Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 11

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 11

 

சந்திரனுக்கு ரோகிணி பேசியது எதுவும் புரியவில்லை. ‘நான் என்ன கேக்கறேன். இவ என்ன பதில் சொல்லறா? சாப்பிட்ட மாதிரியும் தெரியலை, இப்படி பேசாம படுத்துட்டா’ என குழம்பியவன், “ரோ, சாப்பிடாம தூங்கற?” என அவளது முகத்தை மறைத்திருந்த போர்வையை பார்த்துக் கேட்டான். ரோகிணிக்கு எரிச்சலாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு, “வேண்டாம்” என்று பதில் கூறினாள்.

இத்தனை நேரம் அழுது கரைந்தவள் தான், இனியும் அழ வேண்டும் அதுவும் அவன் அறியாமல்! அதற்கு தனிமை வேண்டும், அது முடியாத பட்சத்தில் இந்த போர்வையேனும் வேண்டும். இங்கு தான் ரோகிணி தவறுகிறாளோ? நமது விருப்பமோ, வெறுப்போ அதை வெளிப்படுத்த வேண்டும். வாய் வார்த்தையாக அல்லது செய்கையாக. நமக்குள்ளேயே புதைக்கும் விஷயங்களை எப்படி மற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்? ரோகிணிக்கு சந்திரனின் செய்கைகள் பிடிக்கவில்லை, அதை சந்திரன் கூட அறியமுடியவில்லை என்பதுதான் துயரம்.

ரோகிணியின் நிலை அறியாதவனோ, “உடம்புக்கு என்ன ரோ?” என அருகில் அமர்ந்து கேட்க, இவனை சமாளிக்காமல் தனிமை கூட கிடைக்காது என்று புரிந்து பேசாமல் எழுந்து அமர்ந்தாள். அவள் சலிப்புடன் எழுந்து அமர்ந்தது, அவளுடைய சோர்வான தோற்றத்தின் முன்பு சந்திரனின் கவனத்தில் பதியவில்லை. அவளுடைய நழுங்கிய தோற்றமும், வெளிறிய முகமும், சோர்ந்த விழிகளும் சந்திரன் இதுவரை அவளிடம் காணாதது.

“என்ன ஆச்சு ரோ?” என மருத்துவனாய் அவளது உடல் சூட்டை ஆராய.., தவிப்பும், தயக்கமுமாய் அவனை ஏறிட்டவள் “அம்மாவை பார்க்கணும்” என்றாள் மெலிந்து போன குரலில். ஏற்கனவே மனதில் அரித்துக் கொண்டிருப்பது தான், இங்கு வந்து இத்தனை மாதங்கள் ஆகப் போகிறது. இதுவரை இந்தியா செல்வது பற்றிய சிறு பேச்சினை கூட கணவன் தொடங்கவில்லை என்ற சிந்தனை அவ்வப்பொழுது எழுவதுண்டு. நேரம்கிடைக்கும் பொழுது கேட்க வேண்டும் என்று கூட எண்ணியிருக்கிறாள். இப்பொழுது தனக்கு ஒரு துயரம் என்றதும், தாயின் மடியை தான் மனம் தேடியது. அதனால் தான் கணவனிடம் இருந்த சுணக்கத்தையும் மீறி அவ்வாறு கேட்டாள்.

சந்திரனுக்கு ஏற்கனவே எரிச்சல் மூண்டிருந்தது. விருந்து நடந்த இடத்தில் அங்கிருந்தவர்கள் இவனை ஒரு மாதிரி பார்த்தது, இவனிடம் கூறாமல் அங்கிருந்து இவள் தனியாகவே கிளம்பி வந்தது, இப்பொழுது என்ன, ஏது என்று பதறினால், சிறுகுழந்தையைப் போன்று தாயை கேட்பது போன்ற செயல்கள் எல்லாம் எரிச்சலையும், கோபத்தையும் கொடுக்க, “சின்ன குழந்தையா நீ? அம்மாவை பாக்கணும், ஆட்டுக்குட்டியை பாக்கணும்ன்னு சொல்லற. அப்படி நினைச்ச உடனே இந்தியாக்கு போயிட முடியுமா? நாம எவ்வளவு தூரத்துல இருக்கோம். அதுவும் இல்லாம மூணு மாசம் முன்னாடியே புக் பண்ணா தான் நார்மல் பணம், நாள் நெருங்க நெருங்க புக் பண்ணுனா அவ்வளவு தான், அதுவும் நமக்கு ரெண்டு பிளைட்” என கோப மிகுதியில் சினந்தான். உண்மையில் கோபத்தில் தான் ஏதேதோ பேசிவிட்டான். மத்தபடி அவன் எப்பொழுதும் பணத்திற்கு கணக்கு பார்க்க மாட்டான், அவன் சம்பளமும் அப்படி பார்க்கும் அளவு இல்லை, மிக மிக அதிகம்.

ஆனால், சிந்திய பால் சிந்தியது தானே! அதிலும் இன்னும் கணவனிடம் உரிமையும், அந்நியோன்யமும் பாராட்டாத பெண் ரோகிணி, அதற்கு ஏணி வைத்தாற்போன்று இன்று கேள்விப்பட்ட வர்ணனைகள் எல்லாம் அவளை ஒரு விரக்தியான நிலையில் தள்ளியிருந்தது. இந்த சூழலில் இவள் தான் கோபமாக இருக்க வேண்டும். இங்கே நேரெதிர் மனநிலை நிலவினால்? என்ன பேச, என்ன பதில் கூற என்று எதுவும் புரியாத நிலை. “டையர்டா இருக்கு” என்று முணுமுணுப்பாய் அறிவித்தவள், பேசாமல் படுத்துக் கொண்டாள்.

தோள்களை குலுக்கியவன், என்னமோ பண்ணு என்னும் ரீதியில் எழுந்து சென்று விட்டான். அவனும் எதுவும் உண்ணாததால், வீட்டில் இருந்த பிரெட்டை டோஸ்ட் செய்து உண்டுவிட்டு படுத்துக் கொண்டான். ரோகிணி வந்தபிறகு இது போன்ற இன்ஸ்டன்ட் உணவு வகைகளுக்கு அவசியமே இல்லாது இருந்தது. அவ்வப்பொழுது பிரெட் உப்புமா என்று சுவையாக எதையோ செய்வாள். அதற்காக வாங்கியது இப்பொழுது உபயோகமாகி இருந்தது. அவனுக்கு தெரியவில்லை, இனி அதைதான் அவளை பிரிந்து உண்ண வேண்டும் என்று. புரிய வைக்க வேண்டியவளும் மௌனம் சாதிக்க, முயற்சி எடுக்க வேண்டியவனுக்கும் என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாது.

அதன்பிறகு வந்த நாட்களின் ரோகிணி மெளனமாக நடமாடினாள். சந்திரனுக்கு எதுவும் விளங்கவில்லை. ரவி வீட்டின் பார்ட்டி முடிந்த மூன்றாம் நாளில் அர்ஜுன் வந்து சந்திரனை பார்க்க வந்திருந்தான். அர்ஜுன் குழந்தைகள் நல மருத்துவர், சந்திரன் இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஆகையால் அடிக்கடி பார்த்துக் கொள்ள இயலாது. வேலை செய்வதும் வெவ்வேறு பிளாக்களில். ஆகையால் அர்ஜுன் தேடி வந்ததும் ஆச்சர்யத்துடன் வரவேற்ற சந்திரன் பொதுவாக பேசிக் கொண்டிருந்தான்.

அர்ஜுன் சந்திரனுடன் பேசியபடி இருந்தாலும், அவன் கூற வந்ததை எப்படி தொடங்க என்று புரியாமல் தவிப்பாக உணர்ந்தான். “ரோகிணி எப்படி இருக்காங்க?” என்றான் பொதுவாக. “ஹ்ம்ம் ஷீ இஸ் குட் டா. அம்மாவை பாக்கணும் சொல்லிட்டு இருந்தா? கூட்டிட்டு போகணும்” என பதில் கூறிய நண்பன் மிகவும் இயல்பாக இருப்பதை கவனித்தான். மேலும் என்ன கேட்க, எப்படி பேச என புரியாமல், “உங்களுக்குள்ள எதுவும் சண்டை…?” என இழுக்க, “எங்களுக்குள்ள என்ன சண்டை வரப்போகுது டா” என்று புரியாத பாவனையுடன் சந்திரன் பதில் கூற, அர்ஜுன் குழப்பமானான். மேற்கொண்டு எதுவும் பேசும்முன்பு சந்திரனுக்கு வேலை வரவும், “சரி மச்சான், உன்கிட்ட கொஞ்சம் பேசணும், லெட்ஸ் ஸ்பென்ட் சம் டைம் லேட்டர்” என்று விடைபெற்றான் அர்ஜுன்.

‘சண்டை எதுவும் இல்லையா? ஏன்? அப்படியே என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லைன்னாலும், இவன் முகத்துல அப்படி எதுவும் தெரியலையே! நார்மலா தானே இருக்கான்’ என்னும் குழப்பத்தோடே தான் வேலை செய்யும் பகுதிக்கு சென்றான்.

ரோகிணியின் நிலையும் அதுவே தான். இப்பொழுது என்ன செய்ய என்று புரியவில்லை. அன்று அவசரத்தில் அம்மாவை காண வேண்டும் என்று தோன்றியது தான். ஆனால், உண்மையில் அவளுடைய தாயை அவளால் எதிர்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஒற்றை ஆளாய் வளர்த்து ஆளாக்க தாய் என்ன பாடு பட்டிருப்பாள் என்று அவளுக்கு நன்கு தெரியும். இந்த நிலையில், தானும் கணவனை பிடிக்கவில்லை என்று நின்றால்? அதன்பிறகு அவருக்கு நிம்மதி என்ற ஒன்றே இருக்காதே என்று கலங்கி போனாள்.

அதற்காக இந்த வாழ்க்கையை தொடர முடியுமா? மனதில் பூதாகரமாய் எழுந்த கேள்வி, அவளை வெகுவாக பயமுறுத்தியது. என்ன யோசித்தும், தன்னால் இப்படி ஒரு வாழக்கையை வாழ முடியாது என்று புரிந்தது. அடுத்து என்ன? என்ற கேள்வி அவளை மீண்டும் அச்சுறுத்த கதறி அழுதாள். மூன்று நாட்களாக அதை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறாள். அழுவது, அழுது கரைவது, கரைந்து சோர்வது… இது மட்டுமே வாடிக்கையாக நடந்தது.

‘அம்மாவை போன்று தனித்து வாழ வேண்டும்’ என்பது மட்டுமே எண்ணமாக இருக்க, ஆனால், அம்மாவுக்கு நானாவது இருந்தேன். எனக்கு குழந்தைப்பேறு கூட இல்லாமல் இந்த கடவுள் சோதிக்க வேண்டுமா? என்று மீண்டும் கதறினாள். என்ன யோசித்து என்ன? அவளால் இந்த நரகத்தில் இருந்து செல்ல இயலாது. அவளுடைய தாய்க்காக வேணும் இந்த வாழ்வை அவள் தொடர்ந்தே ஆக வேண்டும். ஆனால், முடியவே முடியாத விஷயத்தை எப்படி செய்ய முடியும்? மனம் சோர்ந்து போனது மட்டும் தான் மிச்சம்.

‘பட்ட காலிலே படும்’ என்பார்கள். ரோகிணிக்கும் அதே நிலை தான். ஒவ்வொரு மாதமும் அவள் குழந்தைக்காக வெகுவாக ஏங்குவாள். அந்த கனவை கலைக்கும் விதமாய் வரும் தீட்டு அவளுக்கு நரக வேதனை. அந்த நரக வேதனையை, அவள் இந்த துன்பத்திலா அனுபவிக்க வேண்டும். அழுது சோர்ந்து உறங்கி எழுந்தவள், உடலின் மாற்றத்தை புரிந்து கொண்டாள்.

சந்திரனின் மறுபக்கம் தெரிந்த, கடந்த மூன்று நாட்களாக அழுத அழுகையை எல்லாம் சேர்த்து, ஏன் இன்னும் அதைவிட அதிகமாய் மீண்டும் அழுதாள். ‘கடவுள் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை தந்ததோடு இல்லாமல், எனது வாழ்வுக்கு பற்றுக்கோல் கூட தராமலா சோதிக்க வேண்டும்?’ என்ற எண்ணம் எழ அழுது கரைந்தாள். வெகுநேரமாய் அலறும் வீட்டின் அழைப்பு மணி கூட அவள் சிந்தையை கலைக்கவில்லை.

வீட்டின் அழைப்பு மணியை இருமுறை அலற விட்ட சந்திரனோ, பதில் இல்லாது போக, அவனிடம் இருந்த சாவியால் கதவை திறந்து உள்ளே வந்தான். என்றும் இல்லாத வகையில் வீடு முழுவதும் இருள் சூழ்ந்து இருந்தது. ரோகிணி வெளியில் சென்றிருப்பாள் என்று எண்ண முடியாமல், அறையினுள் இருந்து விசும்பல் ஒலி கேட்க, விரைந்து படுக்கையறையினுள் சென்றான்.

“ரோ… என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்க?” என அவளுடைய தலையை ஆதரவாய் தடவியபடி கேட்க, தன்னிலை உணர்ந்தவள், முகத்தை துடைத்து, தன்னை முயன்று சமன்படுத்தியபடி, “ஒன்னும் இல்லைங்க…” என்றாள் கரகரத்த குரலோடு.

அவளது விழிகளை கூர்ந்து நோக்கியவன், “அழுதயா? என்ன ஆச்சு?” என கேட்க, அந்த பார்வையிலும், குரலிலும் இதுவரை இல்லாத ஒருவித உணர்வு, அதீத கூர்மை… அது அவளை கட்டிப்போட, அவள் இதழ்களை தானாக பதில் சொல்ல வைத்தது.

“தலைக்கு குளிச்சிட்டேங்க…” என்று கூறும் பொழுதே குரல் உடைய, மீண்டும் விழிகள் நீரை சுரந்தது. முகத்தில் வலியும், இயலாமையும் அப்பட்டமாய் தெரிய, அந்த வலியின் சாயலை தவறாக புரிந்து கொண்ட கணவனோ, “ஒவ்வொரு மாசமும் இப்படி நடக்கிறப்ப சோர்ந்து தெரியற? ரொம்ப வலிக்குதா? ஹாஸ்பிடல் எதும்…?” என அக்கறையாக கேட்டான். ஒவ்வொரு மாதமும் அழுவாள், அவன் அறியாமல்! அழுததன் சோர்வை மட்டும் பார்த்து பழகியவன், அவளின் மனதில் வலியை உணர்ந்திருக்க வாய்ப்பில்லையே!

“வலிக்காக அழலை” என்று கூறிய ரோகிணிக்கு அப்பொழுது தான் ஒன்று தோன்றியது. தனக்கு மட்டும் இது வேதனை இல்லையே! அவனுக்கும் குழந்தைக்கான ஏக்கம் இருக்குமோ? என்று தோன்ற, “உங்களுக்கும் கஷ்டமா இருக்கா?” என கேட்டாள்.

என்ன கேட்கிறாள், எதற்கு கேட்கிறாள் என்று புரியாமல், “எனக்கா எனக்கென்ன கஷ்டம்?” என்றான் புரியாத பாவனையை முகத்திலும் காட்டி. “கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆக போகுது. இன்னும் குளிக்கிறேனே?” என்றாள் மிகுந்த வேதனையோடு.

“புரியலை…?” என்று குழப்பமாக சந்திரன் பார்க்க, “இன்னும் குழந்தை உண்டாகலையே! நாம வேணா டாக்டர் கிட்ட…?” என்று மீண்டும் தவிப்பாக அவனின் முகம் பார்த்தாள். இந்த வாழ்வு எப்படியும் அர்த்தமற்றமாகி விட்டது. பிடிப்புக்கு ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, அவனிடம் தனது சுணக்கங்களை எல்லாம் விடுத்து மகப்பேறு மருத்துவரை பார்ப்போமா என்று கேட்டுவிட்டாள். ஒரு பூகம்பமே பதிலாய் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் கேட்டிருக்க மாட்டாளோ?

ரோகிணியை விசித்திரமாக பார்த்தவன், “ரோ.., ஆர் யூ கிரேசி? பிளான் பண்ணாம பேபி எப்படி பார்ம் ஆகும்? நான் தான் உன்னோட ஒவலுயூஷன் டேட் காலகுலேட் பண்ணி, ஷேப் ஆ இருக்கேனே! அதுக்கு தகுந்த மாதிரி கருத்தடை மாத்திரையும் தரனே, உனக்கே புரிஞ்சிருக்கும்ன்னு நினைச்சேன்” என வரிசையாக வெடிகுண்டுகளை வார்த்தைகளால் வீச, அவள் இதயம் சிதைந்து, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

7 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: