எடுத்துக்கொண்டு வரவேண்டும். நீங்கள் இப்போது சொல்வதைக் கேட்டு நாங்கள் உங்களை இன்று விட்டு விட்டால். இன்னும் மற்றவர்களும் இதுபோலவே பல சாக்குப் போக்குகளைச் சொல்லிக்கொண்டே வந்து வரிகொடாமல் ஏமாற்றப் பார்ப்பார்கள். அந்தத் தொந்தரவெல்லாம் எங்களுக்கு எதற்கு? நீங்கள் பணம் கொடுத்தால் விடுகிறோம்; இல்லா விட்டால் விடமாட்டோம்.’’ என்றான்.

 

    • பிணத்தைத் தூக்கிக்கொண்டிருந்தவர்களுள் ஒருவன், “சரி, நமக்கேன் இந்தத் துன்பம். இந்தப் பிணம் புதைபட்டால் என்ன; நடுச்சந்தியில் கிடந்து நாறினால் நமக்கென்ன? நாம் மறுபடி இந்தப் பிணத்தை ஊருக்குள் கொண்டுபோனால், ஜனங்கள் நம்மை அடிக்க வருவார்கள். அதுவுமன்றி இதை இவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு வந்ததற்கு வட்டியாக நாம் மறுபடி இதைச் சுமந்து கொண்டு போகும் தொல்லை நமக்கேன்? பிணத்தை இப்படியே சுங்கன் சாவடிக்கெதிரில் போட்டுவிட்டுப் போய் விடுவோம். இவர்கள் எப்படியாவது செய்து கொள்ளட்டும்’’ என்று கூறிப் பிணத்தைக் கீழே வைக்க எத்தனித்தான்.

 

    • உடனே சேவர்களிருவரும் மிகுந்த கோபங்கொண்டு அவர்களை முன்னிலும் அதிக மூர்க்கமாக அதட்டி, “அடே இங்கே வைப்பீர்களானால், கண்ணைப் பிடுங்கிவிடுவோம். இங்கே நாற்றமெடுத்தால், நாங்கள் இருந்து சுங்கன் வசூலிக்க முடியாமல் போகிவிடும். மகாராஜனுக்கு அதனால் ஏராளமான வரி நஷ் டமாய் விடும். அதற்கு நீங்களே உத்தரவாதியாவீர்கள். உங்கள் அடையாளம் எங்களுக்கு நன்றாய்த் தெரியும்; நாங்கள் உங்களை இலேசில் விடமோட்டோம். நீங்கள் திவானுடைய கொடிய ஆக்கினைக்கு ஆளாவீர்கள் ஜாக்கிரதை’’ என்றார்கள்.

 

    • முதலில் பேசிய முக்கியஸ்தன், “சரி; நாங்கள் பிணத்தை இங்கே வைக்கவில்லை. இந்த ஊர் மகாராஜன் பிச்சைக்காரப் பிணத்தின் வாயிலிருக்கும் அரிசியைக் கூடத் தோண்டி எடுக்கிறவன் என்பது எங்களுக்குத் தெரியாது. அது தெரிந்திருந்தால், வரும்போது ஒரு பணம் கொண்டு வந்து உங்கள் இழவுக்கு அழுதிருப்போம். இருக்கட்டும். நாங்கள் பிணத்தை எடுத்துக் கொண்டு, இருளான பிறகு ஊருக்குள் போய், மகாராஜனுடைய அரண்மனை வாசலில் போட்டுவிட்டுப் போகிறோம். மனிதன் பிறப்பது முதல், தண்ணீர் குடிப்பது, சாதம் சப்பிடுவது, துணி கட்டுவது, உழைத்து ஜீவனம் செய்வது, கடைசியில் செத்து இந்த நகரத்தை விட்டு எமனுலகத்துக்கும் போவது முதலிய எல்லாவற்றிற்கும் வரி வாங்குகிறவனான அரசனுக்குத்தான் இந்த அநாதைப் பிணமும் சொந்தம். ஆகையால் இதை மகாராஜன் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஊருக்குள் இந்த அசுத்தம் இருக்கக்கூடாதுஎன்று நினைத்து நாங்கள் எங்கள் வேலையை எல்லாம் விட்டு மெனக்கட்டு இவ்வளவு தூரம் பிரயாசைப்பட்டு வந்ததற்கு இந்த ஊர் மகாராஜன் எங்களுக்குத்தான் ஏதாவது பணம் கொடுக்கவேண்டும். அதை விட்டு நாங்கள் இதற்கு வரிப்பணம் கொடுப்பது என்றால், அந்த நியாயம் எந்த உலகத்திலும் இல்லாத அதிசய நியாயமாகத்தான் இருக்கிறது. ஆகையால், நாங்கள் உங்களுடைய உத்தரவுப்படியே பிணத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு போகிறோம். நீங்கள் கவலைப்படவேண்டாம். ஐயா மார்களே!’’என்று கூற, மற்ற எல்லோரும் அதைக் கேட்டவுடனே, வந்த வழியாக பிணப்பாடையைத் திருப்பினர். சேவகர்கள் திருப்தி அடைந்து, “சரி; நீங்கள் எப்படியானாலும் செய்து கொள்ளுங்கள். நாங்கள் அதிகாரத்தைச் செலுத்தியே தீர வேண்டும். நீங்கள் பிணத்தை அரண்மனை வாசலில் கொண்டுபோய்ப் போடுங்கள். வரிப்பணத்திற்குப் பதிலாக இந்தப் பிணத்தை மகாராஜன் தம்முடைய பொக்கிஷ சாலையில் அடமானமாக வைத்துக் கொள்ளட்டும்’’என்று கூறிவிட்டுத் தங்கள் சாவடியை அடைந்தனர்.

 

    • அந்த ஊர் மகாராஜன் சகிக்க வொண்ணாத வியப்போடும் திகைப்போடும் அங்கு நடந்த விஷயங்களைக் கடைசி வரையில் கவனித்திருந்தும், பிணம் திருப்பிவிடப்பட்டதைக் கண்டு,உடனே சேவகர்களைப் பார்த்து, ‘’ஐயா சேவகர்களே! நீங்கள் இருதிறத்தாரும் பேசிக்கொண்டதை எல்லாம் நான் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். உங்கள் பேரிலும் தப்பிதமில்லை. அவர்கள் பேரிலும் தப்பிதமில்லை. திவான் ஏற்படுத்திய இந்த வரி உத்தரவு நியாயமானதோ அநியாயமானதோ என்பதை ஆராய்ச்சி செய்ய உங்களுக்கு அதிகாரமில்லை. ஆகையால், நீங்கள் தாட்சனியமின்றி உங்களுடைய கடமையைச் செலுத்தியது நியாமான காரியமே. அதுபோல, அவர்கள் சொல்வதும் நியாயமாகவே படுகிறது. அநாதையாக நாறிக் கிடந்த ஒரு பிணத்தைப் பொதுஜன நன்மையைக் கருதி அவர்கள் எடுத்து வந்ததைக் குறித்து அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்து, அவர்களுக்குச் சன்மானம் செய்ய வேண்டுவது நியாயமாக இருக்க, அவர்களிடம் வரிப்பணம் கேட்பதும், பிணத்தை மறுபடி ஊருக்குள் தூக்கிக்கொண்டு போகச் சொல்வதும் தர்மமல்ல. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்த ஊர் மகாராஜன் இம்மாதிரி பிணத்திற்கு வரிபோட வேண்டுமென்பது ஒரு நாளும் உத்தரவு செய்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். நானும் இந்த ஊர் மகாராஜனுக்குச் சொந்தக்காரன்தான். அவருடைய மனப்போக்கு எனக்கு நன்றாகத் தெரியும். அநேகமாய் இந்த உத்தரவை திவான்தான் பிறப்பித்திருக்க வேண்டும். அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்த காலத்தில், இப்படி அநாதையாக இறப்பவர்களிடம் வரி விதிக்க வேண்டாம்என்று உத்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருடைய மனசில் பட்டிருக்காது என்றே நினைக்கிறேன். நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். இந்த அநாதைப் பிணத்தை இவர்கள் சுடுகாட்டிற்குக் கொண்டுபோய்ப் புதைக்கும்படி நீங்கள் விட்டு விடுங்கள். நான் உடனே திவானிடம் போய் இதைப்பற்றி விசாரித்து, இப்போது இங்கே நடந்த விஷங்களைத் தெரிவித்து, இதற்குத் தக்க புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்க ஏற்பாடு செய்கிறேன். இப்போது இந்தப் பிணத்தைப் புதைக்க நீங்கள் அநுமதி கொடுத்ததைப்பற்றி உங்கள்மேல் குற்றம் ஏற்படாதபடி நான் பார்த்துக் கொள்ளுகிறேன்’’என்றார்.

 

    • அதைக் கேட்ட சேவகர்களுள் ஒருவன், ‘’ஐயா! அந்த வம்பெல்லாம் எங்களுக்கு வேண்டாம். யாரோ வழியில் போகிறவராகிய உம்முடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு நாங்கள்பிணத்தை விட்டு, பிறகு துன்பத்தில் மாட்டிக்கொள்ள இஷ்டமில்லை. நீர் இப்போது சொல்லுகிறபடி திவானிடம் போய் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லுவீர் என்பதை நாங்கள் எப்படி நிச்சயமாக நம்புகிறது? இவர்களுக்கு நாங்கள் அநுமதி கொடுத்த பிறகு நீர் உம்முடைய பாட்டில் உம்முடைய வீட்டுக்குப் போய் விட்டால், நாங்கள் என்ன செய்கிறது? அதெல்லாம் பலியாது. நீர் உம்முடைய பாட்டைப் பார்த்துக்கொண்டு போம். நீர் மகாராஜனுடைய சொந்தக்காரரா இருந்தாலும் சரி, அல்லது, மகாராஜனாகவே இருந்தாலும் சரி, உம்முடைய பேச்சை ஆதாரமாக வைத்துக்கொண்டு சர்க்கார் உத்தரவை மீறி நடக்க எங்களுக்கு இஷ்டமில்லை. உமக்கு அவ்வளவு அக்கரை இருந்தால் நீரே அந்த ஒரு பணத்தைக் கொடுத்துவிட்டு பிறகு அதை அரண்மனை கஜானாவிலிருந்து வசூலித்துக்கொள்ளும். அல்லது, உம்மிடம் இப்போது பணம் இல்லையானால் இவர்கள் இவ்விடத்திலேயே பிணத்தை வைத்துக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, உடனே நீர் ஊருக்குள் போய் திவானுடைய உத்தரவையோ, அல்லது, வரிப்பணத்தையோ கொண்டுவந்து சேரும். அதுதான் ஒழுங்கான காரியம். எங்களுக்கு அதனால் பாதகம் ஏற்படாது” என்றான்.

 

    • அதைக்கேட்ட மகாராஜன் அந்தச் சேவகர்களின் கண்டிப்பையும் ஒழுங்குதவறாத மனப்பான்மையையும் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். தமது தேசத்தில் அத்தகைய அக்கிரமமான வரி ஏற்படுத்தப்பட்டிருந்த விஷயம் அவரது மனத்தை ஒரு புறத்தில் வதைத்ததானாலும், கீழ்ச்சிப்பந்திகள் அவ்வளவு திறமையாகவும் நிலை தவறாமலும் நடந்து கொண்டதைப்பற்றி இன்னொரு புறத்தில் பெருமகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாயிற்று. மகாராஜன் உடனே தமது சட்டைப்பையிலிருந்து ஒரு பணத்தை எடுத்து “நீங்கள் சொல்வது நியாயமான விஷயம். வரிப்பணத்தை நானே செலுத்துகிறேன். வாங்கிக்கொண்டு ரசீது கொடுங்கள். அதில் ஓர் அநாதைப் பிணத்திற்காக ஒரு தருமவானால் செலுத்தப்பட்ட வரிப்பணம் ஒன்று என்று எழுதிக்கொடுங்கள்’ என்று கூறிப் பணத்தைக் கொடுத்தார்.

 

    • சேவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவ்விதமே இரசீது எழுதிக் கொடுத்தார்கள். அதன் அடியில் யார் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்பதை அரசன் கவனித்தான். ரெவினியு தாசில்தார் என்ற உத்தியோகப் பெயரின்மேல் யாரோ ஒருவர் கிறுக்கெழுத்தில் கையெழுத்துச் செய்திருந்தார். அதுவுமன்றி திவான் லொடபட சிங் பகதூர் என்ற முத்திரையும் சுத்தமாக அந்த இரசீதில் குத்தப் பட்டிருந்தது. தமது புதிய திவான் அந்தப் பழைய காலத்து முத்திரையை எல்லா தஸ்தாவேஜிகளுக்கும் உபயோகித்து வருகிறார் என்று அரசன் அதற்குமுன் எண்ணிக் கொண்டிருந் தமையால், அந்த வரியும் தமது புதிய திவானாலேயே ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு “ஏன் அப்பா இந்த வரி எப்போது முதல் அமுலில் இருந்து வருகிறது?’’ என்றான்.

 

    • முன் பேசிய சேவகன் ‘’இது சுமார் ஏழெட்டு வருஷ காலமாக அமுலில் இருந்து வருகிறது’’ என்றான். அதைக் கேட்டுக்கொண்ட மகாராஜன் “சரி; பிணத்தை இனி விடுங்கள்’’என்று கூற, உடனே சேவகர்கள் அநாதைப் பிணத்தை மயானத்திற்குள் கொண்டுபோக அநுமதி கொடுத்தனர். குடியானவர்கள் பிணத்தை எடுத்துக்கொண்டு சென்றனர். மகாராஜனும் உடனே அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுத் தனது அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். தான் உடனே தனது திவானை வரவழைத்து, அந்த அபூர்வமான வரியைப் பற்றிய பூர்வோத்தரங்களைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும் பதைபதைப்பும் எழுந்தெழுந்து தூண்டினவானாலும், அப்போது இரவு காலம் வந்துவிட்ட தாகையால், ஒரு வேலைக்காரனை அழைத்து, காலையில் தான் திவானுடன் அவசரமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமாதலால், மறுநாட்காலை பத்து மணிக்கு அவர் வந்து தம்மைப் பார்க்க வேண்டும் என்று அந்த வேலைக்காரன் மூலமாக திவானுக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். ஆனாலும் அரசனுக்கு அன்றைய இரவு முழுதும் தூக்கம் பிடிக்கவில்லை. உயிருடன் இருக்கும் மனிதருக்கு வரி ஏற்படுத்துவதே முறையன்றி, இறந்து போனவருக்கு வரி ஏற்படுத்துவது அரசனுக்குப் புதுமையாகவும் தான் அதற்கு முன் எவ்விடத்திலும் கேட்டறியாத விந்தையாக இருந்தது. அத்தகைய அக்கிரமமான வரியை விதிக்க மேதாவியும் சட்ட நிபுணருமான தனது திவானுடைய மனதும் இடங்கொடுத்ததா என்ற ஆச்சரியமும் மலைப்பும் தோன்றி வதைத்துக் கொண்டேஇருந்தன. அதுவுமன்றி, அநாதைப் பிணத்தை எடுத்து வந்த மனிதர்கள் “இந்த ஊர் அரசன் பிச்சைக்காரப் பிணத்தின் வாயிலுள்ள அரிசியைக்கூடத் தோண்டி எடுப்பவன்’’என்றதும், பிணத்தை அரண்மனை வாசலில் கொணர்ந்து போடுவதாகவும், பொக்கிஷ அறையில் அடமானம் வைப்பதாகவும் அவர்கள் சொன்னதும்,கூர்மையான ஆயிரம் ஈட்டிகளைக் கொண்டு குத்துவதுபோல மகாராஜனது மனத்தைப் புண்படுத்தி, அவமானத்தினால் அவனது தேகம் குன்றிப்போகும்படி செய்தது. அத்தகைய இழிவையும் தூஷணையையும் தனக்கு உண்டாக்கி வைத்த மூட திவானைத் தான் தக்கபடி சிட்சிக்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தெழுந்து மேலாடி நின்றது. அவ்விதமான நிலைமையில் அரசன் இந்த இரவு முழுவதும் தூங்காமல் இருந்து, மறுநாட் காலையில் எழுந்து, தனது காலைக்கடன்களை முடித்துக்கொண்டு தனது ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்து திவானினது வருகையை நிரம்பவும் ஆவலோடு எதிர்பாத்திருந்தான்.

 

    • அவனது திவானுக்கும் அந்த இரவு மிகவும் துன்பகரமானதாகவே முடிந்தது. அரசன் எந்த விஷயத்தைப்பற்றி அவசரமாகத் தம்மிடம் பேச எண்ணுகிறார் என்பதைப்பற்றி அளவற்ற ஆவல் கொண்டு எண்ணிக்கையற்ற யூகங்களும் யோசனைகளும் செய்து எதையும் குறிப்பாக நிச்சயிக்க மாட்டாதவராய் இரவு முழுதும் சலனப்பட்டவராகவே இருந்து, மறுநாட் காலையில் எழுந்து, தமது காலைக்கடன்களை முடித்துக்கொண்டு அரசனுக்கு எதிரில் வந்து ஆஜராய் அவனை வணங்கினார்.

 

    • அதற்குமுன் அரசன் திவானுக்குக் காட்டிய மரியாதையையும் அன்பையும் காட்டாமல், ஆசனமும் கொடாமல் அப்படியே நிற்க வைத்துப்பேசவே, திவானுக்கு அது முற்றிலும் விபரிதமாகத் தோன்றியதன்றி, அவரது மனத்தில் ஒருவிதமான கலக்கத்தையும் சஞ்சலத்தையும் உண்டாக்கியது. தாம் ஏதேனும் தவறு செய்து விட்டதாக எவரேனும் அரசனிடம் விண்ணப்பம் செய்து கொண்டிருப்பதனால்தான் அரசன் தம்மை அவ்வாறு அருவருப்போடும் அவமரியாதையாகவும் நடத்துகிறார் என்று நிச்சயித்துக் கொண்டு, அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று அவனது சமூகத்தை எதிர்பார்த்தவராயிருக்க, மகாராஜன் திவானைநோக்கி, “ஐயா! திவானே! நம்முடைய ராஜ்ஜியத்தில் வரிகள் விதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தில் எனக்கு முக்கியமான இரண்டு மூன்று சந்தேகங்கள் தோன்றி இருக்கின்றன. அவைகளை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று உங்களை வரவழைத்தேன். அதாவது, நம்முடைய நகரத்தில் இறந்து போகிறவர்களுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறதே, அது என்ன கருத்தோடு விதிக்கப்படுகிறது? ஒரு மனிதர் இந்த நகரத்தில் உயிரோடிருந்தால், அவருக்கு நம்மால் செய்து கொடுக்கப்படும் பாதுகாப்பு, பலவகைப்பட்ட செளகரியங்கள் முதலியவைகளைக் கருதி அவரிடம் நாம் வரிகள் வசூலிப்பது நியாயமே. அவருடைய உயிர் இந்த நகரத்தை விட்டும், இந்த உலகத்தையே விட்டும் போன பிறகு, அவரிடம் எந்த உத்தேசத்தோடு வரி வசூலிக்கப் படுகிறது? வரி மனிதருடைய உயிரைப் பொருத்ததா? அல்லது, அவருடைய உடம்பைப் பொருத்தா? இதுதான் என்னுடைய முதல் சந்தேகம். இறந்து போனவர் அநாதையாகவும்,சொத்து என்பதே இல்லாதவராகவும் இருந்தால், அந்த வரியை யார் செலுத்துகிறது என்பதைப் பற்றியாவது அல்லது, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட வரியைத் தள்ளுபடி செய்து விட வேண்டும் என்பதைப் பற்றியாவது, உங்களால் ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறா?’’என்றான்.

 

    • அதைக் கேட்ட திவான் திடுக்கிட்டு மிகுந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்து, “மகாராஜா உயிரோடிருக்கும் மனிதருக்கு வரி விதிக்கிறதென்று நான் இது வரையில் தெரிந்துகொண்டிருக்கிறேனேயன்றி இறந்து போனவருக்கு யாரும் வரி விதித்ததாக நான் கேள்வியுற்றதே இல்லை. ஒரு வர்த்தகருக்கு நாம் வரி விதிப்பதாக வைத்துக்கொள்வோம். நம்முடைய உத்தரவு அவரிடம் போய்ச் சேருமுன் அவர் இறந்துபோகிறதாகவும், அந்த வர்த்தகத்தை அவருடைய பிள்ளை நடத்துகிறதாகவும் வைத்துக் கொள்வோம். அந்த உதாரணத்திலும், வரி விதிப்பது ஒரு தொடர்ச்சியான வர்த்தகத்தைப் பொருத்ததேயன்றி, மனிதனைப் பொருத்ததல்ல. ஒரு மனிதன் இறந்தபின், இவன் இறந்ததற்காக இந்த உலகத்தில் எந்த தேசத்தாரும் வரி விதித்ததாகவோ, அல்லது, விதிக்கிறதாகவோ நான் கேள்வியுற்றதே இல்லை. நம்முடைய நகரத்தில் அப்படிப்பட்ட வரியே கிடையாது’ என்றார்.

 

    • அதைக் கேட்ட மகாராஜன், “நீங்கள் சொல்வது நிச்சயந் தானா? உங்களுக்கு வேண்டுமானால், அவகாசம் கொடுக்கிறேன். நீங்கள் போய் உங்களுக்குக் கீழே இருக்கும் சிப்பந்திகள் என்னென்ன வரிகள் விதித்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டு நன்றாகத் தெரிந்து கொண்டு வந்து, அதன்பிறகு என் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்’’என்றான்.

 

    • திவான் ‘’மகாராஜா இந்த நகரத்தில் இன்னின்ன வரிகள் போடப்படுகின்றன என்பது எனக்கு மனப்பாடமாகத் தெரியும். வரி விதித்து வசூலிக்கும் இலாகாவை நானே நேரில் அதிக ஜாக்கிரதையோடு பார்த்து வருகிறேன். ஆகையால், நான் சொன்னதில் சந்தேகமே இல்லை. நம்முடைய ராஜ்ஜியத்தில் இறந்து போகிற மனிதர்களுக்கு, அதாவது பிணங்களுக்கு வரி விதிக்கப்படுவதே இல்லை. அப்படிப்பட்ட பரம அசம்பாவிதமான காரியம் எதுவும் நான் இருக்கும் வரையில் தங்களுடைய நகரத்தில் நடக்காது என்பதைத் தாங்கள் நிச்சயமாக எண்ணிக் கொள்ளலாம்’’என்று அழுத்தமாகக் கூறினார்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தனி வழி 1 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 1 – ஆர். சண்முகசுந்தரம்

1        ‘கூத்தப் பனையோலை குயிலணையும் பொன்னோலை! – இப்பக் கூந்தப் பனை சாஞ்சா குயில் போயி எங்கணையும்?’ வண்டிக்கார நாச்சப்பன் அவனனுக்கே சொந்தமான தனிப்பாணியில் ஆனந்தமாகப் பாடிக் கொண்டே தன்னுடைய ஒற்றை மாட்டு வண்டிச் செவலைக் காளையைத் தட்டி ஓட்டிக்

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 8சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 8

பாகம்- 8   “கண் என்னும் கூட்டில் என்னை சிறை வைத்துவிட்டு பொய் என்று சிரிக்கிறாய்! நீ சிரிப்பதில் சிக்கிவிட்டதடி என் இதயம்… சிறையிலிருந்து வெளியில் வர வழியிருந்தும்! மனமின்றி தவித்து கொண்டிருக்கிறேன் நீ என்னை விடுவித்துப் பாரேன் உன் கண்

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 7வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 7

குறுக்கு சிறுத்தவளே  பாகம் ஏழு  “இப்போ நான் என்ன கேட்டேன்! ஒரு ஆறு மாசம் ஜிம்முக்கு போனா வெயிட் குறைஞ்சிடுவேன். அதுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா என்னவாம்! அதுக்கு பெறுமானம் இல்லாதவளா ஆகிட்டேனா?”, காலை கண் விழித்ததில் இருந்து அந்த அரை